gaanam14

gaanam14

காம் 14

அன்று திங்கட்கிழமை. பாடசாலையிலிருந்து நான்சி வீடு வரும்போதே மாலை ஆறை நெருங்கிவிட்டது. ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல் இருந்தது. அதை முடித்துவிட்டு இப்போதுதான் வீடு வந்திருந்தாள். அவள் தாமதம் பற்றி ஏற்கனவே ஜேசனுக்கு தகவல் போயிருந்தது. மிகவும் களைப்பாக உணர்ந்த பெண் நேராக சமயலறைக்குப் போனது.
 
“கேத்தரின், ஒரு டீ கிடைக்குமா?”
 
“இதோ நான்சி.” தேநீர் தயாராகும் வரை கீழிருந்த குளியலறையில் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டது பெண். உடையைக் கூட மாற்றாமல் நேராக கிரேஸின் அறைக்குப் போனவள்,
 
“குட் ஈவினிங் ஆன்ட்டி.” என்றாள் உற்சாகமாக. குளிர்ந்த நீர் முகத்தில் பட்டது மிகவும் புத்துணர்ச்சியாக இருந்தது. மாலை நேரத்து நர்ஸ் வேலைக்கு வந்திருந்தார். அவரும் அப்போது அங்குதான் நின்றிருந்தார். கிரேஸின் பதில் வணக்கத்தை எதிர்பார்த்த பெண் ஏமாந்து போனது. அந்த முகத்தில் எப்போதும் தவழும் ஸ்நேக பாவம் அன்றைக்கு இல்லை. இளையவளைப் பார்த்தாலே மலர்ந்து போகும் பெரியவரின் முகம் அன்று கூம்பிக் கிடந்தது.
 
“என்னாச்சு?” என்றாள் நான்சி கலவரப்பட்டு.
 
“இந்தாங்க நான்சி.” டீயை கொண்டுவந்து கேத்தரின் நீட்ட அதை வாங்கியவள், 
 
“கேத்தரின், ஆன்ட்டிக்கு என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்காங்க?” என்றாள். கேத்தரினின் முகத்திலும் இப்போது ஒரு சங்கடமான புன்னகைத் தோன்றியது.
 
“அது… ஒன்னுமில்லை நான்சி, ரொம்ப டயர்டா இருப்பீங்க, போய் ரெஸ்ட் எடுங்கம்மா.” பேச்சை அவர் அழகாகத் திசை திருப்புவது இவளுக்குப் புரிந்தது.
 
“ஏதாவது ப்ராப்ளமா? ஜே எங்க?”
 
“தம்பி மேலதான் இருக்கு, முதல்ல நீங்க டீயை குடிங்க.” கேத்தரினின் பேச்சுக்குச் செவி சாய்த்தவள் டீயை முதலில் பருகி முடித்தாள். எதுவோ சரியில்லை என்று தோன்றச் சட்டென்று மாடிக்குப் போனாள். ஜேசன் ஹாலில்தான் நின்றிருந்தான்.
 
“ஜே, ஏதாவது ப்ராப்ளமா?” எடுத்த எடுப்பிலேயே பெண்ணின் கேள்வி பதட்டமாக வந்திருந்தது.
 
“இல்லையே, என்னாச்சு நான்சி?” அவன் சாதாரணமாகத்தான் இருந்தான். 
 
“அப்போ ஆன்ட்டி ஏன் ஒருமாதிரியா இருக்காங்க? என்னைப் பார்த்துச் சிரிக்கக்கூட இல்லை?!”
 
“அதெல்லாம் ஒன்னுமில்லை, நீ முதல்ல போய் ட்ரெஸ் சேன்ஞ் பண்ணு.” அவன் சொல்லவும் நேராகத் தனது அறைக்கு வந்த நான்சி ப்ரேக் அடித்தது போல நின்றுவிட்டாள். அவள் அறைக்கும் அவன் அறைக்கும் இடையிலான சுவரில் அழகான கதவொன்றுப் பொருத்தப்பட்டிருந்தது. சில நொடிகள் அசையாமல் அப்படியே நின்றிருந்தவளின் அருகில் வந்தான் அவன்.
 
“எதுக்கு இவ்வளவு ஷாக் நான்சி?” 
 
“எங்கிட்டச் சொல்லவே இல்லையே!”
 
“சொல்லணும்னு தோணலை, ஏன்? உனக்கு இதுல ஏதாவது மறுப்பிருக்கா?” அவன் கேள்விக்கு அவள் சட்டென்று பதில் சொல்லி விடவில்லை. பேசும் வார்த்தைகள் சிலநேரங்களில் மனதைக் காயப்படுத்திவிடும். அவன் ஏற்கனவே ரணப்பட்டிருக்கிறான். இன்னும் அவனை நோகடிக்க அவளால் முடியாது. 
 
“ஆன்ட்டி…”
 
“அதைப்பத்தி நான் கவலைப்படலை.”
 
“ஜே… அவங்க உங்க அம்மா, கொஞ்சம் பொறுப்பாப் பேசலாமே.”
 
“இது என்னோட நியாயம் நான்சி.”
 
