gaanam09

காம் 09

மீடியா, போலீஸ் என சிறிதுநேரம் அவதிப்பட்ட அந்த இடம் இப்போது அமைதியாக இருந்தது. எல்லோரும் கலைந்து போயிருந்தார்கள். நான்சி மட்டும் கண்ணீரில் கரைந்து போயிருந்தாள். ஆன்டனி, லியோ இருவர் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி. காலம் கடந்து போயிருந்தாலும் தங்கள் எஜமானன் மீது வீசப்பட்டிருந்த பழிச்சொல் துடைக்கப்பட்டதில் அவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி.
 
“ரொம்ப சந்தோஷமா இருக்கு மேடம்.” லியோவின் நெகிழ்வான குரல் நான்சியை நிஜத்துக்குக் கொண்டு வந்தது. லேசாகப் புன்னகைத்தவள் இனி என்ன செய்வதென்று தெரியாமல் திக்கற்றவள் போல நின்றிருந்தாள்.
ஜேசன் மீது விழுந்த பழியைத் துடைக்க வேண்டும் என்று திட்டம் போட்டு எல்லாம் செய்தாகிவிட்டது. அவள் சொன்னது போலத்தான் ஆன்டனியும் லியோவும் நடந்து கொண்டார்கள். பெண்ணுக்கு நிச்சயமாகத் தெரியும். தன்னைத் தொடர்ந்து கொண்டு தன் தந்தை அந்த வீட்டுக்கு வருவார் என்று. அதனால்தான் போலீஸையும் மீடியாவையும் குறித்த நேரத்தில் அழைக்குமாறு அவர்கள் இருவருக்கும் சொல்லியிருந்தாள். எல்லாம் கனகச்சிதமாக நடந்தேறிவிட்டது. இனி என்ன?!
 
தனது வீட்டை விட்டு வெளியேறியதை நான்சி பெரிய விஷயமாக நினைக்கவில்லை. என்றைக்காவது அது நடக்கப்போகும் விஷயம்தான். அது இன்றைக்கு நடந்திருக்கிறது, அவ்வளவுதான். ஆனால் தான் இனி ஜேசனின் வீட்டில்தான் இருக்கப் போகிறேன் என்று அவள் எடுத்திருக்கும் முடிவு சரிதானா? அதை ஜேசன் ஏற்றுக் கொள்வானா? அவளைப் பொறுத்தவரை அவள் சரியாகத்தான் முடிவெடுத்திருக்கிறாள். ஆனால் அந்த முடிவுக்கு ஜேசனின் அபிப்பிராயம் என்னவாக இருக்கும்.
 
“மேடம்…” ஆன்டனி அழைக்கவும் திரும்பிப் பார்த்தாள் பெண். வீட்டினுள் இதுவரை இருந்த ஜேசன் இப்போது அவளையே பார்த்தபடி வெளியே நின்றிருந்தான். ஆன்டனியும் லியோவும் சட்டென்று உள்ளே போய்விட்டார்கள். இளையவனின் பார்வைப் பெண்ணைத் துளைத்தது. அந்தப் பார்வையின் அர்த்தம் என்னவென்று அவளுக்கும் புரியவில்லை. அமைதியாக நின்றிருந்தாள்.
 
“உள்ள வா.” குரல் கொஞ்சம் கடுமையாகத்தான் இருந்தது. எது எப்படி இருந்தால் என்ன. இப்போது அவன் அழைக்கிறான். அது ஒன்றே போதும் என்பது போல அவசரமாக உள்ளே போனாள் நான்சி. வரவேற்பு அறை வரை வந்தவன் அங்கே சற்றுத் தாமதித்தான். நான்சியை அவன் திரும்பிப் பார்க்க அவளும் அவனை என்ன என்பது போலப் பார்த்தாள்.
 
“நீ இங்கத் தங்குறது சரியா வருமா நான்சி?” ஜேசனின் குரலில் அளவுக்கு மீறிய கலக்கம்.
 
“ஏன்? இவ்வளவு பெரிய வீட்டுல எனக்காக ஒரு இடம் குடுக்கிறது உங்களுக்கு அவ்வளவு கஷ்டமா ஜே?”
 
“நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்குப் புரியும்.” என்றான் அவன் இப்போது கொஞ்சம் அதட்டலாக. அவன் மனதுக்குள் அந்த நொடி அவசரமாக ஓடிய எண்ணங்களைப் பெண் அறியமாட்டாள். அறிந்திருந்தால்…
 
“புரியுது, இன்னொரு இடம் பார்க்கிற வரையாவது நான் இங்கத் தங்கலாமா?” கேட்டவளை ஊடுருவிப் பார்த்தான் ஜேசன். அவன் பார்வையின் அர்த்தம் அப்போதும் அவளுக்குப் பிடிபடவில்லை. அதன்பிறகு அவனிடமிருந்து ஒரு பெருமூச்சு மாத்திரமே வந்தது. 
 
