gaanam11

gaanam11

காம் 11

அன்று வெள்ளிக்கிழமை. பாடசாலையிலிருந்து வந்த நான்சி மிகவும் குதூகலமான மனநிலையில் இருந்தாள். அது ஆங்கிலேயர்களின் இயல்பு. வார இறுதியைக் கொண்டாட அவர்கள் வெள்ளிக்கிழமை மாலையே ஆரம்பித்துவிடுவார்கள். நன்றாக ஷாம்பூ போட்டுக் குளித்து அழகிய சிவப்பு நிற ஆடை ஒன்றை அணிந்து கொண்டது பெண். அவளின் பால் வண்ண மேனிக்கு அந்த நிறம் மிகவும் எடுப்பாக இருந்தது.
 
“குட் ஈவினிங் ஆன்ட்டி.” கீழே இறங்கி வந்தவள் நேராக கிரேஸின் அறைக்கு வந்திருந்தாள். மிகவும் சிரமப்பட்டு இளையவளுக்குப் பதில் வணக்கம் சொன்னார் பெரியவர். 
 
“டீ குடிச்சிட்டீங்களா ஆன்ட்டி?”
 
“ம்ஹூம்…” இல்லை என்பது போலத் தலையை ஆட்டினார் கிரேஸ்.
 
“நான் போய் கொண்டு வர்றேன்.” என்றவள் நேராக கிச்சனுக்கு வந்தாள். அங்கே கேத்தரின் ட்ரேயை ஆயத்தம் செய்து கொண்டிருக்க மாலை நேரத்து நர்ஸ் கிரேஸுக்கு தேவையானவை அனைத்தையும் தயார் பண்ணிக் கொண்டிருந்தார்.
 
“மிஸஸ் லூசி.” இளையவளின் குரலில் கிச்சனில் நின்றிருந்த இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். 
 
“சொல்லுங்க நான்சி.”
 
“ஆன்ட்டியோட உடல்நிலையில‌ ஏதாவது முன்னேற்றம் இருக்கா?”
 
“நிச்சயமா இருக்கு, உங்க ஆன்ட்டி இன்னும் கொஞ்சம் முன்னாடி இப்ப மாதிரி என்னோட ஒத்துழைச்சிருந்தாங்கன்னா நான் எப்பவோ அவங்களை எழுந்து உட்கார வெச்சிருப்பேன்.”
 
“ஓ… என்னாச்சு?”
 
“அதையேன் கேட்கிறீங்க, உங்க ஆன்ட்டிக்கு அவங்கப் பையனைப் பார்த்ததுக்கு அப்புறமாத்தான் எழும்பி உட்காரணுங்கிற எண்ணமே வந்திருக்கு, அதுக்கு முன்னாடியெல்லாம் படுத்த படுக்கைதான்.”
 
“ஓ…”
 
“ஆமா, புருஷன் இல்லாத சோகம், புள்ளைக்கும் இந்த நிலைமை, எல்லாமாச் சேர்த்து அவங்களை அடிச்சுப் படுக்கையில தள்ளிடுச்சு.” இது கேத்தரின்.
 
“…” நான்சிக்கு இப்போது பேச்சு வரவில்லை. நடந்த அத்தனைக்கும் காரணகர்த்தா அவள்தானே!
 
“ஆனாலும் எல்லாத்தையும் சுலபமா வழமைக்குக் கொண்டு வந்திருக்க முடியும், அதுக்கு பேஷண்ட்டும் ஒத்துழைக்கணும் இல்லையா நான்சி? இத்தனைக்கும் அவ்வளவு வயசும் இல்லை, ஜேசன் தன்னோட அம்மா கூட இல்லாட்டியும் ஆன்டனி, லியோ மூலமா உங்க ஆன்ட்டிக்கு தேவையான எல்லாத்தையும் வசதி பண்ணிக் குடுத்தாரு.”
 
“ஓ…”
 
“ஆனா இவங்க அசையல்லையே, என்னால என்னதான் பண்ண முடியும் சொல்லுங்க?”
 
“இப்போ என்ன சொல்லுறாங்க?”
 
“இப்பக் கொஞ்சம் பரவாயில்லை, அதான் பையன் வந்துட்டாரில்லை, கூடவே நீங்களும் இருக்கீங்க, கொஞ்சம் கொஞ்சமா இனி அவங்களைப் பழைய படி மாத்தணும்.”
 
