idhayam – 29

அத்தியாயம் – 29

கண்ணுக்குத் தென்படும் தூரம் எங்கிலும் பசுமையை மட்டுமே தன் வளமாக கொண்டிருக்கும் அந்த மலை மகளின் அழகிற்கு அழகு சேர்க்கும் அருவிகளை காணும்போது மனதும் சேர்ந்து அலைபாய தொடங்கிவிடும். கார்மேகங்கள் சூழ்ந்த நிலையில் வானம் இருக்க பசுமையான மரங்களின் நடுவே வெள்ளியை உருக்கி ஓடவிட்டது போல ஓடும் அருவிகளை கண்டு துள்ளாத மனங்கள் இல்லை.

குற்றாலத்தின் மலைவளத்தை வர்ணிக்க வார்த்தையின்றி தவிக்கும் கவிஞர்கள் ஏராளம். அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த ஆதியிடம் உனக்கு பிடித்த இடமென்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்வான் குற்றாலம் என்று!

அவன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலையை தேடி சுற்றிக்கொண்டு இருந்த சமயத்தில் அவனே எதிர்பாராத நேரத்தில் நிகழ்ந்தது தான் அவளின் சந்திப்பு என்று சொல்லலாம்.

ஆதியின் நினைவுகள் அந்த நாளை நோக்கி பயணித்தது.

அன்று அவன் ஒரு இண்டர்வியூற்கு போய்விட்டு தன் நண்பர்களோடு பேசியபடி ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தான். அந்த அவர்களின் சீனியர் ஒருவன் கல்யாண பத்திரிக்கையுடன் வரவே நண்பர்கள் அனைவரும் அவனோடு பேசுவதில் ஆர்வமாக இருந்தனர்.

“என்ன ஆதி உனக்கு வேலை எப்படி போகிறது”என்று அவனின் சீனியர் எதார்த்தமாக விசாரிக்க, “அவனுக்கு இன்னும் வேலை கிடைக்கல சீனியர்” என்றான் ஆதியின் நண்பன் ஒருவன்.

அவனும் சோர்வுடன் புன்னகைக்க, “பரவல்ல விடு ஆதி. உன்னோட திறமைக்கு வேலை உன் வீடு தேடி வரும்” என்ற வார்த்தையை கேட்டு அவனின் மனதில் இருந்த பாரம் குறைந்தது.

“உனக்கு வேலை கிடைத்ததும் நல்ல பெண்ணாக பார்த்து கல்யாணம் பண்ணுடா” என்றயுடன் ஆதியின் அருகே நின்றிருந்த மற்றொருவன்,  “என்ன சீனியர் சொன்னீங்க? இவனோட திறமைக்கு வேலை வேண்டும் என்றால் வீடு தேடி வரும். ஆனால் ஒரு பொண்ணை பெற்ற தகப்பன் இவனை நம்பி பொண்ணு தர மாட்டான்” என்று அவனை பார்த்து நக்கலோடு கூற மற்றவர்கள் அவனை கேள்வியாக நோக்கினர்.

“என்னடா சொல்ற? நம்ம ஆதிக்கு என்ன குறைச்சல்” என்று மற்றொருவன் அவனிடம் கேட்க ஆதியின் முகம் சட்டென்று மாறியது.

“ஆள் அழகாக இருந்தால் போதுமா? அவனோட பின்னணி என்னன்னு தெரியும் இல்ல. இவங்க அப்பா ஒரு குடும்பம் இருக்கும்போதே மற்றொரு திருமணம் பண்ணிட்டு இரண்டு குடும்பத்தையும் சமாளிக்கிறார். ஊருக்காக ஒரு திருமணம், பணத்துக்காக இன்னொரு திருமணம். எந்த பொண்ணு ஒத்துக்குவாள் இவனை கல்யாணம் பண்ண” என்று அவன் பேசிக்கொண்டே சென்றான்.

