Idhayam – 28

அத்தியாயம் – 28

ரகுபதி – விமலா இருவரும் மகளின் நிச்சயதார்த்த வேளைகளில் மும்பரமாக ஈடுபடுவதை கண்ட ரேவதிக்கு மனம் ஏனோ அலைபாய தொடங்கியது. அவளுக்கு கார்த்திக்கை பிடித்திருக்கிறது ஆனால் ஆதியை விடவும் மனமில்லாமல் குழப்பத்துடன் வலம்வர தொடங்கினாள்.

சிவாவிற்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருப்பதால், “சித்தப்பா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க மற்ற வேலைகளை கவனிங்க. நான் மீட்டிங் முடித்துவிட்டு நேராக நிச்சயதார்த்திற்கு வந்துவிடுகிறேன்” என்று கூறினான்.

அவனின் நிலையை உணர்ந்த ரகுபதி, “சரி சிவா. நீ போய் வேலையை முடித்துவிட்டு வா. நாங்க மற்ற வேலைகளைக் கவனிக்கிறோம்” என்று சொல்வதை கேட்டபடி தன் அறைக்குள் இருந்து வெளியே வந்தாள்.

“அப்பா எனக்கும் யுனிவர்சிட்டியில் ஒரு முக்கியமான வேலை இருக்கு. நானும் அண்ணாவுடன் போயிட்டு வரவா” என்று தயக்கத்துடன் தலைகுனிந்தபடி நின்ற மகளின் தோற்றத்தைக் கண்டவுடன் அவரின் மனம் மகிழ்ந்தது.

“இங்கே பாரு சிவா நம்ம ரேவதியா இது? என்ன ஒரு அடக்கமாக கேட்கிறாள்” என்றவர் பெருமையுடன் கூற சிவா குழப்பத்துடன் தங்கையை குழப்பத்துடன் நோக்கினான்.

கார்த்திக் – ரேவதியின் திருமணம் நடக்க போகிறது என்று மனதிற்கு புரிந்தாலும் அவனின் மூளை தங்கையின் செயலின் பின்னோடு ஏதாவது காரணம் இருக்குமோ என்ற சந்தேகத்தை உருவாக்கிட, ‘இவ எதுக்கு இப்போ கொல்கத்தா வரேன்னு சொல்ற’ என்ற எண்ணத்துடன் அவளின் மீது பார்வையை பதித்தான் சிவா.

ரேவதி தந்தையின் பதிலிற்காக காத்திருக்க, “சரிம்மா அண்ணனோடு போயிட்டு வா” என்று சிரித்தபடியே கூறிவிட்டு மகளின் தலையை பாசத்துடன் வருடிவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

“எப்படியோ அப்பாவிடம் சம்மதம் வாங்கியாச்சு” என்று சொல்லிய ரேவதி அறைக்குள் சென்று மறைவதைப் பார்த்தபடி சிந்தனையோடு தன் வேலையை கவனிக்க சென்றான். அடுத்த இரண்டு நாளில் ஊருக்கு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படவே அண்ணன் தங்கை இருவரும் கொல்கத்தா சென்று சேர்ந்தனர்.

ஏர்போர்ட் இறங்கிய மறுநொடியே, “அண்ணா ஆதி கன்ஸ்ட்ரக்ஷன் போலாம்” என்றவளை என்ன செய்வதென்று தெரியாமல், “இப்போ நீ எதுக்கு அங்கே போகணும்” என்றான் எரிச்சலோடு.

ஆதியை சந்திக்கத்தான் தான் தங்கை திடீரென்று கிளம்புகிறாள் என்ற கணக்கு நிஜமாகிவிடவே, “அவனை நீ ஒன்னும் போய் பார்க்க வேண்டாம். நீ என்ன வேலைக்கு வந்தீயோ அதை மட்டும் பாரு” என்று சொன்னவன் பார்க்கிங் நோக்கி செல்வதைக் கண்டு அவனை வழி மறித்தாள் ரேவதி.

“எனக்கு அதெல்லாம் தெரியாது. நான் இப்போவே ஆதியைப் பார்க்கணும்” என்றாள் வழக்கமான பிடிவாதத்துடன்.

