ESK-7

ESK-7

என் சுவாசம் 7

நடுவானில்  சுட்டெரிக்கும் சூரியன் என்னவோ தன் திறமை முழுவதையும் காட்டிக் கொண்டிருந்தாலும், மார்கழிப் பெண் தன் பனிக் காற்றால் அனைவரையும் குளிர்வித்துக் கொண்டிருந்தாள்.

நீரின் மேற்பரப்பைக் கிழித்துக் கொண்டு ஒரு கத்தி போல அந்த இயந்திரப்  படகு விரைந்து கொண்டிருந்தது. படகின் மேற்பரப்பில் இருந்த நான்கு பேரும் சிவரஞ்சனியைச் சுற்றி நின்று, அவளையேப் பார்த்தபடி நின்றிருந்தனர்.

கடல் காற்று வீசியடித்ததில் அனைவரின் உடைகளும் காய்ந்து விட்டாலும்,  காற்றின் குளுமையில் சிலுசிலுவென்று இருந்தது.  ஆனால் கதிர் மட்டும்  உச்சபட்ச  எரிச்சலில் இருந்தான்.

அவனை அந்த அளவு கோபப்படுத்திக் கொண்டு இருந்தாள் பெண். தண்ணீரைத் தெளித்து கை கால்களைத் தேய்த்து விட்டு அவளை மயக்கத்திலிருந்து எழுப்புவதும்,  அவள் இவர்கள் அனைவரையும்  பார்த்துப் பயந்துக் கத்தியபடி மயங்குவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

“கொழுப்பப் பார்த்தீங்களா மாமா இவளுக்கு? கஷ்டப்பட்டு தண்ணியில குதிச்சு இவளக் காப்பாத்தித் தூக்கிட்டு வந்தா,   நம்மளப் பார்த்துப் பயந்து பயந்து அலர்றா…   அப்படியேத் தூக்கித் திரும்பக் கடல்ல வீசப் போறேன் இவள.”   குதித்துக் கொண்டிருந்தான் கதிர்.

அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தவனை நெருங்கிய அழகர், “மாப்ள… அந்தப் புள்ள மறுபடியும் மயங்கிருச்சி…  நீ முறைக்கறது அதுக்குத் தெரியாது.”  என்று

பவ்யமாகக் கூறியவரைத் திரும்பி முறைத்தவனைக் கண்டு கொள்ளாமல்,

“போங்க… போங்க…   எல்லாரும் .   அந்தப் பொண்ணு நார்மலாதான் இருக்கு.  தானா மயக்கம் தெளிஞ்சு எந்திரிக்கட்டும். யாரும் எழுப்ப வேணாம்.  அப்பதான் அதிர்ச்சி இல்லாம அது கண்ணு முழிக்கும்.”

“சுந்தர், ஜெகா ரெண்டு பேரும் சாப்பாடு எடுத்து வைங்க.  சாப்பிட்டு  அப்புறம் பேசலாம்” என்றார்.

படகின் உள்ளிருந்த அறையினுள் அவளைத் தூக்கிக் கொண்டு கிடத்தியவன், வெளியே வந்து அனைவருடனும் சேர்ந்து உணவினை உண்டான்.

“அந்தப் பொண்ணு கண்ணு முழிச்சாதான், அவ யாரு என்னன்னு கேட்க முடியும்.”

“கடல்ல எப்படி விழுந்திருக்கும்? யாரு பெத்த புள்ளயோ?  நல்லவேளை நம்ம அண்ணன் கண்ணுல பட்டுச்சு”

அழகரும் சுந்தரும் அவளைப் பார்த்தவாறு அமர்ந்து அங்கலாய்த்துக் கொண்டிருக்க, “பார்த்தா படிக்கற பொண்ணு மாதிரி இருக்கு.   ஏதும் பாடத்துல ஃபெயில் ஆகிட்டு தற்கொலை பண்ணிக்க வந்திருக்குமோ?”  என்றான் ஜெகா.

“இல்ல ஏதாச்சும் காதல் தோல்வியா இருக்குமோ?  இப்பல்லாம் சின்னப் புள்ளைங்க கூட லவ் பண்ணுதுங்களே?”

என்ற சுந்தரை வெட்டவா? குத்தவா? என்பது போல முறைத்த கதிர், “கொஞ்ச நேரம் சும்மா வாய மூடிகிட்டு இருக்கறீங்களா? கண்ணு முழிச்சதும் அவகிட்டயேக் கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க.”

