GAANAM07

கானம் 07

எந்தத் தங்கு தடங்கலுமின்றிக் காலம் தன் ஓட்டத்தைச் செவ்வனே செய்து கொண்டிருந்தது. ஐந்து வருடங்கள் பார்த்திருக்கும் போது பறந்து போயிருந்தது. நான்சி தனது படிப்பை முடித்துவிட்டு அவர்கள் ஊரிலேயே ஒரு பாடசாலையில் ஆசிரியையாகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறாள். பதின்ம வயதுடைய மாணவர்களுக்கு ஆங்கில இலக்கியம் சொல்லிக் கொடுக்கிறாள். தனது வேலையை மிகவும் அனுபவித்துச் செய்வதால் காலம் உருண்டோடியது நான்சிக்கு விளங்கவில்லை. தனது கவலைகளை மறந்துவிட்டு மாணவரோடு மாணவராக அவளும் மாறிப் போனாள்!
 
நான்சிக்கு இப்போது வயது இருபத்து மூன்று. அன்றைக்கு நாம் பார்த்த நான்சி இன்றைக்கு இல்லை. முழுதாகப் பெண் மாறியிருந்தது. தோற்றத்தில் மட்டுமல்ல, உள்ளத்தாலும் நான்சி மிகவும் மாறிப் போயிருந்தாள். பெண் எப்போதுமே அழகுதான். ஆனால் அந்த அழகு இப்போது பலமடங்கு மெருகேறியிருந்தது. முகத்திலிருந்த சிறுபிள்ளைத்தனமும் குறும்புத்தனமும் காணாமல் போயிருந்தது. அமைதியான முகம். கஷ்டமோ நஷ்டமோ சதா அந்த முகத்தில் புன்னகை இருந்தது. ஆனால் அவளைச் சார்ந்தவர்களுக்குத் தெரியும், நான்சி எத்தனைச் சுமைகளை உள்ளுக்குள் சுமக்கிறாள் என்று. 
 
மனம் வேதனைகளைச் சுமந்து சுமந்து ரணப்பட்டுப் போய் கிடந்தது. இதற்கு மேலும் என்ன வந்துவிடப் போகிறது என்று நினைத்தாளோ என்னவோ, இப்போதெல்லாம் நான்சியை எந்த விஷயமும் அதிகம் பாதிப்பதில்லை. எது வந்தாலும் இப்போதெல்லாம் பெண் அசைந்து கொடுக்காமல் அதைக் கடக்கப் பழகியிருந்தது.
 
ஜேசனின் மீதான அவளின் அன்பு என்றைக்குத் தெரிய வந்ததோ அன்றிலிருந்து வீடு அவளுக்கு ஒரு சவாலாகவே இருந்து வந்திருக்கிறது. தாமஸின் சமூகத்தில் பதினெட்டு வயது ஆனவுடனேயே பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் என்பதால் இந்த ஐந்து வருடங்களில் நான்சியின் பாடு படு திண்டாட்டமாகவே இருந்தது.
 
இரண்டு வருடங்கள் பொறுத்துப் பார்த்துவிட்டு ஜாக்சன் தனது மகனுக்கு வேறு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துவிட்டார். அதில் தாமஸுக்கு அவ்வளவு மனவருத்தம். மகள் தனது பேச்சைக் கேட்கவில்லையே என்ற வேதனைப் போக நல்லதொரு வரன் தட்டிப் போகிறதே என்று அப்போது மிகவும் சங்கடப்பட்டார். இளைய பெண்ணுக்காவது ஸ்டீவை பார்க்கலாம் என்றால் பெரியவளை வைத்துக்கொண்டு எப்படிச் சின்னவளுக்குத் திருமணம் செய்வது?! நான்சியின் மீது தன் ஒட்டுமொத்த வெறுப்பையும் காட்டினார் தாமஸ். ஆனால் நான்சி எதையும் கண்டுகொள்ளவே இல்லை. 
 
