ESK-6

ESK-6

சுவாசம் -6

துறைமுகத்தை ஒட்டியுள்ள அந்த முகத்துவாரப் பகுதியில், இருபதுக்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. கரையில் கட்டு மரங்கள் ஒன்றிரண்டு மட்டுமே தென்பட்டது.

கடலூர் மாவட்ட கடற்கரையின் மொத்த நீளம் 57.5 கிலோமீட்டர்.  அவற்றில் ஆழம் அதிகமில்லாத கடற்கரைப் பகுதிகள் குறைவு.  பொதுவாக மக்கள் பொழுது போக்கிற்காக செல்லக் கூடிய கடற்கரைகளில், நான்கு அடியிலிருந்து  பத்து அடிவரை  ஓரங்களில் சீரான ஆழம் இருக்கும்.

கிட்டத்தட்ட கரையில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்திற்கு, கடலின் ஆழம் சீராகத்தான் இருக்கும்.  ஆழத்தின் அளவு இடத்திற்கு இடம் சற்று மாறுபட்டாலும்,  மணல் பகுதி அதிக சரிவு இல்லாமல்தான் இருக்கும்.

கடல் சீற்றம் இல்லாத நாட்களில் அலைகளின் வேகமும் மிதமாகத்தான் இருக்கும்.  ஆனால் துறைமுகத்தை ஒட்டியுள்ள முகத்துவாரப் பகுதியில், கரையிலிருந்து சில அடி தூரத்திலேயே மிக ஆழமான கடல் பகுதி ஆரம்பித்து விடும். அப்பகுதிகளில் படகுகள் செல்லவும்,   நிறுத்தவும் ஏதுவாக இருக்கும்.

மேலும் இப்பகுதிகளில் மணல் சீரான சரிவாக இல்லாமல், செங்குத்தான ஆழமாக இருக்கும். கடல் அலைகளும் சற்று சீற்றமாக இருக்கும்.  ஆனால் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது, கடலூர் மாவட்ட முகத்துவாரம் சற்று ஆழம் குறைவுதான்.

பெரிய அளவிலான மீன்பிடி விசைப் படகுகளை எடுத்துக் கொண்டு, கடலுக்கு மீன் பிடிக்க ஐந்து முதல் பத்து நபர் வரை செல்வர்.  குறைந்தபட்சம் ஆறு நாட்கள் முதல் பதினைந்து நாட்கள் வரை, கடலின் நடுவே தங்கி மீன் பிடித்து திரும்புவர்.

அந்த மிகப் பெரிய விசைப் படகில் குளிர் சாதனப் பெட்டி, மீன்களைப் போட்டு வைக்க பெரிய அளவு குளிர் பதன கிடங்கு,  சில நூறு லிட்டர் அளவு டீசல், குடிநீர்,   உணவுப் பொருட்கள்,  உணவு சமைக்க அடுப்பு,  பாத்திரங்கள் அனைத்தும் இருக்கும்.

படகின் மையத்தில் சிறிய அளவிலான அறையும் இருக்கும்.  குளியலறை கழிவறை கூட இருப்பதுண்டு.  படகை இயக்க இருவரும்,  மற்றவர் மீன் பிடிக்கவும் செய்வர்.

சில சமயங்களில் ஐந்து நாட்கள் வரை விடாமல் பயணம் செய்து,  இரண்டு நாட்கள் மீன் பிடித்து மீண்டும் ஐந்து நாட்கள் பயணம் செய்து திரும்பி வருவர். வழியில் உள்ள சிறு தீவு போன்ற பாறைகளில் இறங்கி இளைப்பாறுவதும் உண்டு.

சிறிய அளவிலான படகுகளிலும், கட்டு மரங்களிலும் தினமும் கடலுக்குச் செல்பவர் சிறிது தொலைவிலே மீன் பிடித்து அன்றே திரும்பி வருவர். மாலை வேளைகளில் வலையைச் செப்பனிட்டு வைத்து, அதிகாலை வேளையில் கடலுக்குச் சென்று மதியத்திற்கு மேல் திரும்புவர்.

