idhayam – 25

idhayam – 25

அத்தியாயம் – 25

தன்முன்னே மாப்பிள்ளையாக வந்து அமர்ந்திருந்தவனைக் கண்டவுடன் ஆச்சரியத்தில் விழிவிரிய அவனையே இமைக்க மறந்து பார்த்தாள். அவளைச்சுற்றி இருந்த சொந்தங்களை அவளின் கண்களுக்கு தெரியவில்லை அவனை தவிர!

கார்த்திக் ரேவதி படித்த கல்லூரி லெக்சரர். அவனுக்கு ரேவதியை பார்த்தும் பிடித்துவிட்டது. அவளும் அங்கேயே தொடர்ந்து படித்தால் அவளின் குணத்தை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொண்டான். ஆதியுடன் அடிக்கடி சந்திப்பு நிகழ்வதை கண்டவன் இருவரும் காதலிப்பதாக முதலில் நினைத்தான்.

ஆனால் இடையில் அவள் கிஷோருடன் நெருங்குவதைப் புரிந்து அவன் சிந்துவிடம் விசாரித்தபோது அவனிற்கு அணைத்து உண்மையும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. அவன் தாமதிக்காமல் அண்ணனிடம்  உண்மையைக் கூறி அவளை பெண்கேட்டு போகலாமென்று அவளின் தந்தையிடம் பேசினார்.

ரகுபதிக்கு பணத்தைவிட குணம்தான் முக்கியம் என்பதால் தன் மகளின் புத்தி அறிந்து அவளுக்கு கார்த்திக் மட்டுமே பொருத்தமாக இருப்பான் என்று முடிவெடுத்து அவர்களை பெண்பார்க்க வர சொல்லிவிட்டார்.

மணப்பெண் அலங்காரத்தில் நின்றவளிடம், “ரேவதி என்னை பிடிச்சிருக்கா” என்று மெல்லிய குரலில் கேட்டதும் திடுக்கிட்டாள்.

அவளின் கண்களில் தோன்றி மறைந்த பயத்தைப் பார்த்ததும், “ரிலாக்ஸ்” என்றவன் அவள் நீட்டிய தட்டிலிருந்து காபியை எடுத்துக் கொண்டான்.

அவள் வெக்கத்துடன் தலையைக்குனிந்தபடி அறைக்குள் சென்று மறையவதை பார்த்தபடி அமர்ந்திருந்த அவினாஷ் தம்பியிடம், “என்னடா பொண்ணு ஓகே தானே” என்று கேட்டான்

தமையனின் கேள்வியில் திரும்பிய கார்த்திக், “ம்ம் ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா” என்றான் புன்முறுவலோடு.

“அப்போ மற்றதை பேசி முடிக்கலாமா” என்று ரகுபதி கேட்க, “ம்ம் சரிங்க” என்றான் அவினாஷ்.

அவனுக்கு சொந்தம் பந்தம் என்று சொல்ல உடன்பிறந்த அவினாஷை தவிர வேறு யாருமில்லை. அவனும் திருமணம் முடிந்து இப்போது லண்டனில்  செட்டில் ஆகிவிட்டான்.

“ஐயரே நல்ல தேதி இருந்தா சொல்லுங்க நிச்சியதார்த்தை வெச்சுக்கலாம்” என்று ரகுபதி சொல்ல அடுத்த மாதத்தில் நல்ல முகூர்த்தம் இருப்பதாக அவர் கூறவே அன்றே நிச்சியதார்த்தம் என்ற முடிவிற்கு வந்தனர்.

அவளின் நிச்சயதார்த்தம் பற்றிய தேதியைக் கேட்டவுடன் சந்தோசப்பட்ட சிவா, “இப்போ கொஞ்சம் நிம்மதியாக இருக்கு சித்தப்பா” என்றான்.

அவனின் முகத்தில் நிலவிய அமைதியைக் கவனித்த ரகுபதி அவனின் தோளில் தட்டிகொடுத்துவிட்டு, “உன் தங்கை குணத்துக்கு ஏற்ற பையன் தான்”என்றவர் அவர்களை வழியனுப்ப வாசல் வரை சென்றனர்.

அப்போது கார்த்திக் மட்டும் ரகுபதியின் அருகே வந்து, “மாமா நான் ரேவதியிடம் கொஞ்சம் பேசவேண்டும்” என்றான் நேர்கொண்ட பார்வையுடன்.

