ESK-5

ESK-5

சுவாசம் —5

இரண்டாம் மாடியில் கல்லூரியின் அலுவலக அறையும்,  சில வகுப்பறைகளும் இருந்தன.  படியேறி வந்ததும் நடுநாயகமாக கல்லூரி முதல்வர் அறை இருந்தது. அதற்கு இடது புறம் அலுவலக அறையும்,  ஓய்வறைகளும்,  வலதுபுறம் சில வகுப்பறைகளும் இருந்தன.

இரண்டு மாடிகள் படியேறி வந்தவள், நேராக முதல்வரின் அறைக்குள் அனுமதி கேட்டு உள்ளே சென்றாள். அறை முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட்டு இருந்தது. அழைப்பதாகக் கூறியதும் விரைவாகப் படியேறியதால், சற்றுப் படபடப்பாக உணர்ந்தாள்.

உள்ளே வந்ததும், அறையின் நடுநாயகமாக போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து இருந்தார் முதல்வர்.

ஐம்பது வயதிற்கு மேல் மதிக்கத்தக்க வகையில் இருந்தார். கருநீலக் கலரில் கோட்டும் வெள்ளை முழுக்கை சட்டையும் அணிந்து, பழுப்பு வண்ணத்தில் டை அணிந்திருந்தார்.  தலையில் பளபளவென்று வழுக்கை விழுந்திருந்தது.

அவருக்கு முன்னே கருந்தேக்கு மரத்தால் செய்யப்பட்டு, மேலே கண்ணாடி பதிக்கப்பட்ட மேஜை இருந்தது. துளித் தூசி இல்லாமல் துடைத்து வைக்கப் பட்டிருந்தது.

மேஜையின் மேல் முக்கியக் கோப்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேஜைமேல் இருந்த கடிகாரம், மணி சரியாக பத்து இருபது என்று காட்டியது. அதன் அருகில் இருந்த  பெயர் பலகை, அவரது  பெயர் தீனதயாளன் என்றும்,  அவர் வாங்கிய உயர்ந்த பட்டங்களையும் எடுத்துக் காட்டியபடி இருந்தது.

இவள் நுழைந்ததும் மரியாதையுடன் காலை வணக்கத்தைக் கூறினாள்.

தலையசைத்து ஏற்றுக் கொண்டவர்,  அவளை அமருமாறு கூறினார்.  சற்றுத் தயக்கத்துடன் இருக்கை நுனியில் அமர்ந்தவள்  மனதின் படபடப்பு அடங்க மறுத்தது.

அறை முழுவதும் குளிர்ந்து இருப்பினும், பின்னங்கழுத்தில் இருந்து வியர்வைத் துளிகள் முதுகு வழியாக இறங்குவதை உணர முடிந்தது.

கல்லூரியில் சேரும் போது, பள்ளி முதல்வருடன் வந்து பணம் கட்டிச்  சேர்ந்து கொண்டாள்.  கல்லூரி முதல்வரைச் சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பும், துறைத் தலைவருடன் ஸ்காலர்ஷிப் உதவி கேட்க வந்திருந்தாள்.  தனியாக கல்லூரி முதல்வரைச்  சந்தித்துப் பேசுவது இதுவே முதல்முறை.

பார்வையை அகற்றாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த முதல்வரைப் பார்த்ததும், பயத்தில் உள்ளங்கைகள் சில்லிட்டுப் போயின. எச்சில் கூட்டி விழுங்கியவள் மெதுவாக இதழ்களைப் பிரித்து,

“ சார்… வரச் சொல்லியிருந்தீங்க சார்.”

முதல்வர் நாற்காலியில் இலகுவாகச் சாய்ந்து அமர்ந்திருந்த தீனதயாளன் சற்று நிமிர்ந்து அமர்ந்து,

“யெஸ்… சிவரஞ்சனி…  ஸ்காலர்ஷிப் கிடைக்குமான்னு கேட்டிருந்த இல்லயா? அதப்பத்திப் பேசத்தான் வரச்சொன்னேன்.”

டேபிள் வெயிட்டை உருட்டியவாறு சில நெடிகள் மௌனமாக அமர்ந்திருந்தார். அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று சிவரஞ்சனியும் அவர் முகத்தையே பார்த்திருந்தாள்.

