கானம் 03
அந்த அரையிருளில் அமைதியாக அமர்ந்திருந்தாள் நான்சி. மனது முழுவதும் சஞ்சலமே நிரம்பி வழிந்தது. ஜேசன் ஃபோனை சட்டென்று துண்டித்தது கவலையாக இருந்தாலும் தன் தீர்மானத்தில் பெண் உறுதியாகவே இருந்தது. ஜேசனை அவள் காதலிக்கிறாள். அவனைத்தான் அவள் திருமணமும் செய்து கொள்ளப் போகிறாள். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதற்காக அவள் காதலன் தேர்ந்தெடுத்திருக்கும் வழிமுறையை அவள் ஆதரிக்கவில்லை.
அவள் தந்தை இந்தத் திருமணத்தை முழுமனதாக எதிர்க்கிறார். அதில் அவளுக்கு அளவுகடந்த வருத்தம் உண்டு. இல்லையென்று அவள் பொய் சொல்லப் போவதில்லை. அதற்காக?! இத்தனைக் காலமும் தன்னைப் பெற்று, ஆசையாசையாக வளர்த்தத் தந்தைக்கு அவளால் அகௌரவத்தைத் தேடித்தர இயலாது.
ரூம் கதவு இரண்டு முறை தட்டப்படவும் நான்சி திரும்பிப் பார்த்தாள். இந்த நேரத்தில் அவளைத் தேடி வருவதென்றால் அது நிச்சயம் அவள் தங்கையாகத்தான் இருக்கும். கதவைத் தட்டிவிட்டு அமீலியா உள்ளே நுழைய அவளைப் பார்த்து முறுவலித்தாள் நான்சி. அந்த முறுவலில் வலியே மிகைத்துக் கிடந்தது.
“நான்சி…” இளையவளின் குரலும் சோகத்தையே காட்டியது.
“என்னப் பண்ணப் போறே?”
“எதைப்பத்திக் கேட்கிற அமீ?”
“அப்பா இன்னைக்குப் பேசினதைப் பத்தித்தான்.” தங்கையின் கேள்விக்கு மூத்தவளிடமிருந்து ஒரு பெருமூச்சே பதிலாக வந்தது.
“பாட்டி இப்பதான் அப்பாவோட ரூம் ல இருந்து போறதைப் பார்த்தேன், அவங்களும் போய் பேசி இருப்பாங்கன்னு தோணுது.”
“ஓ…”
“ஆனா அவங்க நடந்து போறதைப் பார்க்கும் போது போன காரியம் சக்ஸஸ் ஆன மாதிரித் தெரியலை.”
“ம்…”
“அதாலதான் கேட்கிறேன், என்னப் பண்ணப் போற நான்சி?”
“தெரியலை அமீ, ஆனா என்னை மீறி எதுவும் நடந்துடாதுங்கிற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு.”
“ஜேசன் கூட பேசினியா?”
“இப்போதான் கூப்பிட்டுப் பேசினாரு.”
“என்னவாம்?” தங்கையின் குரலில் இருந்த உற்சாகம் பார்த்து நான்சிக்கு சிரிப்பு வந்தது. இதைப் பார்த்துத்தானே தன் தந்தை பயப்படுகிறார். இது போல இளவட்டங்கள் அவன் மேல் வைத்திருக்கும் வெறித்தனமான ஆசையைப் பார்த்துத்தானே அவர் அஞ்சுகிறார்!
“அவங்கப்பாக்கு உடம்புக்கு முடியலை அமீ, அதைச் சொல்லத்தான் ஜே கூப்பிட்டாரு.” அதற்கு மேல் ஜேசன் பேசியதைத் தன் தங்கையிடம் கூடச் சொல்ல நான்சி பிரியப்படவில்லை. எப்படித் தன் குடும்பத்தை அவனிடம் விட்டுக்கொடுக்க முடியாதோ, அதேபோல அவனையும் அவள் குடும்பத்தினரிடம் குறைத்துப் பேச அவளால் முடியாது.
