ESK- 20

ESK- 20

என் சுவாசம் 20

சகாயம் தந்த ஆதாரங்கள் அனைத்தும், எக்ஸ் எம்பி நாகராஜனுக்கு சொந்தமான குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை மருந்துகள்,  கள்ள நோட்டுகள் மற்றும் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல பொருட்களைப் பற்றித் தெளிவாகக் கூறியது.

ஸ்ரீதரிடம் அவற்றை ஒப்படைத்த கதிர்,  ராகவனிடமும்  இந்த விபரங்களைத் தெரிவித்து,  வேறு எந்தவிதமான அரசியல் இடையூறுகளும், ஸ்ரீதருக்கு இல்லாத வகையில் பார்த்துக் கொள்ளச் சொன்னான்.

அரசியல் தலையீடுகள் எதுவும் இல்லாததால், நாகராஜனுக்குச் சொந்தமான அனைத்து குடோன்களிலும் அதிரடியாகச் சோதனை நடத்தினான் ஸ்ரீதர்.   ஆதாரத்துடன் கைப்பற்றிய பொருட்களோடு   அதிரடியாக கைது செய்யப்பட்டார் எக்ஸ் எம்பி நாகராஜன்.

வெடிமருந்துகளும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததில்  அதிர்ந்து போன காவல் துறையினர், அவர் எளிதில் வெளி வர முடியாத  பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து உள்ளே தள்ளினர்.

ஸ்ரீதர் பதவியேற்றதிலிருந்தே மிகவும் கலங்கிப் போயிருந்த குமாருக்கு, இந்தச் செய்தி பெரும் இடியாக இருந்தது.  சகாயமும்  எப்பொழுதும் போல அவனுடனே இருந்ததால், அவன்மீது சந்தேகம் வரவில்லை யாருக்கும்.

வழக்கம் போல இது எதிர்க்கட்சிகள் செய்த சதி.  எங்கள் கட்சி உறுப்பினர் குற்றமற்றவர்  என்று, கண்டன ஆர்ப்பாட்டம், பேரணி எல்லாம் நடத்திப் பார்த்து விட்டு மேற்கொண்டு ஒன்றும் செய்ய முடியாமல், அமைதியாகிப் போனான் எம்எல்ஏ குமார்.

இத்தனை வருடங்களாக நடத்தி வந்த தொழில்களை, நேற்று வந்தவன் அழித்து விட்டானே என்று பொருமிக் கொண்டிருந்த குமார், தானும் சற்று காலம் அடக்கி வாசிக்கலாம் என்று முடிவெடுத்தவன்,  ஸ்ரீதரை  பணியிடமாற்றம் செய்ய முடியுமா என்று முயற்சித்துக் கொண்டிருந்தான்.

அழகரிடம், பிச்சாவரத்தில் சிவரஞ்சனியிடம் பேசியதைக் கூறியவன்,  அவருடைய தமக்கையைப் போய் அவரை கவனித்துக் கொள்ளச் சொல்லியிருந்தான்.

“நீங்களேப் போய் அவங்களைப் பார்த்துக்குங்க மாமா.  வேற ஏதாவது நல்ல ஹோம்ல சேர்த்து விட்டுடுங்க. அவங்க ட்ரீட்மெண்ட்க்கும் ஏற்பாடு பண்ணிடுங்க.

என்ன செலவாகுதோ அதை என்ன பெத்த கடமைக்காக நான் செய்யறேன். ஆனா அவங்களைப் பத்தின எந்தச் செய்தியும் என்கிட்ட கொண்டு வராதீங்க.  எனக்கு அவங்களைப் பத்திப் பேசறதுகூட பிடிக்கல.”

என்றவனை எதுவும் சொல்லவில்லை அழகர்.  அவனது காயமும் சாதாரணமானது இல்லை.  இன்னும் காலங்கள் கழிந்தால் அவனது மனதில் மாற்றங்கள் வரலாம்,  இந்தவரைக்கும் அவன் செய்வதே பெரியது என்று எண்ணிக் கொண்டார்.

ஜமுனாவை ஒரு நல்ல முதியோர் இல்லத்திற்கு மாற்றியவர். அவரை கவனித்துக் கொள்ள தனிநபரை பணியமர்த்தினார்.  மேலும் அவரது சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்தார்.

சிவரஞ்சனி வழக்கம் போல வார நாட்களில் கல்லூரிக்குச் செல்வதும், விடுமுறை நாட்களில் மட்டும் கதிர் சென்று அழைத்து வருவதுமாக இருந்தாள்.

ஒரு நல்ல நாள் பார்த்து ராகவன் வாசுகி அழகர் மூவரும் சிவரஞ்சனியின் சித்தியைப் போய் சந்தித்து, கதிருக்கு சிவரஞ்சனியை முறையாகப் பெண் கேட்டனர்.   எதிர்பார்த்தபடியே அதில் ஆர்வம் காட்டாமல், ஏனோதானோவென்று பதில் கூறினாள் சாரதா.

