GAANAM01

காம் 01

மாலை ஆறு மணி, வெம்ப்ளி ஸ்டேடியம், வெம்ப்ளி(Wembley), லண்டன்.
 
தொண்ணூறாயிரம் பார்வையாளர்களைத் தன்னகத்தே சுமந்து கொண்டு களைகட்டியது அந்த விளையாட்டு மைதானம். விளையாட்டு மைதானம் என்றால் சாதாரண திடல் அல்ல அது. இங்கிலாந்தின் மிகப்பெரிய மைதானமும், ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய மைதானம் எனப் புகழ்பெற்ற கால்பந்துத் திடல் அது. இங்கிலாந்து கால்பந்து நேஷனல் டீமின் அனைத்து ஹோம் மாட்ச்சுகளும் இங்கேதான் நடைபெறும்.
 
அன்றைக்கு ‘எஃப் ஏ’ கப்(FA Cup) இறுதி மாட்ச் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இங்கிலாந்தின் மிகப்பெரிய இரண்டு விளையாட்டு அணிகள் நீயா நானா என்று ஒரு கை பார்த்துவிடத் துடித்துக் கொண்டிருந்தன. நீலமும் சிவப்புமாக ஆடைகள் அணிந்துகொண்டு தங்கள் அணிகளுக்காக வீரர்கள் உயிரைக் கொடுத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். 
 
இன்னும் பத்து நிமிடங்கள்தான். முழு நேரம் ஏற்கனவே நிறைவு பெற்று இரண்டு அணிகளுக்குமான அதிகப்படியான நேரமும் வழங்கியாகிவிட்டது. இந்தக் கடைசிப் பத்து நிமிடங்களும் பொன்னான நிமிடங்கள் என்பதை இருதரப்பு வீரர்களும் நன்கு அறிவார்கள். டிஜிட்டல் ஸ்கோர் போர்ட் இரண்டு பூஜ்ஜியங்களைச் சுமந்தபடி வெகுநேரமாகக் காத்துக் கிடக்கிறது. 
 
யாராவது ஒரு அணி கோல் அடிக்க வேண்டும். இல்லையென்றால் பெனால்டி நிச்சயம். அந்த நிலைக்குப் போய்விட்டால் வெற்றி நிச்சயமில்லை. மிகவும் இக்கட்டான, அழுத்தமானதொரு மனநிலையில் வீரர்களால் பந்தைக் குறிபார்த்து இலக்கை நோக்கி அடிக்க முடியாது. சாதாரண பொழுதுகளில் பெனால்டியில் கில்லாடிய இருக்கும் வீரர்கள் கூட அந்தச் சந்தர்ப்பத்தில் தவறிப் போவதுண்டு.
 
களத்தில் இருக்கும் வீரர்கள் மட்டுமல்ல, இப்போது பார்வையாளர்கள், இரண்டு அணிகளின் மேனேஜர்கள், அவர்களின் குழு என அனைவரும் ஒருவிதமான பதட்டத்தில் இருந்தார்கள். ரெஃப்ரி தன் வயதையும் மீறி இளைஞர் போல, சிறகு முளைத்த தேவதை போல மைதானத்தில் பறந்து கொண்டிருந்தார்.
 
அதோ! நீலநிற ஆடை அணிந்திருந்த அணியின் நட்சத்திர வீரனின் கால்களில் பந்து அகப்பட்டு விடுகிறது. அரங்கம் இப்போது கூத்தாடுகிறது. ஏதோவொரு மாய தேவதை மந்திரப் பொடியைப் தூவி விட்டது போல அரங்கம் புத்துயிர் பெறுகிறது.
 
“ஜேசன்… ஜேசன்!” அரங்கத்தின் மொத்தக் குரலும் ஒரு குரலாக ஒலிக்க அந்த இருபத்தி இரண்டு வாலிபன் மின்னலென வேகம் எடுக்கிறான். இன்னும் மீதமிருப்பது ஐந்தே ஐந்து நிமிடங்கள் மாத்திரமே. அந்த ஐந்து நிமிடங்களில் அன்றைய போட்டியின் முடிவு நிர்ணயிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அதிர்ஷ்ட தேவதை யார் பக்கம் தலைசாய்ப்பாள் என்பது கேள்விக்குறிதான்.
 