“என்னாச்சாம்?”
“மைல்ட் அட்டாக்காம்.”
“ஐயோ! இந்த நேரத்துலயா அது வரணும்?”
“அப்போ அது உனக்கு எப்ப வரணும் அமீ?” நான்சி தங்கையை அதட்டினாள்.
“அப்பிடியில்லை நான்சி, அப்பா வேற உனக்குக் கல்யாணம் பேசலாம் ன்னு இன்னைக்குப் பேசுறாங்க, நீ அதைப்பத்தி ஜேசன் கிட்டப் பேசலாமேன்னு சொல்லத்தான் நானே வந்தேன், இப்ப அவங்க அப்பாக்கு உடம்புக்கு முடியலைன்னா நீ என்னதான் பண்ணுறது?”
“ஏன் அமீ? எனக்குப் புடிக்காத இந்தக் கல்யாணத்தை அப்பாவால நடத்த முடியும் ன்னு நீ நினைக்கிறியா?”
“முடியாதுதான்… ஆனாலும்…” அமீலியா முடிக்காமல் நிறுத்த நான்சி புன்னகைத்தாள்.
“அப்பிடி என்னதான் நடக்குதுன்னு பார்ப்போமே.” இலகுவாக நான்சி சொல்ல அதற்கு மேல் இளையவள் எதுவும் பேசவில்லை. தன் தமக்கையைப் பார்த்து முறுவலித்துவிட்டு நகர்ந்து விட்டாள்.
ஆனால் அதேவேளை ஜேசனால் அப்படிச் சாதாரணமாக அமர்ந்திருக்க முடியவில்லை. அவனது தந்தை அனுமதிக்கப்பட்டிருந்த ஹாஸ்பிடலின் பிரத்தியேக அறையில் பதட்டமாக நடைபயின்று கொண்டிருந்தான். மனதுக்குள் ஏதோவொரு பட்சி எதுவுமே சரியில்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தது. அப்பாவிற்கு உடம்பு முடியாமல் போனது அவனுக்கு முதலில் பேரதிர்ச்சியாக இருந்தது. எதனால் இது நேர்ந்தது என்றும் அவனுக்குப் புரியவில்லை. ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருப்பவர் ராபர்ட். அப்படியிருக்க எப்படி இப்படியானது?!
“ஜே…” அந்த வார்த்தையில் சட்டென்று திரும்பினான் ஜேசன். கிரேஸ் அறைவாயிலில் நின்று கொண்டிருந்தார்.
“மாம்.” அந்த ஒற்றை வார்த்தையில் கிரேஸின் முகம் மலர்ந்து விகசித்தது.
“எனக்கு ஒன்னுமே புரியலை மாம், அப்பாக்கு எப்பிடி இப்பிடியாச்சு? திடீர்னு என்ன இதெல்லாம்?” ஜேசன் குழம்பிப் போய் நிற்க கிரேஸும் அமைதியாக நின்றிருந்தார்.
“அப்பா ரொம்ப யோசிக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்றாங்க, அப்போ அப்பாவோட இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? அப்பா ரொம்ப யோசிக்குறாங்களா? எதுக்காக? அப்பிடி என்ன யோசனை அப்பாக்கு? என்ன கவலை அப்பாக்கு?” ஜேசன் பரிதவித்தான்.
“ஜே… நீ கொஞ்சம் அமைதியா இரு.”
“என்னால முடியலை மாம்.”
“ராபர்ட் இப்போ நல்லா இருக்காரு, எந்த பிராப்ளமும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்க, அப்பாவை இனி நாம ரொம்ப ஜாக்கிரதையாப் பார்த்துக்கலாம், அதைவிட்டுட்டு வீணா யோசிக்காதே.”