என்று சிடுசிடுத்தவனுள் ஏகப்பட்டக் கடுப்பு.   ஏனோ காதல் தோல்வி என்றெல்லாம் அந்தக் கள்ளமில்லாப் பால் வடியும் முகத்தைப் பார்த்து நினைக்க முடியவில்லை அவனால்.

‘உயிர் இவளைப் போன்றவர்களுக்கு அவ்வளவு ஈசியாகப் போய் விட்டதா?  மிஞ்சிப் போனால் இருபது வயதிருக்குமா   இவளுக்கு?   சாகும் வயதா இது?  என்ன கஷ்டம் இருந்தாலும் எப்படி இந்தப் பெண் இப்படி ஒரு முடிவு எடுக்கலாம்?’   என்று மனதிற்குள் மறுகியவன்,  அவள் எழுந்ததும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கக் காத்திருந்தான்.

ஆனால் அவளது காயங்களும் கஷ்டங்களும் அவனுக்குத் தெரிய வரும் போது,  அவளது கண்ணீருக்கு காரணமானவர்களைப் பந்தாடப் போகிறவனும் அவனே.

 

உணவு உண்டதும் இரண்டு நாற்காலிகளை எடுத்து,  சிவரஞ்சனியின் அசைவுகளைக் கண்காணிக்கும் தூரத்தில் போட்டு,  ஒன்றில் அமர்ந்து ஒன்றில் கால் நீட்டியபடி சாய்ந்து அமர்ந்தான். சிலுசிலுவென்று வீசிய கடற்காற்றில் கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் உறக்கத்தில் ஆழ்ந்தான்.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரங்கள்,  உடலின் அலுப்போ? மனதின் சோர்வோ?  சிவரஞ்சனி கண் விழிக்கவில்லை. சிறிது மெல்லியதாக முனகுவதும் பின்பு மயக்கத்தில் ஆழ்வதுமாக இருந்தாள்.

பணி முடிந்து குழந்தையைக் காண வீட்டுக்குச் செல்லும்  அலுவலகப் பெண் போலப் பகலவன் மேற்கில் விடுவிடுவென இறங்கிக் கொண்டிருந்தான். வாசலிலே காத்திருந்த பிள்ளைத் தன் தாயைக் கண்டதும் தாவி வந்து மேலே ஏறுமே! அது போல  நிலாப் பெண்ணும் மேலேறிக் கொண்டிருந்தது.

சுற்றுப்புறமும் வேகமாக இருளத் துவங்கி இருந்தது. படகின் இயக்கம் நிறுத்தப்பட்டு இருந்தது. ஜெகாவும் ஸ்டீபனும் மீன் பிடிக்க  வலைகளைத் தயாராக எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.  சுந்தர்  அவர்களுக்கு உதவியாக இருந்தான்.

சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீலக்கடல் போர்வை விரித்திருந்தது. கூட்டிற்குத் திரும்பும் ஆரவாரத்தோடு கடல் பறவைகள் பறந்து கொண்டிருந்தன. ஏகாந்தமான அந்த சூழலில் இளையராஜாவும் எஸ் ஜானகியும் கரைந்து உருகிக் கொண்டிருந்தனர் அந்தக் கையடக்கமான எம்பி3  ப்ளேயரில்.

 

உயிரோடு…
உறவாடும்
ஒருகோடி…
ஆனந்தம்..!
இவன் மேகம் ஆக… யாரோ காரணம்..!

அடி ஆத்தாடி… இளமனசொன்று
இறக்கை கட்டிப்பறக்குது சரிதானா..!
அடி அம்மாடி..

மேலே போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ..!
உன்னைப் பாத்து அலைகள் எல்லாம்
மெட்டுக்கட்டிப் பாடாதோ..!

இப்படி நான் ஆனதில்லை
புத்திமாறிப் போனதில்லை..!
முன்னே பின்னே நேர்ந்ததில்லை
மூக்கு நுனி வேர்த்ததில்லை..!

இனிமையான தனது குரலால் உயிரை உருக்கும் ஜானகியும், ஆளுமையான தனது குரலால் மனதை மயக்கும் இளையராஜாவும் சேர்ந்து பாடிய பாடல்கள் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

இரவில் தூங்குவதற்கு முன்னும்,  நீண்ட நெடிய கார் பயணங்களின் போதும் இளையராஜா கட்டாயம் வேண்டும் அவனுக்கு.

