Geethanjali 8

Geethanjali 8

கீதாஞ்சலி – 8
அதிகாலை நேரம், அந்த ஊரிலுள்ள மிகப் பிரபலமான மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலின் ஃபுட் கோர்ட் வளாகத்தில் அமர்ந்திருந்தார்கள் ராகுலும் அமிர்தாவும். ஒரே இரவில் அமிர்தாவின் முகம் மிகவும் சோபையிழந்து காணப்பட்டது.
குழந்தை நிரஞ்ஜலா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிட்டதால் பெரிதாக எந்தப் பாதிப்பும் இல்லை. ராகுலைக் கண்டதும் ராஜ வைத்தியமே நடந்தது. குழந்தையும் வலி மற்றும் பயத்தால் அழுதாளே தவிர வாந்தி மயக்கம் போன்ற அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
வலி குறைப்பதற்கு மட்டுமே மருத்துவர்கள் மருந்தளித்தார்கள். மருந்தின் வீரியத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் வலி குறையவும் நன்றாக உறங்கிவிட்டாள் நிரஞ்ஜலா. எதற்கும் கொஞ்ச நேரம் அப்சர்வேஷனில் இருக்கட்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்க இரவு அங்கேயே தங்கும் படி ஆனது. விடிய விடிய பொட்டுத் தூக்கமில்லாமல் குழந்தையின் அருகிலேயே அமர்ந்திருந்தவளை ராகுல் தான் வற்புறுத்தி ஃபுட் கோர்ட்டுக்கு அழைத்து வந்திருந்தான்.
அவளையே ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தான் ராகுல். இவள் சாதாரண பெண் அல்ல என்று தான் தோன்றியது அவனுக்கு. நேற்று இரவு குழந்தையைத் தேள் கடித்ததும் சில நிமிடங்கள் தான் அமிர்தா செய்வதறியாமல் நின்றிருந்தாள். சுதாரித்துக் கொண்ட பொழுது படபடவென்று செயலில் இறங்கிவிட்டாள். யாருடைய உதவியையும் எதிர்பார்க்கவில்லை.
ஆட்டோவில் வைத்தே இருவருக்கும் வாக்குவாதம் தொடங்கி விட்டது. ராகுல் உடன் வருவதை அவள் கிஞ்சித்தும் விரும்பவில்லை. அதை வெளிகாட்டவும் செய்தாள். ராகுல் தான் பிடிவாதமாக உடன் வந்திருந்தான்.
அடுத்து எந்த ஹாஸ்பிடல் போவது என்பதிலும் இருவருக்கும் முட்டிக் கொண்டது. அமிர்தா அரசு மருத்துவமனையைச் சொல்ல, ராகுலோ இந்த மருத்துவமனையைத் தெரிவு செய்தான்.
இதையெல்லாம் கூடப் பொறுத்துக் கொண்டவள் மருத்துவர்கள் குழந்தைக்கு இன்ஜெக்ஷன் போட வேண்டும் என்ற பொழுது, அதை எப்படியோ கணித்து விட்ட குழந்தை பயத்தில் ‘அப்பா’ என்றழைத்து இவன் கைகளுக்குத் தாவ, அமிர்தா ராகுலைப் பார்த்தாளே ஒரு பார்வை.
சக்தியிருந்திருந்தால் அந்த ஒற்றைப் பார்வையில் ராகுல் பஸ்பமாகியிருப்பான். அப்படி ஒரு ரௌத்ரப் பார்வை அது. ராகுலுக்குமே ஆச்சர்யம் தான் குழந்தை திடீரென்று அப்பா என்றழைத்தது. அன்று முழுவதும் வீட்டில் சந்தோஷ் அவ்வாறு அழைப்பதைக் கவனித்துக் கொண்டே இருந்த நிரஞ்ஜலா பயத்தில் சட்டென்று அவ்வாறு அழைத்துவிட்டாள் போலும்.
அந்த சமயத்தில் குழந்தையை ஒன்றும் சொல்ல முடியாதே. எனவே அதற்கும் சேர்த்து ராகுலைத் தான் முறைத்து வைத்தாள் அமிர்தா. அப்பொழுதிலிருந்து விடாமல் முறைத்துக் கொண்டே இருந்தவளை வலுக்கட்டாயமாக ஃபுட் கோர்ட்டுக்கு இழுத்து வந்திருந்தான் ராகுல் குழந்தையை அங்கிருந்த தாதியரின் வசம் விட்டுவிட்டு.
