ESK-EPILOGUE

ESK-EPILOGUE

 

என் சுவாச காற்றே எபிலாக்

ஆறு வருடங்களுக்குப் பிறக

ராகவன் வாசுகி வீடு…  ஹாலில் போடப் பட்டிருந்த சோபாவில், முகத்தைச் சற்று பாவமாக வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் கதிர்.  அவனருகே அவனது பாவனைக்குச் சற்றும் குறையாமல் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு, ஆனால் கண்களில் குறும்பு கூத்தாட அமர்ந்திருந்தாள், அவனது நான்கு வயது பெண்ணரசி தன்ஷிகா…

தந்தையை விட மோசமான சேட்டைக்காரி, கோபக்காரி.  அவளது வாசுகி அத்தைக்கும் ராகவன் மாமாவுக்கும் அழகர் தாத்தாவுக்கும் மட்டும் மிகுந்த பாசக்காரி.  தன் அன்னையிடம் மட்டும் வம்புக்காரி.

அவர்களுக்கு எதிரே ஏழுமாத மேடிட்ட வயிற்றுடன் முகத்தில்  கோபத்தைத் தாங்கி நின்றிருந்தாள் சிவரஞ்சனி.  அவளது கோபத்திற்குச் சற்றும் குறையாமல் அருகே நின்றிருந்தாள் வாசுகி.

இவர்களை சுவாரஸ்யமாகப் பார்த்தபடி  அனன்யாவும்,  ஆதவனும் அமர்ந்திருந்தனர்.  அன்னை எவ்வளவு கோபத்துடன் இருந்தாலும் தன்ஷி குட்டி சமாளித்து விடும் என்பதால் தங்களது மாமனைத்தான் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அருகே மற்றொரு சோபாவில் அமர்ந்து பேத்தியின் சேட்டைகளை கண் கொட்டாமல் ரசித்தவாறு அமர்ந்திருந்தார் அழகர். அருகே ராகவனும் சிரிப்பை அடக்கியவாறு அமர்ந்திருந்தார்.

“அக்கா…  ஸ்கூல்ல என்ன நடந்துதுன்னா… “

அவன் மெதுவாக ஆரம்பிக்கவும், “வாய மூடு…   எந்த இடத்துக்குப் போனாலும் அங்க போய் வம்பு வளர்க்குறதே உனக்கு வேலையாப் போச்சு.  உன்னால இதுவரைக்கும் தன்ஷி குட்டிக்கு மூனு டீச்சர் மாறிட்டாங்க ஸ்கூல்ல…”

‘என்னாலயாடா பாப்பு…?’  என்பது போல பரிதாபமாகப் பார்த்தான் மகளை.

“பேரன்ட்ஸ் டீச்சர் மீட் க்கு போகும் போதெல்லாம், டீச்சர் கிட்ட சண்டை போட்டு வந்தா பின்ன என்ன ஆகும்?  எல்லா டீச்சரும் பயந்து  ஓடிடுறாங்க.

உங்க மருமக மட்டும் ரொம்ப நல்லவளோ…?  அவ பண்ற சேட்டை நாளுக்கு நாள் கூடுது.   எல்கேஜிதான் படிக்கிறா. இப்பவே இப்படி.”  கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டு கூறிய தாயைப் பார்த்து,

“அம்மா…  ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க…  நீங்க டென்ஷன் ஆனா, உள்ள இருக்கற குட்டித் தம்பியும் டென்ஷன் ஆவான்னு டாக்டர் ஆன்டி சொன்னாங்க இல்ல.”

“ஆமாம்மா சிவா…  பிள்ளை எவ்வளவு அறிவா சொல்லுது பாரு.   நீ டென்ஷன் ஆகாத…  பாப்பு இனிமே குட் கேர்ளா இருப்பா.  யார் வம்புக்கும் போக மாட்டா…  இல்லடா பாப்பு.”  பேத்தியின் பேச்சில் மயங்கிய அழகர் சப்போர்ட்டுக்கு வர,

“தாத்தா…  நான் வீணா யார் வம்புக்கும் போக மாட்டேன்.   ஆனா என்கிட்ட வம்பு பண்றவங்களை சும்மா விடமாட்டேன்.”  பஞ்ச் டயலாக் பேசியது சின்னச் சிட்டு.