“மாம்…”
“போதும் ஜேசன், அமைதியா இரு, வீட்டுக்குப் போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வா, நான் ராபர்ட்டை பார்த்துட்டு அப்புறமா வர்றேன்.” கிரேஸ் அதற்குமேல் ஜேசனை பேச விடாமல் அவசர சிகிச்சைப் பிரிவை நோக்கிப் போய்விட்டார். தனியான ஓர் அறையில் ராபர்ட் எந்தவிதச் சலனமுமில்லாமல் படுத்திருந்தார். அவர் விழித்திருக்கிறார் என்பது புரிய பெண் அவரின் அருகே சென்று கையைப் பிடித்துக் கொண்டது.
“ராபர்ட்.” மென்மையான அந்தக் குரலில் மனிதர் லேசாக இமை பிரித்தார்.
“இப்போ எப்பிடி இருக்கு?” கிரேஸின் மலர்ந்த முகம் அவர் முகத்திலும் புன்னகையை வரவைத்தது.
“ஜே எங்க?” என்றார் அசதியான குரலில்.
“இப்போதான் வீட்டுக்குப் போறான், நான்தான் அனுப்பி வெச்சேன், உங்களுக்கு இப்பிடி ஆனதை அவனால தாங்க முடியலை ராபர்ட், ரொம்ப வருத்தப்படுறான்.” மனைவியின் வார்த்தைகளைக் கேட்டு ஆரம்பத்தில் புன்னகைத்தவரின் முகம் ஓரிரு நொடிகளில் மாறிப்போனது.
“ராபர்ட், எதை நினைச்சும் நீங்க இப்போ வருத்தப்படக் கூடாது, எதுக்காக உங்களை நீங்களே இப்பிடிக் கஷ்டப்படுத்திக்கிறீங்க?”
“இல்லை கிரேஸ், ஜேசனை இந்த ஃபீல்ட் ல இழுத்து விட்டிருக்கக் கூடாதோன்னு இப்போ தோணுது, அவன் வேகம் பார்த்து எனக்கு பயமாயிருக்கு கிரேஸ்.”
“ம்…” கிரேஸும் அந்தக் கூற்றை ஆமோதிப்பவர் போல தலையை ஆட்டினார்.
“பத்து வயசிலேயே அவன் வேகம் வேகம் ன்னு தன்னை மறந்து ஓடினப்போ அவனை நானாவது கொஞ்சம் நிதானப்படுத்தி இருந்திருக்கணும், என்னோட மனசுல அப்போ ஏற்பட்டிருந்த காயங்களுக்கு வடிகால் தேடிக்கிட்டிருந்த நானும் அவனோட சேர்ந்து ஓடினேனே தவிர அவனை நிதானப்படுத்தலை.”
“எனக்குப் புரியுது ராபர்ட்.”
“ஆனா அப்போ எனக்கது புரியலையே ம்மா.”
“இப்போ அதால ஒன்னும் குறைஞ்சு போயிடலை ராபர்ட், ஜே இன்னைக்கு இவ்வளவு பெரிய உச்சத்தைத் தொட அந்த வெறிதானே காரணமா இருந்துச்சு?”
“இருக்கலாம், ஆனா அந்த வெறி இன்னும் அடங்கின மாதிரி தெரியலையே! நினைச்சதையெல்லாம் ஒரு வெறித்தனத்தோட ஜே தொரத்துர மாதிரி எனக்குத் தோணுது ம்மா.”
“ம்… சின்ன வயசில்லையா, அதுதான் அப்பிடி இருக்கான், இன்னும் கொஞ்ச நாள் போனா நிதானம் வந்திடும் ராபர்ட், நீங்கக் கவலைப் படாதீங்க.” சொன்ன பெண்ணைத் தீர்க்கமாகப் பார்த்தார் ராபர்ட்.
“என்ன ப்பா?”
“இந்த வேகந்தானே கிரேஸ் அவக்கிட்டயும் இருந்துச்சு! வயசுக்கு மீறின வேகம்!” ராபர்ட் கலங்க கிரேஸின் கரம் அவர் கரத்தை இன்னும் அழுந்தப் பிடித்துக் கொண்டது. ‘எல்லாவற்றையும் நீ மறந்து போகக் கூடாதா?’ என்று பெண்ணின் விழிகள் அவரைப் பார்த்துக் கெஞ்சியது.