“புரியுது, அதைத் தப்புன்னு நானும் சொல்லலை, ஆனா இப்போதைக்கு இந்த ரகசியம் நமக்குள்ள மாத்திரம் இருக்கட்டும்னு நான் நினைச்சேன்.”
 
“ஏன்?”
 
“ஆன்ட்டியோட உடம்பு இன்னும் கொஞ்சம் பெட்டரானதும் இதையெல்லாம் அவங்கக்கிட்டச் சொல்லியிருக்கலாம் ஜே.” 
 
“இதுதான் நிதர்சனம், இது எல்லாருக்கும் தெரியுறதுல எனக்கெந்த வருத்தமும் இல்லை.” முரட்டுப் பிடிவாதம் பிடித்தான் அவன். இவனிடம் என்னவென்று பேசுவது? இளைய தலைமுறையால் இலகுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய பல விஷயங்களை மூத்த தலைமுறை மறுக்கிறது. ஏற்றுக்கொள்ளச் சிரமப்படுகிறது. ஆனால் அவற்றையெல்லாம் இவனிடம் பேச முடியாது. பேசினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டான். விவாதம் செய்வான். உனக்கும் எனக்கும் இடையில் இருக்கும் உறவுக்கு ஊரையே சாட்சியாக்க வேண்டுமா என்று கேட்பான். வானம், இரவு, நிலவு என்று இயற்கையைச் சாட்சிக்கு அழைப்பான். சட்டென்று சிரிப்பு வர நான்சி வாய்விட்டுச் சிரித்து விட்டாள்.
 
“என்னாச்சு?!” இதுவரை விறைத்துக் கொண்டு நின்றிருந்த ஜேசன் அவள் சிரிப்பது கண்டு நெற்றி சுருக்கினான்.
 
“நீங்க சொல்றதும் சரிதான், நமக்குள்ள நடக்கிறது ஆன்ட்டிக்கு தெரியுறது நல்லதுதான்.” என்றவள் ரூமுக்குள் சென்று குளிப்பதற்கு ஆயத்தமானாள்.
 
“புரியலை.” அவனும் பின்னோடு வந்திருந்தான். டவலை எடுத்துத் தோளில் போட்டபடி மாற்றுடைக்காக கப்போர்ட்டை திறந்தாள் நான்சி.
 
“புள்ளை, குட்டின்னு நாளைக்கு ஏதாவது உண்டானா என்னப் பண்ணுறதாம்?” வாய்க்குள்தான் முணுமுணுத்தது பெண். ஆனால் அவள் பேச்சை அவன் கேட்டிருந்தான்.
 
“நோ!” ஆணித்தரமாக அந்த ஒற்றை எழுத்து ஜேசனின் வாயிலிருந்து வந்தது. அதிசயப்பட்ட நான்சி அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
 
“நோ வா?!”
 
“அது நடக்காது நான்சி, இல்லை… அதுமட்டும் நடக்கவே நடக்காது.” அவன் இப்போது தடுமாறினான்.‌ அந்த முகத்தில் விரவிக்கிடந்த பதட்டம் அவளுக்குச் சுவாரஸ்யமூட்டியது. 
 
“ஏன் நடக்காது ஜே?” என்றாள் ஒரு புன்சிரிப்போடு.
 
“இல்லை!”
 
“ஏனில்லை?”
 
“இல்லைன்னா இல்லை, அதோட விடேன், எதுக்கு இப்போக் கேள்வி மேல கேள்வி கேட்கிறே?” 
 
“இங்க யாரும் அடக்கி வாசிச்ச மாதிரித் தெரியலையே, நடக்காது நடக்காதுன்னா நடக்காமப் போயிடுமா என்ன?” இப்போது அவனுக்குக் கேட்கும் படியாகவே ரகசியம் பேசியது பெண்.
 
“ஏய்! அது தப்பு…”
 
“எது தப்பு?!”
 
“கல்யாணம் பண்ணாம… எப்பிடிக் கொழந்தை?”
 
“ஓஹோ! அப்பக் கல்யாணம் பண்ணாம இப்போ சார் பண்ணுறது எல்லாம் மட்டும் நியாயமா என்ன?”
 
“நான்சி…” அவன் குரல் இப்போது வெகுவாக இறங்கி இருந்தது. கலகலவென்று சிரித்த பெண்ணை அவன் ஒருவிதத் தவிப்போடு பார்த்தான்.
 
“நான்சி ப்ளீஸ்.”
 
“உங்க நியாயம் எனக்குப் புரியலை ஜே.”
 
“உனக்கும் எனக்குமான உறவுக்குத்தான் சாட்சி தேவையில்லைன்னு நான் சொன்னேன் நான்சி, ஆனா அந்த உறவுக்கே ஒரு சாட்சி வரும்போது அதுக்கான கௌரவத்தைக் குடுக்கணும்.”
 
“ஓ…”
 
“வேணாம், நம்ம கொழந்தைக்கு அப்பிடியொரு நிலைமையை நாம உருவாக்க வேணாம்.” அவன் செய்த விதண்டாவாதம் பெண்ணுக்கு ரசிக்கும்படியாக இருந்தது. வரைமுறைகளை மீறியவனே இப்போது அதைக் கட்டிக்காக்க நினைப்பது பெரும் விந்தையாக இருந்தது. 
 