“மேல மாடியில இருக்கிற ரூம்ஸ் ல நீ…”
 
“இல்லையில்லை.” பேசியபடியே நடந்தவனை அவள் சட்டென்று இடைமறித்தாள். 
 
“என்ன இல்லை?!”
 
“நான் கீழேயே… ஆன்ட்டி ரூமுக்கு பக்கத்துல…”
 
“ஏன்?”
 
“அப்பதான் ஆன்ட்டியை கவனிச்சுக்க ஈஸியா இருக்கும்.”
 
“அதுக்குத்தான் நர்ஸ் இருக்காங்களே? நீ என்னப் பண்ணப் போறே அங்க?!”
 
“ஆமா… நர்ஸ் மாதிரியா இருக்கா அவ? ஏதோ சினிமா ஷூட்டிங் க்கு போறவ மாதிரி ஃபுல் மேக்கப் ல வந்து நிக்கிறா?” வாய்க்குள் முணுமுணுக்கும் பெண்ணை விசித்திரமாகப் பார்த்தான் ஜேசன்.
 
“என்னாச்சு?!”
 
“ஒன்னுமில்லை.” அவள் முகத்தில் இன்னும் ஒட்டிக்கொண்டிருந்த அந்தக் கோபத்தைப் பார்த்துவிட்டு அவன் வாய்விட்டுச் சிரித்தான்.
 
“அந்த நர்ஸை உனக்குப் பிடிக்கலையா நான்சி?”
 
“…”
 
“ஏன்? அம்மாவை நல்லாத்தானே பார்த்துக்கிறாங்க?! உனக்கு ஏதாவது தப்பாத் தெரியுதா?”
 
‘அம்மாவையும் நல்லாப் பாத்துக்கிறா, உன்னையும் நல்ல்ல்லாப் பார்த்துக்கிறா.’ மனதுக்குள் புலம்பியவள் அவனைக் கடந்துகொண்டு மாடிக்குப் போனாள்.
 
“ஆக… சர்வீஸ் செய்ய வந்திருக்கீங்களா?” அவனும் கேட்டபடியே பின்தொடர்ந்தான். மாடி நல்ல விசாலமாக இருந்தது. நடுவில் ஹால் அமைந்திருக்கச் சுற்றிவர அறைகள் இருந்தன. நான்கைந்து அறைகள் இருக்கும் போலும்.
 
“கீழ ஆன்டனி, லியோ ரெண்டு பேருக்கும் தனித்தனியா ரூம் குடுத்திருக்கேன், இன்னொரு ரூம் அம்மாக்கு, கீழே நீ தங்க முடியாது.”
 
“ஆன்ட்டியை இங்க இருக்கிற ரூமுக்கு ஷிஃப்ட் பண்ணிடலாமே.”
 
“அது சரிவராது, அம்மா மாடிக்கு வந்தா அந்த நர்ஸும் மாடிக்கு வருவா, நானும் மாடியிலதான் இருக்கேன், பரவாயில்லையா உனக்கு?” அந்தக் கேலிக் குரலை அவள் ரசிக்கவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
 
“உன்னோட பிரச்சினை இப்ப என்ன நான்சி?”
 
“என்னோட ரூம் எது?” அவனுக்குப் பதில் சொல்லாமல் முதலாவதாக இருந்த அறையைத் திறந்தது பெண். அது அவனது உபயோகத்தில் இருந்தது. நல்ல விசாலமான அறை. கதவைத் திறந்ததும் காற்றில் கார்குழல் மிதக்கப் பதினைந்து வயது நான்சி சிரித்தபடி சுவரில் பெரிதாக மாட்டப்பட்டிருந்தாள். நான்சி சிலிர்த்துப் போனாள். அடுத்தடுத்த சுவர்களில் ஃபுட்பால் லெஜன்ட் என்று உலகத்தால் போற்றப்படும் பலரது படங்கள் மாட்டப்பட்டிருந்தன.
 
“நீ இங்கத் தங்கிறதா இருந்தாலும் எனக்கு ஓகே.” அவன் சாதாரணமாகத்தான் சொன்னான். ஆனால் நான்சி திடுக்கிட்டுப் போனாள். அவள் அறிந்த அவளுடைய காதலனுக்கு இப்படியெல்லாம் பேசத் தெரியாது. பார்வையில் கூட கண்ணியத்தைக் காட்டுபவன் அவன். அவள் முகம் காட்டிய ஆச்சரியத்தை அவனும் புரிந்து கொண்டான். இயல்பாக அவளுக்கு விளக்கமும் சொன்னான்.
 
“அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இருந்த ஜேசனை நீ இப்போ எதிர்பார்த்து வந்திருந்தா… ஐ ஆம் சாரி நான்சி.”
 
