ESK-4

சுவாசம்.  4

 

காட்டுமன்னார்கோவில் சுற்று வட்டாரத்தில் மிகப்பெரும் நிலச்சுவான்தாராக இருந்தவர், ராகவனின் தாத்தா ராமசாமி படையாச்சி.  சுதந்திரப்  போராட்டங்களில் ஆர்வமாகக் கலந்து கொண்டவர்.  தனது சொத்துக்களில் பெருவாரியான சொத்துக்களை, மக்கள் நலனுக்காகவும் சுதந்திரப் போராட்டத்திற்காகவும், பொதுச் சொத்துக்களாக எழுதி வைத்தவர்.

அவரது மகனும், ராகவனின் தந்தையுமாகிய சதாசிவம் அரசியலில் ஈடுபட்டு, மக்கள் நலப் பணிகள் பல செய்தவர். அரசியலில் கரை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர். கட்சிப் பாகுபாடு இல்லாமல், அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் தோழமையாகப் பழகுபவர்.

பெரும் செல்வந்தராக இருந்தாலும், செருக்கு இல்லாமல் எளிமையாக எல்லோரிடமும் பேசிப் பழகும் அவருக்கு, அவரது சொந்த மாவட்டத்தில் பெரும் செல்வாக்கு உள்ளது.

அவரைப் பின்பற்றி  அரசியலுக்கு வந்த ராகவனும், தனது தந்தையைப் போலவே நற்பண்புகளையும் எளிமையையும், தனது தாரக மந்திரமாகக் கொண்டவர்.

ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலையில், சுயலாபத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்த அரசியல்வாதிகள் மத்தியில்,   ராகவன் போன்றோரைப் பிடிப்பதில்லை  அனைவருக்கும்.

மாற்றுக் கட்சியினர் என்றில்லாமல் சொந்தக் கட்சியிலும் அவர்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள்  பலர் உண்டு. ஆனால் கட்சி மேலிடத்திலும் மக்கள் மத்தியிலும் பெரும் செல்வாக்கு உள்ளவராகையால்  கட்சியிலும்,  கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அளவுக்கு  நல்ல பொருப்பில் இருந்தார்.

அவருக்கிருந்த மக்கள் செல்வாக்கே அவரை மீண்டும் மீண்டும் அமைச்சராக்கி அழகு பார்த்தது.  ராகவனும் தனது அதிகாரத்திற்குட்பட்ட வகையில் மக்கள் நலப்பணிகள் பலவற்றை செய்து வருபவர்.

இன்றளவும் மருத்துவமனைகள், பள்ளிகள்,  சுகாதார மையங்கள்,  மற்றும்  பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு இடம் அவரது தாத்தா ராமசாமி தானமாகக் கொடுத்ததாகவே இருக்கும்.

ராகவனும் மக்கள்  பயன்படும் வகையில்  திருமண மண்டபங்கள்,  மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பயிற்சி கொடுக்க சிறு தொழில் கூடங்கள்,  ஆதரவற்ற குழந்தைகள்  பெண்களுக்கான காப்பகங்கள் எனப் பல்வேறு நலத்திட்டங்களை  தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தும்,  சொந்த பணத்தைக் கொண்டும் செயல்படுத்தி வருகிறார்.

மக்களிடம் அவருக்கு உள்ள செல்வாக்கின் காரணமாக அவரை  நேரடியாகப்  பகைத்துக் கொள்ள எந்தக் கட்சியினரும் விரும்புவதில்லை. அரசியலில் நிரந்தர உறவும் கிடையாது,   நிரந்தர எதிரியும் கிடையாது அல்லவா? வரும் காலத்தில் அவரது கட்சியோடு கூட்டணி ஏற்பட்டால்,  ராகவன் தயவில்லாமல்  தொகுதியில் ஜெயிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆகவே ஆளும் கட்சி எம்எல்ஏ குமாருக்கும்,  எம்பி ராகவனைப் பகைத்துக் கொள்வதில் விருப்பமில்லை.  தனிப்பட்ட முறையில் விசாரித்துப் பார்த்ததிலும், தன்னை மாட்டி விட்டது கதிர்தான் என்று நம்பத்தகுந்த தகவல்கள் வந்ததில், கொதித்துப் போயிருந்தான்  குமார்.

