GAANAM05

கானம் 05

அறை முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது. எப்போதும் போல நான்சி அந்த ஜன்னலோரத்தில் நிலவைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். இந்த இரண்டு வார காலத்தில் அவள் வாழ்க்கை குரங்கின் கையில் சிக்கிய பூமாலையைப் போல ஆகியிருந்தது. அவள் அறையிலிருந்து வெளியே வர நான்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மகளின் மனதை மாற்றி அவள் வாழ்க்கையைச் செப்பனிட்டு விடும் குறிக்கோளில் தாமஸ் மிகவும் தீவிரமாக இருந்தார்.
வீட்டிலிருந்த பெண்கள் அனைவரையும் மிகவும் கவனமாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் வீட்டின் தலைவன். அதற்கு ஜாக்சனும் ஸ்டீவும் வேறு உறுதுணையாக இருந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை பெண்களை எப்போதும் நம்பிவிட முடியாது. நான்சியின் காதலுக்கு எந்த நேரமும் அவர்கள் துணைபோக வாய்ப்பிருந்ததால் வீட்டுப் பெண்கள் மீது தாமஸ் சதா ஒரு கண்ணை வைத்தபடியே இருந்தார்.
 
பாட்டிக்குத் தன் பேத்தியைக் கண்கொண்டு பார்க்க இயலவில்லை. ஊன், உறக்கம் இன்றி நான்சி உருக்குலைந்து போயிருந்தாள். மேரிக்கும் மகளின் நிலையைப் பார்த்த போது மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் இதுவரை அவர் கணவரை எதிர்த்து எதுவும் செய்தறியாதவர் என்பதால் மகளின் வேதனையை ஊமையாய் அழுதபடி பார்த்திருந்தார்.
 
பிரச்சனை என்று வந்த பிற்பாடு ஜேசனும் இளையவளைத் தொடர்பு கொள்ளாததால் நான்சிக்கும் ஜேசனுக்குமான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்தது. ரூமை விட்டு வெளியேற முடியாததால் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கூட நான்சிக்கு தெரியவில்லை. ஆனால் அடிக்கடி தங்கள் வீட்டுக்கு வரும் ஜாக்சனும் ஸ்டீவும் பேசும் பேச்சுக்கள் அவ்வளவு நல்லதாக எதுவும் நடக்கவில்லை என்று கட்டியங்கூறியது. வீட்டிலிருந்த தொலைத்தொடர்பு சாதனங்கள் அனைத்தும் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தன. இதுவரை அந்த ஊரில் சாதாரண ஒரு பண்ணை முதலாளியாக இருந்த தாமஸை இப்போது போவோர் வருவோர் எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். அதில் அவருக்கு வருத்தம் நிறையவே இருந்தாலும் மகளின் வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார்.
 
அன்று முழுவதும் தாமஸின் குரல் அதீத உற்சாகத்தோடு ஒலித்த வண்ணமே இருந்தது. முதலில் வீட்டுப் பெண்களுக்கு நடந்தது என்னவென்று புரியவில்லை. பிற்பாடு புரிந்த போது மிகவும் வேதனைப்பட்டார்கள். மேரி தன் மாமியாரை வருத்தத்தோடு பார்த்தபோது அந்த முதியவரின் கண்களும் கலங்கிப் போயிருந்தது.
 
“தாமஸ் இந்த அளவுக்கு இறங்குவார் ன்னு நான் எதிர்பார்க்கலை.” வருத்தத்தோடு வந்தது மேரியின் குரல். 
 
“சின்னப் பையன், அவனோட வாழ்க்கையையே சீரழிச்சுட்டாரு உங்க மகன்.” மருமகளின் வார்த்தைகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார் எல்லா. நெஞ்சு ரணப்பட்டுக் கிடந்தது. எவ்வளவு பெரிய அநியாயம் நடந்திருக்கிறது!
 
