Ennai Ko(Ve)llum Vennilavei – 24

Ennai Ko(Ve)llum Vennilavei – 24

~24~

நாளுக்கு நாள் ஆதிக்கின் கவனம் தொழிலில் மெருகேறி விகாஷின் நிறுவனம் உலகமெங்கும் தனது முத்திரையைப் பதிக்க, இவை அனைத்திற்கும் காரணமான ஆதிக்கு தனது தொழில் நிலைகளில் இருந்து சிலவற்றைப் பிரித்து கொடுத்தவன் அவனுக்கான தொழிலை தனியாய் பார்த்து கொள்ள வழி செய்தான்..

ராஜிற்கும் இதே போல் விகாஷ் செய்ய நினைக்கும் போது, “வேணாம் சார் நான் அண்ணா கூட இருந்துப்பேன்..” எவ்வளவு சொல்லியும் மறுத்துவிட்டவன் தனது வேலையை ஆதிக்குடனே தொடர்ந்தான்..

ஆதிக், ராஜை அழைத்துப் பேசியதில் இருந்து ரேகாவிடம் இயல்பாய் பேசத் துவங்கியவன் அவளுடன் இப்போதெல்லாம் காதலாய் நெருங்கினான்..

ஆனால் ஆதிக்கின் வாழ்வு சரியான பின் தங்களது வாழ்வைத் தொடங்குவதில் தம்பதியினர் இருவருமே உறுதியாய் இருந்தனர்..

அன்று முக்கியமான டென்டர் ஒன்றை எடுக்க நேரில் சென்ற ஆதிக் அமைதியாய் ஒரு இருக்கையில் அமர்ந்து கொள்ள, அவனுக்கு எதிர் வரிசையில் N.M குரூப் ஆப் கம்பெனிஸின் முதலாளியான திலீபனும் அமர்ந்திருந்தான்..

பல வருட கசப்பு இருவருக்குமே உண்டு..அப்போது விகாஷிடம் வேலை செய்வதால் டென்டர் எடுக்க வரும் போது ஏற்பட்ட மோதல் இப்போது வரையிலும் தொடர்கிறது..

டென்டர் தொடங்கும் போது எப்படி ஆதிக் இருந்தானோ அதே போல் தான் அவனுக்குச் சாதகமாய் அமையும் போதும் அதே பாவனை தான் கொடுத்தான்..

ஆனால் இந்த ஆறு மாதமாய் தோல்வி என்ற ஒன்றை மட்டும் கேட்டுக் கொண்டிருக்கும் திலீபனுக்கு இயல்பாய் இருக்க முடியுமா..?

“தொழில்ல ஜெயிக்கிற உன்னால வாழ்க்கையில ஜெயிக்க முடியலையே..?” முதுகின் பின் அமர்ந்து பாவமாய் பேசும் திலீபனின் வார்த்தைகளில் ஆதிக்கின் முகம் இறுகியது..

ஆனாலும் எதுவும் சொல்லாமல் நகர முற்பட அவனது அருகே சென்று வழி மறைத்த திலீபனை ராஜ் தடுக்க முற்பட, அவனைத் தடுத்த ஆதிக்,
“விடு ராஜ்..அவர் பேசட்டும்..” அழுத்தமாய் சொன்னவன் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து

“நீங்களும் உட்காருங்க..” சுற்றி நின்றவர்களைப் பார்த்து சொன்னவன், கால் மேல் கால் போட்டுச் சாய்ந்து அமர
கொஞ்சமும் குறையாத அவனது திமிரின் வெகுண்ட திலீபன், “பொண்டாட்டிய வச்சி வாழத் துப்பில்லை..கால் மேல காலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை..” சன்னமாய் முணுமுணுத்தவனின் வார்த்தை அங்கிருந்த அனைவரின் காதுகளிலும் தவறாமல் விழ, ராஜிற்கு தான் கோபம் சுறுசுறுவென ஏறியது..

