ESK-11
ESK-11
சுவாசம் — 11
டிக்… டிக்… டிக்… கடிகாரத்தின் மெல்லிய ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. இள நீல வண்ண சோகையான வெளிச்சம் தரும் விடிவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. தூக்கம் வராமல் ஓடும் மின் விசிறியைப் பார்த்தபடி படுத்திருந்தாள் சிவரஞ்சனி. ஓடும் நதியோடு ஓடும் துடுப்பில்லா ஓடம் போலத் தன் வாழ்க்கை ஆகிவிட்டது, என்பதைக் கசப்புடன் உணர்ந்தாள்.
இன்னும் வாழ்க்கை தனக்கு என்னென்ன திகில் பக்கங்களை வைத்துள்ளது என்று புரியவில்லை அவளுக்கு. இனி தனது வீட்டிற்குக் கண்டிப்பாகப் போக முடியாது என்பது அவளுக்குத் தெரியும். போகவும் விருப்பமில்லை.
தான் நல்ல நிலையில் இருக்கும் போதுதான், இனி சித்தியைப் போய்ப் பார்க்க வேண்டும் என்ற வைராக்கியத்தை மனதில் வைத்துக் கொண்டாள். என்றுமே தனது விதியை நொந்து கொள்வாளே தவிர, அவளது சித்தியை வெறுத்ததில்லை.
தந்தையும் தாயும் இல்லாமல் இருந்த அந்த இரண்டும் கெட்டான் வயதில், சித்தி தன்னை வீட்டை விட்டுத் துரத்தியிருந்தாலும், தன்னால் எதுவும் செய்திருக்க முடியாது என்பது அவளுக்குத் தெரியும்.
திட்டியோ, அடித்தோ, அரை வயிற்றுக் கஞ்சியை ஊற்றியோ இதுவரை அடைக்கலம் கொடுத்தவள் சித்தி தான். அந்த நன்றி அவளுக்கு இருந்தது. மேலும் கல்யாணியின் பாசத்திற்கு முன் சித்தியிடம் பட்ட கஷ்டங்கள் பெரிதாகத் தோன்றவில்லை அவளுக்கு.
கேசவன் வந்து தொல்லை கொடுக்கும் வரை அந்த வீட்டை விட்டு வெளியே போகும் எண்ணம் வந்ததில்லை.
அப்பொழுது கூட, அவளது சித்தியின் கண்பார்வை படும் தூரத்தில் தனியே இருக்கத்தான் விரும்பினாள். அப்பொழுதுதான் கல்யாணியைப் பார்த்துக் கொள்ளவும் முடியும் என்று எண்ணியிருந்தாள்.
தன்னை அழைத்து வந்த அமைச்சரையும் வாசுகியையும் நினைத்துக் கொண்டாள். மிகவும் அருமையான மனிதர்கள் மனம் சிலாகித்தது. தான் படிப்பதற்கான அத்தனை செலவையும் ஏற்றுக் கொள்வதாகக் கூறியதை எண்ணிப் பார்த்தாள்.
நாளை கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணியதும் அனிச்சையாக உடல் தூக்கிப் போட்டது. மீண்டும் அதே கல்லூரிக்குச் செல்ல சுத்தமாக விருப்பமில்லை. ஏதாவது பெண்கள் விடுதியில் சேர்த்துவிடச் சொல்வோம் என்று எண்ணிக் கொண்டாள். வேலைக்குப் போய் விடுதிக் கட்டணத்தைக் கட்டிக் கொள்ளலாம்.
அமைச்சரிடம் கேட்டால் கண்டிப்பாக நல்ல வேலையாக வாங்கித் தருவார். அதற்குப் பின் அநாவசியமாக யாருக்கும் தொல்லை தரக் கூடாது என்று எண்ணிக் கொண்டாள்.
அஞ்சல் வழிக் கல்வி மூலமாக விட்ட படிப்பைத் தொடர முடியும் என்றும் எண்ணிக்கொண்டாள். நாளை இதுபற்றி விரிவாக வாசுகியிடம் பேச வேண்டும். அவரிடம் சொல்லி ராகவனிடம் கேட்க வேண்டும்.