கதிரைப் பொருத்தவரை அவனுக்கு ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரங்கள் போதுமானதாக இருப்பது இல்லை.  காலில் பம்பரத்தைச் சுற்றியபடி அலைந்து கொண்டே இருப்பான்.

ராகவனின் கட்சி வேலைகளோ,  அவனது ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமான வேலைகளோ,  அல்லது தற்போது அவன் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டின் மேற்பார்வைப் பணிகளோ ஏதோவொன்று அவனுக்குச் செய்வதற்கு இருந்து கொண்டே இருக்கும்.

அப்படி என்றாவது சிறிது ஓய்வு கிடைத்தாலும் ராகவனின் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு,  பிச்சாவரம் பூம்புகார் என்று எங்காவது சென்று அவர்களுடன் பொழுதைக் கழிப்பான்.

அவன் உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தன்னைச் சுற்றி ஆட்கள் இருக்க வேண்டும் அவனுக்கு. தனிமையை வெறுப்பவன் அவன். பதினைந்து வயது வரை சுற்றிலும் மனிதர்கள் இருந்தாலும்,  தான் மனம் விட்டுப் பேசக் கூட ஆள் இல்லாதத் தனிமையை அனுபவித்தவன்.

தாயும் தந்தையும் ஒரே வீட்டில் இருந்தாலும், ஆளுக்கொரு புறம் பிரிந்திருக்க அன்பு செலுத்த ஆள் இல்லாமல் வளர்ந்தவன் அவன்.  அவன் தந்தையாவது மௌனமாக அவனது தலையைக்கோதித் தன் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆனால் தனது விபரம் தெரிந்த நாளிலிருந்து தாயன்பை அனுபவித்து அறியாதவன் இவன். பொதுவாகப் பெண்களைத் தன்னை விட்டுத் தள்ளியே நிறுத்தி வைத்து விடுவான். அவன் முக இறுக்கமும் அவனது பார்வையும் அந்தக் காரியத்தைச் செவ்வனே செய்து விடும்.

அவன் சற்று இறுக்கம் தளர்ந்து கலகலப்பாகப் பேசும் பெண் வாசுகி மட்டுமே.  தனது தாய் ஏன் வாசுகி போல இல்லாது போனார் என்று எத்தனையோ நாள் எண்ணியிருக்கிறான்.

அதற்காகப் பெண்களை மரியாதைக் குறைவாக நடத்துபவனோ,  அல்லது வெறுப்பை உமிழ்பவனோ கிடையாது. அவனை விட்டுச் சற்றுத் தள்ளி நிறுத்திப் பழகுவான்  அவ்வளவுதான்.

எவ்வளவு கோபம் வருகிறதோ ,  அந்த அளவு நல்ல குணமும் உடையவன். தவறு செய்தவனை அடித்து வெளுப்பவனும் அவனே,  அதே நேரத்தில் தவறை உணர்ந்து திருந்துபவனை அரவணைப்பவனும் அவனே. ஆகையால் அவனைச் சுற்றி இருப்பவர்களுக்கு கதிர் கோபப்படுவதின் நியாயம் புரியும்.

இன்றைய ஓய்வு வலுக்கட்டாயமாக அவனுக்கு அளிக்கப்பட்டதில்,  உடலும் மனமும் தளர்ந்து இருந்தது. காலையில் இருந்த எரிச்சலும் கோபமும் சற்றுத் தணிந்து இருந்தது.

தண்ணீரில் விழுந்து மயங்கிய பெண் இன்னும் எழும்பாமல் இருக்கிறாளே…  என்று எண்ணியவன் மூன்று நான்கு முறை எழுந்து சென்று அவளைப் பார்த்து விட்டு வந்தான். சீரான சுவாசத்துடன் உறங்குபவளை  எழுப்பி உணவு ஏதேனும் தருவோமா என்று எண்ணியவன், தனது எண்ணத்தை உடனே மாற்றிக் கொண்டான்.

 

‘வேண்டாம்டா கதிரு…   இவ எழுந்திரிச்சா பேயப் பார்த்தது மாதிரி உன்னப் பார்த்துக் கத்துவா’ என்று தனக்குள்ளே முனகியவன் அவளைப் பார்த்தபடி சென்று அமர்ந்து கொண்டான்.

