GAANAM12

காம் 12

ஜேசன் கண்விழித்த போது நன்றாக விடிந்திருந்தது. திரைச்சீலைகளையும் தாண்டிச் சூரியன் கண்ணைச் சுட புரண்டு படுத்தான் இளவல். அருகில் அவளில்லை. இரவு முழுவதும் இன்பத்தை மட்டுமே அவனுக்குக் கொடுத்த அவள் இப்போது அங்கே இல்லை. எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாத நிர்மலமான சிரிப்பு ஒன்று அவன் முகத்தில் அந்தக் கணம் தோன்றியது.
 
‘இன்னைக்குச் சனிக்கிழமைதானே! ஸ்கூலும் இல்லை, அதுக்குள்ள எழும்பி எங்கப் போயிட்டா?’ சிந்தனை செய்தபடி படுத்திருந்தவனைக் கலைத்தது அந்தச் சத்தம். தூக்கம் முழுதாகக் கலைய எழுந்து உட்கார்ந்தான் ஜேசன். அவனுக்கு மிகவும் பரிட்சயமான சத்தமது. சட்டென்று எழுந்து போய் ஜன்னலைத் திறந்து பார்த்தான். அவன் வீட்டுத்தோட்டம் ஆரவாரமாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது.
 
நான்சி துப்புரவு பண்ணிய இடத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நின்றிருந்தார்கள். இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு குழு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இன்னொரு குழு உதைபந்தாட்டம் ஆடிக்கொண்டிருந்தது. இந்தக் காட்சியைப் பார்த்த போது ஜேசனின் நாடி நரம்பெங்கும் புது ரத்தம் பாய்ந்தது. ஏதோவொரு உற்சாகம் அவனை உந்தித் தள்ள அவன் முகத்தில் இப்போது இளங்கீற்றாய் ஒரு புன்னகை. 
 
‘இதுதான் நேற்றைக்கு அவள் சொன்ன ஆச்சரியமா?’ இளையவனின் முகம் இப்போது மலர்ந்து விகசித்தது. நேற்று அவள் தன் அன்னை மேல் காட்டிய அக்கறையிலேயே ஜேசன் மகிழ்ந்து போனான். அப்படியிருக்க இப்போது பெண்ணின் கவனம் தன்மீதும் திரும்புகிறதா?! 
 
“அம்மாவைச் சரிபண்ணிட்டு மகனை என்னன்னு பார்க்கலாம்னுதானே சொன்னா? அம்மாக்கு முன்னாடியே என்னோட வேலையைக் கவனிக்க ஆரம்பிச்சுட்டாளா?” வாய்விட்டுப் பேசிச் சிரித்தவன் அவள் அறையை விட்டு வெளியே வந்தான். அவனது நேற்றைய இரவு அவள் அறையில்தான் கழிந்தது. இப்படி தினமும் அவள் அறையிலிருந்து அவனறைக்குப் பவனி வர முடியாது என்று நினைத்தவன் ஆன்டனியை அழைத்தான்.
 
“ஆன்டனி.” அவன் குரல்கொடுத்த அடுத்த நிமிடம் ஆன்டனி அவன் அருகே நின்றிருந்தான்.
 
“சொல்லுங்க சார்.”
 
“ஆன்டனி, என்னோட ரூமுக்கும் நான்சியோட ரூமுக்கும் நடுவுல டோர் ஒன்னு வெக்கணும், அதுக்கு ஏற்பாடு பண்ணு.”
 
“ஓகே சார்.” சம்மதித்த பின்புதான் ஜேசன் சொன்னதன் அர்த்தம் புரிந்தது ஆன்டனிக்கு. மருண்டு விழித்தான். அவனறிந்த அவனது முதலாளி இப்படிப்பட்டவர் அல்லவே!
 
“என்னாச்சு ஆன்டனி?”
 