அவர்கள் விட்டிருந்தால் என்னன்ன பேசி இருப்பானோ ஆதி தன்னுடைய கோபத்தை கட்டுபடுத்த முடியாமல் நண்பனை பளார் என்று அறைவிட்டு அவனின் சட்டையை கொத்தாக பற்றி, “ஏய் அவரை பற்றி என்னிடம் பேசாதே. வாழ்க்கையில் ஒரு பெண்ணை மட்டும் தான் காதலிப்பேன், அந்த பெண்ணை மட்டும் தான் திருமணம் பண்ணுவேன். எங்க அப்பா மாதிரி ஆள் நான் இல்லடா. பணத்தை பார்த்தும் மாறும் பச்சோந்தி நான் இல்ல” என்று கத்திவிட்டு அவனை உதறிவிட்டு விலகி நடந்த ஆதியின் மனம் தந்தையை நினைத்து அனலாக கொதித்தது.

எந்தவொரு பிள்ளையின் பெற்றோர் செய்யும் சிறிய தவறு அது பிள்ளைகளின் வாழ்க்கையை பாதிக்கும். ஆண்பிள்ளை, பெண்பிள்ளை என்ற பேதமே இல்லாமல் இந்த சமூகம் அவர்களை ஒதுக்கிவிடுகிறது. அவர்களின் திறமையும் மற்றவர்களின் வாய்க்கு பயந்து மனதிற்குள் புதைந்து போய்விடுகிறது.

ஆதியின் தந்தை செய்த தவறு இப்போது அவனின் காலை சுற்றி வருகிறது. அவன் நல்லவன் தான். ஆனால் அவன் தந்தை பெயரை சொன்னதும் அவனின் மீது படியும் கேவலமான பார்வையை தாங்கி தாங்கி அவனின் உள்ளம் புண்ணாகி போயிருந்தது.

தவறு செய்யாமல் தண்டனை பெறும் இடத்தில் அவனிருந்தான். அதெல்லாம் நினைத்தபடி கால்போன போக்கில் நடந்த ஆதியின் கண்களில் விழுந்தது செங்கொன்றை மரம். மேமாதத்தில் முழுவதும் மலர்கள் பூத்து குலுங்கியது.

கார்மேகங்கள் சூழ்ந்து இருந்த சமயம் பூக்களின் நிறம் கொடுத்த அழகு. செந்தணலின் சூட்டை தணிக்க கார்மேகங்கள் வானில் தயாராக நின்றிருக்க நீ கொட்டும் மழையால் என் மனதின் தணல் அணைந்துவிடாது என்று சொல்வது போல காட்சியளித்தது.

சில நொடிகள் அவன் அங்கேயே நின்று அந்த மரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அந்த பாதையில் ஒரு பட்டாம்பூச்சியை பிடிக்க முயற்சித்து தோற்ற ஒரு பெண்ணை கண்டு அவனின் பார்வை அவளின் மீது சுவாரசியமாக படித்தது.

எப்போது வேண்டும் என்றாலும் மழை வரும் நிலையில் வானமிருக்க, “ஒரு நிமிஷம் நில்லு பட்டாம்பூச்சி” என்று ஸ்கூல் பேக்குடன் பட்டாம்பூச்சியின் பின்னோடு சுற்றிக்கொண்டு இருந்தாள் அந்த பதினாறு வயது பாவை.

அவள் பட்டாம்பூச்சியை கையில் பிடித்த மறுநொடி இவனின் மனதிற்குள் சடசடவென்று மழை பொழிய துவங்கியது. அவளின் பளிங்கு முகத்தில் தோன்றி மறைந்த உணர்வுகள் அவனின் இதய சுவற்றில் அவன் வடித்துக் கொண்டான். அவளின் படபடக்கும் விழிகளில் சந்தோஷம் மின்னலேன்று வந்து சென்றது.

“என்னிடம் இருந்து தப்பிக்க நினைச்ச இல்ல. இப்போ பார்த்தியா நீயே வந்து வசமாக மாட்டிகிட்ட” என்று பட்டாம்பூச்சியிடம் பேசியபடி, “சரி சரி இனிமேல் நீ சுதந்திரமாக பறந்து போ. நான் மழை வருவதற்குள் வீட்டுக்குப் போகணும்” என்று  பட்டாம்பூச்சியை வானில் பறக்கவிட்டபடி அவனை கடந்து சென்றாள் அவள்.

அதுவரை கோபத்தில் தணலாக கொதித்த இதயம் நொடியில் குளிரும் நிலவாக மாறிப்போனது. ஒரு நொடியில் அவனின் உள்ளத்தில் மழையை கொண்டுவந்த அவளை அந்த நொடியே நேசிக்க தொடங்கினான்.