தலைக்குப் பின்னே கைகளைக் கோர்த்து சாய்ந்து அமர்ந்த திலீபன், “ஆதிக் சார்..உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப பரிதாபமா சாரி சாரி பாவமா இருக்கு..ஒரு பிரச்சனைனு வந்தா எங்கள மாதிரி பெரியவங்க கிட்ட தீர்வு கேட்டிருக்கலாமே..” என்றவருக்கு ஆதிக் பதிலளிக்காமல் அமைதியாய் இருக்க

“ஆமாம் பத்து பொண்டாட்டி வச்சிருக்கவன் உன் கிட்ட தீர்வு கேட்காம விட்டது எங்க தப்பு தான்..” கோபத்தில் இருந்த ராஜ் வார்த்தையை விட

“பத்து பொண்டாட்டி வச்சிருந்தாலும் எவளும் என்னைவிட்டு ஓடல..ஆதுவும் கல்யாணமான அடுத்த நாளே..ஹா ஹா..இப்ப கூட ஒண்ணும் கெட்டு போகல உன் பொண்டாட்டி பெயர் என்ன சொன்ன..சரி நமக்கு எதுக்கு பெயர்…அவளை என்கிட்ட அனுப்பி வை..என்னைவிட்டுப் போகவே மாட்டா..” அவனது பேச்சில் ராஜ் எழுந்து சட்டையை பிடிக்கப் போக, அவனைத் தடுத்த ஆதிக..

“உனக்கு சாவு அவளோட அது தான் என் பொண்டாட்டியோட கையிலன்னு எழுதியிருந்தா யாரால மாத்த முடியும்…அவள் வந்ததும் கண்டிப்பா உன்கிட்ட அனுப்பி வைக்கிறேன்..சாவ பார்க்க தயாரா இரு..சரி நீ பேச வேண்டியதெல்லாம் பேசிட்டியா..? இல்ல எனக்கு வேலையிருக்கு..சோ நீ வேணும்னா ராஜ் கிட்ட என் வாட்ஸப் நம்பர் வாங்கி வாய்ஸ் மெசேஜ் அனுப்பு..” என்று இருக்கையில் இருந்து எழுந்துவன்

“ராஜ்…சார் கிட்ட சண்டை போடாம என் நம்பரை கொடுத்துட்டு வா..” சத்தமாய் சொன்னவன் பேச்சு முடிந்தது என்பது போல் வெளியேறிவிட

திலீபனை பார்த்து நக்கலாய் சிரித்த ராஜும் ஆதிக்கின் பின்னோடு சென்றுவிட்டான்..

சகோதரர்கள் இருவர் மனதும் ரணமாய் இருந்தது, ஆதிக்கின் அவமானத்திற்கு யார் வெகுமதி அளிப்பது..?

டிரைவரை தவிர்த்து தானே வண்டியை எடுத்த ஆதிக், “ராஜ் வீட்டுக்கு போ..நான் இன்னைக்கு வீட்டுக்கு வரல..எனக்கு யாரும் போன் பண்ண வேணாம்..” என்றவனின் கார் சீறிட்டு சாலையில் பாய்ந்தது..

ராஜிற்கு அண்ணனின் மனத்தில் இருக்கும் வேதனை அவனையும் தாக்க இவையனைத்திற்கும் காரணமான வேணியின் மீது கோபம் மொத்தமும் திரும்பியது..

கேட்டானா ஆதிக்கிற்கு இத்திருமணம் வேண்டுமென அவன் கேட்டானா..? என்ற எண்ணத்திலே ராஜின் கோபம் வேணியின் மீது வந்தது..

காரை வீட்டின் போர்ட்டிக்கோவில் நிறுத்தியவன், இரண்டு படிகளாய் தாவி வீட்டுக்குள் நுழைய, வேணியும் ரேகாவும் எதுவோ பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்..