“ஒன்னுமில்லை சார்… மேடம்கிட்ட ஒரு வார்த்தை…”
 
“நான் சொன்னதுக்கு என்னைக்காவது நான்சி மறுத்துப் பேசி இருக்காளா?”
 
“நான் கிரேஸ் மேடத்தை சொன்னேன்.”
 
“தேவையில்லை தேவையில்லை, முதல்ல வேலையை முடி, கேட்டா நாந்தான் பண்ணச் சொன்னேன்னு சொல்லிக்கலாம்.”
 
“ஓகே சார்.” ஆன்டனி அத்தோடு நகர்ந்து விட்டான்.
 
“மேடம்கிட்ட கேட்கப் போறானாம் இந்த மடையன், சம்மதிச்சுட்டுத்தான் மறுவேலை பார்ப்பாங்க.” தனக்குள் புலம்பியவன் குளிப்பதற்காகப் போய்விட்டான். அன்று சனிக்கிழமை. ஞாயிறன்று யாரும் வேலைக்கு வரமாட்டார்கள். திங்கட்கிழமைதான் வேலை நடக்கும். சிந்தனை செய்தபடியே குளித்து முடித்தவன் ஒரு ட்ராக் சூட்டை அணிந்து கொண்டான். அவன் அறையின் ஜன்னலிலிருந்து எட்டி வெளியே பார்த்த போது மாணவர்களோடு மாணவர்களாக அவளும் உதைபந்தாட்டத்தில் லயித்திருந்தாள். கூந்தலை உயரத் தூக்கிக் கட்டி, வியர்த்துக் கொட்டியபடி ட்ராக் சூட்டில் அவள் நின்றிருந்த கோலம் அவனை வெகுவாக ஈர்த்தது. எதைப்பற்றியும் யோசிக்காமல் கீழிறங்கிப் போனான் ஜேசன்.  
 
அன்னையின் அறையை எட்டிப் பார்க்க அங்கே யாருமில்லை. வியந்தபடி இவன் நின்றிருக்க லியோ அங்கே அவசரமாக வந்தான். 
 
“அம்மா எங்க லியோ?”
 
“எல்லாரும் வெளியே கிரவுண்ட்ல இருக்காங்க சார்.”
 
“அம்மா அங்க என்னப் பண்ணுறாங்க?!” சிரித்தபடி கேட்டான் ஜேசன். கூடச் சேர்ந்து சிரித்த லியோவும்,
 
“அதையேன் கேட்கிறீங்க சார், மேடம், கேத்தரின், நர்ஸ் எல்லாரும் அங்கதான் இருக்காங்க.” என்றான்.
 
“ஓஹோ! கேத்தரின்னும் அங்கதானா?! அப்ப இன்னைக்கு என்னோட மார்னிங் காஃபிக்கு நான் என்னப் பண்ணுறது?”
 
“இதோ கூப்பிடுறேன் சார்.”
 
“இல்லையில்லை.” நகரப்போன லியோவை அவசரமாகத் தடுத்தான்.
 
“அவங்களும் என்ஜாய் பண்ணட்டும், நான் அப்புறமா காஃபி குடிச்சுக்கிறேன்.” சொல்லிவிட்டு வெளியே வந்தான் ஜேசன். 
 
“சார், நிறைய பேரண்ட்ஸும் வந்திருக்காங்க, நீங்க இப்போ அங்கப் போறது சரியா வருமா?”
 
“பரவாயில்லை லியோ, ஸ்கூல் பசங்கதானே, அதால ப்ராப்ளம் ஒன்னும் வராது.” சொல்லிவிட்டு நேராக மைதானம் போல இருந்த அந்த இடத்துக்குப் போனான் ஜேசன். கொஞ்சம் பெரிய பிள்ளைகள் என்பதால் மூன்று ஆசிரியர்கள் மாத்திரமே நின்றிருந்தார்கள். நான்காவதாக நான்சி. மாணவர்களின் ஆரவாரமும் விசில் சத்தமும் இவனை என்னவோ செய்தது. எல்லாவற்றையும் மறந்துவிட்டு தன் இளமைக் காலத்தை நோக்கிப் போய்விட்டான் அந்த விளையாட்டு வீரன்.
 
