ENV-10B

என்னுள் நீ வந்தாய் – அத்தியாயம் 10(2): 

அவன் அறைக்குள்ளே செல்ல, அவள் மெத்தையில் புதிதாகப் போடப்பட்ட தலையணைகளைக் கட்டம் கட்டியிருந்தாள். அதைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே…

“ஸ்வீட்டி. நீ சரியா சாப்பிடல. நைட் பசிக்கும். அதா உனக்கு ப்ரெட் எடுத்துட்டு வந்துருக்கேன். ரெண்டு சாப்பிட்டு படுத்துக்கோ” என ஒரு டப்பாவை நீட்டினான்.

மனதுக்குள் மின்னலென ஒரு சிறிய சந்தோஷ கீற்று. தனக்கு நடு இரவில் பசி எடுக்கும் என்று எப்படித் தெரியுமென.

ஏனோ அவன் சில இடங்களில் காட்டும் அக்கறை மனதில் ஒரு மூலையில் சின்ன நிறைவைத் தந்தாலும், பெரும்பாலும் எந்த அக்கறையும் வேண்டாம்… அதை ஏற்றுக் கொள்ளவும் வேண்டாம் என்று அதே மனது அடம் பிடிக்கவும் செய்தது.

அதன் விளைவே “ஸ்வீட் ப்ரெட்’டா…? எனக்கு ஸ்வீட் பிடிக்காது” என்றாள் அவனைப் பாராமல். ‘உனக்கு ஸ்வீட் பிடிக்காதா?’ என நினைத்துப் புன்னகைத்துக்கொண்டு “இது அல்மன்ட் ப்ரெட்” என்றான் புன்னகை மாறாமல்.

எதிர்த்துப் பேசினால் இவன் விடமாட்டான் என்றெண்ணி “நான் தான் வேணாம்ன்னு சொல்றேனே… இப்போ ப்ரெட் சாப்ட்டா ஒரு மாதிரி இருக்கும். எனக்கு தூக்கம் வருது ப்ளீஸ்” என பொறுமையாக அவள் சொன்னவுடன்…

“சரி. டேபிள்’ல வெக்கறேன். வேணும்ன்னா நைட் சாப்டுக்கோ. அப்பறம்… உன்கிட்ட ஒன்னு கேட்கணும்” என்றான் டப்பாவை மேஜை மேல் வைத்துவிட்டு.

அவள் என்ன என்பது போல் பார்க்க, “அதான் இவ்வளோ பில்லா இருக்கே. நான் நல்லா தூங்கி நாலு நாள் ஆச்சு. அப்படியே நானும் இங்கயே படுத்துடறேனே. நீ ரெண்டு பில்லாவ நடுல போட்டுக்கோ” என சொல்லிக்கொண்டே அவள் பேசும்முன் படுத்துவிட்டான்.

தனக்காகப் படுக்கை வரை மாற்றியனவனை எதுவும் சொல்லமுடியாமல்… மேலும் அவனைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு எப்படித் தூங்குவது என முழித்துக்கொண்டிருந்தாள் கவிதா.

அவள் பதில் பேசாமல் இருப்பதைப் பார்த்து… அவள் புறம் திரும்பியவன் “டோன்ட் ஒரி. நான் கோட்ட தாண்டமாட்டேன். நீயும் தாண்டிராத ஸ்வீட்டி” என மர்மமாகப் புன்னகைத்துவிட்டு திரும்பி படுத்துக்கொண்டான்.

‘என்மேல தான எனக்கு பயமே… ஏதாச்சும் புரண்டு கிரண்டு வந்துட்டேன்னா…’ என நினைத்துக்கொண்டு, கொஞ்ச நேரம் முழித்திருந்த கவிதாவும் உறங்கிவிட்டாள்.

நடு இரவில், தூக்கம் களைந்து உறங்க முடியாமல் எழுந்தாள் கவிதா. பசி வயிற்றைக் கிள்ளியது.

திரும்பி அகிலனைப் பார்க்க, ‘அட்டென்ஷன்’ போன்று அதே நிலையில் உறங்கிக்கொண்டிருந்தான்.

அவன் பக்கம் இருந்த டேபிளில்… அவன் வைத்த டப்பா தெரிந்தது. கண்கள் மின்ன, மெதுவாக இறங்கி அதிலிருந்த பிரட்’டை எடுத்து உண்டாள்.

‘இவனுக்கு எப்படித் தெரியும் எனக்குப் பசிக்கும்ன்னு? ப்ச். இதென்ன பெரிய ராக்கெட் சயின்ஸா??? உலகத்துல முக்காவாசி பேருக்கு நடுராத்திரி பசிக்கும்’ என நினைத்தாலும்… அவன் அக்கறையை எண்ணி கொஞ்சம் புன்னகைக்கவும் செய்தாள்.

அடுத்த நாள் காலை, சீக்கிரம் எழுந்தவள், அடுப்பங்கரைக்குள் சென்று அவளுக்கு காபி போட்டுக்கொள்ள, சிறிதுநேரத்தில் லட்சுமி வந்தார்.