மழலை வாசம் வீசும் அதன் பேச்சில் அனைவருக்கும் சிரிப்பு வந்தாலும், சிரிப்பை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தனர்  அனைவரும்.  ஏனென்றால் அது செய்து வைத்திருக்கும் வேலைகள் அப்படி…

அனைவரும் சிரிப்பை அடக்குவதைக் கண்டு  கொண்டாலும், தாயின் முகம் மட்டும் கடுகடுவென்று இருப்பதைப் பார்த்து, தன் உதட்டைப் பிதுக்கி முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டது.

அதைப் பார்த்த கதிரின்  மைண்ட்  வாய்ஸ், ‘அப்படியே அம்மா மாதிரி…  செய்யறதெல்லாம் கொட்டம், ஆனா அடிச்சா பாவம்ங்கற மாதிரி  முகத்தை வச்சிக்கறதப் பாரு’

“என்கிட்ட நடிக்காதடி…  ஆல்வின ஏன் பிடிச்சு கீழ தள்ளி விட்ட?” சிவரஞ்சனி கேட்க,

தனது தந்தையை ஓரப் பார்வை பார்த்துக் கொண்டே, “நாங்க கேர்ள்ஸ் பால்  வச்சி  விளையாடும் போது,  அவன் வேணும்னே பால்ல பிடுங்குனான். ரம்யா தர மாட்டேன் சொன்னாளா, அவளைத் தள்ளி விட்டுட்டான்.  அதான் நான் அவனைத் தள்ளி விட்டேன்.”

“விஸ்வாவ  ஏன்டா  செல்லம்  அடிச்சீங்க?”

“அவன் நான் செய்யாத தப்புக் கெல்லாம் என்னை மிஸ்கிட்ட மாட்டி விட்டான்ப்பா. மிஸ் என்னைப் பனிஷ் பண்ணாங்க.”

பேசப் பேச மூக்கு விடைத்துக் கொண்டு, உதடு பிதுங்கியது…

“எப்பவும் வால்தனம் பண்ணிகிட்டு இருந்தா, அப்படிதான் விசாரிக்காம பனிஷ் பண்ணுவாங்க.”

“…”

“இன்னைக்கு உங்கப் பொண்ணு பண்ணது  ரொம்ப மோசம்.  தருண் மண்டையில லஞ்ச் பாக்ஸ வச்சி அடிச்சிருக்கா.  அவன் நெத்தியில பெருசா வீங்கிப் போயிருந்துச்சி…  அவங்க அம்மா என்னை விரோதி மாதிரி பார்க்குறாங்க.  எதுக்குடி அவனை அடிச்ச?”

உதட்டைப் பிதுக்கி கண்களில் கண்ணீர் கரைகட்ட யாரும் தனக்குத் துணைக்கு வரவில்லையே என்று பாவமாக சுற்றிப் பார்த்தவாறு,

“அவன் என் ஃபிரெண்டு சாக்ஷிய லஞ்ச் பீரியட்ல வேணும்னே அடிச்சான்ம்மா.   ஷீ இஸ் அ ஸ்பெஷல் சைல்ட்.”

“அடி வாங்கப் போற…  ஊர் வம்ப வாங்கறதே வேலையாப் போச்சு. எதுன்னாலும்  கை நீட்டக் கூடாது. மிஸ்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணனும்னு சொல்லியிருக்கேன் இல்ல…”  என்றபடி லேசாக   அடிக்கக் கையோங்க.

“சிவா…”

“அம்மாடி…”

“ஏய்… பிள்ளையை அடிக்காதடி.”

“அத்தை…”

கோரஸாகக் கேட்ட குரலில் சுற்றிப் பார்த்தவள்,

“சுத்தம்…  அடிக்கக் கையோங்கறதுக்குள்ள இத்தனை பேர் சப்போர்ட்டுக்கு வந்தா, அவ எப்படி அடங்குவா…?   கிளாஸ்ல ஒரு பையனையும் விட்டு வைக்கறது இல்ல. எல்லார் கூடவும் சண்டை…  கேட்டா எனக்கு பசங்களையே பிடிக்கலைன்னு சொல்ல வேண்டியது.”

“அப்பனுக்குத் தப்பாம பிறந்திருக்குது…  பிள்ளையைக் குத்தம் சொல்லி என்ன செய்ய?” மெதுவாக தனக்குள் முனகிக் கொண்டார் அழகர்.

