gaanam13

காம் 13

குளித்து முடித்துவிட்டுக் கீழே இறங்கி வந்தான் ஜேசன். முகமெல்லாம் சொல்லொணாச் சந்தோஷம் ஒன்று பொங்கி வழிந்து கொண்டிருந்தது. நேராக டைனிங் டேபிளில் போய் உட்கார்ந்து கொண்டான். சுடச்சுட அவனுக்குப் பரிமாறினார் கேத்தரின்.
 
“சாரி தம்பி… நீங்களும் வந்து விளையாடினீங்களா, எனக்கு எல்லாமே மறந்து போச்சு, சாரி…”
 
“அதெல்லாம் ஒன்னுமில்லை, லியோ உங்களைக் கூப்பிடட்டுமான்னுதான் கேட்டான், நான்தான் வேணாம்னு சொன்னேன்.” பேசிய படியே உண்ண ஆரம்பித்தான் இளையவன்.
 
“ஐயையோ! நீங்க வேற, மேடம் உங்களைப் பார்த்ததும் குஷியாகிட்டாங்களா, அப்பிடியே நானும் எல்லாத்தையும் மறந்து வாயைப் பொளந்துக்கிட்டு நின்னுட்டேன்.”
 
“சரி விடுங்க, அம்மா இப்போ எப்பிடி இருக்காங்க?” ஜேசன் கேட்டதுதான் தாமதம். கேத்தரின் ஒரு பெரிய உரையே நிகழ்த்த ஆரம்பித்துவிட்டார். 
 
“அதையேன் கேட்கிறீங்க ஜேசன், மேடம் முகத்துல இப்போ சதா புன்னகைதான், அந்தப் புன்னகைக்கான முழுக் காரணமும் நான்சிதான், எனக்குச் சில நேரங்கள்ல நான்சி ஸ்கூலுக்கு போகாம வீட்டுலயே இருந்துட்டா என்னன்னு தோணுது.”
 
“ஐயையோ!” இப்போது இவன் சிரித்தான்.
 
“ஆமா தம்பி, இந்தப் பொண்ணு கூட இருந்தா மேடம் சட்டுன்னு குணமாகிடுவாங்கன்னு தோணுதுப்பா.”
 
“அப்பிடியா சொல்றீங்க?”
 
“ஆமா… முன்னாடி மேடம் சிரிக்க ரொம்பக் கஷ்டப்படுவாங்க, ஆனா இப்போப் பாருங்க, கஷ்டப்பட்டாலும் அவங்களுக்கு இஷ்டமான விஷயம் நடக்கும்போது முயற்சி பண்ணுறாங்க.” இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே நான்சியும் கீழிறங்கி வந்தாள். பெண்ணைப் பார்த்ததும் அவன் முகத்தில் குறும்பாய் ஒரு சிரிப்புத் தோன்றியது. நான்சி முயற்சி செய்து அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். 
 
“கேத்தரின், ஆன்ட்டி சாப்பிட்டுட்டாங்களா?”
 
“இன்னும் இல்லைம்மா.”
 
“ரெடியா இருக்கா?”
 
“எல்லாம் ரெடியா இருக்கு.”
 
“அப்பக் குடுங்க, நான் கொண்டுபோய் குடுக்கிறேன்.”
 
“டைமுக்கு நர்ஸ் வருவாங்க நான்சி.”
 
“பரவாயில்லை, நான் குடுக்கிறேன்.” அதற்கு மேலும் விவாதிக்காமல் கேத்தரின் உணவு ட்ரேயை நீட்ட அதை எடுத்துக்கொண்டு நகர்ந்தாள் இளையவள்.
 
“நான்சி.” இது ஜேசன். நான்சி சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.
 
“நீயும் சீக்கிரமா சாப்பிட்டு முடிச்சுட்டு ரெடியாகு.”
 
“எதுக்கு ஜே?”
 
“ஷாப்பிங் போலாம், உனக்குக் கொஞ்சம் ட்ரெஸ் எடுக்கணும்னு அன்னைக்குச் சொன்னயில்லை.”
 
“ம்…” தலையை ஆட்டிவிட்டுப் பெண் போய்விட்டாள்.
 
“நான்சிக்கு கொஞ்சம் மார்டனா ட்ரெஸ் எடுக்கணும் தம்பி, எப்பப் பார்த்தாலும் பழைய காலத்துக் கிழவிங்க மாதிரியே உடுத்துது.” கேத்தரினின் பேச்சில் ஜேசன் மீண்டும் சிரித்தான்.
 