“நம்ம உறவுக்கு மட்டும் ஏன் சாட்சி தேவலை? அந்த உறவுக்கு கௌரவத்தைக் குடுக்கணும்னு ஏன் நீங்க நினைக்கலை?”
 
“நம்ம உறவுக்குச் சாட்சியாத்தான் இந்த உலகமே இருக்கே! அதைத்தான் உன்னோட அப்பா அவ்வளவு அழகா வெளிச்சம் போட்டுக் காட்டினாரே? இதுக்கு மேல இன்னும் வேற சாட்சி வேணுமா என்ன?” அவன் சுடச்சுடக் கேட்டபோது பெண்ணுக்கு யாரோ சுடுநீரை எடுத்து முகத்தில் விசிறி அடித்தாற் போல இருந்தது. அதற்கு மேலும் அங்கே நின்றிருந்தால் வார்த்தைகள் சிதறிப் போகும் என்று அவன் நினைத்திருப்பான் போலும். சட்டென்று வெளியே போய்விட்டான்.
நான்சி இப்போது விக்கித்துப் போனாள். வலித்தது, மனம் முழுவதும் மிகவும் வலித்தது. கடந்து போன காலத்தை நினைத்து நினைத்து வேதனையைக் கூட்டிக் கொள்ளாமல் குளியலறைக்குள் புகுந்தவள் நன்றாகக் குளித்துவிட்டு வெளியே வந்தாள். 
 
நேரம் ஏழைத் தாண்டி இருந்தது. கிரேஸின் உணவு நேரம் என்பதால் கீழே இறங்கிப் போனாள். பெரும்பாலான நேரங்களில் இவள்தான் அவருக்கு உணவூட்டுவது. அதை அவரும் விரும்புவதுண்டு. பேசியபடியே இருவரும் நேரம் செலவழிப்பார்கள். அந்நேரத்தில் லூசி ஒதுங்கிக் கொள்வார். 
 
இன்றைக்கும் அதுபோல டைனிங் டேபிளுக்கு வந்தாள் பெண். ஏற்கனவே கிரேஸ் சக்கர நாற்காலியில் அங்கே அமர்ந்திருந்தார். கேத்தரின் அவருக்கான உணவைக் கொண்டு வந்து மேசை மேல் வைக்க அதை இளையவள் ஓடிவந்து எடுத்துக் கொண்டாள்.
 
“நான் குடுக்கிறேன் ஆன்ட்டிக்கு.” இது வழமை என்பதால் லூசி புன்னகையோடு விலகினார். ஆனால் அதை அன்றைக்கு கிரேஸ் விரும்பவில்லைப் போலும்.
 
“லூசி…” மெல்லிய குரலில் அழைத்தார்.
 
“மேடம்?”
 
“நீங்க…” கண்களால் அவர் உணவைச் சுட்டிக்காட்டவும் அங்கிருந்த மூன்று பெண்களுக்குமே ஒருமாதிரி ஆகிப்போனது. இளையவளை கிரேஸ் தவிர்க்க நினைக்கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. லூசி ஒரு சங்கடமான பார்வையை நான்சி மீது வீச பெண் தன் கையிலிருந்த பாத்திரத்தை அவரிடம் கொடுத்துவிட்டது. கேத்தரினுக்கு நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று புரியவில்லை. 
 
“மேடத்துக்கு எப்பவுமே நான்சிதானே சாப்பாடு குடுக்கும்…” 
 
“இனி… வேணாம்…” கேத்தரின் முழுதாக முடிக்குமுன்பே கிரேஸ் பேசினார்.
 
“லூசி… போதும்…” உறுதியான வார்த்தைகள். அந்த வார்த்தைகள் ஏன் இத்தனை உறுதியாக, கோபமாக வந்து வீழ்கின்றன என்று புரிந்ததால் அங்கிருந்த யாரும் எதுவும் பேசவில்லை. அப்போதுதான் உணவுக்காக மாடியிலிருந்து கீழிறங்கி வந்தான் ஜேசன். நான்கு பெண்கள் கூடியிருந்தபோதும் அங்கு நிலவிய அசாத்திய அமைதி அவனுக்கு வியப்பாக இருந்திருக்கும் போலும்.
 
“என்ன கேத்தரின்?‌ ரொம்ப அமைதியா நிற்கிற மாதிரித் தெரியுது!” என்றான் இலகுவாக. ஒரு கேள்வி கேட்டால் ஒன்பது பதில் சொல்லும் பெண்மணி அன்று வாயடைத்துப் போய் நின்றுவிடவே ஜேசன் ஆச்சரியப்பட்டான்.
 
“என்னாச்சு?!”
 
“இனி… வீட்டுல… நான்…” கிரேஸ் மிகவும் கஷ்டப்பட்டு வார்த்தைகளைக் கோர்க்க லூசி அவரது உதவிக்கு வந்தார்.
 
“மேடம், ரொம்பக் கஷ்டப்படுத்திக்க வேணாம், அவங்க இனி இந்த வீட்டுல இருக்க மாட்டாங்களாம் ஜேசன்.” என்றார் விளக்கம் போல.
 