பேசும் போதே லேசாக மூச்சிறைத்தவளை,  எழுந்து வந்து தோளோடு அணைத்தபடிச் சென்று அமர வைத்தவன்,

“எதுக்குடி இவ்வளவு டென்ஷன் ஆகற?  பாரு எவ்வளவு வேர்த்துப் போச்சு…?  பாப்புக் குட்டி, அம்மாவுக்கு தண்ணி எடுத்து வந்து குடுங்கடா…”

குழந்தை முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டவாறு எழுந்து சென்றதும், அதனைச் சமாதானப் படுத்த வாசுகி  செல்ல, அவள் பின்னே அனுவும் ஆதவனும் சென்றனர்.

“ஏய்…  அவ குழந்தைடி.  கொஞ்சம் பெருசானதும் எடுத்துச் சொன்னா புரிஞ்சுக்க போறா. இதுக்கு நீ ஏன் இவ்வளவு கோபப் படற?”

அவனை முறைத்தவள்,  “ஓ…  இனிமே ஸ்கூல்ல பஞ்சாயத்துக்குக் கூப்பிட்டாங்கன்னா, நீங்க மட்டும் போயிட்டு வாங்க.  என்னைக் கூப்பிடாதீங்க.”

உரத்துச் சிரித்த ராகவன், “அவன்தான…  நல்லாப் போய் பேசுவான்.  எகிறி எகிறி எல்லாரையும் திட்டிட்டு வருவான்.  அப்புறம்  அந்தப் பஞ்சாயத்துக்கு மறுபடியும் உன்னைதான் கூப்பிடுவாங்க.”

“காலேஜ்ல அத்தனை பிள்ளைங்களைச் சமாளிக்கறேன் அண்ணா. இவங்க ரெண்டு பேரை என்னால சமாளிக்க முடியல…  இன்னும் வரப் போறது எப்படி இருக்குமோ?”  அலுத்துக் கொண்டவளைப் பார்த்து கண்களைச் சிமிட்டியவன்,

“இதுல என்னடி சந்தேகம்…?  என்னை மாதிரியேதான் இருக்கும்.”

சிரித்தவனை முறைத்தவள், உதட்டைச் சுழித்துக் கொள்ள,  அவளை ரசனையோடு பார்த்திருந்தான்.

தனது மனைவி கல்லூரிப் பேராசிரியை என்பதில் ஏக பெருமை அவனுக்கு.  கடலூரில் படித்துக் கொண்டிருந்தவளை, அருகில் இருந்த கல்லூரிக்கு மாற்றியவன்,  முதுகலைப் படிப்பையும் அஞ்சல் வழிக் கல்வி மூலமாக முடிக்க வைத்திருந்தான்.

தன்ஷிகா பிறந்து இரண்டு வயதானதும் வாசுகியிடம் விட்டுவிட்டு,   அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.ஃபில்  முடித்தவள், கையோடு கல்லூரி பேராசிரியர்களுக்கான போட்டித் தேர்வெழுதி வெற்றி பெற்று, ஒரு வருடமாக  அரசுக் கல்லூரியில் பேராசிரியையாகப்   பணி புரிகிறாள்.

ராகவன் கதிரிடம் இந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலுக்கு போட்டியிடுகிறாயா…  நான் சீட் வாங்கித் தருகிறேன் என்று கூற,  பெரிய கும்பிடு போட்டு மறுத்திருந்தான்.

“எனக்கெல்லாம் அரசியல் சரிப்பட்டு வராது தலைவரே. அரசியல்ல எதுவும்  யாரும் சரியில்லன்னா, என் கைதான் முதல்ல பேசும்.

அது பிரச்சனையை அதிகமாக்குமே தவிர, தீர்வு கிடைக்காது.  அதுக்கெல்லாம் பொறுமையாப் பேசற, உங்களை மாதிரி இருக்கறவங்கதான் சரி.

உங்களுக்குப் பக்கபலமா என்னைக்கும் கூட இருப்பேன்.  ஆனா, அரசியல்ல என்னைக் கோர்த்து விடாதீங்க  தலைவரே.”  என்று மறுத்துக் கூறியிருந்தான்.

புறநகர் பகுதிகளில் முன்பு குறைந்த விலையில் வாங்கிப் போட்டிருந்த இடங்கள் எல்லாம் நன்கு வளர்ச்சியடைந்துவிட,  சிறிய அளவிலான குடியிருப்பு வளாகங்கள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறான்.

ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வாடகை, வீட்டு வாடகை ஆகியவற்றின் மாத வருமானமே லகரத்தைத் தொட்டது. அவனுடைய தொழிலும் எந்தத் தொய்வும் இல்லாமல் நல்லபடியாக நடக்க,   அவனது வெகு நாளைய கனவான பண்ணணையும் இரண்டு வருடங்களுக்கு முன்பு வாங்கியிருந்தான்.

பொள்ளாச்சி  அருகே தென்னை மரங்கள் சூழ்ந்த தோப்பை வாங்கி நடுவில் சிறிய அளவில் வீடு ஒன்றைக் கட்டியுள்ளான்.  கூடவே பழமரங்களையும் நடவு செய்திருக்கிறான். அந்தத் தோப்பை கவனித்துக் கொள்ள அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களைப்  பணியமர்த்தியிருக்கிறான்.

மேற்பார்வை பார்க்க சுந்தரை அங்கே   அனுப்பி தங்க வைத்திருக்கிறான். சுந்தருக்கும் அமுதா என்ற  பெண்ணுடன் திருமணம் முடிந்து ஆறுமாதப் பெண் குழந்தை உள்ளது.

பிள்ளைகளுக்கு தொடர்ந்து விடுமுறை வரும் போது, அங்கு சென்று தங்கி வருவது அவர்களது வழக்கம். இப்பொழுதும் அரையாண்டுத் தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், நான்கு நாட்களுக்கு அங்கு  சென்று  தங்கி வரலாம் என்று முடிவெடுத்து, வாசுகியையும் பிள்ளைகளையும் அழைக்க வந்திருந்தனர்.

வழியில் தன்ஷிகாவின் பள்ளியிலும் வரச் சொல்லியிருக்க,   அங்கே சென்று விட்டு வந்துதான் இந்தக் கூத்து.

தன் பிஞ்சுக் கரங்களில் தண்ணீரை எடுத்து வந்து அன்னையிடம் நீட்டிய மகளைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டான்.

“அம்மா…  சாரி…  இனி யாரையும் அடிக்க மாட்டேன்.”

தண்ணீரை நீட்டியபடி, தனது அத்தை சொல்லிக் கொடுத்ததை ஒப்பித்த மகளைப் பார்த்ததும் மனம் கனிந்தாலும்,

“இதே மாதிரி   இன்னும் எத்தனை முறை சாரி கேட்பீங்க?”

“பிள்ளை குடுக்குற தண்ணியை வாங்குடி.  இனிமே பட்டுக்குட்டி யாரையும் அடிக்காது.   இல்லடா…?”

மண்டையை வேகமாக ஆட்டி, தந்தை கூறியதை ஆமோதித்த மகளைப் பார்த்து, புன்னகை மலர  தண்ணீரை வாங்கி அருந்தினாள்.

மறுநாள் காலையில் அனைவரும் பொள்ளாச்சி கிளம்பலாம்  என்று  பேசி  முடிவு  செய்யப்பட்டது. மகள் அன்றிரவு அத்தையுடன் இருந்து கொள்கிறேன் என்று கூறிவிட, கதிரும் சிவரஞ்சனியும்  அழகருடன் இரவு உணவை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்திருந்தனர்.

பாலை சூடாக்கி அழகருக்குத் தந்துவிட்டு, தங்களுக்கும் எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்தாள் சிவரஞ்சனி. மறுநாள் ஊருக்குச் செல்லத் தேவையான உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் கதிர்.

அவளுடைய ஒவ்வொரு உடைக்கும் மேட்சாக தனக்கும் மகளுக்கும் பார்த்துப் பார்த்து எடுத்து வைத்து பெட்டியை மூடியவனைப் பார்த்தவள், “ட்ரெஸ் எடுத்து வச்சிட்டீங்களா?”

“ம்ம்ம்…  முடிச்சிட்டேன்.”

ஏழு மாதம் என்பதால் உடல் எடை அதிகரித்து பாதங்கள் வலிக்க ஆரம்பித்து இருந்தது அவளுக்கு. அவளது முகச் சோர்வை வைத்தே அவளது வலியை உணர்ந்து கொண்டவன்,

அவளது பாதங்களுக்கு  இதமாக இருக்கும்படி சூடான வெந்நீரை எடுத்து வந்து அவளது பாதங்களை மூழ்கியிருக்கச் செய்தான். வாகாக அமர்ந்து பாலை அருந்தியபடி,

“பாப்புவ நினைச்சா ரொம்ப  பயமா இருக்குங்க…  அவ செயல்ல நியாயம் இருந்தாலும் தேவையில்லாத பிரச்சனையை இழுத்து வராளே…  இப்பவே அவளுக்கு ஸ்கூல்ல  ரௌடி பேபின்னு பேரு.”