“அப்போ இந்தப் படத்துக்கு இங்க என்ன வேலை ஜே?” சுவரில் மாட்டப்பட்டிருந்த அவளது புகைப்படத்தைச் சுட்டிக் காட்டியது பெண்.
 
“இங்க வரும்போது நான்சியை பிடிக்கும், அவ்வளவுதான்.”
 
“ஓ… அப்போ… இந்த அஞ்சு வருஷ காலத்துல வேற யாரையும் இங்க வராதப்போப் பிடிச்சிருந்ததா?”
 
“இருக்கலாம்… ஏன்? கூடாதா?” 
 
“ரொம்ப மாறிட்டீங்களோ?” அந்தக் குரலில் வலி தெரிந்தது.
 
“ம்ஹூம்… மாற வெச்சுட்டாங்க.”
 
“ஆனா நான் மாறலை.”
 
“மாறியிருந்தாலும் நான் கவலைப் பட்டிருக்கப் போறதில்லை.” அந்த வார்த்தைகளில் நான்சி பலமாக அடி வாங்கினாள். அவள் கண்கள் கலங்கிப் போனது.
 
“யாரைப் பழிவாங்க நினைக்கிறீங்க ஜே? என்னோட அப்பாவையா? இல்லை என்னையா?”
 
“அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் உன்னை என்னோட வரச்சொல்லிக் கூப்பிட்டேன் நான்சி, அப்போ நீ வரலை, ஆனா இப்போ வந்திருக்கே.”
“அப்போ என்னால வர முடியாது ஜே, வந்திருந்தா எவ்வளவு பெரிய சிக்கல் வந்திருக்கும் தெரியுமா?”
 
“வராமப் போனதால மட்டும் எந்தச் சிக்கலும் வரலையா பொண்ணே? அப்பிடி எங்கூட வராம எதை உன்னால பாதுகாக்க முடிஞ்சுது? சொல்லு பார்ப்போம்.”
 
“….” அவள் மௌனம் பார்த்து ஜேசன் கசப்பாகச் சிரித்தான். 
 
“குடும்ப மானம், கவுரவம் ன்னு கூச்சல் போட்ட தாமஸோட பொண்ணு இப்போ என்னோட படுக்கை அறைல நிற்கிறா, ஸ்பென்சர் குடும்பத்தோட மானத்தை இப்போ நான் காத்துல பறக்க விடட்டுமா நான்சி?!”
 
“ஜே!”
 
“உனக்கு ஒன்னே ஒன்னு மட்டும் சொல்றேன், இன்னும் ஒன்னும் கெட்டுப் போயிடலை, நீ இங்க இருந்து போறதா இருந்தா இப்பக்கூடத் தாராளமாப் போகலாம், உன்னை யாரும் தடுக்க மாட்டாங்க, ஆனா… பழைய ஜேசனை மட்டும் இனியும் எதிர்பார்க்காதே, ஏமாந்து போயிடுவே.” நான்சி அந்த வார்த்தைகளை மிகவும் கஷ்டப்பட்டு விழுங்கிக் கொண்டாள். வலியை அனுபவித்தவன் பேசுகிறான். நான் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். இதைக்கூட அவன் செய்யவில்லை என்றால் அவன் சாதாரண மனிதன் இல்லையே. ஆனால் எய்தவன் இருக்க இவன் அம்பை நோகிறான்!
 
வாழ்க்கையில் கொஞ்ச காலமாகவே ரணங்களுக்குப் பழகி இருந்ததால் நான்சி இதையும் பொறுத்துக் கொண்டாள். ஆனாலும், மனதுக்கு வலியைக் கொடுத்தவன் மனதிலிருப்பவனே என்ற போது அந்த வலியின் அளவு கொஞ்சம் அதிகமாக இருந்தது.
 
“மேல இருக்கிற ரூம்ஸை வேற யாராவது யூஸ் பண்ணுறாங்களா?”
 
“ம்ஹூம்.” அவன் இல்லை என்பது போல தலையை ஆட்டினான்.
 
“நான் அதுல ஒன்னை யூஸ் பண்ணிக்கிறேன்.”
 
“உன்னோட இஷ்டம்.”
 
“இங்க இருக்கிற க்ராமர் ஸ்கூல்லதான் வொர்க் பண்ணுறேன்.”
 
“ம்…”
 
“மார்னிங் போனா நாலு மணிக்கு வந்திடுவேன்.”
 
“ஓ…” எதுவும் பேசாமல் அந்த அறையில் இருந்த கப்போர்ட்டை நோக்கிப் போனவன் அதற்குள்ளிருந்த நான்கைந்து ஃபைல்களை எடுத்து அங்கிருந்த கட்டிலின் மேல் போட்டான்.
 
“இது என்னோட பேர்ல இருக்கிற சொத்துகள், மிஸ்டர் ராபர்ட் என்னை விட்டுட்டுப் போனாலும் என்னை நடுத்தெருவில விட்டுட்டுப் போகலை.”
 