“மறந்துட்டேன் கிரேஸ், எல்லாத்தையும் மறந்துட்டேன், ஆனா ஜேசன் திரும்பத் திரும்ப என்னோட காயத்தைக் கீறிப் பார்க்கிறான், போனவளை நினைச்சு நான் வருத்தப்படலை, ஆனா… அவளோட அதே மனநிலைக்கு இவனும் போயிடுவானோன்னு எனக்குப் பயமா இருக்கு கிரேஸ்.”
“சேச்சே! என்ன வார்த்தை இது?! ஜே நம்மளை விட்டு எங்கேயும் போகமாட்டான், உங்களை விட்டுட்டுப் போனாலும் இந்த அம்மாவை விட்டுட்டு எங்கேயும் எம் புள்ளைப் போக மாட்டான்.” உறுதியாகச் சொன்னப் பெண்ணைப் பார்த்துப் புன்னகைத்தார் ராபர்ட். வெள்ளை வெளேரென்ற நிறத்தோடும் இளஞ்சிவப்பு உதடுகளோடும் புதுமலரைப் போல நின்றிருந்தார் கிரேஸ். இப்போது மட்டுமல்ல, முதல்முதலாக அவளைப் பார்த்தபோதும் இப்படித்தான் இருந்தாள். இந்தக் கண்களில் அன்றைக்கும் இதே காதல்தான் இருந்தது. சற்றும் குறையாமல் அதே கண்கள் இன்றைக்கும் ராபர்ட்டை காதலோடுதான் பார்க்கின்றன. கையில் பத்து வயதுக் குழந்தையோடு ராபர்ட் தன்னந்தனியாக நின்றபோது அவர்களை அரவணைத்துக் கொண்டதும் இந்த கிரேஸ்தான்.
சில பொழுதுகளில் ராபர்ட் நினைப்பதுண்டு. இவளுக்கு கிரேஸ் என்று எதற்காக இவள் பெற்றோர்கள் பெயர் வைத்தார்கள். அதனால்தானே இவளுக்கு எல்லோர் மீதும் கருணையை மட்டுமே பொழியத் தெரிகிறது. கறுப்பாக இருந்தாலும் ராபர்ட் நல்ல வாட்டசாட்டமாக இருப்பார். அவரைப் பார்த்து இந்த கிரேஸ் மயங்கிப் போனதில் தப்பேதும் இல்லை!
***
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நான்சி கொஞ்சம் தாமதமாகத்தான் எழுந்தாள். சர்ச்சில் இன்று காலை ஆராதனை இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிறும் தாமஸ் தன் குடும்பத்தோடு சர்ச்சிற்குப் போய்விடுவார். பெண்கள் அனைவரும் அன்று கொஞ்சம் சிரத்தையுடன் தங்களை அலங்கரித்துக் கொள்ளவேண்டும் என்று வீட்டின் தலைவர் எதிர்பார்ப்பார். அமீலியாவிற்கு ஞாயிறு வந்தாலே கொண்டாட்டம்தான். இது போல கிடைக்கும் அபூர்வமான அனுமதிகளை அவள் அனுபவித்து மகிழ்வாள்.
காலையிலிருந்து வீடு கொஞ்சம் பரபரப்பாக இருப்பது போல உணர்ந்தது பெண். ஆனாலும் அவள் மனது அதில் லயிக்கவில்லை. அவள் எண்ணம் முழுவதும் அந்த நொடி ஜேசனின் தந்தையே நிறைந்திருந்தார். அவருக்காக அவள் மனம் பிரார்த்தித்துக் கொண்டேயிருந்தது. நல்ல ஆரோக்கியமான மனிதருக்கு ஏன் இப்படி ஆனது என்று சிந்தித்தபடியே இருந்தவள் தன் சுற்றுப்புறத்தைக் கவனிக்க மறந்திருந்தாள். ஆனால் அவள் மோன நிலையும் சற்று நேரத்தில் கலைக்கப்பட்டது.