இப்படியே எண்ணிக் கொண்டிருந்தவளின் எண்ணங்கள் கதிர் கேசவனைப் புரட்டி எடுத்ததை நினைத்துக் கொண்டது.
‘அடேங்கப்பா… அவருக்கு எவ்வளவு கோபம் வருது? அவர் முழுதாக ஐந்து நிமிடங்கள் கூட வீட்டினுள் இல்லை. அதற்குள் கேசவனின் கையும் முகமும் உடைந்ததோடு நில்லாமல் ஒரே அதட்டலில் சித்தியும் அடங்கி விட்டாளே’
‘நாளைக்கு அவர் வருவதற்குள் தீனதயாளன் பற்றி வாசுகியிடம் சொல்லி விட வேண்டும். அவருக்குத் தெரிந்தால் தீனதயாளனுக்கும் அடி நிச்சயம்.’ என்று எண்ணிக் கொண்டவள், தன்னால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இனி வேண்டாம் என்றும் நினைத்தாள்.
பல்வேறு சிந்தனைகளில் உழன்றவள், வெகு நேரத்திற்குப் பின் உறங்கிப் போனாள். அதிகாலையில் எப்பொழுதும் போல விழிப்பு வந்ததும் எழுந்தவள், அந்த அறையோடு ஒட்டியிருந்த குளியலறையில் தன்னைச் சுத்தப் படுத்திக் கொண்டு, குளியலையும் முடித்தாள்.
முன்தினம் அவளுக்கு வாங்கிய உடைகள் அந்த அறையிலேயே வைக்கப் பட்டிருந்தது. அவற்றில் இருந்து இளநீல வண்ணத்தில், பல்வேறு வண்ண மணிகள் வைத்துத் தைக்கப்பட்ட ஒரு சுடிதாரை எடுத்து அணிந்தாள். அது அவளுக்கு அழகாகப் பொருந்தியது.
தலையைச் சீவி பின்னலிட்டவள், கிளம்புவதற்குத் தயாராக அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு வெளியே வந்தாள். அங்கே பரபரப்பாக ராகவன் வெளியே கிளம்பிக் கொண்டிருக்க, வாசுகி அவரது பயணத்திற்குத் தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்ததும் வாசுகி, “நைட் சரியா தூங்கலையாம்மா? கண்ணெல்லாம் சிவந்திருக்கு?”
“புது இடம் இல்ல வாசு… அதான் தூக்கம் வந்திருக்காது” என்றவர் அவளிடம்,
“நான் அவசர கட்சி கூட்டத்துக்காக டெல்லி போறேம்மா. மதியம் ஃப்ளைட். உன் கூட கதிர் வருவான். உன்னை பத்திரமா காலேஜ் ஹாஸ்டல்லயே சேர்க்கலாம்ன்னு நினைச்சிருக்கேன். வேற ஏதாவது தேவைன்னா வாசுகிகிட்ட கேட்டுக்கம்மா.”
அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே கதிரும் அழகரும் வந்தனர்.
“தலைவரே… எல்லாம் ரெடியா? கிளம்பலாமா?”
“நீ எங்க வர்ற? நீ இந்தப் பொண்ண அவ காலேஜ் ஹாஸ்டல்லயே சேர்த்து விட்டுட்டு வா. அழகர் என் கூட வரட்டும்.”
“நானா…? நான் அழகர் மாமாவ அனுப்புவோம்னு நினைச்சிட்டு வந்தேன். சுந்தரையும் அந்த குமாரை கண்காணிக்க அனுப்பியிருக்கேன்.”
“அந்தக் காலேஜ் பிரின்சிபால உனக்கு நல்லாத் தெரியுமே டா. போன வருஷம் அந்தக் காலேஜ்ல நடந்த ஸ்டுடன்ட் பிரச்சனையக்கூட பேசி முடிச்சியே. அழகர விட நீ போனா சட்டுனு வேலை முடியும். அதனால நீயே போ.”
