Esk-3
Esk-3
மழைத்துளி – 3
புகழ்பெற்ற தனியார் கலைக் கல்லூரி. இருபாலரும் சேர்ந்து படிக்கும் கல்லூரியில் வகுப்புகள் துவங்கி நடைபெற்று வருவதால், வளாகம் சற்றே வெறிச்சோடிக் கிடந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மாணவ மாணவிகள் நடமாட்டம் தெரிந்தது.
அடர்ந்து விரிந்த பாதாம் மரம் நிழல்பரப்பிக் கிளை விரித்திருந்தது. கீழே உதிர்ந்து கிடந்த இலைச் சருகுகளையும் சிவந்த நிறப் பூக்களையும் கல்லூரித் துப்புரவுப் பணியாளர் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
கல்லூரியில் இருந்து கூப்பிடும் தூரத்தில் கடல் இருப்பதால், கடல் காற்று அள்ளிக் கொண்டு போனது. கண் முன் தெரிந்த பரந்து விரிந்த நீலக் கடலை வெறித்தவாறு, முதல் மாடியில் கைப்பிடிச் சுவரில் சாய்ந்து நின்றிருந்தாள் சிவரஞ்சனி.
தனது துறைத் தலைவர் அழைப்பதாகத் தகவல் வந்ததும், அவளுடைய விரிவுரையாளரிடம் அனுமதி பெற்று விரைந்து வந்த சிவரஞ்சனி, அவரது அறைக்கு முன் காத்திருந்தாள்.
எழுதியவன் எவனோ எழுதி வைத்து விட்டுச் சென்று விட்டான்.
“கற்கை நன்றே: கற்கை நன்றே!
பிச்சை புகினும், கற்கை நன்றே! “ என்று. ஆனால் உண்மையில் அப்படி ஒரு நிலைமை யாருக்கும் வரக் கூடாது என்று தோன்றியது.
எப்பொழுதும் சாதம் வடித்தக் கஞ்சியில் சிறிது உப்பைப் போட்டுக் கரைத்துக் குடித்து விட்டு வருபவள், இன்று காலையில் வீட்டில் நடந்த களேபரத்தில் வெறும் வயிற்றுடன் வந்திருந்தாள். அடிவயிறு வேறு ‘என்னைக் கொஞ்சம் கவனி’ என்று உறுமிக் கொண்டிருந்தது.
அவளை உள்ளே அழைத்ததும் சென்றவள்,
“குட் மார்னிங் மேம்.”
தலையசைத்து அவளது வாழ்த்தை ஏற்றவர், அவளை ஏறிட்டுப் பார்த்து,
“நீ மட்டும் தான் இன்னும் நம்ம டிபார்ட்மெண்ட்ல ஃபீஸ் கட்டல. நல்லா படிக்கற பொண்ணுங்கறதாலதான் இவ்வளவு நாள் எஸ்க்யூஸ் குடுத்திருக்காங்க. இனியும் லேட் பண்ணாதம்மா.”
“ஆக்சுவலா ஃபைனோடதான் நீ ஃபீஸ் கட்ற மாதிரி இருக்கும். ஃபைன் மணி கூட நான் குடுக்கறேன். நீ ஃபீஸ் மட்டும் கட்டினாப் போதும். ரெடி பண்ணிட்டியாமா?”
சுய பச்சாதாபத்தில் கண்கள் இரண்டும் கரித்துக் கொண்டு வர, “ இல்ல மேம், நானும் ட்ரை பண்ணிட்டுதான் இருக்கேன் மேம். பிரின்சிபாலப் பார்த்து ஏதாவது ஸ்காலர்ஷிப் கிடைக்குமான்னு கேட்கலாம்னு நினைக்கிறேன் மேம்.”
“பிரின்சிபால் சென்னைப் பல்கலைக்கழகத்தில நடக்கிற கருத்தரங்கு ஒன்னுல கலந்துக்கப் போயிருக்கார். இன்னைக்கும் நாளைக்கும் இருக்க மாட்டார். அப்புறம் சனி ஞாயிறு ரெண்டு நாள் லீவு. நாலு நாள் டைம் இருக்கு உனக்கு அதுக்குள்ள ட்ரை பண்ணுமா.
