idhayam – 18

idhayam – 18

 

அத்தியாயம் – 18

அவளின் ஒவ்வொரு வரியிலும் காதலை உணர்ந்தவனுக்கு கண்கள்தான் கலங்கியது. அரங்கமே கரகோஷத்தில் அதிர ஆதி மட்டும் தனிமையுடன் உறவாடியபடி கற்சிலைபோல அமர்ந்திருந்தான்.

அவளின் இனிமையான தேன்குரலும், வீடியோவில் அவன் கண்ட அவளின் பளிங்கு முகமும் அவனின் மனதை என்னவோ செய்தது. அவளை சந்திக்கும் எண்ணம் மனதில் எழுந்த போதெல்லாம் மனதை அடைக்கிக்கொண்டு கடந்து சென்றான்.

இன்று ஏனோ அவனால் அப்படி இயல்பாக இருக்க முடியவில்லை. எவ்வளவு தான் மறக்க நினைத்தாலும் மறக்க முடியாத சில காதல் ரணங்கள் அவனை என்னவோ செய்தது.

மற்றொரு மெசேஜ் வந்து அவனின் கவனத்தை ஈர்க்க மனதின் போராட்டத்தில் இருந்து தன்னை மீட்டுக்கொண்ட ஆதியின் விழிகள் அவனையும் அறியாமல் அந்த மெசேஜை வாசித்தது.

‘நான் அபூர்வாவை காதலிக்கவில்லை. அவளை காதலிக்க வைக்க முயற்சிதான் பண்ணேன். இத்தனை நாள் எனக்கு புரியாத ஒரு விஷயம் அபூர்வாவின் நடவடிக்கை தான். இன்றோ அவளின் அத்தனை செயலுக்கு பின்னாடியும் நீங்க இருக்கீங்க என்று புரிஞ்சிகிட்டேன். உங்க மேரேஜ்க்கு மறக்காமல் இன்விடேஷன் வைங்க கட்டாயம் நான் வருவேன் என் மனைவியுடன்’ என்று அனுப்பியிருந்தான் பிரணவ்.

அவனின் ஒவ்வொரு வரியும் உண்மையை பிரதிபலிப்பதைக் கண்ட ஆதி, ‘தேங்க்ஸ்’ என்று அனுப்பிவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தான்.

இரவு வெகுநேரம் சென்றபிறகு அவன் வீட்டிற்கு வரவில்லை என்றதும் மஞ்சுளா பதட்டத்துடன் மகனுக்கு அழைப்புவிடுக்கவும் வீட்டின் வாசலில் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. என்றும் இல்லாத திருநாளாக குடிக்காமல் வந்த மகனை விநோதமாக பார்த்து வைத்தார் மஞ்சுளா.

“அம்மா சாப்பாடு சாப்டீங்களா” அவன் அக்கறையுடன் விசாரித்தபடி மாடியேற, “ம்ம் சாப்பிட்டேன்” என்றதோடு பேச்சை முடித்துவிட்டார் மஞ்சுளா.

தன்னறைக்குள் நுழைந்த ஆதி டவலை எடுத்துகொண்டு குளியலறைக்குள் நுழைந்தான். சற்று நேரத்தில் குளித்துவிட்டு வந்தவன் பால்கனியில் போடப்பட்டிருந்த சோபாவில் சென்று அமர்ந்தவனின் மனமோ அவளை நோக்கி சென்றது.

வானில் நிலவு தனியே பயணிப்பதைக் கண்டு, ‘நீயும் என்னைபோல தனிமையில் தான் கரைகிறாயோ’ என்று பல்கனியில் நின்று தோட்டத்தை ரசித்தான். இரவு நேரத்தில் தென்றலின் தாலாட்டு மனதை வருடிச்செல்வது போல உணர்ந்த ஆதியின் மனம் அவளை தேடி ஓடியது.

அவளின் பாடலை மீண்டும் ஒரு முறை கேட்க தூண்டியது அவனின் மனம். அவள் பாடிய பாடலை ஒலிக்கவிட்ட ஆதி முழுவதும் கேட்டு முடிக்கும் வரை அமைதியாக சோபாவில் சாய்ந்து விழி மூடினான். அவளின் தேன் குரல் அவனின் மனதை என்னவோ செய்தது.