“நீயே சொல்லிட்ட  நியாயம் இருக்குன்னு. தப்பு செய்யறவங்களைத் தைரியமா தட்டிக் கேட்குற மாதிரிதான் நம்ம பொண்ணை வளர்க்கனும்.  ஆனா, யாரையும் அடிக்கக் கூடாதுன்னு சொல்லுவோம்.  சின்னக் குழந்தைதானே…  கொஞ்சம் பெருசானதும் எடுத்துச் சொன்னா புரிஞ்சுப்பா.”

கால் வலி சற்று குறைந்ததும், கட்டிலில் ஏறிப் படுத்துக் கொண்டாள். விளக்கை அணைத்து விட்டு, அவளது பின்புறமாக அணைத்தபடி படுத்தவனின் ஸ்பரிசம் பட்டதும், வயிற்றில் மெல்லிய அசைவை உணர்ந்தான். மெதுவாக அவளது வயிற்றில் வருடிக் கொடுக்க, தாயும் சேயும் நிம்மதியான உறக்கத்திற்குச் சென்றனர்.

மறுநாள் காலையில் கதிர், சிவரஞ்சனி, பிள்ளைகள் மூவருடன் ஒரு வண்டியிலும் ராகவன் வாசுகி அழகர் மூவரும் ஒரு வண்டியிலும் பொள்ளாச்சியை நோக்கி பயணத்தைத் துவங்கினர்.

முதலில் கோவிலுக்குச் சென்று வழிபட்டதும் பயணம் தொடர்ந்தது. பிள்ளைகள் உற்சாகத்துடன் பாடல்கள் பாடியவாறு வர, இனிமையான பயணமாக அமைந்தது.

வழியில் ஒரு ஹோட்டலில் நிறுத்தி மதிய உணவை உண்டதும், சிறிது நேரத்தில் பிள்ளைகள் களைப்புற்று உறங்கிவிட,   அவனுக்கு மிகவும் பிடித்தமான இளையராஜா பாடல்களை ஒலிக்க விட்டான்.

நிழல் போல நானும்
நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம், நெடுங்கால பந்தம்;
கடல் வானம் கூட, நிறம் மாறக் கூடும்;
மனம் கொண்ட பாசம், தடம் மாறிடாது;
நான் வாழும் வாழ்வே, உனக்காகத்தானே;
நாள் தோறும் நெஞ்சில், நான் ஏந்தும் தேனே;
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே,
வாய் பேசிடும் புல்லாங்குழல்…
நீதானொரு பூவின் மடல்.

 

பாடல் வரிகளிலில் லயித்தவனின் கண்கள் மனையாளின் புறம் சென்றது.  சீட் பெல்ட் அணிந்தவாறு சாய்ந்து நிற்சலனமாக உறங்கிக் கொண்டிருந்தாள். ஆறு ஆண்டுகால மணவாழ்க்கையை அசை போட்டது மனது.

மனம் கனிந்து காதலாய்ப் பெருகியது. வாழ்வில் தான் பூரணத்துவம் பெற்று விட்டோம் என்பதை, ஆத்மார்த்தமாக உணர்ந்து கொண்டான். இவள் என் வாழ்வில் வந்த பிறகு, ஒவ்வொரு நொடியையும் இறைவன் இனிப்பில் தோய்த்து எனக்களித்திருக்கிறான்.

வெறுமையான எனது வாழ்க்கையை வசந்த காலமாக மாற்றியவள். என் உலகத்தை வண்ணமிகு ஓவியமாக தீட்டியவள்.  வாழும் காலம் முழுவதும் இவள் அன்பு ஒன்றே என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.

என் சுவாச காற்றே இவள்தான். இவளின்றி  என்றுமே நானில்லை. இந்த நொடி, இந்த இனிமை, இப்படியே நீளும் வரம் மட்டும் போதும்,   இறையிடம் யாசித்தது மனது.   நிறைந்த மனதுடன் வண்டியைச் சீராகச் செலுத்தினான்.

