idhayam – 23

idhayam – 23

அத்தியாயம் – 23

சக்தி கல்லூரியின் இறுதியாண்டில் அடியெடுத்து வைக்க, ராகவ் – ரக்சிதா இருவரும் கல்லூரி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தனர். காலையில் வழக்கம்போல கல்லூரிக்கு கிளம்பிய சக்தியின் மனமோ படபடவென்று அடித்துக்கொண்டது.

அவன் பைக் எடுக்க வரும்போது ராகவ் – ரக்சிதா இருவரும் கல்லூரிக்கு கிளம்ப தயாராக இருக்க, “அதெல்லாம் தெரியாது என்னை இன்னைக்கு காலேஜில் டிராப் பண்ணிட்டு அப்புறம் நீ காலேஜ் போ” சஞ்சனா வேண்டுமென்றே அவர்களுடன் வம்பு வளர்த்திக் கொண்டிருப்பதைக் கண்டான்.

“சஞ்சனா புரிஞ்சிக்கோ இன்னைக்கு காலேஜ்ல முக்கியமான வேலை இருக்குடி” என்று ராகவ் கூற, “என்ன இன்னைக்கு காலேஜ் வர பொண்ணுங்களை சைட் அடிக்கிற வேலையா” என்று அவள் இடையில் கையூன்றி அவனை வம்பிற்கு இழுக்க ரக்சிதா வாய் பொத்தி சிரித்தாள்.

தன் தங்கை சண்டை போடுவதையும், தன்னுயிர் தோழன் அவளை சமாளிக்க முடியாமல் திணறுவதையும் பார்த்து சிரித்த ரக்சிதாவை இமைக்காமல் ரசித்தான் சக்தி.

“அதில்ல சஞ்சனா” அவன் சட்டென்று இறங்கி வர, “இங்கே பாரு இப்போ நீ என்னை காலேஜ் முன்னாடி இறக்கி விடுற. இல்ல நீ சைட் அடிக்கிற விஷயத்தை பெரிய மாமாவிடம் போட்டு கொடுத்துவிடுவேன்” என்று கூற ராகவ் முகம் பியூஸ் போன பல்பு போலானது.

அவனுக்கு ரோஹித் என்றாலே பயம் ஜாஸ்தி. அவனை மிரட்ட எல்லோரும் கையாளும் ஒரே வழியை இவளும் கையில் எடுக்க, “உன்னையெல்லாம் கொண்டுபோய் விட முடியாது போடி” என்று சொல்லிவிட்டு அவன் பைக்கை எடுத்தான்.

ரக்சிதா அவனின் பின்னோடு ஏறிக்கொள்ள, “நீ உன் ஆளுகூட போகாமல் ஏண்டி என் ஆளுகூட சுத்தற” என்றவள் தமக்கைக்கு மட்டும் கேட்கும் குரலில் சிணுங்க, “அவன் என் நண்பன்.” என்று சொல்லிவிட்டு சஞ்சனாவிற்கு டாடா காட்டினாள்.

ராகவ் பைக்கை எடுத்துகொண்டு சொல்வதை கவனித்த சஞ்சனா, “என்னை காலேஜில் கொண்டுபோய் இறக்கிவிட மாட்டேன்னு சொல்லிட்ட இல்ல போடா போ. நீ போகின்ற வழியில் அடிதான் படபோற” வேண்டுமென்றே சாபம் கொடுத்தாள்.

“உன்னோட சாபம் எல்லாம் பலிக்காது போடீ” என்றவன் வேகமாக செல்ல சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்த சஞ்சனா அப்போது தான் சக்தி அங்கே நிற்பதை கவனித்தாள்.

“மாமா” என்றவள் திகைப்புடன் அழைக்க, “அவனுக்கு சாபம் கொடுக்கிற அளவுக்கு ராகவை விரும்பற இல்ல” என்று கேள்வியாக புருவம் உயர்த்தினான் சக்தி.

அவனின் பேச்சில் வெக்கத்தில் தலைகுனிந்த சஞ்சனாவோ, “எனக்கு ராகவை ரொம்ப பிடிக்கும். எந்த ஒரு பொண்ணும் ஆணிடம் எதிர்பார்ப்பது பாதுகாப்பை தான். அதை அவனால் எனக்கு கொடுக்க முடியும்.” என்று நம்பிக்கையுடன் கூறியவள்,

“மாமா நாங்க படிப்பு முடிக்கிற வரைக்கும் இந்த விஷயம் வீட்டில் இருக்கும் யாருக்கும் தெரிய வேண்டாம்” என்று கெஞ்சிய மாமன் மகளை கண்டு புன்னகைத்தவன் சரியென்று தலையசைக்க அதில் நிம்மதியடைந்தாள் சஞ்சனா.