“நீங்க உங்களோடவே கூட்டிட்டுப் போயிட்டீங்க…  இனிமே அவளப் பத்தி நான் முடிவெடுக்க என்ன இருக்கு?   நீங்க என்ன முடிவு பண்ணாலும் எனக்கு அதைப் பற்றி கவலையில்ல. இனி எனக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.”

விட்டேற்றியாக பதில் சொன்னவளை, ஒன்றும் சொல்ல முடியாமல் திரும்பி வந்திருந்தனர்.  கதிர்தான் குதித்துக் கொண்டிருந்தான்.

“நான்தான் உங்கள அங்கல்லாம் போகாதீங்கன்னு சொன்னேன்ல.  சிவரஞ்சனி மட்டும் முடிவு பண்ணா போதும். யாரோட சம்மதமும் தேவையில்லைன்னு சொன்னாலும் கேட்காம போய்ட்டு வந்திருக்கீங்க.”

“விடு மாப்ள…  நம்ம கடமைக்குப் போய்  கேட்டாச்சு…  அந்தப் அம்மாவப் பத்தி நமக்கென்ன கவலை.  இனிக் கல்யாண வேலையைப் பார்ப்போம்.”

“அந்தக் கேசவனை அங்க காணோமே…  நீ ஏதாவது பண்ணியா கதிர்?   இல்ல… நீ உதைச்ச உதைக்கே அவன் ஊர விட்டு ஓடிட்டானா?”  வாசுகி அவனை சந்தேகமாகக் கேட்க…

“அவன் மேல ஏற்கனவே கேஸ் இருக்குக்கா.  அவன் பொண்டாட்டி  தற்கொலை பண்ணி செத்ததுல அவன் மேல சந்தேகம் உறுதியாகிடுச்சி.  மறுபடியும் புடிச்சி உள்ள போட்டாச்சி அவன. நான் ஒன்னுமே பண்ணல…  ஸ்ரீதர் கிட்ட அவனைக் கொஞ்சம் கவனிக்கச் சொன்னேன்.  அவன் சொன்னதுதான் இந்த விபரமெல்லாம்.”  என்றவனை வாசுகி சந்தேகமாக முறைக்க…

“நம்புக்கா…  இதுல நிஜமாவே நான் ஒன்னுமே பண்ணல.”

“ஐயோ… நீ ரொம்ப நல்லவன்தான்டா…”

“இன்னைக்கு சாயங்காலம் நானும் உன் தலைவரும்  கோவிலுக்குப் போய் அய்யரப் பார்த்து, கல்யாணத்துக்கு நல்ல நாள் குறிச்சிகிட்டு அப்படியே மண்டபமும் புக் பண்ணிட்டு வந்துடறோம்.”

“பத்திரிக்கை டிசைன் உங்களுக்குப் பிடிச்ச மாதிரி, சிவரஞ்சனியையும் கூட்டிட்டுப் போயி வாங்கிடு மாப்ள.  அடிக்கக் குடுத்துடலாம்.  நான் யார் யார்க்கெல்லாம் பத்திரிக்கை வைக்கனும்னு லிஸ்ட் ரெடி பண்ணிடுறேன்.”

“பட்டுப்  புடவையெல்லாம் இந்த வாரம் சிவா வரும் போது திருபுவனம் போய் எடுத்துட்டு வந்துடலாம்.  அப்படியே தேவையான நகைகளும் வாங்கிடலாம்.”

அனைத்தையும் பேசி முடிவு செய்து, திருமணமும் தைப் பொங்கல் முடிந்து பத்து நாட்களில்  நடத்தத்  தேதி குறிக்கப் பட்டது.

அதிகாலை முகூர்த்தம்  திருமணத்திற்கு குறிக்கப்பட்டு, பிறகு அடுத்து வரும் நல்ல நேரத்தில் புது வீட்டில் பால் காய்ச்ச முடிவு செய்யப்பட்டது. மாலையில் வரவேற்பை வைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப் பட்டது.

அதன் பிறகு நாட்களும் திருமண வேலைகளும் ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தன. சிவரஞ்சனியை அழைத்து வரும் போதும், கொண்டு விடும் போதும் மட்டுமே அவனால் அவளைப் பார்க்க முடிந்தது.

அவனுக்கும் திருமண வேலைகள்  மற்றும் அவனது வழக்கமான வேலைகள் என்று மிகவும் பிசியாக இருந்தான். அவளுடன் அலைபேசியில் மட்டுமே அவனால் பேசிக் கொள்ள முடிந்தது.

வாசுகியும் சிவரஞ்சனியும் இணைந்து திருமணத்திற்கு தேவையான புடவை, நகை, மணப்பெண் அலங்காரத்துக்கு தேவையானவற்றை வாங்குவதற்கு அலையவே நேரம் சரியாக இருந்தது.

‘உடன் நானும் வருகிறேன்’ என்று அடம் பிடித்தவனை புடவை எடுக்க அழைத்துச் சென்று விட்டு வெறுத்துப் போயிருந்தனர். கடையையே புரட்டிப் போட்டு முகூர்த்த புடவை தேடியவனை முறைத்த வாசுகி,

“இங்க பாரு மெரூன் கலர்ல  இல்லைன்னா சிகப்பு கலர்லதான் முகூர்த்த சேலை எடுக்கனும்.  உனக்கு என்ன தெரியும் புடவை கலர் பத்தி? போனாப் போகுதேன்னு உன்னைக் கூட்டிட்டு வந்தது தப்பாப் போச்சு.”