லேசாகத் தொண்டையைக் கணைத்தவர், “மிஸ் சிவரஞ்சனி ராஜாராமன்,  இளநிலை உயிர்வேதியியல் இரண்டாம் ஆண்டு மாணவி. இதுவரைக்கும் நடந்த அத்தனைத் தேர்வுகளிலும் வகுப்பில் முதலாவதா வந்திருக்க.

அப்பா அம்மா இரண்டு பேரும் இப்ப உயிரோட இல்ல. கூடப்பிறந்தவங்க யாரும் இல்ல. உங்க சித்தி கூடதான் இருக்கற.  ரொம்ப கஷ்ட ஜீவனம்.

ப்ளஸ் டூல நல்ல மார்க் வச்சிருந்ததால இந்தக் காலேஜுல மெரிட்ல சீட் கிடைச்சிருக்கு. போன வருஷம் உங்க ஸ்கூல் பிரின்சிபால்  ஃபீஸ் கட்டியிருக்காங்க.

இந்த வருஷமும் அடுத்த வருஷமும் ஏதாவது  ஹெல்ப் கிடைக்குமான்னு கேட்க வந்திருக்க.  நான் சொன்னதெல்லாம் சரியா?”

தன்னைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தான் சொல்லாமலேயே சொல்லிய பிரின்சிபாலை ஆச்சர்யமாகப் பார்த்திருந்தாள். தொடர்ந்து பேசிய தீனதயாளன்,

“இந்த வருஷமும் அடுத்த வருஷமும் நீ ஃபீஸ் கட்ட வேணாம். உனக்கு நானே கட்டிடறேன். நம்ம காலேஜ் ஹாஸ்டல்லயே நீ ஃபிரியா தங்கிக்கலாம். அங்கயே சாப்பிட்டுக்கலாம்.

அடுத்து நீ முதுகலை பட்டம் படிக்கனும்னாலும் நம்ம காலேஜ்லயே சீட் குடுக்கறேன்.  அப்பவும் நீ ஃபிரியா ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சிக்கலாம்.  இல்ல வேலைக்குப் போக விருப்பப் பட்டாலும் காம்பஸ்லயே நல்ல வேலை கிடைக்க ஏற்பாடு பண்றேன்.”

அவளது முகத்தைப் பாரத்தபடி கூறிய தீனதயாளன்  அவளது பதிலுக்காக காத்திருந்தார்.

என்ன சொல்வது என்றே தெரியவில்லை சிவரஞ்சனிக்கு. அதிர்ச்சியிலும் ஆனந்தத்திலும் பேச்சே எழவில்லை.  ஒரு நிமிடத்தில் தனது அத்தனைக் கஷ்டங்களுக்கும் தீர்வு சொல்லியவரைப் பார்க்கும் போது, கையெடுத்துக் கும்பிடத்  தோன்றியது.

 

கண்களில் நன்றி   மின்ன   பரவசத்தோடு,  “சார்…  எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல சார்.  ரொம்ப தேங்க்ஸ் சார். இந்த உதவிய என் வாழ்நாளுக்கும் மறக்க மாட்டேன் சார்.”

அவளைக் கூர்ந்து பார்த்தவர்,

“குட்…  வெரிகுட்…  இதுதான் எனக்கும் வேணும். என்னை மறக்க மாட்டேன்னு சொன்ன பாரு,  அதுதான் எனக்கு வேணும்.”

என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல், குழப்பமான முகத்துடன் அவரைப் பார்த்திருந்தாள்.

“நான்  என்ன சொல்ல வர்றேன்னு புரியலயா?”

இல்லை என்பது போலத் தலையசைத்தவளின் உள்ளத்தில், ஏதோ ஒரு நடுக்கம். விரும்பத்தகாத ஏதோ ஒன்றை இவர் கூறப் போகிறார் என்று, அவள் இதயம் பயத்தில் முரசு கொட்டியது.

பயத்தில் வெளிறத் துவங்கியிருந்த அவள் முகத்தைப் பார்த்தவாறு,  கபடப் புன்னகையுடன்,

“நீ திங்கக்கிழமையிலிருந்து வெள்ளிக் கிழமை வரை நம்ம காலேஜ் ஹாஸ்டல்லயே தங்கிக்கலாம், படிக்கலாம்,  நிம்மதியா இருக்கலாம். ஆனா…”   சற்று  இடைவெளி  விட்டவர்,

“சனி, ஞாயிறு ரெண்டு நாள் மட்டும் என்னோட கெஸ்ட்ஹவுஸ்ல என்கூட தங்கியிருக்கனும். “

உச்சபட்ச அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தவளின் விழிகள் இரண்டும் சாசர் போல விரிந்தன.  தன்னை மீறிக் கண்கள் கலங்கத் துவங்கின.