அவன் கல்லூரிக்கு செல்ல பைக்கை எடுத்துகொண்டு அவன் வெளியே வரவும் சக்தியின் செல்போன் சிணுங்கியது. ‘ராகவ்’ என்ற பெயரைப பார்த்தும், ‘என்ன போன் பண்றான்’ என்ற சிந்தனையுடன் ஆன் செய்து, “ஹலோ” என்றான்.

“சக்தி அண்ணா நாங்க வந்த பைக் ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சு” என்று சொல்லி முடிக்கும்போதே சக்தியின் உயிர் அவனின் கையில் இல்லை. ராகவிடம் விசாரித்து விபத்து நடந்த இடத்திற்கு சென்ற சக்தி முதலில் கண்டது ரத்த வெள்ளத்தில் கிடந்த ரக்சிதாவை தான்.

அவளை அந்தவொரு கோலத்தில் பார்த்ததும், ‘உன்னை இப்படி பார்க்கத்தான் இவ்வளவு வேகமாக வந்தேனா?’ என்று நினைத்தவன் ராகவை பார்வையால் தேட அவனோ மயக்கத்தில் கிடந்தான். இருவரையும் ஆன்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டுபோய் சேர்த்தவன் வீட்டிற்கு அழைத்து தகவல் கூறினான்.

அடுத்த அரைமணி நேரத்தில் மொத்த குடும்பமும் ஹாஸ்பிட்டலிற்கு வந்தனர். ஜீவா – கயல், ரஞ்சித் – கீர்த்தி நால்வரும் பிள்ளைகளை நினைத்து கலங்கியபடி அமர்ந்திருக்க மது அவர்களை தேற்றினாள்.

சக்தி சுவற்றில் சாய்ந்து நின்றிருக்க மகனின் அருகே வந்த ரோஹித், “சக்தி எப்படி விபத்து நடந்தது” என்றதும் சிந்தனை கலைந்து நிமிர்ந்தவன், “அப்பா இவங்க இருவரும் போகும்போது ஒரு லாரியில் பிரேக் பிடிக்காமல் வந்து மோதிவிட்டதுன்னு ராகவ் சொன்னான்.” என்றான் கண்கள் கலங்கிட.

“ஓஹோ” என்றவர் விபத்து பற்றி விசாரிக்க சொல்லி அருணிடம் கூறியவர் மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்ல சஞ்சனா அழுதபடியே மருத்துவமனைக்குள் நுழைவதைக் கண்ட சக்தி வேகமாக அவளின் அருகே சென்றான்.

“சக்திமாமா ராகவ்வுக்கு என்னாச்சு. நான் விளையாட்டுக்கு தான் சொன்னேன். நிஜமாகவே விபத்து நடக்கும்னு நான் நினைக்கல” அழுதவளை தோளில் சாய்த்துகொண்டு, “சஞ்சும்மா நீ சொன்னதால் அப்படி நடக்கல” என்று அவளுக்கு புரிய வைக்க முயன்றான்.

அவள் போகும்போது சண்டை போட்டு சாபம் பலித்துவிட்டதேன்று அழுதவளிடம், “இல்ல சஞ்சும்மா அப்படி எல்லாம் கிடையாது. நீ ஏன் இப்படி நினைக்கிற. விபத்து நடப்பது இயல்பு. அதெல்லாம்  யோசித்து உன்னை நீயே காயப்படுத்தி கொள்ளாதே” என்று அவளின் தலையை  ஆறுதலாக வருடியபோது அவனையும் அறியாமல் அவனின் கண்கள் கலங்கியது ரக்சிதாவை நினைத்து.

அவனின் கண்ணீர் கண்டு, “மாமா ரக்சிதாவை நினைச்சு அழுறீங்களா” என்று தலையசை சாய்த்து கேட்டாள் சஞ்சனா.

