கானம் 06
சர்ச் வண்ண மலர்களால் தேவலோகமோ என்று எண்ணும் வண்ணம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அப்சரஸ்தானோ என்று வியந்து பார்க்கும் அளவிற்கு அழகிய மங்கையர் நடைபயின்ற வண்ணம் இருந்தார்கள். எங்கும் ஒரே மகிழ்ச்சி! கனவா இல்லை நனவா என்று புரியாத ஒருவிதக் குழப்பத்தில் நான்சி மிதந்து கொண்டிருந்தாள்.
“இந்தப் பெண்ணைத் திருமணத்திற்காகக் கொடுப்பவர் யார்?” ஃபாதரின் கணீர் குரலில் அந்த இடம் சட்டென்று அமைதியானது. புன்னகைத் தவழ நான்சியைப் பார்த்தார் ஃபாதர். அவர் முகத்தைப் பார்த்த மாத்திரத்தில் பெண்ணும் மலர்ந்து சிரித்தது.
“நான் ஃபாதர்.” சபையில் அமர்ந்திருந்த தாமஸ் எழுந்து வந்தார். அமீலியா ஒரு தட்டத்தில் இரண்டு மோதிரங்களை வைத்து அதைக் கொண்டு வந்து ஃபாதரிடம் நீட்டினாள். அதை வாங்கி அப்பால் வைத்த ஃபாதர் மீண்டும் பேசினார்.
“இந்தத் திருமணத்தை மறுப்பவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் இப்போது சொல்லலாம், உங்களுக்கான முதல் சந்தர்ப்பம் இது.” சொல்லிவிட்டுச் சடங்குகளை ஆரம்பித்தார் ஃபாதர். திருமணத்தை மறுப்பதற்கு அங்கு யாருமில்லாததால் அந்த இடமே கலகலப்பாக இருந்தது. ஜேசனின் குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தனர். ராபர்ட்டும் கிரேஸும் மகிழ்ச்சி பொங்க நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்திருந்தார்கள்.
“என்ன ஜே? மோதிரம் மாத்திக்கலாமா?” ஃபாதர் குறும்பாகக் கேட்க ஜேசன் நான்சியை திரும்பிப் பார்த்தான். வெட்கம் மேலிடப் பெண் தலையைத் திருப்பிக் கொண்டது.
“இந்தத் திருமணத்தை மறுப்பவர்கள் யாராவது உண்டா? இருந்தால் அதை இந்தத் திருச்சபையிடம் தாராளமாகச் சொல்லலாம், இது இரண்டாவது சந்தர்ப்பம்.” ஃபாதர் சொல்லி முடித்த போது சர்ச் வாசலில் கட்டப்பட்டிருந்த அந்த மணி இடைவெளியின்றி அடிக்கப்பட்டது. உள்ளே இருந்த அனைவரும் திகைத்துப் போனார்கள். இந்தத் திருமணத்தைக் குலைப்பது போல யாரிப்படிச் செய்வது?! சட்டென்று அனைவரது பார்வையும் வாசலை நோக்கிப் போக ஃபாதர் விரைந்து வெளியே போனார். பெண் வீட்டினர், மாப்பிள்ளை வீட்டினர் என அனைவரும் ஃபாதரை பின் தொடர்ந்தார்கள். சர்ச் வாசலில் ஸ்டீவ் நின்றிருந்தான்.
“ஸ்டீவ்! என்ன இது?! எதுக்காக இப்பிடிப் பண்ணுறே?” தாமஸ் கோபத்தில் சத்தம் போட ஸ்டீவும் கோபத்தில் கத்தினான்.
“உங்கப் பொண்ணை எனக்குத்தானே கட்டிக் குடுக்கிறேன்னு சொன்னீங்க? இப்போ எப்பிடி உங்களால வார்த்தை மாற முடிஞ்சுது?”
“இதுக்கான விளக்கத்தை நான் ஏற்கனவே ஜாக்சன் கிட்டச் சொல்லிட்டேன், நீ இப்போ இங்க வந்து கலாட்டா பண்ணுறது நல்லாயில்லை.” தாமஸ் நயமாகப் பேச முனைந்தார்.