“ஆன்ட்டி எப்போப் பழைய மாதிரிப் பேசுவாங்க?”
 
“அதுக்குரிய டாக்டர்ஸ் இந்த வாரத்துல இருந்து வர ஆரம்பிச்சிருக்காங்க, நீங்க ஸ்கூலுக்குப் போயிட்டதால அவங்களைப் பார்க்கலை.”
 
“அவங்க என்ன சொல்லுறாங்க?”
 
“ரொம்ப பாசிட்டிவ்வாத்தான் சொல்றாங்க, இன்னும் கொஞ்ச நாள்ல உங்க ஆன்ட்டி பழைய படி ஆகிடுவாங்க, உடம்புல இருக்கிற நோயை விட அவங்க மனசுல இருக்கிற நோய்க்குத்தான் இப்போ ட்ரீட்மெண்ட் தேவைப்படுது, அந்த மருந்தை நீங்களும் ஜேசனும் குடுங்க, மீதியை டாக்டர்ஸ் பார்த்துக்குவாங்க.” சிரித்தபடி சொல்லிவிட்டு லூசி நகர அவரோடு கேத்தரின்னும் ட்ரேயோடு போனார். 
 
நான்சிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ராபர்ட் என்ற மனிதர் அவளால் தொலைந்து போனார். அவரை ஜேசனுக்கு திரும்பக் கொடுக்க அவளால் இயலாது. ஆனால் கிரேஸ் அப்படியில்லை. இழந்த அவன் தாயை அவனுக்குத் திரும்பக் கொடுக்க அவளால் இயலும். அதுவும் நர்ஸ் இத்தனை நம்பிக்கையோடு சொல்லும்போது நிச்சயமாக கிரேஸை பழையபடி மாற்ற முடியும். உள்ளம் மகிழ்ச்சியில் பொங்க கிரேஸின் அறைக்குப் போனாள் நான்சி.
 
லூசி நாப்கினை கிரேஸின் கழுத்தில் சொருகிக் கொண்டிருந்தார். பக்கத்தில் கேத்தரின் ஒரு பௌலில் எதையோ ஏந்தியபடி நின்றிருந்தார். மாலை வேளையில் ஆன்ட்டிக்கு காஃபி கொடுக்கமாட்டார்கள் போலும் என்று எண்ணிய படி உள்ளே போனாள் நான்சி.
 
“ஆன்ட்டிக்கு காஃபி இல்லையா?”
 
“இல்லைம்மா, ரொம்ப காஃபி குடிச்சா ப்ரஷர் ஜாஸ்தி ஆயிடும், அதால மேடமுக்கு சூப்தான்.”
 
“ஓ…” நான்சி இந்தத் தகவலை மனதுக்குள் சட்டென்று குறித்துக் கொண்டாள். ஆன்ட்டி சம்பந்தப்பட்ட தகவல்கள் அனைத்தையும் இனி கவனிக்க வேண்டும். 
 
“ஆன்ட்டிக்கு நான் குடுக்கட்டுமா?”
 
“தாராளமா.” சொல்லிவிட்டுத் தன் கையிலிருந்த பாத்திரத்தை நான்சியின் கையில் கொடுத்தார் லூசி. கிரேஸை படுக்கையில் சாய்த்து உட்கார வைத்திருந்தார்கள். ஒவ்வொரு ஸ்பூனாக இளையவள் கொடுக்க கிரேஸ் சூப்பை அருந்திக் கொண்டிருந்தார்.
 
“ஏன் மேடம்?”
 
“சொல்லுங்க நான்சி.”
 
“ஆன்ட்டி ஏன் இந்த ரூமுக்குள்ளயே அடைஞ்சு கிடக்குறாங்க? கொஞ்சம் ரூமைவிட்டு வெளியே வரலாமில்லை?”
 
“ம்க்கும், அதையேன் கேட்கிறீங்க நான்சி.” இப்போது கேத்தரின் நொடித்துக் கொண்டார்.
 
“என்னாச்சு?”
 
“எத்தனை தடவைதான் அதை நாங்க சொல்லியாச்சு, இந்த வீட்டைப் பார்த்தா சாரோட ஞாபகம் வருதுன்னு மேடம் வெளிய வர்றதே இல்லை.”
 