“நான்சி அமைதியா இருக்கிறதை தாமஸ் தப்புக்கணக்குப் போட்டுட்டாருன்னு எனக்குத் தோணுது.” அத்தனைச் சீக்கிரத்தில் அந்தத் தாய் மனது அமைதி அடையவில்லைப் போலும். மீண்டும் மீண்டும் தனது கணவனைக் குற்றவாளி ஆக்கியது.
 
“ம்… கரெக்ட்.” இப்போது சட்டென்று பதில் சொன்னார் எல்லா.
 
“தன்னோட பொண்ணு தான் சொல்றதுக்கு எல்லாம் தலையை ஆட்டுவான்னு தாமஸ் நினைக்கிறான், அது நடக்கப்போறதில்லை மேரி.”
 
“ம்…”
 
“எந்த வயசைக் காரணமாக் காட்டி அந்தப் பையனை தாமஸ் நாசம் பண்ணினானோ அதே வயசை வெச்சு நான்சியும் இனி அவளோட சுயரூபத்தைக் காட்டுவா.” பார்வை எங்கோ வெறிக்க வரவிருக்கும் எதிர்காலத்தைத் துல்லியமாகக் கணித்தார் பாட்டி.
 
“…..”
 
“இப்போ எப்பிடி எதுவும் பேசாம நான் அமைதியா இருக்கனோ அதேமாதிரி‌ அப்பவும் நான் அமைதியாத்தான் இருப்பேன்.” பெரியவரின் பேச்சை ஆமோதிப்பது போல மேரியின் தலையும் மேலும் கீழுமாக ஆடியது. அதேவேளை தன் சகோதரியின் அறைக்குள் உணவுத் தட்டோடு நுழைந்தாள் அமீலியா. நலிந்த தோற்றத்தோடு நின்றிருந்த அக்காவைப் பார்க்க அவளுக்கு அவ்வளவு வலித்தது.
 
“நான்சி…” என்றாள் மெதுவாக.
 
“….”
 
“வந்து சாப்பிடு.”
 
“பசிக்கலை அமி.”
 
“பரவாயில்லை, நான் கொண்டு வந்ததுக்காகவாவது கொஞ்சம் சாப்பிடு.”
 
“ம்ஹூம்… வேணாம்.”
 
“அடம்புடிக்காத நான்சி.”
 
“அமி… வெளியே என்ன நடக்குது?” பயந்த குரலில் கேட்டது பெண்.
 
“அந்த வெளங்காத பய ஸ்டீவ் இருக்கானில்லை.”
 
“ம்… அவனுக்கென்ன?”
 
“ஜேசன் இங்க வந்தப்போ நடந்தது எல்லாத்தையும் அவன் அவனோட ஃபோன்ல ரெக்கார்ட் பண்ணி இருக்கான்.” வெறுப்பின் உச்சக்கட்டத்தில் முகம் சுளித்தாள் பெண்.
 
“ஓ…”
 
“அதை வெச்சுக்கிட்டுத்தான் டாடி இந்த ஆட்டம் போடுறாங்க.”
 
“ம்… ஜே இப்போ எங்க?”
 
“அரெஸ்ட் பண்ணிட்டதாச் சொல்லுறாங்க.”
 
“…..” நான்சி இப்போது வார்த்தைகளைத் தொலைத்துவிட்டுப் பதறிய படி நின்றிருந்தாள். இப்படி ஏதாவது நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தானே அவள் அவ்வளவு அமைதியாக இருந்தாள். வீட்டில் நடக்கும் எதையும் அவனிடம் சொல்லாமல் அவள் மறைத்ததும் இதற்காகத்தானே. ஜேசனின் பதட்டம், அவசர புத்தி எல்லாமும் அவள் அறிந்ததுதானே. எவ்வளவு கவனமாக நடந்த போதும் இறுதியில் ஒன்றுமில்லை என்று ஆகிப்போனதே!
 