“ம்ம் ஆமா சஞ்சனா. ராகவ்க்கு காலில் மட்டும்தான் அடி. ஆனால் ரக்சிதா உயிர் பிழைப்பதே கஷ்டம்னு சொல்லி இருக்காங்க” என்றவன் அதற்கு மேல் பேச முடியாமல் திணறினான்.

“உங்களோட வாழ வேண்டும் என்ற ஒரே ஆசைக்காகவே அவ பிழைச்சு வருவா மாமா” என்று சக்தி ஆறுதல் சொன்னாள் சின்னவள்.

அவள் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்த மறுகணம், ‘நான் தான் லூசு மாதிரி அவளைவிட்டு விலகி விலகி போனேன். இப்போ அவ என்னைவிட்டு போயிருவான்னு புரியும்போதுதான் என் மனசு எனக்கே புரியுது’ என்றவன் தலையிலடித்துக் கொண்டான்.

ராகவின் அறையிலிருந்து வெளியே வந்த டாக்டர் உயிருக்கு ஆபத்து இல்லை என்று சொன்ன பிறகு எல்லோருக்கும் போன உயிர் திரும்ப வந்தது. ரக்சிதாவின் நிலையைப் பற்றி நான்கு மணி நேரத்திற்கு பிறகுதான் சொல்ல முடியும் என்று சொல்லிவிட்டு சென்றனர்.

முதலில் கண்விழித்த ராகவை மொத்த குடும்பமும் போய் பார்க்க, “ஏன் ராகவ் கொஞ்சம் கவனமாக போயிருக்கலாம் இல்ல” என்று மகனின் தலையை வருடியபடியே கண்ணீரோடு கூறினாள் கயல்.

“நான் கவனமாகத்தான் அம்மா போனேன். எதிரே வந்த லாரியில் தான் பிரேக் பிடிக்கல” என்றவன் தொடர்ந்து, “அம்மா ரக்சிதா கண்ணு முழிச்சிட்டாளா?” அக்கறையுடன் விசாரித்தான்.

“இல்லப்பா அவளுக்கு இன்னும் ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு” என்று ஜீவா சொல்ல அவன் வருத்தத்துடன் முகம் திருப்ப அங்கே நின்ற தமையனைப் பார்த்தும் ராகவிற்கு கோபம் வந்துவிட்டது.

தன் உயிர் தோழியின் இந்த நிலைக்கு இவனும் ஒரு காரணம் என்று நினைத்ததும், “எல்லாம் இவனால் தான். ரக்சிதாவுக்கு சக்தியை ரொம்ப பிடிக்கும். இன்னைக்கு காலையில் கிளம்பும்போது கூட சக்தி என்னை ஏத்துக்கவே மாட்டாரான்னு என்னிடம் கேட்ட இருவரும் பேசிட்டு போகும்போது தான் விபத்து நடந்தது” என்று உண்மையைபோட்டு உடைத்தான்.

அதுவரை ரக்சிதா சக்தியைக் காதலித்த விஷயம் வீட்டில் மற்றவர்களுக்கு தெரியாமல் இருந்தது. ஏன் அவனுக்கு கூட ரக்சிதா தன்னை உயிராக நேசிக்கும் விஷயம் தெரியாது. ஆனால் இப்போது யோசிக்கும்பொது தான் அவனின் மனம் அவனுக்கே புரிந்தது.

இனி அவள் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாதென்று என்று மனதளவில் உணர்ந்தவனுக்கு தம்பியின் கோபம் கூட பிடித்திருந்தது. தன்னவளுக்காக தமையனை எதிர்க்கும் தம்பியை நினைத்து மனதிற்குள் சந்தோசப்பட்டான் சக்தி.

வீட்டில் இருந்த பெரியவர்கள் சக்தியை கேள்வியாக நோக்கிட, “ரக்சிதா என்னை விரும்புவதாக சொன்னா. நான் தான் அவளோட காதல் வேண்டான்னு சொல்லி விலகினேன். ஆனா இப்படி எல்லாம் நடக்கும்னு நான் சத்தியமா எதிர்பார்க்கல”என்று மெல்ல கூறிய மகனின் அருகே சென்றார் ரோஹித்.

அவர் தன் மகனை ஆரத்தழுவித் தோளில் தட்டிகொடுக்க, “அப்பா எனக்கு ரக்சிதா வேணும்” என்றான் மகன் தவிப்புடன்.

