gaanam17

காம் 17

அந்தப் பரந்த மைதானம் பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தது. சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்திருந்தவர்களும் நீலநிற ஆடைக்காரர்களும் இரு அணிகளாக மோதிய வண்ணம் இருந்தார்கள். உருண்டோடிய பந்து கண்ணிமைக்கும் நேரத்திற்குள் இங்கும் அங்குமென இடம் மாறி கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது. எப்போதும்போல ஜேசன் நீலநிற அணியினருக்காகத் தன் உயிரைக் கொடுத்து விளையாடிக் கொண்டிருந்தான். ஐந்து வருடகால இடைவெளிக்குப் பிறகு அவன் ஆடும் முதல் ஆட்டம்.
 
“கம் ஆன் ஜே!” விசிறிகளின் கூக்குரல் விண்ணை முட்டிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே ஜேசனின் முகம் அச்சிடப்பட்ட பதாகைகளை இளம்பெண்கள் தாங்கிய வண்ணம் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
 
“ஜேசன்! ஜேசன்!” மைதானம் முழுவதும் அவன் பெயர்! நான்சி, கேத்தரின், கிரேஸ்… மூவரும் கிரேஸின் அறையில் அமர்ந்தபடி தொலைக்காட்சியில் நடக்கும் மேட்ச்சை பார்த்துக் கொண்டிருந்தார்கள். கிரேஸும். நான்சியும் தங்களை மறந்த நிலையில் நிலைகுத்தி அமர்ந்திருக்க சுயநினைவோடு அமர்ந்திருந்த கேத்தரின் மட்டும் ஆர்ப்பரித்தார்.
 
“ஹா… ஹா! நம்ம தம்பியைப் பார்த்தாப் பொண்ணுங்க குதிக்க ஆரம்பிச்சிடுவாங்களே! பார்த்தீங்களா மேடம்! பெவிலியன் முழுக்கத் தம்பி படம்தான்! எங்கத் தம்பியா கொக்கா?!” பெருமைப் பேசிய பெண் கிரேஸை பார்க்க அவர் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
 
“எதுக்கு மேடம் இன்னமும் அழுறீங்க? ஜேசனை நினைச்சு நீங்க வருந்தின காலமெல்லாம் முடிஞ்சு போச்சு! இனி தம்பியோட வாழ்க்கைல எல்லாமே ஏறுமுகந்தான்.” வர்ணனையாளர்கள் ஜேசனின் விளையாட்டைச் சிலாகித்த வண்ணம் இருந்தார்கள். ஐந்து வருடங்களுக்குப் பின்னான அவனின் அசுர வேகத்தில் அவர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். 
 
விளையாட்டு அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. ஜேசனின் அணி ஏற்கனவே இரண்டு கோல்களை பெற்றிருந்தது. அந்த இரண்டு கோல்களையுமே ஜேசன்தான் அடித்திருந்தான். அணியின் உரிமையாளர், பங்குதாரர்கள் எனப் பலரும் அன்றைய ஆட்டத்தைக் கண்டுகளிக்க வந்திருந்தார்கள். அத்தனைப் பேரின் முகத்திலும் பரம திருப்தி. அணியின் மேனேஜர் வாயெல்லாம் புன்னகையாக உட்காரரக் கூட மனமில்லாமல் நடந்தபடி இருந்தார். அவருக்குத் தெரியும். ஜேசனுக்கு இது எவ்வளவு முக்கியமான ஆட்டம் என்று.‌ அன்றைய ஆட்டத்துக்கான அணியினரைத் தேர்வு செய்யும் போது ஜேசனின் பெயரைப் பரிந்துரை செய்தது அவர்தான். ஆனால் மேலிடம் வெகுவாகத் தயங்கியது. அன்றைய ஆட்டம் அணியின் நிலையை மற்றைய அணியின் நிலையோடு ஒப்பிடும் மிகமுக்கியமான ஆட்டம்.
அன்றைக்கு அவர்களின் அணி வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற‌ கட்டாய நிலை. 
 
ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் களமிறங்கும் சிங்கம் இவர்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யுமா என்று பலரும் சந்தேகித்த போது இவனுக்காக மேனேஜர் மட்டுமே வாதாடினார். அப்போதும் முழுநேர விளையாட்டுக்கு ஜேசனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. விளையாட்டின் பாதியிலேயே இவனைக் களமிறக்கினார்கள். அதுவரை இளையவன் பெஞ்ச்சிலேயே வைக்கப்பட்டிருந்தான்.  
 
“ஜே, ஓனர் வந்திருக்காரு, உன்னை வாட்ச் பண்ணத்தான் இன்னைக்கு நிறையப் பெரிய தலைங்க வந்திருக்கு, உன்னோட பெஸ்ட் பர்ஃபோமன்ஸை இன்னைக்கு இவங்க எல்லாரும் பார்க்கணும், கோ அன்ட் ராக் மேன்!” ஜேசனை களத்தில் இறக்கும் போது அவன் முதுகில் தட்டி மேனேஜர் சொன்ன வார்த்தைகள் இவை. அவரை ஏமாற்றாமல் அரங்கத்தை அதகளம் செய்திருந்தான் இளையவன்.
 
ஃபைனல் விசிலை ரெஃபரீ ஊதியவுடன் அரங்கம் இரண்டு பட்டது. அன்ஃபீல்ட் ஸ்டேடியத்தில் சிவப்பு அணியினரைத் தன் அபார திறமையால் வெற்றி கொண்டிருந்தது‌ நீல அணி. விசிறிகளின் கூச்சல் அதிகமாக காவலர்கள் ஜேசனை சூழ்ந்து கொண்டார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் ஆட்ட நாயகனைப் பார்த்த இளம் பெண்களுக்கு வெறி பிடித்திருந்தது. கேமராக்கள் இவனைச் சூழ்ந்த வண்ணம் இருக்க ஒரு கேமராவின் லென்ஸில் எப்போதும் போல முத்தம் வைத்தான் ஜேசன். இது அவளுக்கான பிரத்தியேக முத்தம்.
 
“ஆஹா! நான்சி… இது உங்களுக்குத்தான்.” கேத்தரின் இங்கே பெருங்குரலில் சொல்லிச் சிரிக்க நான்சி தலையைக் குனிந்து கொண்டாள். கிரேஸும் அவள் வெட்கம் பார்த்துச் சிரித்தார். 
 
“முன்னாடி இந்த முத்தம் தம்பியோட ரசிகர்களுக்குன்னு இந்த உலகமே நம்பிச்சு, ஆனா இப்போ ஒரு பய நம்பமாட்டானே! இப்ப எல்லாருக்கும் தெரியும், இது யாருக்கான முத்தம் ன்னு.” கேத்தரின் இங்கே இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கே ஒரு நிருபர் ஜேசனிடம் நான்சியை பற்றித்தான் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்.
 
“ஜே, எப்பவுமே உங்களோட முன்னேற்றத்துக்கான காரணம் அப்பான்னு சொல்வீங்க, இப்போ ஒரு பொண்ணால உங்களோட விளையாட்டு உலகின் அஞ்சு வருஷம் வீணாப் போயிடுச்சுன்னு நினைக்கிறீங்களா?” அந்தக் கேள்வியில் நான்சி திடுக்கிட்டு நிமிர்ந்தாள். இது என்ன மாதிரியான கேள்வி?! ஏன் இப்படியெல்லாம் கேட்கிறார்கள்? இதையெல்லாம் ஜேசன் எப்படிச் சமாளிக்கப் போகிறான்?
 
“நிச்சயமா இல்லை.” ஆணித்தரமாக வந்தது அவன் பதில்.
 
“கசப்பான நிகழ்வுதான், ஆனாலும்…” சற்றே இடைவெளி விட்டு வசீகரமாகப் புன்னகைத்தவன்,
 
“என் வாழ்க்கையில் வந்த வசந்தம் அவள்! என் ஆனந்தம் அவள்!” என்றான் கவிதை போல.
 
“ம்ஹூம்?!” சுற்றிவர இருந்த கூட்டம் இப்போது சிரித்தது.
 