அங்கே ஒருத்தன் அவமானம் தாளாமல் சுற்றுகிறான் இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் சிரித்தால் அவனுக்குக் கடுப்பாகாதா..?

“நல்லா சிரிங்க..” கோபமான ராஜின் குரலில் என்னவென்பது போல் திரும்பி பார்த்த இருவரும் அதையே தங்களது முகத்தில் பிரதிபலிக்க

“என்ன..? என்ன ஆச்சுன்னு புரியலையா..?” வேணியின் அருகே சென்றவன் கோபமாய் கேட்க

“எதுக்கு இப்போ இவ்வளவு கோபம்..?” என்ற ரேகாவின் கேள்விக்கு அவளைத் திரும்பி பார்த்தவன்

“மூச்ச்ச்..” என ஒற்றை விரலை வாயில் வைத்துக் காட்டினான்..

“அவமானம்..நீங்க பண்ணி வச்ச கல்யாணத்துல இருந்த சந்தோஷம் எல்லாத்தையும் தொலைச்சிட்டு ஒருத்தன்
வேலை வேலைன்னு ஓடுறான்…அதைப் பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சிங்களா..?” ஏற்கெனவே ஆதிக்கின் வாழ்வு இப்படி சீரழிந்ததற்கு தானே காரணம் என நினைத்திருந்தவருக்கு ராஜும் அதையே சொல்ல, நெஞ்சை அடைப்பது போல உணர்ந்தவர் ராஜை அடிப்பட்ட பார்வை பார்க்க

கோபத்தில் இருந்தவனுக்கு அவரது வெளிறிய முகம் கருத்தில் பதியாமல் போக, “அவன் கல்யாணம் பண்ணாம இருந்தா கூட சந்தோசமா இருந்திருப்பாங்க அம்மா…அவனை எல்லோரும் கல்யாணத்தை வச்சி இழிவா பேசும் போது என்னாலையே தாங்க முடியல அண்ணன் எப்படி..?” அவனது சொற்களை உள்வாங்க முயற்சித்த வேணி கண்கள் சொருகி மயங்கி விழ, சிலையாய் சமைந்தனர் ராஜும் ரேகாவும்..

காரை உட்சபட்ச வேகத்தில் பறக்க விட்ட ஆதிக்கின் நல்ல நேரமோ என்னவோ? அந்த பீச் சாலை வெறுமையாகவிருந்தது..

காரை கடற்கரை ஓரத்தில் நிறுத்தியவன் முதல் வேலையாக மொபைலை சுவிட் ஆப் செய்ய, காற்றின் வழியாக வந்த ராஜின் அழைப்பு புறக்கணிக்கப்பட்டது..

ஸ்டேரிங்கில் தலை வைத்துப் படுத்துவிட்டான் ஆதிக்..அவனுக்கு இப்படி ஒரு கேவலமான நிலை வருமெனக் கனவிலும் நினைத்திருக்க மாட்டான்..

என்ன தவறு செய்தேன் நான்..? பலமுறை அவமானப்படும் போது அவன் தன்னை தானே சுயபரீசிலினை செய்து வருகிறான்..

எதில் தவறினான் என இன்னும் அவனுக்குப் புரியவில்லை..? அவனும் விரும்பி அவளைக் கடத்தி இத்திருமணத்தை முடிக்கவில்லை..ஒரு கட்டாயத்தில் நடந்த திருமணமாய் இருந்தாலும், எந்நிலையிலும் அவ்வாழ்வை விட்டு அவன் போக விரும்பவில்லை..

வாழ்க்கையை அதன் போக்கில் வாழ மட்டுமே அவன் நினைத்தான்..அவளை எந்த வகையிலும் துன்புறுத்தியதாய் கூட அவனுக்கு நினைவில் இல்லை..