சக்தியை பிறந்தநாள் நாளில் இருந்தே அவன் ஒன்று கேட்டால் இல்லைஎன்று சொல்லும் பழக்கம் ரோஹித்துக்கு இருந்ததில்லை. அப்படி இருக்க இன்று அவனே தனக்கு ரக்சிதா வேண்டும் என்று சொல்லும்போது மறுப்பு சொல்வாரா?

அவனின் மனம் புரிந்துவிட, “அவ சீக்கிரமே திரும்பி வருவா தம்பி நீ பயப்படாமல் இருப்பா. அவளுக்கு குணமான பிறகு நம்ம இது பற்றி பேசலாம்” மகனுக்கு ஆறுதல் சொன்ன ரோஹித் இப்போதைக்கு அந்த பேச்சை தள்ளிப் போட்டார்.

அவர்களின் பிரச்சனை ஓரளவுக்கு முடிந்துவிட ரக்சிதா கண்விழிக்க அனைவரும் காத்திருந்தனர்.  ராகவ் சஞ்சனாவை தேட அவளை காணாமல் மனம் சோர்ந்துபோக மாத்திரையின் பலனால் அப்படியே உறங்கி போனான். அவன் உறங்கிய பிறகு அறைக்குள் நுழைந்த சஞ்சனாவின் பார்வை அவனின் மீது படிந்தது.

நெற்றியில் பிளாஸ்திரி. கைகால்களில் கட்டுடன் இருந்தவனை கண்டு அவளின் கண்கள் கலங்கியது. எல்லாம் தன்னால் என்று நினைத்தபடி மெல்ல அவனின் அருகே சென்று, “என்னால தான் ராகவ் உனக்கு இப்படியெல்லாம் நடந்தது” என்று அழுதபடி அவனோடு பேசினாள்.

அவனின் நெற்றியை வருடி அதில்  இதழ் பதித்துவிட்டு மீண்டும் வெளியே வந்தவள் தமக்கை கண்விழிக்க வேண்டும் என்று நினைத்தபடி அங்கிருந்த சேரில் அமர்ந்தாள்.

சிவாவுடன் சென்னை வந்து சேர்ந்த மகளை வரவேற்க ரகுபதியும் விமலாவும் ஏர்போர்ட் சென்றனர். அனைத்து விதமான பார்மாலிட்டீஸ் முடிந்து வந்த மகளோ, “அம்மா” என்ற அழைப்புடன் ஓடிவந்து விமலாவின் கழுத்தை கட்டிக் கொண்டாள்.

“எப்படி இருக்கிற செல்லம்” என்று அவர் பாசத்துடன் மகளின் நெற்றியில் முத்தமிட, “நான் ரொம்ப நல்லா இருக்கேன். என்ன கொல்கத்தாவில் உங்களை சாப்பாட்டை ரொம்ப மிஸ் பண்ணேன்.  என்னைவிட்டு புருஷன் வீட்டுக்கு போனால் தான் என் அருமை புரியும்னு கிண்டலாக சொல்வீங்க. உங்களைவிட்டு அங்கே போன பிறகுதான் சாப்பாட்டின் அருமையே எனக்கு புரிஞ்சிது” கண்கலங்க கூறிய ரேவதி தாயின் தோளில் சாய்ந்தாள்.

சிவாவிற்கு கூட அவளின் இந்த பேச்சு வியப்பைக் கொடுக்க, “நிஜமாவா ரேவதி” என்றவன் வேண்டும்மென்று அவளை வம்பிற்கு இழுக்க, “அப்பா பாருங்கப்பா இவனை” செல்லமாக சிணுங்கினாள்.

“அவனை நீ ஏன் பார்க்கிற” என்று சொல்லி மகளை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டவர், “படிப்பு எல்லாம் முடிச்சிட்டு வந்துட்டியா? இல்ல இன்னும் படிக்க கொல்கத்தாவில் ஏதாவது கோர்ஸ் பாக்கி இருக்கிறதா?” என்றவர் வேண்டும் என்றே மகளை வம்பிற்கு இழுத்தார்.

“அப்பா நீங்களும் இவனோடு சேர்த்துட்டு என்னை கிண்டல் பண்றீங்க” என்ற ரேவதி கோபமாக செல்வதை கண்டு மற்ற மூவரும் சிரித்துக் கொண்டனர்.