அவனது தந்தை இதுபோலப் பல பயிற்சிகளுக்கு அவனை அழைத்துப் போனதுண்டு. பயிற்சி முடியும் வரை மகனோடு கூடவே நிற்பார் ராபர்ட். வீடு திரும்பும் போது தந்தையும் மகனும் அன்றைய ஆட்டத்தைப் பற்றி விவாதிப்பார்கள். ஜேசனின் தவறுகளைத் தந்தை சுட்டிக் காட்டுவார். நிதானமாக விளக்கிச் சொல்வார். விளையாட்டில் ராபர்ட்டுக்கு நல்ல அனுபவம் இருந்ததால் அவர்கள் பொழுது இனிமையாகக் கழியும். 
 
“ஹே! ஜேசன்!” அந்தக் கலகலப்பான சத்தத்தில் கலைந்தவன் சுற்றுப்புறத்தைக் கவனித்தான். இத்தனை நேரமும் கலகலவென்றிருந்த மைதானம் இப்போது பரபரப்பாகக் காட்சியளித்தது. விளையாட்டை மறந்து இப்போது அத்தனைப் பேரும் இவனையே பார்த்திருந்தார்கள். இளையவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்கள் கூட இவன் அவர்களோடு பேசிவிட மாட்டானா என்ற ஏக்கத்தோடு பார்த்திருந்தார்கள். ஜேசன் ஏதோ ஞாபகம் வந்தவன் போல தனது தாயைத் திரும்பிப் பார்த்தான். சக்கர நாற்காலியில் தனது மைந்தனைப் பெருமைப் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தார் கிரேஸ். உள்ளுக்குள் எதுவோ ஒன்று நிறைந்து போக இப்போது நான்சியை பார்த்தான் இளையவன்.
 
‘நான் கொடுத்திருக்கும் இந்த அழகான ஆச்சரியம் உனக்குப் பிடித்திருக்கிறதா?’ என்பது போல நின்றிருந்தது பெண். நேற்றைய இரவு இப்போது இவனுக்கு மறந்து போனது. இதுவரை நேரமும் அவனை வியாபித்து நின்ற காதலெனும் உணர்வு காணாமல் போய்விட்டது. தனது கால்களைக் கட்டுப்படுத்த இப்போது அவன் வெகு பிரயத்தனப்பட்டான். 
 
அடுத்து ஜேசனின் நகர்வு என்னவாக இருக்கும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க நான்சியின் அருகில் போனவன் அவள் தன்னிடம் பந்தைக் கொடுப்பாள் என்று எண்ணியிருந்தான். ஆனால் அதைப் பொய்ப்பித்த பெண் அவனைத் தாண்டிக்கொண்டு பந்தை இலக்கை நோக்கி எடுத்துச் செல்ல முயன்றது. ஆனால் இவனை பிட்ச்சில் ஏமாற்றுவது அவ்வளவு சுலபமல்லவே! கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நான்சியின் கால்களில் இருந்த பந்து இப்போது ஜேசனின் கால்களுக்கு இடம் மாறியிருந்தது.
 
“ஹேய்!” அத்தனைப் பேரும் மகிழ்ச்சி பொங்க ஆர்ப்பரிக்க அந்தக் கணம் நான்சி உவகைப் பொங்கச் சிரித்தாள். அவனிடம் மீண்டுமொரு தோல்வி. ஆனால் ஆனந்தமயமான தோல்வி. அதன் பின் சிறிது நேரம் அந்த இடத்தில் மாணவர்களின் சந்தோஷ ஆரவாரமும் விசில் சத்தமும் அமர்க்களப்பட்டது. பயிற்சி நேரம் முடிவடைந்து போக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் ஜேசனோடு வந்து பேசினார்கள். புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். ஆட்டோகிராஃப் வாங்கினார்கள். எல்லா ஆரவாரமும் நிறைவுற்ற போது மணி முற்பகல் பதினொன்று.
 
