ENV-5B

என்னுள்
நீ வந்தாய் – அத்தியாயம் 5(2):

சரியாக இருவரும் ஹாஸ்டல் வந்தடைய, “ஃபைவ் மினிட்ஸ் வந்துடறேன்” என்று இறங்கி ஓடிவிட்டாள் அங்கிருந்து.

சொன்னதுபோல் ஐந்து நிமிடத்தில் வந்தவளை கண்கள் நிறைத்துப் பார்த்தான். அவள் முதல் நாள் வந்திருந்த உடையில் இருந்தாள்.

அவள் ஏறி உட்கார்ந்துக்கொள்ள, “இனி… சாப்பிட்டு போலாமா காலேஜ்க்கு?” மறுபடியும் கெஞ்சலாகக் கேட்க மறுப்புத் தெரிவிக்காமல் தலையசைத்தாள்.

“க்கும்… சரி கத பாதில நிக்குது என்று அவள் இன்னமனும் தெரிந்துகொள்ள ஆசைப்பட, “இது உனக்கு கதையா…?” என அவளைப் போலியாக முறைத்தவன் “எங்க விட்டேன் எனக் கேட்டான்…

“எனக்கு நீ ப்ரோமோஷன் குடுத்தேன்னு சொன்னயே அங்க என்று சொல்ல, ஒரு கணம் யோசித்தவன், “ஹாஹாஹா என்று சத்தமாகச் சிரித்து “ஹ்ம்ம் ப்ரோமோஷன்… உனக்கு மட்டும் இல்ல… எனக்கும் தான்…” என்று அவளைக் கண்ணாடி வழியாகப் பார்த்து கண்ணடிக்க, பக்கத்திலிருந்த ஹோட்டலும் வந்தது.

இருவரும் ஆர்டர் செய்துவிட்டு, அவன் மீண்டும் ஆரம்பித்தான்…

“அடுத்த நாள் உன்ன பாக்க உன் க்ளாஸ்க்கு வந்தேன்… நீ காலேஜ் வரல… ரொம்ப கில்ட்டியா போச்சு. உன் ஃபிரன்ட் விட்டு உன்ன வரச்சொல்லி பேசலாம்னு நெனச்சப்ப தான் அந்த ப்ரோப்லேம்

“நீ எனக்கு சப்போர்ட் பண்ணுவேன்னு நெனச்சேன் அந்த இஷ்யூல… எந்த உரிமைலன்னு அப்படி தோணுச்சுன்னு தெரில… ஆனா நீ என்று அவளைப் பார்த்து முறைக்க “ஹலோ, நீ என்னென்னமோ மனசுல நெனச்சுட்டு இருக்கன்னு எனக்கு எப்படி தெரியும்…”

“அதில்லாம உன்மேலேயும் தப்பு இருந்துச்சு… நீ எங்கிட்ட எதையும் சொல்லாம என் கைய பிடிச்சு இழுத்த… அதான் என் சீனியர்ஸ் அங்க வந்தாங்க… யாருக்கும் பிரச்சனை வேண்டாமேன்னு நினச்சேன் என அவள் வாதத்தை முன் வைக்க….

“ஹே… அவங்க உனக்கு சப்போர்ட்க்கு வரல… என்ன மாட்டிவிட வந்தாங்க. நீ நினைக்கறளவுக்கு அவங்க அவளோ நல்லவங்க இல்ல…” கடிந்தான் அஜய். அவள் நம்பாதது போல் பார்க்க, அவன் “நீயே போகப் போகப் புருஞ்சுக்குவ… அத விடு

“அப்பறம் போன ரெண்டு வாரம், உன்ன பத்தி முழுசா தெருஞ்சுட்டேன். நீ பாக்கதப்பா உன்ன நல்லா சைட் அடிச்சேன் குறும்புத்தனமான சொல்ல, அவள் முறைத்தாள்.

“இந்த ஃபீலிங்ஸ்… இது லவ்வா… இல்ல ஐ லவ் யுன்னு உன்கிட்ட சொல்லனுமான்னு தெரில… பட் உன்ன எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு. உன்ன பாத்துட்டே இருக்கனும்னு இருக்கு. உனக்கும் என்ன பிடிக்கும்னு தெரியும் என்றான் ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கிப் புன்னகையுடன்.

அவளும் புன்னகைக்க இருவரும் காதலில் மூழ்கி… மற்றவரின் பார்வையில் திளைத்து, உணவில் கோலமிட்டு, ஒரு வழியாக அதிகம் பேசாமல் மௌனமே ஆட்கொண்டு காலேஜ் திரும்பினார்கள்.

படிப்பில் பெரிய நாட்டம் இல்லாமல், ஏதோ படிக்க வேண்டும் எனப் படித்தவன், விளையாட்டில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொண்டான். தன் தந்தையின் தொழில் தான் அவன் செய்யப்போவது என்ற எண்ணமே காரணம்.

அவள் நன்றாகப் படிப்பது மட்டும் இல்லாமல், கல்லூரி அளவில் நடைபெறும் கட்டுரை, கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு தன் திறமையை வெளிக்காட்டினாள்.

அவன் பாக்ஸிங் மட்டுமல்லாமல், காலேஜ் பேஸ்கெட் பால் டீமில் இருந்தான். அவன் கேர்ள்ஸ் டீமுக்கு பயிற்சி தருவதைக் கவிதா பார்த்திருக்கிறாள். அவளும் நல்ல உயரம்.