அவள் வீட்டிற்கு அழைத்து வந்த ஒரு வாரமும் விமலா மகளுக்கு பிடித்ததாக செய்து கொடுக்க அவளும் ரசித்து சாப்பிட தொடங்கினாள். அந்த வார இறுதியில் தந்தையுடன் பேச  நினைத்தவள் அவரின் அலுவலக அறைக்கு சென்றாள்.

வாசலில் நிழலாட கண்டு நிமிர்ந்த ரகுபதி மகளின் தயக்கம் உணர்ந்து, “வா ரேவதி” என்றார்.

“அப்பா நான் உங்களிடம் ஒரு விஷயம் பேசணும்” என்றபடி அறைக்குள் நுழைந்தவளிடம் அங்கிருந்த இருக்கையை காட்டி அமரும்படி சைகை செய்தார்.

“அப்பா நான்” என்று ரேவதி தொடங்கும் முன்னே கை நீட்டி தடுத்த ரகுபதி, “இந்த வாரம் உன்னை பெண் பார்க்க வராங்க ரேவதி. அதனால் நீ அதற்கு தயாராகும் வழியைப் பாரு. நம்ம பாருவுடன் சேர்ந்து பியூட்டி பார்லர் போயிட்டு வா. உனக்கு பிடிச்ச உடைகளை தேர்வு செஞ்சு வெச்சுக்கோ..” என்று கட்டளையிட அவளோ அதிர்ச்சியுடன் சிலையாகி இருந்தாள்.

அவள் ஆதியை விரும்புவதாக சொல்லும் முன்னரே தந்தை திருமணம் பற்றி பேசவும், “என்னப்பா இப்படி சொல்றீங்க” என்றாள் மகள் திகைப்பு மாறாத குரலில்

“நீ மாப்பிள்ளை பாரும்மா. கண்டிப்பா உனக்கு பிடிக்கும்” என்றவர் மருமகனின் போட்டோவை மகளிடம் நீட்டினார்.

“இல்லப்பா எனக்கு..” என்று அவள் மீண்டும் தொடங்க தான் கண்ணாடியை சரி செய்தபடி மகளை ஆழ்ந்து பார்த்தவர், “ஆதியை பற்றிதானே சொல்ல போற..” கேள்வியாக புருவம் உயர்த்தி அவளை அதிர்ச்சியில் உறைய வைத்தார்.

இனிமேல் அவரிடம் தான் பேச்சு எடுபடாது என்று புரிந்து கொண்டவள், “இல்லப்பா நீங்க ஏற்பாட்டை கவனிங்க. நான் மற்ற வேலைகளை எல்லாம் பார்க்கிறேன். மாப்பிள்ளையை நான் நேரில் பார்த்துக் கொள்கிறேன்” என்றவள் அங்கிருந்து நகர்ந்துவிட அவரும் தான் அலுவலக பணியில் ஈடுபட்டார்.

நாட்கள் மின்னல் வேகத்தில் சென்று மறைந்திட அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நாளும் அழகாக விடிந்தது. வீட்டில் இருந்த மற்றவர்கள் மாப்பிள்ளை வீட்டினரை எதிர்பார்த்து காத்திருக்க ரேவதியோ இங்கே வேண்டாவெறுப்புடன் தயாராகிக் கொண்டிருந்தாள்.

வீட்டின் வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம்கேட்டு மற்றவர்கள் வாசலுக்கு சென்று மாப்பிள்ளை வீட்டினரை புன்னகையுடன் வரவேற்றனர். சிலநிமிடங்களில் ஹாலில் பேச்சுக்குரல் கேட்டது. ரேவதியின் அறைக்குள் நுழைந்த விமலா அவளின் கையில் காபியை கொடுத்த அனுப்பினார்.

அவளை பார்த்தும் அவர்களுக்குள் சிறுசிறு சலசலப்பு ஏற்ப்பட வரிசயாபா எல்லோருக்கும் காபியை கொடுத்துவிட்டு வந்தவளிடம், “ரேவதி மாப்பிள்ளையை நேரில் பார்க்கணும்னு சொல்லிட்டு இருந்த இல்ல. அவருதான் மாப்பிள்ளை நிமிர்ந்து பாரு” என்றான் சிவா குறும்புடன்.

அவள் நிமிர்ந்து தன் எதிரே அமர்ந்திருந்தவனைப் பார்த்தவள், ‘கா..ர்..த்..தி..க்..’ என்று அதிர்ச்சியுடன் அவனின் பெயரை உச்சரித்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!