“ஜேசன்… ஜேசன்!” மீண்டும் பார்வையாளர்களின் கூக்குரல். இப்போது இன்னும் அதிகமாய் இளம்பெண்களின் ஆரவாரம். 
 
“கம் ஆன் ஜே!” இளைஞர் பட்டாளத்தின் குரல் அவனை உந்தித் தள்ள ஸ்ட்ரைக்கர் ஸ்தானத்தில் விளையாடும் ஜேசனின் உடலில் புது ரத்தம் பாய்கிறது. சக வீரர்களின் உதவியை நாடாமல் தன்னந்தனியாக கால்பந்தை இலக்கை நோக்கிச் செலுத்துகிறான்.
 
கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அவனைச் சுற்றி மூன்று எதிரணி வீரர்கள். ஜேசனால் அத்தனைச் சுலபத்தில் நகர முடியவில்லை. ஆனாலும் அவன் கால்கள் அவர்கள் கண்களுக்குள் மண்ணைத் தூவிவிட்டன. அத்தனை லாவகமாக பந்தை வழிநடத்திச் சென்றவன் கீப்பரையும் ஏமாற்றித் தன் இலக்கை இறுதி நிமிடத்தில் நாடி விட்டான். 
 
அந்த அடைக்கப்பட்ட வலைப்பின்னலுக்குள் இளையவன் அடித்த பந்து மட்டுமல்ல, அவனுமே ஓய்ந்து அடங்கினான்.  ஜேசனை அவனது அணியினர் வந்துக் கட்டித் தழுவுவதற்கும் ரெஃபரி ஃபைனல் விசில் ஊதுவதற்கும் சரியாக இருந்தது. கடைசி நிமிடத்தில் தங்கள் அணிக்கு வெற்றிக் கோப்பையைத் தட்டிக் கொடுத்திருந்தான் ஜேசன்!
 
அணியைச் சேர்ந்திருந்த அனைவரும் இவனைச் சூழ்ந்து வாரி அணைத்துக் கொள்ள மேனேஜர் அவருக்கான இடத்தில் நின்றபடி இளையவனைப் பார்த்துப் புன்னகைத்தார். ஜேசனுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. இன்றைய நிலையில் இந்த இளம் வீரனுக்கு இத்தனைப் பெரிய விளையாட்டு க்ளப்பில் இடம் கிடைப்பது அத்தனைச் சுலபமில்லை. ஆனால் அவனது திறமையைப் புரிந்து இந்த நிலைமைக்குக் கொண்டு வந்ததில் மேனேஜருக்கு பெரும் பங்கிருந்தது.
 
“ஜே ஜே! ஜே ஜே!” ஜேசனின் விசிறிகள் தங்களை மறந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். காமெராக்கள் அவனைச் சூழ்ந்து கொள்ள ஒரு மெல்லிய சிரிப்போடு நடந்து கொண்டிருந்தான் ஜேசன்… ஜேசன் ராபர்ட்.
 
கறுப்பினத்தைச் சேர்ந்த அப்பா, வெள்ளைக்கார அம்மா. இவர்களுக்குப் பிறந்த ஒரே மகன் இவன். சிறு வயதிலிருந்தே கால்பந்து மேல் தீராத காதல் இவனுக்கு. பத்து வயது பூர்த்தியானது முதல் அந்தக் காதல் வெறியாக மாறிப்போனது. வேகம் வேகம் என்று எல்லாவற்றிலும் தன்னை மறந்த வேகம் அவனது. இள ரத்தத்தின் உற்சாகம் அவனை உந்தித் தள்ள அதன் பிறகு அவன் பார்த்ததெல்லாம் ஏறுமுகம்தான். பள்ளிப் பருவத்திலிருந்து தெரிவாகி படிப்படியாக சின்னச் சின்ன அணிகளுக்காக விளையாடி, இன்று இங்கிலாந்தின் அதிமுக்கிய அணியின் நட்சத்திர வீரன் அவன். இரண்டு புள்ளி ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுன்ஸ் ஜேசனது வார வருமானம்.
 