அவனுடன் நிறைய நேரம் செலவிட வேண்டும் என்று பேஸ்கெட் பால் டீமில் சேர்ந்தாள். இருவரின் நெருக்கம் இன்னமும் அதிகமானது. அவளை உற்சாகப்படுத்தி அவளின் அணி வெற்றிபெற உதவினான்.

நாட்கள் உருண்டோடியது. அவளுக்குத் தேவையானவற்றை அவள் சொல்லுமுன்… ஏன் அவள் நினைக்கும் முன் செய்தான். அவள் மனதில் ஆழமாகப் பதிந்தான். அவளை முற்றிலுமாக ஆக்ரமித்திருந்தான்.

அவன் இல்லாத நாட்களைக் கழிப்பதே கடினம் என்றாகியிருந்தது அவளுக்கு. அதுவே அவனுக்கும்… அவளும் விளையாட்டுமே அவனின் உலகம்…

தாயில்லாமல், மற்றும் தந்தை இருந்தும் அவர் அருகாமையில் இல்லாமல் இருந்ததால்… அவன்தான் அவளின் அனைத்துமாக இருந்தான். காலேஜிக்குப் போகாமல் ஊர் சுற்றினார்கள். பார்க்கவும் அழகான பொருத்தமான ஜோடி போல் இருந்தனர்.

காதல் பறவைகள் என மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் ஆசிரியர்களுக்கும் தெரியுமளவுக்கு இருந்தது அவர்களின் நெருக்கம். இதெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளும் கல்லூரியில்லை போலும்….

அவனும் இறுதியாண்டு வர, அவளும் மூன்றம் ஆண்டில் கால் பதித்திருந்தாள். அவன் வற்புறுத்தலின் பேரில் அவன் பொறுப்பேற்றிருந்த ஜாயிண்ட் செகரட்டரி பதவிக்கு அவள் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.

**********

அஜயுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் அவளின் சீனியர்ஸ் உடனானப் பனிப்போர் வலுவடைந்தது. எதிலாவது அவனை இல்லை இவளை மாட்டிவிட, அசிங்கப்பட வைக்க வேண்டுமென யோசித்தனர்.

அதற்கான தருணமும் அவர்களுக்கு அமைந்தது. ஆனால் அது அவளறியாமல் நடத்தப்பட்டது.

அவளுடைய சீனியர் ஒருவனை அடித்துக் காயப்படுத்தியக் குற்றத்திற்காக அஜயை இரண்டு வாரம் சஸ்பெண்ட் செய்ய முடிவெடுத்தது கல்லூரி நிர்வாகம்.

கோபத்தில் பாக்ஸிங் பேக்’கை மூர்க்கத்தனமாகக் குத்திக்கொண்டிருக்க, அங்கேவந்த கவிதா “ஏன்டா அவனை அடிச்ச…? சஸ்பெண்ட் அப்படி இப்படி என்னென்னமோ சொல்றாங்க… படிக்கிறப்ப இதெல்லாம் தேவையா?” அலுப்புடன் அவள் கேட்க, எதுவும் சொல்லாமல் குத்திக்கொண்டிருந்தான்.

அஜயிடம் அடிவாங்கியவன் கட்டுடன் கல்லூரிக்கு வர, அவனையையும் அஜயையும் விசாரிக்க ப்ரின்ஸிபல் அறைக்கு வரச்சொன்னதாக பியூன் அவனை அழைத்துச் சென்றார்.

ப்ரின்ஸிபல் அறையில் இருந்து அவன் வெளியே வந்தபோது “எவ்வளோ கேட்டுட்டேன்… ஏன் டா… ஏன் அவனை அடிச்ச…?” என பலமுறை கேட்ட கேள்வியையே அவள் கேட்க,

“சஸ்பெண்ட் ஆகறதெல்லாம் ஒரு பெரிய விஷயமாடி. விட்டுத்தள்ளு. மூட் சரியில்ல… தல வலயா வேற இருக்கு… வா வெளிய போலாம்…” எனக் கைப்பிடித்து அழைத்துச்செல்ல முற்பட

“இல்ல. இன்னிக்கி ஸிம்போஸியம் வேல இருக்கு…” அவள் தயக்கத்துடன் சொல்ல, அவளை முறைத்துவிட்டு, எதுவும் பேசாமல் வண்டியை எடுத்துக்கொண்டு வேகமாகச் சென்றுவிட்டான்.

அவனின் வேகம், கோபம் ஒரு வித உறுத்தலாகவே இருந்தது அவளுக்கு.

‘அஜயை வெறுப்பேற்ற வேண்டுமென்றே, அவளுடைய சீனியர்ஸ் அவளுக்கு அதிகமாக வேலை தருகிறார்கள், ஸிம்போஸியம் என்ற பெயரில்…’ என அவளுக்கும் தெரிந்தது. ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

காலை வந்தவுடன் ஆரம்பிக்கும் வேலை இரவு ஒன்பது மணிவரை நீடிக்கிறது. அவளுக்கும் அவனுக்கும் இடையில் ஒரு பிரிவினை ஏற்படுத்தவேண்டும் என அவர்கள் நினைத்தது கொஞ்சம் நிறைவேறியது…

அஜய் செல்வதையே பார்த்திருந்தவள், அவளின் வகுப்புத் தோழி அழைப்பில் தன்னிலைக்கு வர,

“அஜய் ஏன் அடிச்சான்னு தெரியுமா…? இதுக்காகத்தான்…” என சொல்லி மொபைலில் சில போட்டோவை காண்பித்தாள். அதைப் பார்த்து இதயம் நின்றுவிடுவதுபோல் அதிர்ந்தாள் கவிதா…