“அவங்க வீட்டுல அப்பிடித்தான் கேத்தரின், அவங்க பாட்டி இதைத்தாண்டி நான்சியை வேற எதுவும் உடுத்த விடமாட்டாங்க, ஆனா பேத்தி மேல ரொம்பப் பாசம்.” 
 
“ஓ! பாவம் நான்சி, எல்லாரையும் விட்டுட்டு இங்க வந்து உட்கார்ந்திருக்கா.” ஏதோ நினைவில் பேசினார் கேத்தரின்.
 
“ஏன் பாவம்னு சொல்றீங்க? எப்போ இருந்தாலும் கல்யாணம் பண்ணி அவ இங்கதானே வந்திருக்கணும்?”
 
“அது சரிதான் தம்பி, ஆனாலும்… இத்தனை நாள் கூட இருந்தவங்களை விட்டுட்டு வர்றது பொண்ணுங்களுக்குக் கஷ்டந்தானே?”
 
“அதெல்லாம் ஒன்னுமில்லை, எங்கூட இருக்கிறதை அவ என்னைக்கும் கஷ்டமாவே நினைக்கமாட்டா.” ஆணித்தரமான அவன் பேச்சில் வாய்க்குள் புன்னகைத்துக் கொண்டார் கேத்தரின். நான்சியை அவர் பார்க்கவில்லையே தவிர இளையவர்களின் சிறுவயது முதலான பாசத்தை ராபர்ட் பலமுறை முன்பு கேத்தரினிடம் பேசி இருக்கிறார். அப்போதெல்லாம் நான்சியை பார்க்க வேண்டும் என்று கேத்தரின் ஆசைப்பட்டதுண்டு.
 
“இங்க வந்தது மட்டுமில்லை ஜேசன், இந்த வீட்டுல இருக்கிற எல்லாத்தையும் சரி பண்ணணும்னு அந்தப் பொண்ணு நினைக்குது, மேடமை அவ்வளவு அக்கறையாப் பார்த்துக்குது.” 
 
“ம்…” என்று ஆமோதித்தவன் மனதுக்குள் வேறு சிந்தனை ஓடியது. 
‘தன்னையுமே அவள் நன்றாகத்தான் பார்த்துக் கொள்கிறாள்.’ அதற்கு மேலும் தாமதிக்காமல் உல்லாச மனநிலையுடன் அவளோடு புறப்பட்டு வெளியே போனான் ஜேசன். எப்போதும் போல அந்த ஜாக்குவார் அவர்களைப் பின் தொடர்ந்தது. அன்றைக்கு அவளை அழைத்து வந்திருந்த அதே மாலுக்குத்தான் இன்றும் வந்திருந்தான். காரை பார்க் பண்ணிவிட்டு லிஃப்ட்டில் ஏறி இருவரும் கடைகள் இருக்கும் பகுதிக்கு வந்தார்கள். இம்முறை ஆடைத் தெரிவை அவள் கையில் ஒப்படைக்காமல் ஜேசனே களத்தில் குதித்துவிட்டான்.
 
“இதோட விலையெல்லாம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு ஜே.” அவள் வாய்க்குள் முணுமுணுத்தாள்.
 
“விலை ஜாஸ்திதான், ஆனா தரமும் நல்லதா இருக்கும், நீ ஏன் எப்பப் பார்த்தாலும் விலையைப் பத்தியே கவலைப்படுறே?” 
 
“ஒன்னு ரெண்டு போதும்.” 
 
“நீ என்னைக் கொஞ்ச நேரம் தனியா விடுறியா?” அவன் சிடுசிடுக்கவும் நான்சி அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அவனுக்குப் பிடித்ததையெல்லாம் தெரிவு செய்தவன் அவளை ஒவ்வொன்றாக அணியச் செய்தான். அழகழகான ஆடைகள். ஆனால் நான்சிக்கு இந்த மோஸ்தர்களில் எல்லாம் ஆடையணிந்து பழக்கமில்லை.
 
“உங்க பாட்டி இப்போ பார்த்தா என்ன சொல்லுவாங்க நான்சி?” அவள் சங்கடத்தைக் கவனித்தவன் வேண்டுமென்றே வம்பிழுத்தான்.
 
“நம்ம நான்சியான்னு ஆச்சரியப்படுவாங்க, ஆனா ஒன்னும் சொல்ல மாட்டாங்க.”
 
“அப்பிடியா?! அப்போ பாட்டி திருந்திட்டாங்க, நீதான் இன்னும் அப்பிடியே இருக்கேன்னு சொல்லு.” அவள் அணிந்து காட்டிய ஆடை ஒன்றை வேண்டாம் என்று ஒதுக்கியவன் இன்னொரு டிசைனை அவளிடம் நீட்டினான்.
 