அவளின் குணத்தை பற்றி நன்றாக தெரிந்து சிவா, ‘இவ எல்லாம் சொன்னால் கேட்கும் ரகம் இல்ல’ என்ற எண்ணத்துடன் ஆதியின் கன்ஸ்ட்ரக்ஷனுக்கு அழைத்துச் சென்றான்.

அவன் ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பும்போது ஆதிக்கு தகவல் அனுப்பிவிட்டதால், “நீ வா நேரில் பேசிக்கலாம்” என்றான் ஆதி பொறுமையாகவே.

அடுத்த அரைமணி நேரத்தில் ஆதியின் கன்ஸ்ட்ரக்ஷன் முன்னே காரை நிறுத்தி இருவரும் இறங்கினர். ரேவதிக்கு தான் செய்வது தவறென்று தேன்றினாலும் மனம் ஏனோ அவனை காண ஏங்குவதை அவளால் தவிர்க்க முடியாமல் ஆதியை காண அவனின் கேபினை நோக்கி வேகமாக சென்றாள்.

ரேவதியை முன்னே அனுப்பிய சிவா அவளின் பின்னோடு மெல்ல செல்ல, “ஆதி” என்ற அழைப்புடன் கேபினுக்குள் நுழைந்தவளைப் பார்த்தும், “ஹே ரேவதி என்ன சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்கிற. ஒரு வாரம்னு சொல்லிட்டு போன பொண்ணு முழுசாக மூன்று வாரம் கழிந்து வந்து நிற்கிற” என்று கிண்டலோடு கேட்டபடி தன் சீட்டில் சாய்ந்து அமர்ந்தான்.

அவனை பார்த்தும் அவளின் முகம் பூவாக மலர, “உன்னைப் பார்க்காமல் இருக்கவே முடியல ஆதி. அப்பா – அம்மாவிடம் பொய் சொல்லி சமாளிச்சிட்டு வந்திருக்கிறேன்” என்றவள் புன்னகையுடன் கூற ஆதியோ புரியாத பாவனையுடன் கேள்வியாக புருவம் உயர்த்தினான்.

“நீ என்ன பேசறன்னு புரியல ரேவதி” என்று அவன் கேட்க, “நம்ம கல்யாணம் பற்றி அம்மா – அப்பாவிடம் பேசணும். நான் ஊருக்கு போயிட்டு வந்ததும் ஓகே என்று சொல்லுன்னு சொல்லிட்டு தானே போனேன்” என்றவள் விளையாட்டாக சிணுங்கினாள்.

சிவா அவளின் பின்னோடு கேபினுக்குள் நுழைவதை கண்ட ஆதி, “என்னடா ரேவதி என்னன்னவோ சொல்ற” என்று புரியாமல் அவனிடம் கேட்டான்.

“அதுதான் எனக்கும் புரியல” என்று அவனும் அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து நிற்க, “உனக்கு என்னாச்சு” என்றவன் சிரித்தபடியே கேட்டான்.

“எனக்கு அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் நடக்க போகுது ஆதி” என்றாள் சீரியசாகவே.

“நல்ல விஷயம் தானே அதுக்கு ஏன் நீ அழுகிற” என்று அவன் மீண்டும் கேலியில் இறங்கினான்.

அவனுக்கு தெரியும் ரேவதி ஏதாவது இடைஞ்சல் கொடுக்கவே கிளம்பி வருவாளென்று. அதுமட்டும் இல்லாமல் சிவாவிடம் ஏற்கனவே ரேவதியின் நடவடிக்கை பற்றி அவன் சொல்லி இருந்ததால் எந்த பயமும் இல்லாமல் அவளை எதிர்கொண்டான் ஆதி.

“என்னை பார்த்த உனக்கு எப்படி தெரியுது. ஐந்து வருஷமாக உன்னை காதலித்துவிட்டு வேறொருவனை கல்யாணம் பண்ணிக்குவேன்னு நினைச்சியா” என்று அவள் கோபமாக அவனை நெருங்கிட அவள் சொன்னதைக் கேட்டதும் தன்னையும் அறியாமல் பக்கென்று சிரித்துவிட்டான் ஆதி.

“ஏய் உனக்கு நிஜமாகவே லூசு கிளம்பிவிட்டதா? நான் எப்போ உன்னிடம் வந்து காதலிக்கிறேன்னு சொன்னேன்?” என்னவண்ணம் அங்கிருந்த டேபிளின் மீது ஏறி அமர்ந்தான்.