இரவில் சென்று அதிகாலையில் திரும்புவதும் உண்டு.  அன்றன்று பிடித்த மீன்களை அன்றே விற்று விடுபவர்கள் இவர்கள்.  அரிய வகை மீன்கள் பெரும்பாலும் கடலின் ஓரத்தில் மீன் பிடிக்கும் இவர்களுக்குக்  கிடைப்பதில்லை.

ஆழ்கடல் பகுதியில் மட்டுமே  அரிய, விலை மதிப்பு அதிகம் உள்ள  மீன்கள் கிடைக்கும்.  சில நேரங்களில் போதுமான மீன்கள் கிடைக்காமல் மேற்கு வங்கம் வரை கூட இவர்கள் செல்வதுண்டு.

ஸ்டீபன் மற்றும் அவனது உதவிக்கு ஜகா, இருவரும் அந்த மிகவும் பெரிய அளவுள்ள இயந்திர விசைப் படகில் வேண்டிய அனைத்துப் பொருட்களும் இருக்கிறதா, என்று சரி பார்த்துக் கொண்டிருந்தனர்.

கதிர்,  சுந்தர் மற்றும் அழகர் மூவரும் கடலுக்குள் ஐம்பதடி தூரம் வரை போடப் பட்டிருந்த, அந்த மரப்பாலத்தில் நின்று கடல் அலைகளைப் பார்த்தபடி இருந்தனர்.  அவர்கள் பயணம் செய்து வந்திருந்த சுமோ, தூரத்தில் சவுக்கு மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் நிறுத்தப்பட்டு இருந்தது.

மீனவர்கள் மீன்பிடித்துத் திரும்பும் நேரம் இல்லாததால், அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லை. தூரத்தில் வலையை உலர்த்திக் கொண்டு சிலர் நின்றிருந்தனர். அன்று கடலும் அவ்வளவாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்தது.

அமைதியாக இருக்கும் இந்தக் கடலின் மடியில்தான் எத்தனை பொக்கிஷங்கள்? அமைதியாக இருக்கும் வரை தாலாட்டும் தாயாக இருப்பவள்,  பொங்கி எழ நேரம் பார்த்து விட்டாலோ,  அவள் ஆடும் ருத்ர தாண்டவத்தை யாராலும் தடுக்க முடிவதில்லை.

மேலே கடல் அமைதியாகத் தென்பட்டாலும், உள்ளே அடங்காமல் ஆர்பரித்துக் கொண்டிருக்குமாம். அது போல அமைதியாக அலைகடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனின் உள்ளத்தில் பெரும்  சீற்றம்.

சற்று நேரத்திற்கு முன்புதான் சுந்தரின் அலைபேசிக்குத் தகவல் வந்திருந்தது.  கதிரின் காம்ப்ளக்ஸ்க்கு எதிர்புறம் உள்ள கடை ஒன்றில் இருந்து, கதிர்க்கு வேண்டிய நபர் ஒருவர்  ஃபோன் செய்திருந்தார்.

கதிரைத் தேடி சகாயத்தின் ஆட்கள் வந்ததும்.  அங்கேயே மறைவாக நின்று கொண்டு கதிர் வீட்டை நோட்டம் விட்டுக் கொண்டிருப்பதாகவும் தகவல் வந்திருந்தது.

“ண்ணா…  உன்னத் தேடி அதுக்குள்ள சகாயம் ஆளுங்க வந்திருக்கானுங்க. மறைவா நின்னு நோட்டம் விடறானுங்களாம். நாம காலைலயே கிளம்பி வந்தது நல்லதாப் போச்சு.  இல்லைன்னா நம்ம பின்னாடியே ஃபாலோ பண்ணி வந்திருப்பானுங்க.”

“அங்க இருந்து அவனுங்க மூஞ்சி முகரையெல்லாம் அடிச்சி ஒடைக்காம,  இங்க வந்து ஒளிஞ்சிகிட்டு இருக்கறது நல்லதாப் போச்சா உனக்கு.

வாய மூடிகிட்டு சும்மா இரு சுந்தரு. எதனா கோவத்துல அசிங்கமா பேசிடப் போறேன்.”

“மாப்ள,   அவன் மேல எதுக்குடா கோபப்படற? தலைவர் சொன்னதக் கேட்டல்ல. அவனுங்கள நின்னு நிதானமா வச்சு செய்யனும் மாப்ள. அமைதியா  இரு  மாப்ள.”