“கல்யாணம் எப்போ ஜே?” இன்னுமொரு கேள்வி வந்தது.
 
“இன்னும் டிஸைட் பண்ணலை.”
 
“இப்பிடித்தான் நீங்க சொல்லுவீங்க, ஆனா அவங்க சட்டுன்னு ஏதாவது அறிவிப்புக் குடுக்கிறாங்களே?!” அதற்கு மேல் எந்தப் பதிலும் சொல்லாமல் ஜேசன் நகர்ந்து விட்டான். அது ஒரு வகையான தப்பித்தல். ஆனால் நான்சியால் அப்படித் தப்பிக்க இயலவில்லை. கிரேஸிடம் வசமாக மாட்டிக் கொண்டாள். 
 
“என்ன முடிவெடுத்திருக்கீங்க? இதென்ன இவன் இப்பிடி பதில் சொல்றான்?” கிரேஸ் நேரடியாகவே நான்சியிடம் கேட்டார். இப்போதெல்லாம் சின்னவளிடம் நேரடியாகவே சில விஷயங்களை அவர் பேசுவதுண்டு. பேச்சும் தடங்கலின்றி வந்தது. ஓரளவு துணையோடு நடமாடவும் அவரால் முடிந்தது.
 
“அதானே! கூடிய சீக்கிரமே எங்கக் கல்யாணம் நடக்கும்னு பட்டுன்னு சொல்ல வேண்டியதுதானே! தம்பி எதுக்குச் சுத்தி வளைக்குது?!” இது கேத்தரின்.
 
“இந்தத் தடவை ஜேசன் வரும்போது ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசுங்க, இத்தனை நாளும் பழையபடி அவன் விளையாடணும்னு ஆசைப்பட்டே, அதான் இப்போ நடந்து போச்சில்லை? இனியும் என்ன?”
 
“முடிவெடுக்க வேண்டியது ஜேதான் ஆன்ட்டி.” அமைதியாகச் சொன்னது பெண்.
 
“நீ சொன்னா அவன் கேட்பான் நான்சி.” 
 
“ஆமா… இன்னைக்குத் தம்பி வீட்டுக்கு வருவாங்களா நான்சி?” 
 
“தெரியலை கேத்தரின்.”
 
“ஃபோன் பண்ணும்போது எதுவும் சொல்லலையா?”
 
“ம்ஹூம்…” தலையாட்டினாள் நான்சி.
 
“ஒருவேளை நைட்டுக்கு வந்தாலும் வருவான், மேட்ச் வேற வின் பண்ணியிருக்காங்க.” தனது அனுபவத்தைச் சொன்னார் கிரேஸ்.
 
“எனக்கும் இன்னைக்குத் தம்பி வீட்டுக்கு வருவாங்கன்னுதான் தோணுது, எதுக்கும் டின்னரை நான் கொஞ்சம் ஸ்பெஷலாவே பண்ணுறேன்.” உற்சாகமாக கேத்தரின் சொல்லிக் கொண்டிருக்கும் போது நான்சி,
 
“ஆன்ட்டி…” என்றாள் சங்கடமாக. இப்போது மூத்த பெண்கள் இருவரும் நான்சியை திரும்பிப் பார்த்தார்கள். எதையோ அவள் சொல்லத் தயங்குவது போல இருந்தது. 
 
“இன்னைக்கு… இன்னைக்கு நான் எங்க… வீட்டுக்குப் போலாம் ன்னு இருக்கேன்.”
 
“ம்…” இப்போது கிரேஸின் குரலிலும் கலக்கம். வீட்டுக்குப் போகிறேன் என்றால் என்ன அர்த்தம்?! 
 
“வீட்டுக்குப் போறேன்னா என்ன அர்த்தம் நான்சி? திரும்ப இங்க வருவீங்கல்லை?” கிரேஸ் கேட்கத் தயங்கியதை கேத்தரின் சட்டென்று கேட்டார்.
 