“இதுக்கு சம்மதம்னா தொடர்ந்து இந்த காலேஜுல நீ படிக்கலாம்.  இல்லைன்னா சத்தம் போடாம வெளியே  போ.”

இப்படியும் உலகத்தில் மனிதர்கள் இருப்பார்களா? தனது தந்தையின் வயதில் இருப்பவர், மரியாதையான பதவியில் இருப்பவர்,  பல்வேறு பட்டங்களைப் படித்துப் பெற்றவர்,  மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஒரு பெரிய மனிதர் செய்யும் காரியமா இது?

இல்லை என் காதுகள் தான் தவறாக எதையோ கேட்டு, கற்பனை செய்து கொண்டதோ?   பயத்திலும் பதட்டத்திலும் கண்கள் வேறு அருவியாகப் பொழியத் துவங்கி இருந்தது.

“எ…என்ன சொ…ல்றீங்க சா..சார்? நீ…நீ… நீங்க எ…ன்னோட அ…ப்பா மாதிரி.  எ…ன்கிட்டப் போய் இ…ப்படிப் பே… சறீங்களே?”

“ஹேய்…  ஸ்டாப்… ஸ்டாப்…  டோண்ட் ப்ளே எமோஷனல் ட்ராமாஸ்.  உனக்கு என்கிட்ட ஒரு உதவி தேவையா இருந்துச்சி. அதே மாதிரி எனக்கு உன் கிட்ட என்ன தேவையோ அதைச் சொன்னேன்.”

“உன்னைக் கட்டாயப் படுத்தவோ,  மிரட்டவோ இல்ல புரியுதா. உனக்கு விருப்பம்னா தொடர்ந்து இந்த காலேஜுல படிக்கலாம். இல்லயா டீசி வாங்கிகிட்டு போய்ட்டே இரு.”

தான் பேசுவது தவறே இல்லை என்பது போல பேசிக்கொண்டே போனவரை, வெறித்துப் பார்த்தவள்,

“படிக்க வசதி இல்ல, உதவி பண்ணுங்கன்னு கேட்க வந்தா,  நீங்க என்ன வேணும்னா பேசுவீங்களா?  உங்களப் போய் நல்லவர்னு நம்பி,  உதவி கேட்க வந்த என்னைச் சொல்லனும்.  பொண்ணுங்கன்னா அவ்வளவு இளக்காரமா போச்சுல்ல”   என்று கோபப்பட்டவளிடம்,

“அது எப்படிம்மா எல்லாப் பொண்ணுங்க கிட்டயும்  இப்படிக் கேட்க முடியும்?   நான் கூடத்தான்,  அன்னைக்கு உன் ஹெச்ஓடி கூட வந்தப்பவே,  உன்னைப் பார்த்து அசந்து போயிட்டேன். உன் கண்ணும் லிப்ஸ்ஸூம்  அப்படியே என்ன இழுக்கற மாதிரி இருந்துச்சி.

நான் பாட்டுக்கு உன்னைப் பத்தித் தெரியாம, உன் கிட்ட கேட்டுட்டு,  நீ  அடுத்த நாளே உங்க அப்பா  அண்ணன்னு  யாரையாவது கூட்டிட்டு வந்து  மிரட்டினா என்ன செய்யறது?

அதான், அப்ப எந்த பதிலும் சொல்லாம உன்ன அனுப்பி வச்சிட்டு, உன்னப் பத்தி முழுசா விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன். அதுக்கப்புறம்தான் உன்னைக் கூப்பிட்டு அனுப்பினேன்.”

அவருடைய வார்த்தைகள் அவளை மேலும் ரணமாக்கின. ஆதரவில்லாத பொண்ணுன்னா என்ன வேணும்னா பண்ணுவாங்களா?  எவ்வளவு அடக்கியும் அழுகைக் கேவலாக வெடிக்க.

“இப்பவே வெளிய போய் உங்க முகத்திரையை கிழிக்கல…  என்ன பண்றேன்னு மட்டும்  பாருங்க.  நீங்க பேசினதெல்லாம் போய் எல்லார் கிட்டயும் சொல்றேன்.”