“நான்சி மேல ஆசை வெச்சது நான், எங்கப்பா இல்லை, நீங்க ரெண்டு பேரும் விளையாட நாந்தான் கிடைச்சேனா? இந்தக் கல்யாணத்தை முதல்ல நிறுத்துங்க.” அந்த வார்த்தையை ஸ்டீவ் சொன்னதும் ராபர்ட் அதிர்ந்து போனார். நெஞ்சைப் பிடித்தபடி அந்த மனிதர் சாய கூடி நின்ற அனைவரும் திகைத்துப் போனார்கள்.
“அப்பா!” ஜேசனின் குரலில் அந்த இடமே அதிர்ந்தது. திடுக்கிட்டு விழித்தாள் நான்சி. உடல் முழுவதும் தொப்பாக நனைந்து போயிருந்தது. அறையை இருள் சூழ்ந்திருக்க உடம்பைத் தடவிப் பார்த்தாள். முழு நீளத்திற்கு அணிந்திருந்த கல்யாண ஆடையைக் காணவில்லை. படுப்பதற்கு முன்பாக அணிந்த இரவு ஆடைதான் கையில் சிக்கியது. கண்டது கனவு என்றாலும் அதன் இனிமை இன்னும் நெஞ்சுக்குள் இருக்கச் சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள்.
எத்தனை அழகான கனவு! திரும்ப நினைக்கும்போதே இனித்தது. ஜேசன் அவளருகில் எவ்வளவு உற்சாகமாக நின்றிருந்தான். எத்தனை தேஜஸ் அந்த முகத்தில். ஆண்மைக்கு வரைவிலக்கணம் அவன்தானே! ஆனால் கனவு ஏனப்படி முடிந்து போனது?! ஜேசனின் தந்தை நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வீழ்ந்தாரே! ஆண்டவா! எதற்காக இப்படியொரு கனவு?! நிஜத்தில்தான் நிம்மதியில்லை என்று பார்த்தால் காணும் கனவு கூட இப்படி அல்லோலகல்லோலமாக முடிய வேண்டுமா? என்னமாதிரியான நியாயம் இது? கனவுகளுக்கு அர்த்தம் உண்டு என்று பாட்டி அடிக்கடி சொல்வாரே. இந்தக் கனவுக்கும் ஏதாவது அர்த்தம் உண்டா? எதனால் இப்படியொரு கனவு எனக்கு வந்தது? எதை மறைமுகமாக இந்தக் கனவு உணர்த்துகிறது? ராபர்ட் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு வீழ்ந்தாரே! அவருக்கு ஏதாவது ஆபத்து நேருமா? நேரத்தைப் பார்த்தாள் நான்சி. அதிகாலை இரண்டு மணி என்றது கடிகாரம். தூக்கம் அதற்கு மேல் வராமல் போக வாய் தானாகப் பிரார்த்தனையில் இறங்கியது.
“ஆண்டவரே! யாருக்கும் எந்தக் கெடுதலும் வராமல் நீர் காப்பாற்றும்!” உள்ளம் உருகப் பிரார்த்தித்தபடி கண்ணயர்ந்தாள் நான்சி. விடியல் வைத்திருக்கும் சோகத்தை அறியாமல்.
***
இரவு வெகுநேரம் தூங்காததால் நான்சி சற்றுத் தாமதமாகவே அடுத்தநாள் கண்விழித்தாள். இவள் விழித்ததுதான் தாமதம், அமீலியா புயல் போல இவள் அறைக்குள் புகுந்தாள்.
“நான்சி!” தங்கையின் பதட்டக் குரல் நான்சியை சட்டென்று எழுந்து உட்கார வைத்தது.
“என்னாச்சு அமீ? எதுக்கு இவ்வளவு பதட்டப்படுறே?”
“ஜேசனுக்கு ஏன் இப்பிடி மேல மேல நடக்குது? இந்த ஆண்டவருக்குக் கொஞ்சம் கூடக் கருணையே இல்லையா?”
“என்னாச்சு?!” அதற்கு மேல் நான்சிக்கு வார்த்தைகள் வரவில்லை. எதுவோ சரியில்லை என்று உணர உதடுகள் உலர்ந்து போனது.
