es-full

es-full

எக்குத்தப்பா சிக்கிட்டேனோ? 1

சற்று தயக்கத்துடன் தான் அந்த பெரிய கேட்டின் முன் இறங்கினாள் பூவிழி. அவள் கண்கள் அந்த கேட்டின் உயரத்தை அளக்க முயல அவள் தலை வானை நோக்கி நிமிர்ந்தது.

‘அடபாவிங்களா… எதுக்குடா கோபுரம் சைஸ்ல கேட்டை வச்சிருக்கீங்க, வந்ததும் என் கழுத்து சுளுக்கி கிட்டது தான் மிச்சம்!’ அவள் மனக்குரல் புலம்ப, அதற்குள் அந்த கேட் திறந்து கொண்டது.

கேட்டின் பின்னிருந்து வந்த ஜெயலட்சுமி பூவிழியின் கைப்பிடித்து உள்ளே இழுத்தப் படி,

“நேரா உள்ள வராம என்னடி ஆகாசத்தை ஆராஞ்சிட்டு மரமாறி நிக்கிற?” சிறு‌குரலில் கடிந்தபடியே நடந்தாள்.

“அச்சோ ஜெயாக்கா, கேட்டே இவ்ளோ பெருசு இருக்கே அப்ப வீஈஈடு!” அவள் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டாள்.

அவள் கண் முன்னால் காட்சி அளித்தது நிச்சயம் வீடு கிடையாது அது மாளிகை! இல்லை இல்லை! அது அரண்மனை…!

பிரம்மாண்ட கூடத்திற்கு அவளை அழைத்து, இழுத்து சென்ற ஜெயா, “இங்க வெய்ட் பண்ணு, நான் போய் மேடம்கிட்ட சொல்லிட்டு வரேன்” என்று மாடியேறி மறைந்து விட்டாள்.

ஆடம்பரமும் பேரழகும் நேர்த்தியும் செழுமையும் நிறைந்திருந்த அந்த கூடத்தை சுற்றிய இவளின் கோலிகுண்டு கண்கள் கிரிக்கெட் பந்து அளவிற்கு பெரிதாகியது.

‘எம்மாடியோய்… இந்த மாதிரி பங்களாவ நான் சினிமால தானே பாத்திருக்கேன்!’ என்று வாய் பிளந்த படி நின்றிருந்தாள்.

அவள் நின்ற கோலத்தை கண்டு ஜெயா தலையில் அடித்து கொண்டு, “ஏன் இப்படி பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பாத்த மாதிரி நிக்கற? யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க” என்று அடி குரலில் ஆதங்கப்பட்டாள்.

“நீங்க சொன்னாலும் சொல்லலன்னாலும் இந்த இடத்த பொருத்தவரை நான் பட்டிக்காட்டானாவே இருந்துட்டு போறேன்” என்று சொன்னவளின் பார்வை அந்த பிரமாண்ட கூடத்தை ஆச்சரியத்துடன் அளந்து கொண்டிருந்தது.

பரந்த கூடம் பேரழகாய் நேர்த்தியாய் வடிவமைக்கப்பட்டு இருந்தது. கூடத்தின் நடுவே பால் வெண்மை நிற சோஃபாக்கள் செவ்வக வடிவில் அமைக்கப்பட்டு இருந்தன. சுவரில் ஆங்காங்கே மாட்டப்பட்டு இருந்த விலையுயர்ந்த ஓவியங்கள் பார்வைக்கு பெரு விருந்தாய்…

ஜெயா அவளின் பிளந்திருந்த வாயை மூடி, “இப்படி பேக்கு மாதிரி நீ நிக்கறதை யாராவது பார்த்தா உன்ன சீப்பா நினப்பாங்கடீ… அதோட உன்ன இங்க கூட்டிட்டு வந்த என்னோட கெத்தும் போயிடும்…” அவள் கெஞ்சல் குரலில் சொல்ல, பூவிழி சரி என்பதைப் போல் இமைகளை சிமிட்டி புன்னகைத்தாள்.

அவள் கைப்பிடித்து அங்கிருந்த வெண்ணிற சோஃபாவில் அமர வைத்து தானும் அருகமர்ந்து கொண்டாள் ஜெயா. பட்டு சோஃபாவில் மெத்தென்று அவள் பாதி புதைந்து போக அவள் உடல் சுகமாய் அதிர்ந்து அடங்கியது.

“ஐய்ய்… சோஃபா சும்மா பொசு பொசுன்னு இருக்குது ஜெயாக்கா…” என்று எழும்பி எழும்பி அமர்ந்து சிறு பெண்ணாய் கிளுக்கி சிரித்தாள் இவள்.

ஜெயாவிற்கு வயிற்றில் புளியை கரைத்தது. “ஏய் சின்னத்தனமா நடந்துக்காத டீ… நானே உனக்கு இங்க வேலை கிடைக்கணும்னு வேண்டாத கடவுளுக்கு எல்லாம் அப்ளிகேஷன் போட்டுட்டு இருக்கேன்” என்று புலம்ப,

பூவிழி ஈஈஈ என்று இளித்து விட்டு சமத்து பெண்ணாய் அமர்ந்து கொண்டாள்.

அவர்களுக்கு பழச்சாறு கொடுத்த சர்வர் ராபர்ட், பூவிழியை ஏற இறங்க பார்த்துவிட்டு சின்ன இதழ் சுழிப்புடன் நகர்ந்து சென்றான். இருவரும் பழச்சாற்றை சுவைக்கும் போதே மாடி படிகளில் நிமிர்வோடு இறங்கி வந்தாள் சத்யவர்த்தினி.

அவளின் கம்பீரத்தையும் அழகையும் பார்த்து பூவிழியின் கண்களும் வாயும் ஒன்றாக விரிந்தன.

சாதாரண உயரத்தை விட சற்று அதிகமான உயரம்… பளிங்கில் குழைத்த வெண்ணெய் மேனி… ராஜகளை பொருந்திய அழகு முகம்… அவள் உடுத்தி இருந்த இரத்த சிவப்பு நிறச் சேலை அவள் அழகை மேலும் தூக்கிக் காட்டியது.

ஜெயா சட்டென எழுந்து நிற்க, பூவிழி தன் கையில் மீதமிருக்கும் ஆப்பிள் சாற்றை ஏக்கமுடன் பார்த்தாள்.

“பூ, சத்யா மேடம் அவங்க தான் எழு” ஜெயாவின் அவசர கண்டிப்பில் இவளும் எழுந்து நின்றாள்.

அவர்களை அமரும்படி கையசைத்து விட்டு சத்யவர்த்தினி எதிரில் ஒற்றை சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.

“மேடம் இவங்க தான் பூவிழி… தங்கமான பொண்ணு மேடம்… திறமையான பொண்ணும் கூட…” ஜெயா அறிமுகம் செய்ய, சத்யவர்த்தினியின் பார்வை பூவிழி மேல் படிந்தது.

வெண்மையும் இல்லாமல் கருமையும் இல்லாமல் இடைப்பட்ட மாநிறத்தை கொண்ட மேனி… ஐந்தடிக்கு மிகாத உயரம்… நீல வண்ண காட்டன் சுடிதார் அவளின் சற்று பூசினாற் போன்ற உடலில் கச்சிதமாய் பொருந்தி இருந்தது.

அவளின் படபடக்கும் பட்டாம்பூச்சி கண்கள் தன்மீது ரசனையாக படிந்திருப்பதையும் கவனிக்க தான் செய்தாள்.

“பாக்க ரொம்ப சின்ன பொண்ணு மாதிரி தெரியுற…!” சத்யாவின் குரல் யோசனையாய் ஒளிக்க,

“நான் பாக்க எப்படி இருந்தால் என்ன மேம்? நீங்க எதிர்பாக்கற திறமை என்கிட்ட இருக்கான்றது தான முக்கியம்”

வழக்கம் போல பூவிழி வாயளக்க, ‘போச்சு போ’ ஜெயா தன் தலையில் கைவைத்து கொண்டாள்.

“ம்ம் சரிதான், உனக்கு பத்து நிமிஷம் டைம்… எங்க காட்டு உன் திறமைய நானும் பாக்கணும்…” சத்யா அலட்டாமல் சொல்ல, பூவிழியிடம் சின்ன கலவரம் ஒட்டிக் கொண்டது.

தயக்கமாக ஒரு வெள்ளைத்தாளும் பென்சிலும் கையில் எடுத்துக் கொண்டவள், ஒரு நொடி இமைகளை அழுத்த மூடி திறந்து, கோடுகளை கிறுக்க தொடங்கினாள்.

ராபர்ட் பவ்வியமாக பரிமாறிய கிரீன் டீயை சத்யா பொறுமையாக பருகலானாள்.

இதோ பத்து நிமிடங்கள் கடந்து சென்று மேலும் நிமிடங்கள் நீண்டு போக, சத்யாவின் பொறுமை விலகும் நேரம்… தலை நிமிர்த்திய பூவிழி நீட்டிய காகிதத்தை பார்த்த சத்யாவின் பார்வையில் மெச்சுதல் தெரிந்தது.

சற்றுமுன் சத்யவர்த்தினி படிகளில் இறங்கி வந்த அவளின் தத்ரூப தோற்றம் அந்த வெள்ளைத் தாளில் வெறும் கருப்பு கோடுகளில் நேர்த்தியாக வரையப்பட்டு இருந்தது.

வெறும் இரு நிமிடங்கள் கூட கடக்காத ஒரு காட்சியை இத்தனை நேர்த்தியாக வரைவது என்பது தனித்திறமை தான். இத்தனை அபார திறமையை இந்த சில்வண்டு பெண்ணிடம் சத்யா எதிர்பார்க்கவில்லை தான்.

“ம்ம் குட்… என் பசங்க கீர்த்தி, பிரபாக்கு இனிமே நீங்க தான் டிராயிங் டீச்சர்…” என்றாள்.

“என்ன? உங்க பசங்களா! மேடம் நீங்க கல்யாணம் ஆனவங்கன்னு சொன்னாலே நான் நம்பறது கஷ்டம்… இதுல பசங்க இருக்குனு சொன்னா என் லிட்டில் ஹார்ட் என்னாகும்…!” பூவிழி தன் நெஞ்சில் கைவைத்துக் கொண்டு சொல்ல, சத்யா அவளை ஏதோ வேற்றுகிரகவாசி போல் பார்த்து வைத்தாள்.

ஜெயா, “சாரி மேம், இவ இப்படி தான் அப்பப்ப கிறுக்கு தனமா உளரி வைப்பா… நான் புத்தி சொல்றேன் மேம்” என்றாள் தையக்கத்துடன்.

“ம்ம் பார்த்தாலே தெரியுது… வாய் கொஞ்சம் நீளம் தான்… இனிமே அடக்கி பேச பழகிக்கோங்க பூவிழி… இடத்துக்கு தகுந்த மாதிரி நீங்களும் நடந்துக்க பாருங்க” என்று ஆணையிட,

இவள் மொழி புரியாதவள் போல விழித்து, “சரி மேடம், தேங்க் யூ மேடம்” என்று கடுப்பான புன்னகையுடன் நன்றி சொல்லிவிட்டு ஜெயாவுடன் நடந்தாள்.

“இப்ப நான் என்னா சொல்லிட்டேன்னு இந்த பியூட்டி எனக்கு புத்தி சொல்லுது?” பூவிழி ஜெயாவுடன் முரண்டினாள்.

“என்ன பியூட்டியா!” அவள் தன்னுடன் இங்கேயே வேலையில் சேரந்துவிட்ட சந்தோசத்தில் ஜெயாவும் இயல்பாய் கேட்டாள்.

“ஆமா, ஃபிகரு நல்லா இருக்கேனு பாராட்டுனா… அதைக்கூட புரிஞ்சிக்க தெரியில பாவம்” பூவிழி தோள் குலுக்கி கொண்டாள்.

“ஏய் சத்யா மேடம் இப்படி தான்… அவங்க முன்னாடி நீ கொஞ்சம்…” என்று தன் கையால் வாயை மூடி சைகை காட்டினாள் ஜெயா.

“ம்ம் இவ்ளோ பெரிய வீட்ல இவங்க மட்டும் தான் இருக்காங்களா?” பூவிழியின் கேள்வி நேரம் ஆரம்பித்து விட்டது.

“இல்ல, சத்யா மேமோட அப்பாக்கு ஹார்ட் ஆப்ரேஷன் நடந்து இருக்கு… அவருக்கு துணையா அவங்க அம்மாவும் யுஎஸ் போயிருக்காங்க, அவங்க திரும்பி வர இன்னும் எப்படியும் ரெண்டு மாசம் ஆகும்னு நினைக்கிறேன்”

“ஓகே பெருசுங்க ரெண்டும் செகண்ட் ஹனிமூனுக்கு போயிருக்குங்க” பூவிழி சாதாரணமாய் சொல்ல, ஜெயா பக்கென சிரித்து விட்டாள்.

“சீரியஸான விசயத்தை கூட காமெடி ஆக்க உன்னால மட்டும் எப்படி முடியுதோ!”

“கண்டுக்காத… அப்புறம் சத்யவர்த்தினி மேமோட ஹஸ்பெண்ட்?”

“ராம் குமார் சார்… சத்யவர்த்தினி மேடமை லவ் மேரேஜ் பண்ணிகிட்டு வீட்டோட மாப்பிள்ளையா இங்கேயே செட்டில் ஆகிட்டாரு… பிஸ்னஸ், கம்பெனி தவிர வீட்டு விசயத்தில அவ்வளவா அவர் தலையிடறது இல்ல”

“ம்ம் கீர்த்தி, பிரபா அவங்களோட பசங்க… அப்ப, எனக்கு செட்டாகுற மாதிரி யாரும் இங்க இல்லயா! சோ சேட்” என்று முகம் சுருக்கியவளின் தலையில் தட்டி, “வாயாடி, உன்னோட டைம் பாஸ் கூட இருக்கு… சத்யா மேமோட தம்பி… இந்த வீட்டோட ஏக வாரிசு… சித்தார்த் சர்” ஜெயா சொன்னவுடன்,

“ஆள் எப்படி க்கா… தேறுவானா…?” பூவிழி கண்சிமிட்டி கேட்டாள்.

ஜெயா விளையாட்டை கைவிட்டு அவளை ஏகத்திற்கும் முறைத்து, “இது பெரிய இடம் பூவிழி, நீ வெகுளிதனமா ஏதாவது சொல்ல போய் அது தப்பான விளைவை உண்டாக்க நிறைய வாய்ப்பு இருக்கு, புத்திசாலி பொண்ணு பார்த்து நடந்துக்க சரியா…” பெரியவளாய் விளக்கம் தந்தாள்.

சின்னவளின் முகம் யோசனையில் சுருங்க, “அப்ப சித்தார்த் மொக்க பீஸ்னு சொல்றீயா க்கா… தேறமாட்டானா?” என்று கேட்டு வைக்க, பெரியவளின் கைகளால் நான்கு அடிகளை வாங்கிக் கொண்டாள்.

அந்த பங்களாவின் பின்புறம் வேலை ஆட்கள் தங்குவதற்கான வீடுகள் அமைந்து இருந்தன. அதில் ஒற்றை அறை பூவிழிக்கு ஒதுக்கப்பட்டது.

அறை ஓரளவு பெரிதாக வசதியாக தான் இருந்தது. கட்டில், மெத்தை, இரு நாற்காலிகள், மேசை, அறையோடு இணைந்திருந்த குளியலறை என்று, ஒருவர் தங்க இந்த வசதிகள் போதுமானது தான் என்று தோன்றியது அவளுக்கு.

‘அப்பாடா இடம் செட்டில் ஆயிடுச்சு, அடுத்து நம்ம வேலைய கவனிக்க வேண்டியது தான்…’ என்று எண்ணியவளுக்கு அந்த பங்களாவின் நிர்வாகப் பெண் சாவித்திரி, நாளை மாலை கீர்த்தி, பிரபாவிற்கு ஓவியப் பயிற்சி தர வேண்டும் என பூவிழிக்கு சொன்னது அவள் நினைவில் வந்து போனது.

‘ம்ம் வசதி, வாய்ப்பா வாழறது கூட செமையா இருக்கும் போல… இதெல்லாம் இல்லாமையே நம்ம லைஃப் செம்மையா தான இருக்கு விடு பூவிழி…’ என்று தன்னோடு பேசிக் கொண்டவள், இந்த புது சூழலில் நாளைய நாள் எப்படி இருக்கும் என்ற சிந்தனையில்  உறங்க முயன்றாள்.

சட்டென முகத்தில் இருந்து போர்வையை விலக்கியவள், “ஜெயாக்கா கடைசி வரைக்கும் அந்த சித்தார்த் பயபுள்ள தேறுமா? தேறாதா?னு சொல்லவே இல்லையே” என்று வாய்விட்டு யோசித்தவள், “சரி விடு நம்ம கிட்ட சிக்காமயா போயிடுவான்…” என்று மறுபடி போர்வைக்குள் புதைந்து போனாள்.

 

எக்குத்தப்பா சிக்கிட்டேனோ? 2

எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி வானின் கருமை நிறம் பொன்னிறமாக மாற வழக்கம் போல புத்துணர்வாய் விடியல் தொடங்கியது. ‘தட் தட்’ கதவு தட்டப்படும் சத்தத்தில், விடியற்காலையின் சுகமான உறக்கம் கலைந்து பூவிழி எழுந்து வந்து கதவை திறந்தாள்.

வெளியே காலை காஃபியோடு வேலையாள் நின்றிருந்தாள். நடுத்தர வயதை ஒத்திருந்த அவள், வெளிர் நீல நிற நீண்ட சுடிதார் அணிந்து அதற்கு மேல் தூய வெள்ளை நிற ஏப்ரால் அணிந்து இருந்தாள்.

‘அடேங்கப்பா… இங்க வேலைக்காரங்களுக்கு கூட யூனிபார்ம் கொடுத்திருக்காங்க போல… பில்டப்பூ’ என்று எண்ணிக் கொண்டவள்,

“சரியா ஆறு மணிக்கு எழுப்பி காஃபி கொடுத்தாகணுமா க்கா…?” என்று  கலைந்த தூக்கத்தோடு சிணுங்கினாள்.

“ஆமா டீச்சர், ஆறு மணிக்கு பெட் காஃபி, எட்டு மணிக்கு ப்ரேக் பர்ஸ்ட், பதினொரு மணிக்கு ஜூஸ், ஒரு மணிக்கு லன்ச், நாலு மணிக்கு டீ, சினாக்ஸ், நைட் எட்டு மணிக்கு டின்னர், ஒன்பது மணிக்கு பால்… இங்க சாப்பாட்டுக்கு மட்டும் எப்பவும் நேரம் தவறாது”

அவள் படபடவென ஒப்புவிக்க, பூவிழி கண்களை இறுக மூடி தலையை அசைத்து கொண்டாள்.

‘பேச்சுல என்னா வேகம் ப்பா… எது எப்படியோ நமக்கு சோறு தான முக்கியம்…’ என்று தனக்குள் சொன்னபடியே காஃபியை எடுத்து கொண்டு அறைக்குள் வந்தாள்.

சாளரம் அருகே அமர்ந்தபடி, ஒவ்வொரு மிடக்கையும் சுவைத்து பருகினாள்.

‘ம்ம்ம்… பல்லு விளக்காம காஃபி குடிக்கிற சுகமே தனி ம்ம்ம்…’

‘வீட்ல ஒரு நாளாவது இப்படி பெட் காஃபி கொடுத்திருக்குமா? அந்த தில்லு பேபி… எப்பவும் ஹாஸ்டல் வார்டன் மாதிரி மிரட்டி கிட்டு இருக்கும்… இங்க நான் என் விருப்பப்படி இருக்கலாம். யாரு கேப்பா நம்மள…?’

அவள் மனம் கூடு விட்டு வான்வெளியில் பறக்கும் பறவை போல குதூகலித்தது. பூவிழி குளித்து தயாராகவும் ஜெயலட்சுமி அவளிடம் வரவும் சரியாயிருந்தது.

ஜெயா, அந்த ஊரிலேயே குடும்பத்துடன் தங்கி இருந்தாள். இங்கு கீர்த்தி, பிரபாவிற்கு தமிழ், ஆங்கிலம், இந்தி மூன்று மொழிகளையும் பேசவும் எழுதவும் கற்று தருவது இவள் வேலை.

பிள்ளைகளுக்கு ஓவியம் கற்றுத்தர அந்த துறையில் சிறந்தவர்களை தேடும் வேலை தொடங்க, இவளுக்கு சட்டென்று நினைவு வந்தது பூவிழி தான். பார்த்ததை தத்ரூபமாக வரையும் அவளுடைய திறமை இவள் அறிந்ததே.

“குட் பூ… எங்க இன்னும் எழாம இருக்கியோன்னு பயந்துட்டே ஓடி வந்தேன்” என்றாள் ஜெயா.

“அதெல்லாம் நான் சமத்து பொண்ணு க்கா… எனக்கு கீர்த்தி, பிரபாவ பார்க்கணும்…வா போலாம்”  என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றாள்.

பள்ளிக்கு தயாராகி மாடி படிகளில் இறங்கி வந்த அந்த இளங்குறுத்துக்களை சற்று குறுகுறுப்பாக கவனித்தாள் பூவிழி. சத்யவர்த்தினி மகள் கீர்த்தி என்ற ரீதியில் பூவிழி தன் மனதில் வரைந்து வைத்திருந்த கற்பனை தோற்றம் இப்போது அழிந்து போனது.

குண்டு கன்னங்கள், உருண்ட தேகம் என எட்டு வயது அமுல் பேபி போல கொழுக் மொழுக் என்று இருந்தாள் கீர்த்தி. எந்த வகையிலும் அவள் சத்யவர்த்தினியின் ஜாடையை கொண்டிருக்கவில்லை. ஒருவேளை அவளின் அப்பாவின் தோற்றத்தை ஒத்திருக்கலாம் என்று எண்ணிக் கொண்டாள்.

பிரபாகரன் முழுக்க சத்யவர்த்தினி நகலாகவே தெரிந்தான். நீள் வட்ட முகம், அந்த அதிகார பார்வை, நடையில் தெரிந்த அந்த நிமிர்வு… என்று அந்த ஆறு வயது சிறுவன் தன் அம்மாவின் பிரதிபலிப்பாய் தெரிந்தான்.

ஜெயா, பூவிழியை அவசரமாக அந்த பங்களாவில் இருந்து வெளியே இழுத்து வந்தாள். “பூ அவங்க பர்மிஷன் இல்லாம அங்கெல்லாம் நாம போக கூடாது சொன்னா புரிஞ்சிக்க டீ”

“என்னவோ போ க்கா, அவங்க வேலை தராங்க நான் செய்ய போறேன். அங்க போகாத, இங்க பேசாத ரூல்ஸ் எல்லாம் எனக்கு ஒத்து வராது”

“பேசுவ டீ… வெறும் டிராயிங் வேலைக்கு இவ்ளோ சம்பளம், தங்க வசதி இதையெல்லாம் வேறெந்த மாக்கான் உனக்கு கொடுப்பானாம்” ஜெயா கடுப்பாக கேட்டு வைக்க,

“இந்த மாக்கானுங்க அதிகமா சம்பளம் கொடுக்கறாங்கனு என்னால என் கெத்தை விட்டு தர முடியாது” பூவிழி சரிக்கு சமமாய் பேச,

“அச்சோ வாய் கழுவு… இவ்ளோ பெரிய மனுசங்கள கிண்டல் பண்ணிட்டு” ஜெயா பதற,

“யா…ரு நானு…!” பூவிழி கண்கள் சுருக்கி கேட்க,

ஜெயா அவளிடம் மேலும் பேச்சை வளர்க்க விரும்பாமல், அவளை உணவு கூடத்திற்கு இழுத்து வந்தாள்.

அங்கு தங்குபவர்கள் உணவு உண்பதற்காக தனி கூடம் அமைக்கப்பட்டு இருந்தது. பெரிய அளவில் இருந்த செவ்வக வடிவ உணவு மேசையில் இருவரும் அமர்ந்து பூரி, பொங்கல் என வெளுத்து கட்டினர். ஜெயா அடுக்கி அடுக்கி புத்தி சொல்லிவிட்டு விடைபெற்று சென்றாள்.

மாலைவரை அறைக்குள் முடங்கி கிடக்க பூவிழியால் ஆகாது எனவே நேரே நிர்வாக பெண் சாவித்திரியிடம் சென்றவள், மாலை பிள்ளைகளின் ஓவியப் பயிற்சிக்கு தேவையான பொருட்களின் பட்டியலை நீட்டினாள்.

சாவித்திரி அத்தனை கெடுபிடி இல்லை போல, டிரைவர் கோபால் உடன் பூவிழியை அனுப்பி வைத்தாள். காரில் ஏறிய ஐந்து நிமிடங்களில் முன் வழுக்கை கோபால் அண்ணனோடு வாயடிக்க ஆரம்பித்து விட்டாள் பூவிழி.

முதலில் பட்டும் படாமல் அவளுக்கு பதில் சொன்னவர் பின்னர் அவளின் ஓயாத பேச்சில் இவரும் கலந்து கொண்டார்.

டிரைவர் மூலம் கிடைத்த புதிய தகவல்கள், கீர்த்தி ஒரு உணவு பிரியை… எப்போதும் எதையாவது கொரித்துக் கொண்டே இருக்க வேண்டுமாம் அவளுக்கு.

பிரபா, குறும்புகளில் மன்னன், எப்போதும் ஏதாவது எடக்கு வேலை செய்து வைப்பானாம், எதையாவது உடைத்து விட்டு நழுவி செல்வது, பாசாங்கு இல்லாமல் பொய்யுரைப்பது, ஏதேனும் எக்குத்தப்பாக செய்து விட்டு மற்றவர் மேல் பழிப் போடுவது என்று பிரபாகரனின் சாகச பட்டியல் நீண்டு கொண்டே போனது.

தேவையானவற்றை வாங்கி கொண்டவள், தனக்கு தேவையான சில பொருட்களையும் வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தாள். மாலை குழந்தைகளை சந்திப்பதற்காக ஆர்வமோடு காத்திருந்தாள்.

நான்கு மணி அளவில் அவளுக்கு அழைப்பு வர, அந்த பணிப்பெண்ணுடன் நடந்தாள். அந்த பங்களாவின் மாடி அறைகளில் நான்காவதாக இருந்த அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டாள். அது குழந்தைகளின் படிப்பிற்காக முழுவதுமாக ஒதுக்கப்பட்ட அறை என்பது நன்றாகவே தெரிந்தது.

அறை எங்கும் புத்தகங்கள், எழுது பொருள்கள், பள்ளி பைகள்… என நேர்த்தியாக அடுக்கப்பட்டு இருந்தது. சுவர்களில் ஆங்காங்கே கார்டூன் கதாப்பாத்திரங்களின் உருவங்கள் வண்ண மையமாய் காட்சியளித்தன.

அங்கே அவளின் தல சின்சேன் உருவ படத்தைப் பார்த்ததும் அவள் இதழின் புன்னகை பற்கள் தெரிய விரிந்தது. அங்கு தான் ஆசிரியை என்பதை நினைவுபடுத்திக் கொண்டு முகத்தை சரிசெய்து கொண்டாள்.

அப்போது தான் சாவித்திரி, இரு குழந்தைகளுடன் அறைக்குள் நுழைந்தாள். கீர்த்தி, பிரபாவை பூவிழிக்கு அறிமுகம் செய்து வைக்க, பூவிழி குழந்தைகள் முன்பு அவர்கள் உயரத்திற்கு முட்டியிட்டு அமர்ந்து,

“ஹாய் குட்டீஸ், நான் பூவிழி, இனிமே நாம மூணு பேரும் சேர்ந்து நிறைய டிராயிங் வரைய கத்துக்கலாம், ஓகே வா…” என்று முகத்தில் சினேக பாவனை காட்டி இருவர் முன்பும் கைநீட்டி, “ஃப்ரண்ஸ்” என்று கேட்க, கீர்த்தியும் பிரபாவும் ஒருவரையொருவர் உத்தேசமாக பார்த்துக் கொண்டனர்.

கீர்த்தி, “நீங்க எங்க டிராய்ங் டீச்சர்னு எங்களுக்கு முன்னையே தெரியும்” என்றாள் சின்ன இதழ் சுழிப்போடு.

“டீச்சர்ஸ் எல்லாம் எங்க கூட ஃபிரண்ட்ஸா இருக்க முடியாது, ஸோ யுவர் ஃப்ரண்ட் ரிக்வஸ்ட் ரிஜக்டட்” பிரபாகரன் பதில் கனீரென வர, பூவிழி வாயடைத்து தான் போனாள்.

‘அட இந்த லாலிபாப்ஸ் ரெண்டும் ஏன் இம்புட்டு ஸ்பைஸியா இருக்குங்கன்னு தெரியலையே…! பூவு சமாளி’ என்று எண்ணம் ஓட,

முகத்தை அழுவது போல காட்டிக் கொண்டவள், “எனக்கு இங்க யாருமே ஃப்ரண்ஸ் இல்ல தெரியுமா? உங்க கூடவாவது ஃப்ரண்ஸ் ஆகணும்ன்னு ரொம்ம்மப ஆசபட்டேன்… நீங்களும் என்கூட ஃபிரண்ஸா இருக்க மாட்டேனு சொல்லிட்டீங்க… மீ பாவம்…” என்று தேம்பினாள்.

குழந்தைகள் இப்போதும் ஒருவரை ஒருவர் பார்த்து குழப்பத்துடன் விழித்துக் கொண்டனர்.  அவர்களுக்கு இவள் புதுமையாய் தோன்றினாள்.  பார்வைக்கும் சின்ன பெண் போல தான் தெரிந்தாள்.

“உங்களுக்கு ஃப்ரண்ஸ் யாருமே இல்லயா?” பிரபா வருத்தமாய் கேட்க, இவள் பாவமான முக பாவனையோடு இடவலமாய் வேகமாக தலையசைத்து வைத்தாள்.

“அச்சோ பாவம் பிரபா இவ, நாம இவள நம்ம ஃபிரண்ட்ஸா ஏத்துக்கலாமா டா?” கீர்த்தி தம்பியுடன் பகிரங்க ஆலோசனை நடத்த,

“அது முடியாதே… இவங்க நம்மள விட ரொம்ப பெரியவங்க… இவங்களோட ஃப்ரண்ஷிப் நமக்கு செம போரீங்கா தான் இருக்கும்” பிரபாவும் எதார்த்த நிலையை அலசி ஆராய்ந்து மறுப்பு தெரிவிக்க, கீர்த்தியின் முகபாவம் அதை ஆமோதித்தது.

‘இந்த கேடி பசங்க என்னமா யோசிக்குதுங்கயா…!’ என்று பூவிழி தன் வாய்மேல் கைவைத்து கொண்டவள்,

“இல்லல்ல… நீங்க நினைக்கிற அளவுக்கு நான் பெரிய பொண்ணு எல்லாம் இல்ல…! உங்கள விட கூட ரெண்டு, மூணு வயசு தான் இருக்கும்!  நம்புங்கப்பா…!” என்க.

பிள்ளைகள் இருவரும் அவளை நம்பாத பார்வை பார்க்க, இதுவரை அவர்களை வேடிக்கை பார்த்து நின்று இருந்த சாவித்திரியும் வேலைகார பெண்ணும் வாயைப் பொத்தியபடி சிரித்து கொண்டே அங்கிருந்து நகர்ந்தனர்.

“என் ஃபிரண்ட்ஸ நான் வா, போன்னு தான் கூப்பிடுவேன்…” பிரபா முடிக்காமல் இழுத்தான்.

“அப்ப என்னையும் அப்படியே நீ கூப்பிடலாம்” பூவிழி பதில் சட்டென வந்தது.

“உனக்கு சாக்லேட், ஐஸ்கிரீம் இதுல எது ரொம்ப பிடிக்கும்?” கீர்த்தி கேள்வி எழுப்பினாள்.

‘பூவு… கேள்வில ஏதோ ஏடாகூடம் தெரியுது!’ என்று இளித்தப்படி யோசித்தவள்,

“எனக்கு சாக்கினா ரொம்ப பிடிக்கும்… ஐஸ்கிரீம் அதைவிட ரொம்ப ரொம்ப பிடிக்கும்’ என்று பதில் தர,

“ஐய்ய் எனக்கும்… ரெண்டும் பிடிக்குமே” என்று கீர்த்தி குதூகளித்தாள்.

பிரபா, “உனக்கு பீம் பிடிக்குமா? இல்ல சின்சான் பிடிக்குமா?” அறிவாளி தனமாய் கேட்டு வைக்க,

பூவிழியிடம் சட்டென பதில் வந்தது. “தல சின்சான் தான்… என் பெயர் தான் சின்சானே… குறும்பு செய்ய தான் பிறந்தேனே…” என்று அசைவுகளோடு பூவிழி பாட, இருவரும் குதிக்க ஆரம்பித்தனர்… இல்லை… மூவரும் குதித்து கொண்டிருந்தனர்.

“ஓகே பூவிழி இனிமே நாம ஃப்ரண்ஸ்” என்று கை கொடுத்தவுடன் இருவரும் மாற்றி மாற்றி நட்பு உடன்படிக்கைக்கான நியதிகளை சொல்ல ஆரம்பித்தனர்.

“ஃப்ர்ஸ்ட் ஒன், அம்மா மாதிரி நீ அட்வைஸ் எல்லாம் பண்ண கூடாது”

இது பிரபாவின் ஆணை. பூவிழி ஆமோதித்து தலையசைத்தாள். வேறு வழி!

“நெக்ஸ்ட், நான் சாப்பிடும் போது பங்கு கேட்க கூடாது”

என்று கீர்த்தி சொல்ல, சின்ன முக சிணுங்களோடு மேலும் கீழும் தலையாட்டி வைத்தாள்.

“நாங்க சரியா டிராயிங் வரையலனா, ஜெயா மிஸ் மாதிரி பனிஸ்மெண்ட் எல்லாம் கொடுக்க கூடாது”

“சரி, நோ பனிஸ்மெண்ட்”

“பேசாத, நெளியாத, எழாத, ஸ்டெடியா உக்காருன்னு சில்லி தனமா எங்கள கனரோல் பண்ண கூடாது”

அவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போக, பூவிழி தலைமேல் கைவத்தபடி எல்லாவற்றிற்கும் ஆமோதிப்பாய் தலையாட்டி வைத்தாள் தஞ்சை தலையாட்டி பொம்மை போல.