“அடேயப்பா! தம்பி என்னமா விளையாடுறீங்க?!” சொன்ன கேத்தரினை குறும்போடு பார்த்தான் ஜேசன்.
 
“மேடம் இப்பவாவது எனக்கொரு காஃபி குடுப்பீங்களா?” அவன் கேட்ட பிறகுதான் அவனைச் சார்ந்த பெண்களுக்கு அது நினைவுக்கே வந்தது. கிரேஸின் பார்வை கேத்தரினை கேள்வி கேட்டது.
 
“ஐயையோ! இதோ… இதோ போறேன் மேடம், இதோ… ஒரு நிமிஷம் தம்பி…” திணறியவர் கிச்சனை நோக்கி ஓட்டமெடுக்க லிடியா சிரித்தாள். அந்த இளம் நர்ஸின் சிரிப்பை நான்சி ரசிக்கவில்லைப் போலும், சட்டென்று உள்ளே நகர்ந்துவிட்டாள். 
 
“வாவ் ஜேசன்! அமேசிங்! உங்க விளையாட்டை மிஸ் பண்ணாம டீவியில பார்த்திருக்கேன், ஆனா இதுதான் ஃபர்ஸ்ட் டைம் நேர்ல பார்க்கிறது.” நான்சி அவர்களைக் கடந்து செல்லும் போது இளம் நர்ஸ் உளற ஆரம்பித்திருந்தது. ஜேசனுக்கு இதுவெல்லாம் பழகிப்போன விஷயமென்பதால் சாதாரணமாக ஏற்றுக் கொண்டான். ஆனால் நான்சியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு லிடியா உள்ளே போக நான்சியை திரும்பிப் பார்த்தான் இவன். கோபம் நடையில் வெளிப்பட மாடிக்குச் செல்லும் படிகளில் ஏற ஆரம்பித்திருந்தாள் பெண். இவன் போவதற்குள்ளாக விடுவிடுவென்று மாடியை அடைந்திருந்தாள். சற்று வேகமாக நடந்தவன் அவளை எட்டிப் பிடித்து அப்படியே கட்டி அணைத்துக் கொண்டான்.
 
“விடுங்க ஜே.” அவள் குரலிலும் அவ்வளவு கோபம்.
 
“ஹா… ஹா… எதுக்கு இவ்வளவு கோபம் நான்சி?” ஜேசனின் ஆனந்தச் சிரிப்பில் அந்த இடமே அதிர்ந்தது.
 
“அப்பிடியெல்லாம் ஒன்னுமில்லை, ப்ளீஸ்… என்னை விடுங்க.” அவள் அவனிடமிருந்து விடுபடுவதிலேயே குறியாக இருந்தாள்.
 
“ஈவினிங் வர்ற நர்ஸ் கூட நல்லாத்தானே பேசுறே? ஏன் இந்தப் பொண்ணை மட்டும் உனக்குப் பிடிக்கமாட்டேங்குது?! ஒருவேளை… பொறாமையோ?” அந்தப் பொறாமை என்ற வார்த்தையைக் கொஞ்சம் கிசுகிசுப்பாகக் கேட்டான் ஜேசன். ஆனால் இப்போது நான்சியின் முகத்தில் ஒரு மிடுக்குத் தெரிந்தது. அவள் முகத்தையே பார்த்திருந்த அவன் கண்களில் அந்த நொடி அவள் பாவம் பார்த்து ஆச்சரியம் படர்ந்தது.
 
“இந்த லிடியா இல்லை, உலகத்துல இருக்குற எந்த அழகி வந்து ஜேசன் முன்னாடி நின்னாலும் ஜேசனோட பார்வை இந்த நான்சியை தாண்டி வேற எங்கயும் போகாது.” அவள் பேச்சில் தெரிந்த கர்வத்திலும் வார்த்தைகளை அவள் உதிர்த்த தொனியிலும் ஜேசனின் ஒற்றைப் புருவம் ஏறி இறங்கியது. 
 