பணியிட மாற்றம் மூலமாக, தனக்கு நம்பகமான ஒருவனை டிஎஸ்பி யாக, குறுகிய காலத்துக்குள்   ஊருக்குள் கொண்டு வந்தவன்,   தன்மேல் அமைச்சருக்கு சந்தேகம் வராத வகையில் கதிரைப் போட்டுத் தள்ளச் சொல்லியிருந்தான்.

இவர்களின் திட்டப்படி, சிறையில் இருக்கும் கொலைக் குற்றவாளி ஒருவனைத் தப்பிக்கச் செய்து,  அவனைச் சுட்டுப் பிடிக்கக் கலெக்டரிடம் அனுமதியும் வாங்க  வேண்டும்.

பிறகு தப்பிச் சென்ற குற்றவாளியை கதிரின் வீட்டுக்குள் நுழைய விட்டு,  அவனைத் துரத்திச் செல்வது போல கதிர் வீட்டினுள் புகுந்து,  அந்த குற்றவாளிக்குப் பதில் கதிரைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்தனர்.

இதற்காக பணமும் இலட்சக் கணக்கில் கைமாறியது.  சரியான தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தனர்  அனைவரும்.   எம்பி  ராகவன்  ஐந்து நாள் சுற்றுப்பயணமாக மலேசியா ஹாங்காங் செல்லும் செய்தி கிடைத்ததும்.  கதிரைக் கொலை செய்ய நாளும் குறித்தனர்.

எம்பி சுற்றுப்பயணம் முடிந்து வருவதற்குள் கதிரின் கதையை முடித்து விட வேண்டும்.  அமைச்சர்  ஊருக்குள் வந்துவிட்டாலோ அல்லது தமது திட்டத்தைக் கதிர் கண்டுவிட்டாலோ தமக்கு ஆபத்து என்பதை உணர்ந்து இருந்தனர்.

ஆனால் இவர்களுக்குத் தெரியாத ஒன்று,   உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளுக்குத் உளவு சொல்வதற்காக அனைத்துத் துறைகளிலும் ஆட்களை வைத்திருப்பவன்,  காவல்துறையிலும் வைத்திருந்தான். ஆகவே இவர்களுடைய திட்டம் பலிக்கப் போவதில்லை என்பது தெரியாமல், திட்டம் போட்டுக் காத்திருந்தனர். ******

எம்பி ராகவன் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக மலேசியா ஹாங்காங் செல்வதற்காக அவருக்குத் தேவையான பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தாள் வாசுகி. அவர்களது அறைக்குள் வந்த ராகவன்  பின்னிருந்து அவளைக் கட்டிக் கொண்டபடி,

“நீயும் வா ன்னு சொன்னா வரமாட்டேன்னு சொல்லிட்ட. கல்யாணம் முடிஞ்ச புதுசுல  என் கூடவே ஒட்டிக்கிட்டு எங்க போனாலும் வருவ.”

“எனக்கும் வர ஆசைதான்.  என்ன பண்றது? பிள்ளைங்களுக்கு பரிட்சை நேரம்.  அவங்களைக் கூட்டிட்டு போக முடியாது.  இங்க விட்டுட்டும் போக முடியாது. சின்னவன் நான் இல்லைன்னா ஏங்கிடுவான்.”

“ஏன் நாங்கல்லாம் ஏங்க மாட்டோமா?  உன் பையன்தான் ஏங்குவானா?” என்று கன்னத்தில் முத்தமிட,

அவர்புறம் திரும்பி, “ம்ப்ச்…  சும்மா இருங்க மாமா…  கிளம்பற நேரத்துல அட்டகாசம் பண்ணிகிட்டு”   என்றபடி அவரை விட்டு விலகியவள்,

“ஒழுங்கா வேளாவேளைக்குச் சாப்பிடுங்க. தினமும் எனக்கு ஃபோன் போடுங்க.  உடம்பை பார்த்துக்கோங்க. பசங்களுக்கு லீவ் விட்டதும் நாம எல்லாரும் சேர்ந்து போகலாம்”   என்றவாறு அவரது பயணப் பொதிகளைச் சுமந்தபடி வெளியே வந்தாள்.