இளம் புன்னகையோடு நடந்துவந்த இளவலை ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் குவித்தார்கள். ஒரு சில இளம் பெண்கள் அவனோடு நின்று புகைப்படம் எடுக்கப் பிரயத்தனப்பட, தடுப்புக்கு அருகில் சென்றவன் ஒரு சிலருக்கு அதற்கான வாய்ப்பைக் கொடுத்தான். ஜென்ம விமோசனம் கிடைத்தாற்போல பெண்கள் பூரித்துப் போனார்கள்.
 
அவனது பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சட்டென்று அரங்கப் பாதுகாவலர்கள் ஜேசனை சூழ்ந்து கொள்ள ஒரு புன்சிரிப்போடு நிமிர்ந்தவனைத் தனக்குள் உள்வாங்கியது ஒரு காமெரா. இங்கிலாந்தின் மிகப்பிரபலமான ஒரு விளையாட்டுச் சேனல் அது. சட்டென்று அந்த விளையாட்டுச் சேனலின் பெயரைக் கவனித்த ஜேசனின் புன்னகை விரிந்தது. இது அவள் பார்க்கும் சேனல். நிச்சயம் இப்போது இந்தக் கணம் அவனைத்தான் அவள் பார்த்துக் கொண்டிருப்பாள். 
 
அவள் நான்சி! நாடி நரம்பெங்கும் புது ரத்தம் பாய அந்தக் காமெராவை நோக்கி இதழ் குவித்து முதலில் முத்தம் வைத்தான் ஜேசன். பின்பு அதுகூடப் போதாது என்பது போல அந்தக் காமெராவின் மிக அருகில் வந்து அதன் லென்ஸில் அழுந்த முத்தம் வைத்தான். உலகைப் பொறுத்தவரை இது விளையாட்டு ரசிகர்களுக்கானது. அவனைப் பொறுத்தவரை… இது அவளுக்கானது!
***
 
அந்தச் சின்னஞ்சிறு திடலில் ஜேசனின் பிரத்தியேக வானூர்தி வந்திறங்கியது. சுற்றிவர புழுதி பரப்பிக்கொண்டு இறங்கிய அந்தச் சிறிய விமானத்திலிருந்து யார் இறங்குகிறார்கள் என்று தெரிவதற்கு முன்பாக அங்கிருந்த காரில் பாதுகாவலர்கள் ஜேசனை ஏற்ற அமைதியாக அதில் ஏறி உட்கார்ந்து கொண்டான் இளையவன்.
 
இளமை முறுக்கேறிய உடம்பு. இருபத்தியிரண்டு வயதிற்கே உரித்தான மிடுக்கோடு காரில் அமர்ந்திருந்தான் ஜேசன். அவன் பிறந்து வளர்ந்த இடம் இதுதான். இங்கிலாந்தின் தெற்குக் கடற்கரையோரத் தீவான ‘ஐல் ஆஃப் வைட்’. (Isle of wight) ஆங்கிலேயர்கள் வாழும் சிறிய தீவு. அவளும் இங்கேதான் இருக்கிறாள். புகழ், பெயர், பணம் என்று எல்லாம் கிடைத்த பிற்பாடு ஜேசனால் இங்கு வாழ இயலவில்லை. லண்டன் மாநகரத்தில் தனது பெற்றோருடன் குடிபெயர்ந்து விட்டான்.
 