மனதிற்குள் பலவித சிந்தனைகள் ஒடிக் கொண்டிருந்தது கதிருக்கு. தன்னை இன்னேரம் காணாமல் தேடிக்  கொண்டிருப்பார்கள் என்ற நினைப்பு ஒருங்கே கோபத்தையும் சிரிப்பையும் வரவழைத்தது அவனுக்கு.

காட்டுமன்னார் கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரம் முழுக்க கதிரை வலை வீசித் தேடியவர்கள்,  அவன் மாயமாக மறைந்து விட்டதை அறிந்து கொதித்துப் போனார்கள். அவனை எங்கு தேடியும் கிடைக்காததால் தலையைப் பிய்த்துக் கொண்டனர்.

கலெக்டர் அலுவலகத்தில் அந்தக் கைதியை சுட்டுப் பிடிக்க உத்தரவு வாங்கிய பிறகு கதிரைக் காணாததால், அந்தக் கைதியை  ஒரு மறைவிடத்தில் மறைத்து வைத்தனர். பிறகு போலீஸ் படையைப் பயன்படுத்தி கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள் தங்கும் விடுதிகள் அனைத்திலும் சோதனை நடத்தப் பட்டது.

எங்கும் கதிரைக் காணாததால் என்ன செய்வது என்று புரியாமல் விழித்தவர்கள்,  அந்தக் கைதியை விரட்டிப் பிடித்தது போல செட்டப் செய்து அவனை சிறையில் அடைத்தனர்.

அடுத்து என்ன செய்வது என்று அவர்கள் யோசிக்கும் முன், அந்த இன்ஸ்பெக்டரையும் டிஎஸ்பியையும் ட்ரான்ஸ்பர்   செய்ய ராகவனால் நடவடிக்கை எடுக்க பட்டிருந்தது.

 

சிறிது நேரத்தில் அறையினுள் படுத்திருந்த   சிவரஞ்சனிக்கு சுயநினைவு திரும்பத் தொடங்கியது. மெல்ல இமைகளைச் சுருக்கி,  கண்களைப் பிரித்தாள். மசமசப்பான வெளிச்சம் நிறைந்திருந்தது.  கை கால்கள் இரண்டும் விண்டு விடுவது போல வலித்தது. மெதுவாக விழிகளைச் சுழற்றிப் படுத்திருந்த இடத்தைப் பார்வையிட்டாள்.

பரிட்சயமில்லாத இடமாக இருந்தது.  தட்டு முட்டு சாமான்கள் போட்டு வைக்கும் அறை போல இருந்ததைப் பார்த்தவள் குழம்பினாள். மெல்ல மெல்ல நடந்தவைகளை  நினைவுக்குக் கொண்டு வர முயற்சித்தாள்.

தன்னை அவர்கள் துரத்தியதும், தான்  தண்ணீருக்குள் மூழ்கியதும் நினைவுக்கு வந்தது. “ கடவுளே! என்ன தண்ணிக்குள்ள இருந்து தூக்கிட்டு வந்துட்டானுங்களா?”  என்று வாய்விட்டுப் பதறிப் புலம்பியவள், விருட்டென்று எழுந்து அமர்ந்து கொண்டாள்.

அவளுடைய பார்வை முதலில் தன்னுடலை ஆராய்ந்தது. தன் உடை இல்லாமல் தொளதொளவென்று ஏதோ  ஒரு சட்டையை அணிந்திருப்பதை பார்த்ததும் முதலில் அதிர்ந்து போனாலும், பிறகு தனது உடையின் மேல்தான் அணிவிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து ஆசுவாசமானாள்.

அவள் கண்களைத் திறக்கும் போதே பார்த்து விட்ட கதிர்,  அவளின் அசைவுகளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். எழுந்து அமர்ந்து கொண்டு,  ஒரு கையால் சட்டையைப் பிடித்து இழுத்தபடி தன்னைத் தானே பார்த்துக் கொணடிருப்பவளைப் பார்த்ததும், முதலில் கோபம்தான் வந்தது அவனுக்கு.