“நான்சி… நான் சொல்லுறதைக் கேளு, எது நடந்தாலும் நீ இப்போதைக்குப் பொறுமையா இரு, ஜேசனுக்கு இன்னும் எவ்வளவோ வயசிருக்கு, எல்லாமே முடிஞ்சு போன மாதிரி நீ உடைஞ்சு போயிடாதே.” நான்சியின் முகத்தையே இவ்வளவு நேரமும் பார்த்திருந்த அமீலியா பதட்டத்தோடு பேச ஆரம்பித்தாள்.
 
“…..”
 
“முதல்ல இப்பிடிச் சாப்பிடாமப் பட்டினி கிடக்காதே, என்ன வந்தாலும் தாங்கிறதுக்கு உன்னோட உடம்புல தெம்பு வேணும், முதல்ல அதைப் புரிஞ்சுக்கோ.”
 
“….”
 
“விஷயம் இதோட முடியப் போறதில்லை, ஜேசனோட சாப்டரை முடிச்சுட்டதா நினைக்கிற டாடி இனி ஸ்டீவ் எங்கிற சாப்டரை ஆரம்பிப்பாரு, நீ எல்லாத்துக்கும் உன்னைத் தயார் பண்ணிக்கோ நான்சி, நிதானமா சிந்திச்சு உன்னோட முடிவுகளை வகுத்துக்கோ, யாருக்காகவும் எதுக்காகவும் உன்னோட ஆசைகளை நீ விட்டுக் குடுக்காதே, டாடி பண்ணுறது மகா பாவம், என்னால எதையும் பொறுத்துக்க முடியலை நான்சி.” படபடவென கண்களில் நீர் திரளப் பேசிய இளையவளைத் தீர்க்கமாகப் பார்த்தாள் நான்சி. 
 
“டாடி அப்பிடி எதுவும் பேசினாங்களா அமி?”
 
“பேச்சு இப்போ அப்பிடித்தான் போகுது நான்சி, அந்த ரெண்டு வேலையத்தவனுங்களும் இங்கேயே கிடந்து உருளும் போதே உனக்கு எதுக்குன்னுப் புரியலையா?”
 
“பாட்டியும் அம்மாவும் எதுவுமேப் பேசலையா?”
 
“யாரு அவங்களைப் பேச விட்டா? எப்பவும் போல டாடி மட்டுந்தான் பேசுறாங்க.”
 
“…..”
 
“நான்சி, இன்னும் ரெண்டு வாரத்துல உன்னோட பர்த்டே வருது, உனக்கு எப்போ பதினெட்டு வயசு ஆகுமுன்னு இங்கக் காத்துக்கிட்டு இருக்காங்க, நீ எதுக்கும் வளைஞ்சு குடுக்காத, நிமிர்ந்து நில்லு நான்சி.” தனது வீட்டில் நடக்கும் அக்கிரமத்தைக் காணப் பொறுக்காமல் அந்தச் சிறுபெண் கண்ணீர் வடித்தது. நான்சி தன் தங்கையை அணைத்துக் கொண்டாள். தன் தந்தையைத் தவிர அந்த வீட்டில் இருக்கும் அத்தனைப் பேரும் ஜேசனுக்காக வருந்துவது புரிந்தது. ஆழ மூச்சுகளை இழுத்துவிட்டு முதலில் தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டாள். 
 
ஜேசனுக்கு இனி அவளால் செய்ய ஏதுமில்லை. எல்லாம் கைமீறிப் போய்விட்டது. அதைவிட இப்போது அவள் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. இப்போது அவளை அவள் காத்துக்கொள்ள வேண்டும். ஜேசனுக்கு அநியாயம் நினைத்த இவர்களையெல்லாம் ஒரு கை பார்க்க அவள் திடமான உடலோடும் மனதோடும் இருக்க வேண்டும். நான்சி ஒரு முடிவுக்கு வந்துவிட்டவள் போல தங்கை கொண்டு வந்திருந்த உணவை உண்ண ஆரம்பித்தாள்.
 