“என்னாச்சு அமீ? ஏதாவது தப்பா நடந்து போச்சா?” கேட்கும் போதே நான்சிக்கு உடம்பு நடுங்கியது. இரவு தான் கண்ட கனவும் அத்தனை நல்லதாக இருக்கவில்லையே!
“ஜேசனோட அப்பா தவறிட்டாராம் நான்சி!” தங்கையின் வார்த்தைகளில் நான்சி அப்படியே நிலைகுலைந்து போனாள். இதற்குத்தான் அந்தக் கனவு வந்ததா? இதை என்னிடம் சொல்லத்தான் அத்தனை அழகாகக் கனவு வந்ததா?! ஆண்டவரே! உமக்கு இரக்கமே இல்லையா? இதை எப்படி ஜேசன் தாங்குவான்?! அவனை இத்தனை உயரத்திற்குக் கொண்டு வந்து நிறுத்திய தந்தை மேல் அவன் எத்தனை உயிராக இருந்தான். அவன் அருகில் இல்லாத இந்த வேளையிலா இப்படி நடக்க வேண்டும்?! இந்தச் செய்தியைக் கேட்டால் அவன் துடித்துப் போக மாட்டானா? மகனும் அருகில் இல்லாமல், கணவரையும் இழந்துவிட்டு அந்தத் தாய் அங்கு எத்தனை வேதனைப் படுகிறாரோ?! நான்சியின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்த போது அவளின் அறைக்கதவு மீண்டும் திறந்தது. இப்போது உள்ளே வந்தது பாட்டி. பாட்டியைப் பார்த்த மாத்திரத்தில் நான்சி கதறிவிட்டாள்.
“நான்சி!” பேத்தியிடமிருந்து இப்படியொரு கதறலை எதிர்பார்க்காத பாட்டியும் கதவை இறுக மூடிவிட்டு அவளருகில் வந்து அமர்ந்தார்.
“அழக்கூடாது நான்சி.”
“என்னால தாங்க முடியலை கிரானி, எனக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே, இதை ஜே எப்படித் தாங்குவார்?”
“கஷ்டத்தைக் குடுக்கிற ஆண்டவர்தான் அதைத் தாங்கிற சக்தியையும் மனுஷனுக்குக் குடுக்கிறார் நான்சி.” பாட்டியின் குரல் ஆறுதலாக வந்தது.
“அந்த ஆண்டவருக்கு இரக்கமே இல்லையா கிரானி? எதுக்காக என்னோட ஜேயை இப்பிடித் தண்டிக்கிறாரு?” பேத்தியின் குமுறலில் பாட்டி வருத்தமாகப் புன்னகைத்தார்.
“ஜேசனுக்கு அவங்க அப்பா மேல அவ்வளவு பாசம் தெரியுமா? இந்தளவுக்கு ஜே யை ஊக்கப்படுத்தினதும் அவர்தான், ஜேயோட முன்னேற்றத்துல அவரோட அப்பாக்குப் பெரிய பங்கிருக்கு கிரானி.”
“ஓ…”
“ஜே அவ்வளவையும் கதை கதையா எங்கிட்டச் சொல்லி இருக்காரு, அவங்கப்பாவை அவருக்கு அவ்வளவு புடிக்கும், அவரால இதை எப்பிடித் தாங்கிக்க முடியும் கிரானி?” பேத்தியின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் எல்லா அவள் முதுகைத் தடவிக் கொடுத்தார்.
“கஷ்டந்தான் நான்சி, சில பொழுதுகள்ல ஆண்டவரோட தீர்ப்புகளை நாம ஏத்துக்கத்தான் வேணும், நம்மோட கண்ணுக்கும் புத்திக்கும் எட்டாத எத்தனையோ நல்ல விஷயங்கள் அந்தத் தீர்ப்புல மறைஞ்சிருக்கும்.”
“என்னால இதை ஏத்துக்க முடியவேயில்லை கிரானி.”
“அமைதியா இரு நான்சி, அமைதியா இரு, ஆண்டவர் அந்தச் சின்னப் பையனை சோதிச்சுப் பார்க்கிறான், நிச்சயமா அவரோட கருணை அவனுக்கிருக்கும்.”