“இங்க இல்லாம வேற எங்க போகப் போறாங்களாம்?” இது மகன். 
 
“லண்டன்…” அவசரமாக வந்தது பதில் அன்னையிடமிருந்து.
 
“நான் இருக்கிற இடத்துலதான் நீங்க இருக்கணும்!” 
 
“நோ…” ஒற்றை எழுத்தில் பதில் சொன்ன பெண்மணி தன்னருகே லூசி கொண்டு வந்த உணவுப் பாத்திரத்தைத் தன் இடது கையால் தள்ளிவிட்டார். சூப் நிறைந்திருந்த கண்ணாடிப் பாத்திரம் தரையில் விழுந்து சிதறியது. 
 
“அப்பா… வாழ்ந்த… இங்க… தப்பு…” தன் கணவன் வாழ்ந்த வீட்டில் எந்தத் தவறும் நடக்கக்கூடாது என்று அவர் சொல்லத் துடிப்பது எல்லோருக்கும் புரிந்தது. கண்களில் திரண்ட நீர் கன்னத்தில் வழிய தலையைக் குனிந்து கொண்டாள் நான்சி. 
 
“நீயும்…” இப்போது பெரியவரின் சுட்டுவிரல் நான்சியை குறிபார்த்துக் குற்றம் சாட்டியது.
 
“எதிர்… பார்க்கலை…” இந்தத் தவறுக்கு நீயும் துணை போயிருக்கிறாயே என்ற குற்றச்சாட்டு இப்போது அவள் மீது இரக்கமில்லாமல் வீழ்ந்தது.
 
“நான்சியை எதுக்குக் குத்தம் சொல்றீங்க?” மகன் இப்போது குரலை உயர்த்த அம்மாவுக்கும் இப்போது ஆத்திரம் வந்தது. வார்த்தைகள் அதன் வரம்பை மீறி சிரமப்பட்டு வந்து வீழ்ந்தன.
 
“நான்… உன்னை… வளர்த்தவதா… சுமக்க…”
 
“மேடம்!” கண்ணீர் கரகரவென வழிய கிரேஸ் எதையோ பேச எத்தனித்த போது கேத்தரின் வந்து அவர் வாயை மூடினார்.
 
“மாம்!” ஜேசன் கூட இப்போது வாய்விட்டு அலறினான்.
 
“இல்லை… மாம்… இல்லை… உன்னோட மாம்… இல்லை…” கேவல்களோடு கிரேஸ் பேசிய பாஷையின் அர்த்தம் நான்சிக்கும் புரியவில்லை, லூசிக்கும் புரியவில்லை. ஆனாலும் கடமை லூசியை அவசரமாக அழைத்தது.
 
“மேடம், ரொம்ப உணர்ச்சிவசப்பட வேணாம், கொஞ்சம் அமைதியா இருங்க.” என்றார் அவசரமாக.
 
“செத்து… போறேன்… ராபர்ட்…” என்றவரின் கண்ணீர் கரையுடைத்துப் பெருகியது. கண்களை மூடிக்கொண்டவர் உருகி அழுதார்.
 
“நான்… சரியா… வளர்க்கலை… ராபர்ட்…” தன் கணவரிடம் பாவமன்னிப்புக் கேட்பவர் போல குழறிக் குழறிப் பேசினார் கிரேஸ். 
 
“பெத்தவ… வளர்த்திரு…” அதற்கு மேலும் அவரைப் பேசவிடாமல் கேத்தரின் கிரேஸை இறுக அணைத்துக் கொண்டார்.
 
“கேத்தரின்…” ஓவென்று அழுத தன் எஜமானியை அந்த விசுவாசமிக்க ஊழியர் ஆரத் தழுவிக் கொண்டார். 
 
“உங்க மேல எந்தத் தப்புமில்லை மேடம், நீங்க எதுக்கு அழுறீங்க?”
 
“இல்லை… இவன்… இவன்…” தன் தாயின் வார்த்தைகளில் சினங்கொண்ட இளையவன் நாற்காலியை உதறித் தள்ளிவிட்டு எழுந்து வெளியே போய்விட்டான். அதற்கு மேலும் அந்த நிலைமையில் கிரேஸை விடுவது அவருக்கு ஆபத்து என்று நினைத்த லூசி அவரை அவரது அறைக்கு அழைத்துப் போய் விட்டார். நான்சி மாத்திரம் டைனிங் டேபிளில் அமைதியாக அமர்ந்திருந்தாள். கிரேஸ் தட்டிவிட்டப் பாத்திரம் தரையில் சிதறிக் கிடக்க அதைத் துப்புரவு செய்ய ஆரம்பித்திருந்தார் கேத்தரின். 
 
நான்சிக்கு தலைக்குள் வண்டு குடைய ஆரம்பித்திருந்தது. இதுவரை அங்கே நடந்த நாடகத்தின் அர்த்தம் அவளுக்குப் புரியவில்லை. ஒரு தாய் தன் குழந்தை தவறு செய்யும்போது உன்னை நான் சரியாக வளர்க்கவில்லையே என்று பரிதவித்து அழுவது நியாயம். ஆனால் இன்று கிரேஸின் வார்த்தைகள் அதையெல்லாம் தாண்டி ஏதேதோ பேசியது போல தோன்றியது இவளுக்கு.
உன்னை நான் சுமந்து பெறவில்லை என்று கிரேஸ் எதுவோ சொன்னாரே?! என்ன மாதிரியான வார்த்தைகள் அவை?! கோபத்தில் எந்தத் தாயும் அப்படியான வார்த்தைகளைத் தன் குழந்தை மீது வீச மாட்டாள்.
 