“சரி தலைவரே… தீனதயாளன் நமக்கு வேண்டிய ஆள்தான். நான் பார்த்துக்கறேன்.”
அவள் திருதிருவென்று விழித்துக் கொண்டு, யாரிடம் பிரின்ஸிபாலைப் பற்றிச் சொல்வது என்று யோசிக்கும் முன், அவர்களேப் பேசி அவளைக் கதிருடன் அனுப்புவது என்று முடிவெடுத்தனர்.
பரபரப்புடன் ராகவன் தனது உதவியாளர் சந்துரு மற்றும் அழகருடன் வெளியேற, கதிரும் வாசுகியும் வாசல் வரைச் சென்று வழியனுப்பிவிட்டு வந்தனர். அன்று சனிக்கிழமை விடுமுறை ஆதலால் குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்தனர்.
உள்ளே வந்தவுடன் கதிர் ஒரு படிவத்தை எடுத்து வைத்துக் கொண்டு அவளை அழைத்தான்.
“இங்க வா… இதுல ஒரு கையெழுத்து போடு.”
அருகில் வந்தவள் என்னவென்று பார்க்க, வாசுகியும் அவனிடம், “என்ன கதிர் இது? எதுக்கு சிவரஞ்சனியோட சைன்?”
“அது ஒன்னுமில்ல க்கா. நேத்துப் போனோமில்ல இந்தப் பொண்ணோட வீடு, நல்ல மெயினான ஏரியா, குறைஞ்சது ஐம்பது அறுபது லட்சம் போகும். நியாயமா இந்தப் பொண்ணுக்கும் சரிபாதி உரிமை இருக்கு.
அதான் அவங்க சித்தி பேர்ல இந்தப் பொண்ணு ஒரு கேஸ் ஃபைல் பண்ணா பாதி சொத்து இந்தப் பொண்ணுக்கு வரும். சொத்தா குடுத்தாலும் சரி பணமா குடுத்தாலும் சரி இந்தப் பொண்ணோட ஃபியூச்சர்க்கு யூஸ் ஆகும் க்கா.”
“கதிர் சொல்றது சரிதான்மா. நீ சைன் பண்ணு. அவன் கண்டிப்பா உனக்கு உன்னோட ஷேரை வாங்கித் தந்துடுவான்.” வாசுகியும் கூற…
கதிரைத் தயக்கமாகப் பார்த்தவள், “கேஸ்லாம் வேணாமே. சித்திகிட்ட அவ்வளவு பணமெல்லாம் கிடையாது. அவங்க எப்படித் தர முடியும்?”
“அப்ப வீட்ட வித்து ரெண்டு பேரும் சரிபாதி பணமா பிரிச்சுக்க வேண்டியதுதான்.”
“ஹைய்யோ… வீட்டல்லாம் விக்க வேணாம். வீட்ட வித்துட்டா, சித்தி பாவம் கல்யாணிய கூட்டிட்டு எங்க போவாங்க? அதுமட்டுமில்ல அந்த வீட்ல எங்க அம்மா அப்பா கூட பதினோரு வயசு வரை சந்தோஷமா இருந்தேன்.
எங்க அம்மாவப் பத்தின நிறைய இனிமையான நினைவுகள் அந்த வீட்ல இருக்கு. ப்ளீஸ் அந்த வீட்ட சித்தி வச்சுகிட்டா பரவாயில்ல ஆனா கேஸ்லாம் வேணாமே.”
உண்மையிலேயே சிவரஞ்சனியைப் பார்த்து கதிருக்கும் வாசுகிக்கும் ஆச்சர்யமாக இருந்தது. கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே என்பது எவ்வளவு சத்தியமான வார்த்தை.
அடுத்த வேளை உணவுக்குக் கூட அடுத்தவர் தயவு தேவைப்படும் இந்த நிலையிலும், இந்தப் பெண் தனக்குக் கெடுதல் செய்பவருக்கும் நன்மை செய்ய நினைக்கிறதே.