அதன்பிறகு எத்தனையோ நல்ல நல்ல வரன்கள் வந்தபோதும் பெண் தன் தகப்பனின் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கவே இல்லை. ஒரு கட்டத்தில் தாமஸ் நான்சியை புறக்கணிக்கத் தொடங்கிவிட்டார். தனக்கு நான்சி என்றொரு பெண் பிறக்கவேயில்லை என்பது போல தாமஸ் நடக்க ஆரம்பித்த போது வீடு மிகவும் வேதனைப்பட்டது. உனக்கு நான் சளைத்தவள் இல்லை என்று பெண்ணும் பிடிவாதம் பிடித்தது. படிப்பைத் தன் விருப்பம் போல‌ முடித்தாள். அவளுக்குப் பிடித்த பாடசாலையில் வேலைக்கு விண்ணப்பித்தாள். இதோ… வேலையும் பார்க்கிறாள். எங்கேயும், எதற்கும் அவள் தாமஸை எதிர்பார்க்கவே இல்லை. அம்மாவும் பாட்டியும் கூட நான்சி விஷயத்தில் தலையிடவில்லை. அவள் பட்டக் காயத்தின் வலி அதிகம் என்பதால் எப்போதும் போல இப்போதும் அமைதியாக இருந்தார்கள்.
 
“பொண்ணையா பெத்து வெச்சிருக்கே? தன்னோட இஷ்டப்படியே எல்லாத்தையும் நடத்திக்கிறதா இருந்தா எதுக்கு இந்த வீட்டுல இருக்கணும்? எங்கேயாவது போய் தொலைய வேண்டியதுதானே?” உரிய வயதில் தனது பெண்ணுக்குத் திருமணம் ஆகவில்லையே என்ற கோபத்தில் ஒருநாள் தாமஸ் மனைவியிடம் இப்படிச் சத்தம் போட்டிருந்தார். அன்று இரவே அமீலியா தன் தமக்கையிடம் அன்று நடந்ததைச் சொல்லிவிடவும் அடுத்தநாளே நான்சி தனது துணிமணிகளை ஆயத்தம் செய்துவிட்டாள். வீடே அன்று பதறிப்போனது.
 
பாட்டி கண்ணீர் விடவே ஆரம்பித்து விட்டார். கல்யாணம் ஆகாத வயதுக்கு வந்தப் பெண் வீட்டை விட்டுப் போவதா?! பாட்டியின் அழுகையைப் பார்த்த பின்புதான் நான்சி கொஞ்சம் இறங்கி வந்தாள். தாமஸ் இந்த அளவுக்குத் தன் பெண் போவாள் என்று எதிர்பார்க்காததால் அமைதியாகிவிட்டார்.
 
“கிரானி, உங்க மகன்கிட்டச் சொல்லி வைங்க, இனி என்னோட விஷயத்துல அவரைத் தலையிட வேணாம்னு சொல்லுங்க, எனக்கு இன்னும் பதினேழு வயசும் பதினொரு மாசமும் இல்லை, இப்போ நானும் சம்பாதிக்கிறேன், என்னோட கால்ல என்னால நிற்க முடியும், எனக்கு எப்போ, யாரைக் கல்யாணம் பண்ணிக்கத் தோணுதோ அப்போப் பண்ணிக்கிறேன், அதைவிட்டுட்டு ஏதாவது தில்லுமுல்லுப் பண்ணினாப் பொட்டியைக் கட்டிக்கிட்டு நான் பாட்டுக்கு நடந்துக்கிட்டே இருப்பேன்.” தாமஸ் தனது அறையில் இருக்கிறார் என்று தெரிந்தே பெண் சத்தமாகப் பாட்டியிடம் அனைத்தையும் சொல்லி முடித்தது.
 
அதன்பிறகு தாமஸ் நான்சியின் வழிக்கு வரவேயில்லை. இருவரும் இரு எதிரிகள் போல ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள். ஜேசனை தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதில் நான்சி உறுதியாக இருந்தாளே தவிர தன் தந்தையை இந்தளவு அவமதிக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் அவள் நினைத்திருக்கவில்லை. ஆனால் என்றைக்கு லண்டன் போய் கிரேஸை பார்த்துவிட்டு வந்தாளோ அன்றிலிருந்து பெண்ணின் மனம் இறுகிப் போனது.
 
