காம் 10

காலையில் கண் விழித்த நான்சி சிறிது நேரம் அப்படியே கட்டிலில் படுத்துக் கிடந்தாள். தான் படுத்திருந்த அந்தப் புதிய அறை அவளை முதலில் மருட்டியது. நேற்று நடந்தவை எல்லாம் நினைவில் வந்தபோது அந்த இள முகத்தில் அழகானதொரு புன்னகைப் பூத்தது.
 
“ஜே…” அவள் உதடுகள் அவன் பெயரை மதுரமாக உச்சரித்தது. அந்த ஒற்றை எழுத்தைச் சொல்லும் போது அந்தக் கன்னியின் குரலில்தான் எத்தனை மயக்கம்! மனதுக்குள் மத்தாப்புத் தெறிக்கப் புரண்டு படுத்தது பெண்.
 
“உங்க மனசு, அதோட வலி எல்லாமே எனக்குப் புரியுது ஜே, ஆனா இது சரிதானா? என்னோட ஜே இப்பிடி நடந்துக்கலாமா?” அவனில்லாத போது அவனிடம் இப்படிப் பேசுவது அவளுக்கு இலகுவாக இருந்தது. நேற்றைய நாளின் முத்தாய்ப்பாய் அவன் கொடுத்த முத்தம் ஞாபகம் வந்த போது நான்சிக்கு இப்போதும் என்னவோ செய்தது. எதுவோ ஞாபகம் வர எழுந்து போய் ரூம் ஜன்னலைத் திறந்தது பெண். அவள் அறையிலிருந்து பார்த்தால் வீட்டின் முன்பாக இருந்த பெரிய தோட்டம் முழுவதும் அழகாகத் தெரிந்தது. 
 
தோட்டத்தைப் பார்த்த மாத்திரத்தில் ஓடி வந்த அவன் நினைவுகளைத் தூக்கித் தூர வைத்துவிட்டு அந்த இடத்தை அளவிட்டது நான்சியின் கண்கள். வீட்டுக்கு முன்புறமாக இருந்த தோட்டம் நல்ல விசாலமாக இருந்தது. வீட்டை அடுத்துப் பெரிய பெரிய பூக்கள் பூக்கும் ரோஜாச் செடிகள் நடப்பட்டிருந்தன.
அதையடுத்து ஒரு சின்ன நீரூற்று. பெண் வடிவிலான ஒரு சிலை தன்னைச் சுற்றி நாலாபுறமும் நீரைத் தூவிக் கொண்டிருந்தது. அதையும் அடுத்துக் கொஞ்சம் புதர்கள் மண்டிக்கிடந்த இடம் காணப்பட்டது. புதர்கள் அதிகம் வளர்ந்திருந்ததால் அந்த இடத்தின் நீள அகலம் சரியாகப் பெண்ணுக்குப் புலப்படவில்லை. வீட்டை அண்மித்த பகுதியை மாத்திரம் சுத்தம் செய்துவிட்டு மீதி இடத்தை அதன் போக்கிலேயே விட்டிருந்தார்கள். இதைப் பற்றி ஆன்டனியிடம் அல்லாவிட்டால் லியோவிடம் பேசவேண்டும் என்று நினைத்தபடி காலைக்கடன்களை முடித்தாள் நான்சி. 
 
நேரம் அப்போது காலை ஏழு மணி. குளித்து முடித்துவிட்டுத் தன்னை லேசாக அலங்கரித்துக் கொண்டவள் பாடசாலைக்குத் தேவையான பொருட்களோடு அறையை விட்டு வெளியே வந்தாள். அடுத்த அறை இன்னும் மூடியே இருந்தது. அவன் எழுந்துவிட்டானா‌ இல்லையா என்று கூடத் தெரியவில்லை. கீழே இறங்கி நேராக கிச்சனுக்கு வந்தாள் நான்சி. சமையலறையும் பெரிதாகவே இருந்தது.
 
“குட்மார்னிங்.” அந்தக் குரலில் சமையலில் மும்முரமாக இருந்த கேத்தரின் சட்டென்று திரும்பிப் பார்த்தார். புன்னகை முகமாக அங்கே நான்சி நின்றிருந்தாள். இளையவளைப் பார்த்ததும் அவர் முகமும் மலர்ந்து போனது.
 
“குட்மார்னிங் நான்சி, டீ ஆர் காஃபி?”
 
“காஃபி, நானே போட்டுக்குவேன், நீங்க உங்க வேலையைக் கவனிங்க.”
 
“தான்க் யூ ம்மா.” நன்றி சொன்னவர் அவர் வேலையில் கவனமாகிவிட நான்சி தனக்குத் தேவையானதைத் தயாரிக்க ஆரம்பித்தாள்.
 
