ENV 3B

ENV 3B

என்னுள் நீ வந்தாய் – அத்தியாயம் 3(2):

கவிதா பேசப் பேச அகிலனின் முகம் மாறிப்போனது. முகத்தில் இருந்த பிரகாசம் முற்றிலும் மறைந்து இறுக்கமானது.

என்ன சொல்வதென்று தெரியாமல் சட்டென எழுந்தான். எழுந்த வேகத்தில் உட்கார்ந்திருந்த சேர் சில இன்சுகள் பின்னால் தடதடவென நகர்ந்தது.

சுற்றும் முற்றும் பார்த்துக் கோவத்தைக் கட்டுப்படுத்த, கண்களை மூடி மூச்சை முழுவதுமாக உள்ளிழுத்து விடுவித்தான்.

கவிதாவுக்கு அவனைக் பார்க்கும்போது ‘தான் சொல்லவேண்டியதை காலம் கடந்து சொல்லிவிட்டோமோ?’ என்றே தோன்றியது. கொஞ்சம் பயம் எட்டிப்பார்த்தது.

கண்கள் இரண்டும் சிவக்க, மறுபடியும் அவள் எதிரே உட்கார்ந்தவன், “Are you kidding? கல்யாணம்ங்கிறது அவளோ ஈஸியா போய்டுச்சா உனக்கு?”

“நம்ம ரெண்டு பேர் மட்டும் சம்மந்தப் பட்ட விஷயம் இல்ல இந்தக் கல்யாணம்… ரெண்டு குடும்பம் இதுல இன்வோல்வ் ஆயிருக்கு. பொண்ணுப் பாக்க வந்தப்ப அவளோ சீன் போட்ட”

“ஒழுங்கா ‘நான் வேற ஒருத்தன நெனச்சுட்டு இருக்கேன்’னு சொல்லியிருந்தா உன் பக்கமே திரும்பியிருக்க மாட்டேன். பெரிய டாஷ் மாதிரி பிடிக்கலன்னு சொல்லுங்கனு… பிடிக்கலன்னு சொல்லுங்கனு மட்டும் சொன்னா என்னனு புரியும் எனக்கு” என எகிறினான்.

அவன் பேசுவதில் நியாயம் இருப்பதை உணர்ந்து “நான் அன்னைக்கே சொல்லணும்ன்னு நினச்சேன் பட் நீங்க வேற மாதிரி சொல்லி இத நிறுத்தறேன்னு சொன்னீங்க… ப்ச்… தப்பு என்மேல தான்… ஐம் ஸாரி… பட் இது நடக்கக்கூடாது” என்றவளைப் பார்த்தவன் …

“நீ என்ன சொல்றது… இனி நீயே இந்தக் கல்யாணம் நடக்கணும்னு நினைச்சாலும் நடக்காது”

“யாரையோ மனசுல நினைச்சிட்டிருக்க உன்னக் கல்யாணம் பண்ணிட்டு, நம்ம வாழ்க்கையும் நம்ம சுத்தி இருக்கவங்க வாழ்க்கையும் அழிக்க நான் விரும்பல” என்று அவளைப் பார்த்து முறைத்துக்கொண்டே போனை எடுத்தான்.

அவள் புரியாமல் பார்க்க, அவன் அழைத்தது அவள் அப்பாவை.

“சொல்லுங்க மாப்ள. நல்ல இருக்கீங்களா” என பெரியவர் நலம் விசாரிக்க “அங்கிள் என்ன மன்னிச்சுடுங்க… இந்தக் கல்யாணம் நடக்கக்கூடாது ஏன்னா…” என்று அவன் முடிக்கும்முன்…

“என்ன மாப்ள சொல்றீங்க கல்யாணம்… நடக்…காதா…” என்று பேசும்போதே அவரின் பேச்சு சரியாகக் கேட்கமால் அழைப்பு கட் ஆனது.