தனது துயரத்தை மறைத்துக்கொண்டு அந்தப் பெண்மணி நடந்து கொண்டாலும் நான்சியால் அவரின் துயரத்தின் அளவைப் புரிந்துகொள்ள முடிந்தது. இத்தனைப் பேரின் துன்பத்துக்கும் காரணம் தன் தந்தையே என்று நினைத்த போது அவள் மனது இறுகிப் போனது. தந்தை என்ற பாசம் முற்றாக வற்றிப் போனது. அதற்கு ஏற்றாற்போல தாமஸும் பெண்ணோடு மல்லுக்கு நிற்கப் பெண்ணும் தனது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்திருந்தது.
 
அன்றைக்குத் தனது பாட வேளை நிறைவுபெற்ற பின்பு ஸ்டாஃப் ரூமுக்கு வந்தாள் நான்சி. கொஞ்சம் களைப்பாக இருக்க அங்கிருந்த சோஃபாவில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். அவளுக்கு நேர் எதிரே டீவி ஓடிக்கொண்டிருந்தது. முன்பாக இருந்த டேபிளில் சாக்லேட்டுகள் இருக்க அதில் ஒன்றைப் பிரித்து வாயில் போட்டுக் கொண்டவளின் கண்கள் இயல்பாக தொலைக்காட்சியை நோக்கியது. நியூஸ் சேனல் ஓடிக்கொண்டிருக்கச் சட்டென்று திரையில் ஜேசனின் முகம் தெரிந்தது. வாயில் வைத்த இனிப்பைச் சுவைக்க மறந்து இறுகினாற் போல உணர்ந்தாள் பெண்.
 
ஜேசன் அவனது லாயரோடு நடந்து வந்துகொண்டிருந்தான். கூடவே இன்னும் சிலர் அவனச் சூழ நடந்து கொண்டிருந்தார்கள். டீவி சேனல்களும், பத்திரிகைக் காரர்களும் அவனைச் சூழ அவன் வேகத்துக்கு இணையாக நடந்து கொண்டிருந்தார்கள். கீழே ‘கால்பந்து வீரர் ஜேசன் இன்று விடுதலை, ஐந்து ஆண்டுகள் தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை முடித்துக்கொண்டு இன்று விடுதலையாகிறார் ஜேசன் ராபர்ட்.’ என்று செய்தி ஓடிய வண்ணம் இருந்தது.
 
ஸ்டாஃப் ரூமிலிருந்த ஒன்றிரண்டு ஆசிரியர்கள் தன்னைத் திரும்பிப் பார்ப்பதை உணர்ந்த போதும் நான்சியின் கண்கள் திரையிலிருந்து விலகவில்லை. வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்திருந்தாள். ஐந்து வருடங்களுக்குப் பிறகான அவனின் தரிசனம். தந்தையின் மறைவின் போது ஜேசனுக்கு விஷேட அனுமதி கிடைத்தது. ராபர்ட்டின் நல்லடக்கத்தில் ஒரு மகனாக ஜேசன் கலந்து கொண்டான். ஆனால் அப்போது நான்சி அவனைப் பார்க்கவில்லை. அவள் இரண்டு வாரங்கள் கழித்து லண்டன் போனபோது ஈமக்கிரியைகள் அனைத்தும் நிறைவு பெற்றிருந்தன.
 
மிகவும் மாறிப் போயிருந்தான் ஜேசன். இருபத்தி இரண்டு வயதில் இருந்த தோற்றம் மாறி இப்போது முழுதாக வேறாக ஆகிப்போயிருந்தான். மேட்ச் இல்லாத நேரங்களில் அவன் முகத்தில் ஒட்டிக்கொள்ளும் அரும்பு மீசை இப்போது கொஞ்சம் அடர்த்தியாக இருந்தது. 
 
“ஜேசன், எப்போ திரும்பவும் ஃபுட்பால்ல இறங்கப் போறீங்க?” பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி கேட்டார். ஜேசன் பதில் சொல்லவில்லை.
 
“பழைய டீம்லயே விளையாடுவீங்களா? இல்லை புதிய டீம் ஏதாவதுல இருந்து அழைப்பு வந்திருக்கா ஜேசன்?” இன்னுமொரு கேள்வி. ஆனால் மௌனம் மட்டுமே பதிலாக வந்தது. 
 