“இல்லையில்லை, அப்பிடியெல்லாம் எதுவும் இல்லை, பாட்டியைப் பார்க்கணும் போல இருக்கு, அவ்வளவுதான்.”
 
“உங்கப்பா பிரச்சினைப் பண்ணமாட்டாரா?” என்றார் கேத்தரின் அவசரமாக.
 
“நான் அவரைப் பார்க்கப் போகலை கேத்தரின்.” இளையவள் பதில் சொன்ன போது அங்கே ஒரு அமைதி நிலவியது. தாமஸை பற்றி கேத்தரினுக்கு என்றைக்குமே நல்லபிப்பிராயம் இருந்ததில்லை. அதனால் அவர் மேற்கொண்டு எதுவும் பேசவுமில்லை. ஆனால் கிரேஸால் அப்படி இருக்க முடியவில்லை. ஒரு தந்தையைப் புறக்கணிக்க அவரால் இயலவில்லை. அவர் அவர்களுக்குக் கெடுதல் நினைத்திருந்த போதிலும்.
 
“எவ்வளவுதான் கெடுதல் நினைச்சிருந்தாலும்… அவர் உன்னோட அப்பா நான்சி, அதை மாத்த யாராலயும் முடியாது.”
 
“…”
 
“உடம்புக்கு முடியாம இருக்கிற மனுஷனைப் போய் பார்க்கிறது நல்லதுதானே? கொஞ்சம் மன்னிக்கவும் கத்துக்கணும் நான்சி.” கிரேஸ் சொன்னதைப் பெண் அமைதியாகக் கேட்டுக் கொண்டது. ஆனால் ஏற்றுக் கொண்டாளா இல்லையா என்று யாருக்கும் புரியவில்லை.
 
***
நான்சி அவர்கள் வீட்டுக்கு வந்தபோது மாலை ஐந்தை நெருங்கிவிட்டது. ஏனோ அன்றைக்கே வீட்டுக்குப் போக வேண்டும் போல இருக்கவும் மேட்ச் பார்த்து முடித்த கையோடு கிளம்பிவிட்டாள். கொஞ்சம் தயக்கமாக இருந்த போதிலும் எதையும் பொருட்படுத்தாமல் உள்ளே வந்தாள்.
 
“நான்சி!” ஹாலில் அமர்ந்தபடி டீவி பார்த்துக் கொண்டிருந்த அமீலியா ஓடிவந்து பெரியவளைக் கட்டிக் கொண்டாள்.
 
“நான்சி ம்மா!” அப்போதுதான் பாட்டியும் அங்கே இருப்பதைக் கவனித்தவள், 
 
“கிரானி!” என்று பாட்டியை இறுக அணைத்துக் கொண்டாள்.
 
“எப்பிடி இருக்கேடா?”
 
“நல்லா இருக்கேன் கிரானி.”
 
“அதான் பார்த்தாலே தெரியுதே.” தங்கை கேலி பண்ணவும் நான்சி சிரித்தாள்.
 
“இன்னைக்கு நானும் மேட்ச் பார்த்தேன், அதுவும் நம்ம வீட்டுல.” தங்கையின் ரகசியப் பேச்சை நம்ப முடியாமல் இவள் பாட்டியை ஆச்சரியமாகப் பார்த்தாள். பாட்டியின் முகத்திலும் புன்னகையே இருந்தது. 
 
“ஜே இன்னைக்குக் கலக்கிட்டாரு, அடேயப்பா! நான்சி, நீ இப்போ ரொம்ப ஃபேமஸ் ஆகிட்டே போ! உன்னைப் பத்தி இன்னைக்கு டீவியில பேசுறாங்க! ஆமா… கல்யாணம் எப்போ?” மீண்டும் ரகசியம் பேசினாள் இளையவள்.
 