“ஹாய்!” கூட்டுப் பிரார்த்தனை எல்லாம் முடிவடைந்து அமைதியாகத் தனக்குள் ஆண்டவனிடம் விண்ணப்பம் வைத்துக் கொண்டிருந்த நான்சியை கலைத்தது அந்தக் குரல். சட்டென்று திரும்பியவள் திகைத்துப் போனாள். சாம்பல் வண்ண சூட்டில் அவளருகே அமர்ந்திருந்தான் ஸ்டீவ், ஜாக்சனின் மகன்.
“ஹாய்.” திகைப்பை மறைத்தபடி பெண்ணும் ஹாய் சொன்னது.
“பிரார்த்தனைப் பலமா இருக்கு.” அவன் ஒரு புன்னகையோடு கேட்க பெண்ணும் புன்னகைத்தது.
“தெரிஞ்சவங்க ஒருத்தங்களுக்கு உடம்புக்கு முடியலை, அதான்.”
“ஓ… அப்போ நான் சின்னப் பொண்ணாப் பார்த்த நான்சி இன்னும் மாறலை.” மேற்படிப்பு என்று ஆரம்பித்த பிற்பாடு நான்சி இவனைச் சில வருடங்களாகச் சந்தித்ததில்லை. லண்டனில் படித்துக்கொண்டிருந்த ஸ்டீவ் ஊர் வரும்போதெல்லாம் ஏதோவொரு வகையில் அவனைப் பார்க்கும் சந்தர்ப்பம் நான்சிக்கு அமையவில்லை.
“எப்பிடி இருக்கே நான்சி?” கனிவாக வந்தது கேள்வி.
“நல்லா இருக்கேன், நீங்க எப்பிடி இருக்கீங்க ஸ்டீவ்?” மரியாதை நிமித்தம் கேட்டாள் பெண்.
“அடேயப்பா! இப்பவாச்சும் உனக்கு இப்பிடிக் கேட்கணும் ன்னு தோணிச்சே நான்சி, படிப்பையெல்லாம் முடிச்சுட்டு ஊருக்கு நான் வந்தே ரொம்ப நாளாச்சு, ஆனா உன்னைத்தான் பார்க்க முடியலை.”
“ஓ… நீங்க வீட்டுக்கு வரும்போது நான் வெளியே போயிருந்திருப்பேன்.”
“ம்… அதாலதான் இன்னைக்கு சர்ச்ல வெச்சுப் பார்க்கலாம் ன்னு இங்க வந்துட்டேன்.” எந்தத் தயக்கமும் இல்லாமல் அவளிடம் பேச ஸ்டீவிற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. நான்சிக்குமே அவனைச் சிறுவயது முதல் தெரியும். ஜாக்சன் அங்கிளின் மகன் என்றவரை அவனோடு அளவளாவ அவளும் தயார்தான். ஆனால் அதைத் தாண்டி அவன் எண்ணங்கள் சஞ்சரிக்குமாக இருந்தால் அதைப் பெண் விரும்பமாட்டாள்.
இதுவெல்லாம் ஸ்டீவிற்கு விளங்கினாற் போல தெரியவில்லை. அவன் போக்கில் மளமளவென்று பேசிக் கொண்டிருந்தான். அப்போதுதான் நான்சி அதைக் கவனித்தாள். ஸ்டீவ் மட்டுமல்ல, அவன் மொத்தக் குடும்பமும் அன்று அவர்கள் சர்ச்சிற்கு வந்திருந்தது. அதோடு மாத்திரம் நில்லாது மதிய உணவிற்காக தாமஸ் அவர்களை அழைத்தபோது எந்தவித மறுப்பும் சொல்லாமல் இவர்களோடு கிளம்பியும் வந்தது. நடப்பது எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்த நான்சிக்கு இவை எதுவும் தற்செயல் என்று தோன்றவில்லை. தனது தந்தை எல்லாவற்றையும் திட்டமிட்டே செய்கிறார் என்று நன்றாகப் புரிந்தது.