அவரும் மறுப்பு சொல்லாமல், “சரிப்பா போய் பேசிட்டு வா” அனுமதியளித்தமறுநொடியே புயல் வேகத்தில் ரேவதியைக் காண சென்ற கார்த்திக் அவளின் அறைக்குள் நுழைய திரும்பி நின்றபடி, “இவன் எப்படி இங்கே வந்தான். நம்மள கண்டாலே இவனுக்கு பிடிக்காதே” என்று வாய்விட்டு புலம்பியவளைக் கண்டு அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

“என்ன ரேவதி ரொம்ப குழப்பத்தில் இருக்கிற போல” அவனின் குரல் பின்னிலிருந்து கேட்டதும் திடுக்கிட்டு சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.

அவன் மார்பின் குறுக்கே கரங்களைக் கட்டிக்கொண்டு நின்றிருக்க, “கொல்கத்தாவில் உன்னை பார்த்தும் பிடிச்சு போச்சு ரேவதி. நீ கிஷோருடன் சேர்ந்து சுற்றியது எனக்கு பிடிக்கல” என்று வெளிப்படையாக தன் வெறுப்பைக் காட்டினான்.

அவனின் வார்த்தைகளில் இருந்த வேறுபாடு புரிய, “நீ என்ன சொல்ற கார்த்திக்” என்று சற்று தடுமாற்றத்துடன் அவனையே பார்த்தாள்.

“நீயும் நானும் வாட்ஸ் ஆப்பில் நிறைய பேசி இருக்கோம். உனக்கு தெரியாதது ஒன்றும் இல்ல. எனக்கு பிடிச்ச நீ எனக்கு மட்டும் சொந்தமாக இருக்கணும்னு முடிவு பண்ணிதான் அண்ணனிடம் போன் பண்ணி உன்னை காதலிப்பாதாக சொன்னேன். இப்போ நம்ம நிச்சயதார்த்தை வரையில் போய்விட்டது. உன் பாஸ்ட் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்ல. ஆனால்..” என்றவன் பாதியில் நிறுத்திவிட அவளும் புரிந்துகொண்டு தலையசைத்தாள்.

“பரவல்ல சொல்லாமே புரிஞ்சிகிட்ட. சரி இந்தா புது போன் நீ என்னோட சேட் பண்ணும்போது இதை யூஸ் பண்ணிக்க பழைய சிம் வேண்டாம் தூக்கி போடு” என்ற அவனின் பார்வையில் என்ன இருந்ததோ அவளின் தலை சம்மதமாக ஆடியது.

“சரி நான் கிளம்பறேன்” அவன் வாசலை நோக்கி செல்ல, “அதே நம்பர்தானே” என்றாள் எதிர்ப்பார்ப்புடன்.

“நான் நம்பர் மாற்றவே இல்ல. உன்னை தான் கொஞ்சம் மாற சொல்றேன்” என்று சிரித்தபடியே கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

ரேவதிக்கும் கார்த்திக் மீது ஒரு சாப்ட்கார்னர் இருந்தது. அதுமட்டும் இல்லாமல் இருவரும் செட்டிங்கில் அதிகம் பேசியதும் அடிக்கடி நிகழ்ந்த சந்திப்பிலும் அவனின் குணத்தை பிடித்து போனது. அவன் அவளை பெண்கேட்டு வந்து அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தபோதும் அவனை விட மனமில்லாமல் அவனுக்காக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற முடிவிற்கு வந்துவிட்டாள்.

“என்ன ரேவதி கார்த்திக் உனக்கு ஓகே வா” என்ற சிவாவின் குரல்கேட்டு கவனம் கலந்துவிட பட்டென்று நிமிர்ந்து, “எனக்கு ஓகே அண்ணா” என்று புன்னகைத்தாள்.

“ரொம்ப சந்தோசம் ரேவதி” என்ற சிவா அறையைவிட்டு வெளியே செல்ல அவளை தனிமை ஆக்கிரமித்தது. தனிமை அழகான ஆபத்து என்று சொல்லலாம். தனிமையில் ஒருவரின் நல்ல குணமும் வெளிப்படும். அதே மாதிரி அவர்களின் மன குழப்பத்தால் பல தவறுகளும் நிகழும்.

ரேவதியின் மனதில் திடீரென்று ஆதியின் முகம் தோன்றி மறைய, ‘இந்த ஆதியின் முடிவை கேட்காமல் கார்த்திக்கிடம் ஒப்புகொண்டது தவறோ’ அவளின் இரட்டை புத்தி சரியான நேரத்தில் அவளிடம் வேலையைக் காட்ட தொடங்கியது.