“கதிர் உங்க கூட ஏர்போர்ட் வர்றான்ல?  இன்னும் அவனக் காணும்?”

“வந்துகிட்டு இருக்கான்,  நீயும் பிள்ளைகளும் ஜாக்கிரதையாக இருங்க.  செக்யூரிட்டீஸ் இல்லாம எங்கயும் போக வேணாம்.”

“ம்ம்…  சரிங்க.”

“சரி… கதிர் வந்துட்டான்.  பிள்ளைகள்கிட்ட சொல்லிடு.” என்று அவளிடம் விடைபெற்றுக் கொண்டு வண்டியில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார்.

 

கதிர் வண்டியை ஓட்ட ராகவன் அவனருகில் அமர்ந்திருந்தார்.  அழகர் பின்னே அமர்ந்திருந்தார். அவர்களுக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்கச் சென்னையை நோக்கிப் பயணம் செய்தனர்.

“கதிர்,   நீ கொஞ்சம் ஜாக்ரதையா இரு.   புதுசா வந்திருக்கிற டிஎஸ்பி அவ்வளவா ஆள் சரியில்ல.   அவன் மேல ஏகப்பட்ட ப்ளாக் மார்க் இருக்கு.  திடீர்னு இங்க டிரான்ஸ்பராகி வந்திருக்கான்,  வந்ததும் குமாரப் போய் பார்த்திருக்கான். என்ன ப்ளான் பண்றானுங்கன்னு புரியல.”

“அந்த பெரிய பெருமாள்  கைதானதுல,   குமாருக்கு  உன் மேல டவுட்டு வந்திருக்கோன்னு தோனுது.   ஏதா இருந்தாலும் ஜாக்கிரதையா இரு.  வீட்டுக்கும் போய் வாசுவையும் பிள்ளைகளையும் பார்த்துக்க.”

“தலைவரே இதெல்லாம் நீங்க சொல்லனுமா?  நான் பார்த்துக்கறேன். அவனுங்களால ஒன்னும் பண்ண முடியாது தலைவரே.   திருடனுக்குத் தேள் கொட்டின மாதிரி முழிச்சிகிட்டு இருக்கானுங்க. நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க.”

“என்னவோ மனசுக்குள்ள முனுக் முனுக்குங்குதுடா.”

“அழகரே இந்தப் பய யார்கிட்டயும்  எந்த வம்புக்கும் போகாம கொஞ்சம் பார்த்துக்கோ.  அப்புறம் எந்த விஷயமா இருந்தாலும் உடனே எனக்கு ஃபோனப் போடு.”

“ஆகட்டும் தலைவரே,  நான் பார்த்துக்கறேன்.  நீங்க  பார்த்துப் பயணம் பண்ணுங்க.”

ராகவனை விமானத்தில் ஏற்றி வழியனுப்பிவிட்டு இரவு வெகுநேரம் கழித்து  வீட்டிற்கு வந்தான் கதிர். அழகரும் அவனும் மட்டும் தங்கியிருக்கும் சிறிய அளவிலான அறை அது.

அவனுடைய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மாடியில் இருந்த அந்த அறையில்  இரவு தூங்கி எழுந்தவன்,  மறுநாள் காலையில் எழுந்து  அறையின் வெளிப்பகுதியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான்.

அவனைப் பார்க்க லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு வந்திருந்தார். எம்எல்ஏ குமாரும்,  புதிதாக வந்திருக்கும் டிஎஸ்பியும்,  இன்ஸ்பெக்டரும் சேர்ந்து போட்டத் திட்டங்களைக் கூறியவர்,   அவனை எச்சரிக்கையாக இருக்கும்படி கூறினார்.

“இன்னைக்குதான் அந்த கைதிய தப்பிக்க வைக்கப் பிளான் போட்டிருக்காங்க.  மதியம் கலெக்டர் ஆர்டர் வாங்கி இன்னைக்கு நைட்க்குள்ள உன்னைக் கொல்லத் திட்டம் போட்டிருக்காங்க.”