“ஸ்கூலுக்கா நான்சி?”
 
“ம்… ஆமா.”
 
“லன்ச்சுக்கு என்ன ரெடி பண்ணிக் குடுக்கட்டும்?”
 
“ம்ஹூம்… லன்ச் எப்பவுமே ஸ்கூல் கேன்டீன்லதான் சாப்பிடுவேன்.”
 
“அது எதுக்கு டா? காலையிலேயே மேடமுக்கு ஃபூட் ரெடி பண்ணுவேன், அப்பிடியே உங்களுக்கும் பண்ணிடுறேனே.”
 
“வீணா உங்களைச் சிரமப்படுத்திக்காதீங்க, எங்க கேன்டீன் ஃபூட் ரொம்ப நல்லாவே இருக்கும்.”
 
“அப்பிடியா… இல்லை, ஜேதான் நேத்து சொன்னாப்ல.”
 
“என்னன்னு?” அவசரமாகக் கேட்டாள் பெண்.
 
“நான்சி நாளைக்கு ஸ்கூலுக்கு போகும், என்னத் தேவையோ அதையெல்லாம் பண்ணிக்குடுங்க கேத்தரின்னு.”
 
“ம்…” நான்சிக்கு அவன் வார்த்தைகள் இதமாக இருந்தது. தன்னிடம் எரிந்து வீழ்ந்தாலும் தனக்கு என்னென்னத் தேவையோ அனைத்தையும் அவன் கண்காணிக்கிறான்.
 
“உங்க ஜேக்கிட்டச் சொல்லுங்க, நான்சி கேன்டீன்ல சாப்பிட்டுக்குவாளாம் ன்னு.” என்றாள் உற்சாகமாக. கேத்தரின்னின் கண்கள் இப்போது இளையவளைக் குறும்பாகப் பார்த்தன.
 
“என்னோட ஜேயா?!” என்றார் குரலில் அதிக ஆச்சரியத்தைக் காட்டி. அவர் கேலி புரிந்த பெண்ணும் இப்போது சிரித்தது. இல்லை என்பது போலத் தலையை ஆட்டியவள் தனது கட்டை விரலால் அவளையே சுட்டிக் காட்டினாள். அவன் என்னுடையவன் என்பது போல.
 
“அதுதான் உலகத்துக்கே தெரியுமே!” கேத்தரின்னோடு அதற்கு மேல் வார்த்தையாட நேரமில்லாததால் கப்பை கழுவி வைத்துவிட்டு விடைபெற்றுக் கொண்டாள் பெண்.
 
“ஆன்டனி!” கிச்சனை விட்டு வெளியே வந்தவள் குரல் கொடுக்க லியோதான் வந்து நின்றான்.
 
“ஆன்டனி காரை சர்வீஸுக்கு கொண்டு போயிருக்கான் மேடம், நான் உங்களை ட்ராப் பண்ணுறேன்.”
 
“இத்தனை ஏர்லியா சர்வீஸா?”
 
“ஆமா மேடம்.”
 
“லியோ… எங்கூடத் தோட்டத்துக்குக் கொஞ்சம் வாங்க.” என்றவள் முன்னே நடக்க லியோ ஆச்சரியப்பட்ட படி பின்னே போனான்.
 
‘இப்போது எதற்கு மேடம் தோட்டத்துக்குப் போகிறார்?!’ நான்சி எதையும் கவனிக்காமல் முன்னே போனாள். அந்த சிவப்பு ரோஜாக்கள் அடர்ந்திருந்த பகுதியை நெருங்கும் போது மாத்திரம் அவள் கால்கள் லேசாக வேகத்தைக் குறைத்துக் கொண்டன. லியோவின் முகத்தில் இப்போது மெல்லிய சிரிப்பு. ஆனால் அதைக் கவனிக்கும் நிலையில் நான்சி இல்லை. இரவின் மீதங்கள் அவளை ஆக்கிரமித்திருந்தன.
 
தங்கள் உறவில் நேற்றிரவு திளைத்திருந்த இருவரும் தங்களைச் சுற்றியிருந்த உலகைக் கவனிக்கவில்லை. ஆனால் அந்த வீட்டிலிருக்கும் அத்தனைப் பேருக்கும் நேற்றிரவு நடந்த நிகழ்வு தெரிந்திருந்தது. தோட்டத்தில் நின்றிருந்த ஜேசன் மீது அவன் மெய்ப்பாதுகாவலர்கள் கண்ணை வைத்த படியே இருந்தார்கள். எப்போதும் நான்சியுடனான அவன் பொழுதுகளில் அவர்கள் தள்ளியே நிற்பதுண்டு. ஆனால் இப்போது அதுவும் கூடாது என்பது கிரேஸின் உத்தரவு. அவருக்குத் தன் மகனின் மனதிலிருப்பது என்னவென்று தெரியவேண்டியிருந்தது. ஜேசனின் மனதில் சின்னதாகப் பழிவாங்கும் உணர்வொன்று வந்திருக்கிறதோ என்று அவர் சந்தேகப்பட்டார். 
 