“இருக்கலாம்… அமீ இப்பெல்லாம் புது டிசைன்ல ட்ரெஸ் பண்ணுவா, பாட்டி ஒன்னும் சொல்றதில்லை.”
 
“அப்போ மாற வேண்டியது நீதான் நான்சி.” அவன் நீட்டிய ஆடையை வாங்கியவள்,
 
“ம்ஹூம்… இது வேணாம் ஜே.” என்றாள் அணிந்து பாராமலேயே.
 
“டிசைன் ரொம்ப நல்லா இருக்கு.”
 
“ம்ஹூம், ரொம்ப ஷார்ட்டா இருக்கு, இதை எப்பிடி உடுத்துறது?”
 
“நான்சி!”
 
“இல்லை ஜே, ப்ளீஸ் வேணாம்.” அவள் உறுதியாக மறுத்தபோது ஜேசனால் அவளை முறைக்க மட்டுமே முடிந்தது. ஆனால் அவளுக்குப் பொருத்தமானது என்று அவன் நினைத்த அனைத்தையும் பணம் செலுத்துவதற்காக எடுத்துக் கொண்டு வந்த போது குட்டையாக இருந்த அந்த ஆடையும் கூடவே வந்ததை நான்சி கவனிக்கவில்லை. கடையின் இன்னொரு பகுதியை வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.
 
கடையை விட்டு இருவரும் வெளியே வந்தார்கள். சற்று இடைவெளி விட்டு லியோவும் ஆன்டனியும் நிற்பது தெரிந்தது. காருக்கு போகலாம் என்று ஜேசன் நினைத்த நொடி அவனை ஒரு கூட்டம் சூழ்ந்து கொண்டது. விசிறிகள் என்றால் தள்ளி நின்றிருந்த இருவரும் சட்டென்று உதவிக்கு வந்திருப்பார்கள். ஆனால் இது பத்திரிகைக் காரர்கள். ஜேசன் இதை எதிர்பார்க்கவில்லை. அன்றைய தினம் பள்ளி மாணவர்கள் எடுத்த ஒன்றிரண்டு புகைப்படங்கள் இவர்களை இங்கே வரவழைத்திருந்தது.
 
“ஜேசன், திரும்பவும் ப்ராக்டீஸ் பண்ணுறீங்களாமே? அது உண்மையா?” 
 
“பழைய டீம்ல இருந்து உங்களுக்கு அழைப்பு வந்திருக்கிறதா சொல்றாங்களே, அது உண்மையா?”
 
“ஜேசனை நாங்க திரும்பவும் பிட்ச்ல பார்க்கலாமா?” இப்படி ஏதேதோ கேள்விகள். எதற்கும் பதில் சொல்லாமல் அவசர அவசரமாக பெண்ணின் கையைப் பிடித்தபடி வேகமாக நடந்தான் ஜேசன். ஆனால் அவர்கள் அத்தனைச் சுலபத்தில் அவனை விட்டுவிடவில்லை. கூடவே நடந்தபடி இப்போது தங்கள் இலக்கை மாற்றிக் கொண்டார்கள்.
 
“மேடம், ஜேசனோட தற்போதைய மனநிலை என்ன? நீங்களாவது எங்களுக்கொரு பதிலைச் சொல்லக் கூடாதா?” கேள்வி நான்சியை நோக்கி வர ஜேசனின் கை பெண்ணின் கையை லேசாக அழுத்திக் கொடுத்தது. 
 
“ஜேசனோட இந்த நிலைமைக்கு முழுக்காரணமும் நீங்கதானே? இதுக்கான உங்களோட விளக்கம் என்ன மேடம்?” அந்தக் கேள்வியின் வீரியம் நான்சியின் நெற்றிப் பொட்டில் தாக்கியது. அவள் நடையின் வேகம் குறைய ஜேசனின் கண்கள் அவளை எச்சரித்தது.
 
‘எதுவும் பேசிவிடாதே!’ 
 
“மேடம், ஜேசனோட விளையாட்டு உலகம் உங்களால அஸ்தமிக்கிறது எந்த வகையில நியாயம்? இதுக்கு நீங்க எந்தப் பரிகாரமும் பண்ணப் போறதில்லையா?” கேள்வி பெண்ணின் உள்ளத்தைப் பதம் பார்த்தது.
நெஞ்சுக்குள் வலியொன்று பரவ நான்சி சட்டென்று நடப்பதை நிறுத்திவிட்டுத் தன் கையை அவனிடமிருந்து உருவிக் கொண்டாள். ஜேசன் இதை எதிர்பார்க்கவில்லை. கையை விடுவித்துக் கொண்டு அவள் அங்கேயே நின்றுவிட நான்கைந்து அடிகள் அவளைத் தாண்டி இவன் முன்னே போயிருந்தான். 
 