“ஓ…” நான்சிக்கு அந்த வார்த்தைகள் லேசான வலியைக் கொடுத்தது. எல்லாவற்றுக்கும் நீயே காரணம் என்பது போல கண்ணுக்குத் தெரியாத பிம்பம் ஒன்று அடிக்கடி அவளைச் சித்திரவதைச் செய்தது.
 
“இனிமேல் அப்பிடியெல்லாம் ஆன்ட்டி சொல்லமாட்டாங்க, இன்னைக்கு அவங்களுக்கு டின்னர் நம்ம எல்லார் கூடவும்தான், அதுவும் டைனிங் டேபிள்ல.”
 
“நான்சி சொல்லி அதை மேடம் கேட்டுட்டா எங்க எல்லாருக்குமே சந்தோஷம்தானே!” லூசியும் இளையவளோடு சேர்ந்து பேச கிரேஸ் எந்த மறுப்பும் சொல்லவில்லை. அமைதியாக சூப்பை அருந்தியபடி இருந்தார். தனது காஃபியை குடித்துவிட்டு இப்போது பெண் ஜேசனை தேடிக்கொண்டு மாடிக்குப் போனது. வெளியே நடந்த தோட்ட வேலையைப் பார்த்தபடி ஜன்னலருகே நின்றிருந்தான் அவன்.
 
“ஜே…”
 
“ம்…” அவள் குரலில் அவன் திரும்பிப் பார்த்தான். தோட்ட வேலை ஆரம்பித்ததிலுருந்து ஏன், எதற்காக என்று நான்சியை அவன் ஒரு வார்த்தை கேட்கவில்லை. இது உன் வீடு, உன்னிஷ்டம் போல இருந்து கொள் என்று விட்டுவிட்டான்.
 
“சொல்லு நான்சி.”
 
“ஆன்ட்டி இன்னும் எத்தனை நாளைக்கு இப்பிடியே இருக்கப் போறாங்க?”
 
“அவங்க இப்பிடியே இருக்கணும்னு நானும் ஆசைப்படலையே.”
 
“யாருமே அப்பிடி ஆசைப்படலைதான், ஆனா அதுக்காக நீங்க என்னப் பண்ணியிருக்கீங்க?”
 
“என்னப் பண்ணலை நான்சி?! எனக்குத் தெரிஞ்சு ரொம்ப ஃபேமஸான டாக்டர்ஸ்தான் அம்மாவைப் பார்த்துக்கிறாங்க.”
 
“அது மட்டும் போதாது ஜே.”
 
“புரியலை, வேற என்னப் பண்ணணும்னு நினைக்கிற நீ?”
 
“உடம்பு மட்டும் குணமானாப் போதாது, அவங்க மனசும் குணமாகணும்.”
 
“அதுக்கு என்னோட அப்பாதான் திரும்பி வரணும், அது முடியாதே நான்சி!” இப்போது அந்த அறைக்குள் ஒரு அசாத்திய அமைதி நிலவியது. கலங்கிய கண்களை நான்சி அவனிடமிருந்து மறைத்துக் கொண்டாள். 
 
“ஆனா இப்போ நீங்க அவங்கக் கூடத்தானே இருக்கீங்க.”
 
“என்னால என்னப் பண்ண முடியும்?”
 
“ஒரு பையனால அவனோட அம்மாக்கு நிறையவே சந்தோஷங்களைக் குடுக்க முடியும்.”
 
“என்னோட முக்கால்வாசி நாள் அவங்களோடதான் கழியுது நான்சி.”
 
“உங்களோட முக்கால்வாசி நாள் அவங்களோட கழியுறது சரி, ஆனா அது சந்தோஷமாக் கழியுதா?”
 
“…”
 
“அவங்க பொழுதுகளை சந்தோஷமா மாத்தணும் ஜே, அவங்க உங்களைப் பெத்த அம்மா.” அந்த வார்த்தைகளை நான்சி சொன்ன போது இளையவனின் உடம்பு சட்டென்று விறைத்தது. தாடை இறுகியது.
 
“என்னாச்சு?”
 
“ஒன்னுமில்லை, நீ என்னப் பண்ணலாம்னு நினைக்கிறே? அதைச் சொல்லு.”
 