அவனின் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்த சிவா அமைதியாக இருக்க, “ஏய் என்னடா சொல்ற? அப்போ என்னை காதலிக்காமல் தான் கொல்கத்தாவில் ஒரு இடம் இல்லாமல் என்னை கூட்டிட்டு போனீயா? என்மேல் அக்கறை உள்ளவன் போல வாராவாரம் வந்து பார்த்துகிட்டியா” என்றவள் பொய்யை உண்மையாக்க நினைத்து வரிசையாக அடிக்கிட இப்போது அவளைப் பார்த்து சிரிப்பது சிவாவின் முறையானது.

அவர்கள் இருவரும் தன்னை கேலி செய்வதை உணர்ந்தவள், “என்ன அண்ணா சிரிக்கிற” என்று சிவாவின் மீது அவளின் கோபத்தைக் காட்டினாள் ரேவதி.

“பின்ன என்னடி பண்ண சொல்ற. ஆதி பக்கத்தில் இருக்கான்னு நான்தான் அவனை வாராவாரம் போய் பார்த்துட்டு வான்னு சொன்னேன். நீ எங்காவது போக நினைச்சா அவளை பத்திரமாக கூட்டிட்டு போன்னு சொன்னதும் நான்தான். பத்தாக்குறைக்கு அவனுக்கு போன் மேல் போன் பண்ணி டார்ச்சர் கொடுத்தவன் நான்தான். அதெல்லாம் தெரியாமல் நீ என்னவோ காதல் அது இதுன்னு உளறினால் சிரிக்காமல் என்ன பண்ண சொல்ற” என்றான் மீண்டும் சிரித்தபடி.

அவன் சொன்னதை எல்லாம் கேட்ட பிறகு ரேவதிக்கு எரிச்சல் அதிகமாகிவிட, “இல்ல இவன் என்னை காதலிச்சது உண்மை. நீ அவனை காப்பாற்ற நினைக்கிற. நான் ஊருக்கு போகும்போது கூட இவனிடம் காதலை சொல்லி கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லுன்னு சொல்லிட்டு வந்தப்ப கூட அவன் சரின்னு சொன்னான்” என்றவள் கோபத்துடன் ஆதியை நெருங்கி அவனின் சட்டை காலரைப்பிடித்து அருகே இழுத்தாள்.

“ஏன்டா இப்படி மாற்றி பேசற. ஐந்து வருஷம் நீ என் பின்னாடி சுத்தல என்னை காதலிக்கல. இப்போ எனக்கு நிச்சயம்னு தெரிஞ்சதும் கழட்டிவிட பார்க்கிறாயா” என்று ரேவதி அவனிடம் கேட்க அவன் மௌனம் சாதித்தான்.

ஆண்கள் இருவரின் கவனமும் ரேவதியின் மீதே இருந்ததால் அபூர்வா வந்ததை அவர்கள் இருவரும் கவனிக்கவில்லை. ஏற்கனவே ரேவதியை அவளுக்கு தெரியும் என்றாலும் இடைபட்ட ஐந்து ஆண்டுகளில் ஆதியின் மனம் மாறி இருக்குமோ என்று ஒரு நொடி நினைத்தாள்.

அவன் மெளனமாக இருக்கும் ஒவ்வொரு நொடியும் அவளுக்குள் பயம் அதிகரிக்க, ‘ஆதி ப்ளீஸ் ஏதாவது பேசுடா’ என்று இவளின் உள்ளம் துடியாக துடித்தது. தன் மீதுள்ள காதலை அவளிடம் அவன் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தது அவளின் மனம்!

அவனின் மௌனத்தைக் கண்டு சிவாவே ஒரு நொடி திகைப்புடன் அவனை நோக்கிட, ‘உன்னை காதலிக்கல ரேவதின்னு சொல்லிருடா’ என்று அவள் மனம் தவியாய் தவித்தது.

அதே நேரத்தில் ரேவதியோ ஆதி சம்மதம் சொல்லிவிடுவான் என்ற எண்ணத்துடன் அவனின் பதிலுக்காக காத்திருந்த ஒவ்வொரு நொடியும் ஏதோ முள்ளின் மீது நிற்பதுபோல உணர்ந்தாள். அவளுக்கு ஆதியை பிடிக்கும் அந்த ஒரு காரணத்திற்காக அவன் சம்மதிக்க வேண்டும் என்று ரேவதியின் உள்ளம் எதிர்ப்பார்த்தது.