சர்ச்சிலிருந்து வீட்டுக்கு வந்த பிற்பாடும் ஸ்டீவ் அத்தனைச் சுலபத்தில் நான்சியை விட்டு நகரவில்லை. அந்த வீட்டில் வேறு உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்று அவன் புரிந்து கொள்ளவேயில்லை. உண்டபோதும் சரி, அதன் பிற்பாடும் சரி ஸ்டீவ் ஒரு முடிவோடு அவளுடனேயே நேரம் செலவழிக்க நான்சிக்கு புரிந்து போனது. அதற்கு ஏற்றாற்போல ஜாக்சனும் பேச்சை ஆரம்பித்தார்.
“ஆன்ட்டிதான் இந்த வீட்டுல மூத்தவங்க, என்னதான் நானும் தாமஸும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் ன்னாலும், எங்களுக்குள்ள ஒத்த அபிப்பிராயம் இருந்தாலும் உங்கக்கிட்டப் பேசுறதுதான் சரி ஆன்ட்டி.” எல்லாவை பார்த்தபடி ஜாக்சன் பேச்சை ஆரம்பிக்க அந்த வீட்டு ஹாலில் சட்டென்று ஒரு அமைதி நிலவியது. மாமியாரும் மருமகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
‘நாம் இருவரும் பயப்பட்ட அந்த நேரம் வந்தேவிட்டது.’ என்பது போல இருந்தது அவர்கள் பார்வைப் பரிமாற்றம். அமீலியா சட்டென்று தனது அக்காவைத் திரும்பிப் பார்த்தாள். நான்சியின் முகம் அதிக இறுக்கத்தைக் காட்டியது.
“உங்க எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயந்தான், பசங்க வளரும் போதே நானும் தாமஸும் பேசிக்கிட்டதுதான்…” ஒரு சிரிப்போடு ஆரம்பித்த ஜாக்சன்,
“நான்சியை ஸ்டீவுக்கு கல்யாணம் பண்ணணுங்கிறது எங்களோட ஆசை, அதுக்கு வீட்டுல மூத்தவங்க நீங்க பர்மிஷன் குடுக்கணும்.” என்றார் எல்லாவை பார்த்து. அந்த முதிர்ந்த பெண்மணிக்கு என்னப் பேசுவதென்றே தெரியவில்லை. மகனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தார்.
‘என் முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன், எனக்கு என் குடும்ப கவுரவம் முக்கியம்.’ என்பது போல விறைப்பாக இருந்தது தாமஸின் முகம்.
“இதுல நம்ம முடிவு என்னங்கிறதை விட பசங்க என்ன நிறைக்கிறாங்க எங்கிறது முக்கியமில்லையா ஜாக்சன்?” பாட்டி மெதுவாகத் தன்னைக் குறி பார்த்த விழிகளைப் பேத்தியின் புறம் திருப்பினார்.
“கண்டிப்பா ஆன்ட்டி, ஸ்டீவுக்கு இதுல மனப்பூர்வமான சம்மதம்.” சட்டென்று பதில் சொன்னார் ஜாக்சன்.
“எம் பொண்ணும் என்னோட பேச்சுக்கு மறுவார்த்தைப் பேச மாட்டா.” யாரும் எதுவும் கேளாமலேயே பதில் சொன்னார் தாமஸ். நான்சி விக்கித்துப் போனாள். என்ன மாதிரியான வார்த்தை இது? எப்போதிருந்து இப்படியொரு உத்தரவாதத்தைத் தன் தந்தைக்குக் கொடுத்தது பெண்?! நான்சி தரப்பினர் பேச்சின்றி அமைதியாக அமர்ந்திருக்க நிலைமையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் ஜாக்சன்.
“அப்புறமென்ன தாமஸ், எல்லாத்தையும் பேசி முடிச்சிடலாமே.” ஜாக்சனின் உற்சாகக் குரல் அந்த இடத்தையே நிரப்பியது. ஸ்டீவின் முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி. நிலைமைத் தன் கையை மீறிப் போய்க் கொண்டிருப்பதை ஒருவித பயத்தோடு உணர்ந்தாள் நான்சி.