பிறகு ஏன் தனக்கு இந்தத் தண்டனை..? வேதனையின் உச்சத்தில் இருந்தவனுக்குக் கோபம் முழுவதும் மதியின் மீது திரும்பி வலுப்பெற்றது..

***

அலுவலகத்திற்குச் செல்ல நேரமாகிவிட்டதை உணர்ந்த மதியழகி அடித்துப் பிடித்து எழ, அவளை விடவும் அதிர்ந்தது அவளது அலைபேசி..

ஆறு மாதமாய் இந்த அவசரமும் தனிமையும் அவ்வப்போது எட்டிப் பார்க்கும் ஆதிக்கின் நினைப்பும் அவளுக்குப் பழகி போயிருந்தது…

அவசரத்தில் யார் என்ன என்று பார்க்காமல் அணைப்பைத் துண்டித்துவிட்டு கிளம்பி தயாராகியவள் தனது பெட்டிக்குள் தலையை விட்டு எதையோ தேடத் துவங்க, அது கையில் கிடைத்த பாடில்லை..

மதியம் வந்து தேடிக் கொள்ளலாம் என முடிவெடுத்தவள், அறையை பூட்டிக் கொண்டு வெளிவரப் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் சுமதியும் அவளது கணவன் திலீப்பும் வெளி வந்தனர்..

மதியைப் பார்த்ததும் சுமதி, “ஹாய்ய்ய்ய்ய்..” என ஆர்ப்பாட்டமாய் சத்தமிட, எப்போதையும் போல் அவளையும் அவளது கழுத்திலிருந்த மாங்கல்யத்தையும் ரசித்து சிரித்து,

“ஹாய் சுமி..ஹாய் திலீப்..” என்றவள் இருவரையும் கடந்து தனது காரை நெருங்கியிருந்தாள்..
சுமதியும் மதியும் ஒரே அலுவலகத்தில் தான் வேலை பார்க்கின்றனர் அதனால் சுமதி மதியுடன் தான் போவதும் வருவதும்..காரில் ஏறி ஸ்டார்ட் செய்து காத்திருக்க,

லஞ் பேக்கை தனது கணவனிடம் கொடுத்த சுமதி அக்கம் பக்கம் பார்த்துவிட்டு அவனது நெற்றியில் சின்ன வெட்கத்தோடு அழுத்தமாய் முத்தம் வைத்து, “பை மாமா..” என்க

அவளது கன்னத்தில் தட்டியவன் கண்ணடித்து காரை எடுத்துக் கொண்டு செல்ல, அவனது கார் கண்ணைவிட்டு மறையும் வரையில் பார்த்திருந்த சுமதி அதன் பின்னே மதியின் காரில் ஏறினாள்..

இவர்களின் அன்பான இந்தச் சின்ன செய்கையைத் தினமும் பார்ப்பாள் மதி..அதுவும் அவளது வெட்கம் கலந்த முத்தம் அவளுக்கு வியப்பாய் இருக்கும்..

“சுமி எனக்கு உங்களையும் உங்க லவ்வையும் பார்க்கும் போது எக்ஸைட்டிங்கா இருக்கு…அவருக்கும் உங்களுக்கும் லவ் மேரேஜா..?” போகிற போக்கில் அவளது காதல் கதையை ஆவல் கொண்டு கேட்க

எப்போதும் அவள் உண்டு அவளது வேலை உண்டு எனயிருக்கும் மதி அவளாய் வந்து பேசியதும் சுமதிக்கு ஆச்சர்யமாய் இருக்க, “லவ் மேரேஜ்லாம் இல்ல மதியழகி அரேஞ் மேரேஜ் தான்..சொல்லப் போனா கல்யாணத்துக்கு முதல் நாள் தான் இவரை நான் பார்த்தேன்..” என்றாள் சுமதி

“என்னது முதல் நாள் தான் பார்த்தீங்களா..? அப்புறம் எப்படி இப்படி இருக்கீங்க..?” குரலில் ஆர்வத்தைக் கூட்டி கேட்க

“எல்லாம் லவ் தான் மதியழகி…மேரேஜ் முடிந்த அப்புறம் தான் அவரை நான் லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணுனேன்..” காதல் என்றதும் மதியின் சிரிப்பு இகழ்ச்சியாய் வளைய,

“ஏன் மதியழகி உங்களுக்கு லவ்னா பிடிக்காதா..?” என்றவளின் கேள்விக்கு தாராளமாய் சிரித்தாள் மதி..