ஊருக்குள் வண்டி நுழைந்ததும் மெதுவாக அனைவரையும் எழுப்பி விட்டான்.  வழி நெடுக இருந்த பசுமையான வயல்களும்,  பாதையின் கூடவே ஓடி வந்த ஓடையும் மனதை மயக்கியது.  சுத்தமான காற்று அள்ளிக் கொண்டு போனது.

வீடு வந்ததும் இறங்கி சற்று நேரம் இளைப்பாறினர். மாலையில், தென்னை மரங்களுக்கு இடையே போடப் பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்து, சுகமாக காற்று வாங்கிக் கொண்டிருந்தனர் ராகவனும் வாசுகியும்.

அழகரும் சுந்தரும் சற்று தள்ளி அமர்ந்து, தோப்பின் வரவு செலவு  கணக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இரு தென்னை மரங்களுக்கிடையே நெட் கட்டி, பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்  அனுவும் ஆதவனும்  கதிரும்.

நானும் விளையாடுவேன் என்று அடம்பிடித்த மகளைத் தூக்கி வைத்துக் கொண்டு அனுவும் ஆதவனும் அடித்த பந்துகளை லாவகமாக அடித்துக் கொண்டிருந்தான்.

சிவரஞ்சனியும் சுந்தரின் மனைவி அமுதாவும், அனைவருக்கும் மாலை சிற்றுண்டியுடன் தேநீரை எடுத்து வந்தனர். பிள்ளைகளைச்  சாப்பிட வரச்சொல்லவும், வழக்கம் போல தன்ஷியையும் உடனழைத்துக் கொண்டு அத்தையிடம் வந்து, ஊட்டி விடுமாறு நின்றனர்.

பிள்ளைகளுக்கு ஊட்டிக் கொண்டிருந்தவளின் அருகே வந்து அமர்ந்து,  தானும் வாயைத் திறந்தவனைச் செல்லமாக முறைத்துக் கொண்டே அவனுக்கும் ஊட்டினாள்.

இதைக் கண்ட ராகவன்,

“உன் தம்பி பண்ற அட்டகாசம் வர வர தாங்க முடியல.”

“உங்களுக்கு ஏன் பொறாமையா இருக்கு?  அவ மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கான் என் தம்பி?   எப்படி சூப்பரா…! அவ சேலை கலர்லயே டீசர்ட் போட்டிருக்கான் பாருங்க!”

“எது…? இந்த பஞ்சு மிட்டாய் விக்குறவன் மாதிரியே, ஒரு சட்டை போட்டிருக்கானே அதைச் சொல்லுறியா.  பச்சை கலர், மஞ்ச கலர் சட்டையெல்லாம்  ஊருக்குள்ள வந்து போடச் சொல்லேன் உன் தம்பிய.  அடுத்த ராமராஜன் இவன்தான்னு கன்ஃபார்ம் பண்ணிடுவாங்க.”

“ஏன்…?  நீங்க இங்க ஓய்வாதான இருக்கீங்க? என் சேலை கலர்ல சட்டை போடறது?”

“ஏன்டி… இந்த கலர்ல சட்டைய போட்டு நான் சுத்தவா? ஊர்ல  உள்ள  நாயெல்லாம்  என்னைத் துரத்தும்டி.”

இவர்கள் பேசிக்கொண்டிருக்க அருகே வந்தவன், “என்ன ஆச்சு  தலைவரே? எங்க அக்கா கோபமா இருக்கு?”

“ஊருக்குள்ள நீ ஒரு கிறுக்கன் பத்தாதாம். நானும் உன்னை மாதிரி கலர்கலரா சட்டை போட்டு சுத்தனுமாம்.”

“இதெல்லாம் பொண்டாட்டி மேல பாசமா இருக்கறவங்களுக்குத் தெரியும்  தலைவரே. உங்களுக்கு எப்படி தெரியும்?”

“டேய்… அடங்குடா…  கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆச்சு. உன் பொண்டாட்டிக்கு ஒரு செல்லப் பேரு வச்சிக் கூப்பிடுறியாடா…  சிவா சிவான்னு ஆம்பளப்பிள்ளைய கூப்புடற மாதிரி கூப்பிடுற.   எந்த மடையனாவது இப்படிக் கூப்பிடுவானா?”