“அமைதியாதான் இருக்கேன் மாமா. தலைவர் வார்த்தைக்காக அமைதியாதான்  இங்க வந்திருக்கேன்.  ஆனா அவனுங்கள கூண்டோட களி திங்க வைக்கனும் மாமா. அந்த வெறி மட்டும் உள்ள இருக்கு.”

“கண்டிப்பா நடக்கும் மாப்ள. கவலைப் படாம நிதானமா இரு.”

“அக்காவையும் புள்ளைங்களையும் அஞ்சு நாளுக்கு பார்க்க முடியாது.  என்ன பண்ணுதுங்களோ. ஸ்கூல்க்கு போனாங்களான்னு தெரியல.”

“அதெல்லாம் தலைவர் பார்த்துக்குவார் மாப்ள. அவர் எல்லா ஏற்பாடுகளும் பக்காவா செஞ்சிடுவார். நீ அதெல்லாம் யோசிச்சுக் கவலைப் படாதே.”

அனைத்துப் பொருட்களும் தேவையான அளவு இருக்கிறதா?  என்று சோதித்து விட்டு, படகில் இருந்து இறங்கி வந்தனர் ஸ்டீபனும் ஜெகாவும்.

“அண்ணா போட் பக்காவா ரெடியாயிடுச்சி. எல்லாத்தையும் செக் பண்ணிட்டேன்.  கிளம்பலாமா?”

“சரி ஸ்டீபன்.  மதியானத்துக்கு சாப்பாடு பார்சல் வாங்கிட்டயா?”

“வாங்கியாச்சு அழகர் அண்ணா.  நீங்க உங்க லக்கேஜ் எல்லாம் எடுத்துட்டு வாங்க. போட்ட கிளப்பிடலாம்.”

அவர்களது உடைமைகளை சுமோ வண்டியில் இருந்து எடுத்து வர, அழகர் கதிர் சுந்தர் மூவரும் வண்டியை நோக்கிச் சென்றனர்.

வண்டியில் இருந்த அனைத்து பொருட்களையும்  எடுத்துக் கொண்டவர்கள்,  வண்டியை வெளியே தெரியாதவாறு உள்ளடங்கி நிறுத்திப் பூட்டிச் சாவியை எடுத்துக் கொண்டனர்.

அனைவரும்  வந்து விசைப் படகில் ஏறியதும்,  படகு மெதுவாக  முகத்துவாரத்தில் இருந்து  வடக்குத் திசையை நோக்கித் தனது பயணத்தைத் துவங்கியது.

‘அவ்வளவு தான்,  நமது கதை இன்றோடு முடிந்தது. இந்தப் பாவிகளிடம் சிக்கிச் சீரழியவா நான் பிறப்பெடுத்தேன். கடவுளே!’  என்று மனதிற்குள் அரற்றியவள்,  சுதாரித்து எழுவதற்குள் பின்னிருந்தவன் அவளது முழங்கைகளைப் பற்றித் தூக்கினான்.

அதற்குள் மற்றொருவனும் நெருங்கி விடச் சற்றுத் தொலைவில் மூன்றாமவன், இவள் பிடிபட்டு விட்டதால், மூச்சு வாங்கியவாறு நடந்து வந்தான்.

‘கடலில் விழுந்து மீன்களுக்கு இரையானாலும் ஆவேனே தவிர, இவன்களிடம் சிக்க மாட்டேன்’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள்.  தன் முழங்கைகளை விண்டு விடும் அளவுக்கு இறுக்கமாகப் பிடித்திருந்தவனின் கையைக் குனிந்து பலம் கொண்ட மட்டும் கடித்தாள்.

அவன் ஆ… வென்று அலறிப் பிடியைத் தளர்த்தவும், கீழே விழுந்த போதே இரண்டு கைகளிலும் அள்ளியிருந்த  மணலை இருவரின் முகத்திலும் வீசியடித்தாள்.

திடீரென்ற அவளது இத்தகையத் தாக்குதலை எதிர் பாராதவர்கள் சற்று நிலைகுலைந்தனர்.  நண்பர்கள் தடுமாறுவதையும், அவள் தப்பித்து ஓடுவதையும் பார்த்த மூன்றாமவன் ,  “ஏய்…  அவ தப்பிச்சு ஓடறா அவளப் புடிங்கடா… “ என்றபடி ஓடி வந்தான்.