“பதில் சொல்லு நான்சி, நானும் கேட்கணும்னு நினைச்சேன், கல்யாணம் எப்போ? ஜேசனோட வீட்டுல நீ இருக்கிறதை நான் தப்புன்னு சொல்லலை, அங்க அவரோட அம்மாவும் இருக்காங்க, ஆனா கல்யாணம் பண்ணாம ரொம்ப நாளைக்கு இப்பிடியே இருக்கிறது நல்லதில்லைம்மா.” பாட்டியின் பேச்சில் பேத்திக்கு லேசாகத் தொண்டை அடைத்தது. தனக்கும் அவனுக்குமான உறவின் ஆழம் தெரிந்தால் இதே பாட்டி என்ன சொல்லுவார்?!
 
“என்ன யோசனை நான்சி?”
 
“ஒன்னுமில்லை கிரானி, இதையேதான் ஜேயோட அம்மாவும் சொல்றாங்க, என்னன்னு தெரியலை, ஜேதான் கொஞ்சம் டைம் கேட்கிறாரு, இந்தத் தடவை வரும்போது நீங்களும் இதுபத்திப் பேசினீங்கன்னு அவருக்கிட்டச் சொல்றேன்.”
 
“நான்சீ!” அப்போதுதான் இவர்களது பேச்சுக் குரல் கேட்டு ஹாலுக்கு வந்த மேரி மகளை அணைத்துக் கொண்டார். 
 
“எப்பிடி இருக்கே?”
 
“நல்லா இருக்கேன் ம்மா.”
 
“உங்க டாடிதான் என்னை ரொம்பப் பயமுறுத்திட்டாரு.” கண்கலங்கிய அன்னையின் தோளை ஆதரவாக வருடிக் கொடுத்தாள் பெண். மறந்தும் தந்தை எப்படி இருக்கிறார் என்று அவள் கேட்கவுமில்லை, அறையின் உள்ளே இருந்தவரைப் போய் பார்க்கவுமில்லை. கொஞ்ச நேரம் அவர்களோடு அளவளாவியவள் அன்னை கொடுத்த கேக்கையும் டீயையும் ஆசையாக உண்டாள். அமீலியா அவளது அறைக்கு இவளை அழைத்துச் சென்று ஆசையாகக் கதை பேசியபோது சிரித்தபடி கேட்டிருந்தாள். தங்கையின் அறையைக் கடக்கும் போது எதிர்த்தாற் போல இருந்த பெற்றோரின் அறையில் தாமஸ் நின்றிருப்பது தெரிந்தது. ஆனாலும் நான்சி அவரைக் கண்டுகொள்ளவில்லை. 
 
தாமஸுக்கு மைல்ட் அட்டாக் ஒன்று வந்திருப்பதாகவும் இனிமேல் மிகவும் கவனமாக அவரைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லி இருப்பதாகவும் ஏற்கனவே தங்கை இவளுக்குத் தகவல் சொல்லி இருந்தாள். இவள் வரும்போது தாமஸ் வீட்டில்தான் இருந்தார். இருந்தாலும் அவரும் அறையை விட்டு வெளியே வந்து மகளை எதிர்கொள்ளவுமில்லை, மகளும் அறையினுள் சென்று அப்பாவைக் குசலம் விசாரிக்கவுமில்லை. வீட்டின் மற்றைய அங்கத்தினர்கள் இந்த நாடகத்தை மௌனமாகப் பார்த்திருந்தார்களே தவிர யாரும் எதுவும் பேசவில்லை. 
 
“நான் கிளம்புறேன் அமீ.” மணி எட்டை நெருங்கவும் நான்சி கிளம்பிவிட்டாள்.
 
“சரி க்கா.”
 
“இனிமேல் அடிக்கடி இதுபோல வந்து போ நான்சி.”
 
“சரி கிரானி.” மேரி எதுவும் பேசாமல் மகளின் தலையை மட்டும் தடவிக் கொடுத்தார். ஜேசனின் வீட்டுக்கார் இவளை வந்து அழைத்துக்கொண்டு போக பெண்கள் மூவரும் வாசலுக்கு வந்து வழியனுப்பி வைத்தார்கள். நான்சிக்கு மனது நிறைவாக இருந்தது. அப்பாவை அவள் பார்க்கவுமில்லை, பேசவுமில்லை. சொல்லப் போனால் அவராக வந்து அவளிடம் பேசியிருந்தால் கூட அவள் பேசியிருந்திருக்கப் போவதுமில்லை. ஆனால் வீட்டிற்குப் போனது மனதுக்கு நிறைவாக இருந்தது. அம்மாவை, கிரானியை, தங்கையைப் பார்த்தது, அவர்களோடு நேரம் செலவழித்தது சந்தோஷமாக இருந்தது. 
 