“கேத்தரின்.” 
 
“என்ன நான்சி?” துப்புரவு செய்து முடித்திருந்த பெண்மணி இவளிடம் வந்தார்.
 
“ஆன்ட்டி ஏன் இன்னைக்கு அப்பிடிச் சொன்னாங்க?”
 
“எதைக் கேட்கிறீங்க நான்சி?”
 
“ஜேயோட அம்மா…”
 
“வருத்தம் இருக்கத்தானே செய்யும்? நாளைக்கே அந்தம்மா வந்து இதுதான் நீ என்னோட புள்ளையை வளர்த்த லட்சணமான்னு கேட்டா இவங்க என்ன பதில் சொல்றது?”
 
“என்ன?!” கேத்தரினின் வார்த்தைகளில் நான்சிக்கு தலையில் இடி வீழ்ந்தது. இவள் ஆச்சரியம் பார்த்து இப்போது கேத்தரின் வியந்து போனார்.
 
“என்னாச்சு நான்சி?”
 
“அப்போ ஜேயோட அம்மா?!”
 
“ஏன்? உங்களுக்குத் தெரியாதா?!”
 
“இல்லை… ஆன்ட்டி…”
 
“கிரேஸ் மேடம் சாரோட ரெண்டாவது வைஃப், ஜேசனோட அம்மா இவங்க இல்லை.” தன் முகத்தில் வந்து மோதிய செய்தியில் நான்சி விறைத்துப் போனாள். இந்தத் தகவல் அவளுக்குப் புதிது. இதுவரை அவன் அவளிடம் இதுபற்றி எதுவுமே பேசியதில்லை!
 
“எனக்குத் தெரியாது கேத்தரின்!”
 
“என்னது?! உங்களுக்குத் தெரியாதா?! தம்பி உங்கக்கிட்டச் சொன்னதே இல்லையா?!” ஆச்சரியத்தோடு அவர் கேட்க இல்லை என்பது போலத் தலையை ஆட்டினாள் பெண்.
 
“யாருக்குமே அது தெரியாதுதான்… ஆனா ஜேசன் உங்கக்கிட்டச் சொல்லி இருக்கும்னு நான் நினைச்சேன்.”
 
“இல்லை… எங்கிட்ட ஜே சொல்லலை.”
 
“ம்… தம்பிக்கு அதைப்பத்தியே பேசப் புடிக்காது.”
 
“ஏன்?”
 
“விட்டுட்டுப் போன அம்மாவை யாருக்குத்தான் புடிக்கும் நான்சி?”
 
“ஓ! உங்களுக்கு… எப்பிடி?”
 
“எனக்கு ராபர்ட் சார்தான் எல்லாம் சொன்னாங்க.”
 
“…” ராபர்ட் என்ற மனிதர் மீது இப்போது அலாதியான ஒரு பிரியம் நான்சிக்கு உண்டானது.
 
“சாரும் மேடமும் சேர்ந்தா மணிக்கணக்குல எங்கிட்டப் பேசிக்கிட்டு இருப்பாங்க, மேடம் ரொம்பப் பேச மாட்டாங்க, ஆனா சார் அப்பிடியில்லை, நல்லாச் சிரிக்கச் சிரிக்கப் பேசுவாங்க.”
 
“அவங்கப் பேர் என்ன?”
 
“டெய்சி.”
 
“அவங்களைப் பத்திப் பேசினா ஆன்ட்டிக்கு கோபம் வராதா?”
 
“சேச்சே! அதெல்லாம் கிடையாது, மேடத்தை வெச்சுக்கிட்டே சார் கதை கதையாப் பழைய கதை எல்லாம் சொல்லுவாங்க, இவங்களும் சிரிப்பாங்க.”
 
“ஓ… இப்போ அவங்க எங்க?”
 
“யாருக்குத் தெரியும்!”
 
“ஜேயை பார்க்க வரமாட்டாங்களா?”
 
“எனக்குத் தெரிஞ்சு இல்லை.”
 
“பேசக்கூட மாட்டாங்களா ஜேயோட?”
 
“எனக்குத் தெரியாது நான்சி, ஒருவேளை அந்தத் தடியனுங்க ரெண்டு பேருக்கும் தெரிஞ்சிருக்கும்.”
 
“ஓ…” கேத்தரின் கிச்சனுக்குள் ஏதோவொரு வேலையாகப் போக இவளும் பின்னோடு போனாள்.
 