சுற்றிலும் ஆளரவமற்றத் தனிமை.  கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சவுக்கு மரங்கள் மட்டுமே.  உடல் முழுவதும் வேர்த்துக் கொட்டியபடி அரைகுறை ஆடையுடன் ஓடியவளின் கால்கள் பலமில்லாமல் தொய்ந்து போனது.  நா வறண்டு போய், கண்கள் வேறு இருட்டிக் கொண்டு வந்தது.

கால்கள் விரைந்து ஓட முடியாமல் பின்னிக் கொண்டன. தனது வேகம் வெகுவாக குறைந்து விட்டதை உணர்ந்து கொண்டாள்.

தன்னைத் துரத்துபவர்களிடம் விரைவில் மாட்டிக் கொள்வோம் என்று முடிவு செய்தவள்,  அதற்குப் பின் யோசிக்கவே இல்லை.  விடுவிடுவென்று கடலின் புறம் திரும்பி ஓடி கடல் அலைகளுக்குள் இறங்கி விட்டாள்.

சாகும் எண்ணமெல்லாம் அவளுக்கு என்றும் இருந்ததில்லை.  எதுவாக இருப்பினும் சமாளித்து வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் உடையவள்தான்.  ஆனால் இன்றைய சூழ்நிலையில்,  இறந்து விடுவதே மேல் என்று தோன்றியது.

அவளைத் துரத்தி வந்தவர்கள் அவள் கடலில் இறங்கிய இடத்தை நெருங்குவதற்குள்,  அவள் கடலில் வெகு தூரம் வரை சென்று விட்டாள்.  கரையிலிருந்து பார்த்தவர்களுக்கு, மேலே உயர்த்திய அவளது கரங்களும் தலையும் மட்டுமே தென்பட்டது.

அடுத்து வந்தப் பெரிய அலை ஒன்று அவளைச் சுருட்டி உள்ளிழுத்ததையும் பார்த்தார்கள்.  முகத்துவாரத்தை ஒட்டிய பகுதி அது.  கடல் அலைகளும் சற்று சீற்றமாக இருக்கும்.  ஆழமும் அதிகமாக இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

அவர்கள் மீனவர்கள் இல்லை. பழுதானப் படகுகளை ரிப்பேர் செய்து,  இரும்புப் பட்டைகளை வெல்டிங்  செய்பவர்கள்.  வெளியூரில் இருந்து வந்து தங்கி வேலை செய்பவர்கள். வேலையில்லாத நேரங்களில் தண்ணியடித்துக் கொண்டும்,  சீட்டு விளையாடிக் கொண்டும் இருந்தவர்கள் அழகானப் பெண்ணைத் தனியே பார்த்ததும் துரத்திக் கொண்டு வந்திருந்தனர்.

மீனவர்களாகவோ அல்லது மீனவக் கிராமங்களைச் சேர்ந்தவர்களாகவோ இருந்திருந்தால் கண்டிப்பாக கடலில் குதித்து அவளை இழுத்து வந்திருப்பார்கள். ஆனால் இவர்கள் கடலினுள் இறங்க பயந்து கொண்டு கரையில் நின்று விட்டனர்.

கடலில் இறங்கியவளோ கிஞ்சித்தும் பயமின்றி,  உள்ளே சென்று கொண்டிருந்தாள்.  கழுத்தளவுத் தண்ணீரில் கைகளை மேலே உயர்த்தியவாறு,  நடந்தவளின் பாதங்கள் ஆழம் அதிகரிக்கவும் தடுமாறி மிதக்கத் துவங்கியது.  அப்பொழுது வந்த பெரிய அலை ஒன்று அவளைத் தலைகீழாகப் புரட்டி உள்ளே இழுத்துச் சென்றது.

மூச்சுக்குத் தடுமாறியவள், கைகளையும் கால்களையும் உதறித் தத்தளித்துக் கடல்பரப்பின் மேலே வந்தாள். இருப்பினும் நீச்சல் தெரியாததால் கடல் தண்ணீரைக் குடித்தவாறு, மீண்டும் கடலுக்குள் மூழ்கத் துவங்கினாள். நினைவுகள் மங்கி,  உடல் லேசாக, அப்படியே மயக்கத்திற்குச் சென்றாள்.