அவள் குடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்க… “உங்களுக்கு என்ன போடட்டும் ஆண்ட்டி?” எனக் கேட்க, அவர் மனம் கொஞ்சம் சாந்தமடைந்தது.

“என்ன ஆண்ட்டி? அத்தைன்னு கூப்பிடு… எனக்கு காபி ஸ்ட்ரோங்’கா. அப்படியே மாமாக்கு சுகர் கம்மி… ஒரு டீ ஸ்பூன் போதும். அகில்’க்கு காபி பால் கலக்காம, சுகர் ஒரு டீ ஸ்பூன்… நான் ப்ரியாக்கு பூஸ்ட் போடறேன்” என்று முடிக்க, திருத்திருவென முழித்தாள் கவிதா.

அவள் முழிப்பதைப் பார்த்த லட்சுமி, “போகப் போகப் பழகிடும். நீ அகிலுக்கு எடுத்துட்டு போ. நான் எங்களுக்கு போட்டுக்கறேன். குடுத்துட்டுச் சீக்கரம் வா. ப்ரியா காலேஜ்க்கு போறா. காலைல… மதியத்துக்கு சமைக்கணும். அகிலும் ஆஃபீஸ் போறான்” என்றுவிட்டு வேலையில் மூழ்கினார்.

அவள் மனதிலோ ‘ஹலோ மிஸ்ஸஸ் லட்சுமி… நானும் ஆஃபீஸ் போறேனே… அதப்பத்திக் கூட கொஞ்சம் சொல்லலாமே? இதுல சாருக்கு ரூம்ல போய் காபி. கம்முனு சக்கரைக்குப் பதிலா உப்பு போட்டுடலாமா?’

‘ச்ச ச்ச. நேத்து ப்ரெட்’லாம் தந்தான்’ என தனக்குத் தானே புன்னகைத்துக்கொண்டு அவனுக்குத் தர எடுத்துச்சென்றாள்.

சிறிதுநேரத்தில், வீடே ரெண்டாகும் அளவிற்கு ப்ரியா பறந்துகொண்டிருந்தாள்.

“அம்மா… ரெடியா? லேட் ஆச்சுமா…” என கூப்பாடுபோட, “கவிதா… நீ இத கொஞ்சம் பாரு. நான் அவளைப் போய்ப் பார்க்கறேன்” என்று கவிதாவிடம் ஒரு வேலையைக் கொடுத்திவிட்டு, ப்ரியாவைப் பார்க்க சென்றார் லட்சுமி.

இது அனைத்தும் புதிதாக இருந்தது கவிதாவுக்கு. ஒவ்வொருமுறை சின்னச் சின்ன வேலைகளுக்கு ப்ரியா அம்மாவை அழைக்கும்போதெல்லாம் ஏதோ ஒன்று மனதைப் பிசைந்தது.

எட்டு வயதிலிருந்து இதுவரை தனக்குத் தேவையானதைத் தானே செய்துகொள்வாள். செய்துகொள்வாள் என்பதை விடக் கேட்கவும் செய்யவும் யாருமிருந்ததில்லை. ஹாஸ்டலே உலகம்.

அம்மா என்ற அழைப்பே மறந்திருந்தது. அது இதுவரை பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இன்று… அம்மா மகள் உறவை நேரில் பார்க்கும்போது மனதில் இதுவரை என்றும் இல்லாத ஆசையெல்லாம் அலைமோதியது.

கண்கள் கலங்கப் பார்க்க, இப்போது கலக்கினால் கேள்வி கேட்பார்கள் என மெளனமாக வேலையில் தன்னை ஈடுபடித்துக்கொண்டாள்.

“ம்மா மா மா. ப்ளீஸ் மா… ப்ளீஸ் மா” என கேட்டுக்கொண்டே கிட்சேனுள் ஓடி வந்தாள் ப்ரியா.

“ஏன்டி எழுகலுத வயசாச்சு. இன்னமும் ஊட்டிவிடணுமா… ஒழுங்கா போய் சாப்பிடு” என லட்சுமி அதட்ட, “ப்ளீஸ் மா… ப்ளீஸ் மா. ஆஹ்” என வாயைத் திறந்தாள் ப்ரியா தோசையை வாங்க. பின் அம்மா மகளுக்கு ஊட்டிவிட ஆரம்பித்த்தார்.

“இன்னும் ரெண்டு வாய் வாங்கிக்கோடி” என திட்டினாலும் ஊட்டிவிட்டார். கவிதா அவர்களைப் பார்த்து மெல்லியதாகப் புன்னகைக்க மட்டுமே செய்தாள்.

‘ஹாஸ்டெலில் காலை உணவு கிடைக்கும். சாப்பிட்டால் சாப்பிடு… இல்லாவிட்டால் போ. பசித்தால் நீயே சாப்பிடுவாய். பிடித்ததுக்கூட சிலசமயம் கிடைக்காது. கிடைப்பதை பிடித்தமாக்கிக் கொள்ளவேண்டும்’ என்ற அணுகுமுறையே இருந்தது.