“ஏன் விட்டுட்டுப் போயிட்டாங்க? எப்போ?” கேட்ட பின்புதான் முதல்முதலாக கிரேஸை லண்டனில் பார்த்தது அவளுக்கு ஞாபகம் வந்தது. அவள் சிறுவயதில் பார்த்த ஜேசனின் தாய் இவரல்ல. அன்றைக்கு கிரேஸை பார்த்தபோது இவள் குழம்பி நின்றது நினைவு வந்தது. தோற்றம் மிகவும் வித்தியாசமாக இருந்தது அன்றைக்கே அவளுக்கு விசித்திரமாக இருந்தது. ஆக, சிறுவயதில் இவள் பார்த்த ஜேசனின் அம்மா கிரேஸ் அல்ல. அவனைப் பெற்ற டெய்சி.
 
“தம்பிக்கு பத்து வயசா இருக்கும் போதே போயிட்டாங்களாம்.”
 
“ஐயையோ! ஏன்?”
 
“அவங்களுக்கு இந்த வாழ்க்கைப் புடிக்கலை.”
 
“புடிக்கலைன்னா? வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா?”
 
“சேச்சே! நம்ம ராபர்ட் சாரை விட்டுட்டு இன்னொருத்தரோட வாழ யாருக்குத்தான் மனசு வரும்?”
 
“அப்போ ஏன்?!”
 
“அவங்களுக்கு இந்த வாழ்க்கை முறைப் புடிக்கலையாம், புருஷன், மகன்னு ஒரு சின்ன வட்டத்துக்குள்ள வாழ அவங்களுக்குப் புடிக்கலை, அதால அவங்க வட்டத்தைப் பெருசாக்கிக்கிட்டாங்க.”
 
“அப்பிடின்னா? புரியலை கேத்தரின்?”
 
“ஸ்பெஷல் நீட் கிட்ஸ் இருக்காங்க இல்லை? அவங்களுக்காக ஒரு சென்டர் ஓப்பன் பண்ணி சர்வீஸ் பண்ணுறாங்களாம்.”
 
“ஓ… அப்போ ஜே?”
 
“அதான் ராபர்ட் சார் இருந்தாங்களே?”
 
“அம்மா இல்லையே?”
 
“அதை அந்த அம்மாக்கிட்டத்தான் கேட்கணும்! ஊர்ல இருக்கிற புள்ளைங்களுக்கு அம்மாவாப் போயிட்டாங்க, இங்கப் பெத்தப் புள்ளை அம்மா இல்லாம நின்னிருக்கு, இதையெல்லாம் யாருக்கிட்டப் போய் சொல்ல?!” நொடித்துக் கொண்டு பேசிய கேத்தரினின் வாதத்தில் நியாயம் இருப்பது போலத்தான் தோன்றியது நான்சிக்கு. பெற்ற பிள்ளையைத் தவிக்க விட்டுவிட்டு ஊரிலுள்ள பிள்ளைகளுக்குச் சேவை செய்யும் நியாயம் என்ன மாதிரியான நியாயம்?!
 
“லண்டன்ல இருக்கும் போது தம்பிக்கு வர்ற கடிதங்களை நீங்கப் பார்க்கணுமே! சில பொண்ணுங்க ரத்தத்தால எல்லாம் கவிதை எழுதி இருப்பாளுங்க.”
 
“…”
 
“எனக்குக் கதி கலங்கும்! ஆனா இந்தப் பையன் ஒன்னைக் கூடத் திரும்பிப் பார்க்க மாட்டானே! அவனுக்குத் தெரிஞ்சதெல்லாம் ரெண்டே ரெண்டு பொண்ணுங்கதான்! ஒன்னு கிரேஸ், இன்னொன்னு நான்சி.”
 
“…” நான்சியின் கண்களில் இப்போது நீர் திரண்டது.
 
“கோபம், ஆத்திரம், ஒரு மாதிரியான வெறுப்பு, பொண்ணுங்கன்னாலே அலர்ஜி, அதுக்குக் காரணம் அவங்கதான்.” கேத்தரின் தன் ஒட்டுமொத்தக் கோபத்தையும் டெய்சி மேல் கொட்டினார்.
 
“பத்து வயசுப் புள்ளையை விட்டுட்டுப் போக எப்பிடி மனசு வந்துச்சோ! ஆனா புண்ணியவதி போனாலும் போனா, நம்ம தம்பிக்கு எல்லாமே நல்லதாத்தான் நடந்துச்சு.”
 
“என்னாச்சு?”
 
“சின்னப் பையன், அம்மாவோட பிரிவைத் தாங்க முடியலை, பையனால மட்டுமில்லை, புருஷனாலயும் தாங்கிக்க முடியலை, ரெண்டு பேருமே தங்களை மறக்க ஓட ஆரம்பிச்சாங்க, ஆண்டவன் நல்ல வழியைக் காமிச்சான், எல்லாத்தையும் மறந்து விளையாட்டுல ரெண்டு பேரும் புதைஞ்சு போனாங்க.”
 
“…”
 
“கடவுள் குடுக்க நினைச்சா யாரால தடுக்க முடியும்?! இவங்க வாழ்க்கையில கிரேஸ் மேடம் வந்தாங்க, அன்பான அம்மா கிடைச்சாங்க, அழகான, காதலான மனைவி கிடைச்சாங்க, பணம் புரண்டுச்சு, சந்தோஷமா இருந்தாங்க.” சொல்லிவிட்டு கேத்தரின் நிறுத்த இப்போது நான்சி வெடித்து அழுதாள். அதன் பின்பு அத்தனையும் இவளால் நாசமாகிப் போனதே! சட் சட்டென்று ஏதோ சத்தம் கேட்கவும் இரு பெண்களும் திரும்பிப் பார்த்தார்கள். புதிதாக உருவாக்கப்பட்ட வெளி மைதானத்தில் திடீரென ஒளி வெள்ளம் பரவ ஜேசன் வெறித்தனமாகக் கால்பந்தோடு ஓடிக்கொண்டிருந்தான்.
 