 

எக்குத்தப்பா சிக்கிட்டேனோ? 3

கீர்த்தி, பிரபாவுடன் ஒருவழியாக நட்பு உடன்படிக்கை முடிந்து, முதல் நாள் ஓவிய பயிற்சியை பூவிழி தொடங்கினாள். முதலில் மூன்று வெள்ளை தாள்களை எடுத்து கொண்டவள், அவர்களிடம் ஆளுக்கு ஒன்றாய் கொடுத்து விட்டு தானும் ஒன்றை எடுத்து கொண்டு, நாற்காலியில் அமர போனவர்களை தடுத்தவள், தரை விரிப்பில் அமரும்படி வேண்ட, மூவரும் தரையில் அமர்ந்து கொண்டனர்.

“நாம மூணு பேரும் நமக்கு பிடிச்சதை வரையலாம், யாரோடது சூப்பர்னு பார்க்கலாம் ம்ம்” என்று இவள் வரைய ஆரம்பிக்க, குழந்தைகளும் ஆர்வமாக வரைய தொடங்கினர்.

கீர்த்தி அழகான இரட்டை மீன்களை வரைந்து இருந்தாள். பிரபா, வீடு பக்கத்தில் மரம் என்று ஓரளவு நன்றாக வரைந்து இருந்தான். பூவிழி சின்சான் உருவத்தை அச்சு பிசகாமல் வரைந்து இருந்தாள். மூவரும் தங்கள் படங்களை மற்றவர்களுக்கு காட்டி விவாதித்து கொண்டனர்.

இப்போது பூவிழி அவர்களுக்கு  வெவ்வேறு அடிப்படை வடிவங்கள் வரைய கற்று தர தொடங்கினாள். அவள் ஆசிரியையாய் இல்லாமல் குழந்தைகளோடு குட்டி தோழியாய் மாறி போக, முதல் நாள் வகுப்பு இனிமையாக கழிந்தது.

மறுநாள் ஆறு மணி பெட் காஃபி பருகிவிட்டு, மறுபடி உறக்கம் பிடிக்காமல் குளித்து தயாராகி வெளியே வந்தவளை, பங்களாவை சுற்றி இருந்த பரந்த தோட்டம் அத்தனை பேரழகாய் அழைத்தது.

நேற்றே தோட்டத்தை பார்க்க வேண்டும் என சாவித்ரியிடம் பூவிழி அனுமதி கேட்க, குடும்ப உறுப்பினர் தவிர மற்றவர் தோட்டத்திற்குள் செல்ல அனுமதி இல்லை என்று அவள் மறுத்து விட்டாள்.

“அப்ப நாள் பூரா நான் ரூம்ல அடஞ்சு கிடக்கணுமா சாவிக்கா” பூவிழியின் முகம் சுருங்க,

“இல்ல பூவிழி, பங்களா பின்பக்கம் விளையாட்டு மைதானம் இருக்கு… அது பக்கத்திலயே சின்ன தோட்டம் கூட இருக்கு… நீ அங்க வேணா போய் பாரு” என்று சாவித்திரி பொறுமையாகவே விளக்கம் தந்தாள். அவளுக்கு ஏதோவொரு வகையில் பூவிழியை பிடித்திருந்தது அதன் காரணம் அவளின் துறுதுறு தனமாய் இருக்கலாம்.

“தேங்க் யூ சாவிக்கா…” என்று அவள் கன்னத்தை கிள்ளிவிட்டு துள்ளி ஓடியவளை பார்த்து தோளை குலுக்கி கொண்டாள் பெரியவள்.

காலையின் இதமான சூழலில் அந்த பங்களாவை சுற்றி கொண்டு மெல்ல நடை பயின்றாள் பூவிழி. செல்வமும் செழிப்பும் அழகும் ஆடம்பரமும் நிறைந்து இருந்த இந்த சூழ்நிலை பூவிழிக்கு புதிது. அவள் இதுவரை வாழ்ந்த சூழ்நிலை முற்றிலும் வேறு.

தனக்கு கொஞ்சம் பாசமும் நிறைய கண்டிப்பு காட்டும் தில்லு பேபி தான் அவளின் ஓரே சொந்தம், எதிரி எல்லாம்.

வளர்ச்சி அடைந்த கிராமத்தின் நகர சூழல் கொண்டது அவளின் பிறந்த ஊர். அவளின் தாத்தா தில்லை நாயகம் சொந்தவீட்டை ஐந்து பகுதிகளாக பிரித்து ஒரு பகுதியில் தானும் பேத்தியும் வசிக்க, மற்ற பகுதிகளை வாடைகைக்கு விட்டிருந்தார். மேலும் சுமார் ஐந்து ஆட்டோக்களை வாடைகைக்கு விட்டு, அந்த வருமானத்தில் குறைவின்றி ஓடி கொண்டிருக்கிறது இவர்களின் வாழ்க்கை.

வீட்டில் வாடகைக்கு இருப்பவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களிடம் எப்போதும் வரம்பின்றி வாயடிக்கும் தன் பேத்தியை அடக்கி வைப்பதே தில்லை நாயகத்தின் தினப்படி தலைவலியான வேலையாக இருந்தது இதுவரை.

‘இந்த மூணு நாள் நான் இல்லாம தில்லு பேபி ரொம்ப ரிலாக்ஸா இருக்கும் போல… ஃபோன் கூட பண்ணல…’

ஆமா எப்படி ஃபோன்ல பேசும்! நான் வேலைக்கு போறேன்னு கேட்டதுக்கு முடியாதுன்னு தைய தக்கான்னு குதிச்சா நான் என்ன பண்ணுவேன் அதான் நான் வேலைக்கு போறேன்னு லெட்டர் எழுதி வச்சுட்டு எஸ்ஸாகி வந்துட்டேன்!’

‘ஒருவேளை என்மேல கோவமா இருக்குமோ? இருந்துட்டு போகட்டும்… எத்தனை நாளைக்கு…!’ என்று தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டு வந்தவளை காலையின் சிற்றுண்டி மணம் இழுத்தது.

பூவிழி அந்த பங்களா சமையலறையின் பின்பக்க கதவை நெருங்கி இருந்தாள். ‘வாசனையே சும்மா தூக்குது… இது என்ன டிஷ்ஷா இருக்கும்? தெரிஞ்சுக்கணுமே!’ என்று கதவை திறந்து உள்ளே நுழைந்தாள்.

சமையலறை அவள் வீட்டின் கூடத்தை விட பெரிதாக, பிரம்மாண்டமாக, நேர்த்தியான நவீன வடிவமைப்புடன் காட்சியளித்தது.

அங்கே ராபர்ட் மும்முரமாக எதையோ கிண்டி கொண்டிருந்தான். அவன் கைகள் பரபரவென அங்கே இயங்கி கொண்டிருக்க, அவன் பின்னால் வந்து எட்டிப் பார்த்தவள், “என்ன இது பாஸ்தாவா? குழகுழன்னு இருக்கு… ஒழுங்கா சமைக்க தெரியாதா உனக்கு?” முகம் கசங்கி கேட்க,

திடுக்கிட்டு திரும்பிய ராபர்ட், “ஏய், நீ! நீ இங்க எப்படி வந்த?” என்று கேட்டான்.

“இதோ இப்படி தான்” கதவின் புறம் கைக்காட்டினாள் இவள்.

ராபர்ட் காட்டமாக முறைத்து, “ஹலோ, உனக்கு இங்க என்ன வேலை? என்னை டிஸ்டர்ப் பண்ணாம கிளம்பு” சொல்லிவிட்டு தன் சமையலை கவனிக்கலானான்.

“ம்ம் போறேன்… அதுக்கு முன்ன… முதல் நாளு என்னை பார்த்து ஏன் அப்படி கேவளமா லுக்கு விட்டன்னு சொல்லு”

அங்கிருந்த கேரட்டை எடுத்து கடித்தபடி சாவகாசமாய் இவள் கேட்க, அடுப்பை அணைத்து விட்டு திரும்பி திருதிருவென முழித்தான் ராபர்ட்.

இந்த சில்வண்டு பெண் தன் பார்வை மாற்றத்தை இத்தனை துல்லியமாக கவனித்திருப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

“பின்ன, சோஃபால சின்ன புள்ளதனமா எழும்பி எழும்பி உங்காந்து விளையாடுனா உன்ன எப்படி பார்ப்பாங்களாம்?” என்று அவனும் திருப்பி கேட்டான்.

“ஓய்… அப்ப நீ என்னை சைட் அடிச்சிருக்க இல்ல?” அவள் குரலை உயர்த்த,

“அய்யோ இல்ல இல்ல… நான் எதார்த்தமா தான் பார்த்தேன்”

ராபர்ட் பதறி மொழிய, பூவிழி அவனை நம்பாத பார்வை பார்த்தாள்.

“அய்யோ எக்குதப்பா ஏதாவது சொல்லி என் பொண்டாட்டி கிட்ட என்னை மாட்டி விட்டுடுடாத! நான் வேணும்னா உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்…” என்று இருகரத்தையும் தலைமேல் கூப்பி சொன்னான்.

“ம்ம் அந்த பயம் இருக்கட்டும்… இனிமே என்கிட்ட பார்த்து நடந்துக்கணும் சரியா தம்பி…” பூவிழி தோரணையாக சொல்ல, இவன் கண்கள் விரிந்தன.

சற்று நேரத்தில் பூவிழியின் வளவள பேச்சில் ராபர்ட்டும் கலந்து கொள்ள, அங்கு பேச்சும் சிரிப்புமாக சமையல் கலைக்கட்டியது.

“ஒ ஓ… அப்ப சாவிக்கா தான் உன் வொய்ப் ஆ? சொல்லவே இல்ல” பூவிழி ஆர்வமாய் கேட்க, ராபர்ட் குழைந்த வெட்கத்துடன் தலையசைத்தான்.

“எனக்கும் சாவித்திரிக்கும் லவ்… மதம் வேறன்னு ரெண்டு வீட்டிலையும் ஒத்துக்கல… அதால காதலை விட முடியுமா… மேரேஜ் பண்ணிட்டு இங்க கூட்டிட்டு வந்துட்டேன்… ரெண்டு வருசமாச்சு…”

ராபர்ட் தங்கள் காதல் கதையை சொல்லியபடி தன் சமையலை கவனிக்க, பூவிழி சமையல் மேடையில் அமர்ந்து சுவாரஸ்யமாய் கதைக்கேட்டு கொண்டிருந்தாள்.

ராபர்ட் சமையல் முடிந்து அனைத்தையும் உணவு மேசைக்கு கொண்டு செல்ல, இவள் அங்கிருந்து கிளம்பி விட்டாள். விளையாட்டு மைதானத்தையும் அதனருகே இருந்த பூங்காவையும் ஒரு சுற்று சுற்றி விட்டு தன் அறைக்கு வந்தாள்.

காலை உணவை முடித்துக் கொண்டு, இன்றைக்கு பிள்ளைகளுக்கு எந்தெந்த வரைப்படங்களை கற்றுத்தர வேண்டும் என சிறிது நேரம் சுயபயிற்சி செய்துவிட்டு, வெளியே வந்தாள்.

இந்த மூன்று நாட்களில் அங்கு வேலை செய்பவர்கள் அனைவரிடமும் நட்பு பாராட்ட ஆரம்பித்து இருந்தாள். பூவிழியின் நட்பு வட்டத்தில் ஆண், பெண், குழந்தைகள், வயதானவர் என்ற எந்த பேதமும் இருக்கவில்லை.

தோட்டத்தில் வேலை செய்பவர்கள் முதல் கேட் வாச்மேன் வரை இவள் தோழமை பட்டியலில் சேர்ந்து கொண்டனர். ராம் குமாரை கூட காரில் வரும் போது பார்த்திருக்கிறாள். கீர்த்தி போல அவளின் அப்பா வெள்ளை நிறத்தில் சற்று பூசிய தேகமாய் காட்சி தந்தார். தன் கணிப்பு சரியென தன்னையே மெச்சி கொள்ளவும் செய்தாள்.

இத்தனைக்கும் சித்தார்த் மட்டும் அவள் கண்களில் சிக்கவே இல்லை. காரணம் அவன் இங்கு இல்லை‌.  தன் தோழியின் திருமணத்திற்காக சிங்கப்பூர் சென்றவன், மேலும் சில நாட்கள் நண்பர்களுடன் ஊர்சுற்றி வருவதாய் திட்டம்.

********************

சத்யவர்த்தினி தன் அறையில் தலையைப் பிடித்தபடி அமர்ந்து இருந்தாள். ராம்குமார் முகம் கூட யோசனையில் சுருங்கி போயிருந்தது.

“இவனுக்கு எல்லாம் எதுக்கு இந்த தேவையில்லாத வேலை! இப்ப எல்லா பழியும் பாவமும் நம்ம சித்தார்த் மேல வந்து விழுந்துடுச்சு” சத்யவர்த்தினி ஆதங்கமாக தம்பியை திட்டிக் கொண்டிருந்தாள்.

“ஃப்ரண்ட் தானேன்னு அவன் காதலிச்ச பொண்ணு கூட கல்யாணம் செஞ்சு வச்சிருக்கான். சித்தார்த் செய்ய நினைச்சது நல்லது தான்! பட் அந்த நரேன் ஒரு வருசத்துல தன்னோட காதல் மனைவிய கொலை செய்யற அளவுக்கு சைகோவா இருப்பான்னு யாருமே எதிர்பாக்கலயே!” ராம்குமார் தன் மைத்துனனுக்கு ஆதரவாக பேசினான்.

“ச்சே அந்த நரேன் எல்லாம் ஒரு மனுச பிறவியா? எத்தனை முறை என்னை அக்கா அக்கான்னு கூப்பிட்டு இருப்பான், அவன் காதலை நம்பி வந்த பொண்ணை போய்… மிருகம் கூட இது மாதிரி செய்யாது” சத்யாவிற்கு அப்படியே பற்றி கொண்டு வந்தது தானும் ஒரு பெண் என்ற முறையில்.

“அந்த பொண்ணோட அப்பா சும்மா விடலையே அந்த நரேனை கண்டதுண்டமா நடுரோட்டில வெட்டி போட்டு பழித்தீர்த்துகிட்டாரு… சரிதான் அவனுக்கு தேவைதான்…” ராம்குமார் பேச,

“அச்சோ இப்ப அந்த ஜனார்த்தனனோட பழியுணர்ச்சி எல்லாம் நம்ம சித்தார்த் மேல இல்ல திரும்பி இருக்கு! அவர் மகளோட கொலைக்கும் சித்தார்த்க்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு எடுத்து சொன்னாலும் அவர் புரிஞ்சிக்க மாட்டேங்கிறாரே என்ன செய்ய?” சத்யவர்த்தினி பதற்றமாக பேசினாள்.

மனைவியின் தோளை ஆதரவாக பற்றி கொண்டவன், “நரேன் கொலை வழக்குல ஜனார்த்தனன அரெஸ்ட் செய்ய  லீகலா எல்லா ஏற்பாடும் செய்தாச்சு… அவன் ஜெயிலுக்கு போயாச்சுனா நம்ம சித்தார்த்க்கு வந்த பிரச்சனையும் நீங்கிடும்” என்று ஆறுதல் படுத்தினார்.

“எப்ப ராம் இதெல்லாம் நடக்கும்? போன மாசம் மட்டும் ரெண்டு முறை நம்ம சித்துவ கொலை செய்ய டிரை பண்ணி இருக்காங்க… மாரி கூட இருந்ததால சித்துக்கு ஒண்ணும் ஆகல… இந்த விசயம் இன்னும் அம்மா அப்பாவுக்கு தெரியாது! ‘சித்தார்த்க்கு எதுக்கு தனியா பாடிகார்ட்னு’ அப்பா டவுட்டா கேட்டாரு… நான் ஏதோ சொல்லி சமாளிச்சு வச்சிருக்கேன். எப்ப இந்த பிரச்சினை முடியும்னு இருக்கு” என்று தன் கணவன் தோளில் முகம் சாய்த்துக் கொள்ள, ராம் ஆதரவாக அவள் முதுகை தட்டி கொடுத்தான்.

******************

ஒரு தனி அறையில் பழைய நாற்காலி ஒன்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தாள் பூவிழி. தனக்கு என்ன நேர்ந்தது என்பதை கூட அவளால் யோசிக்க முடியவில்லை. கைகட்டை அவிழ்க்க முயல, முடியாமல் போனது.

‘என் லைஃப்ல இன்னும் ஹீரோ இன்ரோ ஆகவே இல்லையே! அதுக்குள்ள ஃபைட் சீன எவன்டா மாத்தி வச்சது? இப்ப என்ன காப்பாத்த எந்த சூப்பர்மேன் வருவான்? இதென்ன சினிமாவா! ஓ மை கடவுளே’  அவள் மனம் புலம்பலை தொடங்க,

அடைத்து இருந்த கதவு தூள் தூளாய் உடைந்து, ஒரு முரடன் அவள் காலடியின் கீழே  பறந்து வந்து நினைவற்று விழுந்தான்.

‘இங்க என்னங்கடா நடக்குது…!’ பூவிழி நிமிர்ந்து பார்க்க ஆறடிக்கு குறையாத ஆண்மகன் ஒருவன் ஐந்தாறு அடியாட்களோடு ஆயசமாக சண்டையிட்டு கொண்டிருந்தான்.

அவன் சண்டையிடும் நேர்த்தியில் இவள் கண்கள் விரிய, அவர்கள் எல்லாரையும் அடித்து போட்டுவிட்டு பூவிழியை நோக்கி தோரணையாக நடந்து வந்தான்.

ஏனோ அவன் கண்களைச் சுற்றி கருப்புநிற முகமூடி போல அணிந்து அவன் அடையாளத்தை மறைத்து இருந்தான். அவளின் கைகட்டுகளை அவிழ்த்து விட்டு, அவளின் மென்னுடலை அப்படியே தன்னிரு கைகளில் வாகாய் ஏந்திக் கொண்டான்.

காற்றில் மிதப்பதைப் போல அவளுக்குள் அத்தனை பரவசம் பரவியது. ஆர்வமாய் அவன் முகமூடியை களைய தன் கையை நீட்டினாள்… நீட்டினாள்…

சட்டென அவள் இமைகள் விழித்து கொண்டன. தன் பட்டாம்பூச்சி இமைகளை படபடவென தட்டி திறந்தாள்.

“…அப்ப, இதெல்லாம் கனவு தானா! அச்சோ என் ஆளோட முகத்தை பார்க்கவே இல்லையே!” என்ற புலம்பலோடு தன் அலைபேசியை எடுத்து பார்க்க, மணி விடியற்காலை 4.12 என காட்டியது.

 

எக்குத்தப்பா சிக்கிட்டேனோ? 4

சின்ன சின்ன வளைக் கோடுகள் இணைந்து அழகான செம்பருத்தி மலரின் வரிவடிவை கொண்டு வந்திருந்தன. அடர்சிவப்பு வண்ண கலவையை அதில் நிறைக்க, முழு வண்ணப்பூ சித்திரம் பார்வைக்கு விருந்து படைத்தது.

கீர்த்தியும் பிரபாவும் சின்ன கண்கள் விரிய கைதட்டி பாராட்டினர்.  “தேங்க்ஸ், இப்ப இதே மாதிரி நீங்க ரெண்டு பேரும் வரைவீங்களாம்… யாரு சூப்பரா வரையறீங்ன்னு பார்க்கலாம்” என்று பூவிழி சொல்ல, இருவரும் தலையசைத்து ஆர்வமாய் வரைய ஆரம்பித்தனர்.

பூவிழி அவர்கள் வரைவதை பார்த்தவாறு அவர்களின் சிறு சிறு பிழைகளை திருத்திக் கொண்டிருந்தாள். அப்போது சத்தம் இல்லாமல் ஓர் உருவம் அவர்கள் பின்னால் நெருங்க, பூவிழி ஏதோ உணர்ந்து திரும்பி பார்த்தாள்.

அழகும் ஆண்மையும் கலந்த  ஓர் இளைஞன் அவளை நோக்கி கண்களில் குறும்போடு வந்தான். தன் விரலை தன் உதட்டின் மேல் வைத்து பூவிழிக்கு சைகை காட்டியவன், குழந்தைகளை நெருங்கி, இரு கைகளையும் விரித்து, “அஆஆஆ” என்று கத்தினான்.

அதிர்ந்து திரும்பிய இரு குழந்தைகளும் அவனை பார்த்ததும், “ஐய் சித்து மாமா…!” என்று இருவரும் ஒரே குரலாய் கூவி உற்சாகமாய் அவன் கழுத்தை இருபுறமும் கட்டிக் கொண்டனர்.

இரு குழந்தைகளையும் தன்னோடு சேர்த்து அணைத்தபடி இரண்டு சுற்று சுற்றி இறக்கி விட்டவன், “ஏய் வாண்டுகளா… என் கழுத்து இன்னைக்கு போச்சு… எப்பா…” இப்படியும் அப்படியுமாக கழுத்தை அசைத்தபடி சொன்னான்.

“எப்ப வந்த சித்து மாமா நீ?”

“எங்களுக்கு என்னென்ன வாங்கி வந்திருக்க சித்து மாமா?”

இருவரும் அவனை நச்சரிக்க ஆரம்பிக்க, “ஏய் இப்ப தான் வந்தேன்… நீங்க சொன்ன லிஸ்ட்ல எல்லாத்தையும் வாங்கி வந்திருக்கேன் போதுமா” என்றவன் அவர்கள் வரைந்த படத்தை எடுத்து பார்த்தான்.

முழுமைபெறாத மலர்வடிவமும் பிள்ளைகளின் கைவண்ணத்தில் அழகாய் தான் இருந்தது. “இதை யார் வரைஞ்சது? சூப்பரா இருக்கே!” என்று அவற்றில் ஒன்றை காட்டி கேட்க,

“நானு” என்று துள்ளினாள் கீர்த்தி. “வாவ் கீர்த்து குட்டி நீங்க இவ்ளோ அழகா வருவீங்கனு எனக்கு தெரியாம போச்சே” என்று பாராட்ட, கீர்த்தி கிளுக்கி சிரித்தாள்.

“அப்ப என்னோட டிராயிங்?” பிரபா கேட்க, “உன்னோடதும் தான் டா” என்று அவன் கன்னம் கிள்ளியவன்,

இப்போதுதான் அவர்களை புன்னகை விரிந்த முகத்துடன் பார்த்து நின்றிருந்த பூவிழியை கவனித்தான்.

“ஹாய், ஐ அம் சித்தார்த், நீங்க தான புதுசா வந்திருக்க டிராயிங் டீச்சர்… கரேக்ட்!” என்று உற்சாகமாய் அறிமுகத்தை தொடங்கினான்.

“கரேக்ட் சித்து சார்… நான் பூவிழி” என்றாள் புன்னகை மாறாமல்.

“கூல்…நீ செம்ம டேலன்டட்னு சத்யாக்கா சொன்னா… சத்யாவ நீ அப்படியே அச்சு பிசகாம வரைஞ்சதா சொன்னா! இன்டர்ஸ்டிங்” சித்தார்த் சிலாகித்து சொல்ல, பூவிழி புன்னகையுடன் மேலும் கீழுமாக தலையசைத்தாள்.

“ம்ம்… என்னையும் உன்னால பர்பெக்டா வரைய முடியுமா?”  ஒற்றை கண்ணை மூடியபடி ஒருபக்கம் தலைசாய்த்து சித்தார்த் தோரணையாக வினவ, பூவிழி அப்படியே உருகி போனாள். “கண்டிப்பா சார்” என்று துள்ளலுடன் ஆமோதித்தாள்.

இப்போதுதான் இருவரும் கவனித்தனர், கீர்த்தியும் பிரபாவும் எப்போதோ அங்கிருந்து எஸ்ஸாகி இருந்தனர். “சாரி ஃபிளவர் என்னால உன் கிளாஸ் பாதியிலேயே முடிஞ்சு போச்சு”.

“பரவாயில்ல சார்… மீதி நாளைக்கு பார்த்துப்பேன்” என்றவள், அவனிடம் விடைபெற்று நடந்தாள்.

சித்தார்த் தன் பையில் இருந்த பொருட்களை எல்லாம் கலைத்துக் கொண்டிருந்த இரு வாண்டுகளிடமும் மல்லுக்கட்ட சென்றான்.

பூவிழிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. சத்யவர்த்தினியின் தம்பி… அதுவும் இந்த குடும்பத்தின் ஏக வாரிசு தன்னிடம் இத்தனை இயல்பாக பேசுவான் என்று இவள் நினைத்து பார்க்கவே இல்லை.

அதுவும் இந்தி சீரியல் கதாநாயகன் போல பார்ப்பவர்களை கவரும் சித்தார்த்தின் குறும்புடன் மிளிர்ந்த ஆணழகு இந்த பேதைக்குள் குறுகுறுப்பை ஏற்படுத்ததான் செய்தது.

அதே நினைவில் தனக்கு தானே சிரித்தபடி, துள்ளல் நடையோடு  வந்தவள் எதன் மீதோ மோதி அதே வேகத்தில் கீழேயும் விழுந்து விட்டாள்.

“இங்க எப்படா சுவர கட்டினாங்க!” என்று நிமிர்ந்தவளின் கண்களில் ஒரு நொடி பயம் வந்து போனது.

ஆறடிக்கு குறையாத உயரம், தேக்குமர கட்டுமஸ்தான தேகம், தொட்டால் ஒட்டிக்கொள்ளும் கருப்பு கண்ணன் நிறம், மருந்திற்கும் இளக்கம் காட்டாமல் இறுகிகிடந்த முகத்தோடு ஆடவன் ஒருவன் அவளின் எதிரே விரைப்பாய் நின்றிருந்தான்.

கைகால்களை உதறி சடாலென எழுந்து நின்றவள், “யோவ் யாருய்யா நீ? நடு கூடத்தில ஐயனார் கணக்கா நின்னுட்டு இருக்க?” பூவிழி கடுப்பாக சீறினாள்.

அவன் முன்பு குள்ளகத்தரிகாய் அளவில் தெரிந்தவளை ஏளனமாக பார்த்தவன், “நடந்து வரும்போது யோசனை எங்கேயோ இருந்தா இப்படி தான் முட்டி மோதி கீழ விழுந்து எழணும்” அழுத்தம் திருத்தமான குரலில் அவன் சொல்ல, இவள் மூக்கின் நுனி சிவப்பேறியது.

“நான் வரது தெரிஞ்சது இல்ல, கொஞ்சம் ஒதுங்கி நிக்க வேண்டியது தான? நட்டு வச்ச டிரான்ஸ்பார்மர் கம்பம் மாதிரி அசையாம நிக்கிற” யாரென்றே தெரியாமல் அவனிடம் எகிறி கொண்டிருந்தாள் இவள்.

“ஏய் குள்ள வாத்து வாயடிக்கி பேசு, இல்ல…” அவன் முடிக்காமல் விட,

“இல்லன்னா என்னடா பண்ணுவ?” உள்ளுக்குள் பயமாக இருந்தாலும் வெளிக்காட்டி கொள்ளாமல் முறைத்து நின்றாள்.

தரையில் விழுந்த மீனைப்போல ஏகத்துக்கும் துள்ளிக் கொண்டிருந்த அந்த சிறு பெண்ணை கண்கள் சுருக்கி பார்த்து நின்றான் அவன்.

நடு கூடத்தில் ஒருவரையொருவர் முறைத்து நின்றிருந்தவர்களை பார்த்து ஓடிவந்த ராபர்ட், “மாரி விடுப்பா… இவங்க புதுசா வந்திருக்க டிராயிங் டீச்சர்…” என்று அவனை பிடித்து விலக்க,

“யாரு பாஸ்தா இந்த முரட்டு பீஸு?” பூவிழி ராபர்ட்டிடம் படபடத்தாள்.

“பூவு இவர் மார்த்தாண்டன், நம்ம சித்தார்த் சாரோட பர்சனல் பாடிகார்ட்” என்று விளக்கம் தர,

“மார்த்தாண்டனா சரியான தண்டம்!” என்று முணுமுணுத்து வைத்தாள்.

“ஏய், சித்தெறும்பு மாதிரி இருந்துட்டு என்ன வாயடிக்கிற… டிராயிங் டீச்சர்னா அமைதியா இருப்பாங்க… உன்ன மாதிரி அடாவடி பேச மாட்டாங்க?”

“ஏய், நான் எப்படி இருக்கணும்னு நீ ஒண்ணும் கத்து கொடுக்க வேணாம், பாடிகார்ட்னா வாசல்ல ஓரமா நிக்கணும்… இப்படி அதிகாரம் பண்ண கூடாது”

“அய்யோ, சத்யவர்த்தினி மேம் வராங்க…” ராபர்ட் அவசரமாய் சொல்ல, பூவிழி அப்படியே வேகமாய் அங்கிருந்து நழுவி விட்டாள். ‘யாரு அந்த பியூட்டி பிரின்ஸஸிடம் வாங்கி கட்டி கொள்வது’ என்று.

மாரி அலட்சியமாய் தோலை குலுக்கி விட்டு நிமிர, சத்யவர்த்தினி அவனை நோக்கி வந்தாள்.

ராபர்ட் அங்கிருந்து சென்று விட, “எந்த பிரச்சனையும் இல்லையே? சித்தார்த் எதையும் சீரியஸா எடுத்துக்க மாட்டேங்கிறான்” சத்யவர்த்தினி கவலையாக கேட்க,

“டோன்ட் வொர்ரி மேம்… சித்தார்த் சார் சேஃபா இருக்கார்… பட் அந்த ஜனார்த்தனனோட ஆளுங்க எங்களை ஃபாலோ பண்ணிட்டு தான் இருக்காங்க…! அவனை நம்ம வழியில இருந்து கிளியர் பண்ணாதான் சித்தார்த் சாருக்கும் நல்லது” மாரியின் பதில் டானென்று வந்தது.

“நானும் ராமும் அதுக்காக தான் முயற்சி செய்திட்டு இருக்கோம்… அதுவரைக்கும் நீங்க தான் சித்துவுக்கு பாதுகாப்பா இருக்கணும் மாரி” அவள் குரல் மெல்ல தழுதழுத்தது.

“என்னை தாண்டி சித்தார்த் சாரோட நிழலை கூட யாராலையும் நெருங்க முடியாது மேடம்” மாரியின் பதில் உறுதியாக வந்தது.

****************

“கியூட்டா… ஸ்வீட்டா… ஹேண்டசம்… சாக்லேட் பாய் ஒருத்தனை இப்ப தான் மீட் பண்ணேன்… அதுக்குள்ள இந்த பரங்கி மலை குறுக்க வந்து நிக்கணுமா! ச்சே” பூவிழி தன்னறையில் வாய்விட்டு புலம்பிக் கொண்டிருந்தாள்.

‘என் தில்லு கிழம் தான் அவன பார்க்காத, இவன்ட்ட பேசாதன்னு எனக்கு ஆர்டர் போட்டுட்டே இருக்கும்… இப்ப எந்த தொந்தரவும் இல்லன்னு பார்த்தா எவனோ ஒரு பாடிகார்ட் வந்து என்னை இப்படி புலம்ப விட்டுட்டானே’

‘இப்படி ஒரு முரட்டு பீஸ் என் லைஃப்ல கிராஸ் ஆகணும்ன்னு எவன்டா எழுதி வச்சது?’

எந்த புது மனிதரிடமும் நட்பு பாராட்டிக் கொள்ளும் குணம் தான் இவளுடையது. ஆனால் ஏனோ மாரியிடம் நட்பை ஏற்படுத்திக் கொள்ள இவளுக்கு தோன்றவே இல்லை. அவன் மீது தேவையற்ற வெறுப்பும் ஆத்திரமும் தான் வளர்ந்தது.

சிறு வயதிலிருந்தே தனக்கு அறிவுரை கூறும் யாரையும் இவளுக்கு சுத்தமாய் பிடிக்காது. இவளின் தாத்தா, பக்கத்து வீட்டு பரிமளா மாமி, கணித ஆசிரியை கவிதா டீச்சர், தமிழ் ஐயா நீலகண்டன் சார்… அவள் கல்லூரி விடுதி வார்டன் சுசீலா என அவளுக்கு பிடிக்காதவர்கள் பட்டியல் நீளும்… அந்த பட்டியலில் புது இணைப்பு ‘இந்த பாடிகார்ட் தண்டம்’ என்று எண்ணம் ஓட, இப்போது கொதிநிலையில் இருக்கும் அவளின் மனதை சாந்தப்படுத்த வேண்டி இருந்தது.

எனவே, ஓவிய சட்டத்தில் தாளைப் பொருத்தி, ஒருமுறை ஆழ மூச்செடுத்து விட்டு வரைய ஆரம்பித்தாள். அவளின் முழு கவனமும் தூரிகையில் பதிய, சிடுசிடுத்திருந்த அவள் முகத்தில் மெல்ல மெல்ல மென்மை பரவியது.

பூவிழியை பொறுத்தவரை அவளின் ஓவியம் தான் அவளின் ஆன்ம தியானம்… எப்போதும் வளவளத்து கொண்டிருப்பவள் ஓவியம் வரையும் போது மட்டும் அமைதி பதுமையாக மாறி விடுவாள்.

அவளின் ஆற்றமுடியாத சந்தோசம், கோபம், ஆத்திரம் எல்லாவற்றிற்கும் வடிகால் அவளின் ஓவியங்கள் தான்.

தனக்கு அழுகையோ கோபமோ வந்தால் பூவிழி தன்னறை கதவை தாழிட்டு கொண்டு எதையாவது வரைய ஆரம்பித்து விடுவாள். இது அவளின் சிறு வயதிலிருந்தே தொடரும் பழக்கம்.

அவளின் தாத்தா பள்ளியில் ஓவிய ஆசிரியராய் இருந்து பணி ஓய்வு பெற்றவர் என்பதால் தன் பேத்திக்கு சின்ன வயதிலிருந்தே ஓவியம் வரைய பயிற்சி அளித்தார். பூவிழியின் பயிற்சியும் ஆர்வமும் அவளுக்கு ஓவியம் வரைவதில் தனித்திறமையை வளர்ந்திருந்தது.