“ஹி…  ஹி… ஹி…  நீங்க எப்படி கூப்பிடுறீங்க தலைவரே? அக்கா இவரைக் கொஞ்சம் கவனி.”

என்றபடி எழுந்துச் செல்ல,

“டேய்…  டேய்…  நல்லவனே  போதும்டா.”

“வாசும்மா…  வாசு… வாசு செல்லம்…  இதுக்கு மேல உன் பேரைச் சுருக்க முடியாதுடி…” என்றவாறு முறைத்துக் கொண்டு சென்ற வாசுகியின் பின்னே சென்றார் ராகவன்.

அன்று பௌர்ணமி.  காதலில் திளைத்த குயில்கள் இரண்டு எங்கிருந்தோ கானமிசைக்க, மெல்லிய காற்றும் சாமரம் வீச,   அசையும் தென்னங்கீற்றுகளுக்கிடையே   முகம் காட்டிய முழுநிலாவை ரசித்தபடி மாடி அறையின் பால்கனியில் நின்றிருந்தாள் சிவரஞ்சனி.

அறையினுள் மகளைத் தட்டித் தூங்க வைத்துக் கொண்டிருந்தான் கதிர். மனம்  அவனைப் பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருந்தது.   தனக்காக ஒவ்வென்றையும் பார்த்துப் பார்த்து செய்யும் கணவன் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்  என்று எண்ணிக் கொண்டாள்.

கல்யாணியை நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறான்.  தான் வேலைக்குப் போனதிலிருந்து, சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை சித்திக்குத் தருவதற்கு, இதுவரை மறுத்துக் கூறியதில்லை.

கல்யாணியைப்  பார்க்க  மாதம் ஒருமுறை செல்வாள்.  காலையில் கொண்டுவிட்டு மாலையில் அழைத்து வந்துவிடுவான்.   எங்கேயும் தனித்துத் தங்க அனுமதித்ததில்லை.

ஜமுனாவையும் அழகருடன் சென்று பார்த்துவிட்டு வருவாள். அவன் வருவதில்லையே தவிர, அதற்கும் தடை சொன்னதில்லை.

வாழும் ஒவ்வொரு நொடியையும் என்னை அரசியாக உணர வைக்கிறான்.   இதைவிட வேறு என்ன வேண்டும் பெண்ணுக்கு.  சிந்தித்தபடி நின்றிருந்தவளைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டு, கழுத்தில் முகம் புதைத்தவன் மீது, வாகாகச் சாய்ந்து கொண்டாள்.

“பாப்பு தூங்கிட்டாளா…?”

“ம்ம்ம்… தூங்கிட்டா. நீயும் ஜூனியரும் என்ன பண்றீங்க? தூக்கம் வரலையா?”

“ம்ம்ம்… வரலை.  இன்னைக்குப் பௌர்ணமி.   இந்த இடமே எவ்வளவு அழகா இருக்கு.”

“இது என்னோட கனவு சிவா. பாரதியார் பாட்டு காணி நிலம் வேண்டும் படிச்சிருக்கியா? அதுல வர்ற மாதிரி.  சின்னதா ஒரு தென்னந்தோப்பு.  அங்க அழகா குட்டியா ஒரு வீடு.

இந்த மாதிரி ஒரு நிலா முற்றம்.   நம்மை மயக்குற தென்றல் காற்று. இனிமையான குயிலோசை. என்னோட கைவளைவில் அழகா நீ. இதைவிட ஒரு மனிதனுக்கு வேறென்ன வேணும் சொல்லு.”

என்றபடி அவளை மெதுவாக கையில் அள்ளிக் கொண்டவன்,

“பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் – எங்கள்
கூட்டுக் களியினிலே – கவிதைகள்
கொண்டுதர வேணும்”

“ எவ்வளவு ரசிச்சு எழுதியிருக்கார்  மனுஷன்? நாமும் இன்னைக்கு விடிய விடிய ரசிக்கலாம்.”  என்று  குறும்புடன் கண்களைச் சிமிட்டிக் கூறியபடி அவளை அறைக்குள் தூக்கிச் சென்றான்.

அவர்களின் சிருங்காரம் கண்டு தென்றல் சாமரம் வீசிச் செல்ல, நிலவும் வெட்கத்துடன் மேகத்தில் மறைய,  குயிலோசை மட்டும் எங்கும் நிறைந்து இருந்தது.

 

நன்றி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!