இளையவர்கள் இருவரும் தங்கள் அறைக்குப் போன பிற்பாடு கிரேஸ் லியோவைத்தான் அழைத்திருந்தார். தோட்டத்தில் நடந்தவற்றை லியோ கூறும்போது அங்கே கேத்தரின்னும் இரவு நேர நர்ஸ் லூசியும் கூட இருந்தார்கள். நம்பிக்கையான பெண்கள் என்பதால் அவர்களின் முன்பாகவே ஜேசனின் சல்லாபம் விமர்சிக்கப்பட்டது.
 
“ஹௌ ஸ்வீட்!” கேத்தரின் வாய்விட்டு ஜேசனின் செய்கையைச் சிலாகிக்க, லூசி சன்னமாகச் சிரித்தார். கிரேஸுக்கும் சிரிப்பு வந்த போதும் அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. படபடவென மனதுக்குள் சில கணக்குகளை வகுத்துக் கொண்டார். 
 
“ஜே எங்க லியோ?” பெண் கேட்க லியோ நிஜத்துக்கு வந்தான்.
 
“இன்னும் எந்திரிக்கலை மேடம்.”
 
“வாட்?! நேரம் ஏழைத் தாண்டிருச்சு, இன்னும் எந்திரிக்கலையா?!”
 
“…”
 
“மார்னிங் ப்ராக்டீஸ் பண்ணுறதில்லையா இப்பல்லாம்?”
 
“…”
 
“ஏதாவது பேசுங்க லியோ!”
 
“அந்தளவுக்கு உரிமையா என்னால சார்கிட்ட எப்பிடி மேடம் பேச முடியும்?”
 
“லியோ… இந்த அஞ்சு வருஷத்துல… ஜே…” நான்சிக்கு அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டை வறண்டு போனது. அவள் கேட்க முடியாமல் தவிப்பது என்னவென்று லியோவுக்கு புரிந்தது.
 
“இல்லை மேடம், ஜெயில்ல சாரை ரொம்ப நல்லாப் பார்த்துக்கிட்டாங்க, ஜெயிலர் ஒரு லேடி, ரொம்ப நல்ல மாதிரி, ரொம்ப வயசானவங்க கிடையாது, ஒரு அம்பது வயசிருக்கும்.”
 
“ஓ…”
 
“ஆமா, சாரோட கேஸை பார்த்துட்டு எங்கிட்டயே வருத்தப்பட்டாங்க.”
 
“…”
 
“சாருக்கு ப்ராக்டீஸ் பண்ண அங்கேயே ஏற்பாடெல்லாம் பண்ணிக் குடுத்தாங்க.”
 
“ஓ…” 
 
“மார்னிங் சார் தனியா ப்ராக்டீஸ் பண்ணுவாங்களாம், ஈவ்னிங் அங்க இருக்கிற எல்லாருக்கும் சார் கோச் பண்ணுவாங்களாம்.”
 
“அப்பிடியா?!”
 
“ஆமா மேடம், ஆனா இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து இன்னும் ஒன்னுமே பண்ணலை.”
 
“ம்… அதுக்குத்தான் நான் உங்களைத் தோட்டத்துக்குக் கூப்பிட்டேன் லியோ.”
 
“சொல்லுங்க மேடம்.”
 
“இந்தப் பூச்செடிகளுக்கு அப்பால நிறைய இடம் இருக்கில்லை லியோ?”
 
“ஆமா மேடம்.”
 
“அதை நல்லா க்ளீன் பண்ணிடுங்க.”
 
“சரி.”
 
“அதுல ஒரு பிட்ச் ஐ ரெடி பண்ணிடுங்க, லைட்ஸும் போட்டுடுங்க.”
 
“சாருக்கிட்ட ஒரு வார்த்தைக் கேட்டுட்டு…”
 
“தேவையில்லை, ஜே கேட்டா நான் சொன்னேன்னு மட்டும் சொல்லுங்க, இன்னைக்கே வேலையை ஆரம்பிச்சிடுங்க, இந்த வாரக் கடைசியில எனக்கு எல்லாமே ரெடியா இருக்கணும்.”
 
“சரி மேடம்.” தலையை ஆட்டினாலும் லியோவுக்கு நான்சியின் மனதிலிருப்பது என்னவென்று பிடிபடவேயில்லை. ஆனாலும் சொல்வது நான்சி என்பதால் அந்த நிமிடமே வேலையில் இறங்கிவிட்டான். 
 