“கூடிய சீக்கிரம் ஜேயை நீங்க பிட்ச்ல பார்ப்பீங்க.” நிதானமாகச் சொன்னது பெண்.
 
“மேடம்! நிஜமாத்தான் சொல்றீங்களா? ஜேயோட ஃபிஸிகல் கண்டிஷன் இப்போ எப்பிடி இருக்கு? தொடர்ந்து விளையாட அவர் ஃபுல் ஃபிட்டா இருக்காரா?” கேள்விகள் பாய்ந்து வந்தன.
 
“ஜே இப்போ ஃபிஸிகலி, மென்டலி ரொம்ப ஃபிட்டா இருக்காரு, கூடிய சீக்கிரமே அவரோட ரசிகர்களுக்காக அவர் களத்துல இறங்குவாரு.” அதற்கு மேலும் அவளைப் பேசவிடாமல் லியோ வந்து அழைத்துப் போக கூடவே நடந்தாள் பெண். ஜேசன் அவர்களுக்கு முன்பாகவே போய் காரில் ஏறியிருந்தான். நான்சிக்காக அவன் காத்திருக்கவில்லை. கையில் வைத்திருந்த பைகளை ஆன்டனியிடம் கொடுத்துவிட்டுக் காரை கிளப்பிக்கொண்டு போய்விட்டான்.
 
“கொஞ்சம் அவசரப்பட்டுட்டீங்க மேடம்.” ஜாக்குவாரின் கதவை அவளுக்காகத் திறந்துவிட்ட லியோ சொன்னான். 
 
“சாருக்கு கோபம் வந்திடுச்சு போல, அதான் தனியாக் கிளம்பிப் போயிட்டாங்க.” பாதுகாவலர்கள் தங்கள் கருத்துக்களைச் சொன்னபடி வாகனத்தை நகர்த்த எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள் நான்சி. பேசவேண்டும் என்று அவளும் நினைக்கவில்லை. ஆனால் கூரிய அம்புகளாக கேள்விகள் துளைத்த போது அவளால் பதில் பேசாமல் இருக்க முடியவில்லை. அழுதால் நன்றாக இருக்கும் போல இருந்தது பெண்ணுக்கு. கண்களை நிறைத்த கண்ணீரை மறைத்துக் கொண்டு வீடு வரும்வரை அமைதியாக அமர்ந்திருந்தாள். 
 
வீட்டுக்கு இவர்கள் வந்த போது அங்கே ஒரு பிரளயமே வெடித்தது. ஜேசன் வீட்டு ஹாலிலேயே புலி போல நடை பயின்று கொண்டிருந்தான். மாலை நேரத்து நர்ஸிடம் வெளியே நடப்பது என்ன என்று தெரிந்து கொண்ட கிரேஸ் கூட சக்கர நாற்காலியில் வெளியே வந்திருந்தார்.
 
“நான்சி எங்க?” சைகை மூலமாக கிரேஸ் கேட்ட போதும் மகன் பதில் சொல்லவில்லை. முகம் கோபத்தில் சிவந்து போயிருக்க அப்படியே நின்றிருந்தான். அந்த ஜாக்குவார் வீட்டு வாசலில் வந்து நின்று அதிலிருந்து நான்சி இறங்கிய போது கண்கள் தெறிக்க அவளை வெறித்துப் பார்த்தான் இளையவன். கேத்தரினுக்கு ஜேசனை பார்க்கவே பயமாக இருந்தது. எதுவோ அவனை மிகவும் கோபப்படுத்தும் சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது என்று அனைவரும் புரிந்து கொண்டார்கள்.
 
“தம்பி… எது நடந்திருந்தாலும் கொஞ்சம் பொறுமையா இருங்க… நான்சி மேல எந்தத் தப்பும் இருக்காது.” கேத்தரின் நிதானமாக எடுத்துச் சொன்னார். ஒன்றாகப் போயிருந்த இருவரும் தனித்தனியாக வரும்போதே தவறு இளையவள் மேல்தான் என்று பெரியவருக்குப் புரிந்தது. அப்போது நான்சி வீட்டினுள் நுழைந்து கொண்டிருந்தாள். அவள் பின்னால் லியோ, ஆன்டனி. 
 