இந்த வருஷ மிடில்ல ஸ்காலர்ஷிப் கிடைக்குமான்னு தெரியல. அடுத்த வருஷம் ஆரம்பத்திலயே ப்ரைவேட்டா ஸ்காலர்ஷிப் கிடைக்குமான்னு கேட்டுப் பார்க்கலாம். “
“ஓகே மேம். தேங்க் யூ மேம்” வெளியே வந்தவள் சோர்வாக வகுப்பறையை நோக்கி நடந்தாள்.
அனுமதி பெற்று வகுப்பறையினுள் சென்று அமர்ந்தவளின், கவனம் முழுவதும் துறைத்தலைவர் பேசியதிலும், அவளது சித்தி சாரதா பேசியதிலும் நிலைத்திருந்தது. விண் விண்ணென்று தெறித்தத் தலையைக் கையால் பிடித்துக் கொண்டாள். வயிறு வேறு கபகபவென்று பசியில் காந்தியது.
விரிவுரையாளர் வகுப்பு முடிந்து வெளியே சென்றதும், தலையை டேபிளில் கவிழ்த்துக் கண்களை இறுக மூடிக் கொண்டாள். அடுத்த வகுப்பு ஃபிரீ ஆகையால் மாணவ மாணவிகள் அவர்களுக்குள் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
“ரஞ்சு… எழுந்திரி… இதைச் சாப்பிட்டுப் படு” என்று அவளை எழுப்பினாள் கோதை. சிவரஞ்சனியின் முன் இரண்டு வடையும் ஒரு கிளாஸ் டீயும் வைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்து கொண்டு வந்த வெண்பொங்கலையும் எடுத்துப் பிரித்து அவள் முன் வைத்தாள்.
உண்மையிலேயே அந்த டீ சிவரஞ்சனிக்குத் தேவையாய் இருந்ததால் மௌனமாக அவற்றைச் சாப்பிட்டாள். அவள் டீ யையும் குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்த கோதை, அவள் உண்டு முடித்த பின்னர்,
“இப்ப சொல்லு… என்ன சொன்னாங்க ஹெச்ஓடி?”
துறைத்தலைவர் கூறியதைச் சொன்னவள், “நாலு நாள் டைம் தந்திருக்காங்க கோதை. என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியல. பிரின்சிபாலும் ஹெல்ப் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டா டிஸ்கன்டினியூ பண்றதத் தவிர வேற வழி இல்லை.”
“ஏய்… அப்படியெல்லாம் எதுவும் சொல்லாதடி.
நீ தினமும் சாயந்திரம் டியூஷன் எடுத்து சம்பாதிக்கறத சேர்த்து வச்சாலே போதும். அதையும் உங்க சித்தி மாசாமாசம் புடுங்கிக்குது. நீ படிச்சாதான் உனக்கு நல்லது.
நல்ல வேலை ஏதாவது கிடைச்சா உங்க சித்திய விட்டு விலகி இருக்கலாம். பார்க்கலாம், நானும் கலாவும் வீட்ல கேட்டுப் பார்க்கிறோம்.”
இடைமறித்தவள்,
“ம்ப்ச்… அதெல்லாம் வேணாம் கோதை. எனக்கு நம்பிக்கையே இல்ல. அடுத்த வாரம் பிரின்சிபால பார்த்து கேட்டுப் பார்த்துட்டு, சரிவரலன்னா ஏதாவது வேலைக்கு போலாமான்னு நினைக்கிறேன்.
எங்க சித்தி வேற அவங்க அண்ணனுக்கு என்னைக் கல்யாணம் பண்ணி வைக்கப் போறேன்னு சொல்றாங்க.
ஏதாவது கொஞ்சம் வருமானம் வர்ற மாதிரி ஒரு வேலை கிடைச்சா போதும். சாயந்திரம் டியூஷனும் எடுத்தா கொஞ்சம் பணம் வரும். என் ஒருத்திக்கு போதாது? நான் எங்க வீட்ட விட்டு தனியா வந்துடலாம்னு நினைச்சிருக்கேன்டி.”