“இந்த அஞ்சு வருஷ காலம் ஜேசனோட விளையாட்டு வாழ்க்கையில ஏதாவது மாற்றங்களைக் கொண்டு வந்திருக்குமா? இல்லை பழைய ஜேசனையே நாங்க திரும்பவும் பார்க்கலாமா?” எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் விடுவிடுவெனத் தன்னோடு நடந்தவர்களோடு அந்த ஜாக்குவாரை நோக்கி நடந்தான் ஜேசன். கூட வந்தவர்கள் ஏறிக் கொள்ள ஜாக்குவார் போய்விட்டது.
 
நான்சி அசையாமல் அனைத்தையும் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். 
ஜேசனின் விடுதலைப் பற்றி டீவியில் அதன்பிறகு பலரும் பல விவாதங்களில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். விளையாட்டு வீரர்கள் பலர் ஜேசனின் விளையாட்டுலக மீள்வருகைக்கு வாழ்த்துச் சொன்னார்கள். நான்சியின் பெயரும் ஒருசிலரால் உச்சரிக்கப்பட்டது. ஜேசனின் முடிவுதான் இறுதி முடிவாக இருக்கும் என்று பலர் அபிப்பிராயம் சொன்னார்கள். பாட வேளைக்கான நேரம் நெருங்கவும் எல்லா சிந்தனைகளையும் தூக்கித் தூர வைத்துவிட்டு நான்சி எழுந்து வெளியே போய்விட்டாள்.
 
***
அன்று இரவு உணவின் பின் அமீலியா தன் தமக்கையின் அறைக்குள் புயலெனப் புகுந்தாள். அவள் வரவை நான்சி ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததால் ஒரு புன்னகையோடு தன் தங்கையை வரவேற்றாள்.
 
“நான்சீ!” ஓடி வந்த இளையவள் தன் அக்காளைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.
 
“இன்னைக்கு நான் கேள்விப்பட்ட நியூஸ் உண்மைதானா?!” இளையவளின் சந்தோஷம் நான்சியையும் தொற்றிக் கொண்டது. 
 
“நீ இன்னைக்கு என்ன நியூஸ் கேள்விப்பட்டே அமீ?” என்றாள் பெரியவள்.
 
“ஹேய் நான்சி! விளையாடுறியா நீ? ஜேசன் ரிலீஸ் ஆகிட்டாராமே?!”
 
“ம்…”
 
“என்ன ‘ம்’ எங்கிறே?!” அமீலியா வெகுவாகக் குறைப்பட்டாள்.
 
“இன்னைக்கு ப்ரேக் டைம்ல ஸ்டாஃப் ரூம்ல இருக்கும் போது நியூஸ் பார்த்தேன், ஓன்னு கத்தலாம் போல இருந்துச்சு.”
 
“ம்ஹூம்!”
 
“ஆனா முடியாதில்லையா? அதானால அடக்கிக்கிட்டேன்.” சொல்லிவிட்டுச் சிரித்தது பெண்.
 
“அப்போக் கத்த முடியாது, ஆனா இப்போ முடியும்ல நான்சி, நல்லா வாய்விட்டுக் கத்து நான்சி.” இளையவளின் ஆர்ப்பரிப்பில் நான்சி சிரித்தாள்.
 
“இப்பல்லாம் முன்ன மாதிரி எங்கூட மனம் விட்டுப் பேச மாட்டேங்கிறே, என்னப் பேசினாலும் ஒரு சிரிப்பு மட்டுந்தான் உங்கிட்ட இருந்து பதிலா வருது நான்சி.”
 
“சாரி அமீ, வேணும்னு எதுவும் பண்ணலை, உங்கூடப் பேசக்கூடாதுன்னும் நினைக்கலை, ஆனா என்னால இயல்பா இருக்க முடியலை.” 
 
“பாட்டியும் அம்மாவும் கூட அடிக்கடி உன்னை நினைச்சு வருத்தப்படுறாங்க, நம்ம பொண்ணை எப்போப் பழைய நான்சியா, கலகலப்பான நான்சியா பார்ப்போம் ன்னு!”
 
“…..”
 
“சரி அதை விடு, ஜேசனை போய் பார்க்கலையா?”
 
“நீ என்ன நினைக்கிற அமீ?”
 