“என்ன நடந்ததுன்னுப் புரியாமப் பேசாதீங்க கேத்தரின்.” ஜேசனின் கர்ஜனையில் அந்த இடமே அதிர்ந்தது. உள்ளுக்குள் உதறலெடுக்க நான்சி நடந்து வந்தாள்.
 
“ஏய்! உம்மனசுல நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே?” நேரடியாக இப்போது அவன் நான்சியை பார்த்துக் கத்த அங்கிருந்த அனைவரும் திகைத்துப் போனார்கள். இது அவனின் தனிப்பட்ட சொந்தப் பிரச்சனை. அதை அத்தனைப் பேருக்கு முன்னாடியும் அவன் விசாரணை பண்ணியதில் அனைவருமே சங்கடப்பட்டார்கள். 
 
கேத்தரின் உரிமையாக அங்கேயே நின்றிருந்தார். நெடுநாட்கள் அந்தக் குடும்பத்தோடு ஒட்டி உறவாடிய உரிமை அவரை அங்கேயே நிற்கச் சொன்னது. இளையவனின் கோபத்தைப் பார்த்தவர் நிலைமை கை மீறிப் போய்விடுமோ என்று பதைபதைத்தபடி நின்றிருந்தார். ஆன்டனியும் லியோவும் இவர்களைத் தாண்டித்தான் உள்ளே போகவேண்டும் என்பதால் வாசலிலேயே நின்றுவிட்டார்கள். வயதான நர்ஸ் கிரேஸை விட்டு எங்கேயும் நகர முடியாததால் அங்கேயே நின்றிருந்தார்.
 
“தம்பி, கொஞ்சம் நிதானமாப் பேசலாம்பா.” கேத்தரின் ஓடிப்போய் ஜேசனின் கையைப் பிடித்துக் கொண்டு மீண்டும் கெஞ்சினார்.
 
“நான்தான் எதுவும் பேசாம நின்னேன்ல! உங்கிட்டயும் பேசாதே, பேசாதேன்னு கண்ணால ஜாடைக் காட்டினேன்ல! அதுக்கப்புறமும் எதுக்கு வாயைத் தொறந்தே? யாருக்கிட்டக் கேட்டு இன்னைக்கு நீயா அப்பிடியொரு வார்த்தையை விட்டே?” ஒவ்வொரு கேள்விக்கும் ஜேசனின் சத்தம் உயர்ந்து கொண்டே போனது.
 
“ஜே… சன்…” தட்டுத் தடுமாறி கிரேஸ் அழைத்தார். ஆனால் அதை அவர் மகன் காதில் வாங்கவில்லை. 
 
“நீயா உன்னோட இஷ்டத்துக்கு என்னென்னவோ சொல்றே? நான் உங்கிட்டச் சொன்னேனா திரும்ப விளையாடப் போறேன்னு?”
 
“பின்ன என்னப் பண்ணப் போறீங்க? நாலு வைன் ஃபாக்டரி வெச்சு நடத்தப்போறீங்களா?” சட்டென்று எதிர்க்கேள்வி கேட்டாள் நான்சி.
 
“நான்சி!” ஆத்திரத்தில் ஜேசன் பெண்ணை நோக்கிப் பாய்ந்தான். விட்டிருந்தால் அவளை அன்று அவன் துவம்சம் பண்ணி இருப்பான். அதற்குள்ளாக ஆன்டனியும் லியோவும் பாய்ந்து வந்து அவனைப் பிடித்துக் கொண்டார்கள். கேத்தரின் அழவே ஆரம்பித்துவிட்டார்.
 
“ஜேசன், என்ன தம்பி இதெல்லாம்? கிரேஸ் மேடத்தை பாருங்க, கலங்கிப் போய் உட்கார்ந்திருக்காங்க, ஏன் இன்னைக்கு இப்பிடியெல்லாம் நடந்துக்கிறீங்க?” ஜேசனின் ஆவேசம் சற்றும் குறையவில்லை. திமிறிய படி நின்றிருந்தான்.
 
“விடுங்க லியோ அவரை, ஆன்டனி… நீங்களும் தள்ளிப் போங்க, அப்பிடி என்னதான் பண்ணுறார்னு நானும் இன்னைக்குப் பார்க்கிறேன்.” பெண் மீண்டும் வார்த்தைகளை விட்டது.
 
“ஏம்மா நான்சி, நீயாவது கொஞ்சம் அமைதியா இருக்கப்படாதா, ரெண்டு பேரும் எதுக்கு இப்பிடி மல்லுக்கு நிற்கிறீங்க?”
 