போன் கட் ஆனவுடன் போனையே ஒரு நொடி பார்த்தவன், எதிரே ஸ்தம்பித்து அவனையே பாத்துக்கொண்டுருப்பவளைப் பார்த்து…

“போதுமா… உன் அப்பாகிட்ட சொல்லியாச்சு. இப்போ சந்தோஷமா? உன் மேல சந்தேகம் வராது. அதுதானே உனக்கு வேணும்? அந்த மனுஷன் எவளோ கஷ்டப்படு…” என்று சொல்லிமுடிக்கும் முன் அவளின் மொபைல் அடித்தது.

அழைத்தது அவள் தம்பி. அவள் எடுத்துப் பேச, எதிரிலிருப்பவன் என்ன சொன்னானோ… “என்னடா சொல்ற?” எனப் பதறினாள்.

‘என்ன ஆயிற்று’ என்று அகிலன் அவளைப் பார்க்க, அவளோ கலங்கிய கண்களை மூடிக்கொண்டு,

“சீக்கரம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போடா. நீ தைரியமா இரு ப்ளீஸ். உன்னைப்பாத்து அவரும் பதறிடப்போறாரு. நான் இப்போவே கிளம்பறேன். சித்தப்பாக்கு சொல்லிடு போன் பண்ணி”
சொல்லிவிட்டு போன் வைத்தவள் சில நொடிகள் சிலையென உட்கார்ந்திருந்தாள்.

அவளை மூன்று முறை அழைத்தவன், அவள் சலனமில்லாமல் இருப்பதைப் பார்த்து, அவள் அருகே சென்று உலுக்க, குலுங்கித் தன்னிலைக்கு வந்தாள்.

அவனை பக்கத்தில் பார்த்ததும், எதுவும் பேசாமல், வெளிறிப்போன முகத்துடன் அங்கிருந்து விறுவிறுவெனச் சென்றாள்.

அவள் போவதையே பார்த்தவன், ஏதோ அவள் வீட்டில் நடந்துள்ளது என்று யூகித்தான்.

அவள் தந்தைக்கு மறுபிடியும் அழைக்க, அழைப்புத் துண்டிக்கப்பட்டது.

‘இங்கு என்ன நடந்தது’ என்று மீண்டும் மனதில் ஓட்டிப்பார்த்தான். ஏதோ புரிந்தவனாய் போன் எடுத்து யாரையோ அழைத்தான்.

****************

‘தம்பி முன் அழுதால் அவன் இன்னும் நொறுங்கிவிடுவான். அதுவும் நான் அழுதால் அப்பாவை இன்னும் பலவீனம் ஆக்கிவிடும். அழக்கூடாது. அழக்கூடாது’ என்று தனக்குத் தானே அறிவுரைக் கூறிக்கொண்டு அந்த மருத்துவமனையின் ICU பிரிவுக்கு அவசரமாக ஓடினாள் கவிதா.

தன்னால் தான் இந்த நிலைமை அப்பாவிற்கு என்று நினைக்கும்போது மனது ரணமானது.

வெளியே நின்று கொண்டிருந்த அவளின் தம்பி இளஞ்செழியனைப் பார்த்தவுடன் “செழியா…” என்று உரக்க அழைத்துக்கொண்டு அருகில் சென்றாள்.

அவள் கண்களில் கண்ணீர் என்ன தடுத்தும் நிற்காமல் வெளியேற, தம்பியின் சட்டையைப் பிடித்தவாறே, “என்னடா ஆச்சு அப்பாக்கு? எப்படிடா இருக்காரு? உள்ள போலாமா பாக்க?” ICU கதவைப் பார்த்துக்கொண்டே கேட்க…

“மைனர் அட்டாக்’னு டாக்டர் சொன்னாருக்கா. பயப்படும்படியா ஒன்னும் இல்லயாம். இப்போ நார்மல் ஆகிட்டாருனு சொன்னாரு” என்றான் இறுகிய முதத்துடன்.

அவ்வளவு நேரம் கனத்த மனது, கொஞ்சம் நிம்மதியாக, கசிந்த கண்களைத் துப்பட்டாவில் துடைத்துக்கொண்டு, தன்னைச் சில நொடி ஆசுவாசப் படித்துக்கொண்டாள்.