இயந்திர விசைப் படகு கிளம்பவும், அதன் மேல் தளத்திற்கு வந்த கதிர் தூரத்தில் வரிகளாகத் தெரிந்த மீனவ கிராமங்களையும்,  இயற்கையையும்  படகின் ஓரத்தில் நின்றபடி ரசித்துக் கொண்டு வந்தான்.  ஸ்டீபன் படகை இயக்கிக் கொண்டிருக்க,  ஜெகா  வாங்கி வந்த உணவுகளை உண்பதற்காக எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

கடலின் அலைகளையும் மேற்பரப்பையும் பார்வையிட்டுக் கொண்டிருந்தவனின் புலன்கள் கூர்மையாகின. கண்களைக் கூர்மையாக்கிப் பார்த்தவனுக்குத் தூரத்தில் கடல் அலைகளின் நடுவே உயர்த்திய இரு கரங்களும்,  கருப்பாகத் தலைமுடியும் மட்டும் தெரிந்தது.

முதலில் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் கடலில் குளித்து விளையாடுகிறார்கள் என்றே நினைத்தான். பிறகுதான் புரிந்தது,  யாரோ கடலில் மூச்சுக்குத் திணறி தத்தளிக்கிறார்கள் என்பது.

புரிந்த அடுத்த நொடி ஜெகாவிடம், “ஜெகா  அந்தப் பக்கம் பாரு கடல்ல யாரோ மூழ்குறாங்க”   என்றுக் கூறியபடிக் கடலுக்குள் பாய்ந்திருந்தான்.

ஆழ்கடலில் நீச்சல் அடிப்பது சற்று சிரமம் தான்.  உப்பு நீரில்  அழுத்தம் அதிகமாக இருக்கும்.  அலைகளை எதிர்த்து நீந்துவதும் சிரமம்.

அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் பயமின்றி நீந்துவார்கள்.  ஆனால் பழக்கமில்லாதவர்கள் சற்று தடுமாறவே செய்வர்.

கதிருக்கு நன்கு நீச்சல் தெரிந்த போதும் கடலில் நீந்துவது சற்று சிரமமாகத்தான் இருந்தது.  சமாளித்து நீந்தியவன் கண்களில் தோன்றித் தோன்றி உள்ளே சென்று கொண்டிருந்த உருவத்தின் அருகே சென்றதும்தான் புரிந்தது அது ஒரு பெண் என்று.

அவளின் வளைக் கரத்தையும்  நீரில் அலையும் கூந்தலையும் பார்த்த பிறகு தான் அவள் பெண் என்பது தெரிந்தது அவனுக்கு.  உள்ளே மூழ்கிக் கொண்டிருந்தவளின் கூந்தலை எட்டிப் பற்றியவன்,  அவளை இழுத்தபடி போட்டை நோக்கி நீந்தினான்.

கதிர் எதிர்பாராத விதமாக திடீரென்று தண்ணீரில் பாய்ந்ததும் அழகரும் சுந்தரும் பயந்து போனார்கள்.  அவர்களுள் சற்று சுதாரித்தவன் ஜெகாதான். கதிரின் “அந்தப் பக்கம் பாரு கடல்ல யாரோ மூழ்குறாங்க”   என்றக் குரலைத் தொடர்ந்து கதிரும்  கடலுக்குள் குதித்ததைப் பார்த்தவன், குனிந்து கீழே ஸ்டீபனிடம் போட்டை நிறுத்தச் சொன்னான்.

உயிர் காக்கும் கவசத்தை எடுத்து மாட்டியவன் மற்றொன்றைக் கையில் எடுத்துக் கொண்டு தானும் தண்ணீரில் குதித்தான். கதிர் அந்தப் பெண்ணை இழுத்துக் கொண்டு நீந்துவதைப் பார்த்தவன் அவனருகில் விரைவாக நீந்திச் சென்று  மிதவைக் கவசத்தைக் கொடுத்தான்.

அந்தக் கவசத்தை அவளது தலையில் மாட்டிய  பின் இருவரும் சேர்ந்து அவளை இழுத்துக் கொண்டு போட் நோக்கி நீந்தினர்.