“இல்லை கேத்தரின், இன்னைக்கு ரெண்டுல ஒன்னு எனக்குத் தெரிஞ்சாகணும், அப்பிடி நான் என்னத்தைத் தப்பாச் சொல்லிட்டேன்?”
 
“யாருக்கிட்டக் கேட்டு நீ இன்னைக்கு அப்பிடி அவங்கக்கிட்டச் சொன்னே? கூடிய சீக்கிரமே நான் விளையாட வருவேன்னு நீயா எப்பிடிச் சொல்லலாம்?”
 
“அதை அவங்க உங்கக்கிட்டத்தானே முதல்ல கேட்டாங்க? நீங்க ஏன் பதில் சொல்லாம ஓடப்பார்த்தீங்க?”
 
“நான்சி!” அவன் கர்ஜனை இன்னும் இன்னும் அதிகமானது. பெண்ணுக்கும் அவனை நாம் சினப்படுத்துகின்றோம் என்று புரிந்தது. ஆனாலும் ஆற்றுப்படுத்த மனம் அனுமதிக்கவில்லை. ஏனென்றால், அவள் அனுபவித்த வலியும் அவனுக்குக் குறையாதது.
 
“என்னோட வலி என்னன்னுப் புரியாம நீயா எதையெதையோ பேசாதே! என்னை மிருகமாக்காதே நான்சி!”
 
“ஜே… சன்…” மீண்டும் இப்போது கிரேஸ் பெருமுயற்சி செய்து மகனை அழைத்தார்.
 
“ஜேசன், மேடம் இவ்வளவு உணர்ச்சி வசப்படுறது அவ்வளவு நல்லதில்லை.” ஒரு அக்கறையுள்ள செவிலியாக லூசி இப்போது பேசினார். எல்லாவற்றையும் மறந்துவிட்டு அன்னையிடம் வந்தான் ஜேசன்.
 
“மாம், ஒன்னுமில்லை மாம், நீங்க டென்ஷன் ஆகாதீங்க.” தாயின் அருகில் மண்டியிட்டவன் அவர் கையைப் பற்றிக் கொண்டான். நன்றாக இருந்த இடது கையால் மகனின் மார்பைத் தடவிக் கொடுத்தார் அன்னை.
 
“அமை… தியா…” அதற்கு மேல் பேச அவரால் முடியவில்லை.
 
“ஓகே மாம், ஓகே.” ஜேசன் சட்டென்று இறங்கி வந்தான். இப்போது நான்சியை பார்த்து கிரேஸ் எதையோ சைகையால் காண்பிக்க அது மகனுக்குப் புரியவில்லை. லூசியை அவன் அண்ணார்ந்து பார்த்தான்.
 
“நான்சி எது பண்ணினாலும் அதுல உங்களோட நன்மை மட்டுந்தான் இருக்குமாம்.” அன்னையின் பேச்சு மகனுக்கு மொழிபெயர்க்கப்பட்டது. 
 
“ஓகே மாம்.” அதற்கு மேல் எதுவும் பேசாமல் எழுந்து மாடிக்குப் போய்விட்டான் இதுவரைப் பேயாட்டம் ஆடியவன். அந்த இடமே இப்போது ஓய்ந்து போய் கிடந்தது. கிரேஸ் இளையவளை இப்போது பார்க்க அவள் முகத்தில் கசப்பானதொரு புன்னகை.
 
‘நீயாவது என்னைப் புரிந்து கொள்கிறாயே!’ என்பது போல ஒரு பார்வைப் பார்த்துவிட்டு நான்சியும் தனதறைக்குப் போய்விட்டாள்.
 
***
நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. அன்றைய சனிக்கிழமைப் பொழுது எத்தனை ஆரவாரத்தோடு ஆரம்பித்ததோ அதற்கு எதிர்மாறான அமைதியோடு முடிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்தது. அன்றைய இரவுப் பொழுது யாரும் யாருடனும் பேசவில்லை. ஜேசனின் உணவு அவன் அறைக்கே வந்துவிட்டது. கிரேஸும் சோர்வாகத் தென்பட்டதால் நான்சி அவரது அறைக்கே டின்னரை கொண்டுபோய் உண்ணச் செய்தாள். 
 
கலகலப்பு காணாமல் போயிருந்தது. ஒருவித இறுக்கம் எல்லோரையும் சூழ்ந்திருந்தது. எரியும் நெருப்புக்கு எண்ணெய் வார்த்தாற் போல அன்றைய மாலைச் செய்தியும் அமைந்துபோனது.
 