“நான்சியோட தங்கை அமீயா போய் பாருன்னு சொல்லுவேன், தாமஸோட பொண்ணு அமீலியாவா போகாதேன்னு சொல்லுவேன்.” சொல்லிவிட்டு இளையவள் கலகலவென்று சிரித்தாள்.
 
“நாளைக்கே போய் பார்க்கப் போறேன் அமீ.” அந்தக் குரலின் தீவிரத்தில் அமீலியாவே ஒரு கணம் அதிர்ந்து போனாள். 
 
“ம்… புரியுது நான்சி, ஜேசன் லண்டன் ல இருக்கப் போறதில்லையாமே?”
 
“ம்… நியூஸ் ல நானும் பார்த்தேன்.”
 
“அவர் எதுக்காக இங்க வர்றார் ன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது.” சொன்ன தங்கையைத் தீர்க்கமாகப் பார்த்தாள் நான்சி.
 
“என்ன நான்சி?!” 
 
“எனக்காகத்தான் ஜே இங்க வர்றார் ன்னு நீயும் நினைக்கிறியா அமீ?”
 
“ஆமா, அதுலென்ன சந்தேகம் உனக்கு?!”
 
“அந்த அன்பு இன்னும் இருக்கும் ன்னு நீ நினைக்கிறியா?”
 
“ஏய் நான்சி! நீ ஏன் இப்பிடியெல்லாம் யோசிக்கிறே?!”
 
“அஞ்சு வருஷம் உனக்கும் எனக்கும் வேணும்னா சாதாரணமாக் கடந்து போயிருக்கலாம், ஆனா அதே அஞ்சு வருஷத்தைக் கடக்க ஜே எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாரு? யோசிச்சுப் பாரு.”
 
“நான்சி!”
 
“நான் ஜேக்கு குடுத்திருக்கிறது சாதாரண வலி இல்லை, அவரு எல்லாத்தையும் அவ்வளவு சுலபத்துல மறப்பாருன்னும் நான் எதிர்பார்க்கலை.”
 
“ஓ!”
 
“ஆனா… நான் ஒரு சில முடிவுகள் எடுத்திருக்கேன், அதுல இருந்து நான் மாறப்போறதில்லை அமீ.”
 
“ம்… அப்போ எதுக்காக ஜேசன் லண்டன் ல இருக்காம இங்க வர்றாரு?!”
 
“சிட்டியில இப்போ இருக்க வேணாம்னு நினைச்சிருக்கலாம் இல்லையா?”
 
“ஓ! நான் உனக்காகத்தான் ஜேசன் இங்க வர்றார் ன்னு நினைச்சேன்.” இளையவளின் குரல் தேய்ந்து போனது.
 
“அப்பிடியும் வந்தாரு, ஆனா அது ஒரு காலம் அமீ, காத்துல கரைஞ்சு போன என்னோட கடந்த காலம்!” கண்களில் நீர் துளிர்க்க நான்சி பேசிய போது அமீலியாவுக்கு மேற்கொண்டு பேச எதுவுமே இருக்கவில்லை. ஒரு பெருமூச்சோடு வெளியே போய்விட்டாள். அன்றைய செய்தியைப் பார்த்துவிட்டு பேத்தியைப் பார்க்க வந்த பாட்டியும் இளையவர்களின் உரையாடலைக் கேட்டுவிட்டு எதுவும் பேசாமல் போய்விட்டார்.
 
“ஆண்டவரே! என்னோட நான்சிக்கு நல்ல வழியைக் காட்டும்!” என்பதே அப்போதைய அவரது பிரார்த்தனையாக இருந்தது.
 
***
அடுத்த நாள் காலை ஆயத்தமாகிக் கொண்டு பாட்டியின் அறைக்கு வந்தாள் நான்சி. எப்போதாவது சில நேரங்களில் பள்ளிக்கூடம் போகும் முன்பாக பாட்டியிடம் பெண் சொல்லிக் கொண்டு போவதுண்டு.
 
“வா நான்சி, ஸ்கூலுக்கு ரெடி ஆகிட்டியா?”
 
“ம்… ஆமா கிரானி, ஆனா நான் ஸ்கூலுக்கு இன்னைக்குப் போகப் போறதில்லை, லீவு சொல்லிட்டேன்.”
 