“ம்ப்ச்…  அக்கா, எங்க கல்யாணத்துக்கு ரெண்டு   பேரும் ஒரே கலர்ல ட்ரெஸ் போடலாம்னு நினைச்சிருந்தேன்.  அவ கலருக்கு இந்த மெரூன் எடுப்பா இருக்கும்.  எனக்கு நல்லாவா இருக்கும்?”

என்றவனைக் கொலை வெறியில் முறைத்த வாசுகி, “உனக்கு யாருடா இப்படி ஐடியாலாம் சொல்லிக் குடுக்கறது?  இனிமே எங்க கூட எந்தக் கடைக்காவது வந்த பிச்சிடுவேன் உன்ன.”

அப்படியும் அடங்காமல், வரவேற்புக்கு அவளுக்கு இளநீலத்தில் பட்டுப் புடவையும் அவனுக்கு   அவளுடைய புடவையின் நிறத்தை ஒத்த அடர்நீலத்தில் கோட்டும், வாங்கிவிட்டுதான் சமாதானம் ஆனான்.

அதன் பிறகு அவனைக் கூட்டுச் சேர்க்கவில்லை வாசுகி.  சுந்தரை அழைத்துக் கொண்டு, அவர்கள் இருவர் மட்டும் சென்று வந்தனர்.  திருமண நாளும் நெருங்கியது.

பொங்கல் விடுமுறையை ஒட்டி அவளை அழைத்து வரச் சென்றவன், அழகரைச் சரிகட்டி அவளைத் தனியாக அழைத்துக் கொண்டு அவனுடைய அறைக்கு வந்திருந்தான்.  வரமாட்டேன் என்று அடம்பிடித்தவளையும், சமாதானப் படுத்தி அழைத்து வந்திருந்தான்.

அறைக்குள் செல்லாமல் வராண்டாவில்  சோபாவில் அமர்ந்தவளை முறைத்தவன்,  “ஓவராப் பண்ணாதடி…  இப்ப உன்னைய என்னப் பண்ணிடுவேன்னு இங்கயே உட்கார்ந்துட்ட?”

“வாசுகி அண்ணி தேடுவாங்க வாங்க போகலாம்.”

“ம்ப்ச்…   சொன்னதையே சொல்லிகிட்டு இருக்காத. கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்துட்டு அப்புறம் போகலாம்.”

“தினம் ஃபோன்ல பேசதான செய்யறோம்.”

அவளது மடியில் தலையை வைத்து சோபாவில் படுத்தவன்,  அவளது கையை எடுத்து தனது கரங்களுக்குள் பொதிந்து கொண்டு,

“ஃபோன்ல பேசினா இப்படிப் பேச முடியுமா?”

“என்ன பேசனும் உங்களுக்கு?  வாசுகி அண்ணி காணோம்னு தேடுவாங்க.”  நெளிந்தபடியே கேட்க.

“அடடடா…  தேட மாட்டாங்கடி…  நான் சொல்லிக்கறேன்.   நீ நெளியாம  உட்காரு. கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி சந்திச்சு பேசறதுதான் கிக்கே…  கல்யாணத்துக்கப்புறம் நம்மள யாரு தடை சொல்லப்போறாங்க?   இப்படி யாருக்கும் தெரியாம பேசற த்ரில் அப்பக் கிடைக்காது.   சரி…  சொல்லு உனக்கு உண்மையாவே என்னையப் பிடிச்சிருக்கா?”

“இப்ப இது என்ன கேள்வி? பிடிக்காமலா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்?”

“இல்ல…  உன்னைப் பார்த்த அன்னைக்கே  நீ  என் மனசுக்குள்ள வந்துட்ட.  அத நான் புரிஞ்சிக்கதான் நாலு நாள் ஆச்சு.  ஆனா, புரிஞ்சதும் உடனடியா உன்கிட்ட சொல்லிட்டேன்.  நான்  உன்கிட்ட சொல்லும் போது நீ எதிர்பார்க்கலைதானே. அப்புறம் எப்படி ஒத்துகிட்ட?”  அவளது விரல்களுக்கு மெதுவாக சொடக்கு எடுத்தபடியே கேட்க,

“உண்மையில, அன்னைக்கு உங்க கூட இருக்கும் போது உணர்ந்த பாதுகாப்பு உணர்வுதான் பிடிச்சிருந்தது.  நம்ம மனசுக்கு நெருக்கமானவங்க கிட்ட மட்டும்தான் அப்படி ஒரு உணர்வை உணர முடியும்.  அதனாலதான் உடனே ஒத்துக்கிட்டேன்.

இருந்தாலும், உங்களுக்கு நான் பொருத்தமில்லையோன்னு  கொஞ்சம் பயமும் இருந்தது.  நீங்க என் மேல இருக்கற பரிதாபத்துலதான், என்னைக் கல்யாணம் பண்ணிக்க கேட்கறீங்கன்னும் நினைச்சேன்.