“எனக்கு லவ்ல எல்லாம் இன்ட்ரெஸ்ட் கிடையாது..” சாலையில் பார்வையை பதித்து மதியழகி பேச

“அப்போ உங்க மேரேஜ்..” சுமதியின் கேள்விக்கு

“ஆமாம்..அதுக்கு என்ன..?” என்றவள் வண்டியை பார்க் செய்து தனது கை பையை எடுத்துவிட்டு வெளியேறிவிட்டாள்..

அந்தப் பேச்சை அசைபோட்ட படி நடந்து வந்த சுமதிக்கு முதல் சந்திப்பில் தனது உயரதிகாரியாய் அவளது பெயரை ‘மதியழகி ஆதிக் வர்மன்’ என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டதும் முதலில் அவளது கழுத்தை தான் பார்த்தாள்..

அலுவலகத்தில் நுழைந்ததும் அங்கங்கே தனது டீமை பற்றி விசாரித்தவளுக்கு மதி இந்தியாவை அதுவும் தமிழ்நாட்டை சேர்ந்தவள் என்பதில் அவ்வளவு திருப்தி..

பாலைவனத்தில் ஒரு துளி நீரைக் கண்டால் வருமே அந்தத் திருப்தி தான்..

வீடும் அவள் வீட்டின் பக்கமே இருந்ததும் கூடுதல் நிம்மதி…சுமதியாய் தான் மதியிடம் சென்று வலியப் பேசியது..

சிறிது நாட்களில் ஆதிக் வர்மன் யாரென வினவ, அவனைத் தனது கணவன் எனச் சொன்னவள் மேற்கொண்டு எதையும் அவளிடம் சொல்லவில்லை..

மதியின் இந்த குறுகிய வட்டத்துள் இப்போது சுமதியை இணைத்துக் கொண்ட ஒரே காரணம் மதியை முழுநீள பெயரிட்டு அழைக்கும் அவளது இயல்பான செய்கை தான்..

எப்போது மதியழகி என்றே அழைப்பாள்…மதி என்ற சுருக்கம் எப்போதாவது வரும்..அப்போது ஏன் என்னை இவளால் மதியழகி என அழைக்க முடியாதா என்றே நினைப்பால்..

மதியழகி என அழைக்கும் சமயங்களில் ஆதிக்கின் நினைவும் தன் பெயரை அழுத்தம் திருத்தமாய் உச்சரிக்கும் அவனது இதழும் அவளது நினைவுக்கு வந்து இம்சை செய்யும்..

சுமதியை விட்டு அகன்று சென்ற மதிக்கும், “எப்படி பிடித்தம் இல்லாம வாழ முடியும்..?” என்ற கேள்வி தான்..

மனம் கேட்ட கேள்வியை மூளை ஒதுக்கி காலையில் தான் தேடிய பொருளில் வந்து நிற்க, இப்போது அமெரிக்கா வந்ததில் இருந்து அவள் என்னென்ன செய்தால் என்பதை யோசிக்கத் துவங்கினாள்..

யோசனையோடு நடந்தவள் எதிரில் நின்ற பெரிய உருவத்தைக் கவனிக்காமல் மோத, விதியும் அவளுடனே மோதி நின்றது..

மதி ஆதியாய் தகிப்பாள்…

One thought on “Ennai Ko(Ve)llum Vennilavei – 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!