“கிரானி, எனக்கு ஜேசனை பார்க்கணும்.” சிறுபிள்ளைப் போல அழுதாள் நான்சி.
“ஐயையோ! அது எப்பிடி முடியும் நான்சி?!” பதறிய பாட்டி இதுவரை அமைதியாக அருகில் நின்றிருந்த அமீலியாவை பார்த்தார். நான்சி சொன்னதைக் கேட்டு அவள் முகத்திலும் சிந்தனைப் படர்ந்தது. இது சாத்தியப் படுவதற்கான வாய்ப்பே இல்லையே!
“அமைதியா இரு நான்சி, ஜெயிலுக்குப் போய் அந்தப் பையனைப் பார்க்கிறது அவ்வளவு சுலபமான காரியமில்லை, அதோட… உன்னோட பெயர் ஜேசனோட பெயரோட பலமா அடிபட்டிருக்கு, இப்போ நீ போய் ஜேசனை பார்க்கிறது மீடியாக்கு தெரிஞ்சா இன்னும் பிரச்சினை பெரிசாகும், அது அந்தப் பையனோட வாழ்க்கையை இன்னும் சிக்கலாக்கும்.”
“அட்லீஸ்ட் நான் அவங்க வீட்டுக்காவது போகணும் பாட்டி.”
“வீட்டுக்கா?! அங்க உனக்கு யாரைத் தெரியும்?!”
“யாரையும் தெரிய வேணாம் பாட்டி, எனக்கு ஜே சம்பந்தப்பட்ட ஏதாவது ஒன்னை இப்போ பார்த்தே ஆகணும், என்னால முடியலை பாட்டி.”
“சரி நான்சி, அப்பிடியே செய்றதா இருந்தாலும் நீ எப்பிடி லண்டனுக்கு போவே? அது நடக்கிற காரியமா?”
“இன்னம் ரெண்டு வாரத்துல எங்க யூனிவர்சிட்டியால லண்டனுக்கு ஒரு ட்ரிப் போறாங்க, ரெண்டு நாள் அங்கத் தங்கி இருக்கணும்.”
“ஓ…”
“அதுக்கு எப்பிடியாவது எனக்கு பர்மிஷன் வாங்கிக் குடுங்க பாட்டி, ப்ளீஸ்…” பேத்தி கெஞ்சினாள்.
“அதுசரி நான்சி, படிப்பு விஷயமா எல்லாரும் லண்டன் போகப் போறீங்கன்னா தாமஸ் தடுக்கிறதுக்கு வாய்ப்பில்லை, ஆனா அந்த ரெண்டு நாள்ல உன்னால அந்தப் பையன் வீட்டைக் கண்டுபிடிக்க முடியுமா? லண்டன்ல உனக்கு எதுவுமே தெரியாதே?!”
“அதெல்லாம் என்னோட ஃப்ரெண்ட்ஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க, நீங்க உங்கப் பையன்கிட்ட இருந்து எனக்கு பர்மிஷன் மட்டும் வாங்கிக் குடுங்க பாட்டி, மீதியை நான் பார்த்துக்கிறேன்.” மீண்டும் நான்சி அழ ஆரம்பிக்க பாட்டி கலவரமான முகத்தோடு அமீலியாவை பார்த்தார். இளையவளும் சம்மதம் என்பது போலத் தலையை ஆட்ட பெரியவரின் முகம் கவலையைக் காட்டியது.
“ரூமை விட்டு வெளியே வராதே நான்சி, உங்கப்பாக்கு எந்தச் சந்தேகமும் வராம ரெண்டு பேரும் கவனமா நடந்துக்குங்க, முக்கியமா உங்கம்மாக்கு எதுவும் தெரிய வேணாம், தாமஸ் ரெண்டு அதட்டல் போட்டா உங்கம்மா எல்லாத்தையும் உளறிடுவா, புரியுதா?”
“ம்…” இளையவர்கள் இருவரும் தலையை ஆட்ட பாட்டி எழுந்து போய்விட்டார். வயதுக்கு வந்தப் பெண்ணை எந்தத் தைரியத்தில் இப்படி அனுப்பச் சம்மதித்தோம் என்று அவருக்கே புரியவில்லை. நடப்பது எதுவுமே நிம்மதியைக் கொடுக்காததால் அந்த முதியவரின் மனது ஆண்டவனைப் பிரார்த்தித்த படியே இருந்தது.