சட்டென்று வாசலில் ஒரு கறுப்பு நிற ஜாக்குவார் கிறீச்சென்ற ஒலியோடு வந்து நின்றது. அப்போது அங்கிருந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு அந்த வாகனம் வந்து நின்ற வேகத்தில் அனைவரும் திடுக்கிட்டுப் போனார்கள்.
“தாமஸ், யாரது?!” ஜாக்சன் தன் நண்பனை ஆச்சரியத்தோடு கேட்டுக் கொண்டிருக்கும் போதே காலடி ஓசை கேட்டது. தாமஸ் சட்டென்று எழுந்து விட்டார். பேச்சுவார்த்தை முடியும்வரை இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று நினைத்ததால் யாரையும் அவர் அழைத்திருக்கவுமில்லை. எதுவோ சரியில்லை என்று தோன்ற வாசல் கதவைத் திறந்தார் தாமஸ். தாமஸ் மாத்திரமல்ல, யாருமே எதிர்பாராதது போல புயலென உள்ளே நுழைந்தான் ஜேசன்!
எதிர்பாராத நிகழ்வுகள் அதன் பிறகு சடசடவென்று நிறைவேறியது. ஜேசனை தடுத்து நிறுத்திய தாமஸை ஒரு பார்வையால் வெறித்த இளையவன் அவரை மீறிக்கொண்டு உள்ளே நுழைய முயற்சித்தான். ஆனால் அதற்கு தாமஸ் இடம் கொடுக்காமல் போகவே ஜேசனின் வலது கை தாமஸின் நெஞ்சில் பதிந்தது. அந்த ஒற்றைத் தொடுகைக்கு ஈடுகொடுக்க இயலாமல் தாமஸ் சற்றே பின்னோக்கி நகர்ந்தார்.
“கெட் அவுட் யங் மேன்.” தாமஸின் கொதித்த வார்த்தைகளில் உள்ளேயிருந்த அனைவரும் சட்டென்று வெளியே வந்தார்கள். ஜேசனை தடுத்து நிறுத்தும் எண்ணம் ஒன்றுமட்டுமே குறிக்கோளாக இருக்க தாமஸ் அவன் பாதையைத் தடுத்தபடி மீண்டும் வந்து நின்றார்.
“நான் நான்சியை பார்க்கணும்.” தனக்கு மீண்டும் மீண்டும் அனுமதி மறுக்கப்பட கடினப்பட்ட குரலில் உள்ளே பார்த்தபடி கூறினான் ஜேசன். அவன் பார்வை தாமஸை நோக்கவேயில்லை.
“எம் பொண்ணைப் பார்க்க இங்க யாரும் வரத்தேவையில்லை.” ஆணித்தரமாக வந்தது தாமஸின் குரல்.
“அதை நான்சி சொல்லட்டும்.”
“இதுல நான்சி சொல்ல எதுவுமேயில்லை, நான் சொல்றேன், முதல்ல நீ வெளியே போ.” கொஞ்சம் காட்டமாக வந்த அந்தப் பதில் இளையவனைக் கோபப்படுத்தியது.
“இங்க உங்களுக்கும் எனக்கும் எந்தப் பேச்சுவார்த்தையும் தேவையில்லை, நான் நான்சியை இப்பவே பார்க்கணும்.” அதற்கு மேல் தாமஸை பொருட்படுத்தாத ஜேசன் உள்நோக்கிக் குரல் கொடுத்தான்.
“நான்சி… நான்சி வெளியே வா.” ஜேசனின் குரலில் நான்சி சட்டென்று வேகமாக வெளியே வர தாமஸ் தன்னிலை மறந்திருந்தார். தன்னை மீறி இதுவரை அந்த வீட்டில் எதுவுமே நடந்ததில்லை என்று இறுமார்ந்திருந்தவருக்கு நடக்கும் நிகழ்வுகள் தலையில் தணலைக் கொட்டியது போலிருந்தது.