கிரேஸின் அறைக்கு வந்த பெண் அவரிடம் நலன் விசாரித்துவிட்டுப் பாடசாலைக்குக் கிளம்பிவிட்டது. நேற்றைய பத்திரிகையில் வந்த செய்தியின் தாக்கத்தால் எழுந்த சின்னச் சின்னச் சலசலப்பைப் புறந்தள்ளிவிட்டு நேராக ஹெட் டீச்சரின் அறைக்குப் போனாள் பெண். ஆஃப்டர் ஸ்கூல் க்ளப்பிற்காக அவர்கள் பாடசாலைக்கு ஒரு விளையாட்டு மைதானம் தேவைப்பட்டது. முக்கியமாக ஃபுட்பால் பயிற்சி அளிப்பதே அவர்கள் நோக்கமாகவும் இருந்தது. கடந்த ஸ்டாஃப் மீட்டிங்கில் இதைப்பற்றிப் பேச்சு நடந்திருந்ததால் நான்சி இப்போது உற்சாகமாக அதிபரின் அறைக்குப் போனாள்.
 
“குட்மார்னிங் மேடம்.”
 
“குட்மார்னிங் நான்சி.” சிரித்த முகமாக வரவேற்றார் அந்தப் பெண்மணி.
 
“எல்லாம் ஓகேயா நான்சி?” அக்கறையான விசாரிப்பு.
 
“ஓகே மேடம்.”
 
“நேத்து பேப்பர் பார்த்தேன், என்ன சொல்றதுன்னே புரியலை, கவலையா இருந்துச்சு.”
 
“…”
 
“எனி வே, அது முடிஞ்ச கதை, சொல்லுங்க நான்சி.”
 
“மேடம், பிட்ச் ஒன்னு நமக்குத் தேவைப்பட்டதில்லை, அது ரெடி மேடம்.”
 
“ரியலி?! எங்க நான்சி? எவ்வளவு பணம் கேட்கிறாங்க?”
 
“ஃப்ரீயா குடுப்பாங்க மேடம்.” என்றவள் மேற்கொண்டு விபரம் சொல்ல அந்தப் பெண்மணி கொஞ்சம் நிதானித்தார்.
 
“ப்ராப்ளம் ஒன்னும் வராதில்லை நான்சி?”
 
“ஒரு ப்ராப்ளமும் வராது, கொஞ்சம் டைம் குடுத்தீங்கன்னா ஜேசனே நம்மப் பசங்களுக்கு கோச் பண்ணுற மாதிரி நான் ஏற்பாடு பண்ணுறேன்.”
 
“வாவ்! நான்சி இது உண்மைதானா?!”
 
“கண்டிப்பா நான் பண்ணிக் குடுக்கிறேன் மேடம், இந்த சனி, ஞாயிறு ஆரம்பிக்கலாம், நீங்க பேரன்ட்ஸுக்கு தகவல் அனுப்பிடுங்க.”
 
“தான்க் யூ நான்சி, தான்க் யூ!” மிகவும் மகிழ்ந்து போனார் அந்தப் பெண்மணி. நான்சிக்கும் எதையோ சாதித்தாற் போல உற்சாகம் பிறந்தது. தனது வகுப்பை நோக்கிப் போய்விட்டாள்.
 
***
ஜேசனுக்கு அன்று விடிந்தது முதல் நடந்தது எல்லாமே கொஞ்சம் அசௌகரியமான உணர்வைக் கொடுத்தது. காலையில் கண் விழித்த போதே ஒரு சுகமான கனவோடுதான் கண் விழித்திருந்தான். கனவின் தொடர்ச்சியாக அள்ளி அணைக்க அவளை அருகில் தேடிய போது அங்கே அவளில்லை.
கண்ணைத் திறக்காமலேயே எழுந்து கட்டிலில் சாய்ந்தமர்ந்தான். நேற்றைய இரவும் அவள் கொடுத்த சுகமும் அவன் நினைவில் வந்து மோதியது.
 
‘அந்த ஒற்றை முத்தத்தில் இத்தனைச் சுகமா?!’ கண்ணை மூடியபடியே அந்த இன்பத்தை மீண்டும் மீட்டிப் பார்த்தான். அவள் இப்போது பக்கத்தில் இருந்தால் சுகமாக இருக்கும் போலத் தோன்றியது. ஏதோ சத்தம் கேட்கக் கண்களைக் திறந்தான் ஜேசன். அவர்கள் வீட்டு வளாகத்தில் இருந்துதான் சத்தம் வந்து கொண்டிருந்தது. எழுந்து ஜன்னலைத் திறந்து பார்த்தான். தோட்டத்தில் வேலை நடந்து கொண்டிருந்தது. அவசரமாக லியோவை அலைபேசியில் அழைத்தான்.
 