“ஏன் இப்பிடிப் பேசுறீங்க ஜே?”
 
“வேலைக்குப் போகணும்னு சொன்னியே நான்சி, உன்னை வெச்சுச் சாப்பாடு போட எனக்குத் தெம்பிருக்குன்னு சொல்லுறேன்.”
 
“இல்லையில்லை, நீங்கத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்க, அது என்னோட வேலை மட்டுமில்லை, லட்சியம், கனவு… இப்பிடி நிறைய, அதை யாருக்காகவும் எதுக்காகவும் விட என்னால முடியாது.”
 
“…” 
 
“ஸ்கூல் நேரம் போக மீதி நேரமெல்லாம் நான் இந்த வீட்டுலதான் இருக்கப்போறேன், இங்க இருக்கிறவங்க என்னை கௌரவமா நடத்தினாலும் சரி, கேவலப்படுத்தினாலும் சரி, அதைப்பத்தி நான் இனிமேக் கவலைப்படப் போறதில்லை.” அர்த்தமுள்ள ஒரு பார்வையை அவன் மீது வீசிவிட்டு பெண் நகர ஜேசன் புன்னகைத்தான். அந்த அழகான சிரிப்பை நான்சி பார்க்கவில்லை. 
அவனது அறையை விட்டு வெளியே வந்தவள் கீழ் நோக்கிக் குரல் கொடுக்க ஆன்டனியின் தலை தெரிந்தது.
 
“என்னோட திங்ஸ் கீழே இருக்கு, கொஞ்சம் கொண்டு வந்து குடுக்குறீங்களா?” சொன்ன இரண்டாவது நிமிடம் அது அவளிடம் வந்து சேர்ந்தது. நான்சி ஜேசனின் அறைக்குப் பக்கத்தில் இருந்த அறைக்கதவைத் திறந்தாள். அதுவும் நல்ல விசாலமாகவே இருந்தது. யாரும் புழங்காததால் கொஞ்சம் வித்தியாசமான வாடை வீசியது. நான்சி ஜன்னல் கதவுகளைத் திறந்துவிட்டாள். 
 
“ஸ்கூலுக்கு போகணும்னு சொன்னே, ட்ரெஸ் எதுவும் கொண்டு வரலையா?” அவன் பேசிய பிறகுதான் பின்னோடே அவனும் வந்திருப்பது புரிய சட்டென்று திரும்பிப் பார்த்தது பெண். இதுவரைக் கதவில் சாய்ந்து நின்றவன் இப்போது உள்ளே வந்தான். அவளது அனுமதி இல்லாமலேயே.
 
“கைக்கு அகப்பட்டதை அள்ளிக்கிட்டு வந்தேன்.” சொன்னபடியே கொண்டு வந்திருந்த ஆடைகளை அங்கிருந்த கப்போர்டில் அடுக்கினாள் பெண். அருகே வந்தவன் அவள் ஒழுங்குற அடுக்கிய ஆடைகளை மெதுவாகத் தடவிப் பார்த்தான். சட்டென்று எதுவோ தோன்ற அவனது கரத்தை ஆராய்ந்தது பெண். அவளது முதல் சம்பளத்தில் அவனுக்காக ஒரு மோதிரம் வாங்கி அவள் பரிசளித்திருந்தாளே! அது எங்கே?!
 
“இன்னமும் அதே பழைய ஸ்டைல்லதான் ட்ரெஸ் பண்ணுறியா? இந்த வீக்கென்ட் ஷாப்பிங் போகலாம் நான்சி, உனக்கு இனி நான் செலக்ட் பண்ணுறேன், பாவம் உங்க பாட்டி, அவங்களை விட்டுடு.” அவன் பேசிக் கொண்டிருக்க நான்சியின் விழிகள் அவனது வலது கரத்தை ஆராய்ந்தது. அவனது மோதிர விரலில் அப்போதும் அவள் அணிவித்த மோதிரம் ஜம்மென்று உட்கார்ந்திருந்தது. 
 
“நான் மட்டுமில்லை ஜே… இங்க யாரும் இன்னும் பழசை மறக்கலை.” 
 
“என்னப் பேசுற நீ?! யாரைச் சொல்லு…” அவளின் பேச்சுப் புரியாமல் அவளை நோக்கித் திரும்பியவன் அவள் கண்களைத் தொடர்ந்தான். அது அவனது மோதிர விரலில் நிலைத்திருந்தது. தனது ஆடைகளைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்த அவனது கரத்தை மெதுவாக இப்போது பற்றியது பெண். அவள் அவனைத் தீண்டியதுதான் தாமதம், அவள் கரம்பிடித்திழுத்தவன் அவளைத் தனக்கு வெகு அருகாகக் கொண்டு வந்திருந்தான். இந்தத் தாக்குதலை நான்சி எதிர்பார்த்திருக்கவில்லை. 
 