ஆதி அமைதியாக இருக்கவே, “என்னை ஏமாற்றிட்ட இல்ல. கடைசியில் என்னை நம்ப வெச்சு கழுத்தை அறுத்திட்ட இல்ல. நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட” என்று சொல்லிவிட்டு அவனைவிட்டு விலகிய ரேவதி அங்கிருந்து சென்றுவிட்டாள்.

சிவா நண்பனின் அருகே வந்து அவனின் தோளில் கைவைத்து, “ஆதி அவ சொல்வது எல்லாமே பொய்ன்னு தெரிஞ்சும் நீ ஏன் அமைதியாக இருந்த” என்று கேட்க, “தேவை இல்லாத விசயத்திற்கு ரியாக்ட் ஆகி அதை உண்மைன்னு ரேவதியை நம்பவைக்க சொல்றீயா? நான் இன்னைக்கும் நானாக மட்டுமே இருக்கேன்” என்றவன் தெளிவாக கூறினான்.

அவள் அழுதபடி செல்வதைப் பார்த்தும் அபூர்வாவிற்கு பயம் அதிகரிக்க, “ரேவதி நிஜத்தில் தான் காதலித்து இருப்பாளோ” என்று தன்னை மீறி வாய்விட்டு புலம்பியபடி ஆதியின் கேபினுக்குள் நுழைந்தாள்.

“ஏன் ஆதி உன் மேல் அவ எவ்வளவு நம்பிக்கை வெச்சிருப்பா. இப்படி ஏமாற்ற உன்னால் எப்படி முடிந்தது? அவ உன்னை நிஜமாகவே நேசித்து இருக்கிறா ஆதி” என்று கூறிய அபூர்வாவின் குரல்கேட்டு திரும்பிய சிவாவிற்கு அவளை அங்கே பார்த்து கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது.

அதுவரை மௌனம் சாதித்தவனோ அவளை தீர்க்கமாக பார்த்தபடி, “இதே காரியத்தை நீ ஐந்து வருஷத்துக்கு முன்னாடி செஞ்சது நினைவில் இருக்கா அபூர்வா” என்று நிதானமாக கேட்டவனின் கேள்வியில் கண்ணீரோடு அவள் தலை குனிய சிவாவிற்கு ஏதோ புரிவதுபோல இருந்தது.

அவளின் அருகே வந்த ஆதி, “என்ன பதிலையே காணோம்” என்று அவளின் முகத்தை குனிந்து நோக்கி ஏளனமாக கேட்டான்.

“இதோ இப்போ அழுதிட்டு போற ரேவதியை கூட ஒரு கணக்கில் சேர்த்தலாம். ஆனால் உன்னை எல்லாம் எந்த கணக்கில் சேர்த்துவது? அவளுக்கு நான் நம்பிக்கை துரோகம் பண்ணலன்னு எனக்கும் தெரியும் அவளுக்கும் தெரியும். சும்மா ஏதோ சொல்லி என் நிம்மதியை கெடுக்க அவள் என்னன்னவோ பேசிட்டு போற. ஆனால் நீ அப்படியா பண்ணின” என்று அவன் அவளை கூர்ந்து பார்த்தபடி அழுத்ததுடன் கேட்க அபூர்வாவின் கண்கள் கலங்கியது.

“இப்போ கூட வேலைக்காக தான் கொல்கத்தா வரைக்கு வந்திருக்கிற. என்னை தேடி நீ வரல இல்ல. அப்போ உனக்கு இன்னும் என்மேல் நம்பிக்கை வரலன்னு சொல்லலாமா?” என்றவன் நக்கலோடு அவளை பார்க்க அவளுக்கு இப்போதே உயிர் போய்விடாதா என்று தோன்றியது.

ஆனால் உண்மையை சொல்லாமல் கோழையாக இருக்கக்கூடாது என்ற முடிவுடன் பட்டென்று நிமிர்ந்தவள், “இல்ல ஆதி இது உன்னோட கன்ஸ்ட்ரக்ஷன் எனக்கு சத்தியமா தெரியாது. நான் உன்னை தேடி இங்கே வந்தது உண்மை. ஆனால் நீ எம்.டி. என்றதும் என்னை நீ வேண்டுமென்றே வரவேச்சிருக்கிறன்னு நினைச்சுதான் நான் மெளனமாக இருந்தேன்” என்று அவனை தேடித்தான் இங்கே வந்தேன் என்ற உண்மையை அவளே ஒப்புகொண்டாள்.