“லியோ.”
 
“சொல்லுங்க சார்.”
 
“வெளியே என்ன சத்தம்?”
 
“மேடம் கார்டனை க்ளீன் பண்ணச் சொன்னாங்க சார்.”
 
“எதுக்கு?”
 
“தெரியலை சார், இன்னைக்கே வேலையை ஆரம்பிக்கச் சொன்னாங்க.”
 
“நான்சி எங்க?” 
 
“ஸ்கூலுக்கு போயிட்டாங்க.”
 
“ஓ…” அப்போதுதான் நேரத்தைப் பார்த்தான் ஜேசன். பத்து என்றது கடிகாரம். 
 
“ம்…” அத்தோடு பேச்சை முடித்துக் கொண்டான். நான்சி சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறாள் என்று லியோ சொன்ன பிற்பாடு அதை அவனால் கூட மாற்ற இயலாது. குளித்து முடித்துவிட்டுக் கீழே இறங்கிப் போனான் இளையவன்.
கிரேஸின் அறையை எட்டிப் பார்க்க இவன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாற் போல எட்டிப் பார்த்தது இளம் நர்ஸ். அவளைப் பார்த்தவுடனேயே ஜேசனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. இந்த நர்ஸை பற்றி நேற்று பேசிய போது நான்சியின் முகத்தில் தோன்றிய சினம் அவனுக்குச் சிரப்பு மூட்டியது. ஆனால் அறைக்குள் போன பிற்பாடு தனிமையில் அவன் தாய் அவனிடம் பேசிய விடயம் அத்தனை இனிப்பானதாக இளையவனுக்கு இருக்கவில்லை. 
 
“எதுக்கு இப்போ இவ்வளவு அவசரம் மாம்?” அவன் குரலில் கோபம். ஆனால் ஜேசனின் மறுப்பை கிரேஸ் காதில் வாங்கவில்லை. மிகவும் கஷ்டப்பட்டுச் சைகை மூலமாகத் தனது எண்ணத்தை மகனிடம் சொல்லி இருந்தார். அவனுக்கு இன்னும் கோபம் வந்திருக்கும் போலும். அன்னையின் அறையை விட்டுச் சடாரென்று வெளியே வந்துவிட்டான். பிற்பகல் நான்கு மணிபோல வீட்டுக்கு வந்தாள் நான்சி. ஆன்டனிதான் அழைத்து வந்திருந்தான். 
 
அவளது அறைக்குள் நுழைந்த பெண் அங்கிருந்த படியே தோட்டத்தைப் பார்த்தது. வேலைகள் பெருமட்டுக்கு முடிவடைந்திருந்தன. திருப்தியோடு குளிக்கலாம் என்று திரும்பிய பெண் அப்படியே நின்றது. அறையின் கதவை அவள் அனுமதியின்றித் திறந்த படி உள்ளே வந்து கொண்டிருந்தான் ஜேசன். அவன் செய்கையில் எந்தத் தவறும் இல்லை என்பது போல இயல்பாக உள்ளே வந்து கொண்டிருந்தான். ஆனால் பெண் அதை அசௌகரியமாக உணர்ந்தது. ஆனாலும் மறந்தும் அவள் உணர்வுகளை வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
 
“நான்சி, இன்னைக்கு வெளியே போலாமா?” அந்தக் கேள்வியில் நான்சி கொஞ்சம் திகைத்தாள். இவனோடு எப்படி அவள் வெளியே போக முடியும்? யார் கண்ணிலாவது பட்டால் அடுத்த நாள் பத்திரிகையின் தலைப்புச் செய்தி அதுவாகவே இருக்கும். ஆனால் அவன் விரும்புவதும் அதுதானோ?! 
 
“போலாம் ஜே.” எங்கே என்று கூட அவளால் கேட்க முடியவில்லை. 
 
“கொஞ்சம் ஷாப்பிங் பண்ணலாம்.”
 
“சரி.” மனதுக்குள் ‘ஷாப்பிங்கா?!’ என்ற திகைப்பு ஏற்பட்ட போதும் பெண் மௌனமாகச் சம்மதித்தது. தான் கொண்டு வந்திருந்த வெண்ணிற லேஸ் ஆடையை அவள் குளித்துவிட்டு உடுத்திக்கொண்டு வந்த போது ஜேசனின் கண்கள் அவளை ஒரு நொடி அதிகமாகவே பார்வையிட்டது. ஹாலில் நின்றிருந்தவன் பெண் அவளது அறையை விட்டு வெளியே வந்ததும் அவளோடு இணைந்து கொண்டான்.
 