அவள் மனதினுள் என்ன நினைக்கிறாள் என்பது புரிந்தது அவனுக்கு. ‘இவளக் காப்பாத்துனதே தப்பு. அப்படியே தண்ணிக்குள்ள போகட்டும்னு விட்டுருக்கனும். நம்பளையே தப்பா நினைப்பாளா இவ’  என்று கோபமாக எண்ணினாலும் ,  இயல்பான பெண்களின் எச்சரிக்கை உணர்வு இது என்பதும் புரிந்தது அவனுக்கு.

சற்றுச் சிரமப்பட்டு எழுந்து நின்றவள்,  மெதுவாக வெளியே வந்தாள்.  படகின் வெளிப்புறம் மட்டுமே ஒற்றை விளக்கு இருந்தது. மெல்லிய வெளிச்சம் இருந்ததால் அதுவும் இன்னும் போடப்படவில்லை.

அந்த மெல்லிய வெளிச்சத்தில் அனைவரது முகத்தையும் பார்க்க முயன்றாள்.  தன்னைத் துரத்தியவர்கள் இவர்கள் இல்லை என்பது புலப்பட்டது. தண்ணீரில் விழுந்து மயங்கிய தன்னை இவர்கள்தான் காப்பாற்றி இருக்கக்கூடும் என்றும் புரிந்தது.

நன்றாக இருட்டத் துவங்கி விட்டதே,  வீட்டிற்கு போக வேண்டுமே என்றும் தோன்றியது.

அதற்குள் இவள் எழுந்து வந்ததைப் பார்த்த அனைவரும் தாங்கள் செய்து கொண்டிருந்த வேலைகளை விட்டுவிட்டு அவளருகே வந்தனர். அழகர்தான் முதலில்,

“அம்மாடி,  உடம்பு இப்பப் பரவாயில்லயாமா?”

“ம்ம்…”  என்ற முனகலுடன் தலையை ஆட்டியவளிடம்,

“ உன் பேரு என்னம்மா?

“சிவரஞ்சனி”

“எப்படிம்மா நீ  தண்ணிக்குள்ள விழுந்த?”

பதில் பேசாமல் மௌனமாக இருந்தாள். சீக்கிரம் வீட்டிற்கு போய்விட்டால் பரவாயில்லை என்று எண்ணியபடி,  “நான் வீட்டுக்குப் போகனும்”  என்றாள்.

“போகலாம்மா, நாங்களே பத்திரமாக் கொண்டு போய் விடறோம்.  பயப்படாதம்மா… நீ எந்த ஊரு?  எப்படி கடலுக்குள்ள விழுந்த?  முதல்ல இந்த டீயக் குடி.”  என்று அவள் கைகளில் ஏலக்காய் மணத்த டீயை ஊற்றிக் கொடுத்தவர் அவள் அமர ஒரு நாற்காலியைக் கொடுத்தார்.

அவரிடம் நன்றியைக் கூறி அமர்ந்து கொண்டவள், டீயை வாங்கிக் கொண்டாள்.  உலர்ந்து போயிருந்த உதடுகளை நாவால் ஈரப்படுத்தி விட்டு அந்த டீயைப் பருகினாள். அது அவளுக்குச் சற்றுத் தெம்பைக் கொடுத்தது. அவள் குடித்து முடித்ததும் அதே கேள்வி அவளிடம் மறுபடியும் கேட்கப்பட்டது.

“இந்த ஊருதான் அங்கிள்.”  என்றதும் அவர்களுக்குப் புரிந்தது, அவள் கடலூரைச் சொல்கிறாள் என்பது. தன்னுடைய வீட்டு முகவரியைக் கூறியவள், தன்னைக் காப்பாற்றியதற்கு நன்றியைக் கூறி விட்டு,  மீண்டும் ஒருமுறை வீட்டுக்குப் போக வேண்டும் என்றாள்.

“போகலாம்மா…  இன்னும் ஒரு மூனு நாள் கழிச்சு கொண்டு போய் விட்டுடறோம்.  நீ பயப்படாம இரும்மா.”

அவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியுடன் பார்த்தவள், “மூனு நாளா…?  நா…நானே போய்க்குவேன் அங்கிள்.  இங்க ஆட்டோ எங்கக் கிடைக்கும்?”  என்றபடி எழுந்தாள்.

அதுவரை அவளை மௌனமாகப் பார்வையிட்டுக் கொண்டிருந்த கதிர், “ம்ம்…  தண்ணிக்குள்ள உங்க தாத்தா ஆட்டோ ஓட்டுறாரு.  நீ அதுல ஏறிப் போ.  முதல்ல கண்ண நல்லா முழிச்சுப் பாரு. நடுக்கடல்ல படகுல நின்னுகிட்டு இருக்கற நீ”  என்றான் நக்கலாக.