அவளை நெருங்கி நின்ற ஆதியின் பார்வை அவளை துளைத்தெடுக்க, “ஆதி அன்னைக்கு நான் அப்படி செய்ய ஒரு காரணம் இருந்துச்சு. தாத்தா சொல்வதை கேட்கல என்றால் நீ மூணு வருஷம் ஜெயிலுக்கு போயிருக்கணும். நீ நல்ல இருக்கணும்னு தான் அப்படி ஒரு காரியத்தை மனசாட்சி இல்லாமல் செஞ்சேன்..” என்று கூறியவள் அழுகையினூடே நிமிர்ந்து அவனின் விழிகளை தீர்க்கமாக பார்த்தாள்.

அவன் கேள்வியாக புருவம் உயர்த்திட, “நான் நம்பிக்கை துரோகியாக இருந்துட்டு போறேன். கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி ரேவதி பேசியபோது நீ அமைதியாக இருந்தப்பவே என் காதல் செத்துப் போச்சு. நான் இடையே வந்துட்டேன்னு தானே முடிவெடுக்க தடுமாறி நிற்கிற” என்றவள் கலங்கும் கண்களை அழுந்த துடைத்தாள்.

‘இவன் முன்னாடி அழுகக்கூடாது’ என்ற முடிவுடன் நிமிர்ந்தவள், “உன்னோட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ரேவதியை நீ கல்யாணம் பண்ணிக்கோ. இனிமேல் உன் வாழ்க்கையில் குறுக்க வர மாட்டேன் ஆதி” என்றவள் அறையைவிட்டு வெளியேறினாள் அபூர்வா.

அவள் சென்றபிறகு ஆதியின் அருகே வந்த சிவா, “ஆதி அபூர்வா எப்படி இங்கே வந்தா? உனக்கும் இவளுக்கும் இடையே ஏதாவது பிரச்சனையா?” என்று நண்பனின் முகத்தை ஆராய்ந்தான் சிவா.

அவள் சென்றபிறகு ஆணியடித்தது போல அதே இடத்தில் நின்ற ஆதி, “லூசு இப்போ கூட நான் ரேவதியை விரும்பறேன்னு நினைச்சிட்டு விலகி போறாளே இவளை என்ன பண்ணறது” என்று அவன் புன்முறுவலோடு நிமிர சிவாவின் பார்வையில் இருந்த கேள்வியை உணர்ந்து,

“சிவா அபூர்வா என்னோட காதலிடா. அவளைவிட்டு பிரிஞ்சபிறகு தான் நான் சென்னை வந்தேன்” என்று சொன்னதும் அவனுக்கு அதிர்ச்சியாக இருக்க, “அவ நம்பிக்கை துரோகம் பண்ணிட்டேன்னு என்னவோ சொல்லிட்டு போறாளே. அது உண்மையா” என்று கேட்க அவனும் தலையசைத்து அவனின் கருத்தை ஒப்புக்கொண்டான்.

சிவாவின் முகம் அப்போதும் தெளியாமல் இருப்பதைக் கண்டு, “உனக்கு நான் புரியும்படி சொல்றேன் வா” என்ற ஆதிக்கு தெரியாது அபூர்வா அவனைவிட்டு விலகி செல்கிறாள் என்று!

அதே நேரத்தில் ரிசைனிங் லெட்டரை மெயில் அனுப்பிவிட்டு ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்த அபூர்வா படுக்கையில் விழுந்து அழுதாள். இனிமேல் அங்கிருக்க கூடாது என்ற முடிவுடன் ஹாஸ்டலை காலி செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

இரண்டு மனதிலும் காதல் இருந்தபோதும் அவர்களின் கடந்தகாலத்தில் அவர்களே அறியாத பல உண்மைகள் மறைந்து கிடைக்கிறது..

அழகிய தேன் சிட்டுக்கள்

இரண்டும் சிறகடித்து காதல்

வானில் பறந்தது..

அந்த பறவைகளை பிரித்து

இருவேறு திசையில்

பயணிக்க வைத்து

வலி என்ற கூட்டுக்குள்

அடைத்தது யாரோ..?”