நான்சி வீட்டுக்கு வந்த போது ஒன்பது மணி. அவசரமாக ஒரு குளியல் போட்டவள் கிரேஸின் அறைக்குப் போனாள். லூசி அவருக்கான மாத்திரைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
 
“நான்சி, சாப்பிடுறீங்களா?” இது கேத்தரின்.
 
“கொஞ்சம் பொறுத்துச் சாப்பிடுறேன் கேத்தரின், ஆன்ட்டி சாப்பிட்டாச்சா?”
 
“ஆச்சு, உங்கப்பா எப்பிடி இருக்காரு?”
 
“தெரியலை.”
 
“தெரியலையா? அப்பா வீட்டுல இல்லையா நீங்க போகும் போது?”
 
“இருந்த மாதிரித்தான் தெரிஞ்சுது.” விட்டேற்றியாக‌ வந்தது பதில். கிரேஸ் ஏதோ கண்ணால் ஜாடை காட்ட அதற்கு மேல் கேத்தரின் எந்தக் கேள்வியும் இவளிடம் கேட்கவில்லை. போகப்போக எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்திருப்பார்கள் போலும். அப்போது அந்தச் சத்தம் கேட்க ஆவலே வடிவாகத் திரும்பிப் பார்த்தாள் நான்சி. விரைந்து வந்துகொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று இவர்கள் வீட்டு மைதானத்தில் மெதுவாக இறங்கியது.
 
“ஹைய்யோ! தம்பி வந்தாச்சு! தம்பி வந்தாச்சு!” கேத்தரின் கூவிய படி வெளியே போகும்போது கிரேஸ் மலர்ந்த முகமாக கட்டிலில் நிமிர்ந்து உட்கார்ந்தார். நர்ஸ் கொடுத்த மாத்திரைகளை அவசரமாக வாயில் போட்டு நீரைக் குடித்தவர், 
 
“லூசி, என்னை வெளியே கூட்டிட்டுப் போங்க.” என்றார். இப்போதெல்லாம் இருவர் துணையிருந்தால் அவரால் நடக்க முடிந்தது. அதிகம் சிரமப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று டாக்டர்கள் சொல்லி இருந்தார்கள். 
“ஓகே மேடம்.” என்றுவிட்டு லூசி ஒருபுறமாக கிரேஸை தாங்கிப் பிடிக்க மறுபுறம் நான்சி பிடித்துக் கொண்டாள். அறையின் வாசலுக்கு அன்னை வந்தபோது மகன் அப்போதுதான் வீட்டினுள் நுழைந்து கொண்டிருந்தான்.
 
“மாம்!” தன்னை வரவேற்க வாசல் வரை வந்த அன்னையைப் பார்த்து மகன் மகிழ்ந்து போனான். தோளில் கிடந்த பையைத் தரையில் போட்டவன் அம்மாவை நோக்கி ஓடி வந்து அவரைக் கட்டியணைத்துக் கொண்டான்.
 
“ஜே…” தழுதழுத்த குரலில் மகனின் முகம் முழுவதும் தடவிக் கொடுத்தார் கிரேஸ். 
 
“மேடத்தை பார்த்தீங்களா தம்பி? அடுத்த தடவை எம்புள்ளை வரும்போது அவனை நான் வாசலுக்கு எந்திரிச்சுப் போய் வரவேற்கணும்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க, சொன்னபடி செஞ்சு காமிச்சுட்டாங்க.” கேத்தரின் எப்போதும் போல பெருங்குரலில் பேச தன் அம்மாவை ஆசையாக முத்தமிட்டான் ஜேசன்.
 
“உங்களை இப்பிடிப் பார்க்கிறது எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமாம்மா!” 
 