அவள் தொடங்கிய ஓவியம் முற்று பெற இரவு வெகுநேரம் ஆனது. தான் வரைந்த படத்தை ஆசையும் பெருமையுமாய் பார்வையில் நிறைத்து கொண்டு இதழோரத்தில் இளநகை கசிய நிம்மதியாய் உறங்கிப் போனாள்.

 

எக்குத்தப்பா சிக்கிட்டேனோ? 5

கீர்த்தி, பிரபாகரன் இருவர் முகத்திலும் எள்ளும் கொள்ளும் ஏகத்துக்கும் வெடித்து சிதறியது. பின்னே, இந்த ஒரு வாரமும் எந்த தொந்தரவும் இன்றி எட்டு மணி வரை இழுத்து போர்த்தி கொண்டு உறங்கி கொண்டிருந்தவர்களை, இன்று ஆறு மணிக்கெல்லாம் எழுப்பி யோகா பயிற்சி செய்ய சொன்னால் வேறெப்படி இருக்குமாம்.

புல்வெளி மீது சிறு துணி விரிப்பின் மேல் அமர்ந்துகொண்டு மனமின்றி மூச்சுப்பயிற்சியை செய்து கொண்டிருந்தனர்.

இளங்காலையின் புத்துணர்வை சுகமாய் அனுபவித்தப்படி பங்களாவின் பின்புறம் உள்ள பூங்காவில் நடந்து வந்த பூவிழியை பார்த்ததும் குழந்தைகள் இருவரும் துள்ளி எழுந்து நின்றனர். “ஹேய் ஃப்ளவர் இங்க வா” பிரபா உற்சாகமாய் குரல்கொடுக்க, பூவிழி புன்னகையுடன் அவர்களின் அருகில் வந்தாள்.

“ஹே வாண்டூஸ், இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்டீங்களா? அதிசயமா இருக்கே! இங்க என்ன பண்றீ…ங்க…!” துள்ளலாக ஆரம்பித்த அவள் குரல், கடைசியில்  தேய்ந்து போனது. அங்கே அமர்ந்திருந்த பாடிகார்டை பார்த்து.

“நாங்க யோகா செய்திட்டு இருக்கோம்… நீயும் வா பூவு… நாம சேர்ந்து யோகா ப்ராக்டிஸ் பண்ணலாம்” கீர்த்தி அவள் கை பிடித்து இழுக்க, பூவிழி அசட்டு சிரிப்புடன், “எனக்கு யோகா தெரியாது கீர்த்து… நீங்க செயிங்க… நான் இப்படியே போறேன்” என்று நழுவ முயன்றவளை இரண்டு வாண்டுகளும் மறித்து நின்றனர்.

“வெரி பேட் ஃப்ளவர், ஃப்ரண்ஸ் கூப்பிட்டா, இப்படி எஸ்கேப் ஆக கூடாது” பிரபா முறைப்பாக சொல்ல,

“ஆமா, நீயும் எங்க கூட இனிமே யோகா பிராக்டிஸ் பண்ற, ஓகே” கீர்த்தி அதிகாரமாக ஆணையிட்டாள்.

‘அச்சோ இந்த ரெண்டு குட்டி பிசாசுங்க சேர்ந்து அந்த வேம்பயர் கிட்ட என்னை சிக்க வச்சிடுங்க போலயே…!’ அவள் திருதிருவென விழித்து நிற்க,

“கீர்த்தி, பிரபாகர் வெட்டி பேச்சு போதும், யோகா கன்டினியூ பண்ணுங்க, சீக்கிரம் வாங்க” என்று மாரி இருவரையும் அழைத்தான்.

“மாரி அங்கிள், பூவிழியும் எங்களோட யோகா கத்துக்கணும்னு ஆசபடுறா ப்ளீஸ் நீங்க சரி சொல்லுங்க” கீர்த்தி கெஞ்சலாய் கேட்க,

“ம்ம்… சீக்கிரம் வந்து மூணு பேரும்  பத்மாசனத்தில உக்காருங்க” என்று சம்மதம் தெரிவித்து, அவர்களை துரிதப்படுத்தினான்.

“அடபாவிங்களா நான் எப்படா யோகா கத்துக்கணும்னு சொன்னே?” என்று கிசுகிசுவென்று கேட்க, “இப்ப சொன்ன இல்ல அதேதான், சும்மா புலம்பாம வா பூவு” என்று நமட்டு சிரிப்புடன் அந்த வாண்டுகள் உட்கார்ந்தனர்.

‘காலங்காத்தால இந்த லேம்ப்போஸ்ட்ல தான் நான் வந்து முட்டிக்கணுமா’ என்று சிணுங்களோடு இவளும் அமர்ந்தாள்.

“ஹே யூ, அப்படி இல்ல, ஒழுங்கா பத்மாசனத்தில நிமிர்ந்து உக்காரணும்” மாரி, பூவிழியை சுட்டி சொல்ல,

“டேய் பிரபா யாருடா அது பத்மா? நான் ஏன் அவளை மாதிரி உக்காரணும்னு இந்த பாடிகார்ட் சொல்லுது” பூவிழி அவசரமாய் கேட்க, கீர்த்தியும் பிரபாவும் வாயை பொத்தியபடி சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

“சட்அப், ம்ம்… உன் பாட்டி…” என்று கடுப்பாக பதில் சொன்னவன், “எங்களை மாதிரி காலை மடக்கி, முதுகை நேர்கோட்டுல நிமிர்ந்து உக்காரணும், கை ரெண்டும் உன் கால்மேல இருக்கணும் இதுக்கு பேர் தான் பத்மாசனம்… யோகால முதல் படி இதுதான் அடுத்தது மூச்சு பயிற்சி… நான் சொல்லி தரதை அப்படியே செய் போதும்” என்று அவன் அதிகாரமாக சொல்ல, வேறுவழியின்றி அவளும் அடுத்த ஒருமணிநேரம் அவன் சொல்படியே பயிற்சி செய்தாள். மனதிற்குள் அவனை ஏகத்திற்கும் வசைபாடியபடி.

யோகா வகுப்பு முடிந்ததும் பிள்ளைகள் இருவரும் பிய்த்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.

‘அட பக்கிங்களா! உங்கள அப்பறம் கவனிச்சுக்கிறேன்’ என்று இவளும் நடக்க, “ஒரு நிமிஷம்” மார்தாண்டனின் குரல் அவளை நிறுத்தியது.

‘இன்னும் என்ன? ஒருவேளை யோகா சொல்லி தந்ததுக்கு ஃபீஸ் கேப்பானோ?’ என்று அவனிடம் திரும்பி நின்றாள்.

“நேத்து அந்த வாயடிச்ச, இப்ப நல்ல பொண்ணு மாதிரி அமைதியா நிக்கிற?” மாரி சந்தேகமாக கேட்க,

“…சாரி, நேத்து ஏதோ கோபத்துல அப்படி பேசிட்டேன்” பூவிழி அவனிடம் மன்னிப்பு கேட்டு விட்டாள். அவளுக்கு பிடிக்காத எவரிடமும் அவள் எப்போதும் பேச்சு வளர்க்க விரும்புவதில்லை.

“ம்ம் இந்தளவுக்கு புரிஞ்சா சரிதான்” என்று அவன் அங்கிருந்து செல்ல,  பற்களை நறநறவென கடித்தபடி இவளும் நடந்தாள்.

**************

பழங்களின் வெவ்வேறு வரிவடிவங்களை வரைந்து வண்ணம் தீட்டும் முறையை பயிற்சி அளித்து கொண்டிருந்தாள் பூவிழி.

இன்றைய வகுப்பு தொடக்கத்தில் இருந்து பூவிழி பயிற்சியை தவிர்த்து வேறெதையும் பற்றி பேச்சு கொடுக்கவில்லை. தங்கள் தோழியின் இந்த மாற்றம் இரு பிள்ளைகளையும் சற்று சலனபடுத்த தான் செய்தது.

அவளின் அமைதியான முகத்தோற்றத்தை கவனித்து இவர்களும் அவள் சொன்னது போலவே படங்களை வரைந்தனர்.

வகுப்பு முடியும் நேரம் வழக்கம் போல கீர்த்தி எல்லா படத்தையும் நேர்த்தியாக வரைந்து இருந்தாள். பிரபாவும் ஓரளவு நன்றாக வரைய முயன்று இருந்தான்.

“குட், இன்னைக்கு கிளாஸ் ஓவர், நீங்க போகலாம்” என்று சொல்லி விட்டு தன் பொருட்களை பையில் எடுத்து வைத்தாள்.

“காலையில  யோகா கிளாஸ்ல உன்ன மாட்டி விட்டது தப்புதான் பூவு சாரி… நீ எப்பவும் போல எங்ககூட பேசு ப்ளீஸ்…” என்று மன்னிப்பு கோரினர் இருவரும் ஒரே குரலாய்.

பூவிழி பதில் பேசாமல் கிளம்ப, பிள்ளைகளின் மலர்முகங்கள் வாடி போயின. அந்த அறையின் கதவில் சாய்ந்தபடி அவர்களை பார்த்து நின்றிருந்த சித்தார்தை கண்டு பூவிழி தேங்கி நின்றாள்.

“ம்ஹும் இங்க ஏதோ சரியில்லயே… என்னாச்சு?” சித்தார்த் ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க,

“சித்து மாமா, பூவு எங்க மேல கோவீச்சிகிட்டு பேச மாட்டேங்கிறா…” என்றாள் கீர்த்தி சோகமாய்.

“ஓ அப்படியா விசயம், அப்ப நம்ம ஃப்ளவரோட கோபம் தீர என்ன செய்யலாம்” என்று சித்தார்த் தீவிரமாக யோசிப்பது போல பாவனை செய்தான்.

“சித்து மாமா, ப்ளவர்க்கு சாக்லேட் அப்புறம் ஐஸ்கிரீம்னா ரொம்ப பிடிக்கும், அதை வாங்கி தரலாம்” பிரபாகர் அவசர ஆலோசனை வழங்க,

“சூப்பர் ஐடியா, டிரை பண்ணி பாக்கலாமே, ம்ம் சீக்கிரம்” என்று சித்தார்த் துரிதப்படுத்த இரண்டு பிள்ளைகளும் வெளியே ஓடினர். அவர்கள் தலை மறையும் வரை உம்மென்று இருந்தவள், அவர்கள் சென்றதும் பக்கென சிரித்து விட்டாள்.

சித்தார்த் நெற்றி சுருங்க, “அப்ப இதெல்லாம் நடிப்பு, சாக்லேட், ஐஸ்கிரீம்காக எங்க வீட்டு பசங்கள ஏமாத்தற இல்ல” என்று குற்றம் சாட்ட,

“பின்ன என்ன சித்து சார், இதுங்க ரெண்டும் சேர்த்து காலையில என்னை ஒரு மணிநேரம் ஒரே இடத்தில உக்கார வச்சுடுச்சுங்க, எனக்கு எப்படி இருந்திருக்கும், அதான் வச்சு செஞ்சேன், யார்கிட்ட” என்று அவள் இல்லாத காலரை தூக்கி தோரணை காட்ட, சித்தார்த் வாய்விட்டு சிரித்து விட்டான்.

“சித்து சார், அமைதியா இருங்க, பசங்க வராங்க” என்றவள் மறுபடி முகத்தை அமைதியாக வைத்துக் கொண்டாள்.

பிரபாகர் இரு கைநிறைய விதவிதமான பெரிய சாக்லேட்களை எடுத்து வந்து பூவிழி முன்பு நீட்ட, கீர்த்தி தன் ஒரு கையில் இரண்டு கோன் ஐஸ்கிரீம் வீதம் இரு கைகளிலும் நான்கு ஐஸ்கிரீமை அவளிடம் நீட்டினாள்.

பூவிழி எத்தனை முயற்சி செய்தும் அவள் கண்களில் மின்னிய ஆசையை மறைக்க முடியவில்லை. இருந்தும் அமைதியாக நின்றிருந்தாள்.

இது எல்லாமே உனக்கு மட்டும் தான் பூவு… எங்க கிட்ட பேசு” கீர்த்தி கெஞ்ச,

“நாளையில இருந்து யோகா கிளாஸ்க்கு நீ வரவேனா சரியா…  பேசு ஃபிளவர்” என்று பிரபாகர் வாக்கு தர, பூவிழி, “நிஜமா தான் சொல்றிகளா, நம்பலாமா!” என்றாள் கண்களை சுருக்கி சந்தேகமாய்.

“நிஜம்மா… எங்க ஷீலா மிஸ் ப்ராமிஸ்” என்றாள் கீர்த்தி.

“ம்ம் நானும் மீனு மிஸ் மேல ப்ராமிஸ்” என்றான் பிரபாகர்.

அவர்கள் சத்தியம் வைத்த தினுசில் சித்தார்த் கண்கள் விரிந்தன.

“அதென்ன, ஷிலா மிஸ், மீனு மிஸ் மேல ப்ராமிஸ் வக்கிறீங்க, உங்களுக்கு உங்க மிஸ்ஸ அவ்வளவு பிடிக்குமா?” சித்தார்த் பெருமையாக கேட்க,

“அச்சோ அப்படியில்ல சித்து சார், ஷீலா இவளோட மேத்ஸ் மிஸ், மீனு இவனோட இந்தி மிஸ் அதான் அவங்க மேல இவ்ளோ தைரியமா பிராமிஸ் பண்ணுதுங்க ரெண்டு வாலுங்களும்” என்று பூவிழி விளக்கம் தர, “நல்லா வருவீங்க டா நீங்கெல்லாம்…” சித்தார்த் சொன்ன விதத்தில் அங்கு சிரிப்பலை பரவியது.

பூவிழி எப்போதும் போல வாயடிக்க ஆரம்பிக்க, கீர்த்தி, பிரபா ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர்.

நால்வரும் நான்கு ஐஸ்கிரீமை பகிர்ந்து ருசிக்க தொடங்க, சித்தார்த் பூவிழியை வினோதமாக பார்த்தான்.

“ஹே ஃபிளவர் நீ எங்க வீட்டுக்கு வந்து வெறும் நாலு நாள் தான் ஆச்சுன்னு நம்பவே முடியில… கீர்த்து, பிரபா உன்கிட்ட இவ்ளோ அட்டாச் ஆகிட்டாங்க…” சித்தார்த் வியந்து சொல்ல, ஐஸ்கிரீமை ருசித்தப்படி பூவிழி தோளைக் குலுக்கினாள்.

“ம்ஹூம் உன்கிட்ட ஏதோ மேஜிக் இருக்கு… ம்ம் யூ ஆர் லைக் எ ஏன்ஜல்” அவன் விளையாட்டாகவே பாராட்ட,

இப்போதுதான் அவளுக்கு நினைவு வந்தது.

தன் பையில் இருந்த வரைப்படத்தாளை எடுத்து அவனிடம் நீட்டியவள், “இது உங்களுக்காக சித்து சார், பிரிச்சு பார்த்து பிடிச்சிருக்கா சொல்லுங்க” என்றாள்.

தன் கைகளை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு அதை வாங்கி பிரித்து பார்த்தவன், ஒரு நொடி பிரமித்து நின்றுவிட்டான்.

நேற்று கீர்த்தி, பிரபாவை பின்னிருந்து கத்தி சித்தார்த் பயமுறுத்தும் காட்சி அப்படியே தத்ரூபமாய் அந்த ஓவியத்தில் வரையப்பட்டு இருந்தது.

அந்த ஓவியத்தில் இருந்த அவனின் முகத்தோற்றம் அத்தனை தத்ரூபமாய் அவனை வியக்க வைத்தது. செல்ஃபி பிரியனான சித்தார்திற்கு அவன் முகபாவங்கள் அனைத்தும் அத்துப்படி தான்.

அவன் முகத்தில் குழந்தைகளை பயமுறுத்தும் ஆவல், அதையும் தாண்டிய குதூகலம், அவன் கண்கள் விரிந்திருக்க, புருவங்கள் உயர்ந்திருக்க, பாதி அமர்ந்த நிலையில் கைகள் விரித்த நிலையில் அத்தனை நேர்த்தியாக அவன் உருவம் வரையப்பட்டு இருந்தது.

கூடவே அதிர்ந்து திரும்பிய இரு குழந்தைகளின் பக்கவாட்டு தோற்றமும் அவர்களின் முகபாவனைகளும் அதில் அத்தனை அழகாய் தெரிந்தது. பிரபாகர் முகம் முதல்கட்ட அதிர்விலிருந்து மீண்டு சித்தார்தை கண்டு விட்ட உற்சாகத்தைக் காட்ட,

சட்டென திரும்பி பார்க்க தாமதபடுத்திய கீர்த்தி அந்த முதற்கட்ட அதிர்விலிருந்து விலகாமல் குண்டு கண்கள் விரிந்து இருக்க, மூச்சை இழுத்து பிடித்தப்படி தலையை திருப்புவது போன்ற அவளின் முகபாவம் அத்தனை தெளிவாய் வரையப்பட்டு இருந்தது.

மொத்தத்தில் இரு நொடிகள் கூட கடக்காத நேற்றைய தருணத்தை அப்படியே அழகு வண்ண ஓவியமாக சிறைப்பிடித்து இருந்தாள் பூவிழி.

“ஹே சான்சே இல்ல… மார்வ்லஸ்…” என்ற சித்தார்த்தின் கைகள் அதீத ஆர்வத்தில் அவளை நோக்கி நீள, பூவிழி திகைத்து இரண்டடி பின்வாங்கினாள்.

கண்களை சுருக்கியவன் “சாரி சாரி ஃபிளவர், தப்பா எடுத்துக்காத… எனக்கு உன்ன எப்படி பாராட்டறதுன்னே தெரியல… அதான்  ரொம்ப எக்ஸைட் ஆகிட்டேன்” என்று விளக்கம் தர,

“பரவாயில்ல சார், நான் வரைஞ்சது உங்களுக்கு பிடிச்சிருக்கா” ஆர்வமாக கேட்டாள்.

“பிடிச்சிருக்காவா! சத்யா சொல்லும் போது கூட நான் நம்பல… ச்சே என்ன டேலண்ட் உனக்கு… நீ கிரேட் ஃபிளவர்”

“தேங்க் யூ சார்” என்று புன்னகைத்து அங்கிருந்து நகர்ந்து விட்டாள் பூவிழி. சித்தார்த் திடீரென அவளை அணைக்க முயன்றது அவளை கலவரப்படுத்தி இருந்தது. விட்டால் போதுமென அங்கிருந்து ஓடி வந்து விட்டாள்.

சித்தார்த் பார்வையும் கவனமும் கையிலிருந்த ஓவியத்தின் மீதே பதிந்து இருந்தது. பார்க்க பார்க்க வியப்பையும் ரசனையையும் அவனுள் தூண்டிக் கொண்டே இருந்தது அந்த ஓவியம்.

 

எக்குத்தப்பா சிக்கிட்டேனோ? 6

அடுத்தடுத்த நாட்களில் சித்தார்த் நிறுவனம், தொழிற்சாலை என்று தன் மாமன் ராம்குமாரோடு ஓய்வின்றி அலைந்து கொண்டிருந்தான்.

சத்யவர்த்தினி ஜனார்த்தனனை குற்றவாளி என்று நிரூபிக்க போதுமான சாட்சிகளை தேடுமாறு மேலிடத்தில் அழுத்தம் கொடுத்து கொண்டிருந்தாள்.

மார்த்தாண்டன் சித்தார்த்தின் நிழல் போலவே அவனை பாதுகாக்கும் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தான்.

பூவிழி, அங்குள்ள வேலையாட்களுடன் வாயடிப்பது, மாலையில் குழந்தைகளும் ஓவியப் பயிற்சி, ஓய்வு நேரத்தில் அவள் மனம் போன போக்கில் ஓவிங்கள் வரைவது‌ என்றிருந்தாள். ஆனால் இரு நாட்களாக அவளிடம் தொய்வு காணப்பட்டது.‌ நடையின் துள்ளல் பேச்சின் வேகம் குறைய தொடங்கி இருந்தது.

ஜெயலட்சுமி தன் வகுப்பை முடித்து விட்டு வழக்கம் போல பூவிழியை காண அவள் அறைக்கு வந்தாள்.

கதவை திறந்த பூவிழியின் முகம் வாடி போயிருந்ததை கவனித்து, “என்னாச்சு பூவு, உனக்கு உடம்பு ஏதும் சரியில்லையா?” என்று அவள் நெற்றியில் கைவைத்து பார்க்க,

“எனக்கென்ன, நல்லா தான் இருக்கேன் ஜெயாக்கா” என்று அலுத்தப்படி உள்ளே கட்டிலில் வந்து குத்துக்காலிட்டு உம்மென்ற முகத்தோடு அமர்ந்து கொண்டாள்.

“ஏன்டி இப்படி அலுத்துக்கிற இப்ப”

“போ க்கா இன்னியோட ஏழுநாள் ஆச்சு, தில்லு பேபி என்கூட பேசி” என்று அவள் சிணுங்களும் கவலையுமாக சொல்ல,

“தாத்தா ஏதோ கோவத்தில பேசாம இருப்பாரு, நீதான சொல்லாம ஓடிவந்த, ஃபோன் செஞ்சு மன்னிப்பு கேட்டு இருக்கலாம் இல்ல,” ஜெயா ஆலோசனை வழங்கினாள்.

“மனசு கேக்காம நேத்து ஃபோன் பண்ணேன் தெரியுமா! அந்த கிழம் ஃபோன் எடுக்கவே இல்ல” சொல்லிவிட்டு கண்கள் கலங்க முகம் சுருங்கி தேம்பினாள் பூவிழி சின்ன பெண் போல.

“எடுக்கலயா! சரி நீ எத்தனை முறை டிரை பண்ண?” ஜெயா யோசனையோடு கேட்க,

“ஒரு தடவ தான்” ஒற்றை விரல் காட்டி பதில் தந்து ஜெயாவிடம் ஏகத்திற்கும் முறைப்பை பெற்றுக்கொண்டாள்.

“முறைக்காத க்கா, எத்தனை நாள் கழிச்சு நான் ஃபோன் பண்றேன் ஓடி வந்து எடுக்க வேண்டாமா? வழுக்க தலை, நரைச்ச மீசை அந்த கிழத்துக்கு இம்புட்டு வீம்பு இருந்தா, இந்த பூவுக்கு எம்புட்டு இருக்கும்! அதான்” என்று ராகம் இழுத்தாள்.

“வீம்பு இருக்கறவ ஏன் இப்படி தாத்தா கிட்ட பேசி நாளாச்சுனு புலம்பிட்டு இருக்கியாம்?” ஜெயாவும் அவளுக்கு தோதாய் வாதாடினாள்.

பின்னே பூவிழியை குழந்தை பருவத்தில் இருந்து பார்த்து வருபவள் ஆயிற்றே, அவளின் ஒவ்வொரு குறும்புதனமும் கெட்டிகாரத்தனமும் இவளுக்கு அத்துப்படி. பூவிழியின் பக்கத்துவீடு தான் ஜெயலட்சுமியின் தாய்வீடு. அவள் திருமணம் முடிந்து இங்கு வரும் வரை பூவிழி ஓய்வு எடுத்துக் கொள்ளவதே ஜெயாவின் மடியில் தான். இல்லாத சேட்டைகள் செய்துவிட்டு தில்லை நாயகத்திடம் தப்பிப்பதற்காக இவர்கள் வீட்டில் அடைக்களமாகி விடுவாள். பழைய நினைவுகளில் ஜெயாவின் இதழில் மென்மையாய் புன்னகை விரிந்தது.

பூவிழியின் முகம் கவலையில் சோர்ந்து இருந்தது. என்ன தான் இருந்தாலும் தாத்தா தான் அவளுக்கு எல்லாம், சிறு வயதிலிருந்தே பார்த்து பார்த்து வளர்த்து அவளை ஆளாக்கி விட்டவர், அவருடன் சண்டையிட்ட நாட்கள் அதிகம் தான். ஆனால், முழுதாக ஒருவாரம் பேசாமல் இருந்ததில்லை.

முதல்முறை தான் அவசரப்பட்டு விட்டோமோ! என்று யோசனை தோன்றியது பூவிழிக்குள். தன் தாத்தா தன்னிடம் பேசாமலேயே இருந்துவிடுவாரோ என்ற பயமும் அவளுள் பரவியது.

“ஜெயாக்கா, என்னை இப்பவே பஸ் ஏத்தி விடு, நான் போய்‌ தில்லு பேபிய பார்த்துட்டு வரேன்” என்று வேகவேகமாக தன் கைப்பையை எடுத்து பொருட்களை சோதித்தவளை‌ பார்த்து ஜெயா தலையில் அடித்து கொண்டாள்.

“ஏய், ஒருவாரத்துக்குள்ள இங்க லீவ் எல்லாம் கொடுக்க மாட்டாங்க, என்ன திடீர்னு என் பூவுக்கு தாத்தா மேல் பாசம் பொங்கி வழியுது?” கிண்டலாகவே‌ கேட்க,

“இது பாசம் இல்ல, பயம்! மத்தவங்களுக்கு மாதிரி தாத்தாக்கும் நான் வேண்டாதவளா போய்டுவேனோன்னு பயம், அந்த கிழத்தைவிட்டா என்னை தண்டிக்கவும் தட்டி கேட்கவும் வேற யாரு இருக்கா?” பூவிழியின் கண்களில் தாரைதாரையாய் கண்ணீர் வழிய, அதை புறங்கையால் துடைத்து கொண்டே பேசினாள்.

ஜெயாவிற்கு இது கேட்டு கேட்டு அலுத்துப்போன இவளின் வசனம்! இருந்தும் அவள் அழுவது பொறுக்காமல், “செய்றது எல்லாம் கேக்குமாறிதனம், இதுல தாத்தா பேசலன்னு சென்ட்டிய பிழியற, தாங்கல” என்க.

பூவிழி அப்பாவியாய் அவள் முகம் பார்த்து உதடுகள் பிதுங்க தேம்பினாள்.

ஜெயா தன் தலைக்குமேல் கைகளை தூக்கி கூப்பி, “நீ அழ ஆரம்பிக்காத மகராசி, தாத்தா தினமும் ஃபோன்ல உன்னப்பத்தி என்கிட்ட கேட்டுட்டு தான் இருக்காரு, அவருக்கு உன்மேல இம்மியளவு கூட பாசம் குறையில போதுமா” என்று சொன்னதுதான் தாமதம் சட்டென துள்ளி எழுந்தாள் பூவிழி.

“பேத்திகிட்ட பேச மாட்டாராம், உன்கிட்ட மட்டும் என்னை பத்தி தினமும் விசாரிப்பாராமா?”

“நீ செஞ்சுட்டு வந்த வேலையால அவருக்கு உன்மேல கொஞ்சம் வருத்தம், கோபம் எல்லாம் இருக்கு. அதோட நீ புது ஊர்ல எப்படி இருக்கியோன்னு பயமும் இருக்கு. கிட்டத்தட்ட பத்து வருசம் உன்ன கண்ணுல வச்சு வளர்த்தவர் இல்லையா!” ஜெயலட்சுமி விளக்கம் தர,

“ஆமா, எனக்கு இங்க வேலை வாங்கி கொடுத்ததே நீதான். உன்கிட்ட மட்டும் பேசுவாராம், எங்கிட்ட பேசகூடாதாம், இது எந்த ஊரு நியாயம்?” பூவிழி அவளிடம் ஏட்டிக்குப் போட்டி பேசினாள்.

அவள் தலையை தட்டியவள், “ஏன் டீ இங்க வேலை இருக்குன்னு தான நான் சொன்னேன், சொல்லாம, கொள்ளாம நானா உன்ன ஊரைவிட்டு ஓடிவர சொன்னேன்!” ஜெயாவின் பார்வையில் கண்டிப்பு தெரிந்தது.

“சரி சரி விடு க்கா, அதான் தில்லு பேபி எனக்காக தினம் உன்கிட்ட பேசுது இல்ல, இப்ப எனக்கு அதுவே போதும், அந்த கிழம் எத்தனை நாளைக்கு என்கிட்ட கெத்தை மெய்டைன் பண்ணுதுன்னு நானும் பார்க்கதானே போறேன்” என்று முகம் தெளிந்து தோரணை காட்டியவளை பார்த்து ஜெயா சளிப்போடு தலையசைத்தாள். சற்றுமுன் இவள் அழுது வடிந்தாள் என்றால் யாராலும் நம்ப முடியாது.

அதன்பின் இருவரும் பேச்சும் சிரிப்புமாக மாலை சிற்றுண்டிகாக உணவுகூடத்தை நோக்கி நடக்க, வழக்கம் போல் துள்ளிக்கொண்டு வந்த பூவிழி எதன்மீதோ மோதி விழப்போக ஜெயா அவளை பிடித்து கொண்டாள்.

பூவிழிக்கு தான் மோதியது எதன்மேல்! ச்சே யார்மேல் என்று புரிந்து போனது. கலவரத்தோடு பார்வையை உயர்த்தினாள்.

அங்கே பாடிகார்ட் நெற்றி சுருங்க, இடுங்கிய பார்வையோடு அவளை முறைத்து நின்றிருந்தான்.

‘அய்யோ அய்யையோ நான் மறுபடியும் இந்த லேம்ப்போஸ்ட் மேலயா வந்து மோதினே! அச்சோ முறைக்கிறானே! பூவு உனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது?’ அவளின் மனக்குரலை அகல விரிந்த அவள் கண்கள் காட்டி கொடுத்ததோ என்னவோ! மாரி ஓர் அலட்சிய தோள் குலுக்கலுடன் விலகி சென்று விட்டான்.

“எத்தனை முறை சொல்றது பார்த்து நடக்க பழகுன்னு, கண்ணு மண்ணு தெரியாம ஓடிவந்து இடிச்சு, தண்ணீ எடுத்துட்டு வந்த மேல் வீட்டு மாலாக்கா குடத்த உடைக்கறத்துக்கும், கீழ் வீட்டு சந்திரா பாட்டிய இடிச்சு கால உடைச்சதுக்கும் இது என்ன உன் வீடுன்னு நினைச்சியா?” ஜெயா அவளை கண்டிக்க,

“இப்ப எதுக்கு பழைய பாட்டெல்லாம் பாடற க்கா, என் வீட்ல நான் வாரேனு தெரிஞ்சாலே எல்லாரும்  அவங்கவங்க போஷனுக்கு தெரிச்சு ஓடுவாங்க, இந்த பரங்கி மலை எப்ப பார்த்தாலும் நான் வர்ற வழியில கேட் போட்டுட்டு நிக்கிறான்,  என்கிட்ட சிக்குவான் இல்ல, அப்ப இருக்கு இவனுக்கு” பூவிழி ஏகத்துக்கும் எகிறினாள்.

“அப்படி என்ன பண்ணுவ நீ?” உணவு கூடத்தில் தனக்கான சமோசாவை பெற்றுக் கொண்டு இருவரும் மேசையில் அமர்ந்தனர்.

“ம்ம் ராபர்ட் கிட்ட சொல்லி அந்த பாடிகார்ட் சாப்பாட்டுல பேதி மாத்திரை கலக்க போறேன் பாத்துக்க” பூவிழி சாதாரணமாய் சொல்லிவிட்டு சமோசாவை வாயில் திணித்து கொண்டாள்.

“அடிப்பாவி, மார்த்தாண்டன் மேல உனக்கு என்னடி இம்புட்டு ஆத்திரம், அவன் பார்க்க முரட்டுதனமா இருந்தாலும் பலா பழம் மாதிரி நல்ல குணம் தெரியுமா! அதோட சித்தார்த் சார் உயிரை ரெண்டு முறை காப்பாத்தி இருக்கான்”

“முதல்ல இந்த பலாபழ காம்மினேஷன மாத்துங்க ப்பா, கேட்டு கேட்டு சளிச்சு போச்சு, மார்த்தாண்டனா அவன்! வெறும் தண்டம், அதோட என்ன பேரு க்கா இது! ஆளு பார்க்க நீயூ ட்ரெண்டா இருக்கான், பேரு மட்டும் அருத பழசா இருக்கு”

“அவன் பேரு எப்படி இருந்தா உனக்கு என்னடி? அப்பவே நினைச்சேன் என்னடா வந்து ஒருவாரம் ஆச்சே, யார்கிட்டேயும் வம்பிழுக்காம நல்லதனமா இருக்கியே, திருந்திட்ட போலன்னு”

“திருந்தறதா! அது நம்ம வரலாறுலயே கிடையாதே” பூவிழி கைவிரிக்க,

“மறுபடியும் சொல்றேன் பூவு, இங்க ஒழுங்கா உன் வேலைய மட்டும் பார்த்துட்டு இரு. மத்தவங்க விசயம் எதுலயும் மூக்க நுழைக்காத, பணக்காரங்க இடம் இது, இங்க எல்லாருக்கும் ரெண்டு முகங்கள் இருக்கும், கவனமா இருந்துக்க” ஜெயலட்சுமி நீளமான அறிவுரை வழங்க, பூவிழி வாய்பொத்தி சிரித்து கொண்டே, பெரிதாக தலையாட்டி வைத்தாள்.

தாத்தா பற்றிய அவள் ஏக்கம் குறைந்து போக அதன்பிறகு வழக்கம்போல கலகலப்பாகவே சுற்றி வந்தாள். அவளுக்கு எதிலும் ஒரு சுவாரஸ்யம் தேவையாக இருந்தது.

ராபர்டிடம் சென்று வகைவகையான உணவுகளைப் பற்றி அவன் சொல்ல சொல்ல கெட்டுக் கொண்டிருப்பாள். ராபர்டும் சளைக்காமல் சொல்லி கொண்டு இருப்பான். தன் திறமையை பற்றி வாய் ஓயாமல் பேச யாருக்கு தான் கசக்கும்.

சாவித்திரியிடம் உட்கார்ந்து அவர்களின் காதல் கதைகளை தோண்டி துருவி கேட்டு கொண்டிருப்பாள். இந்த நான்கு வருட காதல் திருமண வாழ்வில் தங்களுக்கு குழைந்தை இல்லை என்பதை தவிர, ராபர்ட், சாவித்திரி தம்பதியருக்கு வேறு மனக்குறைகள் பெரிதாய் இருக்கவில்லை.

