Episode 6

Episode 6

தான் வீட்டிற்கு வருவதற்கு முன்பே கணவன் வந்த விபரத்தை தாயிடம் கேட்டறிந்த ரம்யாவிற்கு இப்பொழுது என்ன குழப்பம் வரக் காத்திருக்கிறதோ என்ற கவலை தான்.. 

வந்தவர் யார் என்று கேட்ட குழந்தையிடம் கூட தெரிந்தவர் என்றே சொல்லி வைத்தனர் பெரியவர்கள்…

அடுத்து வந்த இரண்டு நாட்களும் அமைதியாய் கழிய மீண்டும் ரம்யாவின் அலுவலகத்திற்க்கே வந்து கிரிதரன் பேச அப்பொழுதும் அவளுக்கு சந்திக்கும் எண்ணமில்லை தான். 

ஆனாலும் தன் நிலையை உறுதியாக கூறி முற்றுப்புள்ளி வைக்கவே அவனுடன் பேச சம்மதித்தாள்.

ப்ளு ஸ்லிம்ஷர்டுடன் ப்ளாக் ஜீன்சும் அணிந்து கம்பீரமாய் தனக்காக காத்திருந்தவனை கண்டதும் மனதிற்குள் கிளர்ச்சி எழுந்தாலும் அதனை வெளிக்காட்டமால் பேச வந்தமர்ந்த மனைவியை கண்டதும் அவளின் தோற்றப்பொலிவில் மனம் லயிக்க மனைவியின் மாற்றத்தை எடை போட ஆரம்பித்தான். 

பிங்க் ஆர்ட் கிரேப் சுரிதாரில் அமைதியான அழகும் குழந்தைத்தனமும் குடிகொண்டிருந்த முகத்தில் தற்போது தாய்மையின் பொலிவும் சற்றே கடினத்தன்மையுடன் மெருகேறிய அழகும் புதுப் பொலிவை கூட்டிட ஏற்கனவே மெலிந்த தேகத்தை உடையவள் இன்னும் மெலிந்தவளாய் மாறியிருந்தாள். 

அதை அவளிடம் சொல்லவும் செய்தான். எதையாவது சொல்லி பேச்சை ஆரம்பிக்க வேண்டுமே. அதற்கு இது தொடக்கமாக இருக்கட்டுமே என்று நினைத்து தான் அவன் ஆரம்பித்தது…

“ரொம்ப மெலிஞ்சு போயிருக்கியே ரம்யா… இன்னும் சாப்பாடு விசயத்துல தகராறு தானா?” என்றவனிடம் கோபமாய் 

“ரொம்ப அவசியமா தெரிஞ்சுகிட்டே தான் ஆகணுமா? இப்படி உத்து உத்து பாக்கத்தான் வந்துருக்கீங்கன்னா அதுக்கு ஆள் நான் இல்ல; வந்த விஷயத்தை சொல்லிட்டு கிளம்புங்க” 

“உன் கோபத்துல அர்த்தம் இருக்கு; நான் எல்லா தப்பையும் சரி பண்ணறேன்.. போதும் தனித்தனியா இருந்தது; நீயும் பேபியும் எனக்கு வேணும்” என்று கூற அவனை இடைமறித்து 

“நாங்க என்ன கடையில வாங்குற பொருளா? சின்ன குழந்த மிட்டாய் வேணும்னு அடம்பிடிக்கிற மாதிரி எனக்கு நீங்க வேணும்ன்னு வந்து நிக்கிறீங்க; மனுசங்கள மனுசனா பாக்க எப்போதான் பழகுவீங்களோ தெரியல. 