“ஜே!” என்றாள் விழிகள் விரிய.
 
“ஜே பிட்ச் ல இறங்கும் போது ஃபேன்ஸோட ரியாக்ஷன் பார்த்திருக்கியா நீ?” அடிக்குரலில் அவன் சீற பெண் திகைத்துப் போனது.
 
“நான் போட்டிருக்கிற ரிஸ்ட் பேன்ட்டை கழட்டி வீசினா அதை எடுத்துக்கச் சண்டைப் போடுற ஃபேன்ஸை பார்த்திருக்கியா நீ?” மீண்டும் சீறியவன் அவளை கப்போர்ட்டோடு சேர்த்தழுத்தினான். 
 
‘எதற்காக இந்தச் சீற்றம்?!’ நான்சிக்கு ஒன்றும் புரியவில்லை.
 
“அப்படிப்பட்ட இந்த ஜேசன் உனக்காகக் காத்திருக்கணுமா? இந்த நான்சியை தொடத் தவம் கிடக்கணுமா? கெஞ்சணுமா?” ஒவ்வொரு வார்த்தைக்கும் அவன் நெருக்கம் அதிகமானது. 
 
“நீங்க ஆசையாசையாக் காதலிச்ச நான்சிக்கிட்ட இப்போப் பேசிக்கிட்டு இருக்கீங்க ஜே.” அவன் மூச்சுக் காற்றின் உரசலை முகம் திருப்பித் தடுத்தவள் அவள் யாரென்பதை அவனுக்கு ஞாபகப்படுத்தினாள்.
 
“ஆமா! எழவெடுத்த காதல்! என்னோட வாழ்க்கையையே நாசம் பண்ணின காதல்!” ஆத்திரத்தில் உறுமியவன் அவளை உதறித் தள்ளிவிட்டுப் போய்விட்டான். அவன் தள்ளிய வேகத்தில் நிலைகுலைந்த‌ பெண் அருகிலிருந்த கட்டிலில் தொப்பென்று அமர்ந்தது. 
 
இப்போது நான்சிக்கும் கோபம் வந்தது. எதற்காக இவன் என் மேல் இவ்வளவு ஆத்திரப்படுகிறான்?! நான் அப்படியென்னத் தவறு செய்துவிட்டேன்?! எதற்காக என்னை வருத்த நினைக்கிறான்?! உள்ளுக்குள் ஆயிரம் கேள்விகள் வெடித்துச் சிதறியது. மூச்சுகளை ஆழ இழுத்துவிட்டுத் தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள் பெண்.
 
அத்தனைப் பேரிடமும் அமைதியாக நடந்து கொள்பவன் அவளிடம் மட்டும் ஆர்ப்பரிக்கிறான், ஆத்திரம் கொள்கிறான். அவன் நினைத்தால் இப்போது தாமஸை ஒன்றுமில்லாமல் செய்ய முடியும். சுவடு தெரியாமல் காரியத்தைக் கனகச்சிதமாகப் பலர் செய்து கொடுப்பார்கள். பணத்தை வீசினால் போதும். அதுதான் அவனிடம் நிறையவே இருக்கிறதே!‌
 
ஆனால் அதைச் செய்யாமல் அவளை வருத்துகிறான். அவன் காயத்துக்கு அவளிடம் மருந்து தேடுகிறான். ரணப்பட்ட மனதை அவளிடம் பேசி ஆற்றிக் கொள்கிறான். ஆனால் அவன் வார்த்தைகள் அவளையும் காயப்படுத்தும் என்று ஏன் அவன் மறந்து போனான்!
 
***
நான்சி அன்றைய பிற்பகல் பொழுதை அந்த அறையிலேயேதான் செலவழித்தாள். அடுத்த அறையில் எந்தச சத்தமும் கேட்கவில்லை. அறையை ஒழுங்குபடுத்தி, அவளது வசதிக்கேற்பப் பொருட்களை நகர்த்தி என நேரம் சரியாக இருந்தது. நேரம் ஆறையும் தாண்டிக் கொண்டு போக நான்சி கீழே இறங்கி வந்தாள். கிரேஸின் அறைக்குள் எட்டிப்பார்த்தது பெண். இவள் அரவம் உணர்ந்து திரும்பியவர் கண்ணால் இவளை உள்ளே அழைத்தார்.
 
“தூங்குவீங்களோன்னு நினைச்சேன் ஆன்ட்டி.” சொன்னவளைப் பார்த்துச் சிரிக்க முயன்றார். முகம் மலர்ந்து கிடந்தது. 
 