அவர்கள் கள்ளத்தனமாக சந்தித்து காதல் பரிமாறிக் கொண்ட தருணங்களை சாவித்திரி சிறு வெட்கம் இழையோட சொல்வதை கேட்க கேட்க பூவிழிக்கு அத்தனை தித்திப்பாக இருக்கும். அதோடு அவர்களின் திருமணத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பையும் இருவரும் ஒன்று சேர போராடிய போராட்டத்தையும் கேட்க இவள் மனதிற்குள் ஏதோ பிசைவது போல தொன்றும்.

தோட்டகாரனிடம் அங்குள்ள ஒவ்வொரு செடி, மலர், மரம், இலை, தழை என அனைத்தையும் விசாரிப்பாள். அந்த தோட்டகார தாத்தாவிற்கு அவளின் ஓயாத பேச்சு ஏதோ தேன்மழை போல. இதுவரை அவரின் பேச்சுக்கள் அந்த தோட்டத்து தாவரங்களோடு நின்றுவிட்டு இருந்தன. அந்த தோட்டம் முழுவதும் அழைத்து சென்று அவளுக்கு மகிழ்ச்சியாக காட்டுவார்.

இவளிடம் மாட்டிக்கொண்டு முழி பிதுங்குவது வாயில் காவலன் பிரதாப் சிங் தான். அவருக்கு தெரிந்ததோ அரைகுறை தமிழ். பூவிழி தனக்கும் இந்தி தெரியும் பேர்வழி என்று அரைகுறை இந்தி வார்த்தைகளை சகட்டுமேனிக்கு பேசி, அவரை தலையை பிய்த்துக் கொள்ள செய்து விடுவாள். இப்போதெல்லாம் இவள் அந்த பக்கம் வந்தாலே பிரதாப் சிங் தப்பித்தோம் பிழைத்தோம் என்று எங்காவது ஒளிந்து கொள்வார்.

இதற்கு மேல் இருக்கவே இருக்கிறார்கள் பிரபாவும் கீர்த்தியும். பூவிழி அங்கு வந்து வெறும் இரண்டு வாரங்கள் தான் கடந்தன என்பதை தன் துறுதுறு நடவடிக்கைகளால் மறக்க செய்திருந்தாள் அவள்.

அந்த மான் கூட்டத்தில் புதிதாக இணைந்த முயல் குட்டியாய் எந்த பாகுபாடும் இன்றி துள்ளி திரிந்தாள் பூவிழி. இதையெல்லாம் ஓரளவு கண்டும் காணாமல் விட்டிருந்தாள் சத்யவர்த்தினி.

பூவிழி எல்லாரிடமும் போல சித்தார்த்திடமும் எதார்த்தமாக பேசி, பழகுவது தெரிய வந்தால், சத்யவர்த்தினியின் போக்கு எவ்வாறு இருக்கும்?

 

எக்குத்தப்பா சிக்கிட்டேனோ? 7

இன்றைய ஞாயிறு பொழுது கழியுமா! என்று அடம் பிடிப்பது போல இருந்தது பூவிழிக்கு. பொழுதைப்போக்க யாராவது சிக்குவார்களா? என்று அறையை விட்டு வெளியே வந்தாள்.

பால்கனியில், பிரபாகர், கீர்த்தி இருவரும் வீடியோ கேம் விளையாடி கொண்டிருப்பதை பார்த்து, பூவிழி அவர்களுக்கு குரல் கொடுத்தாள்.

“ஹாய், வாண்டுஸ்”

ம்ஹும் அவர்கள் திரும்பவில்லை.

“ஏய் பிரபா, கீர்த்து, என்ன செய்றீங்க?”

இப்போதும் அவர்கள் கவனிப்பதாய் இல்லை. ‘இங்க காட்டு கத்து கத்தறேன், இந்த பக்கிக திரும்பி பார்க்குதா பாரு’ என்று கடுப்பாக கீழே இருந்த ஒரு சிறு கல்லை எடுத்து அவர்கள் மேல் வீசினாள்.

அவர்கள் இருவரின் இடையே இருந்த கண்ணாடி டீபாய் மேல் டங்கென்ற சத்தத்துடன் அந்த கல் பட்டு விழ, இருவரும் திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தனர்.

“ஏ வாலுங்கலா, நான் தான், கீழ பாருங்க” பூவிழி கையசைக்க, அவர்களும் அவளை கவனித்தனர்.

“என்ன பூவு?” கீர்த்தி விசாரிக்க, “செம போர் பா, கீழ வாங்க நாம நொண்டிபட்ட விளையாடலாம்” ஆர்வமாய் அழைத்தாள்.

“என்னது? நொண்டி… பட்டயா, சும்மா எங்களை டிஸ்டர்ப் செய்யாம போய் எஃப் பீல மொக்க போடு, போ” பிரபாவின் பதிலில் இவள் விழிகள் தெறித்தன.

“பிரபா, அதை எப்படி விளையாடணும்னு நான் சொல்லி தரேன் வாடா, ஜாலியா இருக்கும்” இவள் கெஞ்ச,  ” நான் டென்த் ஸ்டேஜ் இப்ப தான் வின் பண்ண போறேன் என்னால முடியாது ஃப்ளவர்” பிரபா மறுத்து விட்டான்.

“எனக்கும் கேம் இப்ப தான் இன்ட்ரெஸ்டிங்கா போயிட்டு இருக்கு, நானும் வரல பூவு” என்று கீர்த்தியும் மறுத்து விட, பூவிழியின் முகம் நெறுப்பு பந்தாய் சிவக்க, அவள் மூச்சு காற்று அனல் புகையாய் வெளிவந்தது.

“நான் இவ்ளோ கூப்பிடுறேன், உங்களுக்கு அந்த பாழாபோன வீடியோ கேம் தான் முக்கியமா போச்சு இல்ல, நீங்க மட்டும் இப்ப என்கூட விளையாட வரல, உங்க பேச்சு நான் கா டா, இந்த பூவு இனிமே உங்ககூட பேசமாட்டா பாத்துக்க” என்று அவள் பொரிய, இரு பிள்ளைகளும் ஒருவரையொருவர் பார்த்து விழித்துக் கொண்டனர்.

பிரபாகர் மனமே இல்லாமல் வீடியோ கேமை அணைத்து விட்டு எழுந்தான். வேறுவழி பூவிழியின் கலகல பேச்சில் கொண்டாட்டமாய் கழியும் ஓவிய வகுப்பிற்கும், அவள் உம்மென்ற முகத்துடன் நகர்த்தும் வகுப்பிற்கும் உள்ள வித்தியாசம் தான் அவனுக்கு நன்றாகவே தெரியுமே!

கீர்த்தியும் அவனுடன் எழுந்து விட்டாள். பின்னே, பிறகு பூவை பேச வைக்க இவளின் பங்கு சாக்லேட், ஐஸ்கிரீமை இழக்க நேரிடும் அல்லவா!

இருவரும் அவள் முன்வந்து நின்றனர். “என்ன விளையாடலாமா?” பூவிழி தெனாவெட்டாய் கேட்க, “முதல்ல நீ விளையாடி காட்டு, அப்புறம் நாங்க விளையாடுறோம்” அதே ரீதியில் பதிலும் வந்தது.

மர நிழலின் கீழ் மண் தரையில், சிறு குச்சியை எடுத்து கோடுகளை இழுத்து இரு வரிசையில் தலா மூன்று கோடுகள் என ஆறு கட்டங்களை வரைந்தாள். சிறு தட்டையான கல்லை தேடி எடுத்து அவர்களிடம் காண்பித்து, “இது தான் காய், இந்த கட்டத்துக்கு முன்ன நின்னு முதல் கட்டத்தில காயை போட்டுட்டு, மறுபக்கம் ஒவ்வொரு கட்டமா ஒத்த கால்ல நொண்டி நொண்டி வந்து அந்த காயை வெளியே தள்ளனும், அடுத்து ரெண்டாவது கட்டத்துல காயை போட்டு அப்படியே விளையாடனும் சரியா, நோண்டி வரும் போது உங்க காலு கோட்டுமேல பட்டா நீங்க அவுட்” என்று பெரிய விளக்கமாக கொடுத்துவிட்டு ஒருமுறை விளையாடியும் காட்டினாள்.

 

கீர்த்திக்கு அந்த விளையாட்டு சட்டென பிடித்து போனது. பிரபா முதலில் வேண்டா வெறுப்பாய் விளையாட ஆரம்பிக்க, கொஞ்ச நேரத்தில் அவனுக்கும் ஆர்வம் தொத்திக் கொண்டது. பிறகென்ன அந்த மூன்று வாண்டுகளும் வேர்க்க வேர்க்க நொண்டி விளையாடி கொட்டமடித்தனர்.

குழந்தைகளை வீடு முழுவதும் தேடி விட்டு பின்பக்கம் வந்து பார்த்த சித்தார்த் அப்படியே வாய் பிளந்து நின்றுவிட்டான்.

“ஏய், பூவு நீ கோட்டை மிதச்சிட்ட நீதான் அவுட்” கீர்த்தி குரலை உயர்த்த, “இல்லல்ல நான் நம்பமாட்டேன், பிரபா நீ பார்த்தல்ல நான் மிதிக்கல தானே” பூவிழி அவனை துணைக்கு அழைத்துக் கொண்டிருந்தாள்.

பிரபா பதில் தரும் முன் சித்தார்த் குரல் குறுக்கிட்டது. “டேய் நீங்க இப்படி மண்ணுல விளையாடினது மட்டும் உங்க அம்மாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்! போங்க ரெண்டு பேரும் குளிச்சிட்டு ட்ரெஸ் மாத்திட்டு வாங்க, நாம ஷாப்பிங் போலாம்” என்று சொல்ல குழந்தைகள் இருவரும் துள்ளி குதித்து ஓடினர்.

அங்கேயே நின்றிருந்த பூவிழியை ‌மேலும் கீழுமாய் பார்த்துவிட்டு சிரித்தவன், “சின்ன குழந்தைங்க அவங்களா? இல்ல நீயான்னு எனக்கு பெரிய டவுட் வருது ஃப்ளவர், சரி நீயும் போய் ரெடியாகிட்டு வா, இப்ப நீயும் எங்கூட வர” என்று சொல்ல, பூவிழி நம்பமுடியாமல் விழி விரித்தாள்.

“நான் எதுக்கு சித்து சார்!”

சுற்றும் ஒருமுறை பார்த்து விட்டு அவள் அருகில் வந்தவன், “வர்ற புதன்கிழமை வீட்ல சர்பிரைஸ் பார்ட்டி பிளான் பண்ணி இருக்கேன், அதுக்காக பர்செஸ் செய்ய தான் இப்ப போகணும், சத்யாக்கு சந்தேகம் வரக்கூடாதுன்னு இந்த வாண்டுகளையும் கூட இழுத்துட்டு போறேன். நீ வந்தால் இவங்களை சமாளிச்சுக்குவ நானும் ஃபிரியா எல்லாத்தையும் வாங்கலாம் அதான்” சித்தார்த் சின்ன குரலில் விளக்கமாக சொல்ல, பூவிழி மறுக்க தோன்றாமல் சம்மதமாக தலையசைத்தாள்.

அடுத்த அரைமணியில் அவர்களை சுமந்தபடி அந்த மகிழுந்து சாலையில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.

பின் இருக்கையில் பூவிழி, பிரபாகர், கீர்த்தி அமர்ந்து கொட்டமடித்து வர, சித்தார்த் முன் இருக்கையில் அமர்ந்து தன் கைப்பேசியை நோண்டி கொண்டிருக்க, மார்த்தாண்டன் காரை லாவகமாக இயக்கிக் கொண்டிருந்தான்.

“மாரி, லேடிஸ் ஹாஸ்டல் பக்கத்தில வண்டிய நிறுத்திக்க” சித்தார்த் சொல்ல, கார் சாலையோரம் ஒதுங்கி நின்றது.

அனைவரும் கீழே இறங்க, “இங்க ஏன் வண்டிய நிறுத்தினிங்க அங்கிள்?” கீர்த்தி கேள்வி எழுப்பினாள்.

“அது… ம்ம் நம்ம ஃபிளவரோட ஃப்ரண்ட் ஒருத்தங்க இப்ப வருவாங்க, அவங்க ஷாப்பிங் செய்யறதுல செம டேலண்டாம், அதான் அவங்களையும் நம்ம கூட அழைச்சிட்டு போலாம்னு!” சித்தார்த் ஏதோ வாய்க்கு வந்ததை கோர்வையாக உளரிவிட்டு, இரு நொறுக்கு தீனி பொட்டலங்களை அவர்கள் கையில் திணித்து கார்க்குள்ளேயே உட்கார வைத்தான்.

“அது யாரு சார்? எனக்கே தெரியாத என்னோட ஃப்ரண்ட்டு!” பூவிழி குழப்பமாக கேட்க, சித்தார்த் ஒரு சங்கடமான இளநகையோடு, “அது என் ஆளு ஃபிளவர், பேரு நிஷா… நிஷாந்தினி, அவளும் வரேன்னு சொன்னா, என்னால மறுக்க முடியல,‌ இந்த பசங்க கிட்ட என்ன சொல்லி சமாளிக்கிறதுன்னு யோசிட்டே வந்தேன். நீ காட்டி கொடுக்காத” என்று அவன் பார்வையால் கெஞ்சி நின்றான்.

பூவிழியின் கண்களில் ஒரு மின்னல் வெட்டிட அவள் முகம் முழுவதும் பரவசம் பரவியது. “முன்னையே நினச்சேன் சார், சாக்லேட் பாய் மாதிரி சும்மா செமயா இருக்கீங்க, இதுவரைக்கும் எந்த பொண்ணும் உங்கள சிங்களா விட்டிருக்க மாட்டாங்கன்னு” என்று துள்ளலாய் சொல்ல, சித்தார்த் அழகாய் வெட்க சிரிப்பை உதிர்த்தான்.

“சார் என்னமா வெட்கபடுறீங்க, வெட்க படறதுல பொண்ணுங்கள மிஞ்சிடுவிங்க போலவே சித்து சார்” என்று பூவிழி கிண்டல் செய்ய, சித்தார்த்தின் பார்வை சற்று தூரமாய் நகர்ந்தது.

அங்கே, சுடிதார் அணிந்து உயிர் பெற்ற தந்த சிலையாய் நிஷாந்தினி நடந்து வந்தாள். அவளை பார்த்து சிந்துவை விட, பூவிழி தான் அதிகம் வழிந்தாள் என்று சொன்னால் நிச்சயம் மிகையாகாது.

தன்மீது வைத்த பார்வையை விலக்காமல், கண்கள் விரிய நின்றிருந்தவளிடம் நிஷாவின் கவனம் திரும்பியது.

“ஹேய் நீ தான பூவிழி, சித்துவ அப்படியே செமயா வரைஞ்சிருக்க தெரியுமா!” என்று குதுகலமாய் அவளை அணைத்து பாராட்ட, பூவிழிக்கு சந்தோசம் தாளவில்லை.

“அச்சோ நிஷா மேடம், என்னமா இருக்கீங்க! அதான் சித்து சார் உங்க பேர சொல்லகூட அவ்ளோ வெட்கபட்டாரு போல”

“மேடம் எல்லா வேணாம் நம்மள ஃப்ரண்ஸ்னு தானே சித்து சொன்னான். நாம நடிக்க வேணாம் நிஜமாவே ஃப்ரண்ஸா இருக்கலாம்” நிஷா எந்தவித மேல் பூச்சும் இல்லாமல் இயல்பாக பேசி, பூவிழியின் மனதை வசீகரித்தாள்.

இப்போது குழந்தைகள் முன் இருக்கையில் அமர்ந்து கொள்ள, பூவிழி, நிஷாந்தினி, சித்தார்த் பின் இருக்கையில் அமர்ந்து வாய் ஓயாமல் பேசிக்கொண்டு வந்தனர்.

பேச்சின் சாரம் இதுதான், நிஷாந்தினி நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண், அவளின் பேரழகில் மிளர்ந்த சுட்டித் தனங்களால் சித்தார்த் மனதை கொய்து கொண்டாள் மொத்தமாக. பணத்தை மட்டுமே கொண்டு மனிதர்களை எடைபோடும் தன் அக்கா, மாமாவிடம் அவனின் காதலை வெளிப்படுத்த சித்தார்த் விரும்பவில்லை. சிகிச்சை முடிந்து அப்பா, அம்மா இங்கே வந்து அவரின் உடல்நிலை நன்கு தேறியபின்னர் தங்கள் காதல் திருமணத்திற்கு சம்மதம் பெற வேண்டும் என்பது அவனது திட்டம்.

அதுவரை திருட்டு தனமாய் தித்திப்பான சந்திப்புகளால் இவர்கள் காதலை வளர்த்து கொண்டிருக்கின்றனர். பூவிழி அவர்கள் காதல் கதையை திகட்ட திகட்ட கேட்டுக் கொண்டிருந்தாள்.

பின்பு, பூவிழியை பிள்ளைகளோடு போராட விட்டுவிட்டு, சித்து, நிஷா தேவையான பொருட்களை எல்லாம் தேடி தேடி வாங்கி குவித்தனர்.

மார்த்தாண்டன் நாலாபுறமும் அலசும் பார்வையோடு எச்சரிக்கையாக இருக்க, அவனின் கூர் பார்வையில் மறுபடி அவர் சிக்கிக் கொண்டார்.

வழுக்கை தலை, வெண்பஞ்சாய் நரைத்த கேசம், தூய வெளிர் நிற மேல் சட்டையும் கீழ் சட்டையும் (பேண்ட்) அணிந்து இருந்தார். பார்வைக்கு தவறாக தோன்றவில்லை எனினும் இந்த பேரங்காடிக்கு தாங்கள் வந்தது முதலே தங்களை பின்தொடர்ந்தபடி அங்கங்கே மறைந்து நின்று பார்த்துக் கொண்டே இருந்தார்.

இப்போதும் அவர் பார்வை குழந்தைகளிடம் வளவளத்து கொண்டிருந்த பூவிழி மீது இருக்க, மாரி சந்தேகமாக அவரிடம் சென்றான்.

“யார் சார் நீங்க? எங்களை எதுக்கு ஃபாலோ பண்ணிட்டு வரீங்க?” மாரியின் கேள்வியில் சற்றே திகைத்து நிமிர்ந்தார்.

 

எக்குத்தப்பா சிக்கிட்டேனோ? 8

மார்த்தாண்டன் அவரின் பதிலுக்காக விரைப்பாக அவரை பார்த்து நின்றிருக்க, அந்த பெரியவரின் முகத்தில் சின்னதாய் சிரிப்பு விரிந்தது.

“இல்ல தம்பி, நான் உங்களை ஃபாலோ பண்ணல, அதோ அங்க ஒரு வாலருந்த கழுத இருக்கில்ல, அதை தான் பாக்க வந்தேன்” என்று அவர் கைகாட்டிய திசையில் திரும்பி பார்த்த மாரியின் முகத்திலும் சிரிப்பு பரவியது.

“அவங்க டிராயிங் டீச்சர், நீங்க?”

“அந்த உருப்படாத கழுதைய வளர்த்து விட்ட அவளோட பாட்டன் பா” என்று அலுத்துக் கொள்ள, இப்போது மாரி வாய்விட்டே சிரித்து விட்டான்.

தன் அலைபேசியை எடுத்து ஏதோ ஆராய்ந்தவன், “சரி, நீங்க தான் தில்லை நாயகம், பூவிழியோட தாத்தா” அவன் சரியாக சொல்ல, பெரியவரின் நரைத்த புருவங்கள் வியப்பில் உயர்ந்தன.

“என் பேரை தெரிஞ்சு வச்சிருக்கீங்க!”

“அது தான் சார் எங்களோட வேலையே, சித்தார்த் சாரோட வீட்டுக்கு வரவங்க எல்லாரோட முழு விவரமும் எங்ககிட்ட இருக்கணும். அப்படி தான் பூவிழி பத்தின முழு விவரத்தையும் சேகரிச்சேன். இது சாதாரண முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் சார்” என்று விளக்கம் தந்தவன்,

“நீங்க ஏன் உங்க பேத்திய இப்படி ஒளிஞ்சு நின்னு பார்க்கணும்! நேரா வந்து அவங்க கிட்ட பேசலாம் இல்ல!” மேலும் சந்தேகமாக வினவினான்.

“நீங்க வேற தம்பி, ‘விவரங்கெட்ட பொண்ணா இருக்க, உன்னய வெளியூர் சோலிக்கு எல்லாம் அனுப்ப முடியாது’னு சொன்னதுக்கு, அந்த கூறுகெட்ட கழுத ‘எனக்கு வேலைக்கு போகணும், அதால வீட்டை விட்டு ஓடிப் போறேன் கிழவா’னு கடுதாசி எழுதி வச்சுட்டு இங்க வந்துடுச்சு தம்பி” பெரியவர் நொந்தபடி சொல்ல, மாரியின் பார்வை சற்று தூரத்தில் இருந்த பூவிழி மேல் திரும்பியது.

அங்கே பூவிழியின் கண்களும் இதழ்களும் முகமும் அழகாய் விரிந்து மலர்ந்து இருக்க, தலையை இப்படியும் அப்படியும் ஆட்டியபடி கைகளை விரித்து குழந்தைகளுடன் வளவளத்துக் கொண்டிருந்தாள். வழக்கம்போல.

அவளின் கள்ளங்கபடமற்ற அந்த பேரழகு இந்த காவலனை ஒருநொடி கலவரப் படுத்திவிட்டு அடங்கியது.

இந்த தாத்தா, பேத்தி பிரச்சனையில் மாரியின் கவனம் சற்றே மட்டுபட, சித்தார்தை நோக்கி நெருங்கிய ஆபத்தை கவனிக்க மறந்தான் அந்த மெய்காவலன்.

“இந்த அகம்புடிச்ச கழுத மேல இன்னும் எனக்கு கோபம் தீரல தான், ஆனாலும் மனசு கேட்கல தம்பி, புள்ள முகத்த பாத்து ரெண்டு வாரமாச்சு, அதான் நேத்திக்கே பொறப்புட்டு வந்துட்டேன். நம்ம ஜெயலட்சுமி புள்ள தான் சொல்லுச்சு, இங்கன உங்க கூட பூவும் வருதுன்னு அதான் வந்தேன்” பெரியவர் நிறுத்தாமல் பேசிக்கொண்டே போக, சித்தார்த் புறம் திரும்பிய மாரிக்கு ஏதோ தவறாய் பட சித்துவை நோக்கி ஓடினான்.

“எல்லாம் வாங்கியாச்சு இல்ல, எதுவும் மிஸ் ஆகலையே!” என்று சித்தார்த் தன் யோசனையை ஒருமுறை தட்டிவிட, தன்னவனை ரசனையோடு கண்களில் நிரப்பிக் கொண்டாள் நிஷாந்தினி.

அதே நேரம் அவன்மீது யாரோ மோதுவது போல வர, சட்டென சித்து  கைப்பிடித்து தன்பக்கம் இழுத்து கொண்டவளின் கையில் அடுத்த நொடி இரத்தம் கசிந்தது. சித்தார்த் என்னவென்று உணர்வதற்குள், அவன் கையிலிருந்த கூர் ஆயுதத்தால் இவனை தாக்கலானான்.

அதற்குள் மார்த்தாண்டனின் இரும்பு கரம் அவனை தடுத்து, கத்தியை பரித்துக் கொண்டு ஓங்கிவிட்ட குத்தில் அவன் தரையில் விழுந்தான். அங்காடி காவலர்கள் விரைந்து வந்து அவனை சிறைப்பிடித்தனர்.

முதல் கட்ட பதற்றம் தெளிந்து சித்தார்த் நிமிர, நிஷாந்தினி புறங்கையில் இரத்தம் வழிய கண்கள் சொருகி அப்படியே சரிய, சித்தார்த் அவளை தாங்கிக் கொண்டான். “ஹேய் நிஷா என்னாச்சு உனக்கு!” அவன் குரலும் உள்ளமும் பதறியது.

மாரி தன் கைக்குட்டை எடுத்து அவள் காயத்தில் இறுக்கமாக கட்டு போட்டவன், “சார் பயப்பட ஒண்ணுல்ல, சின்ன காயம் தான், உடனே ஹாஸ்பிடல் போகலாம் எழுந்திடுங்க” என்று துரிதமாக நிஷாவை தன் கைகளில் தூக்கி கொண்டு காரை நோக்கி விரைந்தான். எதையும் யோசிக்கும் நிலையில் சித்தார்த் இல்லை அவன் பின்னோடே வேகமாய் நடந்தான்.

தன் கண்முன்னால் அரங்கேறிய காட்சியில் இருந்து பூவிழி வெளிவர இயலாமல் அப்படியே நின்றிருந்தாள்.

“ஏய் ஃபிளவர், உன் ஃப்ரண்டுக்கு தான காயம் பட்டுச்சு, உனக்கு இல்லல்ல, எதுக்கு இப்படி ஓவர் ரியாக்க்ஷன் கொடுக்கற” பிரபாகர் அலட்டிக்கொள்ளாமல் பேச, பூவிழி அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

“டேய்ய்ய், சித்து சார கொலை பண்ண வந்திருக்காங்க டா! நிஷா கையெல்லாம் ரத்தம்! நீ என்ன இவ்ளோ கூலா பேசற!” அவள் குரலும் பதற்றமாகவே ஒலித்தது.

“இதெல்லாம் ஜுஜூபி பூவு, போன மாசம் நாங்கெல்லாம் கோயில் போயிருந்தப்ப, நாலு ரவுடிங்க சித்து மாமாவ அட்டாக் பண்ணாங்க தெரியுமா! பாடிகார்ட் அங்கிள் தான் சும்மா டிஷ்யூம் டிஷ்யும்னு சண்ட போட்டு அவனுங்களை துவைச்சு எடுத்துட்டாரு” கீர்த்தி சொல்லிக்கொண்டு போக, பிரபா தொடர்ந்தான்.

“அதுல ஒரு குண்டு ரவுடி, மாரி அங்கிள் தோளுல கத்தியால குத்திட்டான். எவ்ளோ பிளட் தெரியுமா! இப்பதான் அவருக்கு காயம் ஆறி இருக்கு, அந்த ஃபைட்க்கு முன்ன இதெல்லாம் சும்மா” என்று பிரபா தோள் குலுக்க, பூவிழிக்கு மேலும் உதறியது.

“அச்சோ அப்ப நீங்கெல்லாம் அங்கயா இருந்தீங்க! உங்களுக்கு ஒண்ணும் அடிபடல இல்ல” பரிதவிப்பாக கேட்க,

“எங்க எல்லாரையும் காருக்குள்ள சேஃப்டியா உக்கார வச்சுட்டு தான், மாரி அங்கிள் அவனுங்கள உண்டு இல்லன்னு பண்ணாரு” பிரபா விளக்கம் தர, பூவிழிக்கு அந்த சூழ்நிலை மனக்கண்ணில் வந்து அவளை கலவரப்படுத்தியது.

இரு குழந்தைகளையும் சேர்த்து பிடித்து கொண்டாள். “அய்யோ எங்களை விடு பூவு, முதல்ல சாவித்திரி ஆன்டிக்கு ஃபோன் போட்டு கார் அனுப்ப சொல்லு நாம வீட்டுக்கு போகலாம்” கீர்த்தி சொன்னதை அப்படியே செய்தாள் பூவிழி.

காருக்குள் அமர்ந்தவுடன், “நிஷாவுக்கு எப்படி இருக்குன்னு தெரியல, எந்த ஆபத்தும் இருக்க கூடாது” என்று பூவிழி சொல்ல, குழந்தைகள் இருவரிடமும் எந்த பதிலும் வரவில்லை. அவர்கள் ஷாப்பிங் பாதியிலேயே நின்றுவிட்ட கவலையில் அவர்கள் இருந்தனர்.

இரண்டு மணிநேர காத்திருப்பிற்கு பிறகு, நிஷாந்தினிக்கு நினைவு திரும்பியது. அவளின் அருகிலேயே உட்கார்ந்து இருந்த சித்தார்த் அவளை அப்படியே வாரியெடுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான். அவளும் சோர்வுடன் அவன் கைகளில் அடைக்கலமானாள்.

“உனக்கு ஒன்னும் ஆகல இல்ல சித்து” அவள் பதறி கேட்க, “இல்ல டி, நீ தான் என்னை ரொம்ப பயமுறுத்திட்ட, அந்த ஜனார்த்தனன விட அதிகமா” என்று சொல்ல அவள் மென்மையாய் புன்னகைத்தாள்.

மாலைவரை மருத்துவமனையில் அவளுடனே இருந்து, அழைத்து வந்து ஹாஸ்டலில் விட்டு விட்டு வந்தான். இப்போது நிஷாந்தினி முகம் சற்று தெளிந்து காணப்பட சித்துவுக்கும் நிம்மதியாக இருந்தது.

காருக்குள் அமர்ந்தவுடன் சித்து, மாரியை நேர் பார்வை பார்த்தான். “பாவம் பொண்ணை இழந்த துக்கத்துல அந்த ஜனார்த்தனன் இருக்கானேனு பாவம் பார்த்தது தப்பா போச்சு, என் நிஷாக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தா அவனை கொன்னுட்டு தான் மறுவேலை பார்த்திருப்பேன்” என்று ஆவேசமாக பேசினார்.

மாரிக்கு இந்த சித்து புதியவன். இவனை கொல்ல இருமுறை முயற்சி நடந்த போதுகூட, நேற்றுவரை அலட்டிக்கொள்ளாமல் இருந்தவன், இன்று காதலியின் கையில் உதிரத்தை பார்த்தவுடன் என்னம்மா குதிக்கிறான்.

ஒருத்தி மேல் கொண்ட நேசம் ஒருவனை எந்தளவு பாதிக்கிறது. நிஜம் தான், நிஷாவின் கையில் ஏற்பட்ட காயம் விஷம் தடவிய ஆயுதத்தால் ஏற்பட்டது என்று மருத்துவர் சொன்னதும் சித்துவின் தவிப்பையும் துடிப்பையும் அருகிருந்தே மாரி கவனித்து கொண்டு தானே இருந்தான்.

“அந்த ஜனார்த்தனனுக்கு ஸ்கெட்ச் போடு மாரி, இனி அவன் என் பக்கம் திரும்பி கூட பார்க்க கூடாது” சித்து முடிவாக சொல்ல, மாரி யோசனையுடன் தலையசைத்தான்.

நடந்ததை அறிந்து, சத்யவர்த்தினி தான் மிகவும் பதறிப் போனாள். தன் தம்பியை சூழ்ந்திருக்கும் இந்த கெடுவலை என்று அறுந்து போகுமோ அப்போது தான் நிம்மதி என்று இழந்து கொண்டிருந்த தைரியத்தை மனதில் சேகரித்து கொண்டிருந்தாள்.

சித்துவை பார்க்கும் வாய்ப்பு பூவிழிக்கு கிடைக்கவே இல்லை. வேறு வழியின்றி பாடிகார்ட் முன்பு, கைகளை பிசைந்தபடி வந்து நின்றாள்.

தனக்கு ஒதுக்கப்பட்ட அறை வாயிலில் நாற்காலியில் அமர்ந்தபடி மடிக்கணினியில் எதையோ அலசிக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து, கேள்வியாய் நெற்றி சுருக்கினான்.

‘ஏன் வாய திறந்து என்ன விசயம்னு கேட்டா இவன் வாயில இருக்க கொழுக்கட்டை எல்லாம் விழுந்து போயிடுமோ!’ என்று அவனை மனதிற்குள் கரித்து கொட்டியவள், “நிஷாவுக்கு இப்ப எப்படி இருக்கு? பயப்படுற மாதிரி ஒண்ணுல்ல இல்ல,” பரிதவிப்பாக வினவினாள்.

“இதை நீ அவங்க கிட்ட தான் கேட்கணும்” என்று விட்டத்தியாக பதில் தந்து விட்டு அவன் தன் வேலையைத் தொடர்ந்தான்.

“எனக்கு அவங்க ஃபோன் நம்பர் கூட தெரியாதே! அப்புறம் எப்படி கேக்கறதாம்?” அவள் முகம் சுருங்கி சொல்ல, மாரி மறுபடி தலை நிமிர்த்தி அவள் முகத்தை கவனித்தான்.

“அவங்களுக்கு பட்டது சின்ன காயம் தான், அதால பயப்பட ஒண்ணுல்ல. அவங்கள ஹாஸ்டல்ல விட்டுட்டு தான் இங்க வந்தோம். போதுமா, வேற ஏதாவது கேட்கணுமா?” அவன் வேகமாக பதில் தர, இவள் மலங்க மலங்க விழித்தாள்.

“என்ன?”

“ப்ச் எனக்கு வேலை இருக்கு, என்னை தொந்தரவு செய்யாம போறியா” என்று சொல்ல, பூவிழி அவனை முறைத்து விட்டு நகர்ந்தாள்.

அவளை கண்டு கொள்ளாமல் இவன் தன் கணினியோடு போராடிக் கொண்டிருந்தான். எந்த வகையில் ஜனார்த்தனனை லாக் செய்வது என்று மும்முரமாக திட்டம் வகுத்து கொண்டிருந்தான்.

 

எக்குத்தப்பா சிக்கிட்டேனோ? 9

‘ச்சே போயும் போயும் இந்த முரட்டு பீஸ் கிட்ட போய் கேட்டேன் பாரு, என் புத்திய சொல்லணும்’ பூவிழி நொந்தபடி படுக்கையில் உருண்டு படுத்தாள்.

இன்று அந்த பேரங்காடியில் நடந்தேறிய அனைத்தும் இப்போதும் அவள் நினைவில் மறையாமல் அவளை கலவரப்படுத்திக் கொண்டிருந்தது. பின் எப்படி அவளுக்கு தூக்கம் வரும். அதோடு அந்த பாடிகார்டிடம் தானே வலிய போய் பேசி மூக்கறுபட்டது வேறு அவளை கொதிநிலைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தது.

‘ஆமா, அவனுக்கும் எனக்கும் தான் ஆகாதில்ல! பின்ன எப்படி நானே வலிய போய் அந்த அரை லூசுகிட்ட பேசுன?’ அவள் தனக்கு தானே கேட்டு கொண்டாள்.

‘நிஷாவ பத்தி வேற யாருகிட்டயும் கேக்க முடியாது இல்ல அதான்!’ என்று பதிலையும் தானே சொல்லிக் கொண்டாள்.