“ஆன்ட்டிக்கிட்டச் சொல்லிட்டு வந்திர்றேன்.” கிரேஸின் அறைப்பக்கமாக நகரப் போனவளின் கரம் பிடித்துத் தடுத்தான் ஜேசன்.
 
“தேவையில்லை, அப்புறமாச் சொல்லிக்கலாம்.” அவசரமாக மறுத்தவன் அவளைக் காருக்கு அழைத்து வந்தான். காரை எடுக்க வந்த ஆன்டனியிடம் கீயை வாங்கியவன் அவனையும் ஓரங்கட்டினான்.
 
“ஜே… ரிஸ்க் எடுக்காதீங்க.”
 
“நீ முதல்ல ஏறு.” அவளின் வாயை அடைத்தவன் காரை ஸ்டார்ட் செய்தான். நான்சிக்கு ஒன்றுமே புரியவில்லை. வாக்குவாதம் செய்யாமல் ஏறிக்கொண்டாள். இவர்கள் சென்ற ஜாக்குவாரை தொடர்ந்து இன்னொரு ஜாக்குவாரில் ஆன்டனியும் லியோவும் அமர்ந்திருந்தார்கள். ஜேசன் தடுத்த போதும் அவர்கள் கடமையைச் செய்ய அவர்கள் மறக்கவில்லை.
 
கார் அந்தப் பிரபல ஷாப்பிங் மாலின் முன்பாகப் போய் நின்றது. நான்சி இதற்கு முன்பாக அந்த இடத்துக்கு ஒருமுறை வந்திருக்கிறாள். வந்ததோடு மாத்திரம் சரி, வெறும் வின்டோ ஷாப்பிங் செய்துவிட்டுப் போய்விட்டாள். ஏனென்றால் அங்கிருக்கும் கடைகள் அனைத்தும் மிகவும் பிரபலமான உலகத்தரம் வாய்ந்தவை. ஜேசனை அவள் திரும்பிப் பார்க்க அவன் காரை பார்க் பண்ணுவதில் மும்முரமாக இருந்தான். 
 
அன்டர் கிரவுண்ட் பார்க்கிங்கில் ஒரு ஒதுக்குப்புறமாக யாரின் கவனத்தையும் ஈர்க்காத வண்ணம் காரை நிறுத்தினான். அந்த தளத்திலிருந்தே மேலே போவதற்கான லிஃப்ட் இருந்ததால் அதில் அவன் ஏறிக் கொள்ள இவளும் உடன் சென்றாள். நேரம் மாலை ஏழைத் தாண்டி இருந்தது. இது தேவையில்லாத பயணம் என்று பெண்ணுக்குப் புரிந்தது. இருந்தாலும் அவனை எதிர்த்துப் பேச மனமில்லாமல் அமைதியாக இருந்தாள். மிகவும் பிரபலமான ஆடைகள் வடிவமைக்கும் அந்த டிசைனர் ஷாப்பிற்குள் அவளை அழைத்துச் சென்றான். அங்கு வேலை பார்ப்பவர்கள் இவனை இன்முகத்துடன் வரவேற்றார்கள். 
 
“நான் எப்பவுமே இங்கதான் எனக்குத் தேவையானதை வாங்குவேன், லேடீஸ் செக்ஷன் க்கு இதுவரைக்கும் வந்ததில்லை.” சொல்லிவிட்டு அவன் புன்னகைக்க நான்சியும் புன்னகைத்தாள். அந்த வசீகரம் அவளையும் சிரிக்கச் சொல்லி அழைக்கிறதே! அவளால் என்னதான் செய்ய முடியும்?!
 
“உனக்கு என்னெல்லாம் பிடிச்சிருக்கோ எடுத்துக்கோ நான்சி.”
 
“ஜே…”
 
“டிசைன் ஏதாவது சேன்ஞ் பண்ணணும்னாலும் நீ சொல்லு, உனக்கு எது புடிக்குதோ அதைப் பண்ணிக் குடுப்பாங்க.” அவளைப் பேச விடாமல் அவனே பேசி முடித்தான். ஒவ்வொரு ஆடையின் விலையும் மிகவும் அதிகமாக இருந்தது. ஒரு ஆடைக்கு இவ்வளவு பணத்தைச் செலவு செய்யப் பிடிக்காததால் நான்சி வெறும் பார்வையாளராக அந்த இடத்தை வலம் வந்தாள்.
 