“நீ  எங்கயாவது போய்டு கதிரு.”

“ஏட்டு விஷயத்தை சொல்லிட்டீங்க இல்ல,  நீங்க கிளம்புங்க.   அவனுங்களுக்கு பயந்துகிட்டு என்னை ஓடச் சொல்றீங்களா?  அவனுங்க வரட்டும் நான் யாருன்னு காட்டறேன்.”

இவர்களது பேச்சு சத்தத்தைக் கேட்டு எழுந்து வந்த அழகர் விஷயத்தைக் கேள்விப்பட்டு அதிர்ந்து போனார். அவருக்கும் ஏட்டு சொல்வதே சரியாகப் பட்டது. எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்க மறுத்தக் கதிரை முறைத்தவர், ராகவனுக்கு  இந்தத் தகவலை அலைபேசியில் கூறினார்.

“அழகரே விஷயம் நான் நினைச்சத விட தீவிரமா இருக்கு.  முதல்ல இந்தப் பயல ஊரவிட்டுப் போகச் சொல்லு. இல்ல வேணாம்…  நீயும் அவன் கூடவே போ.”

“வாசுவுக்கும் பிள்ளைகளுக்கும் என்னால செக்யூரிட்டி டைட் பண்ண முடியும்.  அவங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது.  அவனுங்க டார்கெட் நீங்கதான்.  உடனே ரெண்டு பேரும் கிளம்புங்க.”

“சரிங்க தலைவரே,  சரிங்க தலைவரே… “  என்று அழகர் பேசிக் கொண்டிருக்க  அலைபேசியைத் தான் வாங்கியவன்,

“அவனுங்களுக்குப் பயந்துகிட்டுக் கோழை மாதிரி என்னை   ஓடி   ஒளியச் சொல்றீங்களா? எத்தனை பேர் வந்தாலும் என்னாலச் சமாளிக்க முடியும் தலைவரே.  நான் எங்கயும் போக மாட்டேன்.  வரட்டும் அவனுங்களா நானான்னு பார்க்கிறேன்”  என்று கர்ஜித்தவனை அடக்கியவர்,

“கதிர் நேரடியா மோதுரவன்கிட்ட நேரா மோதலாம்.  ஆனா சூழ்ச்சி பண்றவனுங்கள பதுங்கிதான் அடிக்கனும். புலி பதுங்கறது பாயறதுக்குத் தான்டா. அவனுங்க எழவே முடியாத அளவு அடிக்கனும்.”

“…”

“நான் சொல்ற  கேட்பல்ல… “   சிறிது நேர மௌனத்துக்குப் பின்  கதிர்,

“சொல்லுங்க என்ன பண்ணனும்?”

“சுந்தர வரச்சொல்றேன்.  நீயும் அழகரும் அவன் கூட கடலூர் படகுத்துறைக்குப் போயிடுங்க. நம்ம ஸ்டிபன் அங்க இருப்பான். அவன்கூட மீன் பிடிக்கற போட் எடுத்துகிட்டு கடலுக்குள்ள போய்டுங்க.  நான் இந்தியா வர்ற வரை நீங்க ரெண்டு  பேரும் அங்கயே இருங்க.  அப்புறம் திரும்பி வரலாம்.”

“நாலு நாளைக்கு தேவையான  ட்ரஸ் மட்டும்  எடுத்துக்கோ,  மத்ததெல்லாம் படகுலயே இருக்கும்.  நான் சொன்னது புரிஞ்சதா?  இப்ப அடுத்த பத்து நிமிஷத்துல நீ கிளம்பியிருக்கனும்.”

“சரி…  அக்காட்ட சொல்ல வேணாமா? அது என்னைத் தேடாதா?  உடனேக் கிளம்ப சொல்றீங்க.”

“எவன்டா இவன்?  நீ யாருக்கும் எதுவும் சொல்ல வேணாம்.  முதல்ல கிளம்பு.  நீ இருக்கற இடம் யாருக்கும் தெரியக் கூடாது.   வாசுகிட்ட உன்னைக்  கட்சி வேலையா அனுப்பியிருக்கறேன்னு நான் சொல்லிக்கறேன்.