இந்த லட்சனத்துல திரும்பவும் உங்க கூட வந்து சந்தோசமா இருக்கணும்னு சொல்லறத நம்ப எனக்கு ஒண்ணும் பைத்தியம் பிடிக்கல. நான் தெளிவா தான் இருக்கேன்” என்று பைத்தியம் என்னும் வார்த்தையை அழுத்திப் பேச; 

“ம்ப்ச்… அத எல்லாம் மறந்துரு; தயவு செய்து இந்த ஒரு தடவை எனக்காக வேண்டாம் நமக்காக… நம்ம குழந்தைக்காக… கொஞ்சம் யோசி ரம்யா” 

“அந்த நமக்காக… நானும் என் குழந்தையும் மட்டும் தான் இருக்கோம் நீங்க இல்ல; உங்க கூட எங்களையும் இணைச்சு வீணா ஆசைய வளர்த்துக்காதீங்க. எங்கள நிம்மதியா இருக்க விடுங்க உங்களுக்கு புண்ணியமா போகும். 

இவ்வளவு நாளா இல்லாத அக்கறை; அஞ்சு வருசமா வராத பாசம் இப்போ மட்டும் எப்படி வந்தது?” என்று கேள்வி கேட்டவளை கண்களை விரித்து மெச்சும் பார்வையுடனே பார்த்தவன்

“இப்போ கேட்டியே இது கேள்வி; உங்க மேல இருக்குற என்னோட பாசமும் அக்கறையும் என்கிட்டே தான் பத்திரமா இருக்கு. என்னோட இடத்துல இருந்து கொஞ்சம் யோசிச்சி பாரு.

என்னோட அம்மாவும் அப்பாவும் எந்த காலத்திலேயும் நாம சேர்ந்து வாழறதுக்கு தடை சொன்னதில்ல. அவங்கள நான் விட்டு கொடுக்காம இருக்கணும்னு நினைச்சுருக்காங்க .

பெத்தவங்க சொல்லை மீறி  நாம ஒரு காரியம் செய்யும்போது நம்ம மேல உள்ள நம்பிக்கை குறைஞ்சு போயிருது.. 

நம்ம மேல நம்பிக்கை இல்லாத பட்சத்தில எங்கே அவங்களோட மதிப்பும் மரியாதையும் குறைஞ்சு போயிடுமோனு நினைச்சு தான் கொஞ்சம் இல்ல அதிகமாவே உரிமை எடுத்துகிறாங்க. அது தான் உண்மை.

பெத்தவங்களுக்கு மனசுல கோவில்  கட்டி கும்பிட்டாலும் வெளியே காமிச்சுக்காத என்னை மாதிரி பசங்களுக்கு அது தான் வினையா முடியுது. நம்ம கல்யாண விசயத்திலேயும் சரி; அதுக்குப் பிறகும் சரி இது தான் நடந்தது.

வீணான பேச்சுக்கள் வளர்ந்த நேரத்துல அத விலக்கி வைக்க முடியாத படி சூழ்நிலையும் காலமும்  அதுக்கு தோதா அமைஞ்சுருச்சு. நான் வெளிநாடு போனதும் அங்கே வேலையும் இழுத்து என்னை கட்டி போட்டத என்னனு சொல்ல. 

எல்லாம் விதின்னு சொல்லி தப்பிக்க நான் விரும்பல. தப்புன்னு பார்த்த எல்லாமே தப்பு தான்; எல்லோர் மேலயும் தப்பு இருக்கு அத இப்போ அலசி ஆராய வேணாமே… போனதெல்லாம் போகட்டும் இனிமே புதுசா நமக்கான வாழ்க்கைய நாம ஆரம்பிப்போம்.