ஆனா, அன்னைக்கு அண்ணி உங்களுக்கு வேற பொண்ணு பார்த்திருக்கறதா சொன்னப்பதான், என் மனசே எனக்குப் புரிஞ்சது.  நீங்க வேற நல்ல வசதியான வீட்டுப் பொண்ணாப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஒரு மனசு நினைக்க, ஒரு மனசு உங்களை விட்டுத் தரக்கூடாதுன்னு சண்டை போடுது.

கோவில்ல வச்சு நான்தான் அவங்க சொன்ன பொண்ணுன்னு அண்ணி சொல்லும் போது, நான் அடைஞ்ச நிம்மதியச் சொல்ல வார்த்தையே இல்ல.  அவ்வளவு நேரம்  எனக்குள்ள இருந்த தவிப்புதான் என் மனசையே எனக்குப் புரிய வச்சது.

உங்களுக்கு என் மேல எவ்வளவு பிரியம் இருக்குன்னு உங்களோட ஒவ்வொரு செயல்லயும் நான் புரிஞ்சிக்கிட்டேன்.  எனக்காக பார்த்துப் பார்த்து நீங்க செய்த அத்தனை விஷயத்திலும் உங்க அன்பு தெரிஞ்சது.

அன்னைக்கு நீங்க உடைஞ்சு போய் அழுதப்பவும் என் மடியத்தான் தேடுனீங்க…  அப்பவே உங்க மனசுல எனக்கு எந்த இடம் கொடுத்திருக்கீங்கன்னு எனக்கு நல்லா புரிஞ்சுது.   இதே மாதிரி அன்போட நாம கடைசி வரை இருக்கனும் அதுதான் என்னுடைய ஆசை.”

“இன்பம் துன்பம் ரெண்டும் கலந்ததுதான்டா வாழ்க்கையே.  எது வந்தாலும், எந்தக் காலத்திலும் எனக்கு நீ உனக்கு நான்ன்னு  பிணைப்போட  நாம வாழனும்  சிவா.

எந்தப் பொண்ணைப் பார்த்தும் நான் சலனப் பட்டதே இல்லை.  உன்னைப் பார்த்துதான்  முதன் முதல்ல நான் தடுமாறியதே.

போட்ல இருக்கும் போதே என் கண்ணு உன்னை ரசிக்க அடம்பிடிக்கும்.  மனசைக் கன்ட்ரோல் பண்ணி பார்வையைத் திருப்புவேன்.  உன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் என்னை ஈர்த்துச்சி.

அதிலயும் உன்னை அவ்வளவு கஷ்டப்படுத்தின சித்திக்கும் நல்லது நினைச்ச உன்னை விட்டுக் கொடுக்கவேக் கூடாதுன்னு முடிவு பண்ணேன்.  அதுவும் நீ அழுதுகிட்டே எனக்கு யார் இருக்கான்னு கேட்டப்ப,  காலம் முழுக்க உனக்கு நான் இருப்பேன்னு என் மனசு உறுதியா சொல்லுச்சி.

அதுக்கப்புறம் நான் யோசிக்கவே இல்லை.  உடனடியா உன்கிட்ட சொல்லிட்டேன்.  அப்படியே நீ ஒத்துக்கலைன்னாலும் உன்கிட்ட எடுத்துச் சொல்லி ஒத்துக்க வைக்க முடியும்னு தோனுச்சி. அதான் நல்லா யோசிச்சு முடிவு சொல்லுன்னு உன்கிட்ட சொன்னேன்.”

“சரி…  டைம் ஆகிடுச்சி வாசுகி அண்ணி தேடுவாங்க போகலாமா?  எங்கயோ வெளியில போகனும்னு வேற சொன்னாங்க.”

“இவ ஒருத்தி… ‘சந்தைக்கு போகணும் ஆத்தா வையும் காசு  குடுன்னு’  சப்பாணி கமல் புலம்புற மாதிரி புலம்பிகிட்டு…”  அவளை முறைத்தவன்,

“போகலாம்… அதுக்கு முன்ன என்னைக் கொஞ்சம் கவனிச்சிட்டுப் போ.”

“எ… என்ன கவனிக்கனும்?  ம்கூம்…  நீங்க சரியில்ல…  வாங்க போகலாம்.”  என்றபடி எழ முற்பட்டவளின் தோளில் கை போட்டு வளைத்தவன்,  அவள் இதழைத் தன்வசப்படுத்தி அதன் மென்மையில் கரைய,  அவனது சட்டைப் பையில் இருந்த அலைபேசி இசைத்தது.

அந்த ஓசையில் சற்று கவனம் சிதறியவனின் பிடியில் இருந்து விலகி  எழுந்து நின்று கொண்டவள்,  “ஃபோன் அடிக்குது.  யாருன்னு பாருங்க.”

அவளைக் கடுப்புடன் முறைத்தபடி, “வேற யாரு?  எனக்கு இப்போதைக்குப் பெரிய எதிரியே எங்க அக்காதான்.”   என்றபடி ஃபோனைப் பார்த்தவன்,

“சொல்லல…  அவங்களேதான்.”   அலைபேசியை ஆன் செய்து காதில் வைத்தான்.