‘பொம்மு உன்னை புரிஞ்சிக்காமல் பிரிந்து வந்துவிட்டேன்னு என் மேல் உனக்கு கோபமே வரலையா? என்னவோ தெரியல பொம்மு இன்னைக்கு உன் நினைவாகவே இருக்கு. நீ பாட்டில் உணர்த்திய செய்தியை நம்ப முடியாமல் இருக்கேன்’ என்று மனதில் அவளுடன் பேசிக் கொண்டிருந்தான் ஆதி.

இந்த ஐந்து வருடத்தில் அவனின் வளர்ச்சி உச்சத்தை தொட்டிருந்தது. அதற்கு எல்லாம்  காரணமானவள் அவள் தான். எந்தவொரு ஆணின் வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வது ஆதியின் விஷயத்தில் மறுக்க முடியாத உண்மை.

அவளை நேசிக்க தொடங்கிய நாளில் இருந்தே அவனின் வளர்ச்சி தொடங்கிவிட்டது என்று சொல்லலாம். யாரிடமும் மயங்காத அவனின் மனம் அவளிடம் மட்டும் மயங்கிட காரணம் என்னவென்று அவனுக்கு இன்றுவரை புரியவில்லை.

“நீ வருவாய் என்ற எண்ணத்தில் மட்டும் காத்திருக்கேன் பொம்மு” பொழுது விடியும் வரை ஏதேதோ நினைவுகளில் மூழ்கியவண்ணம் தூங்காமல் விழி திறந்தான்.

அவனின் மனக்குரல் அவளின் காதுகளுக்கு எட்டியதோ என்னவோ?

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அபூர்வா தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தாள். ஜன்னலின் வழியாக வந்த காற்று அவளின் கூந்தலைக் கலைத்து சென்றது. நேரத்தை கூட கவனிக்காமல் பால்கனியில் சென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்த அபூர்வா வானில் உலா போன நிலவை வேடிக்கைப் பார்த்தாள்.

அப்போது தண்ணீர் குடிக்க எழுந்து வந்த மதுமிதா மகள் தூங்காமல் இருப்பதைக் கண்டு, “அபூர்வா இன்னும் தூங்காமல் என்னடா பண்ற” என்ற கேள்வியுடன் அவளின் அறைக்குள் நுழைந்தார்.

தாயின் குரல்கேட்டு கவனம் கலந்து திரும்பிய அபூர்வா, “இல்லம்மா தூக்கம் வரல” என்று புன்னகைக்க அவளின் அருகே வந்து அமர்ந்த மது மகளின் முகத்தை கூர்ந்து கவனித்தார்.

“இந்த வயசில்  தூக்கம் வராமல் இருப்பதுக்கு காரணம் இருக்கணுமே” என்று கிண்டலோடு கேட்ட தாயை முறைக்க முயன்று தோற்றவளாக தாயின் தோளில் சாய்ந்து அமர்ந்தாள்.

“என்னவோ தெரியலம்மா மனசு ஒரு மாதிரி இருக்கு” என்று கூறிய மகளின் தலையை வருடிவிட்ட மதுவோ, “காலேஜ் முடிய போகுது இனிமேல் வேலை தேடணும் என்று பயம் வந்துவிட்டதா என் மகளுக்கு” என்றார் சிரித்தபடி.

“அது பற்றி எனக்கு என்னம்மா கவலை. நிறைய பிளான்ஸ் எல்லாம் வெச்சிருக்கேன். அப்பாவிடம் சொன்ன உடனே புது கம்பெனி தொடக்கி கொடுத்துவிடுவார். ஆன இது அதெல்லாம் இல்லம்மா..” என்றவளின் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்த மதுவின் புருவங்கள் சிந்தனையுடன் சுருங்கியது.

“நீ மனசைப் போட்டு குழப்பிக்காமல் போய் தூங்கு மற்றது எல்லாம் உன் விருப்பபடி நல்லதாகவே நடக்கும்” அவளுக்கு தைரியம் சொல்லி தூங்க வைத்த மதுவிற்கு அபூர்வாவின் செயல்களில் வித்தியாசத்தை உணர்ந்தார். மகளின் மீது வைத்திருந்த நம்பிக்கையால் அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

நாட்கள் ரேக்கைகட்டிக்கொண்டு பறக்கவே அபூர்வா இறுதி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்க கேம்பஸ் மூலமாக அவளுக்கு வேலை கிடைக்கவே இன்னும் உற்சகமாக வலம் வர தொடங்கினாள்.