எனக்கு நீதான் வேணும்னு யார்கிட்டயும் போய்  கேட்கவும் முடியல… நான் உனக்காக மட்டுந்தான் தவிச்சுக்கிட்டிருக்கேன்னு யார்கிட்டயும் சொல்லவும் முடியல ரம்யா?” மென்மையாய் தன் நீண்ட விளக்கத்தை கூறியவனிடம்

முடிஞ்சுருச்சா?அவ்வளவு தானா” ?; ரொம்ப ஈசியா உங்க மேல எந்த தப்பும் இல்லன்னு சொல்லிடீங்க; ஆனா நான் பட்ட கஷ்டம்; அவ்ளோ ஈஸியா என்னால மறக்க முடியாது இத தான் பேச வந்தீங்கன்னா நான் கிளம்புறேன் வெடுக்கென்று கூறி கிளம்பி விட

“கொஞ்சம் யோசிச்சு பாரு; வீண் பேச்சையும், கோபத்தையும் இன்னும் இழுத்து பிடிக்க வேணாம். போதும்  நாம பட்ட கஷ்டம்; என்ன பேச்சு வந்தாலும் நான் பொறுப்பு” அவனின் வார்த்தைகள் காற்றோடு தான் போனது.

அதற்கடுத்த நாளில் இருந்து அவளையும் குழந்தையையும் காலை நேரத்தில் பார்க்க தவறுவதில்லை. குழந்தையை அனுப்பிவிட்டு நிற்கும் அவளிடம் மீண்டும் இணைந்து வாழ்வதைப் பற்றி ஓரிரண்டு வார்த்தைகள் பேசுபவன் எக்காரணத்தைக் கொண்டும் தானாகச் சென்று குழந்தையுடன் பேசுவதை தவிர்த்து வந்தான். 

அவனது பொறுமையின் உச்சகட்டமாக தானோ இப்பொழுது ஆலோசனைக்கு(கவுன்சிலிங்) அழைத்திருப்பதும் என்றே ரம்யாவிற்கு தோன்றியது…

இடைவிடாத கீச்சுக்குரலும் அதனை தொடர்ந்து தொலைக்காட்சியின் ஒலியும் ரம்யாவை நிகழ் காலத்திற்கு அழைத்து வர தன்னறையிலிருந்து வெளியே வந்தவள் 

“இவ்ளோ சவுண்ட் வைச்சுக்காதே இந்தும்மா… வீடே அதிருது.. என்னால உள்ளே இருக்க முடியலடி..” தன் மகளிடம் கூற

“மாட்டேன் போ… நான் இப்போ தான் ஸ்கூல்ல இருந்து வந்திருக்கேன்.. டிஸ்டர்ப் பண்ணாதே”.. என்று பெரிய மனுசியாய் ஆணையிட்டதோடு தன் தலைவன் சின்சானை பார்க்க ஆரம்பித்தாள்

“எல்லாம் உங்க பாட்டியும் மாமாவும் சேர்ந்து குடுக்குற செல்லத்துல தாண்டி இப்படி ஆடிகிட்டு இருக்க. உனக்கு அடுத்த வருஷம் நிறைய ஹோம்வோர்க் குடுக்குற ஸ்கூலா பார்த்து சேர்த்து விடறேன் அப்போதான் அடங்குவ” என்று கூற அங்கே ஆரம்பமாகியது ஓரு கச்சேரி. அதை கேட்டு சமையல் அறையில் இருந்து எட்டி பார்த்த செல்வி 

“ஏண்டி.. இப்ப குழந்தயா அழ வைக்கிற; அவ சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் பேசாம ரூம்லேயே இருக்க வேண்டியது தானே; அதுக்குள்ள வந்து அவகிட்ட வம்பு வளக்கனுமா?” என்றவாறே வெளியே வந்தவர் 

“நீ வாடி செல்லம். அம்மா என்ன சொன்னா?” அவளை மடியில் இருத்திக்கொண்டே உணவை ஊட்டி விட ஆரம்பித்தார்.