அதுவரை அவள் எடுத்த முடிவுகள் அனைத்தும் பின்னுக்கு தள்ளப்பட்டவே, ‘இல்ல ஆதியை போய் பார்த்தால் தான் இந்த குழப்பம் தீரும்’ என்ற முடிவிற்கு வந்த ரேவதி கார்த்திக் மனம் அறிந்தபிறகும் ஆதியை சந்திக்க கொல்கத்தா செல்ல வேண்டும் என்ற முடிவிற்கு வந்தாள்.

ரகுபதி – விமலா இருவரும் மகளின் கல்யாணத்தை பற்றி திட்டமிடுவதைபுன்னகையுடன் பார்த்த சிவா தன் நண்பனுக்கு அழைத்தான்.

அவனின் அழைப்பைக் கண்டவுடன் சிந்துவின் முகம் மலர, “என்ன சிந்து உன் ஆளு அண்ணாவிற்கு கூப்பிடுகிறார் போல” என்று தங்கையை கிண்டலடித்தாள் பெரியவள்.

“சாரு அவளிடம் எதுக்கு வம்பு இழுக்கிற” என்ற ஆதி வாய்மீது விரல்வைத்து, ‘ஷ்..’ என்றவன் போனை எடுத்து, “சிவா சென்னை எல்லாம் எப்படி இருக்கு” என்றான் சாதாரணமாகவே.

“வங்ககடலில் திடீரென்று புதுசாக புயல் உருவாக்கி இருக்குன்னு நியூல சொன்னாங்களே நீ பார்க்கலயா ஆதி” என்று சீரியசாக கேட்டான் சிவா.

“என்னடா சொல்ற” என்று புரியாமல் முழிதத்தவன் பிறகு, “ரேவதியை சொல்றீயா” என்றான் ஆதி.

“ம்ம் ஆமாண்டா அவளுக்கு மாப்பிள்ளை ஓகே ஆகிருச்சு. இன்னைக்கு பொண்ணு பார்க்க வந்துட்டு போனாங்க” என்று சிவா நடந்த அனைத்தையும் அவனிடம் சொல்ல, “ஹப்பாடி இப்போ தான் எனக்கு நிம்மதியாக இருக்கு” என்று பெருமூச்சுடன் கூறியவனை சாருவும் சிந்துவும் குழப்பத்துடன் பார்த்தனர்.

‘என்ன விஷயம்’ என்று சாரு சைகையில் கேட்க வாய்மீது விரல் வைத்தவன், ‘நான் சொல்றேன்’ என்றான்.

“ஆதி ரேவதி எப்படியும் கொல்கத்தா வருவாள். நீ ரெடியாக இருடா” என்று கிண்டலோடு கூறவே, “அவ வரட்டும் நான் அவளுக்கு தெளிவாக புரிய வைக்கிறேன்” என்று புன்னகைத்தான் ஆதி.

திடீரென்று சிவாவின் மனதில் அந்த கேள்வி வரவே, “ஆதி நீ யாரையாவது காதலிச்சியா?” தயக்கத்துடன் இழுத்தான் சிவா.

அவன் என்ன நினைக்கிறான் என்று உடனே புரிந்துவிட, “நீ நேரில் வா எல்லாமே சொல்கிறேன்” என்ற ஆதி கொஞ்ச நேரம் பேசிவிட்டு போனை வைத்துவிட்டான். அதை பார்த்த விதி தனக்குள் சிரித்தது பாவம் ஆதிக்கு தெரியவில்லை.

சாரு, சிந்துவிடம் அவன் ரேவதியை பற்றி சொல்ல, “அவளுக்கு கல்யாணம் என்று சொன்னதே நிம்மதி. அதுவும் கார்த்திக் சார் அவரை நல்லா பார்த்துக் கொள்வார்” என்று நம்பிக்கையுடன் கூறிய சிந்து அங்கிருந்து கிளம்பினாள்.

அதற்குள் மஞ்சுளாவிடம் இருந்து ஆதிக்கு அழைப்பு வர, “சாரு நீ பார்த்து பத்திரமாக போம்மா..” அக்கறையுடன் கூறிய ஆதியும் அங்கிருந்து கிளம்பினான்.

இன்னும் சற்று நேரம் அங்கெ இருந்திருந்தால் ஆதி ரேவதியைப் பற்றிய உண்மையை அவளிடம் சொல்லியிருப்பான். ஆனால் அதை கேட்கும் சக்தி அவளிடம் இல்லை. அந்த நிமிடமே அவளின் காதல் தோற்று போய்விடும்!

ஒருவரின் மீது ஒருவர் வைக்கும் நம்பிக்கை தானே உண்மையான காதல். ஒருமுறை அந்த நம்பிக்கைக்கு பத்திரமாக அவளால் இருக்க முடியாமல் போனாலும் அவனை சந்தேகபட அவள் தயாராக இல்லை. அது உண்மையான காதலாகிவிட முடியுமா? அவனின் மீது அவளால் சந்தேகப்பட முடியுமா?