தனக்கு வேலை கிடைத்த விஷயத்தை வீட்டில் சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை. அப்படி சொன்னால் தன்னை போக விடமாட்டார்கள் என்ற முடிவிற்கு வந்தவள் வீட்டில் இருந்தவர்களிடம் உண்மையைச் சொல்லாமல் மறைத்துவிட்டாள்.

எக்ஸாம் அனைத்தும் முடித்துவிட்டு கல்லூரி வாழ்க்கைக்கு ஒரு பெரிய குட் பாய் சொல்லிவிட்டு வீடு வந்து சேரும்போது வீட்டில் பெரியவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருப்பதைக் கண்டு, “என்னப்பா நடக்குது இங்கே” என்ற கேள்வியுடன் வீட்டிற்குள் நுழைந்தாள் அபூர்வா.

“வா அபூர்வா” என்று மகளைக் கூப்பிட்டு அருகே அமரவைத்த ரோஹித் தன் கையில் இருந்த போட்டோவை மகளிடம் காட்டி, “இந்த பசங்களில் யாரை உனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லு” என்றார்

“எதுக்கு அப்பா” என்றாள் மகள் குறும்புடன்.

“உனக்கு பிடிச்ச பையனாக பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சா இந்த அப்பாவின் கடமை முடிஞ்சிரும்” என்றதும் அவளின் உதட்டில் இருந்த புன்னகை உறைந்து போனது.

அதுவரை இப்படி ஒரு சூழ்நிலை வருவென்று அவள் நினைக்கவே இல்லை. அங்கிருந்த அனைவரும் ஆர்வத்துடன் அபூர்வாவின் முகம் நோக்கிட, “அக்கா நீ போட்டோவை பாரு” என்று சக்தி சந்தோசமாக கூற  இவளுக்கோ உள்ளுக்குள் உதறல் எடுத்தது.

அவளின் கலங்கிய முகம் கண்டதும், ‘இன்னும் எத்தனை நாளைக்கு அக்கா கண்ணாமூச்சி ஆட்டம் ஆட போற. இன்னிக்காவது உன் மனசில் இருப்பதை இவங்களிடம் சொல்லிவிடேன்’ என்று அவளிடம் மனதிற்குள் பேசிக் கொண்டிருந்தான் சக்தி.

அவள் அந்த போட்டோவை கையில் வாங்காமல் வெறித்த அபூர்வாவின் மனமோ அவனை மட்டுமே தேடியது. திருமணம் என்ற பேச்சு வரும் என்று நினைத்தாலே தவிர அது இவ்வளவு சீக்கிரம் வருமென்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.

அபூர்வா இதுநாள் வரை படிப்பை தவிர மற்ற எதைபற்றியும் யோசிக்கவே இல்லை. திடீரென்று அவர்கள் திருமணம் என்றதும் அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. நொடியில் அவளின் பார்வையில் இருந்த மாற்றத்தைக் கண்டு கொண்டனர் ரோஹித்தும், மதுவும்!

திருமணம் என்றாலே சந்தோஷத்துடன் மலரும் முகத்தில் மருந்துக்கும் மலர்ச்சி இல்லை. அவளின் பார்வை மற்றவர்களின் மனதில் சந்தேகத்தை உருவாக்கியது.

அவள் பதில் பேசாமல் மெளனமாக இருக்கவே, “என்ன அபூர்வா அமைதியாக இருக்கிற” என்று மது மகளின் தோளில் கை வைத்தார் மதுமிதா.

மகளின்  தவிப்பை அவளின் விழிகளே காட்டி கொடுக்க கணவனிடம் அர்த்தம் பொதிந்த பார்வையை பரிமாறிக் கொண்டார் மதுமிதா. 

அதுவரை சொல்லாமல் மனதோடு மறைத்த உண்மையை அவர்களிடம் எப்படி சொல்வதென்று தெரியாமல், “இல்லம்மா எனக்கு வேலை கிடைச்சிருக்கு” சொல்ல வந்த விஷயத்தை முழுங்கிவிட்டு திணறலுடன் கூறினாள் மகள்.

“உனக்கு வேலை கிடச்சிருக்கா. நீ சொல்லவே இல்லையே அபூ” என்றார் ரஞ்சித் கேள்வியாக அவளை நோக்கியபடி.

“எனக்கு வேலை கிடைச்சு ரொம்பநாள் ஆச்சு மாமா. நான்தான் போகும்போது சொல்லலாம்னு அமைதியா இருந்தேன்” என்றவள் கை விரல்களை ஆராய்ந்தபடி மெல்ல கூறினாள் அபூர்வா.