***
இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. ஜேசனின் வீட்டைக் கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய காரியமாக நான்சிக்கு இருக்கவில்லை. நடந்தது அனைத்தும் அவளுடைய நண்பர்கள் பட்டாளத்துக்குத் தெரியும் என்பதால் அனைவரும் பெண்ணுக்கு உதவி செய்தார்கள். அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து பெண்ணைத் தனியே அனுப்புவது மாத்திரம்தான் அவர்களுக்குக் கொஞ்சம் கவலையான விஷயமாக இருந்தது. ஆனாலும் கூட்டமாகப் போனால் அனைவரது கவனத்தையும் கவரும் என்பதால் நான்சியை ஒரு டாக்சி பிடித்துத் தனியாகவே அனுப்பினார்கள்.
லண்டனில் மிகவும் பிரசித்தமான இடத்திலேயே ஜேசனின் வீடு அமைந்திருந்தது. நான்சி வீட்டு முகவரியைச் சொன்ன போது அந்த டாக்சி ட்ரைவர் பெண்ணை ஒருமுறைத் திரும்பிப் பார்த்தார். இத்தனைக்கும் ஜேசனின் வீட்டிலக்கத்தைப் பெண் சொல்லியிருக்கவில்லை. நான்கைந்து வீடுகள் தள்ளியே குறிப்பிட்டிருந்தாள்.
அந்த ஏரியாவே மிகவும் அமைதியாக இருந்தது. மிகவும் தூய்மையாக, எந்தச் சந்தடியுமின்றி அமைதியாக இருந்தது. நான்சி முகத்தில் அணிந்திருந்த மாஸ்க்கை சரிப்படுத்திக் கொண்டாள். இப்போது யார் அவளைப் பார்த்தாலும் அத்தனைச் சுலபத்தில் இனங்கண்டு கொள்ள இயலாது. ப்ளாக் டாக்சியை நிறுத்திப் பணத்தைச் செலுத்திவிட்டுப் பொடிநடையாக அந்த வீதியை ஒரு முறை நடந்து கடந்தாள். வீதியில் எந்த நடமாட்டமும் இருக்கவில்லை. ஜேசனின் வீட்டைக் கடக்கும் போது மாத்திரம் லேசாகத் திரும்பிப் பார்த்தாள். வெள்ளை யானை போல நின்றிருந்தது வீடு. வீட்டுக்கு முன்பாகச் சிறிது இடம் இருந்தது. ஆனால் வீட்டினுள் நடமாட்டம் எதுவும் தெரியவில்லை.
வீதியின் முனைவரை நடந்து சென்றவள் மீண்டும் திரும்பி வந்தாள். இப்போது நடையின் வேகத்தை வெகுவாகக் குறைத்திருந்தாள் பெண். உள்ளே சென்றுவிடலாமா என்று ஒரு கணம் அபரிமிதமான ஆசைத் தோன்றியது. ஆனாலும் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அந்த வீட்டினுள் நுழைவது?! தன்னால் அந்த வீட்டில் இதுகாறும் கோலோச்சிய இளவல் இன்று கம்பிகளுக்குப் பின்னால் எல்லாவற்றையும் இழந்துவிட்டு நிற்கின்றானே! அவளைச் செங்கம்பளம் விரித்து வரவேற்க அங்கே யாரிருக்கிறார்கள்?!
“மேடம்!” அந்தக் குரலில் சட்டென்று நின்றாள் நான்சி. இவ்வளவு நேரமும் தன் உலகத்திலேயே உழன்று கொண்டிருந்த பெண் தன்னைப் பின்தொடர்ந்து வந்தவனைக் கவனிக்கவில்லை. கலவரத்தோடு பெண் திரும்பிப் பார்த்த போது சிரித்த முகமாக லியோ நின்றிருந்தான். ஜேசனின் மெய்ப்பாதுகாவலன்.