“ஹா… ஹா… ஹா… “

பெருங்குரலெடுத்து சிரித்தவர்,  “உனக்கு நேரா இருக்கற கேமராவ நீ வரும் போதே ஆஃப் பண்ணிட்டேன்.  நமக்கு பக்கவாட்டுல மட்டும்தான்  கேமரா இருக்கு.   சோ…  நாம பேசறது எதுவும் பதிவாயிருக்காது. என்ன பேசினோம்னு யாருக்கும் தெரியாது.

நான் என்னுடைய இடத்த விட்டு எந்திரிக்கல,  உன் கிட்ட வரல,  உன்ன டச் பண்ணல.  நீ  என்னைப் பத்தி என்ன சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க.

ஸ்காலர்ஷிப் கிடைக்க வாய்ப்பில்லைனு சொன்னேன்,  என்னை அசிங்கப் படுத்த பொய் சொல்றான்னு சொல்லுவேன்.

நீதான் அசிங்கப்படுவ புரியுதா.  போ…  வீட்டுக்குப் போய் பொறுமையா யோசிச்சு பாரு. நான் சொன்னது சரின்னு தோனும்.  நீயே ஒத்துக்குவ.”

“ச்ச்சீ…   செத்தாலும் சாவேனே தவிர அந்த மாதிரி ஈனமான வேலைய ஒரு நாளும் செய்ய மாட்டேன்.  எனக்கு இந்தக் காலேஜூம் வேணாம்,  ஒன்னும் வேணாம்.“

அழுகையுடன் படபடத்தவள், விடுவிடுவென்று அறைக்கதவைத் திறந்து வெளியே  வந்தாள்.

மூச்சு முட்டுவது போன்ற இருக்கத்தைத் தாள முடியவில்லை அவளால். நிற்காமல் சரசரவென்று படிக்கட்டுகளில் இறங்கியவள்,  எதிலிருந்தோ தப்பிப்பவள் போல கல்லூரியை விட்டு வெளியே வந்தாள்.

மனம் முழுவதும் பாறாங்கல்லை வைத்து அழுத்தியது போல இருந்தது. பெரிய பெரிய மூச்சுக்களை எடுத்து விட்டபடி நடந்தவளின் கால்கள், கடலை நோக்கிச் சென்றன.

அந்த நேரத்தில்  கடற்கரை ஆட்களே இல்லாமல் வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. வேகமாகக் கடலை நோக்கி வந்தவள்,  அந்த சூடான மணலில் பொத்தென அமர்ந்தாள்.

அவளுக்கு வாய்விட்டுக் கதறி அழ வேண்டும் போல இருந்தது.  சுற்றுப் புறத்தைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல்,  ஆற்றுவார் தேற்றுவார் இன்றி அழுதுக் கரைந்தாள்.

பாதுகாப்பில்லாத சூழலில் தன்னைத் தனியே தவிக்க விட்டுச் சென்ற, தாய் தந்தையின் இழப்பு பூதாகாரமாகத் தெரிந்தது.

வட்டமிடும் வல்லூறுகளும்,  பிணம் தின்னும் கழுகுகளும் நிறைந்த இந்த உலகத்தில், என்னைத் தனியே விட்டு சென்று விட்டீர்களே என்று எண்ணி அழுதாள்.

மனம் சுயபச்சாதாபத்தில் விண்டு போனது. படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதைத் தவிர தான் செய்த குற்றம் என்ன?  தனக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?  எண்ணி எண்ணி ஓய்ந்து போனாள்.

அந்தப் பெரிய மனிதர் படிப்பதற்கு உதவ முடியாது என்று கூறியிருந்தாலும் அது அவளைப் பெரிதாக பாதித்திருக்காது. அதை அவள் கொஞ்சம் எதிர் பார்த்தும் இருந்தாள்.

கல்லூரி சென்று படிக்காவிட்டாலும் ஏதேனும் வேலைக்கு சென்று கொண்டே அஞ்சல் வழிக் கல்வியைத் தொடர முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனால், அவருடைய இத்தகைய கோர முகத்தை எதிர்பார்க்கவில்லை அவள். சிவரஞ்சனி இயல்பில் மிகவும் தைரியமான பெண்ணெல்லாம் கிடையாது.  சிறு வயதில் இருந்தே சித்திக்கு பயந்து பயந்து வளர்ந்த பெண் அவள்.