கொல்கத்தாவிற்கு அவனை தேடி வந்து சந்தித்த பிறகு மனதை திரையிட்டு மறைத்து தான் வைத்திருக்கிறாள். இன்றளவும் அவனிடம் உண்மையைக் கூறவில்லை. ஒரு நிமிடம் போதும் உண்மையைச் சொல்லிவிட, ஆனால் அதன் பின்னர் அவன் குற்ற உணர்வில் தவிப்பதை அவளால் பார்க்க முடியாது.

அதுதான் அமைதியாக இருக்கிறாள். நாளையே அவன் என்னைவிட்டு போய்விடு என்று சொன்னாலும் மறுப்பு சொல்லாமல் விலகிவிடுவாள். ஏனென்றால் அவளுக்கு அவன் சந்தோசம் மட்டுமே முக்கியம். கல்லடி பட்ட மரத்தை அவளும் காதல் என்ற பெயரில் அவளும் வெட்டிவிட்டாள்.

மீண்டும் அது துளிர்விட்டு வளர்ந்து நிற்பதை வெட்ட அவள் தயாராக இல்லை. இப்படி ஏதேதோ நினைத்து கலங்கியபடி ஹாஸ்டல் வந்து சேர்ந்த அபூர்வாவின் செல்போன் சிணுங்கியது.

திரையில் தெரிந்த பெயரைக் கண்டவுடன், “ஹலோ சக்தி” என்றதும் மறுப்பக்கம் அமைதி நிலவியது.

“சக்தி என்ன விஷயம்” என்று அதட்டல் அவனிடம் சரியாக வேலை செய்ய, “அக்கா ராகவ் – ரக்சிதா இருவருக்கும் ஆக்ஸிடெண்ட். இப்போ ஹாஸ்பிட்டலில் இருக்கோம் நீ கொஞ்சம் கிளம்பி வருகிறாயா?” மறுப்பக்கம் அவனின் குரல் கரகரத்தது.

அவன் சொன்ன விசயத்தைக் கேட்டு அவளுக்கு தலையே சுற்றியது.

“சக்தி என்னடா சொல்ற” அவள் பதட்டப்படவே அவன் நடந்த அனைத்தையும் ஒப்பித்தான்.

அவன் சொல்ல சொல்ல இங்கே இவளுக்கு கோபம் அதிகரிக்க, “சரி நீ போனை வை நான் இப்போவே கிளம்பி வருகிறேன்” என்று கூறியவள் ஆன்லைனில் அடுத்த சென்னை பிளைட்க்கு புக் பண்ணிவிட்டு நேரத்தை பார்த்தபடி வேகமாக தயாரானாள்.

தமக்கை வந்துவிடுவாள் என்றதும் சக்திக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ரோஹித் அபூர்வாவிற்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்று சொன்னாலும் சக்தியால் அமைதியாக இருக்க முடியவில்லை.

அதே நேரத்தில் ரக்சிதா கண்திறக்காமல் இருப்பது அவனுக்கு பயத்தைக் கொடுக்கவே தந்தையின் கண்டிப்பையும் மீறி தங்கைக்கு அழைத்து உண்மையை கூறிவிட்டான்.

சாரு ஹாஸ்டல் வந்து சேரும் முன்னாடியே வார்டனிடம் சொல்லி சாவியைக் கொடுத்துவிட்டு டாக்சியில் ஏர்போர்ட் சென்றுவிட்டாள். வார்டனிடம் இருந்து சாவியை வாங்கிய சாரு, ‘என்ன இவ எந்த காரணத்தையும் சொல்லாமல் ஊருக்கு போறேன். இனி திரும்பி எப்போ வருவேன்னு தெரியலன்னு சொல்லிட்டு போயிருக்கிற’ என்ற பதட்டத்துடன் அபூர்வாவை அழைக்க அது சுவிச் ஆப் என்று வந்தது.

இவள் விஷயம் புரியாமல் குழப்பத்துடன் இருக்க அபூர்வா சென்னை பிளைட்டில் கிளம்பிவிட்டாள். ஆதியிடம் கூட அவள் ஒரு வார்த்தை சொல்லவில்லை. சக்தி மீது எவ்வளவு பாசம் வைத்து இருக்கிறாளோ அதே அளவு பாசத்தை மற்ற மூவரின் மீது வைத்திருந்தாள்.