என்னதான் பணமும் புகழும் சேர்ந்தாலும், கொட்டிக் கிடந்தாலும் அவளைப் பிரிந்திருப்பது அவனுக்குச் சிரமம்தான். எஃப் ஏ கப் முடிந்துவிட்டாலும் ப்ரிமியர் லீக் போட்டிகள் இன்னும் நடைபெறுவதால் ஜேசனால் நகர முடியாது. அத்தனைச் சுலபத்தில் குடும்பத்தினரோடு நேரம் செலவழிக்க அவனால் இயலாது. சதா பயிற்சிகள் நடைபெற்ற வண்ணம் இருக்கும். போதாததற்கு அவனுக்கென்று பிரத்தியேக பயிற்சிகளும் உண்டு. 
 
ஜேசனின் கார் அந்த வீட்டின் முன்பாகப் போய் நின்றது. வீடு என்று சொல்வதை விட ஒரு சிறிய பங்களா என்று சொன்னால் சரியாக இருக்கும். சனத்தொகை மிகவும் குறைவு என்பதால் அந்தத் தீவில் வீடுகள் அதிகம் செறிவாகக் காணப்படாது. அப்படியான அமைதியான ஒரு சூழலில் அமைந்திருத்தது அந்த பங்களா. அவளைப் பார்க்க வருவதற்கென்றே இந்த இடத்தை வாங்கியிருந்தான் இளவல். சுற்றிவர பச்சைப் பசேலெனத் தோட்டம் காணப்பட்டது. தோட்டத்தின் நடுவில் ஒரு பெண் சிலை நாலாபுறமும் நீரைத் தூவிய வண்ணம் நின்றிருந்தது. 
 
“நான்சி வந்தாச்சா?” இது ஜேசன்.
 
“இன்னும் இல்லை சார்.” கூடவே அமர்ந்திருந்த பாடிகார்ட் சொல்லவும் காரை விட்டு இறங்கினான் ஜேசன். சுற்றுப்புறம் அவ்வளவு அழகாக இருந்தது. என்னதான் நகரம் என்றாலும் லண்டனை விட இந்தக் கிராமத்துச் சூழல் எத்தனை அழகாக இருக்கிறது என்று அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. தூரத்தே ஒரு ப்ளாக் டாக்சி வருவது தெரிந்தது. நிச்சயம் அது அவளாகத்தான் இருக்கும். 
 
ஜேசன் இப்போது சட்டென்று வீட்டினுள் சென்றுவிட்டான். அவள் தன்னைத்தான் பார்க்க வருகிறாள் என்பதை உலகிற்குப் படம் போட்டுக் காண்பிக்க அவன் விரும்பவில்லை. அவனைப் பொறுத்தவரை இந்த உறவை உலகிற்குச் சொல்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் நான்சி… அவள் வீட்டில் பெரும் கலவரம் வெடிக்கும். ஆளுயர ஜன்னல் வழியே அவள் இறங்குவதைப் பார்த்திருந்தான் ஜேசன். 
 
முழங்கால்களைத் தாண்டிய நீண்ட ஃப்ராக். பழைய கால ஸ்டைலில் தைக்கப்பட்டிருக்கும். எப்போதும் அவள் அணிவது இது போன்ற ஆடைகளைத்தான். இதைத் தாண்டி அவள் வீட்டில் வேறெதுவும் அணிய அனுமதி கிடையாது. தலை முடி இயற்கையாகவே நேராக்கி விட்டது போல அவள் தோள்களில் தவழ்ந்தது. நான்சியின் கூந்தல் நல்ல பொன்னிறம். பிறந்ததிலிருந்தே அவளுக்கு அப்படித்தானாம். ஜேசனின் அப்பா கறுப்பினம் என்பதால் அவனது முடி நல்ல கருநிறமாக இருக்கும். நெடுநெடுவென்று வளர்ந்திருப்பான். நான்சி அவன் தோள்வரைதான் இருப்பாள். 
 