“அடேயப்பா! எத்தனைக் கர்வம்?!” அவன் வேண்டுமென்றே ஆச்சரியம் காட்டினான்.
 
“ஆமா, கர்வந்தான்… இந்தக் கர்வத்துக்கு எல்லா விதமான தகுதியும் இருக்கு, கர்வப்பட எனக்கு உரிமையும் இருக்கு.” 
 
“உரிமை எனக்கும் இருக்கு நான்சி.” சரசமாகச் சொன்னவன் அவள் இதழ்களோடு இதழ் உரசினான்.
 
“காலையில எந்திருச்சுப் பார்த்தா டீச்சரை காணோம், சனிக்கிழமை அதுவுமா என்னை இப்பிடி அம்போன்னு விட்டுட்டுப் போலாமா? ம்?” அவன் நெருக்கம் இன்னும் அதிகமானது.
 
“நான் நேத்தே சொன்னேனே ஜே, உங்களுக்கொரு சர்ப்ரைஸ் இருக்குன்னு, நீங்கதான் அது என்னன்னு என்னைச் சொல்ல விடாம நாளைக்குப் பார்த்துக்கலாம்னு சொன்னீங்க.”
 
“ஆமாமா, நல்ல நேரத்துல நீ நேத்துப் பேச ஆரம்பிச்சே.” எல்லைமீறி அலைந்த அவள் கைகளைப் பிடித்துத் தடுத்தவள்,
 
“அப்ப இப்போப் பேசலாமா?” என்றாள் சிரித்தபடி.
 
“நான்சி…” சிறுபிள்ளைப் போலச் சிணுங்கியது ஜேசனின் குரல்.
 
“ஒவ்வொரு சனி, ஞாயிறும் இப்பிடிப் பசங்க இங்க வருவாங்க.”
 
“சரி.”
 
“எங்க ஸ்கூல் ஏற்கனவே ஒரு இடம் தேடிக்கிட்டுத்தான் இருந்தாங்க, எனக்கு நம்ம வீட்டைப் பார்த்ததும் சட்டுன்னு இந்த ஐடியா தோணிச்சு, அதனாலதான் அவசர அவசரமாக க்ளீன் பண்ணச் சொன்னேன்.”
 
“ம்… உனக்கு எது சரின்னு படுதோ அப்பிடியே செய், இதெல்லாம் எதுக்கு எங்கிட்டச் சொல்றே.”
 
“விஷயம் இவ்வளவுதான்னா உங்கக்கிட்ட எதுக்கு விளக்கம் சொல்லப் போறேன்.” அவள் பேசிய தினுசில் ஜேசன் சிரித்தான்.
 
“அப்போ இன்னும் என்னமோப் பெருசா வெச்சிருக்கே!”
 
“ஆமா.”
 
“சரி, சொல்லு.”
 
“அப்பப்போ பசங்களை ஜேசன் ட்ரெயின் பண்ணுவார்னு…”
 
“ஹேய்!” அவளை முழுதாக முடிக்கவிடாமல் ஜேசன் கடகடவெனச் சிரித்தான். 
 
“நான்சி, நீ என்னைப் பண்ணுறேன்னு புரிஞ்சுதான் பண்ணுறியா?”
 
“ஏன் ஜே? உங்களால முடியாதா?” 
 
“நான் இந்த வீட்டுலதான் இருக்கேன்னு இன்னும் நிறைய ஃபேன்ஸுக்கு தெரியாது பொண்ணே! இதுல இன்னைக்கு இங்க வந்தவங்க வேற என்ன ஏழரையைக் கூட்டிவெக்கப் போறாங்களோ!”
 