“ஏன்டி உங்க சித்திக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? அதோட அண்ணனுக்கு உன்ன கல்யாணம் பண்ணி வைக்கப் போறேன்னு சொல்லுதே. உனக்கு கேட்க ஆளில்லைன்னா என்ன வேணும்னா செய்யுமா அது. அதெல்லாம் நல்லாவே இருக்காதுடி” என்று சாபமிட்டவளின் கண்களும் கலங்கின.
“ம்ப்ச்… விடுடி அவங்களோட இருந்தாதான அவங்க சொல்றதக் கேட்கனும். படிப்பு இல்லைன்னாலும் மானத்தோட வாழ முடியும்னு நம்பிக்கை இருக்கு கோதை. படிப்பு மட்டும்தான் வாழ்க்கையா என்ன? நான் தைரியமாதான்டி இருக்கேன்.”
அந்த நேரம் வகுப்பறைக்குள் நுழைந்தனர் அவளது துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சிலர். இந்த வருடம் சுற்றுலா செல்ல முடிவெடுத்து இருப்பதாகவும், அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினர்.
அதற்குக் கட்டணம் மூவாயிரம் ரூபாய் என்றும். அனைவரும் விரைவில் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் கூறி, அந்த கட்டணத்தை வசூலிக்க அவர்கள் வகுப்பில் திவ்யா என்ற பெண்ணையும் நியமித்து விட்டுச் சென்றனர்.
அந்த வகுப்பிலேயே புத்திசாலி மாணவியான சிவரஞ்சனியை அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் அதிர்ந்து கூடப் பேசாது, அமைதியாக தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவள், இதுவரை யாரிடமும் முகம் திருப்பியதில்லை. அனைவருடனும் இன்முகத்துடன் பழகுபவள் அவள்.
ஆனால் திவ்யா மற்றும் சில அவளது நண்பர்களுக்கு ஏனோ சிவரஞ்சனியைப் பிடிப்பதில்லை. கான்வென்ட் பள்ளிகளில் படித்து, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசி, நவநாகரீக உடைகளையும் அணிந்தவர்களுக்கு,
அரசுப்பள்ளியில் படித்து எப்பொழுதும் அணியும் அதே நான்கு செட் உடைகளையே மாற்றி மாற்றி அணிந்து வரும் அவளைப் பார்க்க சற்று இளக்காரம் தான்.
ஆனாலும் எப்பொழுதும் வகுப்பில் முதலாவதாக வரும் அவளைப் பார்த்து பொறாமையும் உண்டு அவர்களுக்கு. இதனாலேயே எப்பொழுதும் சிவரஞ்சனியை மட்டம் தட்டியபடி இருப்பாள் திவ்யா.
அன்றும் அதுபோல மதிய உணவு இடைவேளையின் போது, யாரெல்லாம் சுற்றுலாவுக்கு வருவீர்கள் என்று கேட்டு கணக்கெடுத்துக் கொண்டிருந்தாள் திவ்யா.
சிவரஞ்சனி வரவில்லை என்று கூறவும் கோதை கலா மற்றும் ஒரு சில மாணவிகளும் சுற்றுலாவுக்கு வரவில்லை என்று கூறினர். அதில் கடுப்பான திவ்யா,
“ அவ வரலைன்னா நீங்களும் வரமாட்டீங்களாடி? சீனியர்ஸ் வந்து என்ன சொன்னாங்க பார்த்தீங்கல்ல… எல்லாரும் கண்டிப்பா கலந்துக்கனும். வரமுடியாதவங்க டிபார்ட்மெண்ட்ல போய் ரீசன் சொல்லி பர்மிஷன் வாங்குங்க.”
என்று சத்தமாகக் கூறியவள்., சிவரஞ்சனிக்கு மட்டும் கேட்கும்படி, “காலேஜ் ஃபீஸ் கட்டல, சாப்பாடு எடுத்துட்டு வர்றதில்ல, கிழிஞ்ச ட்ரெஸ் போட்டுட்டு வர்றது. இவல்லாம் டூர் வரலன்னு யார் அழுதது. இவளுக்கு சப்போர்ட் பண்ண நாலு பேரு. இடியட்ஸ்….” என்று முனுமுனுத்தவாறு அமர்ந்தாள்.