“ரொம்ப பயந்துட்டயா… நானும் பயந்துட்டேன்… ஒன்னும் ஆகாதுடா…” தம்பியைத் தேற்றினாள்.

“ஏன்டா வெளிய நிக்கற? உள்ள நாம போகக் கூடாதா?” எனக் கேட்க…
அவளைப் பார்த்து முறைத்தவன்…

“எனக்கு உள்ள வரவே பிடிக்கல. நீ போய்ப் பாரு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் போகும் திசையையே பார்த்தவள், ‘அப்பாவிற்கு இப்படி இருக்கும் நிலைமையில் ஏன் தம்பி இப்படி நடந்துகொள்கிறான்’ எனப் புரியாமல் கதவை திறந்துகொண்டு உள்ளே பார்த்தக் கவிதா அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டாள்…
அங்கே அகிலன்!!!

———இன்று———

“கவிதா. வா மா டின்னர் ரெடி ஆயிடுச்சு… சாப்பிடலாம்” என்று தாமஸ் அவளை எழுப்பியதில் நிகழ்விற்கு வந்தாள் கவிதா.
அவளுக்கு சப்பாத்தி குர்மா பரிமாற,

“சூப்பரா இருக்குண்ணா… உங்க மனைவி குடுத்துவெச்சவங்க” என்று புன்னகையுடன் சொன்னவள் “எங்க இருக்காங்க… ஊர்லயா?” கேட்டாள் கவிதா.

அவர் முகம் வாடிப் போக ‘தப்பா கேட்டுட்டோமோ’ எனக் கவிதா மனதில் நினைக்கும்போது “அவ இப்போ இல்லமா” என்றார் தத்தளித்த குரலில்.

உடனே பதறிக்கொண்டு “ஐயோ அண்ணா.. என்ன மன்னிச்சிடுங்க” என்றாள்.

“பரவால்ல மா” என்றவர் மறுபடியும் சமயலைக்குள் சென்றார்.

‘ச்ச யோசிச்சுப் பேசமாட்டயா கவி…? அப்பவும் இப்பவும் எப்பவும் அவசரம் உனக்கு… பாவம் ஒவ்வொருத்ததுக்கு ஒவ்வொரு வகைல கஷ்டம்…’ மனதில் நினைக்கும்போது…

ஆர்ப்பாட்டத்துடன் துள்ளிக்குதித்துக்கொண்டு உள்ளே வந்தாள் லயா.

அப்போது தான் கவிதாவிற்கு, லயா சென்றவுடன் பார்த்த ஈமெயில் நியாபகம் வந்தது.

“ஹாப்பி பர்த்டே லயா. என்ன ஒரே சந்தோஷம்…? பர்த்டே ட்ரீட்டா?” கேட்டாள் கவிதா புன்னகையுடன்…

“தெருஞ்சுடுச்சா… தேங்க் யு… Yeah. ட்ரீட் தான். என் பாய் ஃபிரன்ட்’ட இருந்து” எனக் கண்ணடித்தாள் லயா.

“சூப்பர். அப்போ சீக்கரம் இன்ட்ரோ குடுத்துரு” என்றாள் பதிலுக்கு கவிதாவும் கண்ணடித்து.

“கண்டிப்பா… AJ கிட்ட உங்கள பத்தி சொன்னேன்… புதுசா வந்துருக்கீங்கனு… I will introduce you to him” என்றவள்…

“ஒகே கவிதா கொஞ்சம் டையர்ட்’டா இருக்கு. நான் தூங்கப்போறேன். நாளைக்கி பாப்போம். பை தாமஸ் அண்ணா” என்று விடைபெற்றுக்கொண்டு அவளறைக்குப் பறந்தாள் லயா.

கவிதாவின் புருவங்கள் ஆச்சர்யத்தில் சுருங்கியது “AJ” என்ற பெயரைக் கேட்டவுடன். அவளின் கல்லூரி நாட்கள் மற்றும் அஜய் எல்லாம் கண்முன்னே வந்து வந்து சென்றது.

error: Content is protected !!