தைரியமான பெண்ணாக இருந்தால், தன்னிடம் இப்படித் தகாத வார்த்தைகளை உதிர்த்த அவரது சட்டையைப் பிடித்து இழுத்து, நாலு  அறை விட்டிருந்திருப்பாள்.

அவ்வளவு தைரியம் இல்லாமல்தான், அவர் பேசிய வார்த்தைகளைத் தாங்க முடியாமல் தவித்துத் தனியே வந்து அழுது கொண்டிருக்கிறாள்.

வீட்டில் கேசவனது சில்லறைத் தனமான சில்மிஷங்களையும்,  அவளது சித்தி சாரதாவின்   அர்த்தமற்ற மிரட்டல்களையும், சாமாளித்து விடுமளவு தைரியம் இருந்தது அவளுக்கு.

தன்னைமீறி அவர்களால் எதுவும் செய்துவிட முடியாது என்பது அவளுக்குத் தெரியும்.  சித்தியை விட்டுத் தனியே சென்று இருக்க வேண்டும் என்ற அளவுக்கு மன தைரியம் உள்ளவள் தான்.

ஆனால் இது முற்றிலும் வேறு. எதிர் பாராத நேரத்தில்,  எதிரபாராத இடத்தில், எதிர் பாராத நபர் இப்படி பேசக்கூடும் என்று அவள் கற்பனை செய்து கூடப் பார்க்கவில்லை.

தான் இனித் தனியாக வாழப்போகும் உலகில், இத்தகைய ஓநாய் மனிதர்களை  நிறைய சந்திக்க நேரிடுமோ?  என்று அஞ்சி நடுங்கினாள்.  அவளது அடிப்படைத் தைரியமே ஆட்டம் கண்டு விடும் போல இருந்தது.

அழதழுது கண்ணீர் வற்றி விட்டது.  முகமும் கண்களும் சிவந்து வீங்கி விட்டது. உதடுகள் உலர்ந்து நா வரண்டது.  அமர்ந்திருந்த இடத்திலிருந்து மெதுவாக எழுந்தவள் கால் போன போக்கில் நடக்கத் துவங்கினாள்.

கல்லூரிக்குள் செல்லவே பிடிக்கவில்லை அவளுக்கு. இனி என்ன செய்வது?  அந்த ஆளுடைய முகத்திரையை எப்படிக் கிழிப்பது?  இனி எந்த ஜென்மத்திலும் எந்தப் பெண்ணிடமும், இப்படி அவன் பேசாதவாறு செய்ய வேண்டும் என்ற வெறி உண்டானது.

ஆனால் என்ன செய்ய?   இது ஒன்றும் சினிமா இல்லயே. ஆதரவுக்குக் கூட ஆள் இல்லாமல் நிற்கும் ஒற்றைப் பெண்ணால் என்ன செய்ய முடியும்? என்றுத் தோன்றியது.

தோன்றிய வேகத்தில் அதனை அழித்தவள்,  “இல்லை நான் அவன சும்மா விடமாட்டேன்”  என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.

முதலில் ஹெச்ஓடி யைப் பார்த்து நடந்ததைச் சொல்ல வேண்டும்.  அவள் பேரில் சற்று இரக்கம் கொண்ட பெண்மணி அவர். அவளை நம்பக்கூடும்.  பிறகு அவர் துணையுடன் டீசியை வாங்க வேண்டும்.

அதன் பிறகு தன்னுடைய வகுப்புத் தோழர்களிடம் விபரத்தைக் கூறினால்,  அவர்கள் ஏதேனும் தனக்கு உதவ முடியும்.   ஆமாம்… அதுதான் சரி…

யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் கலாவும் கோதையும் தன்னைக் கண்டிப்பாக நம்புவார்கள் என்று எண்ணியபடி, சுற்றுப்புறத்தைக் கவனித்தவள் அதிர்ந்து போனாள்.

ஏதேதோ எண்ணங்களுடன் கவனிக்காமல் கல்லூரியை விட்டு வெகு தொலைவுக்கு ஆளரவமற்ற சவுக்குத் தோப்புகள் நிறைந்த பகுதிக்கு வந்திருந்தாள். ஆட்கள் நடமாட்டம் இல்லாத மயான அமைதி மிரட்டியது. கடலின் அலையோசை மட்டுமே கேட்டது.