“இதே வெறித்தனம்தான்! ராபர்ட் சார் இந்த வெறித்தனத்தைப் பார்த்துத்தான் கவலைப் பட்டாங்க! உங்கப் பிரச்சினை வந்தப்போ கூட அம்மாவைப் போல நிதானமில்லாம இருக்கானேன்னு ரொம்பவே கவலைப் பட்டாங்க.” இப்போது கேத்தரின் கண்கலங்கினார்.
 
“என்னோட கவலையை மறக்க அவனோட சேர்ந்து ஓடின நான் அவனை நிதானப்படுத்தத் தவறிட்டேனே கிரேஸ் ன்னு ஒரு நாள் மேடம் கிட்ட வருத்தப்பட்டாங்க.”
 
“என்னைப்பத்தி… என்னைப்பத்தி ஏதாவது வருத்தமா…” அதற்கு மேல் பேச அவளுக்குச் சக்தி இருக்கவில்லை. தைரியமும் இருக்கவில்லை.
 
“ஐயையோ! அப்பிடியெல்லாம் இல்லைம்மா, பொண்ணுங்கன்னாலே தம்பிக்குப் புடிக்காது, எங்க இப்பிடியே இருந்திருவாரோன்னு கவலைப்பட்டாங்க, ஆனா உங்க விஷயம் தெரிய வந்தப்போ வீட்டுல எல்லாருக்குமே சந்தோஷந்தான், உங்களைப்பத்திப் பேசும் போதெல்லாம் ராபர்ட் சார் சதா சிரிப்பாங்க.”
 
“ஏனப்பிடி?!”
 
“நம்ம பயலுக்கு ரெண்டு நாள் லீவு கிடைச்சா முதல்ல நான்சிதான் ஞாபகம் வருது, அதுக்கப்புறம்தான் நீயும் நானும் கிரேஸ் ன்னு சொல்லிச் சொல்லிச் சிரிப்பாங்க.” பேசிக்கொண்டிருந்த கேத்தரினின் பார்வை மைதானத்திலேயே இருந்தது.
 
“இந்தத் தடியனுங்க ரெண்டு பேரையும் முதல்ல வேலையை விட்டுத் தூக்கணும்.”
 
“ஏன் கேத்தரின்?”
 
“பின்ன என்ன நான்சி! இந்த நேரத்துல லைட்டை போடுன்னு சொன்னா, வேணாம் சார், ராத்திரி நேரம் ன்னு எடுத்துச் சொல்லாம அவனுங்களும் லைட்டைப் போட்டுட்டுப் போய் காவலுக்கு நிற்கிறானுங்க பாரு!”
 
“நான் என்னன்னு பார்க்கிறேன்.” எழுந்து இரண்டெட்டு வைத்தவள் சட்டென்று நின்றாள்.
 
“என்னம்மா?”
 
“கேத்தரின்…”
 
“சொல்லுங்க நான்சி.”
 
“நீங்க… நீங்க என்னைத் தப்பா நினைக்கலைல்ல?” கூனிக்குறுகியபடி கேட்ட இளையவளை ஓடிப்போய் அணைத்துக் கொண்டார் பெரியவர்.
 
“இந்த வீட்டை ரட்சிக்க வந்த தேவதைம்மா நீ! எங்க ஜேசனோட நான்சி எது பண்ணினாலும் அதுல நன்மை மட்டுந்தான் இருக்கும்.” கேத்தரினை இறுக அணைத்தபடி இப்போது குலுங்கி அழுதாள் இளையவள்.
 
“ஆன்ட்டி அப்பிடி நினைக்கலையே கேத்தரின்!”
 
“அது அப்பிடியில்லைம்மா, தாய் மனசில்லையா, அதுதான் பதறிடுச்சு, தன்னோட புள்ளைத் தப்புப் பண்ணுறான்னு தெரிஞ்ச உடனேயே வருத்தப்பட்டிடுச்சு.”
 
“என்னால என்னப் பண்ண முடியும் சொல்லுங்க? என்னால எல்லாத்தையும் தொலைச்சுட்டு நிற்கிற ஜேசனுக்காக நான் தொலைஞ்சு போறது தப்பில்லைன்னுத் தோணிச்சு.”
 
“அவங்கவங்களுக்கு அவங்கவங்க நியாயம் நான்சி, இதுல தீர்ப்புச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை, அவங்க அம்மாங்கிறதால தட்டிக் கேட்கிறாங்க, அவ்வளவுதான், இப்போதைக்கு அந்தத் தம்பியை என்னன்னு பாரும்மா.” கேத்தரின் சொல்லவும் நான்சி தோட்டத்தை அடுத்திருந்த மைதானத்துக்குப் போனாள். வெறித்தனமாக ஓடிக்கொண்டிருந்தான் ஜேசன். அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்க அவளால் முடியாது என்பதால் நிதானமாக அவன் விளையாடுவதைப் பார்த்தபடி நடந்து கொண்டிருந்தாள். இவள் கவனிக்கிறாள் என்பதாலோ என்னவோ அவன் கவனம் இப்போது அடிக்கடி சிதறிப் போனது. 
 
