அத்தியாயம் – 9
அன்று ஞாயிற்றுக்கிழமை கிழமை என்பதால் ஒன்பது மணிபோல தூங்கி எழுந்த ஆதி உடனே குளித்துவிட்டு கிளம்பினான். என்றும் இல்லாத திருநாளாக கையில் சாவியை சுழற்றியபடி நார்மல் உடையில் இறங்கி வந்த மகனை ஆச்சரியத்துடன் பார்த்தார் மஞ்சுளா.
“என்னப்பா இன்னைக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிற போல” என்று விசாரித்தபடி அவர் அவனுக்கு உணவு எடுத்து வைக்க, “இல்லம்மா எனக்கு சாப்பாடு பார்சல் பண்ணிருங்க. அப்படியே இன்னொரு பார்சல் நம்ம சிவா தங்கச்சிக்கு” என்றான் புன்னகையுடன்.
அவன் சிவா என்றதும் அவருக்கு ஏதோ புரிவது போல இருக்கவே எதுவாக இருந்தாலும் அவனே வந்து தன்னிடம் சொல்வான் என்ற நம்பிக்கையுடன் அவன் சொன்னபடி பார்சல் போட்டு அவனிடம் கொடுத்தார்.
“அம்மா இன்னைக்கு நான் வர ரொம்ப லேட் ஆகும். சோ எனக்காக வெயிட் பண்ணாதீங்க. நான் வந்தா என்னிடம் இருக்கிற கீயை வைத்து கதவைத் திறந்துக்குவேன்” என்ற ஆதி வாசலை நோக்கி சென்றான்.
கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு பழைய துள்ளலோடு தன் மகனை கண்டுவிட்ட சந்தோஷத்தில் கண்கலங்கிட அவன் சென்ற திசையைப் பார்த்தபடியே நின்றிருந்தார் மஞ்சுளா.
தன் காரில் ஏறியதும் சிவாவிடம் வாங்கிய முகவரியை ஒரு முறை பார்த்துவிட்டு ரேவதி தங்கியிருக்கும் ஹாஸ்டலுக்கு வண்டியை விட்டான். கிட்டதட்ட வீட்டில் இருந்து அரைமணி நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு கால் மணிநேரத்தில் வந்து சேர்ந்தான்.
ஹாஸ்டல் வார்டனிடம், “நான் அவளோட அத்தை பையன்..” என்று கூறி அவளைப் பார்க்க அனுமதி வாங்கினான். அவனுக்கு வேறு வழியும் தெரியவில்லை. ஒரு பக்கம் தங்கையை நினைத்து புலம்பும் சிவாவிடன் பொய் சொல்ல முடியாமல் அவளை சந்திக்க வந்திருந்தான்.
அவளுக்கு தகவல் கொடுத்த சிலநொடிகளில் அங்கே வந்த ரேவதி ஆதியைக் கண்டதும் ஆச்சரியத்துடன் விழி விரிய அவனையே கண்ணிமைக்காமல் பார்த்தாள்.
அந்த வார்டன் ஆதியை நம்பி அவளை வெளியே அனுப்ப அங்கிருந்த மரத்தின் நிழலில் அமர்ந்தனர் ஆதியும், ரேவதியும்!
அவன் தன்னை தேடிக்கொண்டு ஹாஸ்டல் வரை வந்திருப்பதை காதல் என்று தவறாக புரிந்து கொண்ட ரேவதி, “நான் இங்கிருக்கும் விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்” என்றாள் அவனின் விழிகளை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தயங்கியபடி.
அவளின் மனநிலை உணராத ஆதியோ, “உன்னோட அண்ணாதான் நீ இங்கிருக்கும் விஷயத்தை சொன்னான்.” என்றான் இயல்பாகவே.
“என்னன்னு சொன்னான்” முகத்தை உர்ரென்று வைத்துகொண்டு கேட்ட ரேவதியைக் கண்டு சிரிப்பை அடக்க முயன்று முடியாமல் போக, “ஏய் இப்போ உன்னை பார்க்கும் போது இஞ்சி தின்ன குரங்கு மாதிரியே இருக்குடி” என்றான் சிரித்தபடி.
அவன் சிரிப்பதில் காண்டானவளோ, “நீ என்னை குரங்குன்னு மட்டுமா சொல்லுவ. எருமை, பொறுக்கி, ராஸ்கல் சொல்லாமல் கொல்கத்தா வந்துட்ட இல்ல. நான் தவிச்ச தவிப்பு உனக்கு எப்படி தெரியும்” கோபமும், அழுகையுமாக அவனை போட்டு அடித்தாள்.
அவளிடம் அத்தனை அடியையும் வாங்கிகொண்டு, “ஸாரி ரேவதி திடீர்ன்னு வேலை கிடைக்கவும் நான் கிளம்பி வந்துட்டேன். இங்கே வந்தபிறகு நிறைய மாற்றங்கள் வந்திருக்கு தெரியுமா?” என்று அவளிடம் நடந்த விஷயங்களை விவரமாக கூறினான்.
அவன் கூறுவதை பொறுமையுடன் கேட்டு முடித்த ரேவதி, “எங்க கம்பெனி வேலையைவிட இந்த வேலை பெட்டர்னு தோணவும் இங்கே வந்துட்ட. திடீர்னு வேறொரு வேலை இதவிட பெட்டர் என்று தோணுச்சு என்றால் அது பின்னாடி போயிருவ இல்ல” அர்த்தம் புரியாமல் ஆதங்கத்துடன் கேட்ட ரேவதியின் வார்த்தைகளில் நிமிர்ந்து அவளின் முகம் பார்த்தான்.