“பேசினது போதும், போய் சாப்பிடு ஜே, நான்சியும் இன்னும் சாப்பிடலை.” இது தாய் மனது.
 
“ஏன்?” கண்களால் அவளிடம் கேள்வி கேட்டவன் அப்போதுதான் அவளைச் சரியாக கவனித்தான். வந்ததும் வராததுமாக அன்னை அவனுக்குக் கொடுத்திருந்த இன்ப அதிர்ச்சி அவனை நிலைகுலைய வைத்திருந்தது. சற்றே மெலிந்திருந்தாள். ஆனால் முகத்தில் பொலிவு கூடியிருந்தது.
 
“டைமுக்கு சாப்பிடமாட்டியா நான்சி? வெயிட் குறைஞ்ச மாதிரித் தெரியுறே? நீங்க எப்பிடி இருக்கீங்க லூசி?” என்றான் நர்ஸிடம்.
 
“நல்லா இருக்கேன் ஜேசன்.”
 
“அம்மாவோட பாடி கண்டிஷன் இப்போ எப்பிடி இருக்கு?”
 
“அதான் நீங்களே பார்க்கிறீங்களே, எல்லாம் பர்ஃபெக்ட்டா இருக்கு, நத்திங் டு வொர்ரி.”
 
“தான்க் யூ லூசி.”
 
“பேசினது போதும், கேத்தரின்… எல்லாரையும் டைனிங் டேபிளுக்கு கூட்டிட்டுப் போங்க.” எந்தத் தடங்கலும் இல்லாமல் சீராகப் பேசிய அன்னையின் முகத்தை ஜேசன் வருடிக் கொடுத்தான்.
 
“போய் சாப்பிடு ஜே, நாளைக்கும் பேசலாம்.”
 
“ஓகே மாம், நீங்களும் போய் தூங்குங்க.”
 
“சரிப்பா.” அன்னையை அழைத்துக்கொண்டு போய் அவர் படுக்கையில் அவரை வாகாகப் படுக்க வைத்துவிட்டு மாடிக்குப் போய்விட்டான் ஜேசன். பெண்ணுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்றைக்கு அவள் இவனை இங்கு எதிர்பார்த்திருக்கவில்லை. நடப்பவை அனைத்தும் மனதுக்கு மிகவும் இனிப்பாக இருக்க வெளியே வந்தாள். 
 
“ஆன்டனி, எப்பிடி இருக்கீங்க? லியோ, நீங்க எப்பிடி இருக்கீங்க?” அவளது துள்ளல் குரல் அது. அந்த விசுவாசிகள் இரண்டு பேரும் இவளோடு குதூகலமாக உரையாட ஆரம்பித்துவிட்டார்கள்.
 
“மேட்ச் பார்த்தீங்களா மேடம்? சாரோட ஆட்டம் எப்பிடி?”
 
“பார்த்தேன், ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.”
 
“பிட்ச் சும்மா அதிர்ந்துச்சில்லை! ஃபேன்ஸ்ஸை பார்க்கணுமே!”
 
“மேனேஜர் என்ன சொன்னாராம்?‌ பெரிய தலைங்க எல்லாம் மேட்ச் பார்க்க இன்னைக்கு வந்திருந்தாங்களே?! அவங்களையே ரெண்டு மூனு தரம் திரும்பத் திரும்பக் காட்டினாங்க.”
 
“மேனேஜர் ஹாப்பிதான் மேடம், அதான் சார் ப்ரூவ் பண்ணிட்டாங்கல்லை!‌ அவங்களால கூட இனி என்ன சொல்ல முடியும்?” இவர்களின் பேச்சைத் தடை செய்வது போல ஒலித்தது கேத்தரினின் குரல்.
 
“எல்லாரும் சாப்பிட வாங்க, தம்பி வந்தாச்சு.”
 
“ரெண்டு பேரும் வாங்க சாப்பிடலாம்.” ஆண்களை உட்கார வைத்து அன்றைக்கு நான்சி பரிமாறினாள். எப்போதுமே கேத்தரின்தான் அதைச் செய்வார்.
 