உடல் வியர்வையால் தொப்பென்று நனைந்திருந்தது. அந்த இரவு நேரம் அத்தனை அமைதியாக இருக்க இவன் ஆரவாரம் மட்டுமே அந்த அழகான இரவைக் கிழித்துக் கொண்டிருந்தது. எதேச்சையாக இவளருகே வந்த பந்தைச் சட்டென்று தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பெண் அவனை எதிர்த்து விளையாட ஆரம்பித்தது. இப்போது அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.
ஆனால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் அவனோடு போராட அவளால் இயலவில்லை. அவனிடமிருந்து பந்தைத் தட்டிப் பறிக்கும் எண்ணம் மாத்திரமே இலக்காக இருக்க ஓடும் அவன் கால்களுக்குள் தன் ஒற்றைக் காலை லேசாக வைத்தது பெண்.
 
அவ்வளவுதான்! ஜேசன் தடாலென்று புல்தரையில் வீழ்ந்தான். அவன் வேகத்தைக் குறைத்துவிட்ட வெற்றிப் பெருமிதத்தில் பெண் நின்றிருக்க நிலத்தில் கிடந்திருந்த ஜேசன் சிரித்தான்.
 
“இது ஃபௌல் நான்சி.”
 
“எதுவா இருந்தா எனக்கென்ன? ஜேயை நிலத்துல விழவெச்சுட்டேனா இல்லையா?” கெத்தாகக் கேட்டவளின் காலை அவனும் இப்போது இடறிவிட்டான். தொப்பென்று பெண் இப்போது அவன் அருகே வீழ்ந்தது. 
 
“ஜேசனை பிட்ச் ல விழவெக்க இனி எவனாவது பொறந்துதான் வரணும் நான்சி.”
 
“ம்ஹூம்!” அவள் வேண்டுமென்றே ஆச்சரியம் காட்டினாள். நிலத்தில் கிடந்தபடி அவளருகே வந்தவன் அவள் கண்களுக்குள் உற்றுப் பார்த்தான். 
 
“ஜேசனோட ஜாதகம் முழுசாத் தெரிஞ்சு போச்சா?” அவன் குரலில் இருந்த வலி பெண்ணுக்குப் புரிந்தது. 
 
“இந்த வேகத்துக்கான காரணம் என்னன்னு பிடிபட்டுப் போச்சு.” என்றாள் பேச்சை மாற்றுவது போல.
 
“இப்போ என்ன செய்யுறதா உத்தேசம்?” வியர்வை கலந்த அவன் வாசம் அவள் நாசியை நிரப்பியது.
 
“கட்டுக்கடங்காத இந்தப் புயலை அப்பிடியேச் சுருட்டி என்னோட நெஞ்சுக்குள்ள பதுக்கிக்கணும்.” அவள் பேச்சில் சிரித்தவன் ஒற்றைக் கையை உயர்த்தி ஏதோ சமிக்ஞை செய்ய அங்கிருந்த விளக்குகள் அனைத்தும் படபடவென அணைந்து போயின. இருள் வெள்ளம் எங்கும் நிறைந்திருந்தது.
 
“வேற?”
 
“வாரிச் சுருட்ட மட்டுமே தெரிஞ்ச இந்தப் புயலுக்கு இதமா வீசுற தென்றலோட சுகத்தைச் சொல்லிக் குடுக்கணும்.” ஜேசன் இப்போது சிரித்தான். 
 
“புயலுக்குத் தென்றலைப் புடிக்குமா நான்சி?”
 
“புடிச்சதாலதானே இப்போப் பக்கத்துல இருக்கு.”
 
“நீ தென்றலா?”
 
“இல்லையா?”
 
“ம்ஹூம்… நீ சுனாமி, என்னை ஒன்னுமே இல்லாமப் பண்ணின சுனாமி.” அவன் சொன்ன அர்த்தம் வேறு, அவள் புரிந்துகொண்ட அர்த்தம் வேறு. 
 
“நான்சி…” ஷ்ருங்காரமாக ஒலித்த அவன் குரலில் பெண்ணின் சஞ்சலம் மறைந்து போனது. அந்தக் காட்டாற்று வெள்ளம் மீண்டுமொரு முறை கரையுடைத்தது. அன்றைய நிகழ்வுகளில் தன்னைத் தொலைத்திருந்த ஜேசன் இதுவரை அவளுக்கும்‌ தனக்குமான உறவில் கடைப்பிடித்த விதிமுறைகளை மறந்து போயிருந்தான். அன்றைய அவர்களின் உறவுக்கு இருள் மட்டுமே சாட்சியாக நின்றது.
 
என் உடல் பொருள் தந்தேன் சரண் புகுந்தேன்
என் உயிரை உனக்குள் ஊற்றிவிட்டேன்!
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!