“சொல்லுக்கா…”

“எங்க இருக்கீங்க?   ஏன் இவ்வளவு லேட்டு?”

“இதோ வந்துகிட்டே இருக்கோம்கா.  இங்க கொஞ்சம் ட்ராபிக்கா இருக்கு.  அதான் லேட்டு.”

“ஓ…  அப்படியா!  சரி நீ ட்ராபிக்ல பொறுமையா வா.  சிவாவ மட்டும் கீழ அனுப்பு.  நான் உன்னோட பில்டிங் வாசல்லதான் அரைமணி நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.  நாங்க ஷாப்பிங் போகனும்.”

நாக்கைக் கடித்துக் கொண்டவன்,  “ஹி… ஹி…  இதோ வரோம் கா.”  அலைபேசி இணைப்பைத் துண்டித்தவன்,

“கீழ  வெயிட் பண்றாங்களாம் வா.”

என்றவனைப் பார்த்து கிளுக்கிச் சிரித்தவள், எட்டி அவன் பிடிக்கும் முன்பு கீழே இறங்கத் துவங்கினாள்.

“நடுவுல ஒரு வாரம்தான்  இருக்கு…  அப்புறம் எங்க ஓடுறன்னு பார்க்குறேன்.”

அவளைச் சீண்டியபடி கீழே இறங்கியவன்,  வாசுகியுடன் அவளை அனுப்பி வைத்து விட்டு வேறு வேலைகளைப் பார்க்கச் சென்றான்.

தைப் பொங்கலும் கோலாகலமாக  கழிந்தது.  பொங்கல் விடுமுறை முடிந்ததும் கல்லூரி செல்ல தயாராகி வந்தவளிடம் ராகவன்,

“வர்ற வெள்ளிக்கிழமை கல்யாணம்.  இன்னும் மூனுநாள்ல திரும்பி வரனும்.   சேர்த்தே லீவ் போட்டிருக்கலாமேம்மா.  கல்யாண நெருக்கத்துல அலைச்சல் எதுக்கு?”

“இல்ல ண்ணா…  முக்கியமான  பிராக்டிகல் வகுப்பு  இருக்கு.  கல்யாணத்துக்கு ஒரு வாரம் லீவ் கேட்டிருக்கேன்.  இப்ப காலேஜ் போயிட்டா அப்ப ஈசியா லீவ் கிடைக்கும்.  இல்லைன்னா பரிட்சை நேரத்துல பிரச்சினை ஆகும்.”

“அதெல்லாம் நான் சொல்லி பார்த்துட்டேன்.  மூனு நாள்தான காலேஜ், போயிட்டு வந்துடறேன்னு சொல்றா.  புதன்கிழமை போய் கதிர் கூப்பிட்டுக்குவான்.”

“சரிம்மா பார்த்து பத்திரமா போயிட்டு வா.  கதிர் வந்துட்டானா?”

“வந்துகிட்டு இருக்காங்க அண்ணா.”

கதிரும் சுந்தரும் வரவும்,   வண்டியில் ஏறிக்கொண்ட சிவரஞ்சனி அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கல்லூரிக்குச் சென்றாள்.

கல்லூரியில் கொண்டு விட்டதும், “புதன்கிழமை சாயந்திரம் கூப்பிட வரேன். கல்யாணம் முடிஞ்சு காலேஜ் வந்திருக்கலாம். லீவா கிடைக்காது.  தீனதயாளன்  கிட்ட சொன்னா லீவ் கிடைக்கப் போகுது.  பிடிவாதமா காலேஜ்க்கு வந்திருக்க.”  முறைத்தவனைச் சமாதானப் படுத்தியவள்,

“ஹைய்யோ…  பிடிவாதம்லாம் இல்லைங்க…  முக்கியமான பிராக்டிகல் கிளாஸ் ரெண்டு நாளும் இருக்கு.  அடுத்த வாரமும் கிளாஸ் கட் ஆகும்.  அப்புறம் பரிட்சை நேரத்துல எனக்குதான் கஷ்டமா இருக்கும் அதான்…”

“சரி…  சரி…  மூஞ்சியத் தூக்கி வச்சிக்காத.  பத்திரமா இரு.”

“நான் ஒன்னும் மூஞ்சியத் தூக்கி வச்சிக்கல. நீங்கதான் உர்ருன்னு வச்சிருக்கீங்க. ஹாஸ்டல்ல இருக்கறவள காக்காவா தூக்கிட்டுப் போகப் போகுது.”

என்று உதட்டைச் சுழித்தவளை ரசனையுடன் பார்த்தவன்,

“உனக்கு வர வர வாய் கூடிப் போச்சு.  ஆரம்பத்துல பார்த்த பயந்த சிவரஞ்சனியா இது.”

“நீங்க என் பக்கத்துல இருக்கும் போது, நான் ஏன் இனிமே பயப்படப் போறேன்.”