டாக்சியை அனுப்பிவிட்டு அவள் உள்ளே நுழைய இவன் பாடிகார்ட் அவளை மரியாதையோடு உள்ளே அழைத்து வருவது தெரிந்தது. அவன் இதயத்தின் ராணி, இந்த வீட்டின் நாளைய எஜமானி அவள்தான் என்பது அவனைச் சார்ந்த அனைவருக்கும் தெரியும். அவன் பெற்றோருக்குக் கூட அது தெரியும். ஆனால் வெளிப்படையாகப் பேசிக் கொண்டதில்லை. இதுபோல ஒன்றிரண்டு நாட்கள் அவனுக்கு ஓய்வு கிடைத்தால் மகனின் முதல் விஜயம் அந்தச் சின்னஞ்சிறு தீவுதான் என்பதை அவர்களும் அறிந்து வைத்திருந்தார்கள். ஆனால் தெரிந்தது போல் இதுவரைக் காட்டிக் கொண்டதில்லை.
 
உள்ளே வந்தவள் மேலாக அணிந்திருந்த கோர்ட்டையும் ஸ்கார்ஃபையும் கழட்டி அங்கிருந்த ஸ்டான்ட்டில் மாட்டினாள். கண்கள் அவனைத்தான் தேடியது. ஜன்னலோரம் நின்றபடி, ஒரு கையை பான்ட் பாக்கெட்டில் விட்டபடி, இமைக்காமல் இவளைத்தான் பார்த்தபடி நின்றிருந்தான் ஜேசன். அவனைப் பார்த்ததும் அந்த முகம் மலர்ந்து போனது.
 
“ஜே…” மெல்லிய குரலில் அழைத்தவள் அவனை நோக்கி நடந்து வந்தாள்.
 
“ரொம்ப லேட் பண்ணிட்டேனா?” இனிமையான குரல் அவளுக்கு. அருகில் வந்தவளின் கரத்தைப் பற்றித் தன் கன்னத்தில் வைத்துக்கொண்டான் ஜேசன். இத்தனை நாளும் ஓடிக் களைத்த உடலுக்கு ஏதோவொரு ஆறுதல் கிடைத்தது போல இருந்தது. மறு கரத்தால் அவனது அடுத்த கன்னத்தைத் தடவிக் கொடுத்தது பெண்.
 
“ரொம்ப டயர்டா இருக்கீங்களா?” மீண்டும் அதே இனிமை அந்தக் குரலில்.
 
“டயர்டா இருந்தேன், ஆனா இப்போ இல்லை.” ஆழ்ந்து ஒலித்தது அவன் குரல்.
 
“வீட்டுல சொல்லிட்டு வந்திருக்கீங்களா?” அவள் சிறிய பயத்தோடு கேட்கவும் அவன் உதடு பிதுக்கினான்.
 
“ஜே…” அவள் குரலில் அத்தனைக் கலவரம்.
 
“நீ சொல்லிட்டு வந்திருக்கியா நான்சி?” அவன் குரலில் இருந்த கேலி அவளைத் தாக்கத் தலையைக் குனிந்து கொண்டாள் பெண்.
 
“எங்க வீட்டுல சொன்னா விடமாட்டாங்க, ஆனா உங்களுக்கு அப்பிடியில்லையில்லை ஜே, நீங்க சொல்லிட்டு வந்திருக்கலாமே, யாராவது ஒருத்தர் உண்மை பேசலாமில்லை?” அவள் வாதத்தில் அவன் புன்னகை விரிந்தது. 
 
“எதுக்கு நீ இப்போ இவ்வளவு பயப்பிடுற?”
 
“இது பயமில்லை ஜே…” அதற்குமேல் நான்சி பேசவில்லை. இதுதான் அவள். எதிலும் நேர்மை, நியாயம். பதினெட்டு வயது நிரம்பிய பெண். அவள் நினைத்தால் எதுவும் செய்யலாம். குடும்பம் முதற்கொண்டு சட்டம் வரை அவளை யாரும் எதுவும் சொல்ல இயலாது. ஜேசனின் பணத்திற்கும் புகழுக்கும் அவள் தலைகீழாக நின்று ஆடலாம். அவள் காலடியில் அனைத்தையும் கொட்ட ஜேசனும் தயார். ஆனால் இதற்கெல்லாம் பெண் தயாரில்லை.
 