யாரை பார்த்தும் தன் துணையாக  இவன் வந்தால் போதும் என்று பெண்ணின் மனம் சொல்கிறதோ அது காதலென்றால், தன் மனதின் துயரை ஒரு சின்ன அசைவில் கூட மறக்கடிக்கும் பெண்களை தொடரும் ஒரு ஆணின் பார்வை கூட சொல்லும் அவன் காதலில் விழுந்துவிட்டான் என்று!

ஆதியும் அந்த நிலையில் தான் இருந்தான். அவனின் கோபத்தை கூட நொடியில் மறக்க வைத்தவள் காலம் முழுவதும் தன்னோடு வரவேண்டும் என்று அவனின் உள்ளம் ஏங்கியது. அன்றைய நாளில் இருந்து பெயர் தெரியாத பெண்ணை நேசிக்க தொடங்கினான்.

அன்று மாலை அவன் வீடு திரும்பும் முன்னே அவன் நண்பர்களோடு சண்டையிட்ட விஷயம் மஞ்சுளாவிற்கு தெரிந்துவிட்டது. எப்போதும் சோர்வுடன் வீடு திரும்பும் மகனுக்கு ஏதாவது செய்து வைத்துகொண்டு வரும் வழியை எதிர்பார்த்து காத்திருக்கும் தாய் இன்று மௌனமாக அமர்ந்திருப்பதைக் கண்டதும் அவனுக்கு காரணம் விளங்கிவிட்டது.

“என்னம்மா நான் ரோட்டில் சண்டைபோட்ட விஷயம் வீடு வரை வந்துவிட்டது போல” என்று அவன் தனியறை நோக்கி அடியெடுத்து வைத்தான்.

“ஏன்டா நீ இப்படி இருக்கிற” என்று அவர் கோபத்துடன் கேட்க அவனின் நடை தடைபட்டது.

ஆதி கேள்வியோடு தாயைப் பார்க்க, “உங்கப்பா செய்தது தவறுதான். அதுக்காக எப்போதும் அவரை எதிரியாக நினைச்சிட்டு இருப்பாயா?” என்றவர் அப்போது கணவனுக்காக பரிந்துவர அவனுக்கு எங்கே சென்று முட்டிக் கொள்வதென்று தெரியாமல் எரிச்சலோடு நிமிர்ந்தான்.

“அம்மா உன் புருஷன் பண்ணிய தப்பால் என்னை ஊருக்குள் தப்பா பேசறாங்க. அதை ஏன் நீங்க புரிஞ்சிக்காமல் பேசறீங்க” என்று ஆற்றாமையோடு கேட்டான் மகன்.

அவனின் கேள்வியில் நியயமிருப்பது அவருக்கு புரிந்தாலும், “உன்னை பேசினால் நீ அமைதியாக வர வேண்டியதுதானே” என்றார்.

“அது என்னால் முடியாது” என்றான் மகன் தீர்மானமாக.

“ஏன்” என்றார் ஒற்றை சொல்லாக.

“எனக்கும் உணர்வுகள் இருக்கு அம்மா. நான் மனதளவில் யாருக்கும் கெடுதல் நினைக்கல. என் மனதிற்கு பிடித்த பெண்ணை மட்டும் உயிராக காதலித்து ஆயிரம் தடை வந்தாலும் அவளையே கரம்பிடித்து வாழ்க்கையின் இறுதிவரை அவளோடு பயணிக்க நினைக்கும் என்னை அவங்க உன் புருசனோடு ஒப்பிட்டு பேசுவதை ஏத்துக்க முடியாது” என்று விளக்கமாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் அப்பா என்ற அழைப்பை வெறுத்து, ‘உன் புருஷன்’ என்று கூறியது மஞ்சுளாவின் மனதை காயப்படுத்தியது. ஆரம்பத்தில் இருந்தே கணவனை சார்ந்தே வாழ்ந்துவிட்ட அவரால் மகனிடம் கணவனை விட்டுகொடுக்க முடியவில்லை.