***
அன்றைக்கு வீடு கொஞ்சம் கலகலப்பாக இருந்தது. காரணம் நான்சிக்கு அன்று பிறந்தநாள். இந்த ஒருமாத காலமும் யாரோடும் பெரிதாக எந்தப் பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ளாத நான்சி அன்று காலையிலேயே குளித்து முடித்துவிட்டு ரூமைவிட்டு வெளியே வந்தாள். இந்த இடைப்பட்ட காலம் பொய்யோ எனும் வகையில் அவள் முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது. பாட்டி பார்த்துப் பார்த்துத் தைத்து வைத்திருந்த புது ஆடையை எந்த மறுப்பும் சொல்லாமல் உடுத்திக் கொண்டாள். அம்மா ஆசையாகச் செய்து வைத்திருந்த கேக்கையும் ருசி பார்த்தாள். 
 
சரியாக மதிய உணவு நெருங்கும் நேரம் ஜாக்சனும் ஸ்டீவும் வந்துவிட்டார்கள். அவர்கள் இருவரையும் பார்த்த மாத்திரத்தில் பெண்களின் முகங்கள் பொலிவிழந்து போயின. ஆனால் தாமஸ் வந்தவர்களை விழுந்து விழுந்து வரவேற்றார்.
 
“ஹலோ ஜாக்சன், ஹலோ ஸ்டீவ்.” இருவரையும் டைனிங் டேபிள் வரை அழைத்து வந்தவர் அவர்களை அங்கே உட்கார வைத்தார். வீட்டுப் பெண்களையும் அழைத்து தாமஸ் அங்கே உட்கார வைக்க யாரும் மறுப்புச் சொல்லாமல் வந்து அமர்ந்து கொண்டார்கள்.
 
“ஹேப்பி பர்த்டே நான்சி.” அப்பாவும் மகனும் பெண்ணுக்கு வாழ்த்துச் சொல்ல நன்றி சொன்னது பெண். ஸ்டீவ் தன் கையிலிருந்த எதையோ நான்சியிடம் நீட்ட மறுப்புச் சொல்லாமல் வாங்கியவள் அதை மேசை மேல் வைத்துவிட்டாள். 
 
“அப்புறம் தாமஸ்.” ஜாக்சன் அழகாகப் பேச்சை ஆரம்பித்தார். 
 
“இன்னைக்கு நான்சிக்கு பதினெட்டு வயசு, இனிமேல் நம்ம பசங்கக் கல்யாணத்தை நடத்த எந்தத் தயக்கமும் தேவையில்லைன்னு நான் நினைக்கிறேன்.”
 
“ஆமா ஜாக்சன், அன்னைக்கு அதைப்பத்தி நிம்மதியா நம்மால பேச முடியலை, அதுக்குள்ள தேவையில்லாத விருந்தாளிங்க வந்து எல்லாமே தலைகீழா ஆகிப்போச்சு.” தந்தையின் பேச்சில் நான்சியின் முகம் ஒரு நொடி இறுகியது. 
 
“அதனாலென்ன தாமஸ், நடந்தது எல்லாமே நல்லதுக்குன்னு நினைச்சுக்குவோம், இனி நடக்க இருக்கிறதைப் பார்ப்போம்.” 
 
“அங்கிள்.” பெரியவர்கள் இருவரும் பேசியபடி இருக்க ஸ்டீவ் சட்டென்று அழைத்தான்.
 
“என்ன ஸ்டீவ்?”
 
“என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் நான்சியை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்னு சொல்லியிருக்கேன், நீங்க பர்மிஷன் குடுத்தா சின்னதா ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணலாம் ன்னு இருக்கேன்.” 
 
“ஓ ஷ்யூர் ஸ்டீவ்.” தாமஸ் ஒரு முறுவலோடு அனுமதி வழங்கினார்.
 