இரண்டு கோப்பைகளில் காஃபியையும் கொஞ்சம் பிஸ்கெட்டுகளும் வாங்கி வந்து அவள் எதிரில் அமர்ந்தான் ராகுல். ராகுலைப் பார்க்காமல் எங்கெங்கோ பார்வையை சுழற்றிக் கொண்டிருந்தாள் அமிர்தா.
அப்பொழுது எதிரே ராகுலின் முதுகுக்குப் பின், ஒரு குழுவாகப் பத்து பேர் அங்கு வர அவர்களை வெறித்துக் கொண்டிருந்தாள். ஆனால் ராகுல் அமிர்தாவிற்கு எதிரில் அமர்ந்திருந்ததால் இவர்களின் வரவைக் கவனிக்கவில்லை. தன் எதிரில் கண்ணாடி இருப்பதையும் அதில் தன் பிம்பம் தெரிவதையும் கூட கண்டு கொள்ளவில்லை ராகுல். ஒரு வேளை கண்டு கொண்டிருந்தால் பிற்பாடு வரும் பிரச்சனைகளைத் தவிர்த்திருக்கலாமோ?
அந்த ஊரை சொந்த ஊராகக் கொண்ட மத்திய அமைச்சர் ஒருவர் இங்கு அவர் வீட்டில் வைத்தே தாக்கப்பட்டிருக்க சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இரவோடு இரவாக இந்த விஷயங்கள் நடந்ததால் ராகுலுக்கோ அமிர்தாவிற்கோ இது தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் போனது.
அதே சமயம், அந்நேரத்தில் அதை அறிந்து கொண்ட ஊடக மக்கள் சிலர் அங்கு குவிந்திருந்தனர். ஆனால் அமைச்சர் ஐ.சி.யூ வில இருந்த காரணத்தால் இவர்களால் அங்கு செல்லக் கூட முடியவில்லை. மருத்துவர்களையோ அமைச்சரின் உறவினர்களையோ யாரையும் சந்திக்கவும் முடியவில்லை. எனவே சற்று நேரம் ஓய்வை வேண்டி அவர்கள் அனைவரும் ராகுல் மற்றும் அமிர்தா இருந்த அதே ஃபுட் கோர்ட்டைத் தஞ்சம் அடைந்திருந்தனர்.
“காஃபி வித் சோனி” என்று சொல்லியபடியே காஃபிக் கோப்பையை அவள் புறமாக நகர்த்தி வைத்தான் ராகுல்.
“ம்ப்ச்… எல்லாமே உங்களுக்கு விளையாட்டு தானா? கொஞ்சம் கூட சீரியசாவே இருக்க மாட்டீங்களா?” சலித்துக் கொண்டே கேட்டாள் அமிர்தா.
“ஏன் ஹாஸ்பிடல்ல இருந்தா சீரியசாதான் இருக்கணுமா என்ன?”
“ம்ப்ச்… இதுக்குத்தான் நான் வரலைன்னு சொன்னேன். நான் கிளம்பறேன். உங்க கிட்ட எல்லாம் மனுஷன் பேச முடியாது.” என்று சொல்லியபடியே அமிர்தா எழுந்து கொள்ள அவள் கையைப் பிடித்துக் கொண்டான் ராகுல்.
“ஹேய்… கூல்…கூல். சரி நான் எதுவும் பேசலை. நீ காஃபியைக் குடி” என்று சொல்லி அவளை மீண்டும் அமர வைத்தான்.
இவர்கள் இருவரிடையே ஏற்பட்ட இந்த சிறு சலசலப்பு அங்கிருந்த மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தது. ராகுலை அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளவும் காரணமாக அமைந்தது.