அவன் அவ்வாறு கூறியதும் பயத்துடன் தன்னைச் சுற்றிப் பார்வையை சுழற்றியவளுக்கு அந்த மெல்லிய நிலா வெளிச்சத்தில் கடல் மின்னியது தெரிந்தது. படகிலும் விளக்கை ஜெகா போட,  கண்ணுக்கு எட்டிய தூரம் வரைத் தெரிந்த கடல் நீரைக் கண்டு செய்வதறியாது திகைத்து நின்றாள்.

“இ… இது எ… எ… எந்த இ… டம் அ…ங்கிள்? நான் இப்ப வீட்டுக்குப் போக முடியாதா?” அவள் பேசி முடிக்கும் முன்பே அழுகையில் உதடுகள் துடிக்கக், கண்களில் கண்ணீரும் வழிந்தது.

அவள் அழுததைப் பார்த்ததும் சுந்தர், “இங்க பாரு  பாப்பா…  அழுவாத. கடலுக்குள்ள மீன் பிடிக்க வந்திருக்கறோம் நாங்க. இன்னும் மூனு நாளைக்கு கடல்லதான் இருப்போம். கடல் அலையில மாட்டி தத்தளிச்சுகிட்டு இருந்த உன்ன எங்க அண்ணன்தான் காப்பாத்தினாரு. பயப்படாம இரு.  உங்க வீட்டுல ஃபோன் இருக்கா?   இருந்தா இந்தா இந்தப் போனுல போட்டுத் தகவல் சொல்லு.”  என்று அவனது கைபேசியை நீட்டினான்.

அவளது வீட்டில் தொலைபேசி இணைப்பு கிடையாது. மற்ற எவருடைய தொலைபேசி எண்ணும் அவளுக்குத் தெரியவில்லை. கலா கோதை இருவருமே நடுத்தர வர்க்கத்தினர்,  ஆகவே அவர்களிடமும் அலைபேசி இல்லை.

இதுவரை யாரிடமும் ஃபோனில் பேசி பழக்கமில்லாததால்,  யாருடைய எண்ணையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் அவளுக்கு ஏற்படவில்லை.

“எங்க வீட்ல ஃபோன் இல்லண்ணா. எனக்கு யார் நம்பரும் தெரியாது.  நான் வீட்டுக்குப் போகனும் ண்ணா. வீட்ல தேடுவாங்க.” என்றவளுக்கு  மீண்டும் பயத்தில் அழுகைதான் வந்தது.

அவள் அழுததைப் பார்த்த கதிர் சற்று அதட்டலுடன், “ஏய்…  அழுகைய முதல்ல நிப்பாட்டு. வீட்டு நியாபகத்துல ரொம்ப அழுக வருதோ…   கடல்ல போய் விழும் போது எங்க போயிருந்துச்சி வீட்டு நியாபகம்?  உன்னப் பெத்தவங்களப் பத்தி யோசிக்காம சாகப் போனவதான நீ.  எதுக்குப் போய் கடல்ல விழுந்த நீ?”

“மாப்ள…  ஏற்கனவே அது பயத்துல இருக்கு. நீ வேற ஏன் மாப்ள அதட்டுற?”  எகிறியவனை அடக்கியவர்,  பரிவுடன் அவளிடம்,

“அம்மாடி சிவரஞ்சனி, நீ எதுக்குமா அந்த இடத்துக்குப் போன?  அங்க ஆழம் அதிகமா இருக்குமே,  தெரியாம கடல்ல விழுந்துட்டியாம்மா?”

கண்ணீருடன் இல்லை என்பது போலத் தலையசைத்தவளிடம் சுந்தர், “வீட்ல திட்னாங்கன்னு கோவிச்சிகிட்டு கடல்ல குதிச்சியா பாப்பா?”

இல்லை என்பது போல மீண்டும் ஒரு தலையசைப்பு.