அவளின் செயலில் மாற்றத்தை உணர்ந்த கீர்த்தி நிமிர்ந்து சுற்றி இருந்த அனைவரையும் பார்த்தாள். ரோஹித் சிந்தனையுடன் மகளை நோக்கிட, “என்ன போகும் போது சொல்லலாம்னு இருந்தாயா” என்று கேள்வியாக நிறுத்திய மது மகளை ஆழ்ந்து பார்த்தாள்.

தாயின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலைகுனிந்த அபூர்வா, “ஆமாம்மா எனக்கு வேலை கொல்கத்தாவில் கிடைச்சிருக்கு” என்று மெல்லிய குரலில் கூறியவளை மற்றவர்கள் முறைத்தனர்.

சக்தி ஒரு படி மேலே சென்று, “என்னது கொல்கத்தாவிலா? அவ்வளவு தூரம் போய் வேலை செய்ய வேண்டாம் அக்கா” தன் முடிவை மற்றவர்களின் முன்னாடி சொல்லிவிட்டு வேகமாக படியேறி சென்றவனை சாமதானம் செய்ய முடியாத நிலையில் சிலைபோல அமர்ந்திருந்தாள்.

“அபூர்வா இதென்ன புதுபழக்கம் எங்களிடம் சொல்லாமல் நீயே ஒரு முடிவெடுத்து வெச்சிருக்க” என்று கயல்விழி தன் பெரிய மகளை கோபத்துடன் அதட்டிட ஜீவாவிற்கு ஏதோ புரிவதுபோல இருந்தது.

“நீ அமைதியாக இரு கயல். பிரச்சனை நீ நினைக்கிற மாதிரி சின்ன விஷயம் இல்ல” என்று மனைவியை அடக்கினார் ஜீவா.

ரோஹித், மதுமிதா, ரஞ்சித், கீர்த்தி, ஜீவா, கயல்விழி அனைவரும் அபூர்வாவை பார்வையால் துளைத்தெடுக்க, “எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்” என்று மறுத்தவளின் நடவடிக்கை மனதிற்குள் சந்தேகத்தை உருவாக்கியது.

அதுவரை மௌனமாக இருந்த ரோஹித், “கல்யாணம் வேண்டாம் சரி. ஆனால் அதுக்கு ஒரு காரணத்தை சொல்லு அபூர்வா” என்றவர் நேரடியாக மகளிடம் கேட்டார்.

கண்களில் கண்ணீர் வழிய  நிமிர்ந்தவள் தந்தையின் தோளில் சாய்ந்து விம்மி விம்மி அழுத மகளைக் கண்டு மதுமிதாவின் வயிற்றில் பயபந்து உருண்டது.

அவளின் அந்த அழுகையைக் கண்டு குடும்பமே ஒரு நிமிடம் பதறிபோனது. அவர்களின் வாழ்க்கையில் முதல் அத்தியாயம் அபூர்வாவால் எழுதபட்டது. அவள் இப்படி அழுது அங்கு யாருமே பார்த்ததில்லை.

அவளை தோளோடு சாய்த்துக்கொண்ட ரோஹித், “பூமா.. பூமா” என்று அழைக்க அவளோ குழந்தை போல அவளை நிமிர்ந்து பார்த்தாள்.

“அப்பாவிடம் ஏதாவது உண்மையை மறைத்துவிட்டாயா?” என்று மெல்ல கேட்க அவளோ தலையைக் குனிந்து கொண்டாள்.

ஒரு விரலால் அவளின் முகத்தை நிமிர்த்தி கண்களைப் பார்த்தவர், “இங்கே பாரு அப்பாவிடம் உண்மையை மறைக்காதே. உன் கண்கள் சொல்லுது நீ என்னிடம் ஏதோ சொல்ல நினைக்கிறன்னு” என்றதும் அவளின் கட்டளை இன்றியே தலை தானாக ஆடி அவளைக் காட்டிக் கொடுத்தது.

“என்ன விஷயம்..” என்றவர் பொறுமையாக கேட்க, “அப்பா” என்று தொடங்கிய அபூர்வா குற்றாலத்தில் நடந்த விஷயத்தை கூறி தன்னிடம் இருந்த கடைசி ஆதாரமான அந்த பேப்பரையும் அவரிடம் கொடுத்தாள்.