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்ற பாரதியின் வரிகளை எத்தனை பேரால் கடைபிடிக்க முடியும்? இதோ இவள் வாழும் உதாரணமாக இருக்கிறாளே என்று எண்ணிக் கொண்டான் கதிர்.
இந்தப் பெண்ணுக்கு எவ்வளவு உதவியென்றாலும் செய்யலாம் என்று நினைத்தபடி,
“நீ சொல்றது சரிதான், ஆனா… உங்க வீட்ல இருந்தானே ஒரு வெத்துப் பீஸ்ஸூ, உன் சித்தியோட அண்ணன், அவனோட நோக்கமே உங்க சித்திய ஏமாத்தி அந்த வீட்டப் பிடுங்கறதாதான் இருக்கும்.
அதுக்குதான் உன்ன கல்யாணம் பண்ணனும்னு தத்துப்பித்துன்னு உளறிகிட்டு இருந்தான். இனிமே உங்க சித்திகூடவே இருந்து அந்த வீட்ட அடைய நினைப்பான்.
அதனால ஒரு வக்கீல் நோட்டீஸ் மட்டும் சும்மா அனுப்பி விடுவோம். என்னைக்கு இருந்தாலும் உனக்கும் அந்த வீட்ல உரிமையிருக்குன்னு அவங்களுக்கு பயம் இருந்தாதான், அந்த வீட்ட விக்கற எண்ணம்லாம் அவங்களுக்கு வராது.”
“கதிர் சொல்றது சரிதான் சிவரஞ்சனி, லீகலா எந்த ஆக்ஷனும் எடுக்காட்டாலும், சும்மா ஒரு பயம் காட்டி வைக்கறது நல்லது.”
வாசுகியும் வற்புறுத்திக் கூறவும் அந்தப் படிவத்தில் கையெழுத்திட்டு கதிரிடம் கொடுத்தாள். அதனை வாங்கி பத்திரப்படுத்தியவன்,
“சரி… நாம கிளம்பலாம். இப்பக் கிளம்பினாதான் சரியா இருக்கும். போற வழியில சாப்பிட்டுக்கலாம்.” என்றவன் வாசுவிடம் சொல்லிக் கொண்டு வாசலை நோக்கி விரைந்தான்.
சிவரஞ்சனியும் வாசுகியிடம் விடைபெற்றுக் கொண்டு அவளுக்கு வாங்கப்பட்ட உடைகள் அடங்கிய பையையும் சர்டிபிகேட்டையும் எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தாள்.
அவளை வாகனத்தின் முன்புறக் கதவைத் திறந்து வைத்து ஏறச் சொன்னவன், மறுபுறம் வந்து வண்டியைக் கிளப்பினான். போர்டிகோவிலிருந்து வெளியே வந்த அந்த ஸ்கார்ப்பியோ, அமைச்சரின் வீட்டைக் கடந்து சாலையில் பயணித்தது.
“போற வழியில ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போயிட்டுப் போவோமா? தலைவர் அவசரமா வரச் சொன்னதால நேரா வந்துட்டேன்.”
அவள் சரியென்று கூறியதும் கோயில் முன்பு வண்டியை நிறுத்திவிட்டு, இருவரும் இணைந்து கோவிலினுள் நுழைந்தனர். அது பெருமாள் கோவில். அதனுடன் ஆஞ்சநேயர் சன்னதியும் இருந்தது. மார்கழி மாத சனிக்கிழமை ஆதலால் கோவிலில் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.
நேராக ஆஞ்சநேயர் சன்னதிக்குச் சென்றவர்கள், நினைத்த காரியம் அத்தனையும், நேர்மையோடு உழைப்பும் இருந்தால் ஜெயமாக்கித் தரும் வீர ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
அவன் ரெகுலராக வரும் கோவில் ஆகையால், கிட்டத்தட்ட அனைவருமே அவனை ஆச்சர்யமாகப் பார்த்தபடி இருந்தனர். கதிரை ஒரு பெண்ணுடன் அதுவும் இளம் பெண்ணுடன் பார்ப்பது முதல் முறை என்பதால் வந்த ஆச்சர்யம் இது.