“….” பாட்டி எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார். பேத்தியை ஆதரிக்கவும் முடியவில்லை. அதே சமயம் தடுத்து நிறுத்தவும் மனசாட்சி சம்மதிக்கவில்லை.
 
“ஜேசனை பார்க்கப் போறேன் கிரானி, யாராவது ஒருத்தர் கிட்ட உட்மையைச் சொல்லிட்டுப் போகணும்னு தோணிச்சு, அதான் உங்களைத் தேடி வந்தேன்.” எப்போதும் போல உண்மைப் பேசியது பெண்.
 
“நீ இன்னும் சின்னப் பொண்ணு இல்லை நான்சி, சரி, பிழை என்னன்னு உனக்கும் தெரியும், உன்னோட மனசுக்கு எது சரின்னு படுதோ அதைப் பண்ணு.”
 
“எனக்காக ஆண்டவர் கிட்டப் பிரார்த்தனைப் பண்ணுங்க கிரானி.”
 
“அது எப்பவும் உண்டு கண்ணம்மா, போயிட்டு வா, நீ ஆசைப்படுறது நடக்க அந்த ஆண்டவர்கிட்ட நானும் பிரார்த்தனைப் பண்ணுறேன்.”
 
“பை கிரானி.” பாட்டியைக் கட்டி அணைத்துவிட்டு நான்சி வீட்டுக்கு வெளியே வந்துவிட்டாள். ஒரு டாக்சி பிடித்துக்கொண்டு அந்தச் சின்ன பங்களாவின் முன் வந்து இறங்கிய போது பெண்ணுக்குப் படபடத்தது. எப்போது அந்த வீட்டுக்கு வரும்போதும் அவள் ஒருவிதப் படபடப்போடுதான் வந்ததுண்டு. ஆனால் அது ஆனந்தப் பரபரப்பு. ஆனால் இன்றைக்கு இதயம் வெளியே வந்துவிடும் போல எகிறிக் குதித்தது. 
 
வாசலில் டாக்சியை நிறுத்திவிட்டு இறங்கினாள் நான்சி. வீடு இந்த ஐந்து வருட காலத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தது. ஜேசன் வீட்டைப் பராமரிப்பதற்கு ஆட்கள் வைத்திருப்பான் போலும். பார்க்கச் சுத்தமாக இருந்தது. இவள் தலையைக் காணவும் ஆன்டனி ஓடி வந்தான்.
 
“மேடம்!” அந்த அழைப்பில் நான்சிக்கு கண்கள் கலங்கியது.
 
“எப்பிடி இருக்கீங்க மேடம்? அன்னைக்கு லண்டன் வந்திருந்தீங்களாமே? லியோ சொன்னான், அன்னைக்குன்னு பார்த்து ஒரு வேலையா நான் மான்செஸ்டர் போய்ட்டேன், அதான் உங்களைப் பார்க்க முடியலை.”
 
“எப்பிடி இருக்கீங்க ஆன்டனி?” வாய் கேள்வி கேட்டாலும் கண்கள் அலைபாய்ந்த படி வீட்டையே பார்த்தது.
 
“நான் நல்லா இருக்கேன் மேடம், நீங்க உள்ள வாங்க.”
 
“இல்லை… ஆன்டனி, நான்…”
 
“என்னாச்சு மேடம்? எதுக்குத் தயங்குறீங்க?”  
 
“தயக்கம் இருக்கத்தானே செய்யும் ஆன்டனி.” அந்தக் குரலில் நான்சி தூக்கிவாரிப் போடத் தனது இடது பக்கமாகத் திரும்பினாள். சற்று அப்பால் மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு இவளையே பார்த்தபடி நின்றிருந்தான் ஜேசன். தன் எஜமானனைப் பார்த்ததும் இனித் தனக்கு அங்கே வேலையில்லை என்றுப் புரிந்த ஆன்டனி அவசரமாக அங்கிருந்து நகர்ந்து விட்டான். 
 