“ரொம்ப ஹாப்பியா இருக்கீங்கப் போல?! என்னாச்சு? எனக்கும் சொல்லலாமில்லை.” நான்சி சிரித்தபடி கேட்க கண்களால் கட்டிலுக்கு அருகிலிருந்த சின்ன மேஜயைச் சுட்டிக் காட்டினார். நான்சி திரும்பிப் பார்த்தாள். அன்றைய மாலை நேர நாளிதழ் அங்கே அழகாக வீற்றிருந்தது.
முகப்புப் பக்கத்தில் நான்சியின் கண்ணீர் முகம். கூடவே பெண்ணின் வாக்குமூலம். பேப்பரை கையிலெடுத்த பெண் முதற்பக்கச் செய்தியை முழுதாகப் படித்து முடித்தது. புதிதாக எதுவுமில்லை. அவள் சொன்ன அனைத்தையும் அச்சுப் பிசகாமல் சொல்லி இருந்தார்கள். 
 
“ம்க்கும்…” கிரேஸ் ஒலி எழுப்ப நிமிர்ந்து பார்த்தது பெண். இப்போதும் கண்ணால் எதுவோ ஜாடை செய்தார். மேஜையில் ஒரு உயர் ரக சாக்லேட் பெட்டியொன்று இருந்தது. 
 
“எடு.” என்பது போல கிரேஸ் சமிக்ஞை செய்ய நான்சி புன்னகைத்தபடி அதிலொன்றை எடுத்துக் கொண்டாள். 
 
“உங்களுக்கு ஆன்ட்டி?” பெண் கேட்டதுதான் தாமதம், ஆமென்பது போல பெரியவரின் கண் ஜாடை காட்டியது.
 
“இன்னைக்கு நீங்க நிறைய சாக்லேட் சாப்பிட்டுட்டீங்க மேடம்.” அந்தக் குரலில் நான்சி சட்டென்று திரும்பினாள். ஒரு வயதான நர்ஸ் உள்ளே வந்து கொண்டிருந்தார். கூடவே இன்னுமொரு பெண். ஐம்பதுகளில் இருப்பார். கையில் ட்ரே இருந்தது. நான்சிக்கு அவர்கள் யாரென்று புரியவில்லை.
 
“நாந்தான் மேடமை நைட்ல பார்த்துக்கிற நர்ஸ், இவங்க இங்க கிச்சன்ல வொர்க் பண்ணுறாங்க, டீயை குடுங்க கேத்தரின்.” அந்த நர்ஸ் சொல்லவும் நான்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி டீயை நீட்டினார் கேத்தரின்.
 
“ஹலோ.” சொன்னவளைப் பார்த்துப் புன்னகைத்தார் அந்த நர்ஸ். அவர் பெயர் லூசி. கிரேஸுக்கு கழுத்தில் நாப்கினை சொருகிவிட்டவர் கொஞ்சம் கொஞ்சமாக டீயை குடிக்கச் செய்தார்.
 
“சந்தோஷப்படுறதுதான், அதுக்காக இவ்வளவு சாக்லேட் சாப்பிடலாமா மேடம்?” புன்னகையோடு அவர் கண்டிக்க அங்கே இதமான ஒரு சூழ்நிலை உருவானது. ஆனாலும் நான்சி கொஞ்சம் சங்கடப்பட்டாள். அன்றைய பத்திரிகையைப் பார்த்து அனைவரும் அவள் யாரென்பதைப் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அவள் அங்கேயே தங்கியிருப்பதை இவர்கள் சரியாகப் புரிந்து கொள்வார்களா? அதுவும் மாடியில், ஜேசனோடு. அந்தக் கவலையெல்லாம் இவளுக்குத்தான் இருந்திருக்கும் போலும். 
 
“இன்னைக்கு நைட் என்ன டின்னர் பண்ணட்டும் மேடம்?” கேத்தரின் தன்னிடம் நேரடியாகக் கேட்க நான்சி திகைத்துப் போனாள். 
 
“என்னையா கேட்டீங்க?!”
 
“இந்த வீட்டுல இனி என்னப் பண்ணுறதா இருந்தாலும் உங்களைத்தான் கேட்கணுங்கிறது கிரேஸ் மேடமோட உத்தரவு.”
 
“ஓ!” திகைத்த நான்சி கிரேஸை பார்க்க பெருமிதத்தோடு புன்னகைத்தார் பெரியவர்.
 
“உங்களுக்கு என்னப் புடிக்குமோ சொல்லுங்க மேடம், பண்ணிடுறேன்.”
 
“நான்சின்னு கூப்பிடுங்களேன், ப்ளீஸ்.”
 
“ஐயையோ!” சிரித்தபடி கேத்தரின் கிரேஸை பார்க்க அவர் கண்களில் அனுமதி தெரிந்தது.
 
“சரிம்மா, நைட்டுக்கு என்னப் பண்ணட்டும்?”
 
“ஜே க்கு என்னப் புடிக்குமோ அதையே பண்ணிடுங்களேன்.” இளையவளின் பதிலில் கேத்தரினின் முகம் மலர்ந்து போனது. காரணம் புரியாமல் நான்சிதான் குழம்பிப் போனாள்.
 