ரோஹித் மகளை ஒரு கையால் அணைத்தபடி அவள் கொடுத்த பேப்பரை படித்துவிட்டு, “ம்ம் சரிம்மா இப்போ என்ன பண்ண போறே” என்று உணர்ச்சி துடைத்த குரலில் கேட்டார்.

அதில் மீண்டும் அவளுக்கு அழுகை வரவே, “அப்பா நான் வேணும்னு எதையும் செய்யலப்பா. என்னை நம்புங்க அப்பா. நான் இதுநாள் வரை சொல்லாமல் இருந்தது என் தப்புதான் இல்லன்னு சொல்லல. பிளீஸ் அப்பா நான் போகணும்” என்று கெஞ்சினாள் மகள்.

அவளின் நிலையிலிருந்து அனைத்தும் யோசித்து பார்த்த ரோஹித் – மதுமிதாவிற்கு மகளின் முடிவில் மனம் நிறைந்தது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்காமல் அந்த வயதிலும் யோசித்து நிதானமாக முடிவெடுத்த அவளின் பக்குவம் வளர்த்தவர்களின் மனதை நிறைத்தது.

“எங்க வளர்ப்பு பொய்யாக போகல. நீ எங்க வளர்ப்பு என்று காட்டிட்ட. நீ அந்த வயதில் எடுத்த முடிவு சரிதான். என்ன எங்களிடம் இதெல்லாம் முன்னாடியே சொல்லி இருக்கலாம்” என்ற ரோஹித் குரலில் வருத்தம் அவளின் மனதை தொட்டது.

“அப்பா” என்றவளின் விழிகள் பளிச்சிட அவரை ஏறிட்டாள் மகள்.

“ஒருத்தன் பணக்காரனா ஏழையா என்று பார்த்தெல்லாம் காதல் வராது. அது ஒரு அழகான உணர்வு. சில்லென்று வீசும் தென்றல் நம் உடலை வருடிசெல்லும்போது மனதில் ஏற்படும் ஒருவிதமான சிலிர்ப்பு ஓடி மறைவது போல இந்த காதலும் மனசுக்குள் இருக்கும்” என்றவர் அங்கிருந்த எல்லோரையும் காட்டினார்.

“இங்கே நாங்க ஒன்றாக இருக்க ஒரு காரணம் நட்பு. இன்னொரு காரணம் எங்களோட செல்ல மகள் நீ. உனக்காகவே தான் நாங்க எல்லோரும் இன்னைக்கு வரைக்கும் பிரியாமல் இருக்கோம் அபூர்வா..” என்றது மற்றவர்கள் பார்வை அவளின் மீதே நிலைத்தது ஒருவிதமான உரிமையுடன்.

அவள் அமைதியாக இருக்க, “உன்னோட விருப்பம் போல செய். நாங்க தடையாக இருக்க மாட்டோம் கண்ணா. உன்னை தாங்கிப் பிடித்து தேற்றுவதற்கு நாங்க இருக்கும்போது நீ ஏன் கவலைபடற. நீ போய் எங்க மருமகனை கண்டுபிடிச்சு தலையில் நாலு தட்டு தட்டி இழுத்துட்டு வா” என்று அவர் மகளின் தலையைப் பாசத்துடன் வருடினார்.

“அப்பா” ஆச்சரியத்தில் விழி விரிய அவரையே பார்த்தவளுக்கு முதலில் அவரின் சம்மதம் அதிர்ச்சியைக் கொடுத்தது.

பிறகு கண்கள் கலங்கிட தந்தையின் தோள்களில் சாய்ந்து, “தேங்க்ஸ் அப்பா என்னை புரிஞ்சிகிட்டதுக்கு” என்றதும்  மகளின் தலையை பாசத்துடன் வருடினார் ரோஹித்,

“நீ கொல்கத்தா கிளம்புவதற்கான ஏற்பாடுகளைப் பாரும்மா” என்று கூறியாவர் தன் மனைவியிடம், “என்ன மது நான் சொல்வது சரிதானே” என்றதும் அவளும் ஒப்புதலாக தலையசைத்தார்.

மற்றவர்களுக்கும் அதுவே சரியென்று தோன்ற அந்த வாரத்தின் இறுதியில் அபூர்வா கொல்கத்தா செல்வதென்று முடிவெடுக்கபட்டது. அவள் கொல்கத்தா செல்வது பிடிக்காமல் தன் ஒதுக்கத்தை வெளிப்படையாக அபூர்வாவிடம் காட்டினான் சக்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!