“ஆன்ட்டி எதுக்காக அந்த ரூமுக்குள்ளயே அடைஞ்சு கிடக்கிறாங்க? கொஞ்சம் வெளியே வரலாமில்லை.”
 
“அதை நானும் சொல்லிப் பார்த்துட்டேன், முடியாதுன்னு சொல்றவங்களை என்னதான் பண்ணுறது?” என்றான் ஒரு சலிப்புடன்.
 
“அவங்க அப்பிடித்தான் சொல்லுவாங்க, அதுக்காக நாம அப்பிடியே விட்டுற முடியுமா? நாமதான் கொஞ்சம் வற்புறுத்தி அவங்களை இந்த நிலையில இருந்து வெளியே கொண்டு வரணும் ஜே.”
 
“உனக்கு எது சரின்னு படுதோ அதை நீ செய்.”
 
“அது எனக்குத் தெரியாதா? நான் மட்டும் பண்ணினா போதாது, நீங்களும் கொஞ்சம் இதுல பங்கெடுக்கணும், ஏன்னா உங்க ஃபேமில நடந்த எத்தனையோ சந்தோஷமான நிகழ்வுகள் இருக்கும், அதையெல்லாம் நீங்கதான் ஆன்டிக்கு ஞாபகப்படுத்தணும்.”
 
“…”
 
“ரூமை விட்டு வெளியே வந்தா அங்கிளோட ஞாபகம் வருதுன்னா ரூமுக்குள்ள இருக்கும் போது மட்டும் அது வராதா? அங்கிளோட அவங்க சந்தோஷமா நாட்களைச் செலவு பண்ணின இடங்களுக்கு அவங்களைக் கூட்டிட்டுப் போங்க ஜே, அந்தச் சந்தோஷமான காலங்களைப் பத்தி அவங்கக்கிட்டப் பேசுங்க, இதெல்லாம் நீங்கதான் பண்ணணும், எனக்கு அதெல்லாம் தெரியாதில்லையா?” மூச்சு வாங்கப் பேசி முடித்த பெண்ணை ஆச்சரியமாகப் பார்த்தான் ஜேசன். உடையவன் பாராவிட்டால் ஒரு முழம் கட்டை என்று இதைத்தான் சொன்னார்களா? 
 
தனது தாய்க்கு உயர்தர மருத்துவர்கள் மூலம் வைத்தியம் பார்த்தான். அவன் நாளின் பெரும்பகுதியைத் தாயோடு செலவு செய்தான். ஆனால் அதற்கு மேல் கிரேஸ் அவனோடு ஒத்துழைக்கவில்லை. இதற்கு மேல் தன்னால் செய்ய எதுவுமே இல்லை என்று அவன் நினைத்திருக்க நான்சி பேசியது அவனை வியப்பில் ஆழ்த்தியது. மகிழ்ச்சி பொங்கியது. இவள் என்னவள் என்ற எண்ணம் அவனை வியாபித்தது. வந்த வேலை முடிந்துவிட்டது என்பது போல அவள் திரும்பி நடக்கப்போக,
 
“நான்சி.” என்றான் அவன்.
 
“சொல்லுங்க ஜே.” கிரேஸை பற்றிப் பேச இன்னும் ஏதோ இருக்கிறது போலும் என்று நினைத்த பெண் ஆவலே வடிவாகத் திரும்பினாள். அவன் கண்களில் வழிந்த காதலைப் பார்த்த போது பெண் திகைத்தது. இப்போது இப்படியொரு ரியாக்ஷனை அவனிடமிருந்து அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் எண்ணம் முழுவதும் அப்போது இருந்தது கிரேஸ் மாத்திரமே.
 
“அம்மாவுக்காக இவ்வளவு யோசிக்கிறியே, என்னைப்பத்தி நினைச்சுக்கூடப் பார்க்கமாட்டியா?” என்றான் கரகரப்பான குரலில்.
 
“நினைக்காமலா உங்கக்கூடவே வந்து இங்கத் தங்கியிருக்கேன்?”
 
“அதுமட்டும் போதுமா நான்சி?”
 
“போதாதா?” அவளும் வார்த்தைகளை அளவுக்கதிகமாக வெளியே விடவில்லை. அவன் இப்போது உதட்டைப் பிதுக்கினான். 
 