இங்கிலாந்தின் பழங்குடிகளில் ஒன்றான ‘ஸ்பென்ஸர்’ வம்சத்தில் வந்தவள் அவள். அவள் தாத்தா பெரிய நிலப்பிரபுவாக இருந்தவர். இன்றைக்கும் நல்ல செல்வாக்கோடும் வசதியோடும் வாழும் குடும்பமது. நாமெல்லாம் நினைப்பது போல வெள்ளைக்காரர்கள் என்றால் நாகரிகத்தின் உச்சத்தில் வாழ்பவர்கள் என்று அர்த்தமல்ல. நம்மையெல்லாம் விட பண்பாட்டை, பழமையைப் பெரிதாக மதிக்கும் பலர் இன்னும் இங்கு வாழ்கிறார்கள். நவநாகரீக போதையை அவர்களிடம் மருந்திற்கும் பார்க்க முடியாது.
 
“நான்சி…” அவன் அழைக்கவும் அவள் சட்டென்று நிமிர்ந்தாள்.
 
“நேத்து மாட்ச் பார்த்தியா?”
 
“ம்…” மீண்டும் அந்த முகத்தில் அத்தனை மலர்ச்சி.
 
“உங்கப்பா பார்க்க விட்டுட்டாரா என்ன?!”
 
“ம்ஹூம்… நான் ரோஸி வீட்டுக்குப் போயிட்டேன்.”
 
“ஓஹோ!”
 
“கொஞ்சம் பாடம் சம்பந்தமான வர்க் இருந்தது, அதை முடிச்சிட்டு மாட்ச் பார்க்கிறதுன்னு நானும் ரோஸியும் ப்ளான் பண்ணிக்கிட்டோம்.”
 
“ம்…” அவன் கண்கள் பளபளத்தது.
 
“ரோஸி கொஞ்ச நேரம் எங்கூட இருந்து மாட்ச் பார்த்தா, அதுக்கப்புறமா அவங்க வீட்டுக்கு கெஸ்ட் வரவும் எந்திரிச்சுப் போயிட்டா, நான் நிம்மதியா, தனியா உட்கார்ந்து மாட்ச் பார்த்தேன்.”
 
“நீ மாட்ச் பார்த்தியா?” அவன் கேலி புரிந்து அவளும் சிரித்தாள்.
 
“சரி… உங்களைத்தான் பார்த்தேன், அப்பப்போ மாட்ச்சும் பார்த்தேன்.” சொல்லிவிட்டு அவள் நாணிச் சிரிக்க ஜேசன் அவளருகே வந்தான்.
 
“ஜே…” இப்போது பெண் தன்னருகில் நெருங்கியவனை ஒரு கை நீட்டித் தடுத்தது, எச்சரிப்பது போல.
 
“இது நியாயமா நான்சி? உன்னை என்னோட பத்து வயசுலேர்ந்து எனக்குத் தெரியும், பன்னெண்டு வயசுல ஒரே ஒரு தடவை உன்னோட கையைப் பிடிச்சிருக்கேன், பதினஞ்சு வயசுல ஒரு முறை நீ என்னோட கோபிச்சப்போ உன்னைச் சமாதானம் பண்ண உன்னோட தோளைத் தொட்டிருக்கேன், பதினெட்டு வயசுல ஆசையா ஒரே ஒரு தடவை உன்னோட…” அவனை மேலே பேச வேண்டாம் என்பது போல அவள் முறைத்துப் பார்க்க ஜேசன் சிரித்தான்.
அன்றைய நாள் இன்றைக்கும் அவளுக்கு நன்றாக நினைவில் நிற்கிறது. தன் இடை வளைத்து ஆசையாய் ஒரு முத்தமிட அனுமதி கேட்டான். அப்போதும் இதே போல பெண் மறுத்தபோது சிரித்தான். ஆனால் சினம் கொள்ளவில்லை. அவள் சிந்தனையின் போக்கு அவனுக்கும் பிடிபட்டிருக்கும் போலும்.
 