“ம்ஹூம்… அதெல்லாம் யாரும் ஒன்னும் பண்ண மாட்டாங்க, எங்க மேடம் எல்லாருக்கும் ஒரு மீட்டிங் வெச்சு எல்லாத்தையும் தெளிவாச் சொல்லிட்டாங்க.”
 
“எல்லாத்தையும்னா?!”
 
“எல்லாத்தையும்னா… இது யாரோட வீடு, இங்க எப்பிடி நடந்துக்கணும், பொதுவுல இங்க நடக்கிற எதையும் யாருக்கிட்டயும் பேசக்கூடாது, அப்பிடின்னு நிறைய.” அவள் சொல்லி முடிக்க ஜேசன் அவள் தலையோடு தன் தலையை முட்டினான்.
 
“நீதான் மக்குன்னு பார்த்தா உன்னோட மேடமும் மக்கா இருப்பாங்கப் போலயே! இந்நேரம் இது நான் ஜேசனோட எடுத்துக்கிட்ட செல்ஃபின்னு இந்தப் பசங்க எத்தனைப் பேர்கிட்டக் காட்டியிருப்பாங்கத் தெரியுமா? சோஷியல் மீடியால வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.”
 
“இல்லையில்லை, சோஷியல் மீடியால ஸ்கூல் சம்பந்தப்பட்ட ஃபோட்டோஸ் போடக்கூடாதுன்னு பொலிஸி இருக்கு, அது பண்ணமாட்டாங்க, ஃப்ரெண்ட்ஸ் கிட்டக் காட்டுவாங்களா இருக்கும்.”
 
“ம்…”
 
“நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலை.”
 
“நான்சி… புரிஞ்சுக்கோ, அது கஷ்டம்மா.”
 
“என்னக் கஷ்டம்? நாலு பசங்களை ட்ரெயின் பண்ணுறது உங்களுக்குக் கஷ்டமா?”
 
“நாலு பசங்களா?! இன்னைக்கு முப்பது பசங்க இங்க வந்திருந்தாங்க.”
 
“சரி, முப்பது பசங்க, இப்போ அதுக்கு என்னவாம்? உங்களால முடியுமா முடியாதா ஜே?” அவள் குரல் லேசாக உயர்ந்து அவனை இப்போது அதட்டியது.
 
“முடியாது.” வேண்டுமென்றே அவளைச் சீண்டிப் பார்த்தான் இளையவன்.
 
“ஓஹோ! முடியாதா உங்களுக்கு?! அப்போ இனிமே நானும் நிறைய விஷயங்களுக்கு முடியாதுன்னு சொல்லுவேன் ஜே!” அவள் அவனை மிரட்டினாள்.
 
“அப்பிடியா?! என்ன விஷயத்துக்கு எங்கிட்ட முடியாதுன்னு சொல்வீங்க மிஸ் நீங்க?” அவன் கேலி பண்ணவும் அவனைத் தள்ளி விட்டுவிட்டு அவளது அறைக்குள் வந்தது பெண்.
 
“ஏய்! எங்கப் போறே நீ?” அவனும் பின்னோடு வந்தான்.
 
“நான் குளிக்கணும்.” இது அவள் முணுமுணுப்பு.
 
“என்னோட அறிவுக் கொழுந்தே! இப்போதான் விளையாடி இருக்கீங்க, இவ்வளவு வேர்த்திருக்கு, கொஞ்சம் பொறுத்துத்தான் குளிக்கணும்.” அது அவளுக்கும் தெரிந்திருந்ததால் பெண் நிதானித்தது. 
 
“நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலை மிஸ்.”
வேண்டுமென்றே அவளை இப்போது வந்து இறுக்கி அணைத்துக் கொண்டான் ஜேசன். 
 
“சொல்லு, ஜேசனுக்கு இல்லைன்னு சொல்ல எங்கிட்ட எதுவுமேயில்லைன்னு அன்னைக்கு டயலாக்கெல்லாம் விட்டே! இன்னைக்கு என்னாச்சு?” அவன் கேள்வியில் அவள் புன்னகைத்தாள்.
 