“அப்பவே உங்களைக் கவனிச்சேன் மேடம், ஆனா நீங்களா இருக்க வாய்ப்பில்லைன்னுதான் அமைதியா இருந்தேன்.” இலகுவாக அவன் பேச்சை ஆரம்பிக்க நான்சிக்கு கண்கள் கலங்கியது. பெண்ணின் கலங்கிய விழிகளைப் பார்த்து லியோவும் ஒரு நொடி அமைதியாக நின்றிருந்தான்.
“உள்ள வாங்க மேடம்.”
“இல்லை…” நான்சிக்கு வார்த்தைகள் வர மறுத்தன.
“உங்களைப் பார்த்தா சாரோட அம்மா ரொம்பச் சந்தோஷப்படுவாங்க.”
“சந்தோஷப் படுவாங்களா?” தயங்கியபடி வந்தது நான்சியின் குரல்.
“அதிலென்ன சந்தேகம்? வாங்க மேடம்.” லியோ மீண்டும் அழைக்க நடை துவள அவனைப் பின்தொடர்ந்தாள் நான்சி. அத்தனைப் பெரிய வீடு என்று சொல்ல முடியாது. ஆனாலும் பெரிதாக இருந்தது. பெண்ணின் ஊரில் இருக்கும் ஜேசனின் பங்களாவில் கால்வாசி இருந்தது இந்த வீடு. வீட்டினுள் நுழைந்த போதே ஆளுயர ஃபோட்டோ ஒன்று மாட்டப்பட்டிருந்தது. அவனது அணியின் நீல நிற உடையில் ஒரு காலை கால்பந்துக்கு மேலே வைத்தபடி புன்னகையோடு நின்றிருந்தான் ஜேசன். அந்தப் படத்தைப் பார்த்த போது முட்டி மோதிக்கொண்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்டாள் நான்சி. பெண்ணையே பார்த்திருந்த லியோவின் முகமும் கசங்கிப் போனது.
“லியோ!” உள்ளிருந்து ஒரு குரல் கேட்க நான்சியின் உடல் விறைத்தது. பதட்டத்தோடு அவள் அருகில் நின்றிருந்தவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“யாராவது வந்திருக்காங்களா லியோ?” உள்ளிருந்து மீண்டும் குரல் வந்தது.
“யெஸ் மேடம்.” லியோ பதில் சொன்னான்.
“யாரு?”
“நீங்களே வந்து பாருங்க மேடம்.” ஒரு புன்னகையோடு லியோ சொல்ல நான்சி பதறிப் போனாள். ஜேசனின் தாய் அவளை எப்படி வரவேற்கக் கூடும்?! ஆனால் நான்சிக்கு உலகம் இன்னும் சரியாகப் பிடிபடவில்லை. தன் தந்தையைப் போலவே எல்லோரும் இருப்பார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டாள்.
ஜேசனின் குடும்பம் நான்சியின் ஊரில் இருந்தவரை இளையவளுக்கு ராபர்ட்டை நன்கு தெரியும். பாடசாலையின் எந்த நிகழ்வுக்கும் ஜேசனின் சார்பாக அவர்தான் வந்து நிற்பார். இரண்டொரு முறை ஜேசனின் தாயை அவள் பார்த்ததுண்டு. ஆனால் அப்போது இவளுமே சிறு பெண் என்பதால் ஜேசனின் தந்தையை அறிந்த அளவுக்கு இவள் நினைவடுக்குகளில் அவன் தாய் இல்லை. அதன்பிறகு ஜேசன் குடும்பம் லண்டனுக்கு வந்துவிட்டதால் அந்த வாய்ப்புப் பெண்ணுக்கு அமையவே இல்லை. இத்தனை வருடங்கள் கழித்து அந்தத் தாயை நல்லதொரு சூழ்நிலையில் சந்திக்கும் பாக்கியம் தனக்குக் கிட்டியிருக்கக் கூடாதா என்று நான்சியின் மனம் பதறியது.
“யாரு லியோ?!” தூசு படிந்த அழகோவியம் போல ஒரு உருவம் அந்த அறையில் இருந்து வெளியே வந்தது. நான்சி படபடக்கும் நெஞ்சத்தோடு வந்தவரையே பார்த்திருந்தாள். தான் சிறு வயதில் பார்த்த ஜேசனின் அம்மாவிற்கும் இவருக்கும் நிறையவே வித்தியாசம் இருந்தது. அவரல்லவே இவர்!