நான்சியின் விரிந்த விழிகள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தனது இனியவனை முழுதாகக் கண்களுக்குள் நிரப்பியது. அது போதாதோ எனும் வண்ணம் அவள் இமைகள் கூட இமைக்க மறந்து அவனையே பார்த்திருந்தன. கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு, அகன்று விரிந்த புஜங்களோடு தன் எதிரே நிற்கும் இவனா என் ஜேசன்?! ஐந்து ஆண்டுகள் ஒரு ஆண்மகனை இத்தனைத் தூரம் மாற்ற முடியுமா?! மாற்றி இருந்தது! கடந்துபோன, கரைந்து போன காலம் அவனை அழகாகச் செப்பனிட்டு இருந்தது. உடலால் மாத்திரமல்ல, உள்ளத்தாலும் அவன் நிரம்பவே மாறியிருந்தான். 
 
இருபத்தி இரண்டு வயதில் அவனிடம் குடிகொண்டிருந்த அவசரமும் பதட்டமும் காணாமல் போயிருந்தது. இருபத்தி ஏழு வயதில் நிதானம், நிதானமாக அவனுக்குள் குடியேறி இருந்தது. ஜேசனும் நான்சியை ஒருவித வியப்போடுதான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் உணராத அவளது தோற்றப் பொலிவு அவனையும் ஈர்த்திருக்கும் போலும்! அவன் கண் அளந்த… நான்சிக்கு முகம் சிவந்தது. சட்டென்று பார்வையைத் தணித்துக் கொண்டாள். பேச்சு மறந்து போனது!
 
டாக்சி வந்து நின்ற போதே கார்டனில் நின்றிருந்த ஜேசன் பெண்ணைப் பார்த்துவிட்டான். சர்வாங்கமும் அதிர ஒரு நொடி அவன் தன்னை மறந்து நின்றதென்னவோ உண்மைதான். அவளை இத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்த்த அதிர்ச்சி அவனை சில நொடிகள் ஆட்டிப்படைத்தன. பெண் நிரம்பவும் மாறியிருந்தது அவனது சிந்தையை மயக்கியது. இவளைப் பார்த்து ஆன்டனி ஓடி வந்ததும் அவளை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்த கால்களுக்குத் தடை உத்தரவு போட்டான். அவள் கண்கள் வீட்டுக்குள் அலைபாய்ந்து அலைபாய்ந்து திரும்புவதை ஒருவித ரசனையோடு பார்த்திருந்த இளவல் அதன் பிறகே அவளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தான். 
 
இப்போது ஜேசன் அவளை மெதுவாக நெருங்கி வந்தான். அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த ‘லான்யார்ட்’ டை அவள் அனுமதி இன்றி அவன் தூக்கிப் பார்க்கப் பெண் திடுக்கிட்டு நிமிர்ந்தது. அவன் செய்கையிலிருந்த உரிமை அவளைப் பதறச் செய்தது. ஆனால் அந்தப் பதட்டத்தை அவன் ரசிக்கவில்லை போலும். அவன் ஒற்றைப் புருவம் லேசாக ஏறி இறங்கித் தன் அதிருப்தியைக் காட்டியது. 
 
“மிஸ் நான்சி தாமஸ்.” கழுத்தில் தொங்கிய அவள் பெயர் பட்டையிலிருந்த பெயரை திருத்தமாக வாசித்தான் ஜேசன். 
 
“இந்தப் பெயருக்கு என்னோட வீட்டு வாசல்ல கூட இடமில்லையே…” கேலி போலச் சொன்னவனின் கட்டை விரல் நகம் அச்சிடப்பட்டிருந்த ‘தாமஸ்’ என்றப் பெயரை அழுத்தமாகப் பிராண்டியது. அந்த வார்த்தைகளில் நான்சிக்கு உள்ளுக்குள் குளிர் பரவியது. அவன் யாரைச் சொல்கிறான்?!
 
அவசர அவசரமாகத் தன் கழுத்தில் தொங்கிய அந்தச் சுமையைக் கழட்டித் தோளில் தொங்கிய பைக்குள் போட்டது பெண். அவள் கண்களையே ஒரு நொடி ஆழமாகப் பார்த்தவன் முன்னே நடந்தான். அவளை அழைக்கவுமில்லை. எதுவும் அதன்பிறகு பேசவுமில்லை. அவனைப் பின்தொடர்வதா? தொடர்ந்தால் கோபிப்பானா என்ற குழப்பத்தில் அசையாமல் அப்படியே நின்றிருந்தது பெண்.