ஆனால், இவள் கணித்த பதிலை தாண்டி வேறொரு காரணமும் இருந்தது. சரியான நேரத்தில் சித்தார்த்தை காப்பாற்றியது, நிஷாவை காப்பாற்ற உடனே அவளை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தது, பிரபாவும் கீர்த்தியும் மாறி மாறி அவனைப் பற்றி கூறியது, அவனது வீரம், போராட்ட குணம், கடமை தவறாமை இதெல்லாம் அவள் மனதில் அவன் மேலிருந்த வெறுப்பில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

முதல் மோதலிலேயே அவன் தனக்கு பிடிக்காதவன் என்ற முத்திரையை குத்தி தூர நிறுத்தி இருந்த அவனை பற்றிய நினைவுகள், இப்போது ஏற்பட்ட மாற்றத்தினால், அந்த முரட்டு காளையை இவள் மனதின் நெருக்கத்திற்கு கொண்டு வந்து சேர்ந்திருந்தது.

இதனை அறிந்து கொள்ள முடியாமல், தன் வாய் ஓயும் அளவு மாரியை வசைப்பாடி விட்டு உறங்கிப் போனாள்.

இங்கு மாரியோ, நெருங்க வரும் இரவு தூக்கத்தை விரட்டியபடி,

ஒரு தாளில் பல விதமான கோடுகளை போடுவதும் அழிப்பதுமாக இருந்தான். எதுவும் சரியாக அமையவில்லை. காகிதத்தை கசக்கி எறிந்து விட்டு கட்டிலில் வந்து விழுந்தான். அவன் யோசனை முழுவதும் ஜனார்த்தனன் மீதே மையமிட்டு இருந்தது.

தன் முரட்டு தனத்தால் தவறான வழிகளில் பயணப்பட்டு பணம் சேர்த்தவன் அந்த ஜனார்த்தனன், எல்லோரும் அவனை ஜனா என்றே அழைத்து பழக்கம், சில வருடங்களுக்கு முன்பு தான் அரசியலில் ஆர்வம் வர, இந்த ரவுடி தனத்தை தள்ளி வைத்திருந்தான்.

அதற்குள் அவன் மகள் அனுமதியின்றி காதல் திருமணம் செய்து கொண்டது, கொண்டவனாலேயே கொல்லப்பட்டது, அந்த ஜனாவை ஆத்திரத்தின் உச்சிக்கே இழுத்து வந்திருந்தது. அதன் வெளிப்பாடு தான், நரேனின் கொடூர மரணம்.

அவர்களுக்கு திருமணம் செய்து வைத்த ஒரே காரணத்திற்காக சித்தார்த்தை பழி வாங்க துடிக்கும் நியாயம் மாரிக்கு புரியவில்லை. அதனாலேயே ஜனா மகளின் கொலையில் ஒருவேளை சித்துவிற்கும் பங்கு இருக்குமோ என்ற ரீதியில் அலசி பார்த்தான்.

இல்லை, திருமணம் முடிந்து அவர்கள் வெளியூர் சென்று விட்டனர். அதன் பின்னர் அவர்கள் வாழ்வில் நடந்த எதற்கும் சித்தார்த்தை குற்றம் சாட்ட இயலாது. இது ஒரு முரட்டு தந்தையின் பிடிவாதமான பழிவாங்கும் குணம் என்று எண்ணிக் கொண்டான்.

மாரியின் எண்ணவோட்டத்தை அவன் அலைப்பேசியின்‌ சிணுங்கல் கலைக்க, எடுத்து காதில் ஒற்றினான்.

“தம்பி, நான் தான் தில்லை நாயகம் பேசறேன்”

“சொல்லுங்க தாத்தா”

“அங்க பெரிய பிரச்சனை ஆகிடுச்சே ப்பா, உங்க யாருக்கும் எதுவும் ஆகலையே” அவர் பதற்றமாக வினவ,

“யாருக்கும் எதுவும் ஆகல தாத்தா, நீங்க கவலைப்படாதீங்க” மாரி பொறுமையாக பதில் சொன்னான்.

“என்னப்பா, அவ்ளோ பேர் கூடியிருந்த இடத்தில பட்டப்பகல்ல கொலைப்பண்ண வராங்க, பூவு ரொம்ப பயந்துட்டாளா தம்பி?” அவர் பரிதவிப்பாய் கேட்க,

“இல்ல தாத்தா, அவங்க தைரியமா தான் இருக்காங்க, இப்ப தான் நிஷாவ பத்தி கேட்டுட்டு போனாங்க”

“அட நீ வேற பா, அந்த கழுதை சும்மா அப்படி காட்டிக்கும் அவ்ளோ தான், உள்ளுக்குள்ள சரியான பயந்தாங்கொள்ளி பா”

“உங்களுக்கு இன்னும் உங்க பேத்தி சின்ன குழந்தைன்னு நினப்பு போல” மாரி அவரிடம் சகஜமாக பேசலானான்.

“அதுக்கு ஏழு கழுத வயசாச்சே தவிர, புத்தி பத்து வயசுலயே வளராம இருக்கே! வளர்ந்த பொண்ணுன்னு விடவும் முடியல, குழந்தை பொண்ணுன்னு பக்கத்தில வச்சிக்கவும் முடியல” அவர் நொந்து சொல்ல,

“ஏன்? தாத்தா, உங்க பேத்திய வார்த்தைக்கு வார்த்தை கழுதை கழுதைன்னு சொல்றீங்க! அழகா பேர் சொல்லி கூப்பிடலாம் இல்ல” மாரி அதி முக்கியமான சந்தேகத்தை வினவினான்.

“நான் சொன்னாலும் சொல்லாம போனாலும் அவ கழுத தான் பா, என்னை என்னா பாடுபடுத்தி எடுத்தா தெரியுமா…?” என்று ஆரம்பித்தவர், பூவிழியின் வீர தீர பராக்கிரமங்களை எடுத்துக் கூறலானார்.

பரிட்சையில் மதிப்பெண் குறைவாக வாங்கியதற்காக பெரியவர் திட்டி வைக்க, அவரின் மூக்குக் கண்ணாடியை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்தது!

ஆட்டோ ஓட்டுநர்களிடம் வம்பு வளர்த்து தாத்தாவிடம் இரண்டு கம்படி வாங்கயதற்காக, அவரின் முகத்தை ஜோக்கர் போல வரைந்து எல்லா ஆட்டோ பின்னாலும் ஒட்டி வைத்தது!

துள்ளி ஓடிவந்து கீழ் வீட்டு சந்திரா பாட்டியின் மேலே எடாகூடமாய் விழுந்து அவர் காலை உடைத்து வைத்தது, அதற்கு இவர் மருத்துவ செலவு செய்தது!

கண்மண் தெரியாமல் ஓடிவந்து தண்ணீர் சுமந்து வந்த மாடி வீட்டு மாலா மீது மோதி விழுந்து உருண்டு, அவர் குடத்தை உரு தெரியாமல் ஆக்கியது!

‘வயசு பெண்’னென்று பெரியவர் வார்த்தைக்கு வார்த்தை சொல்லி கண்டித்தாலும், கார்டூன் சேனலை வைத்துக் கொண்டு பார்ப்பது!

பள்ளி குழந்தைகளோடு பாவாடையை ஏற்றி சொருகிக் கொண்டு நடு வீதியில், கோலி, நொண்டி பட்ட, கிட்டி புள்ள என்று விளையாடி ஆட்டம் போடுவது!

தில்லை நாயகம் விவரம் தெரிந்து கம்பெடுத்துக் கொண்டு விரட்டி வந்தால், அவருக்கு போக்கு காட்டி விட்டு எங்கேயாவது ஓடி ஒளிந்து கொள்வது! என்று பெரியவர் மேலும் சொல்லி கொண்டே போக, “போதும், போதும் தாத்தா!” என்று மாரி வாய்விட்டு சிரித்து கொண்டிருந்தான். அவர் சொல்ல சொல்ல முட்டி வந்த சிரிப்பை அவனால் அடக்க முடியவில்லை.

“அந்த கோக்கு மாக்கு கழுத கிட்ட இந்த கிழவன் படற பாட்டை சொன்னா உங்களுக்கு சிரிப்பா இருக்கா தம்பி?” பெரியவர் மேலும் அலுத்து கொள்ள,

“உங்க பேத்தி செஞ்ச குழந்தத்தனமான குறும்புகள எல்லாம் பொக்கிஷமா மனசுல பொத்தி வச்சிருக்கீங்களே, அங்க நிக்குது தாத்தா உங்களோட பாசம்!” மாரி உற்சாக குரலில் சொல்ல, இவரிடம் பெருமூச்சொன்று வெளிவந்தது.

“எங்க பூவை அவ அப்பனாத்தா வளர்த்து இருந்தா, இன்னும் கொஞ்சம் பொறுப்பா வளர்த்து இருப்பாங்களோ என்னவோ? இந்த கிழவன் வளர்த்ததால தான் இப்படி சண்டி கழுதையா வளர்ந்து நிக்கிறா, இவள பொண்ணு கேட்டு வர மாப்பிளங்களை தலைத்தெரிக்க ஓட வச்சுடுறா” அவர் கவலையாக சொன்னார்.

“தன்நலத்துக்காக பெத்த பொண்ணை விட்டு போன அவங்களோட, உங்களை தாழ்த்தி பேசாதீங்க தாத்தா! இப்படியும் பெத்தவங்க இருக்காங்க ப்ச்” மாரி வெறுப்பாக சொல்ல, “ஏங்க தம்பி, என் மகன், மருமகளை பத்தி கூட நீங்க விசாரிச்சு வச்சிருக்கீகளா?” என்று வியப்பாகவே கேட்டார்.

“வேறவழி, எங்க வேலையே எல்லாத்தையும் அடிவரைக்கும் தோண்டி துருவி அலசி எடுக்கறது தான தாத்தா” இவன் சின்ன சிரிப்போடு மொழிந்தான்.

“நிஜந்தான் தம்பி, ஒத்த புள்ளன்னு பெரிய படிப்பெல்லாம் படிக்க வச்சேன், அவன் நேசிச்ச பொண்ணையே மறுப்பு சொல்லாம கட்டி வச்சேன், வெளிநாட்டுல பதிமூணு வருசம் நல்லாத்தான் வாழ்ந்தாங்க, திடீர்னு விவாகரத்துன்னு வந்து நிப்பாங்களா! அதுவும் அவங்க பிரிஞ்சு போக சொன்னாங்க பாரு ஒரு காரணம் எனக்கு சீ போன்னு ஆயிடுச்சு தம்பி”

மாரி குறுக்கே பேசாமல் அவர் ஆதங்கத்தை கொட்டி தீர்க்கட்டும் என்று அமைதி காத்தான்.

“அதென்ன தம்பி? ஆ அபெக்ஷனாம்! பதினொரு வயசுல பெத்த பொண்ணு வளர்ந்து நிக்கும் போது,‌ என் உத்தமபுத்திரனுக்கு பொண்டாட்டிய விட்டு போட்டு வேற ஒருத்தி மேல ஆச வந்திருச்சாம், கண்றாவி, எவ்வளவோ பேசி பாத்தேன் ரெண்டும் கேக்கல, இதுல என் மருமக ஒருபடி மேல, உனக்கு ஒருத்தி கிடைக்கும் போது எனக்கு ஒருத்தன் கிடைக்க மாட்டானான்னு அடுத்த மாசமே அவ வேலை செஞ்ச கம்பனி முதலாளிய கட்டிகிடுச்சு!”

“பெத்தவங்க ரெண்டு பேரும் சேர்ந்து என் பேத்திய ஹாஸ்டல்ல விட போனாங்க பா, நான் ஒருத்தன் உசுரோட இருக்கும் போது, என் பேத்தி ஏன் எங்கியோ தனியா கஷ்டபடணும்! அதான் அவங்கள நாக்க புடுங்கற மாதிரி நாலு கேள்வி கேட்டுட்டு பூவ எங்கூட கூட்டியாந்துட்டேன்”

“இங்க வந்த புதுசுல எதிலயும் ஒட்டாம ஒதுங்கி ஒதுங்கி போச்சு தம்பி இந்த புள்ள! ஏதோ என்னால முடிஞ்சது ஓவியம் வரைய சொல்லி கொடுத்தேன், கற்பூரம் மாதிரி அதை மட்டும் பிடிச்சுகிட்டா! எப்பவும் ஏதாவது ஒண்ண வரைஞ்சிட்டே இருப்பா! போக போக அறுந்த வாலா ஊரு வம்பை எல்லாம் இழுத்துகிட்டு வருவாளா!”

“இந்த காலத்து புள்ளங்க மனச என்னால புரிஞ்சிக்க முடியாம டாக்டர் கிட்ட அழைச்சிட்டு போய் பார்த்தேன் தம்பி, அவங்க ஏதேதோ டெஸ்ட் எடுத்து, நிறைய கேள்வி எல்லாம் கேட்டுட்டு, ‘உங்க பேத்தியால தன் அம்மா, அப்பா செயலை ஏத்துக்க முடியல, அதனால ஏற்பட்ட மன அழுத்தத்தை ஈடு செய்ய தான், இதுமாதிரி குழந்தை தனமா நடந்துகிறாங்க, அவங்களுக்கு பிடிக்காத ஒண்ண மறக்க, பிடிச்ச எல்லாத்தையும் விளையாட்டா செய்றாங்க, இதுல பயப்பட ஒண்ணுமில்ல, அவங்கள முழுசா புரிஞ்சிகிட்ட நம்பிக்கையான துணை கிடைக்கும் போது எல்லாம் சரியா போயிடும்’னு அந்த டாக்டர் சொன்னாங்க, அப்படிப்பட்ட துணைய நான் எங்க போயி தேடறது?” என்று ஆயாச பெருமூச்சு விட்டவர், “இனிமே கடவுள் விட்ட வழி! வக்கிறேன் தம்பி, மனசு கேக்காம தான் உங்க போன் நம்பரை ஜெயலட்சுமி புள்ளகிட்ட கேட்டு வாங்கி பேசினேன்” என்று கைப்பேசி இணைப்பை துண்டித்தார்.

இப்போது மார்த்தாண்டனின் மனம் பூவிழியின் நிலையை அலச ஆரம்பித்து இருந்தது.

எப்போதும் தன்னை கண்டால் இறுகிய முகத்துடன் விலகி செல்பவள், இன்று தானாய் வந்து பேசியதின் காரணம் விளங்காமல் யோசிக்க, வேறொன்றும் அவன் நினைவில் வந்தது.

இன்று ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் பூவிழி, விழிகள் அகல விரித்து அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றிருந்த தோற்றம்!

சண்டை முடிந்த பின்னரும் கூட அதிர்ச்சி விலகாமல் அவள் அசைவற்று அப்படியே நின்றிருந்ததை அத்தனை கலேபரத்திலும் இவன் கவனிக்க தவறவில்லை சிறு இளநகை முகத்தில் விரிய, அப்படியே உறங்கியும் போனான்.

 

எக்குத்தப்பா சிக்கிட்டேனோ? 10

மாலை மயங்கும் வேளையில், கீர்த்தியும் பிரபாவும் பூவிழியோடு பங்களாவின் பின்பக்க தோட்டத்தில் கொட்டம் அடித்துக் கொண்டிருந்தனர்.

ஓவிய வகுப்பு முடிந்தவுடன், நேற்று போல் இன்றும் விளையாடலாம் என்று குழந்தைகள் அடம்பிடிக்க, மூவரும் இங்கு வந்து இந்நேரம் வரை விளையாடி தீர்த்து களைத்து, பூவிழி புல்வெளி தரையில் அப்படியே மல்லாந்து படுத்து விட, அதேபோல அவர்களும் படுத்து கொண்டனர்.

இந்த மாதிரி செய்வதெல்லாம் அந்த குழந்தைகளுக்கு புது அனுபவமாக இருந்தது. மேலும் இயற்கையோடு நெருக்கத்தையும் ஏற்படுத்தியது.

அவர்கள் பார்வையில், பல கிளைகளோடு அடர்த்தியாக வளர்ந்திருந்த மரம் அழகாக காட்சி அளித்தது. “எப்பா! எவ்ளோ பெரிய மரம்! லீவ்ஸ் எல்லாம் டார்க் கீரீனிஷா அழகா இருக்கு இல்ல” கீர்த்தி சிலாகித்து சொல்ல,

“ஆமா, ஸ்மெல் கூட சூப்பரா இருக்கு, அதோட பூவெல்லாம் குட்டி குட்டியா அழகா இருக்கு, ஆனா நம்மால அதுல ஏறி பறிக்க முடியாதே!” பிரபாவும் தன் பங்குக்கு பேசினான்.

“இது புன்னை மரம், இதெல்லாம் அவ்ளோ உயரம் இல்ல, யாரு வேணா இந்த மரத்தில ஏறலாம்” பூவிழி அலட்டலாய் பதில் தந்து மாட்டிக் கொண்டாள்.

“அப்ப நீ ஏறி போய் அதுல பூ பறிச்சுட்டு வா ஃபிளவர்” பிரபா அலட்டாமல் சொல்ல, பூவிழி திருதிருவென முழித்தாள். அவளுக்கு எப்போதும் உயரம் என்றால் கொஞ்சம் பயம்!

“புங்க மரத்தில அதோட பூ அவ்ளோ ஸ்பெஷல் இல்ல, இந்த மரத்தடியில வீசுற சுகந்தமான காத்து தான் செம்ம,

உங்க ஏசி காத்தை விட இது சூப்பரா இருக்கு இல்ல” அவள் பேச்சை மாற்ற முயற்சிக்க,

“பேச்சை வளர்க்காத பூவு, முதல்ல நீ மரத்துல ஏறி காட்டு, உன்ன பார்த்து நாங்களும் மரம் ஏற கத்துக்குவோம் இல்ல” இருவரும் சேர்ந்து வம்படியாக பிடிவாதம் பிடிக்க, வேறு வழியின்றி மரத்தில் தயங்கி தயங்கி கிளைகளை மாற்றி மாற்றி பற்றி கொண்டு ஏறினாள்.

“இன்னும் கொஞ்ச மேல ஏறி போ”

“இன்னும் மேல ஃபிளவர்”

இவர்கள் இப்படி சொல்ல சொல்ல குருட்டு தைரியத்தில் நான்கைந்து கிளைகள் தாண்டி மேலே ஏறியவளின் சுடிதார் எதிலோ மாட்டி கிழிந்தது.

“அச்சோ, ஏய் உங்களால என் துணி கிழிஞ்சு போச்சு டா” என்று ஆத்திரமாக கீழே குனிந்தவளுக்கு உலகம் தட்டாமலை சுற்றியது. கிளையை அணைத்து பிடித்துக் கொண்டு அப்படியே நின்று விட்டாள்.

வெளியே சத்யவர்த்தினியின் கார் வரும் ஓசை கேட்க, “அச்சோ, மாம் வந்துட்டாங்க, பாய் பூவு, டாடா ஃபிளவர்” இரு வாண்டுகளும் பிய்த்துக் கொண்டு ஓடி விட்டனர்.

“ஏஏய், நில்லுங்கடா, எனக்கு பயமா இருக்கு” இவள் பதறி அழைக்க, அதற்குள் குழந்தைகள் காணாமல் போயிருந்தனர்.

‘ஓ மை கடவுளே, இதென்ன புது சோதனை, ஏடாகூடமா வந்து இப்படி மாட்டிக்கிட்டு முழிக்கிறேனே!’

‘உனக்கு நல்லா வேணும் பூவு, அந்த குட்டி சாத்தானுங்க சொல்லுச்சுன்னா, உனக்கு எங்க‌ போச்சு புத்தி!’

‘ஃபோன் கூட கீழ வச்சுட்டேனே, இப்ப எப்படி கீழ இறங்கறது?’ வழக்கம் போல இவள் புலம்ப தொடங்க, வானம் மெல்ல கருமை நிறம் பூசிக் கொண்டது.

இவள் பயத்தில் இன்னும் இறுக்கமாக கிளையை பிடித்துக் கொண்டு, ‘யாராவது உதவ வர வேண்டுமே’ என்று முணுமுணுத்து கொண்டிருந்தாள்.

அவள் கைகளில் வலி எடுக்க, உடல் சோர்ந்து போகும் நேரம் அவள் கைப்பேசி ரீங்காரம்மிட்டது.

‘ஷில்லல்லா ஷில்லல்லா ரெண்டை வால் வெண்ணிலா, என்னைப் போல் சுட்டி பெண் இந்த பூமியிலா…’ அந்த பாடலில் இவள் நொந்து போக, சற்று தூரத்தில் சென்று கொண்டிருந்தவன் செவிகளில் இப்பாடல் கேட்க, யோசனையோடு இந்த திசை நோக்கி வந்தான்.

இருளும் பகலும் கைக்கோர்த்து நின்ற அந்த மங்கிய வெளிச்சத்தில் கீழே கைக்குட்டையோடு வைக்கப்பட்டிருந்த அலைப்பேசி அவன் கண்ணில் பட்டது. யோசனையோடு சுற்றும் முற்றும் பார்வையால் தேடலானான்.

“கீழ் இல்ல, மேல பாரு” பூவிழி குரல் கேட்டு நிமிர்ந்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது. அவள் நின்றிருந்த நிலை அப்படி.

“ஏய், பூவிழி மேல என்ன செய்ற?”

“ம்ம் மாங்கா பறிக்கிறேன்!”

“நிஜமாவா! எப்ப இருந்து புங்க மரத்தில மாங்கா காய்க்க ஆரம்பிச்சது?” இவனும் அவளுடன் வம்படிக்க ஆரம்பித்தான். ஏனோ இப்போது அவள் ஓவிய ஆசியரியையாக, வளர்ந்த பெண்ணாக தெரியவில்லை அவன் பார்வைக்கு, குறும்புகளின் தோழியாக, சேட்டைகளின் இளவரிசியாக தான் எண்ண முடிந்தது.

ஆனால் அவனிடம் வம்பு வளர்க்கும் நிலையில் தான் அவள் இல்லையே! “பாடிகார்ட் என்னை கீழ இறக்கி விடு, கை ரொம்ப வலிக்குது” என்று முகம் சுருங்கி யாசித்தாள்.

இப்போது அவனிடம் வீம்பு பார்க்க முடியாதே!

“இறங்க தெரியாம எதுக்கு மரத்தில ஏறின?” என்று கேட்டபடியே அருகில் வந்தான்.

“எல்லாம் அந்த கீர்த்து, பிரபா சொல்பேச்சு கேட்டுத்தான்” என்றவள், “நான் இங்கிருந்து குதிக்கவா? நீ என்னை கீழ விழாம பிடிச்சுப்பியா?” என்றாள்.

“ஏன்? உன் கைகால் நல்லா இருக்கணும்னு ஆச இல்லயா? மெதுவா கிளைய பிடிச்சு கீழ இறங்கி வா, நான் கைபிடிச்சு உன்ன இறக்கி விடுறேன்” என்று அவன் சொல்ல,

“இங்கிருந்து என்னை கேட்ச் கூட பிடிக்க தெரியாதா? என்ன பாடிகார்ட் நீ!” அவனை குறை சொன்ன படி மெதுவாக இறங்கினாள்.

“சினிமா பாத்து ஓவர் இமேஜினேஷன்ல இருக்க போல, கை கொடு” என்று கையை நீட்ட, இவன் கரத்தை பிடிக்க முயன்றவள், நிலைதடுமாறி மொத்தமாக இவன்மீதே சரிந்து விழுந்தாள்.

மாரி அவளை பிடித்து கொண்டு, தானும் கீழே விழாமல் சமாளித்து நின்றான். “நான் என்ன சொன்ன? நீ மொத்தமா என்மேல வந்து விழற?”என்று கண்டிக்க, அவள் அவன் கைப்பிடியில் சங்கடமாக நெளிந்தாள். அவளை கீழே விட்டு தன் கரத்தை விலக்கிய போது தான் அவனாலும் உணர முடிந்தது, அவள் வெற்றிடையின் மென்மையை! அவள் இடைப் பகுதியில் சுடிதார் சற்று கிழிந்து இருந்ததையும் கவனித்தான்.

அவன் பார்வை சென்ற திக்கில் கிழிச்சலை தன் கையால் மறைத்து நின்றாள். “உன் துப்பட்டாவை எடுத்து விரிச்சு போட்டுக்கோ” என்று சொன்னவன், “தேவையா உனக்கு இந்த வேண்டாத வேலை?” என்று கண்டிக்கவும் செய்தான்.

“கிளையில மாட்டி அது கிழிஞ்சதுக்கு நான் என்ன செய்ய! நீ பண்ண ஹெல்ப்க்கு தேங்க்ஸ், போ போ!” பூவிழி அவனை விரட்ட, மாரி அவளை காட்டமாக முறைத்து வைத்தான்.

“டிவில கார்டூன் மட்டும் தான் பார்ப்பியா! இல்ல நியூஸ் எல்லாம் பார்க்கிற பழக்கம் இருக்கா?” மாரி கேட்க,

“நியூஸ் கூட தான் பார்ப்பேன், இப்ப அதுக்கு என்ன?” பூவிழி காரணம் விளங்காமல் வினவினாள்.

“அப்ப, தனியா இருக்கற பெண்களுக்கு  சரியான பாதுகாப்பு இல்லன்னு உனக்கு தெரிஞ்சு இருக்கும்…” மாரி முடிக்காமல் இழுத்தான்.

“நான் ஒண்ணும் இங்க தனியா இல்ல, என்னை சுத்தி நிறைய பேர் இருக்காங்க, அதால எனக்கு பயம் இல்ல” பூவிழி அழுத்தி சொன்னாள்.

“இல்ல பூவிழி, நம்ம கூட சிரிச்சு பேசுற எல்லாருமே நல்லவங்களா தான் இருப்பாங்கன்னு நம்ப கூடாது. அது முட்டாள்தனம், சூழ்நிலை மாறும் போது மனிசங்களும் மாறிட்டே இருப்பாங்க இங்க” மாரி பொறுமையாக எடுத்து சொல்ல, பதிலின்றி பூவிழி மௌனமானாள்.

“சரி வா, உன்ன உன் ரூம்ல விட்டுட்டு போறேன்” என்று அவன் அழைக்க, “எனக்கு எந்த பயமும் இல்ல, என்கிட்ட அவ்ளோ சீக்கிரம் யாராலும் வாலாட்ட முடியாது, நான் தனியாவே போயிடுவேன்” என்று முன்னால் நடந்தாள்.

“உன்ன தனியா அனுப்ப எனக்கு பயமா இருக்கே!” என்று சின்ன சிரிப்போடு அவளுடன் நடந்தான் இவன்.

பூவிழி, மாரியின் முகத்தை விசித்திரமாய் பார்த்து கொண்டு நடந்தாள். ‘என்னடா அதிசயம், இந்த சிடுமூஞ்சி இன்னிக்கு சிரிக்குது, அதுக்கும் மேல என்கிட்ட நல்லதனமா வேற பேசுது! என்னவா இருக்கும்?’ என்றெண்ணியபடியே நடந்தவள், சட்டென நின்று விட்டாள்.

பூவிழி இதுவரையில் பகற் பொழுதில் மட்டும் தான் இந்த பக்கம் வந்து பழக்கம். இப்போது எங்கும் நன்றாக இருள் பரவி இருந்தது. பங்களாவின் முன் பக்கம் இருந்த அளவு பின்புறம் விளக்குகள் வைக்கப்படவில்லை. எத்தனை வேகமாக நடந்தாலும் இவளின் அறையை அடைய குறைந்தது பதினைந்து நிமிடங்களாவது ஆகும். தனியே வந்திருந்தால் இவள் நிச்சயம் பயந்து நடுங்கி போய் இருப்பாள்.

“என்னாச்சு பூவிழி, ஏன் நின்னுட்ட?” மாரி கேட்க, இவள் வெளிறிய முகத்துடன், “எனக்கு இருட்டுனா ரொம்ப பயம், ஏன் இங்க லைட் போடாம விட்டிருக்காங்க?” வினவினாள்.

“நாளைக்கு இங்க பார்ட்டி இருக்கு இல்ல, அதுக்கு அலங்காரம் செய்ற வேலை நடக்குது, சத்யா மேடம்கு டவுட் வரகூடாதுன்னு இங்க கரெண்ட் லைன் கட்பண்ணி விட்டிருக்காங்க” என்று விளக்கம் தந்தவன், “பயமா இருந்தா என் கைய பிடிச்சுக்கோ, பயம் போயிடும்” என்று வலது கையை அவள் முன் நீட்டினான்.

பூவிழியின் மனம் நெகிழ்ந்து போனது. மறுப்பு சொல்லாமல் அவன் கையை பிடித்துக் கொண்டாள். அவளுக்குள் பயம் வந்து நடுங்கிய எத்தனையோ சமையங்களில் அவள் பெண் மனம் இப்படி ஒரு ஆதரவான கரம் பிடித்துக் கொள்ள, யாசித்து ஏமாந்து போயிருக்கின்றது. இப்போது இவள் யாசிக்கும் முன்பே அவன் கை தன்னை நோக்கி நீண்டு வந்தது, தனக்காகவே.

“ஏய் வாயாடி, என்ன ரொம்ப அமைதியா வர!”

“ஆமா, நான் ஏன் இவ்ளோ அமைதியா வரேன்?” அவள் தன்னையே கேட்டு கொள்ள, மாரி சிரித்து விட்டான்.

“எதுக்கு இப்ப, இந்த சிரிப்பு? உன் உள்ளங்கை ஏன் இப்படி பாராங்கல்லு மாதிரி இருக்கு, எப்பா!” என்று வம்பிழுக்க தொடங்கினாள்.

“நான் ஒரடி விட்டா, வாங்கினவன் திரும்பி எழவே கூடாது, அதுக்கு கை இப்படித்தான் வச்சிருக்கணும் பூவிழி” என்றவன் அவள் கரத்தை மென்மையாக பிடித்துக் கொண்டான்.

அவளுக்கு புது அனுபவமாய் இருந்தது. அவன் முரட்டு முகம் காட்டும் இளநகை, அழுத்தமாய் பேசும் அவன் வார்த்தைகளில் இன்று புதிதாக தெரியும் கணிவு, பாறையின் கடினம் கொண்ட அவன் கரத்தின் மென்மையான பரிசம்… அவளுக்குள் ஏதோ இனம்புரியாத குறுகுறுப்பை ஏற்படுத்தியது.

எல்லாவற்றிற்கும் மேலாக அவனின் ‘பூவிழி’ என்ற அழைப்பு, அவள் இதய கூட்டிற்குள் தித்தித்தது.  அவள் அறை வாயிலில் அவளை விட்டு விட்டு சிறு தலையசைப்புடன் அவன் சென்று விட்டான்.

‘பரவாயில்லயே, இந்த கருங்கல்லுக்குள்ள கூட கொஞ்சூண்டு ஈரம் கசியும் போல’ என்று எண்ணி சிரித்து கொண்டாள்.

 

எக்குத்தப்பா சிக்கிட்டேனோ? 11

சித்தார்த் காலையிலேயே, “சத்யா க்கா, எனக்கு ஃபீவர் வந்திருக்கும் போல, ரொம்ப டயார்டா இருக்கு, இன்னைக்கு எனக்காக நீ மாம்ஸ் கூட ஆஃபிஸ் போறியா, ப்ளீஸ்” என்று சோர்ந்த குரலில் கேட்க, தம்பியை மேலும் கீழுமாய் நம்பாத பார்வை பார்த்துவிட்டு சத்யவர்த்தினி, ராம்குமாருடன் சென்று விட்டாள்.

அவர்கள் சென்றது தான் தாமதம், சித்து போர்வையை விலக்கிவிட்டு துள்ளி எழுந்து, இரவு பார்ட்டிக்கான ஏற்பாடுகளை விரைவாக செய்ய ஆட்களை ஏவிக் கொண்டிருந்தான்.

அன்று முழுவதும் அந்த பங்களாவில் இருந்த வேலையாட்களுக்கு முதுகு நிமிர்ந்து விட்டது. அதன் விளைவாக மாலை மங்கும் நேரத்தில் அந்த பங்களா அரண்மனை போல அத்தனை அலங்கார ஒளிவிளக்குகளில் பிரமாண்ட பேரழகாய் காட்சி அளித்தது.

அதனை பார்த்தப்படியே சத்யவர்த்தினியும் ராம்குமாரும் காரிலிருந்து இறங்கினர். சித்து வாசலிலேயே நின்று, “ஹேப்பி வெண்டிங் ஆன்வர்சரி க்கா, மாம்ஸ்” என்று இருவரையும் கட்டியணைத்து வாழ்த்து சொன்னான்.

“காலையில நீ அவ்வளவு ஆக்டிங் பண்ணும்போதே தெரியும் டா எனக்கு, இப்படி ஏதாவது பிளான் பண்ணி வச்சிருப்பன்னு” என்று சத்யா சொல்ல, சித்தார்த் அசராமல் சிரித்து வைத்தான்.

“அம்மா, அப்பா இங்க இல்லாத நேரத்தில இவ்வளவு பெரிய செலபிரேஷன் எல்லாம் தேவையா?” சத்யா தயக்கமாக கேட்க,

“நீ இப்படி ஏதாவது மறுப்பு சொல்லுவன்னு தெரிஞ்சு தான் உங்கிட்ட இந்த விசயத்தை நான் சொல்லாம மறைச்சேன், மாம்,‌ டேட் கிட்ட பேசிட்டேன், அவங்களுக்கும் சந்தோசம் தான், போதுமா!” சித்து புருவ தூக்கலுடன் பதில் தந்தவன், இருவருக்கும் புத்தாடை பரிசளித்து சீக்கிரம் தயாராகி வருமாறு துரிதப்படுத்தினான்.

சற்றுநேரத்தில் சத்யாவும் ராமும் தயாராகி, மிளிர்ந்த புன்னகையுடன் இறங்கி வர, அலங்காரத்திலும் வெட்க சிரிப்பிலும் புதுமண தம்பதிகளாகவே தோன்றினர்.

சித்து, ராம்குமாரை கட்டியணைத்து, “யூ ஆர் கிரேட் மாம்ஸ்” என்க. “என்ன சித்து? நான் அப்படி என்ன பெருசா பண்ணிட்டேன்?” என்று புரியாமல் கேட்க,

“வெற்றிகரமா பத்து வருசம் சத்யா கூட வாழ்க்கையை ஓட்டி இருக்கீங்களே! இது பெரிய சாதனை இல்லயா!” சித்து கிண்டலாக சொல்லி, அக்காவிடம் இரண்டு அடிகளை வாங்கி கொண்டு தப்பித்து ஓடினான்.