பிரசாதமாகத் துளசித் தீர்த்தமும் செந்தூரமும் கொடுத்த கோவில் குருக்கள், “பொண்ணு யாரு தம்பி?”
சிறு வயதில் இருந்தே அவனைப் பார்த்துக் கொண்டிருப்பவர், அவனைப் பற்றி நன்கு தெரிந்தவர் ஆதலால் இதைக் கேட்கத் தயங்கவில்லை அவர்.
“வாசுகி அக்காவுக்கு வேண்டிய பொண்ணு ஐயரே… காலேஜ்ல சேர்க்கக் கூட்டிட்டுப் போறேன்.”
“நல்லதுப்பா… ஷேமமா போய்ட்டு வாங்கோ.”
சடாரியை வைத்து ஆசீர்வதித்தவரிடம் விடைபெற்றுக் கொண்டு கோவிலை வலம் வந்தனர்.
என்னவோ இன்று அவளை இந்தக் கோவிலுக்குக் கூட்டி வர வேண்டும் என்பது போல அவனுக்கொரு எண்ணம். இருவரும் இணைந்து நின்று அவனது இஷ்ட தெய்வத்தை வழிபட்டது, ஏனென்றேப் புரியாத ஒரு மனநிறைவைக் கொடுத்தது அவனுக்கு.
இந்த உணர்வுகளுக்குப் பெயர் வைக்கவும் தெரியவில்லை. இத்தனை நாட்களாக மனதின் ஓரத்தில் நீங்காமல் இருந்த ‘தான் தாய் தந்தை யாரும் அற்றவன்’ என்றத் தனிமை உணர்வு, அவனை விட்டு நீங்கிப் போவது போல உணர்ந்தான்.
அதற்குப் பின் தொடர்ந்த கார் பயணத்தையும் அவன் மனது வெகுவாக ரசித்தது. உடலை வருடும் மெல்லிய குளிர் காற்றும், காதுகளை வருடும் இளையராஜாவின் மெல்லிசையும் மனதைப் பரவசப் படுத்தியது. என்னவென்றே புரியாத ஒரு இதம் மனதை நிறைத்தது.
சூழ்நிலையையும் அவனது நிலையையும் முன்பே கணித்தபடி, இளையராஜா இசையை உருக்கி ஊற்றிக் கொண்டிருந்தார்.
பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல
ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சு இருக்கு
உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு
அள்ளி அள்ளித் தந்து உறவாடும்
அன்னைமடி இந்த நிலம் போல
சிலருக்குத் தான் மனசு இருக்கு
உலகம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல
யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் இணை இல்ல
உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல
இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே…
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே…!
விரல்கள் தானாக ஸ்டியரிங்கில் தாளம் போட, அவனிதழ்கள் மெலிதாகப் பாடலை முனுமுனுத்துக் கொண்டிருந்தது.
சிவரஞ்சனிக்கோ இவனிடம் பிரின்ஸ்பாலைப் பற்றி எப்படிச் சொல்வது என்று மனம் யோசித்துக் கொண்டிருந்தது. அவனிடம் சொல்லி விடலாம் என்று நினைத்து, சாலையைப் பார்த்தபடி இருக்கும் பார்வையைத் திருப்பி அவனது கரங்கள் வரைக் கொண்டு வருபவள், மீண்டும் திரும்பி சாலையைப் பார்த்தபடி யோசிக்கத் துவங்கி விடுவாள்.
முதலில் இதை கவனிக்காதவன், அவள் தன்னிடம் ஏதோச் சொல்ல நினைத்துத் தயங்குகிறாள் என்பதைக் கண்டு கொண்டான். காரை ஓரம் கட்டி நிறுத்தியவன் அவளைக் கவனிக்க, அவளோ காரை நிப்பாட்டியதைக் கூட உணராமல், யோசனையிலேயே ஆழ்ந்திருந்தாள்.
“என்ன விஷயம்?”