“என்னை எதுக்காக உங்க ஃப்ரெண்ட்ஸுக்கு அறிமுகப்படுத்தப் போறீங்க ஸ்டீவ்?” முகத்தில் அழகான புன்னகை மின்ன நான்சி கேட்டபோது அந்த டைனிங் டேபிளில் அசாத்திய அமைதி நிலவியது. அமீலியா வந்த புன்னகையை வாய்க்குள் அடக்கிக் கொண்டாள்.
 
“நான்சி, நீ என்ன சொல்றே?!” ஸ்டீவ் இதை எதிர்பார்க்கவில்லை. திகைத்துப் போனான்.
 
“இல்லை… எனக்குப் புரியலை, எதுக்காக இப்போ என்னை உங்க ஃப்ரெண்ட்ஸுக்கு இன்ட்ரடியூஸ் பண்ணப் போறீங்க? உங்களுக்கும் எனக்கும் அப்பிடியென்ன சம்பந்தம்?”
 
“நான்சி!” தாமஸின் குரல் இப்போது அதட்டலாக மகளை நோக்கி வந்தது.
 
“என்ன டாடி? ஸ்டீவ்தான் அறிவில்லாம ஏதேதோ பேசுறார்னா நீங்களும் அதுக்குச் சரின்னு சொல்றீங்க? வயசுப் பொண்ணுங்க இப்பிடியெல்லாம் தனியாத் திரிஞ்சாக் குடும்ப மானம் என்னத்துக்கு ஆகுறதுன்னு நீங்கதானே அடிக்கடி சொல்லுவீங்க? இப்போ கண்டவங்களோடயும் வெளியே போக எனக்கு பர்மிஷன் குடுக்குறீங்க?” நான்சி எதுவும் அறியாத சின்னப்பெண் போல தன் தந்தையிடம் பேசினாள்.
 
“ஸ்டீவ் கண்டவங்களும் இல்லை, உன்னைக் கல்யாணம் செஞ்சுக்கப் போறவர்.”
 
“கல்யாணமா? யாருக்கு? எனக்கா?!”
 
“ஆமா.” உறுதியாகச் சொன்னார் தாமஸ்.
 
“நான் இன்னும் என்னோட படிப்பைக் கூட முடிக்கலை டாடி, நான் எப்பிடிக் கல்யாணம் பண்ணிக்கிறது?”
 
“அதெல்லாம் ஒரு ப்ராப்ளமும் இல்லை நான்சி, கல்யாணத்துக்கு அப்புறமா எங்க வீட்டுல வந்தும் படிப்பை நீ கன்ட்டினியூ பண்ணலாம்.” ஜாக்சன் அவசரமாக இப்போது பதில் சொன்னார்.
 
“அது எதுக்கு? உங்க வீட்டுக்கு வந்து நான் எதுக்குப் படிக்கணும்? ஏன்? எங்க வீட்டுல இருந்து நான் படிக்க இடமில்லையா என்ன?”
 
“நான்சி!” மீண்டும் தாமஸ் அதட்டினார்.
 
“கல்யாணம் பண்ண முதல்ல எனக்கு இந்த ஸ்டீவை புடிக்கணும் டாடி.” தன் தந்தையின் கண்களைத் தீர்க்கமாகப் பார்த்துச் சொன்னது பெண்.
 
“உன்னோட அபிப்பிராயத்தை இங்க யாரும் கேட்கலை.”
 
“நீங்கக் கேட்கலைன்னா எனக்கென்ன? சர்ச் ல ஃபாதர் கேட்பாரு, உனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதமான்னு, இங்க சொல்ல முடியாததை நான் அங்க சொல்லிக்கிறேன்.”
 
“நான்சி!” ஆத்திரத்தின் உச்சத்தில் அமர்ந்திருந்த தாமஸ் நாற்காலியை உதறிக்கொண்டு எழுந்தார்.
 