“அன்னைக்குக் கேட்ட வரத்தை ஆறு மாசத்துக்கு முன்னாடி இந்த தேவதை மனமிரங்கிக் குடுத்துச்சு… ஆனா அது வரமில்லை நான்சி, சாபம்.”
 
“சாபமா?!”
 
“ம்…”
 
“அப்போ ஏன் சாபத்தைக் கேட்டு வாங்கிக்கிட்டீங்களாம்!”
 
“அது என் முட்டாள்தனம் நான்சி, அந்தச் சாபம் என்னைத் தினமும் கொல்லாமக் கொல்லுதே, கொஞ்சம் இரக்கம் காட்டக் கூடாதா?” தன் முன்னே நின்று கெஞ்சும் அந்த இமாலயத்தை அண்ணார்ந்து பார்த்தாள் நான்சி. புஜங்கள் விரிய இளமை அங்கே கோலோச்சிக் கொண்டிருந்தது. அவன் மைதானத்தில் இறங்கினால் வெறிபிடித்தாற் போல மாறிவிடும் அவனது ரசிகைகளை அவள் நன்கறிவாள். இவன் கண்ணசைத்தால் எந்த எல்லைக்கும் அவர்கள் போகத் தயார். ஆனால் அவன் கண்ணசைக்க மாட்டான். இவள் கண்ணசைவுக்காகக் காத்துக் கிடப்பவன் அவன்!
 
சட்டென்று யாரோ நடந்து வரும் பூட்ஸ் ஒலி கேட்கவும் சட்டென்று நான்சி விலகினாள். வந்தது ஜேசனின் உதவியாளன். வந்தவன் ஒரு ஃபோனை நீட்ட ஜேசன் மறுபேச்சின்றி வாங்கிக் கொண்டான். நான்சியோடு இருக்கும்போது அவனைத் தொந்தரவு செய்கிறார்கள் என்றால் அது எத்தனை முக்கியமான காரியம் என்பதை அவன் அறிவான். 
 
ஜேசன் ஃபோனோடு அப்பால் நகர்ந்துவிட நான்சி அமைதியாக நின்றிருந்தாள். எந்தத் தைரியத்தில் தான் இப்படியெல்லாம் நடந்து கொள்கின்றேன் என்று அவளுக்கே புரியவில்லை. இந்தத் திருமணத்துக்கு நிச்சயமாக அவள் தந்தை சம்மதிக்கப் போவதில்லை. ஜேசனை மறந்து அவளும் வேறு யாரையும் மணக்கப் போவதும் இல்லை. ஜேசன்… ஓர் ஒற்றை இதழொற்றலுக்குக் கூட அவளிடம் மட்டுமே கெஞ்சும் உத்தமன். நான்சிக்கு அழவேண்டும் போல இருந்தது. 
 
“நான்சி…” அவசரமாக அழைத்தபடி ஜேசன் வர சட்டென்று திரும்பினாள் பெண்.
 
“என்னாச்சு? ஏன் டல்லாகிட்ட?”
 
“ஒன்னுமில்லை ஜே, அவசரமான ஃபோன் காலா?”
 
“ம்… ப்ளான் ல ஒரு சின்ன சேன்ஞ் பேபி.”
 
“அவசரமாக் கிளம்பணுமா?” அந்தக் குரலில் இருந்த கலக்கத்தைப் புரிந்து கொண்டவன் போல ஜேசன் புன்னகைத்தான். 
 
“ம்… கிளம்பணும் நான்சி, இன்னமும் நான் அம்மா அப்பாவைப் பார்க்கலை.”
 
“ம்… கிளம்புங்க ஜே.” அதற்கு மேல் பேச எதுவுமே இல்லை என்பது போலப் பேசியது பெண்.
 