சட்டென்று வந்தக் கேள்வியில் லேசாக அதிர்ந்தவள், அவனைப் பார்க்க,
“ரொம்ப நேரமா ஏதோ சொல்லனும்னு யோசிச்சிகிட்டு இருக்கியே… என்ன விஷயம்ன்னு கேட்டேன்?”
“அது… வ… வந்து… அது… “ அவள் ஏதோச் சொல்லத் தடுமாறுகிறாள் என்பதை உணர்ந்து கொண்டவன்,
“கீழ இறங்கு… “ எனக் கூற,
எதுக்கு இறங்கச் சொல்றார்? என்று புரியாமல் பார்த்தவள் அப்பொழுது தான் கார் ஓரமாக நின்றிருப்பதை உணர்ந்தாள். சுற்றுப்புறம் கவனத்தில் வந்தது. கார் ஒரு உணவு விடுதியின் முன் நின்றிருப்பதைக் கண்டவள், அவன் இறங்கவும் தானும் இறங்கினாள்.
சற்று உயர்தரமான ஹோட்டல் அது. தனி அறைகள் போலத் தடுக்கப்பட்டிருந்த தடுப்பினுள் சென்று அமர்ந்தவர்கள், பேரரிடம் தேவையான உணவினை ஆர்டர் செய்தனர். உணவு வகைகளைக் கொண்டு வந்து வைக்கவும், அவள் உண்பதற்குத் தேவையானவற்றை அவள்புறம் நகர்த்தி வைத்தபடி,
“இப்ப சொல்லு… என்ன விஷயம்?”
“அது… வந்து… எனக்கு ஏதாவது வேலை வாங்கிக் குடுங்களேன். எனக்கு காலேஜ்க்குப் போகப் பிடிக்கலை. ஏதாவது லேடீஸ் ஹாஸ்டல்ல சேர்த்து விடுங்க. எனக்கு வர்ற சம்பளத்தை வச்சு ஹாஸ்டல் ஃபீஸ் கட்டிக்கறேன்.”
அவள் தங்களுக்குத் தொல்லை தரக்கூடாது என்று எண்ணுவதாகக் கண்டு கொண்டவன்,
“காலேஜ் ஃபீஸ் பத்தில்லாம் யோசிக்காத. தலைவர் பேர்ல ட்ரஸ்ட் இருக்கு வருஷத்துக்கு நாற்பது ஐம்பது பேர படிக்க வைக்கிறாரு. உனக்குச் செய்யறது அவருக்குப் பெரிய விஷயமில்ல. அது மட்டுமில்ல நீ படிப்ப முடிக்காம உனக்கு என்ன வேலை கிடைக்கும்? “
“நீ முதல்ல படிப்ப முடி. அப்புறமா உனக்கு நல்ல வேலைக்கு நான் ஏற்பாடு பண்ணித் தரேன்.”
“இல்ல… எனக்கு அந்தக் காலேஜுக்குப் போகவேப் பிடிக்கலை”
“ஏன்?… நீ நல்லாப் படிக்கற பொண்ணுதான. உன் சர்ட்டிபிகேட்டைத்தான் நேத்து நான் பார்த்தேனே.” பேசிக் கொண்டே போனவன் சற்று நிதானித்தான்.
“என்ன சொன்ன…? காலேஜுக்குப் போகப் பிடிக்கலையா? இல்ல அந்தக் காலேஜுக்குப் போகப் பிடிக்கலையா?”
தயக்கத்துடன் அவனைப் பார்த்தவள், “அந்தக் காலேஜுக்குத்தான்”
“ஏன்?…”
மெதுவான குரலில் கல்லூரியில் நடந்தவை அனைத்தையும் அவனிடம் கூறினாள். மன அழுத்தம் தாங்காமல் கால் போன போக்கில் நடந்து போன போது மூன்று சமூக விரோதிகளிடம் சிக்கிக் கொண்டதையும், அவர்களிடம் இருந்து தப்பித்துக் கடலில் விழுந்ததையும், பிறகு கதிர் காப்பாற்றியதையும் கூறினாள்.