விருந்தினர்கள் வருகை ஆரம்பமாக, அந்த பங்களாவில் பெரிய கூடத்தில் விழா கொண்டாட்டமாக களைக்கட்டியது.

சத்யவர்த்தினி, ராம்குமார் தம்பதிகளின் பத்து வருட திருமண நாள் நிறைவு விழா அங்கே கோலாகலமாக அரங்கேறிக் கொண்டிருக்க, விழாவின் நாயகி, நாயகனும் கூடத்தின் நடுவே பெரிய அலங்கார கேக்கை கரகோஷத்துடன் வெட்டி, ஒருவருக்கு ஒருவர் ஊட்டி ஆனந்த பூரிப்பில் அணைத்துக் கொண்டு தங்கள் மணவாழ்வின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கீர்த்தி, பிரபாகர், சித்துவுக்கும் கேக்கை ஊட்டிவிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

மற்றும் நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் வாழ்த்துக்களோடு பரிசு தந்து பாராட்ட, தம்பதிகளுக்கு தங்கள் திருமண நாள் வரவேற்பு கண்முன் வந்து வெட்கத்தை வரவழைத்தது.

பூவிழி வியப்போடு அந்த கொண்டாட்டங்களை பார்த்து கொண்டிருந்தாள். நேற்றுவரை வெறிச்சோடி இருந்த கூடம், இப்போது வெறும் மனித தலைகளாகவே தெரிந்தது. அவர்களின் ஆடை, அணிகலன்கள் வந்திருந்தவர்கள் எல்லோரும் பெரும் செல்வந்தர்கள் என காட்டியது.

வஞ்சனை இன்றி ஆண், பெண் பாகுபாடு இன்றி அனைவருக்கும் மது கோப்பைகள் பரிமாறப்பட்டன. ‘அப்படி என்ன இருக்கும் அதுல, நானும் ஒருமுறை அடிச்சு பார்த்தா என்ன?’ என்று ஆர்வமிகுதியில் அவள் மனம் வினவ, அங்கே மிதமாய் பரவிய மதுவகைகளின் நெடி அவளை முகம் சுளிக்க செய்தது. வேகமாய் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

மறுபுறம், இனிய மெல்லிசை கசிந்து கொண்டிருக்க, அதற்கேற்றாற் போல் மிதமான அசைவுகளில் சில ஜோடிகள் ஆடிக் கொண்டிருந்தனர். சத்யா, ராமின் நடனம் அங்கே பிரதானமாக அரங்கேறிக் கொண்டிருக்க, அவர்களை சுற்றிலும் மற்ற ஜோடிகள் தாளம் தப்பாமல் ஆடிக் கொண்டிருந்தனர்.

அங்கு சித்தார்த்தும் ஒருத்தியோடு உல்லாசமாக ஆடிக்கோண்டிருக்க, பூவிழி யின் மனம் சுணங்கியது. ‘இவன் என்ன? நிஷாவ விட்டுட்டு கண்ட பொண்ணுங்களோட ஆடிட்டு இருக்கான்!’ என்று அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வேறுபெண்ணை மாற்றி அவளுடன் கைகோர்த்து ஆட ஆரம்பித்தான்.

‘அடாபாவி! அங்க உனக்காக நிஷா ரத்த காயம்பட்டு இருக்கா, இங்க நீ நிமிசத்துக்கு ஒருத்தியோட டேன்ஸ்‌ ஆடுறியா! இது சரியில்லையே! இருங்க சித்து சார், உங்களுக்கு நான் வக்கிறேன் ஆப்பு’ என்று அவன் கொண்டாட்டத்தை எல்லாம் தன் அலைப்பேசியில் நகல் எடுத்துக் கொண்டாள்.

“ஹேய், கியூட் பேபி கம் ஆன் லெட்ஸ்‌ டேன்ஸ்” என்று எதிரில் வந்து கேட்டவனை, “சாரி” என்று மறுத்துவிட்டு பூவிழி தன் கைப்பேசியை ஆர்வமாக ஆராய்ந்தாள்.

“ஹே, என்னை நல்லா ஒருமுறை பார்த்துட்டு சொல்லு” அவன் நகராமல் வாய் வளர்க்க, பூவிழி நிமிர்ந்து அவனை மேலும் கீழுமாக பார்த்து வைத்தாள். பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக, டிப்டாப்பாக தான் இருந்தான். ஆனாலும் நாற்பதை தொட்டிருந்த அவன் வயதை அத்தனை சுலபமாக அவனால் மறைக்க முடியவில்லை.

“சாரி, நான் வரல” என்று நகர போக, அவன் அவளை மறித்து நின்றான்.

“ஹே இவ்ளோ பிகு பண்ற அளவுக்கு உன்கிட்ட கெபாசிட்டி கிடையாது”என்றவன் அவள் கைப்பற்றி இழுக்க, பூவிழி கடுப்பாகி போனாள்.

அவனை பார்த்து இளித்துக் கொண்டே தன் கையை உருவிக் கொண்டவள், “ஏய் சிம்பான்ஸி, நீ என்னடா என் கெபாசிட்டி பத்தி பேசறது?” அவள் முகம் மாறாமல் அவனை கிழிக்க தொடங்க, அவன் முகத்தில் சிவப்பேறியது.

“ஏய், என்னை என்ன சொன்ன!”

“உண்மைய சொன்னேன்டா, மக்கு மந்தாரம், நான் தான் வரலன்னு சொன்னே இல்ல, மூடிட்டு போக வேண்டியது தான, இங்க என்னவோ என்னை விட்டா வேற பொண்ணுங்களே இல்லாத மாதிரி, என் வாய்ல விழற, உன் வயசுக்கேத்த மரியாதைய நீ தான் டா காப்பாத்திக்கணும், இப்ப தேவையா உனக்கு இதெல்லாம்…” பூவிழி முகம் மாறாமல் குரல் உயர்த்தாமல் அவனை நார்நாராய் கிழித்து தொங்கவிட, இவனுக்கு ஏறிய போதையெல்லாம் இறங்கி விட, அவளை முறைத்தபடி நெறுங்கினான்.

பூவிழி தயங்கி பின்னால் நகர, அவன் தோளை யாரோ பிடித்து பின்னால் இழுக்க, கோபமாக திரும்பியவன் முகம் சட்டென புன்னகை பூசிக் கொண்டது.

“ஹே மாரி, எப்படி இருக்க மேன், உன்ன பார்த்து ரொம்ப நாளாச்சு” அவன் இயல்பாய் பேச்சு கொடுக்க, மாரியும் சின்ன சிரிப்போடு, “குட் சர், நான் எப்பவும் போல தான் இருக்கேன், நீங்க தான் ரொம்ப பிசி போல” என்றவன், “உங்க வொய்ப் ரொம்ப நேரமா உங்கள தேடிட்டு இருக்காங்க” மேலும் தகவல் சொன்னான்.

“ஓ ஓகே, பட் இந்த பொண்ணு யாரு கொஞ்சம் கூட டீசன்ஸியே தெரியில” அவன் பூவிழியை பார்த்து கேட்க, “நான் பார்த்துக்கிறேன் சார்” என்று அவன் செல்லும் படி கை காட்டி விட்டு, இவள் அருகே வந்தான்.

அவள் முகம் புசுபுசுவென்று ஊதிக் கொண்டிருந்தது. “எனக்கு டீஸன்ஸி தெரியலன்னு, அந்த கேடுகெட்ட நாய் உளரிட்டு போகுது, நீ என்னன்னா அது கிட்ட இளிச்சுட்டு நிக்கற?” இவள் காட்டமாக குரலை உயர்த்த, தன் வாய்மேல் விரல் வைத்து “ஷு” என்றவன், அவளை இழுத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

“டென்ஷன் ஆகாத பூவிழி, இங்க இதெல்லாம் சகஜம்” அவன் சொல்ல, இவள், “மண்ணாங்கட்டி” என்று சிடுசிடுத்தாள்.

“எப்பா, அம்மணி கொதிநிலையில இருக்கீங்க போல, ஏதாவது சாப்பிட்டீங்களா? இல்லையா?” என்று கேட்க, “இல்ல, எல்லாரும் பிசியாவே இருக்காங்க, ஜெயாக்கா கூட இன்னிக்கு வரல, இந்த கீர்த்து, பிரபா அவங்க கேங் வந்ததும் என்னை கண்டுக்கவே இல்ல, செம போர் பா இன்னிக்கு” என்று பட்டியல் வாசித்தப்படி சிணுங்கினாள்.

மாரியின் முகம் புன்னகையில் விரிய, “சரி, என்கூட சாப்பிட வரையா?” கேட்க, அவள் உற்சாகமாய் தலையசைத்தாள்.

பங்களா முன்புற கார்டனில் புல்வெளி தரைப்பரப்பில், வண்ண விளக்குகளின் பேரொளியில், பஃவே முறையில் விருந்து நடைப்பெற்று கொண்டிருந்தது.

இருவரும் தங்களுக்கான உணவை எடுத்துக் கொண்டு, இருவர் அமரக்கூடிய நாற்காலி, மேசையில் அமர்ந்தனர்.

மார்த்தாண்டன் அசைவ பிரியன், அவன் தட்டில் அசைவ உணவு நிறைந்து இருக்க, பூவிழி தட்டில் சைவம் மட்டுமே இருந்தது.

“பூவிழி நான்வெஜ் எடுத்துக்கல?”

“இல்ல, எனக்கு பிடிக்காது, நான் எப்பவும் வெஜ் தான்”

“ஏன்?”

“ஏன்னா! ருசிக்காக ஒரு உயிரை கொன்னு சாப்பிடறதுல, எனக்கு உடன்பாடில்ல” என்றவளை நம்பாத பார்வை பார்த்து வைத்தான் மாரி.

“அது வந்து, நான் சிக்கன் சாப்பிட்டா, நைட்ல அந்த கோழி குஞ்சு என் கனவுல வந்திடும், நான் பயந்துடுவேன், அதான்…” அவள் இழுக்க, இவன் வாய்விட்டு சத்தமாகவே சிரித்து விட்டான்.

“இளிச்சது போதும், ஒழுங்கா சாப்பிடு” என்று இவள் உணவில் கவனமானாள்.

சாப்பிட்டு முடியும்வரை மாரியின் புன்னகை வாடவே இல்லை. எப்போதும் கடுகடுத்த அவன் முகம் இப்போது புன்னகை மாறாமல் இருப்பது அவளுக்கும் பிடித்திருந்தது.

ஒவ்வொரு வாய் உணவுக்கும் ஒன்பது கதைகள் பேசினாள் அவள். இவனும் அவள் பேச்சில் கலந்து கொள்ள முயன்றான். ஆம், முயன்றான் தான் அவள் தான் இவனை பேசவே விடவில்லையே.

உணவு முடிந்து இருவரும் வர இப்போதும் கொண்டாட்டம் குறையாமல் இருந்தது. “இதெல்லாம் முடிய இன்னும் லேட் ஆகும் பூவிழி, நீ போய் தூங்கு” மாரி சொல்ல அவள் தயங்கி நின்றாள்.

“என்னாச்சு, பார்ட்டிய இன்னும் கொஞ்ச நேரம் பாக்கணுமா?” சிறு குழந்தையிடம் கேட்பது போல அவன் கேட்க, இவள் இல்லையென்று இடவலமாக தலையசைத்தாள்.

“பின்ன, தூக்கம் வரலயா?”

“அய்யோ, எனக்கு கண்ணு சொக்குது பாடிகார்ட், இப்பவே பதினொரு மணி ஆச்சு, நீ ரூம் வரைக்கும் என்கூட வா! எனக்கு தனியா போக பிடிக்கல” என்றவளை நெற்றி சுருக்கி அவன் பார்க்க, “ப்ளீஸ்” என்று சிணுங்கினாள்.

மாரி தெறித்த இளநகையோடு அவளுடன் நடந்தான். இவனுக்கு அவளோடு கடக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு புதுவித அனுபவமாய் இருந்தது.

இவன் கல்லூரி தோழிகள் முதல் அங்கங்கே ஏற்பட்ட நட்பின் காரணமாக கிடைக்கப்பெற்ற பெண்களுடனும் இயல்பாகவே பேசி பழகி இருக்கிறான். ஆனால், இப்படி குழந்தைத்தனங்கள் நிறைந்த பெண்ணை அவன் கற்பனை செய்து கூட பார்த்தது இல்லை.

பேச்சில் மட்டும் அல்ல பார்வைக்கும் அவள் சின்ன பெண் போல தான் தெரிந்தாள். அவன் தோள்பட்டை அளவே உயரம் இருந்தாள். அவனிடம் ஒவ்வொரு முறை பேசும் போதும் தலையை உயர்த்தி உயர்த்தி அவன்முகம் பார்த்து பேசினாள்.

“உனக்கு கழுத்து வலிக்க போகுது பூவிழி, பத்து நிமிசத்துல கடக்கற தூரத்துக்கு இவ்ளோ பேசணுமா? நீ” அவன் அக்கறையாக கண்டிக்க இவள் கண்கள் மின்னின.

அவன் முன்னால் வந்து பின்னால் அடிவைத்து நடந்தபடியே, “நீ எதுக்கு என்னை பூவிழின்னு கூப்பிடுற!” அவள் உற்சாகமாய் கேட்க,

“எதுக்குன்னா! அதான உன்னோட பேரு” என்றான்.

“ம்ம் ஆனா எல்லாரும் என்னை அப்படி கூப்பிட மாட்டாங்களே! எங்க ஸ்கூல்ல அட்டர்னன்ஸ் எடுக்கும் போது மட்டும் தான் அப்படி கூப்பிடுவாங்க, மத்தவங்க எல்லாரும் என்னை பூவுன்னு தான் கூப்பிடுவாங்க, இப்ப தான் பிரபாவும், சித்து சாரும் ஃப்ளவர்னு கூப்பிடுறாங்க, அப்புறம் என் தாத்தா!”என்று இழுத்து நீட்டி சொல்லிக்கொண்டே போனவள் சட்டென நிறுத்தினாள்.

“ம்ம் அப்புறம் உன் தாத்தா உன்ன கழுதன்னு கூப்பிடுவாரு, அப்படித்தான!” மாரி சொல்ல, “ஆமா, இது உனக்கு எப்படி தெரியும்?” அவள் குழப்பமாக கேட்க, “ம்ம் நேத்து தான் பிபிசி நியூஸ்ல சொன்னாங்க” என்றான்.

“சும்மா வாராத தண்டம், நியூஸ்ல எல்லாம் இதை சொல்ல மாட்டாங்க” அவள் அறிவாளியாக சொல்ல, “ஏய், நான் உனக்கு தண்டமா?” என்று முறைப்பாய் கேட்டான்.

“பின்ன, அதுதான உன் பேரு” என்று சொல்லி சிரிப்பவளை என்னவென்று இவன் கடிந்து கொள்ள, இப்போது அவனுக்கு ஏதோ தோன்றிவிட அதை கேட்டும் விட்டான்.

“உன்னோட நிஜமான பேர் என்ன? பூவிழி” அவள் முகம் வெளுத்தது. சட்டென நின்று விட்டாள்.

 

எக்குத்தப்பா சிக்கிட்டேனோ 12

“பூவிழி தான் என் பேரு!” என்று அழுத்தமாக சொன்னாள் அவள்.

“அதுக்கும் முன்ன உனக்கு வேற பேரு வச்சிருந்தாங்க இல்ல, உன் அம்மா, அப்பா!” மாரி இதமாகவே கேட்டான்.

இதை கேட்க அவசியம் இல்லை தான் இருந்தாலும் கேட்டு விட்டான். இப்போது பின்வாங்குவது சரியில்லை என்று தோன்றியது அவனுக்கு.

பூவிழி, “எனக்கு அப்படி யாரும் கிடையாது” என்றாள் பிடிவாதமாய்.

“இல்லடா அவங்க உன்ன!”

“தூக்கி வீசிட்டு போயிட்டாங்க, பிறந்த சிசுவ வீசிட்டு போற காலம் போய், வளர்ந்து நின்ன என்னை வீசிட்டு போயிட்டாங்க” அவள் கலங்கி அங்கேயே அமர்ந்து விட்டாள்.

இதுவரை அவளிடம் யாரும் இப்படி கேட்டது இல்லை. கேட்டவர்களிடமும் இவள் நின்று பதில் சொன்னது கிடையாது. இதுவரை அவர்களை பற்றிய கேள்விகளுக்கு இவள் பதில் ஒன்றே தான், ‘அவங்க செத்து போயிட்டாங்க’ எந்த கலக்கமும் இன்றி தெளிவாக சொல்லி விட்டு நகர்ந்து விடுவாள்.

இவனிடமும் அதே பதிலைத் தான் சொல்ல வாயெடுத்தாள், ஆனால் அவளின் ஆழ்மனக் குமுறல் எப்படியோ வெளியே வந்து விட்டது.

மாரி, “சாரி பூவிழி, நான் எதார்த்தமா கேக்க போய் தப்பாயிடுச்சு போல, எழுந்து வா போலாம்” என்றான்.

இடவலமாய் தலையசைத்து மறுத்தவள், “யாரோ ஒருத்தரோட பொண்டாட்டிய நான் எப்படி அம்மான்னு சொல்ல முடியும்? யாரோ ஒருத்தியோட புருசனை எந்த முறையில நான் அப்பான்னு சொல்ல முடியும்? நான் கேக்கறது கரெக்ட் தானே பாடிகார்ட்!” அமர்ந்தபடியே தலையை நிமிர்த்தி அவன் முகத்தை ஏறிட்டு பார்த்து கேட்டாள்.

அவன் அவளுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. அவளை நோக்கி தன் வலக்கையை நீட்ட, அதை பிடித்து கொண்டு எழுந்து நடந்தாள் அவனுடன்.

ஏனோ பிடித்துக் கொண்ட அவன் முரட்டு கரத்தை இவள் இன்னும் விடவில்லை. மாரி அவளின் தோள் பற்றி ஆதரவாக அணைத்தபடி நடந்தான்.

“அவங்க எனக்கு வச்ச பேர்ல யாராவது என்னை கூப்பிட்டா, அது அவங்க கூப்பிடுற மாதிரியே இருக்கும், அதான் தாத்தா கிட்ட என் பேரை மாத்த சொல்லி அடம்பிடிச்சேன்” என்றவள் அவன் மார்பில் தலைசாய்த்து கொண்டாள். அவள் உயரத்திற்கு சாய்ந்து கொள்ள அவன் தோள் இவளுக்கு எட்டவில்லை.

“தில்லு பேபி இல்ல, எப்ப பாத்தாலும் இவங்கள பத்தியே புலம்பிட்டு கிடக்கும், எனக்கு சுத்தமா பிடிக்கவே பிடிக்காது” என்று அவள் மேலும் சொல்ல, “சரி, இனி எப்பவுமே நான் அவங்கள பத்தி பேச மாட்டேன் ப்ராமிஸ், போதுமா!” என்று உறுதி தர அவள் எழாமலே சம்மதமாக தலையசைத்தாள்.

இப்போதுதான் அவன் சொன்னதின் அர்த்தம் அவனுக்கே புரிந்தது. அதோடு அவள் தன் கைகளுக்குள் அடைக்கலமாகி இருப்பதையும் இப்போதுதான் முழுமையாக உணர்ந்து கொண்டான்.

தனக்குள் அவள்மீது ஏற்பட்ட மாற்றத்தை அவனால் இப்போது தெளிவாக உணர முடிந்தது. அதோடு வேறொன்றும் புரிந்தது. இந்த நெருக்கத்தை நிச்சயம் பூவிழியால் உணர்ந்து கொள்ள முடியாது என்று.

தனக்கு தானே சிரித்து கொண்டவன், “பூவிழி, நீ எப்ப பெரிய பொண்ணா வளருவ?” என்று கேட்டு வைக்க, அவள் சட்டென்று விலகி நின்று, “நான் இப்பவும் பெரிய பொண்ணு தான். எனக்கு இருபத்தி ரெண்டு வயசு முடிய போகுது தெரியுமா!” என்றாள் ரோஷமாய்.

இவன் வாய்விட்டு நன்றாகவே சிரித்து விட்டான். “சரிங்க மேடம், உங்க ரூம் வந்துடுச்சு, போய் நல்லா குறட்டை விட்டு தூங்குங்க போங்க” என்று சொன்னான்.

தன் வாயை அவனுக்கு கோணிக்காட்டி விட்டு, அறை வாசல் வரை சென்றவள், திரும்பி அவனிடம் ஓடிவந்து, “ரேஷ்மி” என்றாள்.

“ஆ!”

“அவங்க எனக்கு வச்ச பேரு இதுதான். ஆனா இந்த பேர் சொல்லி என்னை நீ எப்பவும் கூப்பிட கூடாது சரியா!” என்று சொல்லி விட்டு அறைக்குள் புகுந்து கொண்டாள்.

‘கூப்பிட கூடாதுன்னு ஒரு பேரை சொல்லிட்டு போறாளே! கடவுளே! இருபத்தேழு வருசமா எவகிட்டையும் சிக்காம தப்பிச்சு வந்தனே! கடைசில போயும் போயும் இவகிட்ட என்னை சிக்க வச்சிட்டியே!’ என்று வானத்தை பார்த்து மனதிற்குள் ஆதங்கப்பட்டான் மார்த்தாண்டன்.

************

நிஷாந்தினி, சித்தார்த்தை பிழிந்து எடுத்து கொண்டு இருந்தாள். வழக்கம்போல அவர்கள் சந்திப்பிற்காக பூங்காவிற்கு வந்திருந்தனர்.

நான்கு நாட்கள் கழித்து அவளை பார்க்கும் ஆர்வத்தில் வந்தவனுக்கு நிஷாவின் கடுகடுத்த முகம் தான் தரிசனம் தந்தது.

அவன் பார்ட்டியில் ஜோடியாக ஆட்டம் போட்ட நிழற்படங்கள் மற்றும் வீடியோவை அவன் முன் காட்டி ஏகத்துக்கும் தன்னவனை முறைத்து வைத்தாள்.

எல்லாம் அந்த பூவிழியின் வேலை தான்.

“அப்படி முறைக்காத நிஷா, இதெல்லாம் ஜஸ்ட் ஜாலிக்காக தான், பார்ட்டினா டேன்ஸ் இல்லாம எப்படி?” சித்து தன்னிலை விளக்கம் தர, நிஷாவின் முகம் சற்று தெளிந்தது.

“இப்பவாவது புரிஞ்சுதே! தேங்க் காட்” என்றவன் அவள் கை காயத்தை தொட்டு பார்த்து, “இப்ப வலி குறைஞ்சு இருக்கா?” என்று விசாரித்தான்.

“ம்ம் முன்னவிட இப்ப பரவாயில்ல” என்றவள், “காலேஜ்ல டூ டேஸ் லீவ் கிடைச்சிருக்கு, ஃப்ரண்ஸ் எல்லாம் மகாபலிபுரம் வரைக்கும் பிக்னிக் ப்ளான் பண்ணி இருக்காங்க, நானும் போகவா?” ஆர்வமாய் கேட்டாள்.

“ப்ச் கை வலியோட எப்படி போவ!”

“இல்ல, காயம் ஆறிடுச்சு, கொஞ்ச வலியும் சீக்கிரம் போயிடும்” அவள் கெஞ்சலாக சொல்ல, அவளின் முகபாவனையில் சொக்கிப் போனான்.

அவள் உள்ளங்கையில் மென்மையாய் இதழ் பதித்தவன், “உன்ன தனியா அனிப்பிட்டு, எனக்கு கஷ்டமா இருக்கும் டீ, உனக்கு பீச்ல தான விளையாடணும் நாம ரெண்டு பேரும் போகலாம்” என்றான் காதலாய்,

“என்ன? எங்க வீட்ல தெரிஞ்சா பிச்சு பிச்சு போட்டுடுவாங்க என்னை!” என்றாள் பதட்டமாய்.

“ம்ம் நீ உன் வீட்ல ஃப்ரண்ஸ் ஓட பிக்னிக் போறதா பர்மிஷன் வாங்கு, அப்படியே என்கூட வந்திடு, உன் வீட்ல யாருக்கும் டவுட் வராதில்ல” சித்து யோசனை சொல்ல, நிஷா தயங்கியபடியே யோசித்தாள்.

இந்த இரண்டு வருட காதல் சந்திப்புகளில் அவனுடன் தனியாக எங்கும் சென்றதில்லை. பொது இடங்களில் இதுபோல் சந்தித்து பேசுவதோடு சரி.

“எங்க போலாம், அதை முதல்ல சொல்லு”

“பீச் ஹவுஸ்க்கு போலாம், அங்க ஜாலியா விளையாடலாம் ரெஸ்டும் எடுக்கலாம். எந்த தொந்தரவும் இருக்காது” சித்து குதூகலமாக சொல்ல, நிஷாவிற்கு ஏதோ நெருடியது.

“நீயும் நானும் மட்டும் தனியா பீச் ஹவுஸ்ல! சரிபட்டு வராது சித்து” அவள் மறுப்பாக தலையசைத்தாள்.

“அதான் மாரி நம்ம கூட வரான் இல்ல, வேறென்ன?”

“எனக்கு என்னமோ தப்பா படுது!” நிஷா மேலும் மறுக்க, இவனுக்கு கோபம் வந்து விட்டது.

“தப்பா படுதுன்னா, என்ன அர்த்தம்? நான் உங்கிட்ட தப்பா நடந்துக்குவன்னு பயப்படுறியா? என்னை இவ்ளோ சீப்பா எடை போட்டு வச்சிருக்கியா நீ!” அவன் ஆத்திரமாக பேச,

“அச்சோ, நான் உன்ன சொல்லல, நாம தனியா அங்க போனா பாக்கறவங்க என்ன சொல்லுவாங்க? உங்க பீச் ஹவுஸ்ல என்ன நடந்தாலும் அது சத்யாக்கா காதுக்கு போயிடும், அப்புறம்” நிஷா சொன்ன பிறகு தான், இந்த விதத்தில் சித்து யோசிக்க ஆரம்பித்தான்.

“ஏய் ஐடியா, அன்னைக்கு மாதிரி, கீர்த்தி, பிரபாவ அழைச்சிட்டு வரேன், அவங்கள பாத்துக்க ஃபிளவரையும் அழைச்சிட்டு வரேன். நீ அவளோட ஃப்ரண்ட், இப்ப எந்த பிரச்சனையும் வராது” அவன் விளக்கி சொல்ல, நிஷாந்தினி அரை மனதாய் தலையசைத்தாள்.

காதலியின் ஒற்றை தலையசைப்பே போதுமானதாக இருந்தது சித்தார்த்திற்கு, மளமளவென அதற்கான ஏற்பாடுகளை செய்யலானான்.

குழந்தைகளை அழைத்து போவதாக கூற, சத்யவர்த்தினி மறுப்பு சொல்லவில்லை. ஆனால், உடன் பூவிழியையும் அழைத்து போவதாக சொன்னது தான் அவளுக்கு எங்கோ நெருடியது.

பூவிழியை அழைத்து போக மறுப்பு தெரிவிக்க, குழந்தைகள் பெரிதாய் போர்க்கொடி தூக்கினர். வேறுவழியின்றி சம்மதம் தர வேண்டியதாயிற்று.

பீச் ஹவுஸ் போவது பற்றி சித்தார்த் சொல்ல, முதலில் பூவிழி மலங்க மலங்க விழித்தாள். பின்னர் நிஷாவும் உடன் வருவதை எடுத்து சொன்னதும் இவளும் துள்ளலாக தலையசைத்தாள்.

மாரி இரண்டு நாட்களுக்கு முன்பே அவர்கள் தங்க போகும் கடற்கரை பக்கம் அமைந்திருக்கும் பங்களாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலானான்.

அடுத்த இரண்டு நாட்களில் இந்த பட்டாளம் அட்டகாசமாய் பீச் ஹவுஸை முற்றுகையிட்டது. காலையில் சென்றவர்கள் மாலை வரை கடற்கரை மணலில், கடலலைகளின் ஆர்பரிப்போடு போட்டியிட்டு கும்மாளம் அடித்தனர்.

அந்த பங்களா எல்லா வசதிகளுடன் சொகுசாக அமைந்திருந்தது. எல்லாருக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டன. குழந்தைகள் இருவர் மட்டும் ஒரே அறையை பகிர்ந்து கொண்டனர்.

பூவிழிக்கு அந்த கடற்கரை, கடலலை, வானம், தன்னையே சுற்றி வந்த வாண்டுகள் இதைத் தவிர வேறு ஏதும் தெரியவில்லை. அந்த இரு குழந்தைகளோடு இவளும் சேர்ந்து மூவராகி போனாள்.

நிஷாந்தினி இங்கு வர முதலில் தயங்கினாலும் சித்தார்த் உடன் அவர்களுக்கான தனிப்பட்ட பொழுதுகள் தந்த மகிழ்ச்சியை நிறைவோடு அனுபவித்தாள்.

சித்தார்த் சொல்லவே வேண்டாம், அவனுக்கு நிஷாவை தவிர எல்லாமே மறந்து போனது. குழந்தைகளை பூவிழி பார்த்து கொள்ள, பங்களா மேற்பார்வையை மார்த்தாண்டன் பார்த்துக் கொள்ள, இவனுக்கு தன் காதலில் தித்திக்க திளைப்பது மட்டுமே வேலையாகிப் போனது.

முதல் நாள் சந்தோசமாக கழிய, அனைவரும் உறங்க சென்று விட்டனர், சித்து மட்டும் நிஷா கையை விடாமல் பிடித்தபடி அறை வாசலில் நின்றிருந்தான்.

அவன் பார்வை அவளிடம் என்னென்னவோ யாசித்தது. “நாளைக்கு சீக்கிரம் எழணும் இல்ல, இப்பவே லேட் ஆச்சு சித்து” நிஷா சின்ன குரலாய் சொல்ல, தன்னவளை சேர்த்து அணைத்து இதழ் தடம் பதித்துவிட்டு உறங்க சென்றான் அவன்.

மறுநாளும் அழகாய் விடிந்தது. அந்த காலைநேர இதமான சூழலை அவர்கள் நால்வரும் நினைவுக்குள் பூட்டி வைக்க மறக்கவில்லை.

சித்தார்த் இன்றைய பொழுது முழுவதும் நிஷாந்தினியோடு தனிமையில் இருக்க நினைத்தான். நாளை விடிந்ததும் கிளம்ப வேண்டும் இந்த நாளை இழக்க அவனுக்கு மனமில்லை. குழந்தைகளையும் பூவிழியையும் மாரியின் கவனத்தில் விட்டுவிட்டு, தன்னவளோடு தனிமையான இடம் நோக்கி சென்றான்.

“நீ செய்யறது கொஞ்சம் கூட சரியில்ல சித்து, உன் பார்வை, நடவடிக்கை எதுவுமே எனக்கு சரியாபடல” நிஷா கண்டிக்க, “உன்கூட தனியா இருக்கணும்னு ஆசப்பட்டது தப்பா, இதுக்கு அப்புறம் இந்த சான்ஸ் நமக்கு கிடைக்கவே கிடைக்காது நிஷா” என்று முகம் சிறுத்து கூறினான்.

இவளுக்கும் புரிந்தது தான், ஆனாலும் பெண்மையின் பாதுகாப்பு உணர்வு அவன் நெருங்கும் போதெல்லாம் அவளை எச்சரித்து கொண்டிருந்தது.

இவளும் தன்னவன் மீது அளவற்ற காதல் மயக்கத்தில் தானே சிக்கி தவிக்கிறாள்.

நிஷா மெல்லிய புன்னகையுடன், சித்துவின் கேசம் கலைத்து கன்னத்தில் முத்தமிட, அவன் இவளை கையிலேந்தி கொண்டு கடலலையில் பாய்ந்தான்.

இதைதான் இளங்கோவடிகள் கடலாடுகாதையில் சொல்லிச் சென்றார் போலும்.

 

எக்குத்தப்பா சிக்கிட்டேனோ? 13

இங்கு பாவம், மாரியின் கதி தான் அந்த மூன்று வாண்டுகளிடமும் சிக்கி சின்னா பின்னமாகி கொண்டிருந்தது.

மூவரும் கடலில் நனைந்து, மணலில் புரண்டு, மணல் வீடு கட்டி, அதையும் கலைத்து விட்டு அதற்கும் சண்டை இட்டு… ம்ஹூம் மாரியால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. எத்தனை முறை தான் அதட்டி கொண்டு இருப்பது.

அவர்களின் கலாட்டாவை பார்த்தபடி மணலில் அமர்ந்து விட்டான். மணிக்கு ஒருதரம் சித்தார்த்திற்கு ஃபோன் செய்து அவன் பாதுகாப்பையும் உறுதி செய்து கொண்டான். சித்தார்த்தை நினைத்து இப்போது மாரிக்கு சற்று பொறாமை வந்திருந்தது.

அவன் காதலியோடு வானத்திற்கும் மேகத்திற்குமாய் மிதந்து கொண்டு இருப்பான். ‘நானும் இருக்கேன், இவளும் இங்க தான் இருக்கா, என்ன பிரயோஜனம்? ஒத்த பார்வைக்கு கூட பஞ்சமா இருக்கு’ என்று மனதில் புலம்பி தீர்த்தான். கீர்த்தி, பிரபா உடன் கண்ணாமூச்சி விளையாடி கொண்டிருந்தவளை கடுப்பாக பார்த்து வைத்தான்.

‘உனக்கு தேவ தான் டா இது, உலகத்தில வேற பொண்ணே இல்லாத மாதிரி இவமேல மனச வச்சதுக்கு இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்கனுமோ!” என்று தலையில் அடித்து கொண்டவன், பார்வையை திருப்பிக் கடல் அலைகளை பார்த்தான். மனதின் ஆதங்கம் சற்றேனும் அடங்கட்டும் என்று.

கைகளை காற்றில் அசைத்தபடி கண்கள் கட்டி இருக்க, குழந்தைகளை பிடிக்க வந்தவள், உட்கார்ந்து இருந்த மாரி மீது தடுக்கி விழுந்தாள்.