வாசுக்கு விஷயம் தெரிஞ்சா ரொம்ப பயப்படுவா. நான் திரும்பி வந்ததும் சொல்லிக்கலாம்.”  அவன் அமைதியாக பதில் பேசாமல் இருக்கவும் தொடர்ந்தவர்.,

“கதிரு…   உன் கோபம் எனக்குப் புரியுது.  ஆனா இது கோபத்தைக் காட்ற நேரமில்லை. அவனுங்க இனிமே அரசியல், பொது வாழ்க்கைன்னு  எதுலயும் தலை காட்ட முடியாத அளவு அடிக்கனும்.  அதுக்கு பக்காவா எல்லாம் ரெடி பண்ணிட்டு அவனுங்கள நெருங்கனும்.

உன் மேல கை வைக்க நினைச்சவன நான் சும்மா விடமாட்டேன். இப்ப எனக்கு நீ பத்திரமா இருக்கறது தான் முக்கியம்.  சீக்கிரம் கிளம்புங்க ரெண்டு பேரும்.”

“சரி தலைவரே… “  என்றவன் ஃபோனை அணைத்து மேஜை மேல் வைத்து விட்டு, அவனுக்கு நான்கு நாட்களுக்குத் தேவையான உடைகளை எடுத்து வைக்கத் துவங்கினான்.

அப்பொழுது சிறிது நேரத்தில் அங்கே வந்த சுந்தர், “ண்ணா…  தலைவரு ஃபோன் போட்டாரு.  வண்டிய ரெடியா நம்பர்லாம்  மாத்தி எடுத்துட்டு வந்திருக்கேன்.  உன்னோட வண்டி இங்க கீழயே நிக்கட்டும்னு சொன்னாரு.

அதேபோல உன் ஃபோனையும்  இந்த  ரூம்லயே வச்சி பூட்டிடுவியாம். உனக்கு வேற ஃபோனும் சிம்மும் நான் வாங்கிட்டு  வந்திருக்கறேன். போட்டுல ஏறவும் தலைவருக்கு தகவல் சொல்ல சொன்னாரு.”   என்றபடி புதிய அலைபேசியையும் சிம்கார்டையும் நீட்டினான்.

அவற்றை வாங்கியவன் தனது சட்டைப் பையில் பத்திரப் படுத்திக் கொண்டான். மிகவும் கோபமும் எரிச்சலும் கலந்த மனநிலையில் இருந்தான் கதிர்.  கோழை  போல  பின்வாங்கி ஓடுவது அவன் மனதுக்கு ஒப்பவே இல்லை.

ஆனால் தலைவரின் வார்த்தையை மீறவும் முடியவில்லை.  எம்எல்ஏ குமாரையும், அவனுடன் இருக்கும் அனைவரையும்  கொல்லும் அளவு வெறி இருந்தது. ஆனால் தனது கைகள் கட்டப்பட்டதைப் போல உணர்ந்தவன்,  கடுப்புடனே கிளம்பிச் சென்றான்.

வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியேறிய கதிர்,  அழகர், சுந்தர் மூவரும் கடலூர் நோக்கி வண்டியில் விரைந்தனர்.

 

 

சிலுசிலுவென்று கடல்காற்று அள்ளிக்கொண்டு போனது. பாதாம் மர நிழலில் அமர்ந்து நோட்டில் எழுதிக் கொண்டிருந்தாள் சிவரஞ்சனி.  விலை அதிகமான புத்தகங்களை அவளால் வாங்க முடியாது.    ஆகையால், அந்தப்  புத்தகங்களை லைப்ரரியில் இருந்து எடுத்து வந்து,  அதனை அழகாக அவளது கையெழுத்தில் எழுதி வைத்துக் கொள்வாள்.