“முதல்ல அம்மாவைச் சரிபண்ணிட்டு அதுக்கப்புறமா பையனைக் கவனிக்கலாம்.” இலகுவாக‌ அப்போதைக்குப் பிரச்சனையை முடித்தவள் மெதுவாக அறையை விட்டு வெளியே போக அவள் நோக்கம் புரிந்த அவனும் புன்னகைத்தான்.
 
***
அன்றைக்கு இரவு அனைவரும் டைனிங் டேபிளில் கூடி இருந்தார்கள். முதலில் அங்கே வர மறுத்த கிரேஸை நான்சிதான் மிகவும் சிரமப்பட்டு, வற்புறுத்தி அங்கே அழைத்து வந்திருந்தாள். சக்கர நாற்காலியில் அவரை வைத்து இளையவள்தான் தள்ளிக்கொண்டு வந்தாள்.
 
“இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்பிடியே ரூம்ல அடைஞ்சு கிடக்கப்போறீங்க ஆன்ட்டி? உங்களுக்கு மூச்சு முட்டலையா?” இலகுவாகக் கேட்டபடி அவரின் கழுத்தில் நாப்கினை சொருகிவிட்டாள். இலகுவில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை அவருக்காகத் தயாரித்திருந்தார் கேத்தரின்.
 
“நான்சி சொல்றதும் சரிதானே மேடம், நோய் குணமாகணும்னு நாங்க மட்டும் நினைச்சாப் போதாது, நீங்களும் நினைக்கணும்.” இது லூசி.
 
“நாமளுந்தான் இத்தனை நாளாச் சொன்னோம், யாரும் காதுல வாங்கிக்கலை, இதைத்தான் சொல்றவங்க சொல்லணும்னு சொல்வாங்கப் போல!” கேத்தரின் வேண்டுமென்றே சத்தமாக நொடித்துக்கொள்ள அங்கிருந்த அனைவரும் சிரித்தார்கள். கிரேஸின் முகத்தில் புன்னகை இருந்தாலும் அவர் கண்கள் அந்த வீட்டையே வட்டமிட்டன. அவர் நினைவுகள் கடந்தகாலத்தில் சஞ்சரிக்கின்றன என அனைவரும் புரிந்து கொண்டார்கள்.
 
“இந்த க்ளாக்குக்குப் பின்னாடி ஒரு பெரிய கதையே இருக்கு, அது உங்களுக்குத் தெரியுமா கேத்தரின்.” ஹாலில் வைக்கப்பட்டிருந்த ஆளுயர கடிகாரத்தைக் காட்டி ஜேசன் கேட்க கேத்தரின் கண்ணை உருட்டினார்.
 
“அது என்ன தம்பி புதுக்கதை? ராபர்ட் சார் உங்க வீட்டுல நடந்த எல்லா விஷயத்தையும் எங்கிட்டப் பெருமட்டுக்குப் பேசி இருக்காரு, ஆனா இப்பிடி ஒரு விஷயத்தைச் சொல்லலையே?!” 
 
“இந்த க்ளாக்கை ஒருநாள் நான் உடைச்சிட்டேன் கேத்தரின்.”
 
“ஐயையோ!” அங்கிருந்த அனைவரின் ரியாக்ஷனும் இப்பிடித்தான் இருந்தது. ஏனென்றால் அந்தக் கடிகாரம் தங்க வேலைப்பாடோடு அத்தனை அழகாக இருந்தது.
 
“டாடி ரொம்ப ஆசையா வாங்கினது அது, விலையும் ஜாஸ்தி, அது உடைஞ்சதும் ரொம்பக் கோபப்பட்டாங்க.”
 
“எப்பிடி தம்பி உடைச்சீங்க?”
 
“வீட்டுக்குள்ள ஃபுட்பால் விளையாடினேன்.”
 
“ஹா… ஹா…” எல்லாரும் சிரிக்கப் பழைய நினைவுகளில் கிரேஸும் சிரிக்க முயன்றார். ஆனால் ஒரு எல்லைக்கு மேல் அவரால் வாய்விட்டுச் சிரிக்க முடியவில்லை. மிகவும் சிரமமாக இருக்க நிறுத்திக் கொண்டார். ஆனால் ஜேசன் அத்தோடு நிறுத்தவில்லை. செய்த பிழைக்கு அப்பா தனக்குத் தண்டனைக் கொடுத்தது, அதன் பிறகும் அவனோடு பேச மறுத்தது, அவரைச் சமாதானம் செய்ய கிரேஸ் அவருக்குப் பிடித்தமான கேக் செய்து கொடுத்தது என கதை கதையாகச் சொன்னான்.
 