அமர்ந்ததும் அவனிடமிருந்துக் கையை உறுவிக் கொண்டவள் காஃபி கப்பை கைகளில் ஏந்திக் கொண்டாள். இப்பொழுதும் அவளின் நெற்றிப் பொட்டு கொஞ்சம் தள்ளி இருக்க அதை எடுத்து சரியாக வைத்து விட்டான் ராகுல். அதில் எரிச்சலடைந்தவளாக தன் பொட்டினை எடுத்து காஃபி கப் இருந்த சாஸரில் ஒட்ட வைத்துவிட்டு,
“இப்ப என்ன உங்கப் பிரச்சனை? என் நெத்தியில பொட்டு இருக்குறதா? ஏன் புருஷன் இல்லைன்னா ஒரு பொண்ணு பொட்டு வைச்சுக்கக் கூடாதா? ஏன் எல்லாரும் இப்படி இருக்கீங்க?” என்று பட்டென்று எரிந்து விழ ராகுலின் முகம் கசங்கிப் போனது.
“ஒரு பொட்டை சரியா வைச்சு விட்டது ஒரு தப்பா?”
“நான் இனி பொட்டே வைக்கலை போதுமா?”
“பிரச்சனை எனக்கில்ல. உனக்குத்தான்னு தோனுது. நான் சாதாரணமா செஞ்ச ஒரு விஷயம் அதுக்கு ஏன் நீ இப்படி ரியாக்ட் பண்றே?”
“எது முன்ன பின்ன தெரியாத பொண்ணு நெத்தியில பொசுக் பொசுக்குன்னு பொட்டு வைச்சு விடறது உங்களுக்கு சாதாரண விஷயமா?”
“முன்ன பின்ன தெரியாத பொண்ணா? நான் உன்னை அப்படிப் பார்க்கலை அமிர்தா. நான் உன்னைப் பழைய குட்டிப் பொண்ணு சோனியாதான் பார்த்தேன்.”
“ஆனா நான் உங்களை அப்படிப் பார்க்கலை. சின்ன வயசுல ஒன்னா இருந்ததை வைச்சு இப்ப உங்ககிட்ட வந்து பழக முடியாது. இப்போ என்னைப் பொறுத்த வரைக்கும் நீங்க ஒரு ஸ்ட்ரேஞ்சர் தான். நீங்க பக்கத்து வீட்டுக்கு வந்திருக்கிற ஒரு கெஸ்ட். அவ்வளவுதான். அந்த லிமிட்க்குள்ள இருந்துகிட்டீங்கன்னா எல்லாருக்கும் நல்லது. புரியுதா?”
“புரியுது, நீ என்னை அப்படிப் பார்க்கலைங்குறது இப்ப எனக்கு நல்லாவே புரியுது. உங்க ரெண்டு பேரையும் பத்திரமா கொண்டு போய் வீட்ல விடுறதோட சரி. இனி நீ இருக்குற திசைப் பக்கம் கூடத் திரும்பிப் பார்க்க மாட்டேன். போதுமா?” பட்டென்று சொல்லிவிட்டு ராகுல் முகத்தைத் திருப்பிக் கொள்ள அது மிகுந்த சங்கடத்தைத் தருவித்தது அமிர்தாவின் முகத்தில்.
ராகுல் அருகே வந்தாலும் அவனிடம் முரண்டு பிடிக்கும் மனம் விலகிப் போனாலும் வருந்துகிறதே. தனக்கு என்ன தேவை என்று அமிர்தாவிற்கே தெளிவாகாத நிலை.
வாழ்வில் ஒரு கட்டத்திற்குப் பிறகுத் தன்னைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக் கொண்டு யாரையும் அதற்குள் அனுமதிக்காமல் தனித்து வாழ்ந்து வந்தவளை வந்த அன்றிலிருந்தே தன்னுடைய சிறு சிறு குறும்புச் செய்கைகளின் மூலம் பழைய அமிர்தாவாக மாற்றி அவளுடையக் கூட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துக் கொண்டிருந்தான் ராகுல்.
இத்தனை நாட்களாகத் தனக்குள் போட்டு வைத்திருந்த மாய வலை அறுபடுவதை விரும்பாமல் தான் அமிர்தா அவனிடம் கோவப்படுவது. ஆனால் அதற்கு அவன் மனம் நொந்தால் அதுவும் இவளைப் பாதிக்கிறது. சின்ன வயதிலிருந்தே ராகுலுடைய நிலையும் நல்ல குணங்களும் தெரிந்ததால் வரும் மன வருத்தம் இது.