சரிக்குச் சரி வாயடித்தவளோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவன்.  ஸ்ரீதர் வரச் சொல்லியிருந்ததால் அவனையும் பார்த்து  பேசிவிட்டு,  திருமணத்திற்கும் அழைப்பு விடுத்து விட்டு ஊருக்குச் சென்றான்.

இரண்டு நாட்கள் கழிந்ததும் புதன்கிழமை  அன்று காலையில், அவளுக்கு அலைபேசியில் அழைத்து மாலையில் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தான்.

உள்ளூரில் திருமணத்திற்கு அழைக்க வேண்டியவர்களுக்கு அழகருடன் இணைந்து அழைப்பிதழ் கொடுத்து முடித்தவன், மதிய  உணவை முடித்து  விட்டு, சற்று நேரம் ஓய்வெடுக்கலாம் என்று தனது அறைக்கு வந்திருந்தான்.

இன்னும் சற்று நேரத்தில் சிவரஞ்சனியை அழைக்கச் செல்ல வேண்டுமாதலால்,  தூங்காமல் கண்களை மட்டும் மூடிப் படுத்திருந்தவனின் அலைபேசி இசைத்தது.

எடுத்து  யார் எனப் பார்த்தவனின் முகம் மலர்ந்தது.  ‘இவ என்ன இந்நேரத்துக்கு கூப்பிடுறா?’  என்று எண்ணியவாறு அலைபேசியை ஆன் செய்து காதில் வைத்தான்.

“என்ன மேடம் ஃபிரியா  இருக்கீங்களா?  இந்த டைம்ல ஃபோன் போட்டிருக்கீங்க.”

“ம்ம்ம்…  இன்னைக்கு மதியம் முழுக்க எனக்கு ஃபிரி தான்.  காலையிலயே பிராக்டிகல் கிளாஸ் முடிஞ்சிடுச்சி. நீங்க சாப்பிட்டீங்களா?”

“ம்ம்… நான் சாப்பிட்டேன்.  நீ சாப்பிட்டியா?”

“ம்ம்ம்…  நானும் சாப்பிட்டேன்.”

“முன்னாடியே மதியம் ஃபிரின்னு சொல்லியிருந்தா கூப்பிட வந்திருப்பேன்ல.”

இல்ல…  நான் இப்ப காலேஜ்ல இல்லை.  கல்யாணியைப் போய் அவ ஸ்கூல்ல பார்த்துட்டு,  நடந்து காலேஜ்க்குப் போயிட்டிருக்கேன்.   கல்யாணியைப் பார்க்கனும் போல ஆசையா இருந்துச்சி.  அதான் மதியம் ஃபிரிதானேன்னு கிளம்பி வந்துட்டேன்.”

“அடிப்பாவி…  காலேஜ் கட் அடிச்சிட்டு,  ஊர் சுத்துறீங்களா?  உன் கூட உன் ஃபிரென்ட்ஸ்ஸும் இருக்காங்களா?”

“இல்ல…  அவங்க ரெண்டு பேருக்கும் மதியம்தான் பிராக்டிகல்  கிளாஸ்.   நான் மட்டும்தான் வந்தேன்.  இந்த ரோட்டுல ஆள் நடமாட்டமே இல்லை.   வீடுங்களும் நெருக்கமா இல்லையா, தனியா நடக்க ஒரு மாதிரி இருந்தது.  அதான் உங்களுக்கு ஃபோன் பண்ணேன்.”

அவளின் குரலில் தெரிந்த பயத்தில் நகைத்தவன்,

“யாரோ ஒருத்தவங்க நான் இப்பல்லாம் பயப்படறதே இல்லைன்னு சொன்னாங்க.  அவங்க யாருன்னு உனக்குத் தெரியுமா?”  அவனுடைய கிண்டலில் முகம் சுருக்கியவள்,

“நீங்க பக்கத்துல இருந்தா பயப்பட மாட்டேன்னுதான சொன்னேன்.  அதுக்குதான் உங்களோட பேசிக்கிட்டே நடக்கலாம்னு ஃபோன் பண்ணா கிண்டல் பண்றீங்க…  நான் ஃபோன வைக்குறேன்.”

அவளின் சினுங்கல் மேலும் சிரிப்பை மூட்டியது அவனுக்கு,  வாய் விட்டுச் சிரித்தவன்.

“ஏய்…  வச்சிடாத…  இவ்வளவு பயம் இருக்கறவ தனியா ஏன் வந்த?  கல்யாணி ஸ்கூல் மெயின் ஏரியாதான…  அங்கயே ஆட்டோ பிடிச்சிருக்கலாம்ல.”

“வரும் போது ஆட்டோலதாங்க வந்தேன். போறதுக்கு ஆட்டோவே கிடைக்கல.  கொஞ்ச தூரம்தானே நடந்துடலாம்னு நடந்து வந்தேன்.   என் கூட பேசிக்கிட்டே இருங்க,  நான்  கடகடன்னு நடந்துடுவேன்.”

“அது சரி…  உன் ஃபிரென்ட்ஸ்க்கு   கல்யாணப் பத்திரிகை வச்சிட்டியா?”