‘ஜேசன் ராபர்ட் மீண்டும் விளையாட வருகிறார்! உறுதிப்படுத்திய காதலி!’ பரபரப்பான ப்ரேக்கிங் நியூஸ் எல்லா சானல்களிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இளையவர்கள் இருவரது முகங்களும் அவ்வப்போது தொலைக்காட்சியில் வந்து போனது. நான்சி அமைதியாக கிரேஸை பார்க்க அவர் இவளைப் பார்த்துப் புன்னகைத்தார்.
 
“சாரி ஆன்ட்டி, நான் தப்பா எதுவும் பேசலை, எனக்கு என்னோட பழைய ஜே வேணும், பிஸினஸ் பண்ண ஆயிரம் பேர் இருக்காங்க, உங்களுக்கு உடம்பு குணமாகிடுச்சுன்னா அங்கிளோட பிஸினஸை நாளைக்கு நீங்களே பார்த்துக்க முடியும், ஆனா ஜே…” இவள் மனது புரிந்தவர் போல கிரேஸும் ஆமோதிப்பாய் தலையாட்டினார். 
 
“அதானே! இதுக்குப் போயா இந்தத் தம்பி இந்த ஆட்டம் ஆடிச்சு?! இன்னைக்குக் காலையில எவ்வளவு உற்சாகமா விளையாடிச்சு! இந்த விளையாட்டு மட்டுந்தான் ஜேசனை உயிர்ப்போட வெச்சிருக்கும்.” இது கேத்தரின்.
 
“ஆனா அது அவருக்குப் புரியலையே கேத்தரின்!”
 
“விடுங்க நான்சி, நீங்க நல்லதுதான் பண்ணி இருக்கீங்க, தம்பி ஏதோ கோபத்துல கத்துது, புரிஞ்சுக்கும்.” அத்தோடு அன்றைய மாநாடு கலைந்து போனது. அவரவர் கூட்டுக்குள் ஆளுக்கொரு புறமாய் ஒதுங்கிப் போக வீடு நிசப்தமாக இருந்தது. ஹாலில் இருந்த ஆளுயர கடிகாரத்தின் ஓசை மட்டும் தங்குதடையின்றி கேட்டுக் கொண்டிருந்தது.
 
நான்சி அவன் அறைக்கதவை மெதுவாகத் திறந்தாள். அவன் மனக்கதவைப் போல அறைக்கதவும் அவள் வருகைக்காகத் தாழ்ப்பாள் இன்றித் தவமிருந்தது. அறைக்குள் லேசான புழுக்கம். அதை உணராதவன் போல தடித்த போர்வைக்குள் உறங்கிக் கொண்டிருந்தான் ஜேசன். முரட்டுக் குழந்தை போல உறங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்த போது நான்சிக்கு வலித்தது. அவன் இழந்தது அத்தனையும் தன்னால் என்று நினைத்த போது அவள் உயிர் துடித்தது. 
 
இன்று அவன் கொடுக்கும் எல்லா வலிகளையும் அவள் தாங்குவது அவனைச் சீர்படுத்தத்தான். ஜன்னலைத் திறந்து விட்டது பெண். சுகமான தென்றலொன்று இதமாக மேனி தழுவியது. அவன் இழந்தது அத்தனையும் அவனுக்குத் திரும்பக் கிடைக்க வேண்டும். அந்த முடிவில் பெண் உறுதியாக இருந்தது. 
 
அவனருகில் வந்தமர்ந்தவள் நேரத்தைப் பார்த்தாள். கடிகார முட்களிரண்டும் ஒன்றை ஒன்று நெருங்கிக் கொண்டிருந்தன. நேற்றிரவு அவள் அறையில் ஆட்டம் போட்டவன் இப்போது எதுவுமறியாத பச்சைக் குழந்தை போல கண்மூடிக் கிடந்தான்.
 
“ஜே…” நான்சியின் குரல் இதமாக வந்தது. அவன் அசையவில்லை. அவன் காதோடு குனிந்த பெண் மீண்டும் அழைத்தது.
 
“ஜே…”
 
“ம்…” லேசாக அசைந்தவன் அவள் அருகாமையை உணர்ந்து கொண்டான். அவளை இப்போது அவன் லேசாக விலக்க நினைக்க அந்தக் குயில் அவன் காதுக்குள் சங்கீதம் பாடியது.
 
“ஹாப்பி பர்த்டே ஜே.” அந்த வார்த்தைகளில் இதுவரை அவளை விலக்க நினைத்த மனது சட்டென்று சலனப்பட்டு நின்றது.
 