“நான் போகட்டுமா?” அவளையே பார்த்துக்கொண்டு அவன் கேட்க அப்போதுதான் ஞாபகம் வந்தது போல அவசரமாக ஓடிச்சென்று அவள் கோட் பாக்கெட்டில் இருந்து எதையோ எடுத்து வந்தாள்.
 
“என்ன நான்சி?”
 
“உங்களைப் பார்த்தா நான் எல்லாத்தையும் மறந்திடுறேன் ஜே! இப்போப் பாருங்க, இதை உங்கக்கிட்டக் குடுக்க மறந்துட்டேன்.”
 
“என்னது அது?!” அவன் குரலில் அவ்வளவு ஆச்சரியம். அவனுக்காக அவன் நான்சி என்ன கொண்டு வந்திருக்கிறாள்?!
 
“ஜே… இது…” தயங்கியபடி அவள் தனது கையில் இருந்ததைக் காட்ட ஜேசனின் முகத்தில் கடுமை ஏறியது. அவள் கையில் அழகானதொரு மோதிரம் இருந்தது, ஆண்கள் அணிவது.
 
“என்ன இது?” அவன் குரலில் கடுமை குறையவில்லை.
 
“உங்களுக்காக நான் வாங்கினேன்.” அவன் கடுமையை அவள் கவனிக்கவில்லை.
 
“உனக்கு ஏது இதுக்குப் பணம்?”
 
“ஐயையோ! இது அப்பாவோட பணமில்லை.” அவள் குரல் இப்போது பதறியது.
 
“…….”
 
“நேத்து என்னோட ஃபர்ஸ்ட் சேலரி…”
 
“ஓஹோ!” அவன் வாய்விட்டுச் சிரிக்க பெண் வெட்கத்தில் தலைகுனிந்தது. கல்விசார் தகுதிக்காக படித்துக்கொண்டே பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை பார்க்கிறது. அதை அவனும் அறிவான். ஒரு சில நூறுகளே அதில் அவளுக்கு வருமானம். மில்லியன்களில் சம்பாதிக்கும் அவனுக்குப் பெண்ணைச் சில நூறுகளில் பரிசு வாங்க வைத்திருந்தது காதல்!
 
“இதையாவது நீங்க போட்டு விடுவீங்களா இல்லை… இதுக்கும் உங்கப் பாட்டிக்கிட்ட பர்மிஷன் வாங்கணுமா?” 
 
“ம்ஹூம்… இதுக்கெல்லாம் எங்க பாட்டி ஒன்னும் சொல்ல மாட்டாங்க.” என்றவள் தனது கையிலிருந்த மோதிரத்தை அவன் விரலில் அணிவித்தாள். 
 
“அப்போ உனக்கு?”
 
“எனக்கெதுக்கு ரிங் இப்போ?”
 
“நான் ரிங்ஙை சொல்லலை, எல்லாப் பணத்தையும் எனக்குச் செலவு பண்ணிட்டா உனக்கு?”
 
“எங்கிட்ட அப்பா குடுத்தது இருக்கு, ஆனா அதுல உங்களுக்கு எதுவும் வாங்க முடியாதில்லை ஜே?”
 
“ம்…” அதற்கு மேல் எதுவும் பேசாமல் அந்தத் தங்க வளையத்தில் அவளைப் பார்த்தபடி முத்தம் பதித்தான். அவளுக்கும் காற்றில் இதழ் குவித்து முத்தமிட்டவன் சட்டென்று கிளம்பிவிட்டான். சற்று நேரத்தில் அவன் கார் கிளம்பிச் செல்லும் ஓசை கேட்டது. அந்த ஆளுயர ஜன்னலின் அருகே வானைப் பார்த்தபடி நின்றிருந்தாள் நான்சி. அவனது ஹெலிகாப்டர் பெரும் இரைச்சலோடு கிளம்பிப் போவது தெரிந்தது.