“சிரிச்சு மழுப்பாதே, பதில் சொல்லு.”
 
“நீங்களுந்தான் நான் கேட்டதுக்கு மாட்டேன்னு சொன்னீங்க.”
 
“அதுவும் இதுவும் ஒன்னா?”
 
“இல்லைத்தான்… ப்ளீஸ் ஜே, எனக்காகச் சரின்னு சொல்லுங்களேன், மேடம்கிட்ட வேற வாக்குக் குடுத்துட்டேன்.” அவள் மீண்டும் கெஞ்சினாள்.
 
“முடியாது.” அவன் அழுத்திச் சொல்லவும் அவள் முகம் விழுந்துவிட்டது.
 
“சரி.”
 
“என்ன சரி? ஒழுங்கா பதில் சொல்லு.”
 
“நான் கேட்டதை நீங்கப் பண்ண வேணாம்.”
 
“அப்போ மேடம் என்ன செய்யறதா உத்தேசம்?”
 
“அன்னைக்குச் சொன்னதுதான் இன்னைக்கும்.”
 
“என்னவாம்?”
 
“ஜேக்கு இல்லைன்னு சொல்ல எங்கிட்ட எதுவுமேயில்லை.”
 
“உண்மையாவா?” அவன் அவளை ஆழம் பார்த்தான்.
 
“ம்…” புன்னகைத்த அந்த இதழ்களோடு கொஞ்ச நேரம் இழைந்தான் இளையவன். அவனோடு சில நொடிகள் இசைந்து நின்றவள் மெதுவாக அசைந்து விலகினாள். அதை அனுமதிக்காதவன் அவளை இன்னும் கொஞ்சம் ஆழம் பார்த்தான்.
 
“ஜே!” அந்த அதட்டலில் ஒரு புன்னகையோடு விலகியவன் அந்த நொடி அவளை இறுக அணைத்துக் கொண்டான். அவன் எதை மறுத்தாலும் அவனுக்கு அவள் எதையும் மறுக்கப் போவதில்லை. அவள் அன்பின் ஆழமது. எல்லாவற்றையும் தாண்டிய மகிழ்ச்சி மட்டுமே அந்த அணைப்பில் தெரிந்தது.
 
“இப்போ என்னவாம்?” இது அவள்.
 
“ரெண்டு நாளெல்லாம் முடியாது பொண்ணே! சனிக்கிழமை மட்டும் ஓகேன்னு உங்க மேடம்கிட்டச் சொல்லிடு.”
 
“நிஜமாவா?!”
 
“நீ கேட்டு எதை நான் இல்லைன்னு சொல்லியிருக்கேன்?!” அவள் பாணியில் இப்போது அவனும் பதில் சொன்னான்.
 
“வாக்குக் குடுத்ததே அந்த நம்பிக்கையிலதானே.” அவள் இப்போது கிளுக்கிச் சிரிக்க அவனும் சிரித்தான்.
 
“ஜேசன்! ப்ரேக் ஃபார்ஸ்ட் ரெடி.” கீழிருந்த படி கேத்தரின் குரல் கொடுக்க ஜேசன் வெடித்துச் சிரித்தான். 
 
“லன்ச் டைம்ல ப்ரேக் ஃபார்ஸ்ட் குடுக்குது நம்ம கேத்தரின்!” நான்சியிடம் சொன்னவன், 
 
“குளிச்சிட்டு வர்றேன் கேத்தரின்.” என்றான் இங்கிருந்த படியே சத்தமாக. 
 
“ஒன்னுமே சாப்பிடல்லை ஜே நீங்க இன்னும், போய் ஏதாவது சாப்பிட்டுட்டுக் குளிங்க.”
 
“அடிப்போடி!” என்றவன் தனியாகப் போகவில்லை. அவளையும் அள்ளிக்கொண்டு குளியலறைக்குள் போனான்.