‘மணல்ல கல்லு பாறை எல்லாம் இருக்காதே! பின்ன எதுமேல டா நான் தடுக்கி விழுந்தே?’ கண்கட்டை அவிழ்த்து பார்க்க, மாரியின் கடுகடுத்த முகம் அவளுக்கு வெகு அருகில் தெரிந்தது.

‘ச்சே மறுபடியும் இந்த பரங்கி மலை மேல தான் நான் விழனுமா! செத்தேன்! ஏன் இப்படி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முறைச்சு வக்கிறான்? தெரியிலயே!’ தன் பற்கள் முழுவதும் தெரிய, ஈ என்று இளித்தபடி அவன் மேலிருந்து எழுந்தாள்.

“கொஞ்சமாவது அறிவு இருக்கா டீ உனக்கு? இப்ப தான் சின்ன குழந்தைன்னு நினைப்பு! ச்சே!” தன் ஆதங்கத்தை அவள் மேல் அப்படியே கொட்டி விட்டான்.

“தெரியாம தான விழுந்தேன், ஏன் இப்படி திட்ற?” அவள் முகம் சிறுத்து போனது. அதற்குள் குழந்தைகளும் அங்கு வந்திருந்தனர்.

“கீர்த்தி, பிரபாகர் விளையாடினது போதும், போய் குளிச்சிட்டு சாப்பிட்டு தூங்குங்க, காலையில நாம சீக்கிரம் கிளம்பணும்” மாரி சொல்ல, அவன் குரலில் இருந்த அழுத்தம் அவர்கள் மூவரையும் அங்கிருந்து நகர செய்தது.

வானத்தில் செம்மை நிறம் மாறி கருமை நிறம் படற ஆரம்பித்து இருந்தது. காலையில் இருந்து ஓயாமல் ஆட்டம் போட்டதால் குளித்து சாப்பிட்டுவிட்டு குழந்தைகள் இருவரும் அசதியில் உறங்கிப் போயினர்.

பூவிழி, மாரியை பார்த்து கொண்டு உம்மென்று கூடத்தில் அமர்ந்து இருந்தாள். மாரியின் பார்வை வாசலை நோக்கிக் கொண்டு இருந்தது. சித்தார்த் இவ்வளவு நேரமாகியும் இன்னும் திரும்பவில்லை. அவன் பொறுமை கரையும் நேரம் சித்துவும் நிஷாவும் வந்துவிட்டனர்.

அவர்கள் எதுவும் பேசவில்லை. ஏதோ மந்திரித்து விட்டது போல, மாடி படியேறி சென்றனர்.  நிஷாவை தன் கையணைப்பிலேயே அழைத்து வந்த சித்தார்த் அவளை தன் அறைக்குள் அழைத்துச் சென்று கதவை தாழிட்டான்.

அதனை பார்த்திருந்த பூவிழியின் கண்கள் தெறித்துவிடும் போல விரிந்தன.  அவளின் முக பாவனை பார்த்து மாரி சிரித்து விட, அவள் அவனை முறைத்து விட்டு, கடலை நோக்கி கால்கள் புதைய புதைய மணலில் நடந்தாள்.

உண்மையில் இவள் மனம் தடதடக்கத் தான் செய்தது. எத்தனை சினிமாவில் இதையெல்லாம் பார்த்து இருக்கிறாள். அவளுக்கும் ஓரளவு புரியத் தான் செய்தது. காதல் என்பது சரிதான், ஆனால் திருமணத்திற்கு முன்பு சித்து, நிஷாவின் இந்த எல்லை மீறல் அவளுக்கு தவறாகவே பட்டது. ஆனாலும் இவளால் இதில் என்ன செய்ய முடியும்!

தேய்பிறை நிலவு, பாதி முகத்துடன் முன்னிரவு வேளையில் வானில் பாவமாக சுற்றி கொண்டிருந்தது. எங்கும் சூழ்ந்திருந்த இருள், அதன்மேல் மெல்லிய வெண்மையை பூசி விட்டிருந்த நிலவொளி, அலையாடும் கடல், விரித்த வெண்மணல் பரப்பில் அமர்ந்திருந்த அவன் தேவதை… மார்த்தாண்டன் மனதின் இறுக்கம் களைய அமைதியாக வந்து அவளருகில் அமர்ந்து கொண்டான்.

அவனை பார்த்ததும் முறுக்கிக் கொண்டு பூவிழி எழுந்து விட, அவள் கை பிடித்து நிறுத்தியவன், “இங்க தனியா சுத்தறது சேஃப் இல்ல பூவிழி, சொன்னா கேளு” அவனின் ‘பூவிழி’ என்ற அழைப்பும், அதிராத பேச்சும் இவளை வசீகரிக்க தான் செய்தது.

இருந்தும், “அப்ப ஏன் என்னை அப்படி திட்டின?” சிடுசிடுப்பாய் கேள்வி கேட்டாள்

இவன் அதற்கு எப்படி பதில் சொல்வான்! கடலில் ஆடியதால் ஈரம் காயாத ஆடையில், வெண்மணல் படித்திருக்க, அப்படியே வந்து அவன் மேல் விழுந்தாள். அவனோ திண்டாடி போனான். தன்னிலையை மறைத்து  அவளிடம் கத்தி விட்டான்.

“சாரி, உன்ன அப்படி திட்டினது தப்பு தான்” என்று அவன் இறங்கி வர, மலர்ந்த முகத்துடன் உட்கார்ந்து கொண்டவள், “அந்த பயம் இருக்கட்டும், இனிமே என்னை திட்ற வேலையெல்லாம் வச்சுக்காத தண்டம்” என்று எச்சரித்தாள்.

“ஏய், என்னை அப்படி கூப்பிடாத டீ, மாரின்னு கூப்பிட்டா என்னவாம் உனக்கு”

“ஆமா, நீ பெரிய மாரி தனுஷ் பாரு! உன்ன அப்படி கூப்பிட! செஞ்சிடுவேன்”

“என் பேர ஒழுங்கா கூப்பிட சொன்னா படத்து பேரெல்லாம் இதுல ஏன் இழுக்கற?”

“நீ தண்டம் தான், நான் அப்படி தான் கூப்பிடுவேன்” என்று வீம்பு செய்தவளை இரு தோள் பற்றி தன் பக்கம் இழுத்தான் ஒரு வேகத்தில்.

அவள் அசரவேயில்லை. அவன் அருகாமையை அவள் உணரவுமில்லை. மாரி தான் திணறிப் போனான்.

“ஏய், குட்ட வாத்து மாதிரி இருந்துட்டு, என்னை என்ன பாடுபடுத்தற டீ நீ!”

அவன் குரலில் இருந்த மாற்றத்தை அவளால் உணர முடிந்தது ஆனால் காரணம் புரியவில்லை. அவள், அவன் முகத்தையே பார்த்திருக்க, இவன் பேச்சை மாற்றினான். கடல், வானம், மேகம், நிலவென அவர்கள் பேச்சு நீண்டது.

அரை நிலா மேகத்திற்குள் தஞ்சம் புக, எங்கும் கவிழ்ந்த இருள் அவளை மிரள செய்ய, அவனருகில் ஒட்டி அமர்ந்து கொண்டாள்.

அவள் இருளை கண்டு மிரள்வதை உணர்ந்த அவனும், அவள் தோளை ஆதரவாக அணைத்தபடி பேச்சைத் தொடர்ந்தான். வழக்கம்போல அவள் தான் அதிகம் வளவளத்தாள். ஆனாலும் இவனுக்கு பிடித்திருந்தது. இந்த தனிமை! இத்தனை அண்மை!

நிலவு மெல்ல முகம் காட்டி ஒளி பாய்ச்ச, இவளும் விலகி செல்ல முயன்றாள். முடியவில்லை அவன் கரம் அவளிடையில் பதிந்து இருப்பதை உணர்ந்து, அவளின் பெண்மை விழித்துக் கொண்டது.

பூவிழி அனைவரிடமும் வாயடித்தாலும் இதுவரை யாரையும் தொட்டு பேச அனுமதித்தில்லை. இப்போது அவள் சங்கடமாக நெளிய, அவன் பிடி மேலும் இறுகியது. தவிப்போடு அவன் முகம் பார்த்தாள். அவன் பார்வை இவள் மீது தான் நிலைத்திருந்தது.

அவன் பார்வை வீச்சில் இவள் உலகம் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றது. இப்போது தான் அவன் அருகாமையை அவளால் உணரவும் முடிந்தது. வெட்டவெளி பரப்பில் அவள் மூச்சுக்காற்று அடைத்து கொண்டது போலாக, கத்தும் கடலும் ஊமையானது போல் அவளை சுற்றி ஒருவித நிசப்தம் பரவியது.

அவன் மறுகரம் அவள் கன்னத்தில் பதிய, “பூவிழி” அவன் ரகசியமான அழைப்பில் இவள் திக்குமுக்காடி போனாள்‌. அவன் ஒற்றை விரல் அவளிதழை வருடிட, அத்தனை உணர்ச்சி மிகுதியை தாங்க முடியாமல் அவள் இமைகள் இறுக மூடின. இதையே அவளின் சம்மதமாக ஏற்று, அவளிதழில் தன் முதல் முத்திரையை பதித்தான் அவன்.

மலருக்கு நோகாமல் தேனெடுக்கும் வண்டை போல், இந்த முரடனும் அவன் பூவையை மிக மென்மையாய் கையாண்டான்.

அவன் விடுவிக்க அவள் அவன் மார்பில் முகம் புதைத்தாள். அவளால் உணர முடிந்தது. ஆனால் எதுவும் தெளிவாக பிடிபடவில்லை. அவற்றை தெளிந்து கொள்ள அவளுக்கு அவசியமும் தோன்றவில்லை.

“பூவிழி, இதே மாதிரி இன்னொரு கிஸ் ஓகேவா!” அவள் காதுமடலோரம் அவன் கிசுகிசுக்க, “ம்ஹூம்” என்று தலையசைத்தாள்.

“ஏன்? என்னை பிடிக்கலையா?”

“தெரியல, என்னை பத்தின எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லணும்னு தோணுது, நீ எப்பவும் என்கிட்ட திட்டாம பேசணும்னு தோணுது, வேற சொல்ல தெரியல”

இதைவிட பெரிதாக எந்த வார்த்தைகளாலும் அவளுக்கு தன் மேலிருக்கும் பிடித்தத்தை சொல்லிவிட முடியாது என்று தோன்றியது அவனுக்கு.

“சரி, அப்ப உன் தாத்தா கிட்ட பேச வா!”

“சீ அசிங்கம்! இன்னோரு கிஸ் வேணும்னு தாத்தா கிட்ட போய் நிப்பியா!” பூவிழி சொல்ல, இவன் கடுப்பாகி அவள் நெற்றியை முட்டினான்.

“ஏய் மக்கு, நம்ம கல்யாணத்தைப் பத்தி தாத்தா கிட்ட பேசவான்னு கேட்டேன்”

“கல்யாணமா! என்னை கட்டிக்கிற அளவுக்கு உனக்கு தைரியம் இருக்கா?”

“ஏன் டீ? இப்படி உளர்ற!”

“அது, கல்யாணம்னா நெறைய தெரிஞ்சு வச்சிருக்கணுமா, சமைக்க தெரியணுமாம், வீட்டு வேலை எல்லாம் செய்யணுமாம், புருசன கவினிச்சிக்கணுமாம், மாமியார், மாமனார் மனசு கோணாம நடந்துக்கணுமாம்! எப்பா இன்னும் எவ்ளோ அட்வைஸு! இதெல்லாம் எனக்கு ஒண்ணுமே தெரியாதே!”

“இதெல்லாம் நான் பார்த்துக்கிறேன், நீ என்னை கட்டிக்கிட்டா மட்டும் போதும்” மாரி புன்னகையோடு சொல்ல, “இந்த வேலை எல்லாம் நீயே பார்த்துக்கறதா இருந்தா, எனக்கு ஓகே பா” என்று சொல்லி சிரித்தவளை தலையில் தட்டி, அழைத்து வந்தான்.

இந்த காதல் ஜோடிக்கு சுகமான பாரத்தோடு உறக்கம் தந்த இதே இரவு, அந்த காதல் ஜோடிகளுக்குள் கலவரத்தை மூட்டி இருந்தது.

சித்தார்த் அத்துமீற நிஷாந்தினி உடன்படவில்லை. அவள் வளர்ந்த முறையும், சமூகத்தின் பார்வை பற்றிய பயமும், அவளின் காதல் மயக்கத்தை சற்று தெளிய வைத்திருந்தது.

“ப்ளீஸ் நிஷா” அவன் எத்தனை கெஞ்சியும் அவள் செவிசாய்க்கவில்லை. “தப்பு நடக்காதுன்னு சொல்லி தான, என்னை இங்க அழைச்சிட்டு வந்த, இப்ப நீயே பேச்சு மாறினா எப்படி? சித்தார்த்”

“கொஞ்சம் என் ஃபீலிங்ஸையும் புரிஞ்சிக்க நிஷா, எம்மேல உனக்கு நம்பிக்கை இல்லயா!”

“உனக்கு நான் வேணும்னா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணு, அதைவிட்டு இப்படி! வேணா சித்து”

“எப்ப பாரு, கல்யாணம் கல்யாணம்னு ஷிட், உன் மிடில் கிளாஸ் புத்திய காட்ற இல்ல நீ!”

“பிளான் பண்ணி பீச் ஹவுஸ் கூட்டிட்டு வந்து, விருப்பமில்லன்னு சொல்லியும் என்னை கம்ப்பல் பண்ற நீதான் உன் ஹை கிளாஸ் புத்திய காட்டற சித்து!”

நிஷாவும் சரியாய் பதில் பேச, சித்தார்த் முகம் இருண்டு போனது. அறை கதவை திறந்து அவளை வெளியேறும் படி சொல்லாமல் கைகாட்ட, நிஷாவும் மறு வார்த்தையின்றி வெளியே வந்தாள்.

மறுநாள் காலை, சித்துவும் நிஷாவும் இறுகிய முகத்துடனே மற்றவர்களோடு திரும்பி சென்றனர்.

இப்போதும் குழந்தைகளுடன் வம்பளத்து வந்த பூவிழியை, மார்த்தாண்டன் ரசனையாய் பார்க்க, இவள் மிரட்டல் பார்வையில் அவனை சாலையில் கவனம் பதிக்க செய்தாள்.

 

எக்குத்தப்பா சிக்கிட்டேனோ? 14

“ஜனார்த்தனனோட ஆட்டம் க்ளோஸ் க்கா” சித்தார்த் தோரணையாக சொல்லிவிட்டு அவர்கள் எதிரில் அமர, சத்யாவும் ராமும் ஒருவரையொருவர் புரியாமல் பார்த்து கொண்டனர்.

“என்ன சித்து சொல்ற! நிஜமா!” சத்யவர்த்தினி கேட்க,

“நிஜமே நிஜம், மாரிக்கு தான் நன்றி சொல்லணும், சும்மாவே வச்சு செஞ்சிட்டான் இல்ல” சித்தார்த் சிலாகிக்க, இருவரும் மாரியை பார்த்தனர். தெளியாத முகத்துடன் அவன் நின்றிருந்தான்.

“என்னாச்சு மாரி, புரியற மாதிரி சொல்லுங்க” சத்யவர்த்தினி இவனிடம் கேட்க,

“மேடம், ஜனாவ டார்கெட் பண்ண ஏதாவது வழி கிடைக்குமான்னு அலசி பார்த்தேன், எதுவுமே சரியா அமையல, நரேன் கொலை வழக்குலயும் முன்னமே ரெண்டு பேர் நாங்க தான் செஞ்சோம்னு சரண்டர் ஆனதால அங்கயும் மேல மூவ் பண்ண முடியல, அதால”

“என்ன பண்ணீங்க அவனை மாரி?”

“எப்படி ஜனாவ சிக்க வைக்கலாம்னு தேடினப்ப தான், அவன் இல்லீகலா சேர்த்து வைச்சிருக்க சொத்து, பினாபி பத்தின விவரம் ஓரளவு எங்களுக்கு கிடைச்சது, அந்த ஆதாரத்தை இன்கம்டேக்ஸ் டிபார்ட்மென்ட் மூலமா மூவ் பண்ண டிரை பண்ணோம்”

“குட், நல்ல மூவ் தான்”

“இதனால ஜனாவ கொஞ்ச நாள் செயலிழக்க வைக்க முடியும், அதுக்குள்ள வேற ஏதாவது செய்யணும்னு தான் ப்ளான் மேடம், பட்!” மாரி மறுபடியும் பேச்சை பாதியில் நிறுத்தினான்.

“ஏன் ப்ளான் வொர்க் அவுட் ஆகலயா?” சத்யா ஏமாற்றமாக கேட்க, “அக்கா ப்ளான் டபுளா வொர்க் அவுட் ஆகிடுச்சு” என்று மர்ம புன்னகையாய் சித்தார்த் சொன்னான்.

ராமின் கைப்பேசி சிணுங்க அதை எடுத்து பேசியவன்,

“என்ன?”

“…”

” நிஜமா! எப்ப?”

“…”

“சரி” என்று வைத்து விட்டு, சத்யாவிடம் திரும்பி, “ஜனார்த்தனன் இறந்துட்டாராம், சிவியர் அட்டாக், காப்பாத்த முடியலயாம், இப்ப தான் விசயம் கன்பார்ம் ஆச்சு” என்று தகவல் சொன்னான்.

சத்யவர்த்தினிக்கு இதை கேட்டு சந்தோசம் வந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் அவள் மனதில் ஒரு நிம்மதி பரவியது. இனி தன் தம்பிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற நிம்மதி.

“இதை முதல்ல சொல்லி இருக்க வேண்டாமா மாரி” ராம்குமார் கேட்க, “இல்ல சார், இப்படி ஆகும்னு எதிர்பாக்கல, அதான்” அவனுக்குள் ஏனோ நெருடியது.

“புரியுது மாரி, பட் இதுல நீங்க கில்டியா ஃபீல் பண்ண வேண்டாம், இதுல உங்க தப்பு எதுவும் இல்ல” சத்யவர்த்தினி சமாதானமாக பேச, அவனும் தலையசைத்து விட்டு நகர்ந்தான்.

“எப்பா இனிமே நான் ஃபிரீ பேட், என் விருப்பம் போல சுத்தலாம், எங்க என்ன ஆபத்து வரும்னு நடுங்க வேண்டியது இல்ல” சித்தார்த் உற்சாக குரலில் கைகளை உயர்த்திச் சொன்னான்.

“ஜனா இறந்தத பார்ட்டி வச்சு கொண்டாடுவ போல சித்து” ராம் கிண்டலாக கேட்க,‌ “ச்சே ச்சே அவ்வளவு கொடூர புத்தி எல்லாம் எனக்கு இல்ல மாம்ஸ், அதோட நான் வருத்தமும் படல, நான் எவ்வளவு எடுத்து சொல்லியும் அந்த ஜனா கடைசி வரைக்கும் கேட்கவே இல்ல, அத்தனை பிடிவாதம், அவனுக்கு தேவையான முடிவு தான் இது” சித்து சொல்ல மற்ற இருவருக்கும் கூட இங்கே மாற்று கருத்து இல்லை.

***************

பூவிழி வாய்விட்டு சத்தமாகவே சிரித்து விட்டாள். “உனக்கு தண்டம்னு சரியான பேர் தான் வச்சிருக்கேன் பாத்தியா! பாராங்கல்லு மாதிரி உடம்ப வச்சுகிட்டு, நோகாம ஒரு ஃபோன் கால்ல வில்லனோட கதைய முடிச்சிட்டியே! செம்ம போ” அவள் தன்னை பாராட்டுகிறாளா? அல்லது நக்கல் செய்கின்றாளா? என்பது அவனுக்கு புரியவில்லை.

“எனக்கே ஏதோ கில்டி ஃபீலிங்கா இருக்கு சுண்டக்கா, நீ வேற அதையே பேசாத” என்றவன், எதிர் நின்றவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அவளின் அருகாமை தன் மனதை அமைதிபடுத்தும் என்று.

பூவிழி அவன் இடையில் வாட்டமாய் பிடித்து கிள்ளி விட, “ஆஅஅ” என்று துள்ளி விலகினான்.

“ஏன்டீ இப்ப என்னை கிள்ளி வச்ச” மாரி காட்டமாக முறைத்து நிற்க,

“கொஞ்சமாவது அறிவு இருக்கா பாடிகார்ட் உனக்கு?” இவள் அவனுக்கு மேல் துள்ளினாள்.

“அறிவிருந்தா ஏன் டீ, உன்ன லவ் பண்ணி தொலைக்க போறேன்?” அவன் தலையில் அடித்து கொள்ள,

“வெவ்வ வெவ்வ ரொம்ப தான், இங்க வந்து பொசுக்குனு ஹக் பண்ற, யாராவது பார்த்தா என்ன ஆகும்!” பின்புற தோட்டத்தில் அவள் சுற்றி பார்வையை சுழற்றினாள்.

“பரவால்லயே என் சுண்டக்கா மூளை கூட, இதையெல்லாம் யோசிக்கிது!” என்று மெலிதாய் சிரித்து வைத்தான்.

“என்ன பாத்தா உனக்கு சுண்டக்கா மாதிரி தெரியுதா?”

“நீ மட்டும் என்னவாம், என்னை பார்த்தா உனக்கு பரங்கி மலை மாதிரி தெரியுதா?”

“பின்ன இம்புட்டு வளர்ந்து நிக்கிறியே!”

“நீ இன்னும் வளராமையே நிக்கிறியே டீ!”

அவன் பதிலுக்கு பதில் பேச, இவள் கோபத்தில் பொசுபொசுவென்று மூச்சு வாங்கினாள். அவன் விரிந்த புன்னகையோடு தன்னவளை ரசித்து நின்றான். அவனின் மன குழப்பம் எல்லாம் தடம் தெரியாமல் எங்கோ போயிருந்தது.

“போ போடா, நீ என்கூட சண்ட போட்டுட்டே இருக்க, உன்ன நான் கட்டிக்கிட மாட்டேன், வேற எவளாவது வளர்ந்து நிக்கறவளா பார்த்து நீ கரெக்ட் பண்ணிக்கோ” என்று முறுக்கி திருப்பி கொண்டு பூவிழி போக, மாரி வாய்விட்டு சிரித்து விட்டான். அவளின் சிறுபிள்ளை தனமான ஊடல் கூட இவன் காதலை ஊற்றெடுக்க வைத்து கொண்டிருந்தது.

***************

இந்த இரண்டு வாரத்தில் நிஷாந்தினி கலங்கி தவித்து விட்டாள். அன்றைய பேச்சுக்கு பிறகு சித்தார்த் இவளை மறுபடி பார்க்கவும் வரவில்லை, கைப்பேசியில் கூட பேசவில்லை. இவளின் குறுஞ்செய்திகள் எதற்கும் பதிலில்லை.

இந்த இரண்டு வருட காதலில் அவனிடம் பேசாமல் இவள் ஒருநாள் கூட உறங்கியது இல்லை. அவனின்றி இவளின் உணவு, உறக்கம், படிப்பு, தினப்படி வேலைகள் எல்லாம் ஸ்தம்பித்து நின்று விட்டிருந்தன.

தன்னவனை இவள் மனம் தேட, அவன் எதற்கும் அசைந்து கொடுப்பவனாக இல்லை. இதற்கிடையில் நிஷாவின் அப்பா அவளுக்கு வரன் வந்திருப்பதாக கூற, இவள் மேலும் நொந்து போனாள்.

வேறு வழியின்றி அவனை காண, அவன் அலுவலகத்திற்கு சென்றாள். நிஷா தன்னை தேடி இங்கு வந்ததில் சித்துவிற்கு வியப்பு தான். இந்த பிரிவு அவனுக்கும் வேதனை தந்து இருந்தாலும், அவளின் அன்றைய அலைகழிப்பு, ஒரு ஆணாய் அவனை ரணப்படுத்தி இருந்தது. இப்போதும் அதே கோபத்தோடு தான் அவளை எதிர் கொண்டான். அவன் அலுவலக அறையில், இருவரும் எதிரெதிராக பேச்சை தொடங்காமல் அமர்ந்து இருந்தனர்.

“எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு, நீ வந்த விசயத்தை சொல்லிட்டு கிளம்பு” அவன் உதாசீனம் இவள் மனதில் அடிவாங்கிய வலியை ஏற்படுத்த துவண்டு போனாள்.

“ஏன் சித்து, யாரோ மாதிரி பேசுற? நான் வேண்டாதவளா போயிட்டேனா உனக்கு?”

“வேற எப்படி உங்கிட்ட பேசணும்னு நீ எதிர்பார்க்கிற, சொல்லு அப்படி பேச டிரை பண்றேன்”

“வேணா சித்து, நீ காரணமே இல்லாம என் மனசை காயப்படுத்துற”

“உப்பு பெறாத காரணத்துக்காக என் ஃபீலிங்க்ஸ நீ கொச்ச படுத்தல!”

“அச்சோ, ஏன் என் நிலைமைய புரிஞ்சிக்க மாட்டேங்கிற, நீ ஆம்பள உனக்கு எல்லாமே சுலபமா தெரியும், ஒரு பொண்ணா என்னால அப்படி இருக்க முடியாது, எங்களுக்கான கட்டுதிட்டங்கள் அதிகம், புரிஞ்சிக்க, ப்ளீஸ்”

“சரி விடு, இப்ப வந்த விசயத்தை சொல்லு”

“அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காரு, விசயம் கைமீறி போறத்துக்குள்ள, அவர்கிட்ட பேசணும்”

“ஓ, அம்மா கிட்ட உன்ன பத்தி சொல்லி இருக்கேன். அப்பாக்கு உடம்பு தேறின அப்புறம் தான் இதைப்பத்தி பேச முடியும்”

“அதுக்குள்ள அப்பா இந்த சம்மந்தத்தை முடிவு பண்ணிட்டாங்கன்னா!” அவள் பதற்றமாய் கேட்க,

“ம்ம் கல்யாணம் பண்ணிக்கோ, இந்த ஹை கிளாஸ் மென்டாலிட்டி தான் உனக்கு பிடிக்கல இல்ல, உன் அப்பா உன் ரேஞ்சுக்கு தானே மாப்பிள்ளை பார்த்து இருப்பாரு, ஒருவேளை அவன் கூட உன் மென்டாலிட்டி ஒத்து போகலாம்” சித்தார்த் யோசிக்காமல் வார்த்தைகளை விட, நிஷாந்தினி பதிலின்றி சட்டென்று எழுந்து, திரும்பி நடந்தாள்.

அவள் இதயம் அழுத்த, அவள் கண்களில் நீர் கலங்கியது. இதழ் மடித்து தன்னை கட்டுபடுத்த போராடியாவாறு அங்கிருந்து சென்று விட்டாள்.

சித்தார்த் தன்மீது வைத்திருந்த நேசம் இவ்வளவே தானா? அவள் பேதை மனம் கதறியது.

இரண்டு நாட்கள் கழித்து சித்தார்த்திற்கு கிடைத்த தகவல், அவனுக்குள் வெறி ஏற்றியது. நிஷாந்தினி சொந்த ஊர் சென்று இருந்தாள், அதுவும் பெண் பார்க்கும் படலத்திற்காக, அவன் ஆத்திரத்தில் அவன் அறையில் இருந்த பொருட்கள் எல்லாம் நொறுங்கின.

சத்தம் கேட்டு வேலை ஆட்கள் ஓடி வந்தனர். அதோடு ஓவிய பயிற்சியை பாதியில் நிறுத்திவிட்டு, பூவிழியும் குழந்தைகளும் கூட வந்தனர்.

அந்த மாலை வேளையில், நாடு திரும்பும் தன் அப்பா, அம்மாவை அழைத்து வர, சத்யாவும், ராமும் சென்றிருந்தனர்.

சித்தார்த் நிலையையும் அறையின் அலங்கோலத்தையும் பார்த்து எல்லாரும் பதறி விட்டனர். சித்துவின் உள்ளங்கையில் ஏதோ கிழித்து உதிரம் கசிந்து கொண்டிருந்தது.

பிரபாகர் சென்று முதலுதவி பெட்டியை எடுத்து வந்து பூவிழியிடம் கொடுக்க, அவள் அவனுக்கு கட்டுபோட்டு, குழந்தைகளின் அறைக்கு அழைத்து வந்தாள்.

“சார், மேடம் வரத்துக்குள்ள, ரூமை கிளீன் பண்ணுங்க சீக்கிரம்” சாவித்திரி வேலையாட்களை துரித படுத்தினாள்.

“என்ன தான் பணங்காசு இருந்தாலும் இப்படியா சார் எல்லாத்தையும் உடைச்சு வைப்பீங்க” பூவிழி கேட்க, சித்து மௌனமாகவே உட்கார்ந்து இருந்தான்.

“எங்க சித்து சார் எப்பவும் கியூட்டா சிரிச்சுட்டே இருப்பாரு, இந்த ஃபேஸ் உங்களுக்கு செட்டே ஆகல சார்”

“நிஷா என்னை விட்டு போயிட்டா” அவன் கசப்பாக சொல்ல,

“என்னது போயிட்டாளா?” பூவிழி வாயும் கண்களும் ஒன்றாய் விரிந்தன. அவன் முகம் கசங்கி ஆமென்று தலையசைத்தான்.

“சரி விடுங்க சார், நிஷா இல்லன்னா ஒரு உஷா, இதுக்கு போய் இவ்ளோ சோக ரியாக்ஷன் கொடுத்துட்டு இதெல்லாம் உங்களுக்கு சுத்தமா செட்டே ஆகல சார்”

வழக்கம்போல தன் மனதில் பட்டதை தயவு தாட்சண்யம் இன்றி கொட்டி கவிழ்த்தாள்.

“உங்களுக்கு என்ன சர், கியூட்டா, ஸ்வீட்டா, ஹேன்ட்சமா சும்மா ஹீரோ மாதிரி இருக்கீங்க, செகண்ட் ஹீரோயின் வராமலயா போயிடுவாங்க”

“அன்னிக்கு பார்டியில டேன்ஸ் ஆடினிங்களே, அதுல யாரையவாது கரெக்ட் பண்ணிக்கோங்க சித்து சர்” பூவிழி சொல்லி கொண்டே போக, இவனுக்கு சட்டென பொறி தட்டியது.

“அப்ப, நிஷாக்கு அந்த ஃபோட்டோஸ் எல்லாம் அனுப்பனது நீதானா? ஃபிளவர்” சித்து நிமிர்ந்து கேட்க,

இவள் ஈயென்று இளித்து வைத்தாள்.

‘உன் வாயால நீயே சிக்கிக்கிட்ட பூவு’ என்று தன் வாயை நொந்தவள், “சாரி சர்,‌ அச்சோ அதால தான் நிஷா உங்கள விட்டு போயிட்டாங்களா?” என்று பதறினாள்.

“ப்ச் இல்ல ஃபிளவர், இது வேற விசயம், எனிவே, தேங்க்ஸ், என் காயத்துக்கு கட்டு போட்டதுக்கு” என்று நகர்ந்து விட்டான்.

‘என்னங்கடா இது, அன்னிக்கு என்னவோ ரெண்டு பேரும் கம் போட்ட மாதிரி ஓட்டிட்டு திரிஞ்சாங்க, இப்ப திடீர்னு பிச்சிகிட்டாங்க, ஒண்ணுமே புரியலயே’ என்று தோளை குலுக்கி கொண்டாள் பூவிழி.

 

எக்குத்தப்பா சிக்கிட்டேனோ? (ஈற்றயல் பதிவு)

சித்தார்த்தின் அம்மா மீனலோச்சனியும், அப்பா ஏகாம்பரமும் வந்து விட, அந்த பங்களா நிறைந்து போனது. அவன் அப்பாவை பார்க்கும் போது அப்படி ஒன்றும் நோயாளி போல தோன்றவில்லை. திடமாகவே தெரிந்தார்.

“நான் தான் முன்னவே சொன்னே இல்ல ஜெயாக்கா, பெருசுங்க ரெண்டும் செகன்ட் ஹனிமூனுக்கு தான் போயிருக்கங்கனு, நீதான் நம்பல, இப்ப நியே பாக்கற இல்ல” ஜெயாவிடம் வாயடித்து இரண்டு கொட்டுக்களை பெற்றுக் கொண்டு வாய்மூடிக் கொண்டாள் பூவிழி.

சித்தார்த் வழக்கம் போலவே தன்னை காட்டிக் கொண்டான். சித்தார்த் உடன் சேர்ந்து அப்பா, அம்மா, அக்கா, மாமா, குழந்தைகள் அனைவரும் திருப்பதி சென்று தரிசனம் முடித்து வந்தனர். இது மீனலோச்சனியின் வேண்டுதலாம்.

அப்போதுதான் சிந்துவின் திருமண பேச்சும் ஆரம்பித்தது, “என்ன சித்து, ஏதோ பொண்ண லவ் பண்றதா சொன்னியாம், யாரது சொல்லு, அவங்க வீட்டில போய் பேசிடலாம்,‌ உனக்கு பிடிச்சிருந்தா சரி, வசதி வாய்ப்பெல்லாம் ரெண்டாம் பட்சம் தான்” என்று ஏகாம்பரம் சாதகமாக பேச, இவன் நொந்து போனான்.

இப்போது தன் காதல் தோற்றுவிட்டது என்று சொல்லி அழ, அவன் சுயகௌரவமும் தன்மானமும் இடமளிக்கவில்லை. எனவே, “அவள நானே உங்க முன்னாடி அழைச்சிட்டு வந்து நிறுத்தறேன் டாட், மத்தது எல்லாம் நீங்க அவகிட்டயே கேட்டுக்கோங்க” என்று ஏதோ சொல்லிவிட்டு நழுவி வந்து விட்டான்.

இப்போது தினம் தினம், ‘எப்படா என் மருமகளை எங்களுக்கு காட்ட போற?’ என்ற அப்பா, அம்மாவின் கேள்விகளை அவன் சந்திக்க வேண்டியதாக வேறு இருந்தது.

அந்த கடுப்பில் பால்கனியில் உலாவி கொண்டிருந்தவனை அந்த பேச்சு சத்தம் ஈர்த்தது.