“ம்ம்…  கோதைக்கும் கலாவுக்கும் வச்சிட்டேன்.   கண்டிப்பா வரோம்னு சொல்லியிருக்காங்க. ஆனா கல்யாணியும் சித்தியும்தான் வரமாட்டாங்க இல்ல…  அதான் இன்னைக்கு கல்யாணியப் பார்க்கனும் போல இருந்ததுன்னு பார்க்க வந்தேன்.”

“உங்க சித்தி மேல செம கடுப்புல இருக்கேன் நான்.  கல்யாணத்துக்குப் பேசப் போனவங்க கிட்ட, எனக்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லியிருக்காங்க உங்க சித்தி.  நீ என்னடான்னா உருகுற.

உனக்காகத்தான்  நீ கையெழுத்து போட்டுக் குடுத்த நோட்டீஸக் கூட நான் அனுப்பல.  உனக்கு அவங்க மேல இருக்கற பாசம், அவங்களுக்கு  உன் மேலத் துளி கூட இல்லை சிவா.”

“அது எனக்கும் தெரியும்ங்க.  ஆனா நான் பெருசா நினைக்கறது, அந்த வீட்ட விட கல்யாணியைத்தான்.  அவளுக்காகதான்  அந்த நோட்டீஸ் அனுப்பாதீங்கன்னு சொன்னேன்.

அவளுக்கு என் மேல ரொம்பப் பிரியம்ங்க. சித்தியவிட அவதான் எனக்கு முக்கியம்.  எனக்கு ஒரு நல்லது நடக்கும் போது, அவ கூட இருந்தா நல்லாயிருக்கும்னு நினைச்சேன். என்ன பண்றது? எங்க சித்தியும் வர மாட்டாங்க.  அவளையும் அனுப்ப மாட்டாங்க.”  அவளது குரலில் இருந்த வருத்தத்தை உணர்ந்தவன்,

“இப்ப என்ன, உனக்கு உன் தங்கச்சி கல்யாணத்துக்கு வரனும் அவ்வளவுதான. கவலைய விடு.  கல்யாணத்துக்கு உங்க சித்திய கடத்திட்டாவது  வந்திடுறேன்.   கூடவே அந்தக் குட்டி மச்சினியையும் கடத்திடுறேன்.”

அவன் கூறியவிதம் அவளுக்கு சிரிப்பை வரவழைக்க, “நீங்க செய்தாலும் செய்வீங்க.”

“அச்சோ… கடவுளே…”

அவளது குரலில் துணுக்குற்றவன், “ஏய்…  என்னடி? என்ன ஆச்சு?”

“எங்க காலேஜ் புரபசர் எதிர்ல வராங்க.”

“ஹா… ஹா… ஹா…  நல்லா மாட்டுனியா? காலேஜ் கட் பண்ணிட்டு ஊர் சுத்துறியான்னு உன்னையக் காய்ச்சப் போறாங்க.”

“நீங்க வேற ஏங்க பயமுறுத்துறீங்க? நானே அவங்களுக்கு பயந்துகிட்டு, ஒரு மரத்துப் பின்னாடி ஒளிஞ்சிகிட்டு இருக்கேன்.”

சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தவன், “போச்சு… போச்சு…  அவங்க உன்னைப் பார்த்துட்டாங்கன்னா, உன் பிராக்டிகல் மார்க் எல்லாம் கம்மி பண்ணப் போறாங்க.”

“அதெல்லாம் அவங்களால முடியாது. ஏன்னா இவங்க எனக்குப் பாடமே எடுக்கல…”

குரலைக் குறைத்து ஹஸ்கி வாய்சில் பேசியவளின் பேச்சில் கவரப் பட்டவன்,

“உனக்குப் பாடம் எடுக்காத புரபசருக்கு பயந்தா ஒளிஞ்சிகிட்டு இருக்குற?”   அவனும் அதே குரலில் பேச,

“எங்க புரபசர் கிட்ட வந்துட்டாங்கன்னு நான் மெதுவா பேசறேன்.  நீங்க ஏன் அப்படி பேசுறீங்க?” மீண்டும் கிசுகிசுத்தாள்.

“நீ பேசறதே போதையேத்துது…  அதான் நானும் அப்படிப் பேசறேன்.”

மயக்கும் குரலில் கூறியவன், லேசாகக் கிளுக்கிச் சிரித்தவளின் குரலில் தானும் புன்னகைத்தான்.  “என்னடி சிரிப்பு.”

“இல்ல…  நான்தான் எங்க புரபசருக்குப் பயந்து, இங்க மரத்துப் பின்னாடி ஒளிஞ்சிகிட்டு இருக்கேன்.   ஆனா அவங்க யாருக்கு பயந்து, ஒளிஞ்சு ஒளிஞ்சு சுத்தி சுத்தி பார்த்துட்டு அந்த வீட்டுக்குள்ள போறாங்க?”

சற்று சீரியஸான மனநிலைக்கு வந்தவன், “ஒளிஞ்சு ஒளிஞ்சு பார்த்துட்டு போறாங்களா? எந்த வீட்டுக்குள்ள?  யார் அந்த புரபசர்?”