“அன்ட் ஒன் மோர் திங்… நிலா என்னை அப்பான்னு கூப்பிட்டது எனக்கே ஆச்சரியம் தான். மே பீ சந்தோஷ் அப்படிக் கூப்பிடறதைப் பார்த்து அவளும் கூப்பிட்டிருக்கலாம். அதையும் புரிஞ்சுக்கோ. இப்போ காஃபியைக் குடி, போகலாம்” பேச்சை நிறுத்திவிட்டு ராகுல் காஃபியில் கவனமாக அமிர்தாவிற்கு மிகுந்த சங்கடமாகிப் போனது.
என்ன இருந்தாலும் நேற்று அர்த்த ராத்திரியில் வெறும் சத்தத்தை மட்டுமே கேட்டுவிட்டு ஓடி வந்து உதவியவன். தான் எவ்வளவோ மறுத்தும் விடாமல் கூடவே இருந்தானே. சமீபத்தில் ஆட்டோவில் எல்லாம் பயணித்திருப்பானோ என்னவோ? தனக்காகவும் குழந்தைக்காகவும் தானே வந்தான். அவன் இன்றிருக்கும் நிலைக்கு இப்படித் தன்னுடன் ஓடி வர வேண்டிய அவசியமே இல்லையே.
ஹாஸ்பிடலிலும் கூட இவ்வளவு துரிதமாக சிட்டியின் புகழ் பெற்ற குழந்தைகள் நல மருத்துவர் அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்திருந்தாரே. எல்லாம் யாருக்காக? தனக்காகவா? எல்லாம் ராகுலுக்காகத் தானே. ராகுலால் தானே துரித கதியில் உயர்தர சிகிச்சை நடந்தது. தான் மட்டும் தனித்து வந்திருந்தால் ட்யூட்டி டாக்டரிடம் தான் கன்சல்ட் செய்திருக்க முடியும்.
நிலா விடாமல் அழுது கொண்டிருந்தது தனக்கு எவ்வளவு மனவருத்தத்தைக் கொடுத்ததோ அதே அளவு ராகுலும் மனம் வருந்துவது அவன் முகத்திலேயே தெரிந்ததே. அவ்வாறு இருக்கையில் தான் தற்சமயம் பேசிய பேச்சு ராகுலின் உதவியை உதாசீனப்படுத்துவது போல் இருப்பதாக அமிர்தாவிற்குத் தோன்றியது. கை விரலில் அணிந்திருந்த ஒற்றை நீலக்கல் பதித்த மோதிரத்தை அவள் கழட்டுவதும் பின் விரலில் மாட்டுவதுமாக செய்து கொண்டே இதைப் பற்றி எல்லாம் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தாள் அமிர்தா.
“என்ன நான் வாங்கிக் கொடுத்ததால காஃபியும் வேண்டாமா? ஓகே ஆஸ் யூ விஷ்… போகலாம்” தோளைக் குலுக்கியபடி ராகுல் சொல்ல, தன் சிந்தனைக் காட்டிலிருந்து வெளியேறினாள் அமிர்தா.
“இல்ல அப்படி எல்லாம் இல்ல. வந்து… ஐ அம் சாரி. நான்…” மோதிரத்தைக் கழற்றி மாட்டிக் கொண்டே அமிர்தா பேச அந்த மோதிரம் கை தவறி இவர்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு அடியில் ராகுலின் கால்களுக்கு அருகில் வந்து விழுந்தது.
“வெயிட் நான் எடுக்கிறேன்” என்று கூறியவனால் அவன் இருக்கும் உயரத்திற்கு அப்படியே குனிந்து அதை எடுக்க முடியவில்லை.
எனவே அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து வெளியில் வந்து ஒற்றைக் காலை மட்டும் மடக்கி மண்டியிட்டு கைக்கெட்டும் தூரத்தில் இருந்த அந்த மோதிரத்தை எடுத்து அமிர்தாவிடம் நீட்டினான் ராகுல். அதற்குள் எழுந்துவிட்டிருந்த அமிர்தாவும் அந்த மோதிரத்தை வாங்கக் கையை நீட்ட, சற்றுத் தள்ளி இருந்து பார்ப்பவர்களுக்கு அது வேறு மாதிரியான எண்ணத்தைக் கொடுத்தது.