“ஏய், புடி புடி புடி பூவு” ராபர்ட் கத்த, பூவிழி எகிறி பந்தை பிடித்துவிட்டு, “ஏஏய் கேட்ச், நீ அவுட் சிங்கு, தும் ஜாவோ ஜாவோ!” என்று கத்த, வாட்ச்மென் சிங் அவளின் இந்திக்கு பயந்தே மட்டையைக் கொடுத்து விட்டு பின் வாங்கி கொண்டான்.

மதிய வேளையின் ஓய்வு நேரத்தில், பூவிழி அந்த வீட்டு வேலையாட்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு பங்களாவின் பின்புறம் உள்ள விளையாட்டு மைதானத்தில் மட்டைப்பந்து விளையாட்டைத் தொடங்கி இருந்தாள்.

இப்போது மட்டை சாவித்திரி கைக்கு வர, ஆட்டம் மீண்டும் களைக்கட்டியது.

சித்தார்த் சின்ன சிரிப்புடன் அவற்றை பார்த்து நின்றிருந்தான். சற்று நேரத்தில் அவன் பார்வை முழுவதையும் பூவிழியே ஆக்கிரமித்து இருந்தாள்.

துப்பட்டாவை தோளின் குறுக்காக கட்டிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடி பந்தை பிடித்து, எடுத்து வீசிக் கொண்டிருந்தாள் அவள்.

பூவிழி இந்த வீட்டிற்கு வந்த இந்த இரண்டரை மாதங்களை அவன் மனம் அலச ஆரம்பித்தது.

அவளின் குணம், விளையாட்டுத்தனம், ஒளிவு மறைவற்ற பேச்சு, அலட்டல் இல்லாத மிதமான அழகு அவனை முன்பே கவர்ந்து இருந்தது. ஆனால் அதை இப்போது வேறு கோணத்தில் சிந்தித்து பார்க்க தோன்றியது அவனுக்கு.

அங்கே, தன்னையே முறைத்து நின்ற மார்த்தாண்டனைப் பார்த்து விட்டு, தன் கையிலிருந்த மட்டையை ராபர்ட்டிடம் கொடுத்து விட்டு அவனிடம் ஓடி வந்தாள் பூவிழி.

“என்ன மொறப்பு?” என்று கேட்டபடியே,

“லக்கேஜ் எல்லாம் பேக் பண்ணிட்டேன், நான் ஊருக்கு கிளம்பறேன்” என்று அவன் நடக்க, தன் துப்பட்டாவை சரிசெய்த படி, அவனோடு நடந்து வந்தவள், “நாளைக்கு தான போறேன்னு சொன்ன, இப்பவே கிளம்பறேன்னு சொல்ற” அவள் முகம் சுருங்கி போனது.

“போடீ உனக்கு என்னை விட அந்த கிரிக்கெட் தான முக்கியமா போச்சு” என்று அவன் ஆதங்கப்பட, “கோச்சுக்காத தண்டம், ம்ம் நான் வேணும்னா உனக்கு கிஸ் தரேன், ஓகே வா” என்று பேரம் பேசினாள்.

அவள் தலையில் தட்டியவன், “எனக்கு திங்க்ஸ் எடுத்து வைக்க ஹெல்ப் பண்ணாம, இங்க வந்து ஆட்டம் போட்டுட்டு, லஞ்சமா ஒரு கிஸ் தந்தா மட்டும் போதுமா! ரெண்டா கொடு” மாரி அசராமல் கேட்க, “ஆ ஆச தோச அப்பளம் வடை, அதுக்கு வேற ஆள பாரு” என்று அழகு காட்டினாள்.

“எக்ஸ்ரா ஒரு கிஸ்காக நான் வேற ஆள பார்க்கணுமா! ஏன் நீ தந்தா குறைஞ்சிடுவியா” என்று அவளை சீண்டினான். அவள் பதில் தராமல் அமைதியாக, “போய் சீக்கிரம் ரெடி ஆகிட்டு வா, வெளிய எங்காவது போய் வரலாம். ஊருக்கு போனதுக்கு அப்புறம் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன்” என்று அவள் கையை அழுத்தி பிடித்து கொண்டான்.

“இந்த சீனெல்லாம் ஒண்ணும் வேணா, அதான் தில்லு பேபி நம்ம கல்யாணத்துக்கு சரி சொல்லிடுச்சு இல்ல, சீக்கிரம் உன் வீட்ல சொல்லி, என்னை  வந்து பொண்ணு கேக்கற வழிய பாரு” என்று மிரட்டலாக சொல்லி விட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவள் குளித்து தனக்கு மாரி பரிசளித்த சேலையை வாகாய் கட்டிக் கொண்டு தயாராகவும், கதவு தட்டப்படவும் சரியாய் இருந்தது.

துள்ளி ஓடிவந்து கதவை திறந்தவளின் புருவங்கள் வியப்பில் உயர, அவள் கண்கள் அகல விரிந்தன. “சித்து சர், நீங்களா! இங்கயா! உள்ள வாங்க” என்று உற்சாகமாய் வரவேற்றாள்.

அந்த சிறிய அறையை அவன் பார்வை ஒருமுறை ஆராய்ந்தது. அங்கங்கு வரைப்பட தாள்களும் வண்ண கலவைகளும் காட்சி தந்தன.

“என் ரூம் எப்பவும் இப்படி கலைஞ்சி, நிறைஞ்சி இருந்தா தான் எனக்கு பிடிக்கும்” என்று அவன் கேளாமலேயே பதில் தந்தாள்.

அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டவன், “ஃபிளவர், நான் உன்கிட்ட ஒன்னு கேட்பேன், அதுக்கு நீதான் பதில் சொல்லணும்” அவன் சுற்றி வளைத்து பேச, இவளுக்கு புரியாமல் வழக்கம் போல விழித்து வைத்தாள்.

சித்தார்த் முகத்தில் இளநகை பரவ, “என்னை உனக்கு பிடிச்சு இருக்கா?”

“உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் சித்து சர்” அவள் பதில் சட்டென வந்தது.

“அப்ப என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா?” சித்து கேட்டு விட, பூவின் விழிகள் தெறித்து விடுவது போல விரிந்தன.

“என்னை பத்தி, நிஷாவ பத்தி உனக்கு நல்லாவே தெரியும், நிதானமா யோசிச்சு பதில் சொல்லு ஃபிளவர்” என்று அவன் எழுந்து செல்ல,

“சித்து சர், யோசிக்க எல்லாம் வேணா, நான் இப்பவே பதில் சொல்லிறேன். எனக்கு உங்கள பாத்த உடனயே ரொம்ப பிடிச்சது, எங்க பி.டி. சார கூடத்தான் பிடிச்சது, அவரும் உங்கள் மாதிரியே சூப்பரா இருந்தாரு, அப்பறம் ஹிர்திக்ரோஷன், எங்க காலேஜ் சேர்மன் இப்படி நிறைய பேரை எனக்கு பிடிக்கும்…!” பூவிழி அடுக்கிக் கொண்டே போக, தான் கேட்டதற்கு இது பதில் இல்லையே! என்ற ரீதியில் சித்தார்த் பார்த்து நின்றான்.

“ஆனா, முதல்ல பாத்தப்போ அவன எனக்கு சுத்தமா புடிக்கல! அவனோட சிடுசிடு மூஞ்சி புடிக்கல! அவனோட முரட்டு முகம் புடிக்கல! அவனோட அதிகார பேச்சு புடிக்கல! சும்மா சும்மா ரூல்ஸ் பேசினான், எனக்கு சுத்தமா புடிக்கல”

“யாரது ஃபிளவர்?” சித்து நெற்றி சுருங்க கேட்க,

“ஒருநாள் திடீர்னு வந்து எனக்கு ஹெல்ப் பண்ணான், மரத்தில இருந்து என்னை இறக்கி விட்டான், அன்னிக்கு என்கிட்ட சிரிச்சு வேற பேசினான், நான் இருட்ட பார்த்து பயந்தப்ப, என்னை கிண்டல் பண்ணாம, அவன் கையை பிடிச்சுக்க சொல்லி நீட்டினான், பார்ட்டில ஒரு அரை லூசு என்னை வம்பிழுத்தானா! அப்ப இவன் வந்து என்னை கூட்டிட்டு வந்தான். அன்னிக்கு நிறைய பேசினான், சத்தமா பெருசா சிரிச்சான், நான் அழுதப்ப என்னை அவனோட தோள்ல சாச்சிக்கிட்டான்”

பூவிழி சொல்லி கொண்டே போக, சித்தார்த்திற்கு ஏதோ புரிவது போல் இருந்தது. அவன் குறுக்கே பேசாமல் அமைதி காத்தான்.

“அப்புறம், அப்புறம், அன்னிக்கு பீச்ல…” மேலும் அவள் சொல்ல தயங்க,

“பூவிழி!” அழைப்பு கேட்டு இருவரும் திரும்பினர். அறை வாயிலில் மார்த்தாண்டன் நின்றிருந்தான்.

இவள் சித்தார்த்தை பார்த்து, தன் பேச்சை தொடர்ந்தாள்.

“அவன் இப்பவும் சிடுசிடு மூஞ்சி தான், ஆனா என் பக்கத்தில வந்தா மட்டும் சிரிச்சிட்டே இருப்பான், அவன் இப்பகூட முரட்டு பீஸ் தான், ஆனா என்கிட்ட மட்டும் சாஃப்ட்டா நடந்துப்பான், அவனுக்கு என்னை பிடிச்சிருக்கா? இல்லையான்னு எனக்கு தெரியல, ஆனா, அவன் என்னை முழுசா புரிஞ்சிட்டு இருக்கான்! நான் எதுக்கு அழுவேன்! எப்ப சிரிப்பேன்னு அவனுக்கு நல்லாவே தெரியும், என்னை ஆளவும், எங்கிட்ட அடங்கி போகவும் அவனுக்கு மட்டும் தான் தெரியும்”

இரு ஆண்களும் எதுவும் குறுக்கே பேசவில்லை. உணர்வுகள் நிரம்பி வழிந்த அவள் முகத்தையே பார்த்து நின்றிருந்தனர்.

“இப்ப கூட அவன எனக்கு பிடிச்சிருக்கா! பிடிக்கலையா?ன்னு எனக்கு சொல்ல தெரியல! லைஃப் லாங் அவன் கைய புடிச்சிட்டு அவன் கூடவே போகணும்னு மட்டும் தான் தோணுது! அவன என்னால விட முடியாது சித்து சர், நான் முன்ன சொன்ன மாதிரி நீங்க வேற ஃபிகர கரெக்ட் பண்ணிக்கோங்க சர்”

பூவிழி சொன்ன விதத்தில் சித்தார்த் சிரித்து விட்டான். “உனக்கு இவ்வளவு சீரியசா பேச வரும்னு நான் சத்தியமா எதிர் பார்க்கவே இல்ல ஃபிளவர்” என்றவன்,

இன்னும் அறை வாயிலில் நின்றிருந்த மாரியிடம், “ஃபிளவர் சொன்னதுல எனக்கு ஒண்ணு மட்டும் தான் புரிஞ்சது, நீ அவளை இம்ப்ரஸ் பண்ண டிரை பண்ணல, அவளோட அவளுக்கான உணர்வுகளை புரிஞ்சிட்டு நடந்துட்டு இருக்க, வாழ்த்துக்கள் மாரி, சாரி பாஸ், உன் ஆளுன்னு தெரியாம ஏதோ கேட்டுட்டேன்” என்று மன்னிப்பும் கேட்டுவிட்டு வெளியேறினான்.

தான் நிஷாவின் உணர்வுகளை புரிந்து கொள்ள தவறியதை இப்போது அவன் மனசாட்சி சித்தார்த்திடம் கடிந்து  கூறியது.

மார்த்தாண்டன் பூவிழியை விழியெடுக்காமல் பார்த்தப்படி அப்படியே நின்றிருந்தான்.

அவன் பார்வையில் தெரிவது என்ன? உச்சகட்ட சந்தோசமா! உச்சகட்ட பெருமிதமா! உச்சகட்ட பிரம்மிப்பா! அவனாலேயே உணர்ந்துகொள்ள இயலாத ஒரு நிறைவான உணர்வை அவனுள் நுழைத்து விட்டிருந்தாள் அவனின் காதலி.

நிறைந்த குடம் தளும்பாததைப் போல அவனின் நிறைந்த மனமும் தளும்பாமல் தன்னவளை பார்வையால் நிறைத்துக் கொண்டு இருந்தது. அவன் செயலற்ற மௌனம் பூவிழியை கடுபேற்ற செய்தது.

“உனக்கெல்லாம் யாருடா ஹீரோ சான்ஸ் கொடுத்தது? ரூல்ஸ் படி இந்நேரம் நீ ஓடிவந்து என்னை இறுக்கமா ஹக் பண்ணி இருக்கணும், ச்சே இதை கூட உனக்கு நான் சொல்ல வேண்டியதா இருக்கு?” என்று தலையில் அடித்து கொண்டவள் விரிந்த புன்னகையோடு தன் இருகைகளையும் விரித்து நின்றாள்.

மாரியின் முகத்திலும் மென்மையான இளநகை அழகாய் விரிய, அவளை நோக்கி வந்தவன், அவளின் விரிந்திருந்த கைகளை கீழே இறக்கி விட்டு அவள் முகத்தை தன்னிரு கைகளில் பொக்கிஷமாய் ஏந்தி கொண்டான்.

“ஆசை, காமம் தாண்டியும் வேற ஏதோ அளக்க முடியாத ஆழமான ஒண்ணு… காதல்ல இருக்குன்னு நீ இப்ப என்னை உணர வச்சுட்ட டீ, ஐ லவ் யூ டீ சுண்டக்கா, வேற என்ன… எப்படி சொல்றதுன்னு எனக்கு சத்தியமா தெரியல டீ” என்றவன் அவள் நெற்றியில் அழுத்தமாய் இதழ் ஒற்றினான்.

தாளாத நேசத்தில் அந்த முரட்டு சிங்கத்தின் விழியோரம் கசிந்த கண்ணீரை மென்மையாய் துடைத்து விட்டவள், “என்னை சுண்டக்கான்னு கூப்பிடாதன்னு சொல்லி இருக்கேன் இல்ல” தன் வாயை கோணி காட்டி அவனை முறைத்து வைத்தாள்.

அவன் பார்வை அவள் முகத்தை ரசனை மாறாமல் வருடிக் கொண்டிருந்தது.

“நான் அப்படி தான் கூப்பிடுவேன் சுண்டக்கா, அப்பறம் இனிமே உன்கூட பேச்சு வளர்க்க என்னால முடியாது, நான் உடனே கிளம்பணும்” என்றான் அவள் நெற்றியோடு நெற்றி முட்டி.

“எங்க போகணும்ம்ம்” அவள் சிணுங்கலாய் கேட்க,

“அம்மாகிட்ட போய் பேசி உடனே நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ய போறேன். இனிமேலும் தள்ளி போடறது எனக்கு சரியா படல” என்று அவளுக்கு இன்ப அதிர்ச்சி தந்து விலகி நடந்தான்.

அறை கதவை அவன் அடையும் போது, “அப்ப கட்டிபுடி வைத்தியம் இப்ப இல்லயா?” வெறுமையாய் அவள் குரல் ஒலிக்க, திறந்திருந்த கதவை அடைத்தவன், அவளை இழுத்து அணைத்து கொண்டான்.

ஒவ்வொரு நொடிக்கும் அவன் கைகளின் இறுக்கம் கூடிக் கொண்டே போக, பூமகளின் மென் தேகம் வலிக்க செய்தது. வலியிலும் இதம் கண்டவளாய் தன்னவனுக்குள் அமிழ்ந்து போனாள்.

****************

கோவில் பிரகாரத்தை ஒன்பது சுற்று சுற்றி விட்டு, பணிந்து வணங்கி எழுந்து நடந்தாள்.

இப்போதைய பூவிழியின் திடீர் பக்திக்கு காரணம் மாரியின் அம்மா, அப்பா எப்படியும் தங்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்பது மட்டுமே. மாரி அவளிடம் விடைபெற்ற அரைமணி நேரத்தில் தன் ஊரை நோக்கி கிளம்பி இருந்தான்.

ஏனோ இவளுக்கு தான் இருப்பு கொள்ளவில்லை மனம் காரணமே இல்லாமல் தடதடத்துக் கொண்டிருந்தது. அதனாலேயே கோவிலுக்கு வந்திருந்தாள். சாலையில் கைகாட்டி அழைக்க, நின்ற ஆட்டோவில் ஏறியவள், அடுத்த நிமிடத்தில் சுயநினைவை இழந்திருந்தாள்.

 

எக்குத்தப்பா சிக்கிட்டேனோ?(நிறைவு)

பூவிழி கண்கள் திறக்கும் போது, வாய், கைக்கால்கள் பிணைக்கப்பட்ட நிலையில் கிடந்தாள். தனக்கு என்ன நேர்ந்தது என்று அறியவே அவளுக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டன.

‘என்னது கிட்நாப்பா! என்னையா! எந்த மங்குனியோட வேலை இதுன்னு தெரியலயே?’ என்று சுற்றிலும் பார்வையை சுழற்றினாள்.

அது பாழைடைந்த தட்டுமுட்டு சாமான்கள் நிறைந்த ஒற்றடை படிந்த இருட்டறையாக இல்லை என்பதால் அவளுக்குள் சிறு நிம்மதியாக இருந்தது.

‘ஆமா, சினிமால எல்லாம் அப்படிதான காட்டுவாங்க, அந்த அறையில எலி, பல்லி, தேளு, கரப்பான்பூச்சி, இன்னும் தூசு தும்மு ச்சே நினக்கவே கதிகலங்குது!’

‘அப்ப அதெல்லாம் சும்மா சினிமால மட்டும் தான் போல இருக்கு, நிஜத்தில கிட்னாப்பர்ஸ் திருந்திட்டாங்க போல, புத்தம் புதுசா பெய்ண்ட் வாசனை கூட போகாத அறையில என்னை கட்டி வச்சிருக்காங்க’

‘அய்யோ பூவு இங்க உன்ன கடத்தி வச்சிருக்காங்க, அவனுங்க வரதுக்குள்ள இங்கிருந்து தப்பிக்க வழிய பாரு’ என்று நினைத்தபடி எழுந்து நிற்க முயன்றாள்.

“ம்ஹூம் முடியலயே! ரூல்ஸ் படி இப்ப ஹீரோ வந்து வில்லனுங்களோட ஃபைட் பண்ணி என்னை காப்பாத்தணும், என் முரட்டு ஹீரோவும் நல்லா தான் சண்ட போடுவான், ஆனா என்னை கடத்தினது அவனுக்கு தெரிஞ்சு அவன் ஊருல இருந்து வந்து என்னை காப்பத்தறதுக்கு உள்ள என்னென்ன நடக்குமோ! கடவுளே!’ அவளுக்குள் உண்மையாகவே பயம் பரவியது.

கதவு திறக்கப்பட விதிர்த்து திரும்பினாள்.

முகத்தின் குறுக்கே கைக்குட்டை கட்டி அடையாளத்தை மறைத்தப்படி இரண்டு பேர் உள்ளே வந்தனர். இவளின் மனம் பதற தொடங்கியது.

அவர்கள் பின்னால் வேறொருவன் வந்தான். பூவிழியின் கண்கள் தெறித்து விடுவன போல் விரிந்தன. அவன் ராம்குமார்! சத்யவர்த்தினி கணவன்!

‘அச்சோ இந்த கேரக்டர எப்படி மறந்தேன்? சாதுவான கேரக்டர்னு கண்டுக்காம விட்டது தப்பா, இப்படி டெர்ரர் என்ட்ரீ கொடுக்குறான்!’ அவள் வாயிலிருந்த கட்டு அவிழ்க்கப்பட்டது.

“ராம்குமார் சார், நீங்களா? என்னை எதுக்கு சார் கடத்தினீங்க?” அவள் குரல் கீச்சிட்டது.

“இந்த உலகத்தில எல்லாமே தனித்தனி இனமா பிரிக்கப்பட்டு இருக்கு, அந்தந்த இனம் அங்கங்க இருந்தா யாருக்கும் பிரச்சனையே இருக்காது. புரிஞ்சுதா?”

அவன் நிதானமாக பாடம் எடுக்க, இவள் திருதிருவென விழித்தவள், “கடவுள் சத்தியமா எனக்கு ஒண்ணுமே  புரியல சார்!” என்க.

ராம்குமார் அவள் பதிலில் கடுப்பாகி, “ஏய், எங்க வீட்ல வேலைக்கு வந்தவ தான நீ, இப்ப, அந்த வீட்டு மகாராணியா ஆக பார்க்கறீயோ!” என்று கோபமாக கேட்க,

“இப்பவும் எனக்கு எதுவுமே புரியல சர்!” பூவிழி அப்பாவி தனமாய் சொல்ல, ராம்குமாருக்கு மேலும் கடுப்பேறியது.

“ஏய், என் குழந்தைங்களை பாத்துக்கிறேன்ற பேர்ல, சித்துவோட ஷாப்பிங் போனது, பீச் ஹவுஸ் போய் கூத்தடிச்சது இதெல்லாம் இல்லாம, அவன் உன்ன காதலிச்சு, கல்யாணம் பண்ணிக்கிற லெவலுக்கு செஞ்சிட்ட இல்ல! சின்ன பொண்ணுன்னு பார்த்தா பெரிய கைகாரி தான் நீ”

“நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுட்டு இருக்கீங்க! சித்து சர் என்னை காதலிக்க எல்லாம் இல்ல”

“ஓ உங்களுக்குள்ள ஒண்ணுமில்லாம தான், இன்னைக்கு சித்து உன் ரூம் வரைக்கும் வந்து போனானா?” அவன் கேள்வியில் இவளுக்கு தலையில் அடித்து கொள்ளலாம் போல இருந்தது. அதற்கும் வகையில்லாமல் கைகள் கட்டப்பட்டு இருந்தன.

‘அச்சோ, இவன்‌ அரை லூசா, முழு லூசான்னு கூட தெரியலயே! எல்லாத்தையும் எடாகூடமா தெரிஞ்சிகிட்டு, என்னை கடத்தி வேற வந்திருக்கானே, இந்த மாக்கான் கிட்ட எப்படி சொல்லி விளங்க வைப்பேன்’ அவள் மனம் புலம்ப,

“சார், நானும் மாரியும் தான் லவ் பண்றோம், சித்தார்த் சார் லவ் பண்ணது வேற பொண்ண,‌ என்னை முதல்ல விடுங்க” பூவிழி குரலை உயர்த்தி உண்மையை சொல்ல,

“ஏய், எங்ககிட்ட இருந்து தப்பிக்க சும்மா கதை அளக்காத” என்றான்.

‘அய்யோ இவனுக்கு மூளைக்கு பதில் எதை வச்சு தொலைச்சானோ! அந்த ஆண்டவன்’ என்று எண்ணியவள், “உங்களுக்கு சந்தேகம்னா மாரிக்கு ஃபோன் போட்டு கேளுங்க” என்றாள்.

ராம்குமார் சந்தேகமாய் கைபேசியில் சத்யவர்த்தினியிடம் பேச, அவளுக்கும் இது குழப்பமாக இருந்தது.

‘வசதி குறைந்த இடமாக இருந்தாலும் பரவாயில்லை சித்தார்த் விரும்பும் பெண்ணையே அவனுக்கு மணமுடித்து விடலாம்’ என்ற ஏகாம்பரத்தின் முடிவும், அதோடு சித்து, பூவிழி அறையிலிருந்து வெளியே வந்ததையும் கவனித்து விட்டு அவன் விரும்பும் பெண் பூவிழி தான் என்ற முடிவுக்கு வந்திருந்தனர் கணவனும் மனைவியும்.

அதோடு இந்த திருமணத்தை அவர்களால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. அவர்களின் பணக்கார குறுக்கு புத்தி பூவிழியை கடத்தி மிரட்டி இங்கிருந்து விரட்ட திட்டம் வகுத்தது.

ஆனால், இப்போது ஏதோ நெருட, சத்யா நேராக சித்துவிடம் சென்று கேட்டே விட்டாள். “சித்து, அந்த பூவிழியும் மாரியும் லவ் பண்றாங்களா என்ன?”

“ப்ச் பாருக்கா, இந்த விசயம் உனக்கு கூட முன்னயே தெரிஞ்சு இருக்கு, எனக்கு இன்னைக்கு தான் தெரிஞ்சது, சும்மா சொல்ல கூடாது அவங்க ரெண்டு பேரும் செம ஜோடிக்கா” என்றான் உற்சாகமாய்.

சத்யவர்த்தினி முகம் வெளிறிப்போனது. உடனே கணவனுக்கு தகவல் தர, இப்போது ராம்குமாருக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போலானது. மாரியின் அடியையும் கோபத்தையும் நினைக்க இவனுக்கு இப்போதே கதி கலங்கியது.

‘டேய் மாரி, உன் வருங்கால பொண்டாட்டி, ஆபத்துல சிக்கிக்கிட்டா டா, சீக்கிரம் வந்து என்னை காப்பாத்து டா, எனக்கு ரொம்ப பயமா இருக்கு டா, அழுக கூட வருது டா’ பூவிழி மானசீகமாய் அவனிடம் மன்றாடிக் கொண்டு இருந்தாள்.

‘ப்ளீஸ் ப்ளீஸ் தண்டம் சீக்கிரம் வா!’

இரவாகியும் கோயிலுக்கு சென்ற பூவிழி வராததால், சாவித்திரி ஜெயலட்சுமிக்கு தகவல் சொல்ல, ஜெயா மாரியிடம் விவரம் கேட்டாள்.

பேருந்தில் பாதி தூரம் சென்று கொண்டிருந்தவன், அப்படியே திரும்பி வந்தான். அவன் மனம் ஏனோ அவனை எச்சரித்தது.

தன் நண்பர்களை தொடர்பு கொண்டு பூவிழியின் கைப்பேசி இருப்பிடத்தை அறிந்து கொண்டு விரைந்தான். அந்த இடம் அத்தனை பாதுகாப்பான இடமில்லை என்பதை இவன் அறிந்து இருந்தான்.

இரவு ஏறிக்கொண்டு இருந்தது. பூவிழியை இருவர் காருக்குள் ஏற்றினர். ராம்குமார் முன் இருக்கையில் அமர்ந்து கொள்ள கார் விரைந்தது.

அந்த பகுதியை கடக்கும் முன்னே காரை இரண்டு வேன்கள் மறித்து நின்றன. ஒரு வேனிலிருந்து மாரி இறங்கி வர, மற்றொன்றில் அவனது நண்பன் கேசவ் இறங்கி வந்தான். நேராக வந்தவர்கள் காரின் பின் கதவை திறந்து, அதிலிருந்த அடியாட்களை இழுத்து வெளியே வீசினர்.

மாரி, பூவிழியை மீட்டு அவள் கட்டுக்களை விடுவிக்க, இவள் அவன் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை வைத்தாள்.

இதை சற்றும் எதிர்பாராதவன், “ஏன் டீ?”

“இவ்ளோ லேட்டாவா என்னை காப்பாத்த வருவ! மறுபடியும் கடத்தினா சீக்கிரம் வந்து தொலடா! நான் ரொம்ப பயந்திட்டேன் தெரியுமா!” என்று அவன் மார்பில் முகம் புதைத்தாள்.

அவள் உடலின் நடுக்கத்தை அவனாலும் உணர முடிந்தது. தன்னவளை ஆதரவாக அணைத்துக் கொண்டான்.

இதற்குள், கேசவ் ராம்குமாரை பிடித்து, அவன் முகத்தை பெயர்த்து இருந்தான்.

“எப்பா மாரி, தெரியாம செஞ்சுட்டேன், என்னால வலி தாங்கல விட்டுட சொல்லு பா” என்று கெஞ்சிடலானான்.

மார்த்தாண்டன் கோபமாக ஒற்றை கையால் அவன் சட்டையை பிடித்து இழுத்து, “ஏய், இவளுக்கு  மட்டும் ஏதாவது ஆகியிருந்தது, உன் வீட்டில ஒருத்தர் மிஞ்சி இருக்க மாட்டீங்க!”

“அய்யோ இல்ல பா, சித்து காதலிக்கிற பொண்ணுன்னு தப்பா நினச்சு தான் பண்ணிட்டேன்”

“தைரியமிருந்தா உன் வீட்டு பையன அடக்க வேண்டியது தான, எதுக்கு ஊரான் வீட்டு பொண்ண கடத்தி, மிரட்டுற இந்த கேவலமான வேலை! ச்சே இதுல நீங்கெல்லாம் பெரிய மனுசங்க வேற” வெறுப்பாய் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.

பூவிழி இன்னும் நீங்காத பயத்தில் அவனை விட்டு விலகாமல் ஒட்டியே அமர்ந்து இருந்தாள். மாரி வேறுவழியின்றி அவளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி தந்து தான் அவளை சுயநிலைக்கு கொண்டு வர வேண்டியதாயிற்று.

***************

ஒரு வாரத்திற்கு பின்பு நிஷாந்தினியிடம் இருந்து அழைப்பு வர, சித்தார்த் மறுவார்த்தை இன்றி வேகமாக சென்று அவள் முன் நின்றான்.

காரில் ஏறி அமர்ந்தவள், அவன் முகத்தை பார்த்து, “எங்க வீட்ல தெளிவா சொல்லிட்டேன், என் வாழ்க்கை சித்து கூட மட்டும் தான்னு, இப்ப நீ எங்க கூப்பிட்டாலும் நான் வரேன், பீச் ஹவுஸ்… கூட ஓகே!” சற்று திணரலுடன் சொல்லி முடிக்க,

“சாரி நிஷா, நான் தான் உன்ன புரிஞ்சிக்காம தப்பா பேசிட்டேன். எங்க வீட்லயும் நான் உன்ன பத்தி சொல்லிட்டேன். அம்மா, அப்பாவுக்கும் சம்மதம், சீக்கிரமே முறைப்படி உன்ன எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திடுறேன்” என்று சித்தார்த் அவளுக்கு இன்ப அதிர்ச்சி தந்தான்.

ஊடலுக்கு பின் வந்த கூடலில் இவர்களின் காதல் அழகாய் சிக்கிக் கொண்டது.

***************

ஒன்றரை வருடம் கடந்து இருந்தது.

மார்த்தாண்டன் இப்போது தனியார் துப்பறியும் நிறுவனம் அமைத்து அதில் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருந்தான்.  பூவிழி இப்போதும் ஓவிய ஆசிரியை தான். இரு குழந்தைகளுக்கு அல்ல, இருபதிற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஓவிய பயிற்சி கூடம் அமைத்து நடத்திக் கொண்டிருந்தாள். தங்கள் காதல் வாழ்வின் இன்ப தருணங்களை எல்லாம் தன் ஓவியங்களில் சிறைப்பிடித்து இருந்தாள்.

காலையின் பரபரப்பில், டோஸ்டரில் பிரட் டோஸ்ட் ஆகி கொண்டிருந்தது. குக்கர் விசில் கிளப்பியது. அடுப்பில் பால் ஒருபுறம் பொங்கியது. தொலைக்காட்சியில் கார்டூன் ஓடிக் கொண்டிருக்க, மிக்ஸியில் சட்னி அரைத்து கொண்டிருந்த மாரி, கூடத்தில் சோஃபாவில் தன் மகனுடன் அமர்ந்து கார்டூனில் மூழ்கி இருக்கும் பூவிழிக்கு  கடுகடுப்பாக குரல் கொடுத்தான்.

“பூவிழி, இங்க வந்து கிச்சன்ல எனக்கு ஹெல்ப் பண்ணாம, என்னடி பண்ற அங்க”

“கொஞ்ச நேரம் டிவி பார்க்க விடுறியா தண்டம் நீ! இப்ப என்ன? இதெல்லாம் நீயே பாத்துக்கிறேன்னு சொல்லி தான என்னை கட்டிகிட்ட, இப்ப அலுத்துக்கற”

“உனக்கு இதெல்லாம் கத்து கொடுக்கறேன்ற அர்த்தத்தில தான் அப்படி சொன்னேன், வருச கணக்கா எல்லா வேலையும் என் தலைலயே கட்டுவன்னு நான் என்னத்த கண்டேன்”

“கல்யாணமான புதுசுல நீ சிரிச்சிட்டே இந்த வேலையெல்லாம் செஞ்ச இல்ல”

“அப்ப, புது பொண்டாட்டி மேல இருந்த ஆசையில செஞ்சேன் டி”

“அப்புறம் கூட சமத்தா எல்லா வேலையும் நீயே செஞ்ச”

“ஆமா, அப்ப நீ கன்சீவ்வா இருந்த உனக்கு கஷ்டம் வேணாம்னு நானே செஞ்சேன்”

“குழந்தை பொறந்த அப்புறமும் நீதான் செஞ்ச!”

“பச்சை உடம்புகாரி அதான் நானே செஞ்சேன், இப்பதான் அவன் வளர்ந்துட்டான் இல்ல, இப்பவும் நானே செய்யணும்னா எப்படி? எனக்கு ஆஃபிஸ் வேற போகணும்”

“அதெல்லாம் இல்ல, இனிமேலும் நீயே தான் செய்யணும், இப்ப செகண்ட் ரௌண்டு” சொல்லிவிட்டு பூவிழி கண்ணடிக்க,

மாரியின் முகம் உணர்வு பெருக்கில் மலர்ந்தது. “ஏய், சுண்டக்கா நிஜமாவா!” என்று பூரிப்பாய் அவளின் மணி வயிற்றை வருடி தந்தான்.

“ஆமாண்டா பரங்கி மலை, நம்ம வீட்ல இன்னொரு குட்டீஸ் வர போகுது” என்று அவன் முரட்டு கன்னம் கிள்ளி முத்தம் வைத்தவள், “இப்ப இந்த வேலையெல்லாம் யார் செய்வா?” என்று கேட்க, “வேற யாரு நான் தான், உங்கிட்ட வசமா சிக்கிக்கிட்டது நான் தானே” என்று பூவிழியின் மூக்கை பிடித்து ஆட்டி செல்லம் கொஞ்சியவன், மற்ற வேலைகளை வேகவேகமாக செய்யலானான்.

தன்னவனின் சுணக்கம் காட்டாத நேசத்தில் இந்த ஏந்திழையும் சுகமாய் சிக்கித்தான் கிடந்தாள், அவன் நெஞ்சாங் கூட்டிற்குள்.

மொத்தமா சிக்கிட்டாங்கப்பு!

 

# # முற்றும் # #

 

 

error: Content is protected !!