“பாடத்துல ஃபெயில் ஆகிட்டு பயத்துல குதிச்சியா?”  “இல்லை” என்றவளிடம்,

“ஏதும் காதல் கீதல்ன்னு யாரும் ஏமாத்திட்டாங்களா பாப்பா?”  பலமாகத் தலையை அசைத்து,

“அய்யோ…  அதெல்லாம் இல்லை அங்கிள்”  என்றவள் தன்னை மூன்று பேர் துரத்தி வந்ததையும்,  அவர்களுக்கு பயந்து கடலுக்குள் பாய்ந்ததையும் கூறினாள்.

இதைக் கேட்டதும் கோபமான கதிர்,

“அறிவிருக்குதா உனக்கு? அந்த நேரத்தில  நீ தனியா அங்க ஏன் போன?”  அவளை வெகுவாகக் கடிந்து கொண்டவன்,  ஜெகாவிடம்…

“டேய்  ஜெகா…  யாரு அவனுங்கன்னு விசாரிக்கச் சொல்லு. அவனுங்கள கல்லக் கட்டிக் கடல்ல இறக்கனும். உங்க ஏரியாப் பசங்களாடா அவனுங்க?”

“தெரியலண்ணா,  விசாரிக்கச் சொல்றேன்.  நம்ம குப்பத்துப் பயலுகளுக்கு இவ்வளவு தைரியம் கிடையாது ண்ணா.  வெளியூர் மெக்கானிக் பயலுக எவனாவதுதான் இருக்கும்.”

“பாப்பா,  தெரிஞ்ச ஆள் யாரையாவது அனுப்பி உங்க வீட்ல தகவல் சொல்லச் சொல்றேன்.  பயமில்லாம இரு பாப்பா.”

சரி என்பது போலத்  தலையசைத்தாலும்,   அவள் மனதினுள் பெரும் சஞ்சலங்கள். ‘ ஐந்து ஆண்களுக்கு மத்தியில் எப்படி இங்கே தங்குவது?  பார்க்க நல்லவர்களாகத்தான் இருக்கிறார்கள்’. ஆனால் யாரையும் நம்ப மறுத்தது மனம்.   மெதுவாக ஜெகாவின் அருகே சென்றவள்,

“ அண்ணா…  என்ன வழியில எங்கயாவது இறக்கி விட முடியாதா?” என்றாள்.

“டேய் ஜெகா… வர்ற வழியில ஒரு பாறைத்திட்டப் பார்த்தோமில்ல,  அங்க போய் இறக்கி விட்டுடு.  உன் பாப்பா அங்க உட்கார்ந்து மீன் பிடிக்கட்டும்.” என்று நக்கலடித்த கதிரைக் கடுப்புடன் பார்த்தவள்,   அமைதியாகப் போய் ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டாள். அழகரும்,

“சட்டுனு திரும்பிப் போக முடியாத  சூழ்நிலையில இருக்கோம்மா.  கண்டிப்பா உன்ன பத்திரமா உங்க வீட்டுல ஒப்படைச்சிடுவோம் பயப்படாதமா”

வேறு வழியின்றி தலையை அசைத்தவளுக்கு, சித்தியை நினைத்த மாத்திரத்தில் அடி வயிற்றில் பயப்பந்து உருண்டது. ‘இவள் வீட்டிற்கு வராததற்கு என்னென்ன கதைகள் கட்டுகிறாளோ?  இன்னேரம் ஊரைக்கூட்டி ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பாள்.

கலாவும் கோதையும் பாவம் சித்தியிடம் மாட்டிக் கொண்டு என்ன பாடு படுகிறார்களோ?’

அடியோ உதையோ வாங்கினாலும் பரவாயில்லை வீட்டுக்குப் போய்விட்டால் நல்லாயிருக்கும் என்று தோன்றியது.  இன்று ஒரு நாளில் என்னென்னவெல்லாம் நடந்துவிட்டது.

கலாவும் கோதையும் தன்னைக் காணாமல் தவித்திருப்பார்கள்.  அவர்களை நினைத்ததும் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.  முயன்று அழுகையை அடக்கினாள்.

‘அழுகக்கூட முடியவில்லை,   வளர்ந்து கெட்டவன் எதிர்லயே உட்கார்ந்து இருக்கிறான்.  அழுதாத் திட்டுவான்’ மனதிற்குள் கதிரை வறுத்துக் கொண்டிருந்தாள்.

‘இவன யாரு என்னைக் காப்பாத்த சொன்னது.  அப்படியே தண்ணிக்குள்ள விட்டிருந்தா நிம்மதியா போய் சேர்ந்திருப்பேன்.