இரவு சாப்பிட அழைத்தபோது கூட சாப்பாட்டை மறுத்துவிட்டு அறையில் சென்று படுத்துவிட்டான் ஆதி. அவனின் நிலையிலிருந்து யோசிக்கும்போது அவனின் கோபம் நியாயமானது என்று அவருக்கு புரிந்துவிட, ‘ஆண்டவா இவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துகொடு’ என்று வேண்டிக் கொள்வதை தவிர அவருக்கு வேறு வழியும் தெரியவில்லை.

அதன்பிறகு வந்த நாட்களில் அவனின் வேலைக்கான தேடல் பூஜ்யத்தில் முடியவே சோர்வுடன் மீண்டும் அந்த மரத்தை தஞ்சமடைந்தான் ஆதி.

அவனின் மனம்  அவளையே தேட, “ஏய் கண்ணழகா நில்லுடா” என்று ஒரு  பெண்ணின் குரல் கேட்க சட்டென்று நிமிர்ந்தான் ஆதி.

அவன் எதிரே ஒரு குட்டி பையனை துரத்தியபடி ஓடிவந்த பெண்ணைப் பார்த்தும் அவன் தன்னையே மறைந்துவிட்டான். ஒருவன் தன்னை சுவாரசியமாக பார்ப்பதை அறியாத அவளோ,

“டேய் உன் கண்ணு அழகாக் இருக்குன்னு தானே உன்னை நான்  சுத்தி சுத்தி வரேன். ஏண்டா நீ என்னை கண்டதும் ஓடுற” தன் முன்னே நின்ற சிறுவனிடம் அவள் கேள்வி கேட்டான்.

அந்த சிறுவன் இடையில் கையை வைத்துகொண்டு அவளை ஏறயிரங்க பார்த்தான். அவள் அவனை கேள்வியாக நோக்கிட, “ஏழு கழுதை வயசான நீ என் பின்னால் சுத்தினால் என்னோட மானம் மரியாதை என்ன ஆவது?” எனவும் இருக்கும் இடம் தெரியாமல் ஆதி பக்கென்று சிரித்துவிட்டான்.

அவனின் சிரிப்பு சத்தம் கேட்டதும் பட்டென்று நிமிர்ந்து அபூர்வா, “நீங்க எதுக்கு இப்போ சிரிக்கிறீங்க? எனக்கு அவன் கண்ணு பிடிக்கும் அதுதான் இவனை சுற்றி சுற்றி வரேன் படுபாவி என்னை திரும்பி பார்க்காமல் போறான்” என்று ஐந்து வயது சிறுவனை அவள் பெரிய படத்தின் ஹீரோ லெவலில் வர்ணித்து கூற ஆதியால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

அவள் மீண்டும் நிமிர்ந்து அவனை முறைத்துவிட்டு, “உன்னால் என் மானமே போகுதுடா” என்று சொல்லி சின்னவனை இழுத்துச் செல்ல, “என்னை மாதிரி குட்டி பையனை விரும்பினால் இப்படித்தான் மானம் போகும்” என்று அவனும் அவளிடம் வம்பு வளர்த்தான் சிறுவன்.

“ஆண்களோட கண்களில் காந்தமிருக்கு குட்டி பையா. அதனால்தான் பெண் பிள்ளைகளை ஆண்களை நேருக்கு நேர் பார்க்காதே என்று சொல்லி வளர்த்தராங்க” என்று விளக்கம் கொடுத்தவள் தொடர்ந்து,

“ஆனால் அந்த கண்களில் கரைகாணாத காதலை காண வேண்டுமென்று நான் நினைக்கிறேன். உன் கண்களில் இருக்கின்ற சந்தோஷத்தை என் மனதிற்கு பிடித்தவனின் கண்களில் இருக்கணும். அந்த விழிகளின் வழியாக அவனின் இதயத்திற்குள் நுழைந்து அவனை மட்டும் உயிராக நேசிக்கணும்..” என்று தன் காதலுக்கு வடிவம் கொடுத்தாள்.

அவளின் தேடலை உணர்ந்த ஆதிக்கு அவளை இன்னும் பிடித்துப்போனது. தன்னை ஒருவன் உயிராக நேசிக்கிறான் என்று தெரியாமலே அவள் தன் விருப்பத்தைக் கூறிவிட அவளை கரம்பிடித்து கடைசிவரை அவளோடு வாழவேண்டும் என்று நினைத்தான்.