காலையிலேயே வரிசையாக மூன்று வகுப்புகள்  செய்முறை வகுப்புகள்.   அகர வரிசைப்படி  முதல் பகுதி மாணவர்களுக்கு காலையில் செய்முறை வகுப்பு.   கலாவும் கோமதியும் அகர வரிசைப்படி முதல் பகுதியில்  வருவதால் செய்முறை வகுப்பிற்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

சிவரஞ்சனி இரண்டாம் பகுதி மாணவர்களுடன் சேர்ந்து மதியம்தான் செய்முறை வகுப்பிற்குச் செல்வாள். காலையில் மூன்று மணிநேரம் ஃபிரி, ஆகையால் எழுத வேண்டியவைகளை எடுத்து வைத்து எழுத ஆரம்பித்தாள்.   அவளிடம் கலா,

“ரஞ்சு இரண்டு நாளைக்கு  முன்னாடி பிரின்சிபால பார்த்து பேசிட்டு வந்த,  அதுக்கப்புறம் என்னடி ஆச்சு?”

“ஸ்காலர்ஷிப் கிடைக்குமான்னு போய்க் கேட்டேன்ல,  நாளைக்கு கூப்பிடறேன்னு சொன்னாரு. ஆனா,  இதுவரை கூப்பிடல.  ஃபீஸ் கட்டச் சொல்லியும் யாரும் சொல்லல.”

“இன்னைக்கு கூப்பிட்டாலும் கூப்பிடுவாங்க.”

“சரிடி…   நாங்க பிராக்டிகல் க்ளாஸ்க்கு போய்ட்டு வர்றோம்.  பிரின்சிபால் கூப்பிட்டா உன்னோட நிலைமைய எடுத்துச் சொல்லு.”

சரி என்று தலையாட்டியவள்,  அமைதியாக தனது எழுத்து வேலையைத் தொடர்ந்தாள்.  மனதிற்குள், தனது வீட்டில் நடக்கும் அநியாயங்களை அசை போட்டபடி இருந்தாள்.

நாளுக்கு நாள் கேசவனின் தொல்லைகள் அதிகரித்தபடியே இருந்தது. வீட்டினுள் இருந்தால் கழுகுக் கண்களுடன் தன்னையே வட்டமிடும்,   அவனிடம் இருந்து தப்பிக்க  வேலைகளை விரைவாக முடித்து விட்டு,  கோவிலே கதி என்று கிடந்தாள்.

இரவிலும் பயத்துடன் கொட்டக்கொட்ட விழித்திருந்தாள். படிக்க ஸ்காலர்ஷிப் கிடைத்தாலும் வீட்டில் இருக்க முடியாது என்றே தோன்றியது.

டியூஷன் எடுப்பதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு,  ஏதேனும் ஒரு சிறிய அளவிலான அறை வாடகைக்குக் கிடைத்தாலும் சென்று விடவேண்டும்  என்று எண்ணிக் கொண்டாள்.

கலாவின் தந்தையிடம் சொல்லி வைத்ததில்,  அவரது நண்பரது இல்லத்தில் குறைந்த வாடகைக்கு வீடு எடுத்து தருவதாகச் சொல்லியிருந்தார். எனவே மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தாள்.

ஸ்காலர்ஷிப் கிடைக்காவிட்டாலும் கவலைப்படாமல்,   ஏதேனும் வேலையில் சேர்ந்து கொண்டு,    படிப்பை அஞ்சல் வழிக் கல்வி மூலமாகத் தொடர முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

அலுவலக உதவியாளர் வந்து பிரின்சிபால் அழைப்பதாகச் சொல்லவும்,  புத்தகங்களை மூடி வைத்து விட்டு இரண்டாவது மாடியில் இருந்த பிரின்சிபால் அறைக்குச் சென்றாள்.

அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தவள் அவர் அமரச் சொன்னதும் இருக்கையின் நுனியில் தயக்கமாக அமர்ந்தாள். இரண்டு மாடி ஏறிவந்ததில் சற்றுப் படபடப்பாக இருந்தது. அதைவிட தன்னை இமைக்காமல் பார்க்கும் பிரின்சிபாலின் பார்வையில் சற்று பயமும் வந்தது.

அவர் சொல்லப்போகும் வார்த்தைக்காக அவரது முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

 

காற்று வரும்