“ஜாக்சன், போலீஸை கூப்பிடு.” சட்டென்று ஒரு காட்டமான ஒரு ஆணையை தாமஸ் பிறப்பிக்க நான்சி நிலைகுலைந்து போனாள். தற்போது போலீஸ் இங்கு வந்தால் ஜேசனின் நிலை மிகவும் மோசமாக இருக்கும் என்று உணர்ந்து கொண்ட பெண் அவசர அவசரமாக ஜேசனிடம் ஓடியது.
“ஜே… ப்ளீஸ், நீங்க இங்கயிருந்து போயிடுங்க.”
“இல்லை நான்சி, நீயும் எங்கூட வந்திடு, இங்க நடக்கிற எதுவும் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா?”
“ஜே, ப்ளீஸ்… நான் சொல்றதைக் கேளுங்க, இங்கயிருந்து அவசரமாக் கிளம்புங்க.”
“நோ!” ஒற்றை வார்த்தையால் பெண்ணை மறுத்த இளையவன் அவள் கையைப் பிடித்துத் தன்னை நோக்கி இழுத்தான்.
“ஸ்டீவ், கால் த போலீஸ்.” மீண்டும் தாமஸ் சத்தம் போட்டார்.
“ஜே, போயிடுங்க ஜே, இது தப்பு, நீங்க சீக்கிரமா இங்கயிருந்து போயிடுங்க.” தன் கரத்தை அவன் கரத்திலிருந்து விடுவித்துக் கொள்ளப் பிரயத்தனப்பட்டுக் கொண்டு அவனிடம் கெஞ்சினாள் நான்சி.
“இல்லை நான்சி, நீ எங்கூட வந்திடு, நீயில்லாம நான் இந்த இடத்தை விட்டுப் போகமாட்டேன்.” மீண்டும் அவளை வலுக்கட்டாயமாக இழுத்தான் ஜேசன்.
“சொன்னாக் கேளுங்க ஜே, என்னால இப்போ உங்கக்கூட வர முடியாது, ப்ளீஸ்… நிலைமையைப் புரிஞ்சுக்கோங்க.”
“எனக்கு எதுவும் புரிய வேணாம், நீ எங்கூட வந்தா மட்டும் போதும்.” இவர்கள் இருவரின் வாக்குவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர தாமஸ் நடுவே புகுந்தார். தன் மகள் அவனோடு போக மாட்டாள் என்பது உறுதிப்பட்டுவிட அவருக்கு உற்சாகம் வந்திருந்தது. இப்போது ஜாக்சன், ஸ்டீவ் இருவரும் தாமஸின் உதவிக்கு வந்திருந்தார்கள்.
ஜேசனின் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகிக் கொண்டிருக்க நான்சி உரத்த குரலில் வெளியே நின்றிருந்த அவனின் பாடிகார்ட்டை அழைத்தாள். ஜேசனை சந்திக்கப் போகும் போதெல்லாம் அவர்களை இவள் பார்த்திருந்ததால் நல்ல பரிட்சயம் இருந்தது. இருவர் பாய்ந்து உள்ளே வர நான்சி அவர்களிடம் மன்றாடினாள்.
“ப்ளீஸ்… ஜேசனை இப்பவே இங்கயிருந்து கூட்டிட்டுப் போயிடுங்க.” அந்த இளம்பெண்ணின் ஓலத்தில் மெய் பாதுகாவலர்கள் அப்போதைய நிலையைச் சட்டென்று புரிந்து கொண்டார்கள். ஜேசனை அவர்கள் இருவரும் கட்டாயப்படுத்தி வெளியே வாகனத்திற்குக் கொண்டு வந்திருந்தார்கள்.
நான்சி பதினெட்டு வயது நிரம்ப இன்னும் ஒரு மாதகாலம் இருந்த மைனர் பெண் என்பதை ஜேசன் முழுதாக மறந்து போயிருந்தான்!