“இங்க தான், நான் நிற்குற மரத்துக்கு எதிர்ல இருக்கற வீட்டுக்குள்ள.  கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட்  புரபசர் ஜெயக்கொடிதான்.  நீங்க கூட அவங்களைப் பத்தி ஏதாவது தெரிஞ்சா சொல்லச் சொன்னீங்களே.”

படுத்திருந்தவன் விருட்டென்று எழுந்து அமர்ந்தான். சற்று பதட்டம் வந்திருந்தது அவன் பேச்சில். “அங்க வேற ஆளுங்க யாராவது இருக்காங்களா?”

“ம்கூம்…  யாருமே இல்லை.  அவங்க நுழைஞ்சதும் கதவும் மூடிடுச்சி.”

“அது எந்த ரோடு சிவா?”

ரோட்டின் பெயரைச் சொன்னவள், “ஏங்க பதட்டமா பேசறீங்க?  என்ன ஆச்சு?”

“ஒன்னும் இல்லடா… அங்க  ஏதோ சரியில்ல. நீ அங்க நிக்காத.  கடகடன்னு நடந்து காலேஜ்க்குப் போயிடு.  காலேஜுக்குப் போனதும் எனக்கு ஒரு ஃபோன் போடு.  நான் இப்ப முக்கியமான ஃபோன் ஒன்னு போடனும்.  வச்சிடறேன்.”

அவன் அழைப்பைத் துண்டித்ததும், குழப்பமாக எதிரே இருந்த வீட்டைப் பார்த்தவள்,  “ஏன் இவ்வளவு பதட்டமாப் பேசறாங்க?  அப்படி என்ன விஷயமா இருக்கும்?”   என்று தனக்குள் பேசியபடி அந்த வீட்டைப் பார்த்தாள்.

ஏதோ ஆவல் உந்த அந்த வீட்டின் அருகே சென்றவளுக்கு, அங்கே நிலவிய நிசப்தம் சற்று பயத்தைத் தந்தாலும்,  உள்ளே தனது கல்லூரி ஆசிரியரும் இருக்கிறார்தானே என்ற அசட்டுத் துணிச்சலில், வீட்டின் உள்ளே சப்தம் வராமல் கேட்டைத் திறந்து கொண்டு சென்றாள்.

கதவு ஜன்னல்கள் அனைத்தும் அடைக்கப் பட்டிருந்தது.  எதற்காக உள்ளே வந்தோம் என்பதே அவளுக்குப் புரியவில்லை.  போய் விடு என்று ஒரு மனது உறுத்த…  உள்ளே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஒரு மனது பரபரத்தது.

ஏதோ சரியில்லை என்றாரே,  அது என்ன…?  தெரிந்து கொள்ள ஆர்வம். கீழ் ஜன்னல்கள் பூட்டப் பட்டிருக்க,  மேல் ஜன்னல் ஒன்று மட்டும்  திறந்திருந்தது.  அவளுக்கு உயரம் எட்டாமல்,  அங்கிருந்த பூச்சாடியை மெதுவாக நகர்த்திப் போட்டு, அதன் மீது ஏறிப் பார்த்தாள்.

சட்டென்று அவள் பார்த்த காட்சிகளை அவளால் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.   என்ன நடக்கிறது என்று கவனித்துப் பார்த்தவளின் விழிகள், அதிர்ச்சியில் விரிந்தன. குருட்டு தைரியத்தில் உள்ளே வந்து விட்டாளே தவிர, இதயம் பயத்தில் ‘திதும் திதும்’ என்று அடித்துக் கொண்டது.

உள்ளே நடக்கும்   செயல் சட்ட விரோதம் என்று புரிந்த நொடி, அனைத்தையும் கையில் இருந்த செல்ஃபோனில் புகைப்படமாகவும் வீடியோவாகவும் பதிவு செய்தாள்.

பதட்டத்தில் கையும் காலும் வேறு பயங்கரமாக  நடுங்கியது.  ஃபோனை சைலன்டில் போட்டவள்,  எடுத்த புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை கதிருக்கு உடனே அனுப்பியும் வைத்தாள்.

ஏறியிருந்த பூந்தொட்டி  காலின்  நடுக்கம் தாங்காமல்,  காலைச் சறுக்கி விட்டு விட…  பேலன்ஸ் இல்லாமல் கீழே விழுந்தவளின் சத்தம் கேட்டு, உள்ளே இருந்தவர்கள் வெளியே வருவதற்குள், எழுந்து வேகமாக வெளியே ஓடத் துவங்கினாள்.

தன்னுடைய அலைபேசிக்கு வரிசையாக வந்த புகைப்படங்களையும், காணொளிக் காட்சியையும் பார்த்த கதிர் வெகுவாக அதிர்ந்து போனான்.

“பைத்தியக்காரி… உன்னை என்ன சொன்னேன்?   நீ என்ன பண்ணி வச்சிருக்க?”    வாய் விட்டுப் புலம்பியவன்,  அவளுக்கு அழைக்கலாமா வேண்டாமா என்ற தயக்கத்தோடு அழைத்துப் பார்க்க…  செவிகளில் மோதியது,

“தாங்கள் அழைக்கும் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது…”

 

காற்று வீசும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!