கதிருக்குக் கட்டுக்கடங்காத ஆத்திரம் வந்தது. ‘இப்படியும் பெண்கள் கோழையாக இருக்கலாமா? இவள் சற்று எதிர்த்துப் பேசியிருந்தாலே, அந்த தீனதயாளன் அடங்கியிருக்கக் கூடும். அதைவிட்டு அழுது கொண்டேப் போய் யாரோ கயவர்களிடம் சிக்கத் தெரிந்தாளே…’ என்று பல்லைக் கடித்துக் கொண்டான்.
“உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா? அவன் அப்படிக் கேட்டதும், அவனை உன் கால்ல கிடந்ததைக் கழட்டி அடிச்சிருக்க வேணாமா? அவன்தான் அந்த ரூம்ல கேமரா இருக்குன்னு சொன்னான்ல, நீ எழுந்து போய் அவன் சட்டையப் பிடிச்சு, நாலு அறை கன்னத்துல குடுத்து, இதப் போய் வெளிய சொல்லுடா நாயேன்னு சொல்லியிருக்க வேணாமா?”
“…”
“பெண்கள் தைரியமா இருக்கனும் சிவரஞ்சனி. பாரதியார் பாட்டெல்லாம் படிச்சதில்ல நீ.”
“பாதகம் செய்பவரைக் கண்டால்
நீ பயங் கொள்ளல் ஆகாது பாப்பா…
மோதி மிதித்து விடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா… ன்னு குழந்தைகள் கூட தைரியமா இருக்கனும்ன்னு எவ்வளவு அழகாச் சொல்லியிருக்கார்.”
“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே… ன்னு படிக்கும் போதே மனசுல வீரம் வர வேணாமா? நாம படிக்கறதே வாழ்க்கையில அதை தேவையான இடத்துல பயன்படுத்தறதுக்காகதான். அதைவிட்டு வெறும் மார்க்கு மட்டும் வாங்கி என்ன சாதிக்கப் போற நீ?”
“…”
“எந்தச் சூழ்நிலையையும் எதிர்க் கொள்ளும் அளவு தைரியத்தைப் பெண்கள் கட்டாயம் வளர்த்துக்கனும். நாம ஓடற வரை நாய்கள் துரத்தத்தான் செய்யும். தைரியமா நிமிர்ந்து நின்னு தீர்க்கமா ஒரு பார்வை பாரு, அந்த நாய்கள் பின்னங்கால் பிடறியிலப் பட ஓடிப் போகும்.”
“…”
“இப்பவும் இந்தப் பிரச்சனையில இருந்து தப்பிச்சுப் போகத்தான் நினைக்குற. உன் கிட்ட தப்பாப் பேசினவன், அடுத்தடுத்து உன்னைப் போல இருக்கற எல்லாப் பொண்ணுங்கள்ட்டயும் அப்படித்தான் பேசுவான். இதை வளர விடலாமா? நீ அன்னைக்கு தைரியமா இந்தப் பிரச்சனைய ஃபேஸ் பண்ணியிருந்தா, அவனுக்குப் பயம் வந்திருக்கும்.”
அவன் பேசப் பேச அவளுக்கு கட்டுக்கடங்காமல் கண்ணீர் வந்தது. அழுகையை உதடு கடித்து அடக்கியபடி,
“எப்படிப் ஃபேஸ் பண்ணச் சொல்றீங்க? நான் ரொம்ப தைரியமானப் பொண்ணு இல்லதான் ஒத்துக்கறேன். ஆனாக் கோழை இல்லை. அவனை எதிர்த்து நிற்க எனக்குத் துணையா அம்மா அப்பா அண்ணன் தம்பின்னு யாராவது இருந்திருந்தா கண்டிப்பா எதிர்த்திருப்பேன்.
எப்படா என் படிப்ப நிப்பாட்டலாம், அந்தக் கேசவனுக்கு என்னைக் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு யோசிக்கற சித்தியை வச்சிகிட்டு, என்னால என்ன செய்ய முடியும்?