இவ்வளவு பேச்சு வார்த்தைகள் நடந்தாலும் இருவருமே மிக மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்ததால் சற்றுத் தள்ளி அமர்ந்திருப்பவர்களுக்கு இவர்களின் பேச்சு புரியவும் வாய்ப்பில்லாமல் போனது.
“ஓஹ் மை காட்… ஹி இஸ் ப்ரொபோசிங்” என்றொரு உற்சாகக் குரல் கேட்க அதை அடுத்து மின்னல் வெட்டுவது போல் பளிச் பளிச்சென்று உயர் ரகக் கேமராக்கள் அந்தக் காட்சியைத் தங்களுக்குள் சிறையெடுத்துக் கொண்டன.
“ஆர்.வீ இவங்க தான் உங்க ஃபியான்சியா?”
“எப்போ கல்யாணம் பண்ணப் போறீங்க?”
“ரகசியக் கல்யாணமா? இல்ல எல்லாருக்கும் சொல்லி செய்யப் போறீங்களா?”
“இது உங்க ஃபர்ஸ்ட் ஒயிஃப் மாயாவுக்குத் தெரியுமா?”
ராகுல் சற்று சுதாரிப்பதற்குள் அடுக்கடுக்காகக் கேள்விகளும் மைக்குகளும் அவனை நோக்கி நீட்டப்பட்டிருந்தது. முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி தெறிக்க நிமிர்ந்து அமிர்தாவைப் பார்த்தான் ராகுல். அவள் இன்னமுமே அதிர்ந்து விழித்துக் கொண்டிருந்தாள்.
“ஓ… ஷிட்” என்றவாறு எழுந்து முன் நெற்றியை ஒரு கையால் அழுந்தப் பிடித்துக் கொண்டவன் தன்னை முற்றிலுமாக சுதாகரித்துக் கொள்ள சில நொடிகள் தேவைப்பட்டது. சுதாரித்துக் கொண்டவுடன் விறுட்டென்று ஒற்றைக் கையால் அதிர்ந்து நின்றிருந்த அமிர்தாவின் கையைப் பற்றியபடி அவளையும் இழுத்துக் கொண்டு அங்கிருந்து விரைந்து வெளியேறினான். திறந்திருந்த லிஃப்ட்டினுள் புகுந்து சட்டென மறைந்திருந்தான் ராகுல் ரவிவர்மன்.
குழந்தை நிரஞ்ஜலா இருந்த ரூமிற்குள் வந்து சேர்ந்தவுடன் படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டாள் அமிர்தவர்ஷினி.
“நான் இருக்கிற இடமே யாருக்கும் தெரியக் கூடாதுன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். இப்படி ஊருக்கே வெளிச்சம் போட்டுக் காட்டிட்டீங்கல்ல. எல்லாம் உங்களால தான்.”
ராகுலுமே கொஞ்சம் அதிர்ந்த மனநிலையில் இருந்ததால் அமிர்தா இவ்வாறு கூறியதைக் கருத்தில் கொள்ளாமல் இருந்துவிட்டான்.
“நான் நேத்திலிருந்து தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன். எங்கக் கூட வராதீங்கன்னு. கேட்டீங்களா நீங்க? இப்பக் கூட அந்த ஃபுட் கோர்ட்டுக்கு வர மாட்டேன்னு தானே சொன்னேன். வலுக்கட்டாயமா இழுத்துட்டுப் போய் இப்படி சந்தி சிரிக்க வைச்சுட்டீங்களே. இப்போ சந்தோஷமா உங்களுக்கு?”
“அமிர்தா போதும் நிறுத்து” அடக்கப்பட்ட கோபத்துடன் ஒலித்தது ராகுலின் குரல்.
“அப்படி என்ன பொல்லாத அக்கறை உங்களுக்கு எங்க மேல? நாங்க கேட்டோமா உங்க அக்கறையை? நான் பாட்டுக்கு நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்தேன். இப்படிப் பண்ணிட்டீங்களே. இல்ல, நான் தெரியாமத் தான் கேட்குறேன், எல்லாமே உங்க விருப்பப்படி தான் நடக்கணுமா?
ஆமா சின்னப் பிள்ளையில ஒண்ணா விளையான்டோம்தான். அதுக்கு இப்பவும் அப்படியே சுத்தணுமா என்ன? எல்லாருமே வளர்ந்தாச்சு. இப்போ நீங்க வேற நான் வேற. இதை எப்பத்தான் நீங்க புரிஞ்சுக்க போறீங்க?”