திவ்யா முனுமுனுத்தது கோதையின் காதுகளிலும் விழுந்தது. அவளைக் கடிந்து பேச எழுந்த கோதையை அடக்கியவள், “எனக்காக நீங்க லாம் டூர் போகாம இருக்கக் கூடாது. எல்லாரோடயும் என்ஜாய் பண்ண இது நல்ல வாய்ப்பு. நீங்க எல்லாம் கண்டிப்பா போகனும் புரியுதா?” என்றவள் மதிய வகுப்புக்கான குறிப்புகளை எடுக்க லைப்ரரிக்கு விரைந்தாள்.
பத்திரப் பதிவு அலுவலகம்.
பரபரப்பான அலுவலகம் மேலும் பரபரப்புடன் இருந்தது. அமைச்சரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பத்தரை மணிக்கு மேல் நேரம் நன்றாக உள்ளதால், பத்திரப் பதிவை வைத்துக் கொள்வோம் என்று முடிவு செய்த கதிர், மூலப் பத்திரங்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்தான்.
அவனிடம் உதை வாங்கியவனோ நிலத்தைப் பத்திரம் எழுதி தருவதற்காக, அமைதியாக சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தான். உதட்டோரத்தில் சிறு பிளாஸ்திரி ஒட்டப்பட்டு இருந்தது.
தலைவருக்கு அழைத்து, அவர் கிளம்பி விட்டதை உறுதி செய்தவன், அனைத்து ஏற்பாடுகளையும் பக்காவாக முடித்து வைத்தான்.
சரியாக பத்தரை மணிக்கு தலைவர் வரவும், பத்திரப் பதிவை முடித்தவர்கள், பணத்தைச் சரியாக எண்ணிக் கொடுத்தனர்.
அதில் பேசிய தொகையை விட ஐந்து லட்சம் ரூபாய் அதிகம் இருக்கவும், கதிரை வியப்பாக ஏறிட்டுப் பார்த்தான் , அவனிடம் உதை வாங்கியவன்.
“சார், இதுல ஐந்து லட்சம் கூட இருக்கு சார்.”
“வச்சிக்கோ உனக்குதான். ஏழ்மையான மக்கள் அவங்க வீட்டு விசேஷங்களை நடத்திக்கறதுக்காக வேண்டி, இலவச திருமண மண்டபம் கட்டறதுக்காக வாங்கற இடம். யாருக்கும் எந்த வகையிலும் மனசு கஷ்டம் இருக்கக் கூடாது. நியாயமா உனக்கு சேர வேண்டிய தொகையோட கொஞ்சம் அதிகமாதான் குடுத்திருக்கேன். வேற ஏதாவது உதவி வேணும்னாலும் கதிரப் பார்த்து சொன்னீன்னா செஞ்சு தரேன்.”
என்று புன்னகையுடன் கூறி அவன் தோள் மீது தட்டிக் கொடுத்து சென்ற தலைவரைப் பார்த்தவன் அதிசயித்து நின்றான்.
பத்திரப் பதிவு முடிந்த பிறகு, காவல் நிலையத்தில் அமைச்சர் நிலத்தை ஏமாற்றி பத்திரம் பதிந்து கொண்டார் என்று சகாயத்தின் தூண்டுதலின் பெயரில் புகார் கொடுக்க எண்ணியிருந்தான்.
ஆனால் தற்போது அவனது எண்ணம் முற்றிலும் மாறியிருந்தது. அவனுக்கு ஏற்கனவே அமைச்சரின் செல்வாக்கு, தயாள குணம், தொகுதியில் மேற்கொண்டிருந்த மக்கள் நலப் பணிகள் அனைத்தும் தெரியும். அமைச்சருக்கு அந்தத் தொகுதியில் இருந்த நல்ல பெயரும் தெரியும்.
அதையே தற்போது நேரில் பார்க்கும் போது பிரமித்துப் போயிருந்தான். அநாவசியமான ஆர்ப்பாட்டம் இன்றி, மக்களோடு மக்களாக நின்று பேசிக் கொண்டிருந்தவரைப் பார்த்து பிரமிப்பின் உச்சிக்கே சென்றிருந்தான்.