“நீயும் உட்காரு நான்சி.”
 
“இல்லை ஜே, நீங்க முதல்ல சாப்பிடுங்க.” அவனருகில் நின்றபடி அவன் தேவைகளைக் கவனித்தவள் அதன்பிறகு தானும் உண்டாள். எல்லாவற்றையும் ஒழுங்கு பண்ணிவிட்டு கேத்தரின் உறங்கப் போய்விட நான்சி மாடிக்கு வந்தாள். மாடி முழுவதும் கும்மிருட்டு.
 
“ஜே! எதுக்கு எல்லா லைட்டையும் ஆஃப் பண்ணி வெச்சிருக்கீங்க?!” அவள் சொல்லி முடித்த அடுத்த நொடி இறுகிய அவன் அணைப்பில் இருந்தாள் பெண்.
 
“எவ்வளவு நேரந்தான் காத்துக்கிட்டு இருக்கிறது!” அவன் வேக முத்தங்கள் அவள் முகம் முழுவதும். 
 
“ஜே!” அதற்கு மேல் அந்த இதழ்களுக்குப் பேச அனுமதி கிடைக்காததால் நான்சி மௌனமாக நின்றிருந்தாள். ஒன்றரை மாதப் பிரிவின் மொத்தத் தேவையையும் அந்த ஒற்றை நிமிடத்தில் நிவர்த்திக்க முயன்றான் ஜேசன். அவளுக்கும் அவன் அருகாமை சுகத்தைக் கொடுக்க அவனுக்குள் அவளுமே புதைந்து போக முயன்றாள்.
 
“நான்சி…” அவன் சிணுங்கல் ஒலிக்கும் சிறு சிறு தீண்டல்களுக்கும் முடிவே இல்லை என்பது போல தொடர்ந்து கொண்டிருந்தன.
 
“ஜே… போதும்.”
 
“நீ ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா.”
 
“எதுக்கு?!”
 
“இன்னைக்கு நம்ம பிட்ச் ல ஒரு கேம், அதுக்கப்புறமா…” அவன் கண்ணடித்து ராகம் பாட பெண்ணும் சிரித்தது.
 
“ம்ஹூம்…” 
 
“என்ன ம்ஹூம்? இப்போ நீயா சேஞ்ச் பண்ணலைன்னா நான் பண்ணி விடுவேன்!” அவன் மிரட்டினான்.
 
“இன்னைக்கு முடியாது ஜே.” அவள் உறுதியாக மறுத்தாள்.
 
“ஏன்?!” அவள் உறுதியில் அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.
 
“ஆன்ட்டியை பார்த்தீங்களா ஜே?” சம்மந்தமே இல்லாமல் அவள் பேச அவனுக்கு எரிச்சல் வந்தது.
 
“அதெல்லாம் அப்புறமாப் பேசலாம் நான்சி! இப்போ என்…” அவனைப் பேச விடாமல் அவனது வாயை மூடினாள் பெண். அவள் கையை விலக்கியவன்,
 
“உனக்கு இன்னைக்கு என்ன ஆச்சு நான்சி?” என்றான் கோபமாக.
 
“ஜேசன் பழையபடி டீம்ல விளையாட ஆரம்பிச்சாச்சு, ஆன்ட்டி எப்பவும் போல பேசுறாங்க, நடமாட ஆரம்பிச்சுட்டாங்க.”
 
“அதுக்கு?!” அவன் குரலில் இப்போது அதிருப்தி. எதிர்பார்க்காத எதுவோ ஒன்று வரப்போவது போல உணர்ந்தான் அவன்.
 
“என்னோட அப்பா எங்க? அப்பா எங்க நான்சின்னு அடிக்கடி கேட்பீங்களே ஜே?” அவள் பேச்சில் அவன் கண், நெற்றி, முகம் என அனைத்தும் சுருங்கியது. அவன் வலது கரத்தை எடுத்து இப்போது அவளது வயிற்றில் வைத்தது பெண். சர்வாங்கமும் அதிர, இமைக்க மறந்து நின்றிருந்தான் ஜேசன் ராபர்ட்!