“அமிர்தா ஜஸ்ட் ஸ்டாப் இட்” இப்பொழுதும் ராகுலின் குரலில் அடக்கப்பட்ட கோவமே தெறித்தது.
“என்ன தெரியும் உங்களுக்கு? குழந்தையோட இந்த ஊருக்கு வந்தப்புறம் நான் எவ்வளவு கேள்விகளை சந்திச்சிருக்கேன்னு தெரியுமா? எத்தனை விதமானப் பார்வைகளைக் கடந்து வந்திருக்கேன்னு தெரியுமா? இப்போ இன்னும் என்னென்ன பேச்சுக்களைக் கேட்கணுமோ? எல்லாம்…”
“ஸ்டாப் இட் அமிர்தா” இம்முறை இவன் கத்திய கத்தலில் குழந்தை விழித்துக் கொண்டு வீறிட்டு அலறுமளவிற்கு உரக்கக் கத்தியிருந்தான் ராகுல்.
குழந்தையின் அலறலில் தன் தவறை உணர்ந்தவன் ஒற்றைக் கையால் நெற்றியைத் தடவியவாறு அங்கிருந்த கௌச்சில் அமர்ந்து விட்டான் ராகுல்.
அதற்குள் அமிர்தா குழந்தையைத் தூக்கி சமாதானப்படுத்த, காலை நேரம் வழமையாக அந்த மருத்தவமனையில் செய்யப்படும் பணிகளுக்காக தாதியர் ஒருவர் வர அந்தப் பேச்சு அத்தோடு நின்று போனது.
உள்ளே நுழைந்த நர்சுக்கும் கூடத் தெரிந்தது சூழ்நிலை எதுவோ சரியில்லையென்று. அத்தனை இறுக்கம் தெரிந்தது ராகுலின் முகத்தில். நேற்று அவனிடம் இருந்த இலகுத்தன்மை இன்று காணாமல் போயிருந்தது.
நேற்று சில மருத்துவமனை ஊழியர்கள் ராகுலுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பிய பொழுது எந்த பந்தாவும் பண்ணாமல் இயல்பாகப் புன்னகைத்துக் கொண்டே அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டவன். இன்று அதிகாலையிலேயே இப்படி இறுக்கமான முகத்தோடு அமர்ந்திருப்பது எதுவோ சரியில்லை என்று அந்த நர்சுக்கு உணர்த்தியது. அமிர்தாவின் முகத்தைப் பார்க்க அது அதற்கும் மேல் கோபத்தைக் காட்டியது.
“சார் எதாவது ப்ராப்ளமா?” தயங்கித் தயங்கிக் கேட்டார் அந்த நர்ஸ்.
“உங்க ஹாஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் எடுத்தா இலவச இணைப்பா மீடியாவுக்கு போட்டோஸ் குடுக்கணுமா என்ன? மீடியா பீப்பிள்சுக்கு ஹாஸ்பிடல்ல என்ன வேலை?” சம்பந்தமே இல்லாமல் அந்த நர்சிடம் எரிந்து விழுந்தான் ராகுல்.
“சார் நேத்து நம்ம ஊர் எம்.பி இருக்காரில்ல அவரை வீடு புகுந்து யாரோ கொல்லப் பார்த்திருக்காங்க. உயிருக்கு ஆபத்தான நிலைமையில இந்த ஹாஸ்பிடல்ல தான் அட்மிட் பண்ணியிருக்காங்க. எப்படித் தான் மீடியாவுக்குத் தெரிஞ்சதோ அவர் அட்மிட் ஆகிக் கொஞ்ச நேரத்துலேயே எல்லாரும் வந்துட்டாங்க.”
“சரி அந்த விஷயத்தை நீங்க யாராவது என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல?”
என்ன சொல்கிறான் இவன். இவன் இந்த வளாகத்தில் இருப்பதை மீடியாவிற்கு சொல்லாமல் இருக்கச் சொன்னால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. மருத்துவமனையின் இன்னொரு பகுதியில் நடக்கும் விஷயத்தை இங்கு வந்து இவனிடம் ஏன் சொல்ல வேண்டும்? சுத்தமாகப் புரியவில்லை அந்த நர்சிற்கு. ஆனாலும் சமாளிப்பாகப் பதில் சொன்னாள்.