சில நேரங்களில் நாம் நினைப்பது அனைத்தும் நினைத்தபடி நடப்பதில்லை என்று அவன் அறியவில்லை. அவளின் மீது அவன் வைத்த காதல் ஒரு நாள் உண்மையாக ஜெய்க்கும் என்று அவன் நினைக்க அவனின் காதலியே அதை பொய்யாக போவது தெரியாமல் அவளை தேடி அலைபாய தொடங்கியது அவனின் காதல் மனது.

இருவரும் செல்வதை பார்த்தபடி மரத்தின் மீது சாய்ந்து நின்ற ஆதிக்கு அபூர்வாவின் குழந்தைமனம் பிடித்தது. மனம் விரும்பியதை வற்புறுத்தி அடைய நினைக்கும் இந்த காலத்தில் சின்ன சின்ன விஷயங்களை சுவாரசியமாக ரசிக்கும் பெண்ணை அவனின் மனம் காதலிக்க தொடங்கியது.

இந்த நிகழ்வு நடந்து முடிந்து ஒரு வாரத்திற்கு பிறகு அபூர்வா மதியம் சாப்பிடும்போது, “அபூர்வா இதை உன்னிடம் ஒருத்தர் கொடுக்க சொன்னார்..” என்று அவளின் தோழியான ஆர்த்தி கொண்டுவந்து கொடுத்த காகிதத்தை கையில் வாங்கினாள்.

“யாரு கொடுக்க சொன்னாங்க” அவள் கடிதத்தை பிரித்து பார்க்க, “அழகான பூவெல்லாம் காதல் தேவனின் பாதத்தை பூஜிக்கும் அர்ச்சனை  பூவாக மாறிடுமா பெண்ணே” என்று இரண்டு வரி மட்டுமே இருந்தது.

“ஏய் இதை யார் எழுதினாங்க என்று தெரியல ஆர்த்தி” என்றவளின் பார்வை அந்த இரண்டு வரிகளின் கீழே இருந்த வரிகளை வாசித்தாள்.

“என் பெயர் என்னவென்று தெரிய வேண்டுமா? அணுவைத் துளைத்து ஏழு கடலைப் புகுத்தி குறுகத்தரித்த குறள்  ஔவையாரால் புகழப்பட்ட பொய்யாமொழி புலவரின் எழுதிய முதல் பாலில், முதலிடத்தில் என் பெயர் மறைந்திருக்கிறது..” என்று இருந்த குறிப்பை படித்துவிட்டு புருவம் சுருக்கி யோசித்தாள்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு” என்ற குரளை அவளின் உதடுகள் உச்சரித்தது.

அதில் ‘ஆதி’ என்ற இரு எழுத்துகள் அவளின் மனதில் ஆழமாக பதிந்துவிட மீண்டும் அந்த கடிதத்தில் பார்வையை ஓடவிட்டாள். அப்போது தான் மேலே இருக்கும் இரண்டு வரிகளில் அவளின் பெயரின் எழுத்துகள் மட்டும் கருப்பு நிறத்தில் எழுதப்பட்டு இருப்பது புரிந்தது.

காதல் என்ற பெயரை சொல்லி தன் பின்னோடு சுற்றும் ஆண்களில் அவன் மட்டும் தனித்து தெரிந்தான். அவளின் பெயரை காதல் என்ற வார்த்தைகளை கோர்த்து தன் விருப்பத்தை சொன்னவனை காண ஏங்கியது அவளின் உள்ளம்.

ஆர்த்தியிடம், “இந்த பேப்பரை யாருடி உன் கையில் கொடுத்தது” என்று கேட்டதற்கு அவளோ உதட்டைப் பிதிக்கிவிட்டு மறுப்பாக தலையசைக்கவே, “யாரு என்ன கொடுத்தாலும் வாங்கிட்டு வந்து கையில் கொடுக்குறது பாரு லூசு” என்று அவளைத் திட்டிவிட்டு அவன் கொடுத்த கடிதத்தை பத்திரமாக வைத்தாள்.

அவனின் பெயர் ஆதி என்பது தவிர அவளுக்கு வேறு எதுவும் தெரியவில்லை. ஆனாலும் அவனை நேரில் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் அவளின் மனதில் வலுபெற்றது. நேரமும் காலமும் யாருக்கும் நிற்காமல் தன் கடமையை சரியாக செய்தவண்ணம் இருந்தன.