“அப்ப ராபர்ட் சார் சொன்னது சரிதான், நான்சியும் ஜேசனும் சின்ன வயசிலேர்ந்தே ரொம்பப் பாசமா இருப்பாங்கன்னு கதை கதையா எங்கிட்டச் சொல்லித்தானே இருக்காங்க, இல்லையா மேடம்?” கேத்தரின் சத்தமாகச் சொல்ல லூசியும் இப்போது நான்சியை பார்த்துப் புன்னகைத்தார். இவர்களின் பாஷை புரியாமல் நான்சி திருதிருவென விழித்தாள். 
 
‘ராபர்ட்டை இந்தப் பெண்மணிக்குத் தெரியும் என்றால்… நீண்ட நாட்களாக இவர்களிடம் இவர் வேலை பார்க்கிறாரா?!’ பதில், ஆமென்பது போல இருந்தது அவர் பேச்சு.
 
“ஜேசனும் நீங்களும் ஒன்னா ஸ்கூல்ல படிச்சது, அதுக்கப்புறம் டீம்ல இடம் கிடைச்சதால லண்டனுக்கு தம்பி போனதுன்னு அடிக்க சார் ஏதாவது உங்களைப்பத்திப் பேசிக்கிட்டே இருப்பாங்க, ரெண்டு நாள் லீவு கிடைச்சா நம்ம பையனுக்கு முதல்ல நான்சிதான் ஞாபகத்துக்கு வருது கேத்தரின்னு எங்கிட்டயே சொல்லிச் சிரிச்சிருக்காங்க.” சத்தமாகச் சொல்லிவிட்டு கேத்தரின் சிரிக்க, லூசியும் சிரித்தார். கணவரைப் பற்றிய பேச்சில் கிரேஸின் கண்கள் கலங்கினாலும் அவர் முகத்திலும் சிரிப்பிருந்தது. ஆனால் நான்சிக்கு மட்டும் தொண்டைக்குள் முள் சிக்கியது போல இருந்தது. மிகவும் கஷ்டமாக உணர்ந்தாள்.
 
எத்தனை இனிமையான மனிதர்கள்! இத்தனை இழந்த பின்பும் எவ்வளவு கலகலப்பாகத் தங்கள் வாழ்க்கையை வாழுகிறார்கள்! இவர்களின் இயல்பான வாழ்க்கை முறையைப் பார்க்கும்போது நான்சிக்கு வியப்பாக இருந்தது. குடும்ப கவுரவம் என்று சொல்லிக்கொண்டு எப்போதும் விறைப்பாகவே வாழும் தன் தந்தை அவளுக்கு இப்போது ஆச்சரியமாகத் தோன்றினார். பெயருக்குச் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு நான்சி மாடிக்கு வந்துவிட்டாள்.
 
ராபர்ட்டை அவளுக்குத் தெரியும், பார்த்திருக்கிறாள். சிறுவயதில் பேசியும் இருக்கிறாள். ஆனால் அத்தனை ஸ்நேகம் இருந்ததில்லை. அவரைப் பார்க்க, அவரோடு பழகத் தனக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்று எண்ணிய போது கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. இரவு உணவுக்காக கேத்தரின் வந்து அழைத்த போது பெண் மறுத்துவிட்டது. அன்றைக்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அவளைப் புரட்டிப் போட மனது வெகுவாகக் கனத்தது. ஒரு கிளாஸ் பாலை அருந்திவிட்டுத் தனிமையை நாடித் தோட்டத்துக்குப் போனாள்.
 
“மேடம், இந்நேரத்துல எதுக்குத் தோட்டம்?” லியோ வந்து நின்றான்.
 
“கொஞ்சம் வெளியே இருந்தா நல்லா இருக்கும் போல இருந்துச்சு, ஏன் லியோ? இங்கப் பயப்பிடும் படியா…”
 
“ஐயையோ! அப்பிடியெல்லாம் ஒன்னுமில்லை மேடம், உங்க முகத்துல கொஞ்சம் வருத்தம் தெரிஞ்சுது, தனியா வேற வந்தீங்களா, அதான்…”
 
“இல்லையில்லை, தூக்கம் வரலை, கொஞ்ச நேரம் இந்த இருட்டுல இருந்தா நல்லா இருக்கும் போல தோணிச்சு, அதான் வந்தேன்.”
 
“ஓ… அப்போ சரி.” லியோ போய்விட அங்கிருந்த ரோஜாச் செடிகளுக்குப் பக்கத்தில் போய் நின்றது பெண். பெரிய பெரிய சிவப்பு மலர்கள். இருளில் அத்தனைத் துலக்கமாகத் தெரியவில்லை எனினும் வெள்ளை நிற ரோஜாக்கள் பெண்ணைப் பார்த்துப் புன்னகைத்தன. ஒருகாலத்தில் அவளும் இந்த ரோஜா மலர்களைப் போல எத்தனை ஆனந்தமாக இருந்தாள்! இன்றைக்கு எல்லாமே தலைகீழாக மாறிப்போனது.
 