“சார் அது இன்டென்சிவ் கேர் யூனிட்ல. நீங்க இருக்கிறது சைல்ட் கேர் ப்ளாக்ல. அது அந்தக் கடைசில இருக்கு. இது இந்தக் கடைசி சார்.” அழும் குழந்தையைப் பரிசோதித்துக் கொண்டே பதிலளித்தார் அந்த நர்ஸ்.
“ஓஹ்… சரி இப்போ குழந்தை நார்மலா இருக்காளா? இதுக்கும் மேல ஒன்னும் பிராப்ளம் இல்லையே?”
“நைட்டே நார்மல் தான் சார். ஒரு ப்ரிகாஷனுக்காகத் தான் ஹாஸ்பிடல்ல இருக்க சொன்னாங்க. நௌ ஷீ இஸ் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட் சார்.”
“ஃபைன் அப்போ நாங்க கிளம்பலாமா? டிஸ்சார்ஜ் ஃபார்மாலிட்டீஸ் கொஞ்சம் சீக்கீரம் முடிச்சா பெட்டரா இருக்கும்.”
“டாக்டர் வந்து ஒரு தரம் பார்த்துட்டா நீங்க கிளம்பலாம் சார். டாக்டர் இப்போ வர்ற நேரம் தான். நான் போய் உங்க டிஸ்சார்ஜ் சம்மரி ரெடி பண்றேன்.” என்றவாறு ராகுலிடம் கூறிவிட்டு அமிர்தாவிடமும் ஒரு புன்னகையைக் கொடுத்துவிட்டு வெளியேறினார் அந்த நர்ஸ்.
“நீ மொபைல் வைச்சிருக்கியா? நான் வர்ற அவசரத்துல அதை எடுக்கலை. ப்ளீஸ்… வேற எதுவும் பேசாத” என்று அமிர்தாவைப் பார்த்துக் கேட்டிருந்தான் ராகுல்.
அமிர்தாவிற்கு உள்ளுக்குள் கோபம் கனன்று கொண்டிருந்தாலும் இதற்கு மேல் அதை ராகுலிடம் காட்ட அவனின் கெஞ்சுதலான குரல் விடவில்லை. ஹேன்ட் பேகிலிருந்து மொபைலை எடுத்து ராகுலிடம் நீட்டியிருந்தாள் பெண்.
மொபைலை வாங்கிய கையோடு கௌஷிக்கிற்கு ராகுல் அழைப்பு விடுக்க, அந்தப் பக்கம் தூக்கக் கலக்கத்தோடு ஒலித்தது கௌஷிக்கின் குரல்.
கௌஷிக்கிடம் ஒன்றுவிடாமல் நடந்தது அத்தனையையும் சொல்லி முடித்தான் ராகுல். கௌஷிக்கின் தூக்கம் இருந்த இடம் தெரியாமல் பறந்து போயிருந்தது.
“இதுக்குத்தான் நான்…” கௌஷிக் ஏதோ பேச வர,
“கௌஷிக் ப்ளீஸ், நான் ஆல்ரெடி எல்லாத்தையும் கேட்டாச்சு. நீயும் உன் பங்குக்கு ஆரம்பிக்காதே. தயவு செஞ்சு காரை எடுத்துக்கிட்டு சீக்கிரம் வந்து சேரு”
ராகுல் சொல்லி முடித்த அடுத்த நொடி சத்யவதியிடம் சொல்லிவிட்டுக் காரில் ஏறியிருந்தான் கௌஷிக். அதற்கு மேல் எந்தக் கேள்வியும் ராகுலை அவன் கேட்கவில்லை. கௌஷிக்கிற்கு அவன் நண்பனைப் பற்றி நன்றாகவேத் தெரியும் அல்லவா.
கௌஷிக் காருடன் வந்து சேரவும் அதே பில்டிங்கின் மற்றொரு பிரத்யேக வழி வழியாகக் குழந்தையுடன் வெளியேறினார்கள் ராகுலும் அமிர்தாவும்.
இவர்கள் மூவரும் குழந்தையோடு வீடு வந்து சேர்ந்த பொழுது தொலைக்காட்சியின் அனைத்து சேனல்களிலும் இவர்கள் விடயம் தான் ஃபிளாஷ் நியூசாகப் போய் கொண்டிருந்தது.