ஸ்டீபனும் படகை விரைவாக இவர்கள் புறம் நகர்த்தி வந்து.  அவர்கள் ஏறுவதற்கு உதவியாக கயிற்றால் ஆன ஏணியைப் போட்டான்.

மயங்கிக்  கிடந்த அவளைத்  தூக்கித் தோள் மீது போட்டுக் கொண்டு, கதிர்  அந்த ஏணியில் ஏறினான்.  அவன் பின்னே ஜெகாவும் ஏறினான்.  மேலே இருந்தவர்கள் அவர்கள் ஏறி வர உதவினர்.

“என்ன மாப்ள? பயமில்லாம இப்படி பொசுக்குன்னு கடலுக்குள்ள குதிச்சிட்ட?  ஒரு நிமிசம் என் உயிரே பதறிப்போச்சு.”

“யாரோ கடல்ல விழுந்து தத்தளிக்கிற மாதிரி இருந்துச்சி மாமா… அதான்  உடனே குதிச்சிட்டேன்.”

மூச்சு வாங்க ஏறியபடி பேசியவன் படகுக்குள் வந்ததும் அவளை மெதுவாகக் கீழே கிடத்தினான். அவளது கன்னத்தைத் தட்டியவன், அவளிடம் அசைவில்லாமல் இருக்கவும்,  அவளது நாசியில் கை வைத்து சுவாசம் வருகிறதா என்று பார்த்தான்.

மெல்லிய சுவாசம் இருந்தது.  வயிறு சற்று உப்பி இருந்தது.  நாடித்துடிப்பையும் சரி பார்த்தவன்,  இந்தப் பெண் கடல் நீரை நிறையக் குடித்து விட்டது என்று எண்ணியபடி, அவளைத் திருப்பிக் குப்புறப் படுக்க வைத்தான்.

பின்புறம் முதுகுப் பகுதியில், உடை கிழிந்து உள்ளாடைகள் தெரியும்படி அவளிருந்த கோலம் சற்று சங்கடத்தைக் கொடுக்கவே,  தனது சட்டையைக் கழற்றியவன்  அவள் மீது போர்த்தினான்.

அவளது தலையை பக்கவாட்டில் திருப்பி மூச்சு தடைபடாதவாறு வைத்தவன்,  அவளது அடி முதுகில் இரு கைகளையும் வைத்து அழுத்தினான்.

அவள் குடித்த தண்ணீர் முழுவதும் வெளியே வரும் வரை அழுத்தியவன்,  அவள் சற்று லேசாக இருமவும்,  அழுத்தியதை நிப்பாட்டினான். அவளைத் திருப்பிப் படுக்க வைத்தவன்,  அவள் மீது போர்த்தியிருந்த சட்டையை சரியாகப் போட்டு விட்டான்.

அவள் கன்னத்தை லேசாகத் தட்டியவன்,  தண்ணீரில் விழுந்ததில் சில்லிட்டுப் போயிருந்த அவளது கைகளைப் பரபரவென்று சூடு பறக்கத் தேய்த்தான். அவளது கால்களை ஜெகாவும் சுந்தரும் தேய்த்தனர்.

அழகர் சிறிது தண்ணீரை முகத்தில் தெளிக்கவும் லேசாக முகத்தைச் சுருக்கியவளின் இமைக்குள் கருமணிகள் உருண்டன.

அவள் கழுத்தின் பின்புறம் கையைக் கொடுத்துத் தலையைத் தூக்கிப் பிடித்தவன் அவளது கன்னத்தைத் தட்டவும் இமைகளை லேசாகத் திறந்து சுற்றிலும் பார்த்தாள்.

தனது முகத்திற்கு வெகு அருகில் இருந்த கதிரின் முகத்தையும்,  சுற்றியிருந்த ஆண்களையும் பார்த்தவள்,  பலஹீனமாக அவனிடமிருந்து விடுபட முயன்றபடிக் கத்திக் கொண்டே மீண்டும் மயங்கினாள்.

அவள் அவர்களைப் பார்த்து பயந்து கத்தவும் கடுப்பானவன்,  அவளைப் பொத்தென்று  கீழே போட்டு விட்டு, மயங்கிக் கிடந்தவளை முறைத்தபடி எழுந்து நின்றான்.

 

 

காற்று வீசும்

 

 

error: Content is protected !!