“ஹாப்பி பர்த்டே டார்லிங்!” நான்சியின் குரல் கண்ணீரோடு வர பக்கத்தில் இருந்த டேபிள் லேம்ப்பை உயிர்ப்பித்தான் ஜேசன். மஞ்சளொளி மங்கையை நனைத்தது. 
 
“நான்சி!” என்றான் வியப்பாக. அவள் கண்ணீர் அவனை ஆச்சரியப்படுத்தியது.
 
“அஞ்சு வருஷமா இந்த நாள்ல நான் எவ்வளவு தவிச்சிருக்கேன்னு உங்களுக்குத் தெரியுமா ஜே? இந்த வாழ்த்தை உங்கக் காதுல சொல்ல நான் எவ்வளவு துடிச்சிருக்கேன்னு உங்களுக்குத் தெரியுமா ஜே?” 
 
“நான்சி!” பெண் பேசப்பேசக் கேட்டிருந்தவன் விக்கித்துப் போனான்.
அன்றைக்கு நடந்த அத்தனைக் களேபரத்தையும் மறந்து அவளை இழுத்து அவனோடு அணைத்துக் கொண்டான். நான்சி அழ ஆரம்பித்திருந்தாள். அது ஐந்து வருடத்தின் ஒட்டுமொத்த ஆதங்கம்.
 
“அழாத நான்சி.” அவன் கை அவள் முதுகை வருடிக் கொடுத்தது.
 
“ம்…” தன்னைச் சமாளித்துக் கொண்டவள் மெதுவாக விலகினாள்.
 
“விஷ் பண்ணினே, கிஃப்ட் எங்க நான்சி?”
 
“அது… இன்னைக்கு வாங்கணும்னுதான் நினைச்சேன்… அதுக்குள்ள…” அன்றைய நிகழ்வை மீண்டும் பேச அவள் விரும்பவில்லை. உண்மையிலேயே இன்றைக்கு வெளியே கிளம்பும் போது அவனுக்குப் பொருந்தமான ஏதாவது ஒன்றை வாங்கவேண்டும் என்று நினைத்திருந்தது பெண். 
 
“வாங்கினியா இல்லையா?”
 
“ம்ஹூம்…”
 
“உனக்கே இது நியாயமா இருக்கா? சரி, கிஃப்ட்தான் வாங்கலை, கேக் வாங்கினியா?” 
 
“ம்ஹூம்… விடிஞ்சதும் எல்லாத்தையும் வாங்கலாம் ஜே.”
 
“அப்போ இப்ப எதுக்கு என்னை எழுப்பினே?” அவன் சிலுப்பிக் கொண்டான்.
 
“விஷ் பண்ணத்தான் ஜே.”
 
“அடிங்…” அவளைக் கட்டிலிலிருந்து அப்படியே கீழே தள்ளிவிட்டவன் மீண்டும் தூங்க ஆரம்பித்தான். நான்சிக்கு சிரிப்பு வந்தது. நிலத்தில் வீழ்ந்தவள் எழுந்து அவன் முதுகின் மீது படுத்துக் கொண்டாள்.
 
“நீ உன்னோட ரூமுக்கு போ.”
 
“முடியாது.”
 
“வம்பை விலை குடுத்து வாங்காதே பொண்ணே.” அவன் எச்சரித்தான்.
 
“இந்த வம்புதான் ரொம்ப அழகா இருக்கே, அதால எவ்வளவு விலை வேணும்னாலும் குடுக்கலாம்.” அவள் பேச்சில் படுத்திருந்தவன் தலை திருப்பிச் சிரித்தான்.
 
“அடடே! என் அழகான வம்பு சிரிக்குதே!” அவள் கவிதைப் போலச் சொல்ல அவளை இழுத்துத் தன் போர்வைக்குள் போட்டுக் கொண்டான் ஜேசன்.
 
“ஒரு முடிவோடதான் வந்திருக்கியா இன்னைக்கு.”
 
‘இந்த வீட்டுக்குள்ள வரும்போதே எல்லா முடிவுகளையும் எடுத்துட்டுத்தான் வந்தேன் ஜே.’ அவள் மனது பேசியது.
 
“ஹாப்பி பர்த்டே ஜே.” மீண்டும் சொன்னவள் அவன் இதழில் முத்தமிட்டாள். மீண்டும் மீண்டுமென அவள் செய்கை தொடர்ந்து கொண்டிருந்தது. ஓயாத அந்த மெல்லிய இதழொற்றலுக்கு முழுவதுமாகத் தன்னை ஒப்புக் கொடுத்திருந்தவன் சிரித்தபடியே அவளைப் பார்த்திருந்தான்.