“ஒண்ணும் சொல்லிடக்கூடாது; உடனே மூக்கு வேர்த்து போய் வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்துருவாங்க என்னமோ செஞ்சுக்கொங்க.. முணுமுணுத்தவாறே அலுத்துக்கொண்டே ரம்யாவும் உள்ள சென்று விட

“எனக்கு நிறைய ஹோம்வோர்க் குடுக்குற ஸ்கூல்ல சேர்த்துருவேன்னு அம்மா சொல்றா? நெஜமாவா பாட்டி”. விசும்பிக்கொண்டே பேத்தி கேட்க

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல தங்கம்… அப்படி செஞ்சா அவளுக்கு சாப்பாடு குடுக்காமா பட்டினி போட்ருவோம்.. சரியா இப்போ இந்த தோசைய சாப்பிடுவியாம்.. பாப்பாக்கு பிடிச்ச மாதிரி முறுவலா இருக்கு” 

“மாமா எனக்கு ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வரும். அத தான் சாப்பிட்ட போறேன் இது வேணாம்” பேத்தி ஒதுக்க 

“உங்க மாமா வர லேட் ஆகும்டி ராஜாத்தி.. இப்போ இதை சாப்பிடுவியாம்… கொஞ்ச நேரம் கழிச்சு அதையும் சாப்பிடுவியாம்” என்று தொடர்ந்தார்.

பேத்தியை சீராட்டுவதில் செல்விக்கு அலாதி பிரியம்; ஒரு சுடு சொல்லோ அடியோ பேத்தியின் மீது விழுந்து விடாமால் பொத்தி பொத்தி தன்னோடு வைத்துக்கொள்வார். பாட்டிக்கும் பேத்திக்கும் இடையே யார் வந்தாலும் அவர்கள் எல்லாம் கால் தூசி தான் செல்வி பாட்டிக்கு.

இதை விட ஓரு படி மேல் தன் மாமனிடம் செல்லம் கொஞ்சுவாள் அந்த சின்ன சிட்டு. அவனை பார்க்காமல் இந்த செல்ல ராட்சசிக்கு பொழுது விடியாது; இரவும் முடியாது. 

மாமனை தவிர்த்து வேறு யாரும் இவளை செல்ல ராட்சசி என்று கூப்பிட்டு விடவும் முடியாது. அவ்வளவு ஒட்டுதல் இருவருக்கும்.

இவர்களின் மூவர் கூட்டணியில் கலந்து கொள்ளாமல் தனியே நின்று வேடிக்கை பார்க்கும் வேலையை மட்டுமே பார்ப்பவர்கள் ரம்யாவும் அவள் தந்தை சண்முகமும் தான்.

அவருக்கும் பேத்தி மீது அதீத பாசம் தான்; ஆனாலும் அதை விட பெண்ணின் நலனே அவர் கருத்தில் நிலைத்து நிற்கும். எப்பொழுதும் போல் நடப்பதை பார்த்துகொண்டு இருந்த ரம்யாவிற்கு கோபம் அளவில்லாமல் வந்தது..

“ஆபிஸ் முடிஞ்சு வந்ததும் நான் சொன்னத பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாம இந்த அம்மா பேத்திக்கு ஊட்டி விடுறது தான் முக்கியமான வேலையா செஞ்சுகிட்டு இருக்காங்க. இவங்கள என்ன பண்ணலாம் (அதைப்பற்றி கேட்க வேண்டாம் என்று தன் அன்னையிடம் சொன்னதை அந்த சமயத்தில் ரம்யா ஏனோ மறந்து போனாள்)” மனதில் இருவரையும் கடிந்து கொண்டிருக்கும் வேளையில் சிவா வந்து விட்டான்.

ரம்யாவின் அண்ணன் சிவகுமார் CA முடித்து விட்டு தற்போது ஒரு புகழ் பெற்ற நிறுவனத்தில் ஆடிட்டிங் சம்மந்தமான அலுவல்களை கவனித்து கொள்பவன். மிகுந்த திறமைசாலி; தன் பொறுப்பினை நன்றாய் அறிந்தவன். குடும்பத்தின் மீது அதீத பாசம் வைத்திருப்பவன். 

தன் தங்கையின் நலமே தன்னலமாய் நினைத்து திருமண வாழ்க்கையை தள்ளிபோடும் முப்பது வயது இளைஞன். அவர்கள் வீட்டு சின்ன சிட்டின் மனம் கவர்ந்த தாய்மாமன்.