“அப்பா உங்களுக்கு என்னத் தண்டனைக் குடுத்தாங்க தம்பி?” மிகவும் ஆர்வமாகக் கேட்டார் கேத்தரின்.
 
“அது…” ஜேசன் முழிக்க இப்போது கிரேஸ் உண்மையிலேயே சத்தமாகச் சிரித்தார். வாய் கோணிக் கொண்டு ஒத்துழைக்க மறுத்த போதும் அதையெல்லாம் மறந்து சிரிக்க வைத்திருந்தது மகனின் குறும்பு. அந்தத் தாயின் நெடுநாட்களுக்குப் பிறகான அந்தச் சிரிப்பை எல்லோரும் ரசித்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஜேசனின் கண்களில் கண்ணீர் நிறைந்துவிட அத்தோடு உணவை முடித்துக் கொண்டு எழுந்து போய்விட்டான். நான்சியின் கண்கள் போகும் அவனையே பார்த்திருந்தன.
 
“ரொம்ப தேங்க்ஸ் நான்சி.” 
 
“எதுக்கு?” தனது கையைப் பிடித்துக் கொண்டு நன்றி சொன்ன லூசியை ஆச்சரியத்தோடு கேட்டாள் இளையவள்.
 
“ஒரு நர்ஸா இன்னைக்கு நடந்த விஷயத்தைச் செய்ய நான் எவ்வளவோ முயற்சி பண்ணினேன், ஆனா மேடம் எனக்கு சப்போர்ட் பண்ணலை, ஆனா இன்னைக்கு நீங்க சொன்னதும் சட்டுன்னு சம்மதிச்சுட்டாங்க.” 
 
“உங்க மனசுல என்ன ஐடியா இருந்தாலும் இனி எங்கிட்டச் சொல்லுங்கம்மா, எனக்கு ஆன்ட்டி சீக்கிரமாக் குணமாகணும், அவ்வளவுதான், அதுக்காக நான் என்னப் பண்ணவும் தயார்.”
 
“ஓகே நான்சி, குட் நைட்.” லூசி போய்விட கலங்கிய கண்களோடு எழுந்து போனவனைத் தேடிக்கொண்டு மாடிக்குப் போனாள் பெண். இவள் வருகையை அவனும் எதிர்பார்த்து இருந்திருப்பான் போலும். இவளைக் கண்டதும் வேகமாக வந்து பெண்ணை இறுகக் கட்டிக் கொண்டான்.
 
“ஜே!” பெண் திகைத்துப் போனது. எந்தக் கல்மிஷமும் இல்லாத அணைப்பு. அவன் சந்தோஷத்தின் வெளிப்பாடு அது. நான்சிக்கும் அது புரிந்தது. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அவனோடு அப்படி ஒட்டிக்கொண்டு நிற்க அவளால் இயலவில்லை. மெதுவாக விலகினாள். ஆனால் அதுவெல்லாம் ஜேசனுக்கு விளங்கவில்லை.
 
“நான்சி! இன்னைக்கு அம்மாவைப் பார்த்தியா? என்னால நம்பவே முடியலை! கஷ்டமா இருந்தப்பவும் அவங்களை மறந்து சிரிச்சாங்க.”
 
“ம்…” ஆர்ப்பரித்தவனை ஆமோதித்தது பெண்.
 
“எனக்கு என்ன சொல்றதுன்னேப் புரியலை! அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு! அம்மா இப்பிடியே இருந்திடுவாங்களோன்னு ரொம்பப் பயமா இருந்துச்சு, ஆனா இல்லை நான்சி, அம்மா சீக்கிரமாவே குணமாகிடுவாங்க, எனக்கு அந்த நம்பிக்கை வந்திடுச்சு.” மீண்டும் அலையெனப் பொங்கியவன் அப்போதுதான் அவன் நின்றிருந்த கோலத்தையும் அவளின் விலகலையும் கவனித்தான். வாய்விட்டுச் சத்தமாகச் சிரித்தான். நான்சி இப்போது அவளது அறைக்குள் போனாள். பின்னோடு போனவன் அவளைப் பின்னிருந்த படியே அணைத்துக் கொண்டான்.
 