“பிரபல இசையமைப்பாளர் ஆர்.வீ ஒரு பெண்ணுக்கு ப்ரபோஸ் செய்த காட்சி பிரத்யேகமாக உங்களுக்காக” என்று மீண்டும் மீண்டுமாகக் கூவிக் கொண்டிருந்தார்கள். அமைச்சரின் விஷயம் பின்னுக்குப் போயிருந்தது.
முகம் முழுக்கக் குழப்பத்துடன் டிவியை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தார் சத்யவதி அருகில் சந்தோஷுடன். இவர்களைப் பார்த்ததும் பதறிப் போனவராக,
“என்னம்மா இது இப்படி எல்லாம்…” என்று அமிர்தாவிடம் பேசியவர் குழந்தை நிரஞ்ஜலாவைக் கையில் வாங்கிக் கொண்டார்.
“வீட்டுக்குள்ள எப்படிம்மா தேள் வந்துச்சு? குழந்தைக்கு ஒன்னும் இல்லையே? தேள் கொட்டினா பெரியவங்க நம்மளாலேயே தாங்க முடியாது. குழந்தை எப்படித்தான் வலி தாங்கினாளோ பாவம்” என்று சத்யவதி அவர் போக்கில் புலம்பிக் கொண்டிருக்க அமிர்தாவோ டிவியை வெறித்த வண்ணம் நின்று கொண்டிருந்தாள். அவள் காதில் சத்யவதி பேசிய எதுவும் விழுந்தாற் போலத் தெரியவில்லை.
“ராகுல், என்னப்பா இது டிவியில என்னென்னமோ சொல்றாங்களே. கொஞ்சம் கவனமா நடந்துக்கிட்டு இருக்கக் கூடாதா?” என்று ராகுலிடமும் அங்கலாய்த்தார் சத்யவதி.
“ம்மா விடுங்க. அவனுக்கு மட்டும் தெரியுமா என்ன இப்படி எல்லாம் நடக்குமின்னு. இதை எப்படி டீல் பண்றதுன்னு எனக்குத் தெரியும். நான் பார்த்துக்கிறேன்” ராகுலுக்காகப் பரிந்து கொண்டு வந்தான் கௌஷிக்.
“அதுக்கில்லை கௌஷிக். பொம்பளைப் பிள்ளை பேரைக் கெடுத்துட்டாங்களேப்பா. ராகுல் விஷயம் வேற. இந்தப் பொண்ணு நாளைப் பின்ன வெளிய தெருவ போக வேண்டாமா? என்ன எல்லாம் பேசுவாங்களோ? எனக்கு நினைக்க நினைக்க நெஞ்செல்லாம் பதறுதுப்பா.”
“நான் பார்த்துக்கிறேன்ம்மா. ஒருத்தன் ப்ரபோஸ் பண்றதுக்கு ஹாஸ்பிடலையா சூஸ் பண்ணுவான். இதைக் கூடவா யோசிக்க மாட்டாங்க. நான் இமிடியட்டா ஒரு பிரஸ் மீட் அரேஞ்ச் பண்ணி மறுப்பு செய்தி போட சொல்றேன்.
அமிர்தா, நீ இதுக்காக ஒன்னும் ஃபீல் பண்ணாதே. இந்த விஷயம் என் பொறுப்பு. சரியா? நீ குழந்தையை மட்டும் கவனி.
டேய் உனக்கும் தான்டா. ஏன் முகத்தை இப்படி வைச்சுக்கிட்டு இருக்குற. பார்க்க சகிக்கலை. விடுறா பார்த்துக்கலாம்.”
கௌஷிக் சொல்லவும் ஆறுதலாகப் புன்னகைத்தான் ராகுல். ஆனால் அமிர்தாவின் முகத்தில் தீவிர சிந்தனை ரேகைகள். இதனால் இன்னும் எவ்வளவு சிக்கல்களைத் தான் சந்திக்க நேரிடுமோ என்று ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள் அமிர்தவர்ஷினி.
‘யாருக்கு யார் உறவு யாரறிவாரோ
என் பெயரில் உன் பெயரை
இயற்கையும் எழுதியதே’

error: Content is protected !!