மூனு நாள் கழிச்சு நான் வீட்டுக்குப் போனா சித்தி என்னைக் கொன்னேபுடும். வீட்டுக்குள்ளயும் சேர்க்காது.’  யோசித்து யோசித்து தலைவலி வந்ததுதான் மிச்சம் அவளுக்கு. அமைதியாகக் கடலை வெறித்தவாறு அமர்ந்திருந்தாள்.

கதிருக்கும் அவளைப் பார்த்து சற்று பாவமாக இருந்ததுதான்.  என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனது அலைபேசி ஒலிக்கவும் எடுத்துப் பார்த்தவன்,  ராகவனின் எண்களைக் கண்டதும் எடுத்துப்  பேசினான்.

“தலைவரே… “

“டேய்… கதிரு…  எந்தப் பிரச்சினையும் இல்லை இல்ல?  தெரியாத நம்பர்ல இருந்து ஃபோன் வந்தா எடுக்காத. நான் ஹாங்காங் புரோகிராம கேன்சல் பண்ணிட்டேன். நாளை மறுநாள் மதியம் சென்னை வந்திடுவேன்.”

“புதுசா வந்திருக்கிற அந்த டிஎஸ்பியையும் இன்ஸ்பெக்டரையும்  வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் பண்ண ஏற்பாடு பண்ணிட்டேன். நீ கவலைப்படாம இரு புரியுதா?”

“சரி தலைவரே.  எனக்கொன்னும் பிரச்சினை இல்லை”  என்றவன்  சிவரஞ்சனியைப் பற்றியும்,  அவளைக் காப்பாற்றியதையும் கூறியவன்,

“அந்தப் பொண்ணு பயந்து அழுகுது தலைவரே. அவங்க வீட்டுலயும் தேடுவாங்க பாவம். அதான் காலையில திரும்பி போகலாமான்னு யோசிக்கறேன்.”

“கடலூர் மாவட்டம் முழுக்க உன்ன சல்லடை போட்டு தேடறானுங்க.  அதெல்லாம் நீ இப்பப் போக வேணாம்.  நான் திரும்பி வர்ற அன்னைக்கு நீயும் வா.  உங்க கூடதான இருக்கு அந்தப் பொண்ணு,  பயப்படாம இருக்க சொல்லு.  நீங்க திரும்பி வந்ததும் நானும் வாசுவும் போய், அந்த பொண்ணு வீட்டுல நிலைமைய எடுத்துச் சொல்லி விட்டுட்டு வர்றோம்.  நீ அந்த பொண்ணுகிட்ட ஃபோன குடு நான் பேசறேன்.”

“சரி தலைவரே”  என்றவன் அவளிடம் சென்று அலைபேசியை நீட்டினான்.

“உன் கிட்ட பேசனுமாம்.  இந்தா… “

“யாரு?”

“சென்ட்ரல் மினிஸ்டர் ராகவன்.   எங்க அண்ணன் மாதிரி.  பேசு… “

அவளுக்கும் மத்திய அமைச்சர் ராகவனைப் பற்றித் தெரிந்து இருந்தது. அவருடைய நல்ல குணங்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறாள்.  ஆகவே தயக்கமின்றி வாங்கிப் பேசினாள்.

அவளிடம் பயப்படாமல் இருக்கச் சொன்ன ராகவன்,  அவர்கள் உடனடியாகத் திரும்ப முடியாத  கதிரின் சூழ்நிலையை எடுத்துச் சொல்லி, உன்னை பத்திரமாகப் பார்த்துக் கொள்வார்கள் என்றும் கூறினர்.

திரும்பி வந்ததும் நானும் என் மனைவியும் சேர்ந்து, உங்க வீட்டுல நிலைமைய எடுத்துச் சொல்லி உன்னை விட்டுட்டு வர்றோம் என்று உறுதியும் கொடுத்தார்.

அவரிடம் “சரி  சார்… சரி சார்… “ என்று அமைதியாகப் பேசியவள், அவனிடம் அலைபேசியை நீட்டியபடியே, “ போலீஸ் தேடுதா உங்கள?  இங்கத் தண்ணிக்குள்ள தலைமறைவா இருக்கீங்களா?”  என்க…

அவனுக்கு அடங்கியிருந்த கோபம் சுறுசுறுவென்று ஏறியது.

 

காற்று வீசும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!