திரும்பிச் சென்று விடலாம் என்று எண்ணியபடித் திரும்பியவளின் கவனத்தைக் கவர்ந்தது சருகுகள் மிதிபடும் ஓசை. என்னவென்று அவள் சுதாரிப்பதற்குள் அவள் முன்னே ஆஜானுபாகுவாய் மூன்று தடியன்கள்  வந்து நின்றனர்.

கோணலானச் சிரிப்புடன் அவளை நெருங்கியவர்களைப் பார்த்ததும் பயத்தில் அவளுக்கு கால்கள் உதறத் துவங்கின.

அவள் தன் போக்கில் எதை எதையோ எண்ணிக் கொண்டு தனியாக நடந்து வருவதை தூரத்திலேயே பார்த்து விட்டனர் அவர்கள்.

அந்தப் பகுதி அவ்வளவாக  ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி. இவர்கள் அங்கே சீட்டு விளையாடிக் கொண்டும்,   தண்ணியடித்துக் கொண்டும் அமர்ந்திருந்தனர்.

அவளைக் கண்டதும் அவர்களுக்கு வேறு விதமான எண்ணங்கள் தோன்றின. இன்று தங்களுக்கு நல்ல விருந்து என்று நினைத்துக் கொண்டவர்கள்,  சத்தமில்லாமல் அவளைப் பின்தொடர்ந்தனர்.

இந்தப் பகுதிக்கு வரும் காதல் ஜோடிகளை அடித்து,  ஆடவனைக் கட்டிப் போட்டுவிட்டு, அவன் கண் முன்னே அந்தப் பெண்ணைச் சீரழிக்கும் அவலமும் அங்கே  அடிக்கடி  அரங்கேறும்.

ஆகையால், அந்தப் பகுதிகளுக்கு பெரும்பாலும் யாரும் வருவதில்லை. ஆனால் சுற்றுப்புறத்தையே கருத்தில் கொள்ளாது, தன் போக்கில் நடந்து வந்த சிவரஞ்சனி இவர்களிடம் மாட்டிக் கொண்டாள்.

நொடியில் சுதாரித்தவள், இவர்களிடம்  மாட்டினால் தன் கதி அதோகதிதான் என்று எண்ணியபடி, திரும்பி ஓடத் தொடங்கினாள்.

கல்லூரி இருந்த திசையில் அந்த தடியன்கள் நின்றிருந்ததால்,  அதற்கு எதிர்திசையில்  கண்மண் தெரியாமல் ஓடத் தொடங்கினாள்.

“டேய்…  அந்தப் பொண்ணு ஓடறா பாருங்க…  பிடிங்கடா…”   என்றபடி அவர்களும் அவளைத் துரத்தத் துவங்கினர்.

மெல்லிய தேகமுடையவள் அவள்.  காலையில் சரியாக சாப்பிடாதது,  பிரின்சிபால் மூலம் வந்த மனச்சோர்வு,  இந்த தடியன்களைக் கண்ட பயம் அனைத்தும் சேர்த்து,  அவளது கால்களைத் துணியாகத் துவளச் செய்தது.

மணல் வேறு கால்களில் சிக்கி விரைவாக ஓட முடியாமல் தடுத்தது. இருப்பினும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு  ஓடினாள்.

மிக அருகில் நெருங்கி விட்டனர். இவர்களின் கையில் சிக்குவதை விட, கடலில் இறங்கி விடலாம் என்று தோன்றியது.   ஆனால் கடலில் இறங்குவதற்குள் அவர்கள் பிடித்து விடுவர்.  அவர்கள் கையில் அகப்படக் கூடாது என்ற வெறியோடு ஓடினாள்.

அப்படியும் அவளருகில் நெருங்கி விட்டான் ஒருவன். கைகளை நீட்டி அவளது கூந்தலைப் பிடிக்க எண்ணியவன் கைகளில், அவளது உடையின் பின்பாகம் அகப்பட்டது.

அவள் அணிந்திருந்தது சற்று பழைய காட்டன் சுடிதார். ஆகையால்,  அந்த முரடன் இழுத்த வேகத்திற்கு, அதன் பின் பாகம் கிழிந்து அவனது கையோடு போனது. முதுகை மறைக்கும் துணி இல்லாமல் உள்ளாடையோடு,   தடுமாறிக் கீழே மண்டியிட்டபடிக் குப்புற விழுந்தாள்.

 

 

 

காற்று வீசும் .

 

error: Content is protected !!