அமைச்சர் தனது வாகனத்தில் கதிருடன் ஏறிச் சென்றதும், சகாயத்திடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியவன், தன்னால் அமைச்சருக்கு எதிராக புகார் கொடுக்க முடியாது என்றும், இனித் தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கூறி வைத்தான்.
தலைவருடன் காரில் சென்று கொண்டிருந்த கதிர், “தலைவரே ஹார்பர்ல இன்னைக்கு நாலு கன்டெய்னர் வந்து இறங்குது. அதுல மூனு கடலூர் சிப்காட்டுக்கு வந்திருக்கற கெமிக்கல்ஸ், ஆனா அந்த இன்னோரு கன்டெய்னர் சேலம் வாசவி இன்டஸ்ட்ரீஸ் பெரிய பெருமாள் பேர்ல வருது. அதான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு.”
“அவங்க தெழிற்சாலைக்குத் தேவையானதா இருக்கும். இதுல என்ன சந்தேகம்?”
“தலைவரே, அந்த பெரிய பெருமாளும் எம்எல்ஏ குமாரும் சம்பந்திங்க. அது மட்டுமில்ல பெருமாள், குமாரு, எக்ஸ் எம்பி நாகராஜன் மூனு பேரும் பிஸினஸ் பார்ட்னர்ங்க. சென்னை ஹார்பர்ல சரக்க இறக்காம அதிகம் பிரச்சினை இல்லாத கடலூர்ல ஏன் இறக்கனும்? இதான் என் டவுட்.”
“ஆனா கஸ்டம்ஸ்ல எந்த பிரச்சினையும் இல்லாமல் க்ளியராகிடுச்சி. அதிரடியாதான் ஏதாவது செய்யனும். நீங்க ஐஜி கிட்ட பேசுங்க.”
“சரி பேசறேன். போன மாசம் நம்ம ஊர்ல ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்போட தொடர்புல இருந்த ஒருத்தன அடையாளம் காட்டின இல்ல, முதலமைச்சரே பர்ஸனலா பாராட்டினார் உன்ன.”
“ஆனா இது ரொம்ப ரிஸ்கான வேலை கதிரு. நீ ஜாக்கிரதையா இருக்கனும். லோக்கல்ல இருக்கற எல்லாரையும் பகைச்சிகிட்டு இருக்கற. உனக்கு எதனா ஒன்னுன்னா எங்களால தாங்க முடியாது நினைவுல வச்சிக்கோ.”
“அதெல்லாம் கவலைப் படாதீங்க தலைவரே. நான் எதுன்னாலும் சமாளிச்சிடுவேன். என்னய ஆஞ்சநேயர் கோவில்கிட்ட இறக்கி விடுங்க. பத்திரத்தை வச்சி படைச்சிட்டு நான் வீட்டுக்கு போறேன்.”
“டேய், உன்ன ஆஞ்சநேயர சுத்தக் கூடாதுன்னு உங்க அக்கா சொன்னால்ல… முதல்ல உனக்கொரு பொண்ணு பார்க்கனும். இன்னிக்கு வாசுகிட்ட என்னை எப்படி மாட்டி விடற? நீயும் உன் பொண்டாட்டிகிட்ட மாட்டிட்டு முழிக்கறத நான் பார்க்கனும்டா.”
“நான் ஆஞ்சநேயரோட தீவிர பக்தன். என்னையெல்லாம் யாரலயும் அசைக்க முடியாது.”
“பார்க்கலாம் பார்க்கலாம் உன்னையும் அசைச்சிப் பார்க்க ஒருத்தி வருவா.”
கோவில் வரவும் அவனை இறக்கி விட்டவர் கட்சி அலுவலகம் நோக்கிச் சென்றார்.
கதிர் கொடுத்த தகவல்களை நம்பகமான காவல்துறை உயரதிகாரிகளிடம் தெரிவித்தவர், அவர்களது செயல்பாடுகளையும் கண்காணித்துக் கொண்டிருந்தார்.