“நான்சி!” அந்தத் தாயின் குரல் ஆச்சரியத்தின் உச்சக்கட்டத்தில் பெண்ணை விளித்தது. இப்போது திடுக்கிட்டுப் போவது நான்சியின் முறையானது. ஜேசனின் தாய் தன்னை அடையாளம் கண்டு கொள்வார் என்று அவள் நினைத்தே பார்த்திருக்கவில்லை. அதுவும் இத்தனை இன்முகத்துடன் அந்தப் பெண்மணி தன்னை வரவேற்பார் என்று அவள் கிஞ்சித்தும் நினைத்திருக்கவில்லை.
“லியோ! இது உண்மைதானா?! வந்திருக்கிறது நம்ம நான்சிதானா?!” அந்த வார்த்தைகளில் நான்சி உடைந்து உருகிப் போனாள். வெடித்துச் சிதறிய கேவல் ஒன்றைப் பெரும் பிரயத்தனப்பட்டுப் பெண் அடக்கிக் கொண்டாள். ஆனால் லியோ இப்போது கடகடவெனச் சிரித்தான்.
“ஆமா மேடம், அவங்களேதான், உள்ள வரலாமா வேணாமான்னு யோசிச்சுக்கிட்டே நின்னாங்க, நல்ல காலம் நான் சட்டுன்னு இவங்களைக் கண்டு புடிச்சுட்டேன்.”
“எதுக்குத் தயக்கம் நான்சி?” என்னவோ வெகு நாட்கள் பழகியவர் போல கிரேஸ் பெண்ணின் கையை வந்து பிடித்துக் கொள்ள இளையவளின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. கிரேஸின் முகத்திலும் இப்போது சங்கடமான ஒரு புன்னகைத் தோன்றியது.
“எதுக்கு இப்போ இந்த அழுகை நான்சி?”
“….”
“உன்னைப் பார்த்ததுல எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? எல்லாரும் என்னை விட்டுட்டுப் போயிட்டாங்க, நான் மட்டும் தனியா இருக்கிற மாதிரி உணர்றேன், ஆனா அப்பிடியில்லைப் பார்த்தியா? உன்னைக் கொண்டு வந்து எங்கண்ணு முன்னாடி ஆண்டவர் நிறுத்தி இருக்காரு.”
“உங்களுக்கு… உங்களுக்கு…”
“சொல்லு நான்சி.”
“உங்களுக்கு எம்மேல… வருத்தமில்லையா?”
“உம்மேலயா? உம்மேல எனக்கென்ன வருத்தம்? நீ என்னப் பண்ணினே?”
“….”
“அவங்கவங்களுக்கு அவங்கவங்க நியாயம் நான்சி, யாரையும் யாரும் தப்புச் சொல்ல முடியாது, ஜேசன் பண்ணினது மட்டும் சரியா? எதுக்கு அவனுக்கு இவ்வளவு அவசரம்?”
“….”
“எதுலயுமே நிதானமில்லை, எல்லாத்துலயும் ஒரு அவசரம், எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சுக்கவே மாட்டான், ஆனா… ராபர்ட் ஏன் இப்பிடிப் பண்ணினாரு நான்சி? எதுக்கு இவ்வளவு அவசரமா என்னை விட்டுட்டுப் போயிட்டாரு?” கிரேஸின் கேள்வியில் நான்சி விக்கித்துப் போனாள்.
“எத்தனை இழப்புகளை என்னாலயும் தாங்க முடியும் நான்சி? நானும் சாதாரண மனுஷிதானே? புள்ளையும் பக்கத்துல இல்லை, புருஷனும் இப்பிடி அம்போன்னு விட்டுட்டுப் போனா நானும் என்னதான் பண்ணுறது சொல்லு?” பெரியவர் பேசப் பேச நான்சி இப்போது வெடித்து அழுதாள். அதற்கு மேலும் அவளால் எதையும் கட்டுப்படுத்த இயலவில்லை. அந்த வீட்டில் நான்சியின் அழுகுரல் வெகுநேரம் வரை ஒலித்தது.