“என்னோட செல்ல ராட்சசி என்ன பண்ணறாங்க”… சீண்டிக்கொண்டே வந்த சிவாவைப் பார்த்து 

“ஏன்டா… உனக்கு கூப்பிடுறதுக்கு வேற பேரே கிடைக்கலையா? என் தங்கத்தோட அழகான பேர இப்படி கொலை பண்றீயே?” என்று செல்வி மகனிடம் காய ஆரம்பித்தார்.

“நானா கொலை பண்ணறேன்? உன் பேத்தி தான் அப்படி சொல்லிக்கிட்டு இருக்கா எங்கே சொல்ல சொல்லுங்க அவளோட பேர” என்றவன் குழந்தையிடம் திரும்பி “குட்டிம்மா உங்க பேர் சொல்லுங்க; பாட்டி காது குளிர கேக்கட்டும்.” 

“மை நேம் இஸ் இந்திரட்சஷி” என்று அந்த சின்ன சிட்டும் கூற 

“நல்லா கேட்டியா “இந்திராக்ஷி” ங்கிற அழகான பேர எப்படி சொல்றா உன்னோட பேத்தி” என்று வாரினான்.

“எனக்கு என்ன வாங்கிட்டு வந்தே மாமா?” 

“உனக்கா ஒண்ணுமே வாங்கலையே..”

“இல்ல இருக்கு எனக்கு குடு” ஏற்கனவே ரம்யாவின் அதட்டலில் விசும்பலை தொடங்கி இருந்தவள் மாமனின் பேச்சில் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிக்க

“நெஜமாவே ஒண்ணும் கொண்டு வரலடா இந்தும்மா… இப்போ வெளிய போயிட்டு வரும்போது கொண்டு வர்றேன் செல்லம்” என்று சமாதானம் கூறினாலும் ஏற்கவில்லை.

சோபாவில் அமர்திருந்தவள் அப்படியே மாமனின் முதுகில் தொற்றிக்கொண்டு தன் விருப்ப பொருளை ஆராய ஆரம்பித்தாள், தேடியது கிடைக்காமல் போக கச்சேரி உச்சஸ்தாயில் வளர்ந்தது. 

“என்னடா நீ… புள்ளைக்கு ஆச காட்டிட்டு ஒண்ணும் கொண்டு வராமா வரலாமா?” அதட்டலுடன் செல்வி கேட்க 

“அப்பா போன் பண்ணி கோர்ட் நோட்டீஸ் வந்துருக்கு; வீட்டுக்கு வா பேசணும்னு சொன்னதால ஆபிஸ்ல சொல்லிட்டு அப்படியே வந்துட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல அப்பாவும் வந்துருவாரு. அதுக்குள்ள இந்த ராட்சசிய வெளியே கூட்டிட்டு போய் லஞ்சம் கட்டிட்டு வரேன்” என்று நகர்ந்தான்…

பிள்ளைக்கு பிடித்த நொறுக்கு தீனியை வரிசையாய் வாங்கி கொடுத்துவிட்டு வந்தவனிடம் “இப்போ என்ன செய்யலாம் சிவா? எனக்கே குழப்பமா இருக்கு அது எப்படி திரும்பவும் கவுன்சிலிங் கூப்பிட்டு விட்ருக்காங்க என்ன விவரம்னு தெரியலையே?” என்று சண்முகம் கவலை கொள்ள

“நான் போய் விசாரிச்சிட்டு வரேன்ப்பா… நீங்க கவலை படாதீங்க… தங்கச்சிக்கு தைரியம் சொல்லுங்கப்பா. ஏற்கனவே குழப்பத்துல இருக்கா; இப்போ இதையும் சேர்த்து கஷ்டப்படுத்திக்கப் போறா” என்று சொல்லிக் கிளம்பியவன் போய் நின்ற இடம் கிரிதரனின் இல்லம்.

 

error: Content is protected !!