“ஜே!”
 
“ஜேதான் நான்சி, எல்லாமே ஜேக்குத்தானே நான்சி?” அவன் மகிழ்ச்சியில் சிரித்தபடி கேட்க பெண்ணுக்கு என்ன சொல்வதென்றே விளங்கவில்லை. இப்போது அவன் கன்னம் அவள் காதோடு உரசியது.
 
“ஜே… நாளைக்கு…” அவள் திக்கினாள்.
 
“நாளைக்கு என்ன நான்சி?”
 
“நான் ஒரு பெரிய சர்ப்ரைஸ்… உங்களுக்காக வெச்சிருக்கேன்.” அவன் கவனம் திருப்ப முயன்றது பெண். 
 
“ம்ஹூம்! அதான் நாளைக்குன்னு சொல்லிட்டியே, அதை நாளைக்குப் பார்த்துக்கலாம்.” அவன் கருமமே கண்ணாகினான்.
 
“ஆன்ட்டிக்காக யோசிச்சு யோசிச்சு நாம பண்ண வேண்டியது இன்னும் நிறைய இருக்கு ஜே.” அவள் மீண்டும் தன் முயற்சியைத் தொடர பொறுமையிழந்த ஜேசன் அவளைத் தன் புறமாகத் திருப்பினான். 
 
“பிடிக்கலைன்னா அதை நேரடியாச் சொல்லலாம் நான்சி, எதுக்கு இவ்வளவு சுத்தி வளைக்கிறே?”
 
“…”
 
“பிடிக்கலையா?”
 
“பிடிச்சிருக்கு.” சொன்னவளின் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களையே பார்த்தான் ஜேசன்.
 
“நான்சியை ஜேசனுக்கு எவ்வளவு பிடிக்கும்னு உனக்குத் தெரியும், ஜேசனை நான்சிக்கு எவ்வளவு பிடிக்கும்னு எனக்கும் தெரியும்.”
 
“…”
 
“உன்னை அவமானப் படுத்தணும்னோ இல்லை கௌரவக் குறைச்சலா நடத்தணும்னோ எந்த எண்ணமும் என்னோட மனசுல இல்லை நான்சி.”
 
“…”
 
“நீ நம்ப மறுத்தாலும் அதுதான் உண்மை.”
 
“அப்பிடியெல்லாம் இல்லை ஜே.”
 
“எல்லாத்தையும் இழந்தாச்சு பொண்ணே! இப்ப எனக்குன்னு இருக்கிற சொத்து நீ மட்டுந்தான், ரொம்ப நாள் உன்னைப் பார்க்காம, உன்னோட பேசாம கழிஞ்சிடுச்சு, இன்னமும் எதுக்காக இந்த இடைவெளி நான்சி? லண்டன்ல வந்து பாரு, பசங்க எப்பிடியெல்லாம் வாழ்றாங்கன்னு…” அதற்கு மேலும் பேச விடாமல் பெண்ணாகவே இப்போது அவனை நெருங்கியது. 
 
கடந்து போன கசப்பான பொழுதுகளைப் பற்றி அவன் பேசிய போது நான்சிக்கு நிகழ்காலம் மறந்து போனது. அன்றொரு நாள் தன் தோழியின் வீட்டிலிருந்து பத்திரப்படுத்தி அமீலியா கொண்டு வந்து கொடுத்த பத்திரிகை அப்போது இளையவளுக்கு ஞாபகம் வந்தது. கோர்ட் வாசலில் காவலர் இருவரோடு தலைகுனிந்த படி நடந்து போன ஜேசன் மனக்கண்ணில் தோன்றினான்.
 
அன்று அவனுக்காக அழுதது இன்று ஞாபகம் வந்தது பெண்ணுக்கு. அவனை நெருங்கியவள் நெருக்கம் காட்டினாள். இயல்பாக எம்பி அந்த இதழ்களில் முத்தம் வைத்தாள். ஜேசன் அதன்பிறகு அங்கிருந்து போகவேயில்லை!
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!