“சாப்பிடலை?” ஜேசனின் குரல். நிதானமாகத் திரும்பிப் பார்த்தாள் நான்சி.
 
“ஏன் சாப்பிடலை?”
 
“பசிக்கலை, மில்க் குடிச்சேன்.”
 
“அதான் ஏன்?”
 
“தெரியலை.” ஒற்றை வார்த்தையில் நான்சி பதில் சொல்ல அவளையே பார்த்திருந்தான் ஜேசன்.
 
“ஒருவேளை புதிய இடம் எங்கிறதால பசிக்கலைப் போல.” அவளே மீண்டும் விளக்கம் சொன்னாள்.
 
“ம்… தூக்கம் வருமா, இல்லை…” கேட்டபடியே அவன் அருகில் வர நான்சியின் பார்வைக் கூர்மையானது. வலிகளைச் சுமந்திருந்த அவள் மனதுக்கு அந்த நொடி அவன் அருகாமை ஆறுதலாகத்தான் இருந்தது. ஆனால் அந்த அருகாமை இன்னும் கொஞ்சம் உரிமை எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டபோது பெண் திகைத்தது. 
 
“ஜே!”
 
“தேவதைகள் வரங்களை மட்டுந்தான் குடுப்பாங்க, என்னோட தேவதை மட்டும் ஏன் எனக்குச் சாபத்தைக் குடுத்துச்சு?” அவன் கேள்வியில் அவளுக்கு அவனது பழைய பேச்சு ஞாபகம் வந்தது. நீ அனுமதித்த ஒற்றை முத்தம் எனக்கான சாபம் என்று அன்று அவன் சொன்னானே! நான்சி இப்போது ஓரடி பின்னே நகர்ந்தாள். ஆனால் அதற்கு அவன் அனுமதிக்கவில்லை. அவள் கரம்பற்றி நிறுத்தினான்.
 
“இது தப்பு ஜே.” 
 
எவ்ரிதின்ங் இஸ் ஃபெயார் இன் லவ் அன்ட் வோர் நான்சி, ஏன்? இதே தப்பை முன்னாடி ஒரு தடவை நாம பண்ணலையா?”
 
‘அப்போது உன் மனம் முழுக்கக் காதல் மாத்திரமே இருந்தது.’ பெண் நினைத்தது. ஆனால் சொல்லவில்லை. அவள் மௌனத்தைப் பார்த்து அவன் லேசாகச் சிரித்தான். பாக்கெட்டில் இருந்து எதையோ எடுத்தவன் அதைப் பெண்ணிடம் காண்பித்தான். அந்த அரையிருளிலும் அழகாக ஜொலித்தது அந்த வைர மோதிரம்.
 
“இந்த உறவுக்கு இப்போதைக்கு இந்த இருளும் அந்த நிலவும் மாத்திரந்தான் சாட்சி.”
 
“ஏன்? உங்களையும் என்னையும் படைச்ச அந்த ஆண்டவன் சாட்சியில்லையா?” எப்போதுமே நியாயம் பேசும் நான்சி அப்போதும் பேசினாள். ஆனால் அவன் தோளை மாத்திரமே குலுக்கினான். அவளது இடது கை மோதிர விரலில் ஜேசன் அந்த மோதிரத்தை அணிவித்த நொடி தூரத்தில் ஏதோவொரு மணியோசை கேட்டது. நான்சி ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டாள். அவன் அருகாமையை உணர்ந்த அடுத்த நொடி ஆண்டவனை நினைத்துக்கொண்டது பெண். 
 
காதலித்தவன் தன்னை நிறுத்த நினைக்கும் நிலை என்னவென்று பெண்ணுக்கு இப்போது தெளிவாகப் புரிந்தது. பின்வாங்க அவள் நினைக்கவில்லை. அழகானதொரு இதழ் முத்தம் பரிசாகக் கிடைத்த போது நான்சி அதை விரும்பியே ஏற்றுக்கொண்டாள். கடந்து வந்த பாதையில் தான் சுமந்த வலிகளை அவள் இதழ் சுவைத்து அவன் மறக்க நினைத்திருப்பான் போலும். நிதானமாகத்தான் விலகினான். கண்ணியத்துக்கு மட்டுமே பெயர்போன அவள் காதலன்!
 
இன்றைக்கு அவன் காதலனா? கணவனா? கள்வனா? யாரென்று புரியவில்லைப் பெண்ணுக்கு!
 
கோடி செல்வரென்றாலும் தேடும் கள்வரென்றாலும்
யாரும் ஆடிப்பாடி ஓய்ந்துவிடும் காரிருள் வேளை
உன் கன்னத்தின் மீதே நானும் கன்னம் வைப்பதால்
இவன் கள்வனென்று என்னை நீயும் எண்ணி விடாதே!