அதனால் அவர்களை நேரில் பார்க்காமல் மனசு நிம்மதியடையாது என்று தெரிந்தே அடுத்த சென்னை பிளைட்டில் கிளம்பிவிட்டாள். ஆதியிடம் சொல்லாமல் வந்தது மனசுக்கு கஷ்டமாக இருந்தது.

‘என்னை தேடி வான்னு சொல்லிட்டு வந்துட்டான். அப்போ நான் தேடி வருவேன்னு அவன் நம்பவே இல்ல, என்மேல் இருக்கும் கோபம் கொஞ்சம் கூட குறையவும் இல்ல. அதன் வேலைக்கு அப்பாயின்மென்ட் அனுப்பி இருக்கான்’  என்று அவளே ஒரு முடிவெடுத்து கொண்டாள்.

ஆதியின் கவனக்குறைவால் நடந்ததால் அப்பாயின்மென்ட் ஆர்டர் மட்டும் அவளுக்கு அனுப்பட்டது. அவனை அனுப்ப சொல்லி இருந்தால் இருவருக்கும் இருவருக்கும் திருமண பத்திரிகை அடித்து பார்சல் அனுப்பி அவள் கொல்கத்தா வந்த நாளே திருமணத்தை முடித்திருப்பான். இந்த உண்மையெல்லாம் அவளுக்கு எங்கே தெரிய போகிறது?

அடுத்த நான்கு மணி நேரத்தில் சென்னை வந்து சேர்ந்தவள் அங்கிருந்த அடுத்த பிளைட்டில் மதுரை வந்தடைந்தாள். அவள் மதுரை வந்து இறங்கியதும் தம்பி சொன்ன மருத்துவனைக்கு சென்றாள்.

அவள் ரிசப்ஷனிடம் அவர்களின் பெயரை சொல்லி விசாரிக்கும்போது, “அபூர்வா” என்ற அழைத்தார் ரஞ்சித்.

அவரின் குரல் கேட்டதும் சட்டென்று திரும்பிய அபூர்வா, “இருவருக்கும் ஆக்ஸிடெண்ட் என்று சக்தி போன் பண்ணான் மாமா இப்போ இருவருக்கும் எப்படி இருக்கு. ரக்சிதா கண் முழிச்சிட்டாளா?” என்று கேள்விகளை அடுக்கினாள்.

இந்த ஆறு மணி நேரத்தில் அவள் எவ்வளவு அலைச்சலில் வந்திருக்கிறாள் என்பதை அவளின் சோர்ந்த முகம்  சொன்னாலும், “நீ ஏன் கண்ணம்மா கிளம்பி வந்த” என்று அக்கறையுடன் கேட்டார ரஞ்சித்.

“அது சரி இவங்க இருவருக்கும் முடியாமல்  இருப்பதை தெரிஞ்சபிறகும் என்னால் அங்கே அப்படி நிம்மதியாக இருக்க முடியும்?” அவரிடம் மனம் தாங்காமல் கேட்டுவிட்டு, “மாமா உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையே”என்று அவளின் கேள்வியில் நிலையாக நின்றாள்.

“இன்னும் ரக்சிதா பற்றி எந்த விசயமும் சொல்லலாமா?” என்றவர் அவளை அழைத்து செல்ல மகளை பார்த்த ரோஹித், “நீ எப்படிம்மா கிளம்பி வந்த?” என்று விசாரிக்க சக்தி சொன்ன விஷயத்தை அனைவரிடம் கூறிவிட்டு தன் அத்தையின் அருகே அமர்ந்தவள்,

“அத்தை பயப்படாமல் இருங்க ரக்சிதாவுக்கு ஒன்னும் ஆகாது..” என்று நம்பிக்கை கொடுக்க, “நீ சொன்ன மாதிரி அவள் பிழைச்சு வந்துட்டா சந்தோசம்” என்றார் சஞ்சனா கலக்கத்துடன்.

அபூர்வாவின் எதிரே சோகத்தின் மறு வடிவமாக நின்றிருந்த தம்பியைக் கண்டவுடன் அவளுக்கு கோபம் வந்தது. அவனிடம் சண்டைபோட இது சரியான நேரமில்லை என்று உணர்ந்து அவள் அமைதியாக இருந்தாள்.

நேரம் சென்றதே தவிர ரக்சிதா மட்டும் கண்விழிக்காமல் இருப்பதை கண்டு, “நீங்க எல்லோரும் கிளம்புங்க நான் அவங்களோட இருக்கேன்” என்றாள் அபூர்வா. அவளுக்கு துணையாக ரோஹித் அங்கே இருப்பதாக கூறவே மற்றவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!