“ஹேய் நான்சி, இது நல்லாருக்கு.” வேண்டுமென்றே அவள் நின்றிருந்த இடத்துக்கு வந்தவன் அவள் பார்த்துக் கொண்டிருந்த ஆடையை அவள் பின்புறமாக நின்று பார்வையிட்டான். கண்கள் மாத்திரம் ஆடையில் இருக்க அவன் கைகள் இரண்டும் அவளது இடையை வளைத்தது. நான்சி இதை எதிர்பார்த்திருந்தாள். அந்த வார இறுதியில் ஷாப்பிங் போகலாம் என்று சொன்னவன் அன்றைக்கே வெளியே அழைத்து வந்த போதே பெண்ணுக்கு லேசாகச் சந்தேகம் வந்தது. ஜேசன் எதற்கோ அடிப்போடுகிறான் என்றும் புரிந்தது.
 
“ஜே… இது பப்ளிக் பிளேஸ்.”
 
“ஸோ வாட் டார்லிங்!” அவன் சரசம் கொஞ்சம் அத்துமீறியது. அவள் கழுத்து வளைவில் பிறர் அறியா வண்ணம் அவன் முகம் புதைந்தது. 
 
“ஜே… ப்ளீஸ்…”
 
“அம்மாக்கிட்ட என்ன சொன்னே?” சட்டென்று கேட்டான் அவன்.
 
“நானா?” அவள் குழம்பினாள்.
 
“ம்… நீயேதான்.” இடை‌ வளைத்திருந்த அவன் கை எல்லை மீறிப் போகவும் அவனிடமிருந்து அவசரமாக விலகினாள் பெண்.
 
“ஜே!” அவள் குரல் இப்போது அவனைக் கண்டித்தது.
 
“அம்மாக்கிட்ட என்ன சொன்னே?” அவன் குரலிலும் இப்போது உஷ்ணம்.
 
“நான் எதுவுமே சொல்லலையே ஜே.”
 
“நீ எதுவுமே சொல்லாமத்தான் இன்னைக்கு என்னைக் கூப்பிட்டுப் பேசினாங்களா?”
 
“ஜே… நான் சொல்றதைக்…” நான்சி விளக்கம் சொல்ல முயன்ற போது அவர்களைக் கடந்து போன ஒரு இள வயதுக் கும்பல் ஜேசனை இனங்கண்டு கொண்டது. 
 
“ஹேய்! ஜேசன் ராபர்ட்!” கூக்குரலோடு இளையவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்ள அவர்களின் தனிமை அத்தோடு பறிபோனது. கடையின் செக்யூரிட்டி ஓடி வந்து ஜேசனை சூழ்ந்து கொள்ள அவர்களை விலக்கியவன் அந்த இளையவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டான். ஆசையாக அவர்கள் அவனது ஆட்டோகிராஃப் கேட்க கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான். அதற்கு மேலும் அங்கிருப்பது ஆபத்து என்று புரிய நான்சியை அழைத்துக் கொண்டு காருக்கு வந்துவிட்டான் ஜேசன். காரை ஸ்டார்ட் செய்யாமல் வலது புறங்கையால் கண்ணை மூடியபடி அமர்ந்திருந்தான்.
 
“ஜே…”
 
“நேத்து நைட் நடந்ததை அம்மாக்கிட்டச் சொன்னியா?” இப்போதும் அவளைப் பார்காமல் கண்மூடியபடியே கேட்டான்.
 
“இல்லை ஜே, நான் எதுவும் ஆன்ட்டிக்கிட்டச் சொல்லலை.”
 
“நீ சொல்லாமலா அவங்க இன்னைக்குக் கல்யாணம் பத்தி எங்கிட்டப் பேசினாங்க?” 
 
“என்னக் கல்யாணம்?!” நான்சிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. காரை சட்டென்று ஸ்டார்ட் செய்தவன் அதன் பிறகு அவளோடு பேசவில்லை. ஆன்டனியும் லியோவும் இப்போதும் இவர்களைப் பின் தொடர்ந்தார்கள். லேசாக இருள் பரவ ஆரம்பித்திருந்தது. நகரை விட்டு வெளியே காரை செலுத்தியவன் கொஞ்சம் ஒதுக்குப்புறமாக இருந்த பார்க்கில் காரை நிறுத்தினான். 
 
“வீட்டுக்குப் போலாம் ஜே.”
 
“போலாம், நீ முதல்ல இறங்கு.” முதலில் இறங்கியவன் அவள் பக்கக் கதவைத் திறந்து விடவும் எதுவும் பேச முடியாமல் இறங்கினாள் நான்சி. அந்த இடம் ஆள் அரவமற்று அமைதியாக இருந்தது.
 
“நீ சொல்லலைன்னா வேறு யாரு சொன்னா?” 
 
“அது எனக்குத் தெரியாது, ஆனா நான் சொல்லலை ஜே.” சட்டென்று ஜேசனின் பார்வை சற்றுத் தொலைவில் நின்றிருந்த மற்றொரு ஜாக்குவாரின் மேல் பாய்ந்தது.
 