என் டீசி, மற்ற சர்டிபிகேட் எல்லாம் அந்த ஆள் தயவில்லாம வாங்க முடியாது. அவனை எதிர்த்துகிட்டு என்ன செய்யறதுன்னு, சத்தியமா அன்னைக்கு எனக்குப் பயமா இருந்துச்சி. படிப்பக் கூட கரஸ்ல பண்ணிக்கலாம், அந்தக் காலேஜ்க்கு இனி போகக் கூடாதுன்னுதான் தோனுச்சி.
என் கஷ்டத்தைச் சொல்றதுக்குக் கூட யாரும் இல்லையே எனக்கு. அந்தச் சூழ்நிலையில அவன எப்படி எதிர்க்க முடியும்? யார் இருக்கா எனக்குச் சப்போர்ட் பண்ண?”
பேசியவள் கன்னத்தில் வழிந்தக் கண்ணீரைப் புறங்கையால் துடைத்துக் கொண்டாள்.
‘ஏன் நான் இல்லையா?’ என்று நாக்கு நுனி வரை வந்துவிட்டக் கேள்வியைக் கண்டு ஒரு நொடித் திகைத்தான் கதிர்.
வெறும் வாய் வார்த்தையாகக் கொடுக்கக் கூடிய நம்பிக்கையா இது?
இவளுக்கு எல்லாமுமாகத் தான் இருக்க வேண்டும் என்று தோன்றும் எண்ணங்களைத் தடுக்க முடியவில்லையே அவனால். அவள் கண்ணீரைக் கண்டதும் உடல் பதறுகிறதே… பரிதாபத்தைத் தாண்டிய ஏதோ ஒரு உணர்வு அவனை அலைக்கழிக்கிறதே… .
வேறு எந்தப் பெண்ணிடமும் தோன்றாத எண்ணங்கள், இவளுக்கு இனி எந்தக் கஷ்டமும் நேராமல் அரணாக இருப்பேன். இவளின் மன தைரியத்திற்குத் துணையாக இருப்பேன். ஒரு துளிக் கண்ணீரானாலும் என்னை மீறித்தான் இவளது கண்ணில் இருந்து வர வேண்டும்.
முடிவு எடுத்தவன் தீர்க்கமாக அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“உனக்கு உறுதுணையா காலம் முழுக்க, உன் கூடநான் வரேன். என்னைக் கல்யாணம் பண்ணிக்க உனக்குச் சம்மதமா?”
அவனது கேள்வியின் பொருளைச் சட்டென்று ஏற்றுக் கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் அவளது விழிகள் விரிந்தன. அவளுக்கு என்ன சொல்வதென்றேத் தெரியவில்லை. வாய் குழறி வார்த்தைகள் தந்தியடித்தது.
“எ… எ… என்னத் தி… திடீர்ன்னு… ?”
“திடீர்னு எடுத்த முடிவுதான். ஆனா… உன்னோடக் கையை பிடிச்சா சாகற வரை விடாமக் கூடவே வருவேன்னு தீர்க்கமா எடுத்த முடிவு.
இதுவரை எந்தப் பொண்ணுகிட்டயும் இப்படிக் கேட்கத் தோனுனது இல்ல.” அவளது கண்களோடுத் தன் கண்களைக் கலந்தவன்,
“இனி எந்தப் பொண்ணுக்கிட்டயும் இப்படிக் கேட்கத் தோனப் போவதுமில்லை. உனக்கும் என்னைப் பிடிச்சிருந்தா சம்மதம் சொல்லு.”
பேரர் வரவும் உணவுக்கான பில்லைக் கொடுத்தவன், பேரர் சென்றதும்,
“அவசரமில்லை நிதானமா யோசிச்சு உன் முடிவைச் சொல்லு. இப்பக் கிளம்பலாம்.”
உணவகத்தை விட்டு வெளியே வந்தவர்கள் தமது பயணத்தை மீண்டும் துவங்கினர். இருவரது மனநிலையும் வெவ்வேறு விதமாக இருந்தது.
ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா…
ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே
அட காதல் இதுதானா…
—காற்று வீசும்