“இன்னைக்கு என்னோட பர்த்டே டாடி, நான் இன்னும் மைனர் கிடையாது, எனக்கு என்னப் புடிக்குதோ அதைப் பண்ணுற முழு உரிமையும் எனக்கு இனி இருக்கு, அதேமாதிரி எனக்குப் புடிக்காத எதையும் தடுத்து நிறுத்தவும் இனி என்னால முடியும், வயசுப் பொண்ணுங்க இருக்கிற வீட்டுல இனி இப்பிடிப் பொறுப்பில்லாம பசங்களைக் கூட்டிட்டு வராதீங்க, எக்ஸ்கியூஸ் மீ.” நாப்கினால் வாயை நாசூக்காகத் துடைத்த பெண் தனது அறைக்குள் போய்விட்டது. டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த அனைவரும் பிரமைப் பிடித்தவர்கள் போல உட்கார்ந்திருந்தார்கள். 
 
அறைக்குள் போன பெண் தனது சிறிய ஹான்ட் பேக்கை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு வெளியே வந்தது. நான்சியின் சமூகத்தில் பதினெட்டாவது பிறந்தநாள் என்பது கொஞ்சம் விசேஷமான கொண்டாட்டம் என்பதால் பாட்டி சில ஆயத்தங்கள் செய்து வைத்திருந்தார்.
 
“கிரானி, நான் சர்ச்சுக்கு போய்ட்டு வர்றேன்.” டைனிங் டேபிளில் சிலெயென அமர்ந்திருந்தவர்களை கடுகளவும் கவனத்தில் கொள்ளாது விடுவிடுவென வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள் பெண். பாட்டியின் தலை மாத்திரம் பேத்திக்கு அனுமதி கொடுப்பது போல லேசாக அசைந்தது. மறந்தும் யாரும் எதுவும் பேசவில்லை. தாமஸ் இறுகினாற் போல அமர்ந்திருந்தார். 
 
பொடிநடையாக சர்ச்சுக்கு வந்திருந்தாள் நான்சி. அவர்கள் வீட்டிலிருந்து சர்ச் அவ்வளவு தூரமில்லை. தன்னை வேடிக்கைப் பார்த்த ஓரிரு கண்களை அவள் கருத்தில் கொள்ளவேயில்லை. அமைதியாக வந்து பெஞ்ச்சில் முழங்காலிட்டு அமர்ந்து கொண்டாள். எதிரே அன்பை மட்டுமே போதித்த கர்த்தர் அழகாகச் சிரித்தபடி நின்றிருந்தார். 
 
“நான்சி.” அந்தக் குரலில் திரும்பினாள் பெண். ஃபாதர் நின்றிருந்தார்.
 
“ஹேப்பி பர்த்டே மை சைல்ட்.” 
 
“தேன்க் யூ ஃபாதர்.” பெண் புன்னகைத்தது.
 
“பாட்டி உங்கப் பண்ணைல விளைஞ்ச நிறையப் பொருட்கள் அனுப்பி இருந்தாங்க, அதை இங்க இருக்கிற எல்லா முதியோர் இல்லத்துக்கும் அனுப்பி வெச்சுட்டேன்.” 
 
“சரி ஃபாதர்.” பெண்ணின் முகத்தில் சிரிப்பிருந்தாலும் அதன் பின்னால் மறைந்திருக்கும் வேதனையின் அளவு அந்தப் பாதிரியாருக்கு புரியாமல் இல்லை. தாமஸின் குடும்பத்தை நெடுநாட்களாக அவருக்குத் தெரியும். இந்த நான்சியை பிறந்தது முதல் அவர் அறிவார். பணிவான, பாசம் மிக்க குழந்தை. 
 
“மனசுல என்ன குழப்பம் நான்சி?” ஃபாதர் கேட்டதுதான் தாமதம், பெண்ணின் கண்கள் குளமானது.
 
“அழக்கூடாது நான்சி.”
 