‘அவள் வாழ்க்கையில் இப்போது சாப்பாடுமட்டுமில்லை. வாழ்க்கை துணையையும்கூட, பிடித்தமாக்கிக்கொள்ளவேண்டுமோ?’ என்ற நிலைமையே இருந்தது.

‘தனக்கு ஏன் இதெல்லாம் நடக்கவே இல்லை? அம்மாவுடன் இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்குமோ? ஒருவேளை அம்மா இருந்திருந்ததால் அவரிடம் மனம் விட்டு பேசும் அளவுக்கு இருந்திருப்பேனோ?’

‘அஜய் தான் என் விருப்பம், இந்தத் திருமணம் எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லியிருக்க முடியுமோ’ என பல எண்ணங்கள் அவள் மனதைத் தாக்க…

“ஓய்” என்ற மிக அருகில் கேட்ட சத்தத்தில் திடுக்கிட்டு திரும்பினாள்.

அங்கே அகிலன். சட்டெனக் கண்ணில் தேங்கியிருந்தக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.

“ஏ ஏன் அழற… என்ன ஆச்சு” பதறிக்கொண்டு அவன் கேட்க “ஒன்னுமில்ல. ப்ளீஸ் சத்தம் போடாத” என்றாள் மெதுவாக.

“அம்மா ஏதாச்சும் சொன்னாங்களா…? அம்…” என அவன் கூப்பிடும்முன் “ஐயோ ஒன்னும் இல்ல… ப்ளீஸ். பழசெல்லாம் ஞாபகம் வந்துச்சு. பெருசு பண்ணாத” என கண்களால் கெஞ்ச “டேய் அண்ணாஆஆ” என ப்ரியா கத்தியதில் ப்ரியா புறம் திரும்பினான்.

“அண்ணா ண்ணா. நீ பஸ் ஸ்டாப்ல விடுண்ணா. நேரம் ஆச்சு” கேட்டுக்கொண்டு ப்ரியா அவன் முன் வந்து நின்றாள்.

அவன் மனதிலோ ‘கவிதா பழையது என்று சொன்னது அஜயாக இருக்குமோ?’ என்று எண்ண, “அண்ணாஆஆஆ” என்று சத்தத்தில் தன்னிலைக்கு வந்தான்.

“என்ன கொண்டு விடுண்ணா. ஆல்ரெடி லேட். அப்பாவோட போன ஸ்லோ’வா போவாரு” ப்ரியா மறுபடியும் கேட்க, “சரி… எல்லாம் எடுத்து வெச்சுக்கோ” என்றவன் கவிதாவின் புறம் திரும்பி…

“நான் ப்ரியாவ விட்டுட்டு வந்துடறேன். நான் உன்ன ஆஃபீஸ்ல ட்ரோப் பண்றேன்” அவள் பதில் சொல்லுமுன் சென்றுவிட்டான்.

அவன் திரும்பி வரும்போது கவிதா இல்லை. அவன், லட்சுமியிடம் கேட்டபோது, ‘அவசரமாகச் செல்லவேண்டும். ஆட்டோ எடுத்துக்கொண்டு ஸ்டேஷன் செல்வதாகச் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்’ என்றார் லட்சுமி.

அங்கே ஸ்டேஷனுக்குள் நுழைந்த கவிதா, அலுவலகத்திற்குச் சீக்கிரம் செல்லப் பிடிக்காமல், ட்ரெயினிலும் ஏறாமல், அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் உட்கார்ந்திருந்தாள்.

அம்மாவின் ஞாபகம் அதிகாமாக, ஏனோ மனது அமைதியற்றிருந்தது. தனிமை வாட்டியது. அப்பாவிடம் பேசலாம் என்றால், இதுவரை மனது விட்டு அவரிடம் பேசியதில்லை.

‘தனக்கென்று யாருமில்லையே… மனம்விட்டு பேச ஒருவர் கூட இல்லையே…’ சுயபச்சாதாபம் அதிகமானது…

யாரிடமும் சொல்ல முடியாமல், அனைத்தையும் தனக்குள்ளேயே வைத்துப் புழுங்க, அது ஒருவிதமாக மூச்சு முட்ட… அழுகும் நிலைக்குச் சென்ற போது, அவள் அருகில் வந்தமர்ந்தான் அகிலன்.

அவன் வந்ததைப் பார்த்தவுடன், தன்னையும் மீறி, கண்ணில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வெளியேறியது. மனதின் கடைக்கோடியில் மழைச்சாரல்… தனக்காக அவன் வந்ததை நினைத்து.

ஆனாலும் அதை ஏற்க மனமொப்பாமல் குடைக்கொண்டு தடுத்தாள் அந்த அக்கறை தனக்கு வேண்டாமென்று!