“இவனுங்க வேலையா இது?” இப்போது இளையவனின் முகத்தில் லேசான புன்னகைத் தோன்றியது.
 
“இதையெல்லாமா பார்க்கிறானுங்க?” அவன் கேள்வியில் நான்சி தலையைக் குனிந்து கொண்டாள். அவள் வெட்கம் அவனை வசீகரித்திருக்கும் போலும். அருகே வந்தவன் அவளைத் தன்னருகே இழுத்துக் கொண்டான்.
 
“வீட்டுல இருந்தாத்தானே அந்தத் தடியனுங்க பார்ப்பாங்க, இப்பப் பார்க்க முடியாதில்லை.”
 
“ஏன்? இப்பவும் அங்க நிற்கிற கார்லதானே இருக்காங்க, பார்க்க முடியாதா?” அவள் விலகவும் அங்கிருந்த அடர்ந்த மரமொன்றின் பின்னே அவளை இழுத்துக்கொண்டான் ஜேசன். நேற்றுச் சுவைத்த இன்பம் அவனுக்கு இன்றைக்கும் தேவைப்பட்டிருக்கும் போலும். அவள் அனுமதி இன்றியே எடுத்துக் கொண்டான். 
 
“நான்சி…”
 
“…”
 
“அம்மா சொல்றது இப்போ நடக்காது.” 
 
“நான் அது நடக்கணும்னு எதிர்பார்க்கலை ஜே.”
 
“ஆனா என்னோட தேவைகள் இதோட நிற்காது நான்சி.” அவன் சொன்ன போது நான்சி சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். 
 
“ஜே!”
 
“கல்யாணம் இப்போதைக்கு வேணாம்.”
 
“ஏன்?”
 
“கல்யாணம் பண்ணினாத்தான் நான்சி எனக்குக் கிடைப்பாளா?”
 
“இது தப்பு ஜே.”
 
“ஏற்கனவே உங்கிட்டச் சொன்னதுதான் நான்சி, காதல்ல எதுவும் தப்பில்லை, என்னைப் பொறுத்தவரை எதுவுமே தப்பில்லை.”
 
“…”
 
“உனக்கும் எனக்கும் நடுவுல இருக்கிற உறவுக்கு நான் சொன்ன இந்த இரவும் நிலவும், நீ சொன்ன அந்த ஆண்டவனும் சாட்சியா இருந்தாப் போதும் நான்சி.”
 
“…” 
 
“எனக்கு என்னோட நான்சி வேணும்.” அவன் பிடியில் ஆணித்தரமாக அவன் நிற்க அவள் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள்.
 
“நீ எனக்கு இன்னமும் பதில் சொல்லலை நான்சி.”
 
“ஜேக்கு இல்லைன்னு சொல்ல எங்கிட்ட எதுவுமே இல்லையே!” பதில் தெளிவாக வந்தது. அவள் சொல்லி முடித்த அடுத்த நொடி ஜேசன் அண்ணார்ந்து வானம் பார்த்தான். அவன் விழிகள் மூடியிருந்தது. அந்த முகத்தில் அத்தனை வலி. ஆனால் அது ஒரு நொடிதான் நிலைத்திருந்தது. அடுத்த நொடி அவன் முகம் முழுவதும் சந்தோஷப் பூக்கள் பூத்திருந்தன.
 
“நான்சி!” போதையோடு வந்து வீழ்ந்தது அந்த வார்த்தை. அடுத்து வந்த ஐந்து நிமிடங்களில் இனி அவளோடு அவன் வாழ இருக்கும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று காட்டினான் ஜேசன். கோடு தாண்டிய அவன் தீண்டல்கள் முதலில் அவளைப் புரட்டிப் போட்டது. பாட்டியின் முகம் ஞாபகம் வந்தது. அடுத்தாற் போல அவனுக்கு நேர்ந்த அநீதங்கள் ஞாபகம் வந்த போது மனதுக்குள் உருவெடுத்த சஞ்சலம் நீங்கி அமைதி தோன்றியது. 
 
இப்போது பெண்ணும் அவனோடு முழுமனதாக ஒட்டி உறவாடியது. இதற்கு மேல் அங்கு தாமதித்தால் அவன் எந்த எல்லைக்கும் போவான் என்று தோன்றவே நான்சி அவனிடமிருந்து விலகினாள். 
 
“நான்சி…” பொம்மையைத் தொலைத்த குழந்தையின் தவிப்பு அவனிடம். 
 
“போலாம் ஜே.” கலைந்து கிடந்த அவன் கேசத்தைக் கோதிவிட்டது பெண். ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டு இருவரும் காரை நோக்கி நடந்தார்கள்.
 
உயிர் கொண்டு வாழும் நாள்வரை 
இந்த உறவுகள் வேண்டும் மன்னவா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!