“அன்பு செலுத்துறது தப்பா ஃபாதர்?”
 
“நோ மை சைல்ட், அப்பிடி உங்கிட்ட யாரு சொன்னா?”
 
“ஜேசனை உங்களுக்குச் சின்ன வயசுலேர்ந்து தெரியும், ஜே கெட்டவரா ஃபாதர்?” கண்ணீர் குரலில் பெண் கேட்டபோது ஃபாதர் அமைதியாக இருந்தார். ஒரு காலகட்டம் வரை ஜேசன் தன் குடும்பத்தோடு இதே ஊரில் வாழ்ந்தவன்தானே. ராபர்ட்டின் குடும்பத்தை ஃபாதர் நன்கு அறிவார்.
 
“எதுக்கு ஃபாதர் ஜேசனுக்கு இவ்வளவு பெரிய தண்டனை? அப்பிடி என்னத் தவறை அந்த உயிர் பண்ணிட்டுது? எம்மேல அளவு கடந்த பாசம் வெச்சது அவ்வளவு பெரிய குத்தமா?” இளையவளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் அமைதியாக இருந்தார் ஃபாதர். 
 
“இது என்ன மாதிரியான ரேஸிஸ்ம் ஃபாதர்? ஸ்டீவ் நான்சி மேல ஆசைப்பட்டா அது தப்பில்லை, அதே ஆசையை ஜேசன் வெச்சுட்டா அது தப்பா? ஏன்? மிஸ்டர் ராபர்ட்டோட தோல் கொஞ்சம் கறுப்பா இருக்கே, அதனாலயா ஃபாதர்?” 
 
“நான்சி, நீ கொஞ்சம் அமைதியா இரும்மா.”
 
“முடியலை ஃபாதர், இந்த ஒரு மாசமும் அமைதியாத்தான் இருந்தேன், இதுநாள் வரைப் பாசமா வளர்த்த அப்பாவை மீற முடியாம, குடும்ப கவுரவத்துக்கு என்னால எந்தக் களங்கமும் வந்திரக்கூடாதுன்னு நான் ரொம்பவே அமைதியாத்தான் இருந்தேன்.”
 
“நான்சி… தாமஸ் உன்னோட கல்யாணத்தை நடத்துறதுல ரொம்பத் தீவிரமா இருக்காரு.” அமைதியாகச் சொன்னார் ஃபாதர்.
 
“நடக்காது ஃபாதர், அது மட்டும் இந்த ஜென்மத்துல நடக்கவே நடக்காது, இந்த நான்சிக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது என்னோட ஜே கூடத்தான், வேற யார் கூடவும் இல்லை.”
 
“இந்த உறுதி எத்தனை நாளைக்கு நீடிக்கும் நான்சி?”
 
“வீட்டுல அத்தனைப் பேர் முன்னாடியும் இப்பதான் சொல்லிட்டு வந்திருக்கேன், அவங்க ஆசைப்பட்டாக் கல்யாணத்தை நடத்தட்டும், ஆனா நான் சபையில அதைப் பகிரங்கமா மறுப்பேன்.”
 
“ஓ…” ஃபாதர் இப்போது திகைத்துப் போனார். இப்படியொரு பதிலை அவர் பெண்ணிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. 
 
“பெத்தவங்களோட மனசை நோகடிக்கிறதுக்காக அந்த ஆண்டவர்கிட்ட நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன், ஆனா ஜேசனுக்கு நடந்திருக்கிற அநியாயத்துக்கு நான் எங்கப் போய் பாவமன்னிப்புத் தேடுறதுன்னு எனக்குப் புரியலை ஃபாதர்.” அதற்கு மேலும் அங்கே தாமதிக்காமல் நான்சி எழுந்து வெளியே போய்விட்டாள். போகும் அந்த நல்ல உள்ளத்தை ஃபாதர் கவலையோடு பார்த்திருந்தார்.