இரு தினங்களுக்குப் பிறகு செய்தித்தாள்களில், சேலம் வாசவி இன்டஸ்ட்ரீஸ் பெரிய பெருமாள் சட்ட விரோதமாக தங்கம் கடத்தியதால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது.
அவரது தெழிற்சாலைக்குத் தேவையான மூலப் பொருட்களோடு சேர்த்து தங்கமும் கடத்தி வரப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட இருநூறு கோடி மதிப்பிலான தங்கத்தைக் காவல்துறை உயரதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அனைத்து மட்டத்திலும் அதிகாரிகளைச் சரிகட்டி ரகசியமாகக் கடத்திவரப்பட்டச் சரக்கு மொத்தமாகப் பறிபோனதில் கொலைவெறியில் இருந்தனர் ஆளும் கட்சி எம்எல்ஏ குமாரும் எக்ஸ் எம்பி நாகராஜனும்.
அது மட்டுமல்லாமல் கடத்தல் வழக்கில் சிக்கிக் கொண்ட சம்பந்தியைக் காப்பாற்ற முடியாத கடுப்பிலும் இருந்தனர். மூவரும் தொழில் பார்ட்னர் ஆகையால் காவல்துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணையிலும் சிக்கினர்.
“எப்படிடா… எப்படி விஷயம் வெளிய தெரிஞ்சது? எவன்டா அவன் என்னைக் கண்காணிக்கறவன்? மாட்டிகிட்டு இருக்கறது என் பார்ட்னர் என் சம்பந்தி . என்னையும் விசாரணைங்கற பேர்ல ஆழம் பார்க்குறானுங்க.
எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லன்னு சொல்லி வெளிய வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சி.
இத்தனை வருஷ அரசியல் வாழ்க்கையே அசைச்சு பார்த்துட்டான். அது யாருன்னு எனக்கு தெரிஞ்சாகனும். இருநூறு கோடி ரூபாய் சரக்கும் போச்சு. என் சம்பந்தியையும் என்னால காப்பாத்த முடியல.”
என்று கர்ஜித்துக் கொண்டிருந்தான் எம்எல்ஏ குமார்.
“சென்ட்ரல் மினிஸ்டர் ராகவன் கூட சுத்திகிட்டு இருப்பானே ஒருத்தன் கதிர்னு, அவன் மேலதான் எனக்கு டவுட்டு தலைவரே. சிதம்பரம், கடலூரு, விருத்தாச்சலம்னு எல்லா ஏரியாலையும் சட்ட விரோதமாக நடக்கற எல்லா விஷயமும் அவன் மூலமாதான் மேலிடத்துக்குப் போகுதுன்னு பேசிக்கறாங்க தலைவரே.
லோக்கல் போலீஸ் அதிகாரிகளுக்கே தெரியாமதான் நடவடிக்கை எடுக்கப்படுது தலைவரே. அதுலயும் போனமாசம் ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்போட தொடர்புல இருந்த ஒருத்தன கைது பண்ணாங்க இல்ல, அதுல நேரடியாக ஐஜியே களமிரங்குனாருன்னா பாருங்க.
எனக்கென்னமோ அவன் மேலதான் சந்தேகம்.” என்றான் சகாயம்.
சகாயம் என்பவன் ஆளும் கட்சி எம்எல்ஏ குமாரிடம் விசுவாசமாக இருப்பவன். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவன். கதிர் விலை பேசி முடித்து அட்வான்ஸ் கொடுத்த பிறகு, நிலத்தின் உரிமையாளரிடம் சென்று வேறு ஒருவர் கூடுதலாக தருவதாக ஆசை வார்த்தை கூறி கமிஷன் அதிகமாக பெற்றுக் கொள்ள நினைத்தவன்.
எலக்ஷன் வரும் நேரத்தில் சகாயத்திடம் பிரச்சனை செய்தால் அது அரசியல் ரீதியாக திசை திருப்பப்படும் என்றே கதிர் இவனை விட்டு வைத்திருப்பது.
சகாயத்தின் தூண்டுதலின் பேரில் எம்எல்ஏ குமாரும் கதிரைக் கட்டம் கட்ட குறிபார்த்திருந்தான்.
—–மழை வரும்.