அவள் எப்போதும் போல இருப்பதைப் பார்த்து நிம்மதியுற்ற ஆதி, “ஒன்றைவிட ஒன்று பெட்டர் என்று தோன்றுவது வேலையில் மட்டும் தான் ரேவதி. வாழ்க்கையில் என்னைக்கும் இதைவிட அது பெட்டர்னு இன்னொரு பொருளை தேடிப் போறவன் நான் இல்லடி..” என்று அழுத்துடன் கூறியவனின் வார்த்தைகளில் அவளின் மனம் அமைதியடைந்தது.
அவனின் காதல் மனம் தனக்காக மட்டுமே என்று தனக்குள் எண்ணிக்கொண்ட ரேவதியின் முகம் பூவாக மலர்ந்தது. அதே நேரத்தில் அவளின் மனதில் காதல் விதை விழுந்தது அறியாத ஆதியின் மனமோ அவளையே நினைத்தது. அவன் நினைத்தும் இதயத்திரையில் அவளின் மலர்ந்த முகம் வந்து செல்ல வலியுடன் விழிமூடி தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தான்.
ரேவதி அவனை காதலோடு இமைக்காமல் பார்த்தபடி அமர்ந்திருக்க, “ஏய் லூசு கொல்கத்தா உனக்கு எப்படி போகுது” என்றவன் சட்டென்று பேச்சை மாற்றிட, “ம்ம் கொல்கத்தா நல்லாத்தான் இருக்கு. என்ன சாப்பாடுதான் வாயில் வைக்க முடியல” என்று சலித்துக் கொண்டாள்.
“நீ சென்னையில் படிச்சிருந்தா இந்த பிரச்சனை எல்லாம் வந்திருக்குமா” என்றான் அக்கறையுடன்.
அவனின் அக்கரையில் அவளின் மனம் பாகாக உருகிவிட, “என்ன பண்றது எனக்கு அங்கே படிக்க பிடிக்கல. அதுதான் அந்த காலேஜ் வேண்டான்னு சொல்லிட்டு இங்கே வந்துட்டேன்” என்றாள் சாதாரணமாகவே.
“இங்கே வந்து மட்டும் அப்படியே படிச்சு கிழிக்கிற மாதிரி பேச்சு மட்டும் பெருசாக பேசு. வா வந்து உட்காரு சாப்பிடலாம்” என்றவன் அங்கே வைத்திருந்த டிப்பன் கேரியரை திறந்து ஒரு தட்டில் உணவைப் போட்டு அவளிடம் நீட்டினான்.
“வாவ் சாம்பார், பீட்ரூட் பொரியல், தக்காளி ரசம்” என்றவள் தன் முன்னே வைக்க பட்டிருந்த உணவு வகைகளை ரசித்தபடி அவனின் கையிலிருந்து சாப்பாட்டை வாங்கி சாப்பிட தொடங்கினாள்.
அவனும் அவளோடு சேர்ந்து சாப்பிட, “இந்நேரம் வரை நீ சாப்பிடலையா?” என்று ஆச்சரியமாக விழி விரிய அவனை நோக்கினாள்.
“ஏய் லூசு நீ மட்டும் தனியா எப்படி சாப்பிடுவ? அதன் எனக்கும் சேர்த்து பார்சல் எடுத்துட்டு வந்தேன்” என்று கூறி அவளின் தனிமையை போக்க முயர்ச்சித்தவனின் மனதில் எந்தவிதமான தவறான எண்ணமும் இல்லை.
ஆனால் அவன் செய்கின்ற ஒவ்வொரு செயலும் வெளிபட்ட அக்கறையை அவள் காதலென்று நினைத்து கொண்டாள். அன்று முழுவதும் அவளை பக்கத்தில் இருந்த இடங்களுக்கு அழைத்துச் சென்றவன் மாலை அவளை ஹாஸ்டலில் விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தான்.
அதுபோலவே ஒவ்வொரு வாற இறுதியிலும் ஆதி அவளை வந்து வெளியே அழைத்துச் சென்றான். அவனை பொறுத்தவரை சிவாவிற்கு அவன் செய்யும் கடமை என்று நினைத்தான்.
நாட்கள் அதன் போக்கில் சென்று மறைந்தது.
தன் முன்னே இருந்த நூறு கோடி பிராஜெக்ட் டெண்டர் ஒன்றை சைன் செய்துவிட்டு நிமிர்ந்தவனின் முகத்தில் சந்தோஷம் கண்டு, “கன்க்ராட்ஸ்” என்று எல்லோரும் சொல்ல அவனும் ஒப்புதலாக தலையசைத்துவிட்டு அந்த அறையைவிட்டு வெளியே வந்தவனின் முகம் பளிச்சென்று இருந்தது.
இந்த டெண்டர் தனக்கு கிடைக்குமென்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. இன்று வளர்ந்து வரும் பிஸ்னஸில் இந்த கன்ஸ்ட்ரக்ஷன் துறையும் ஒன்று.
அவனுக்கு இருந்த திறமையும் முன்னேற வேண்டும் என்ற வேகமும் தான் அவனுக்கு இந்த நிலைக்கு முன்னேற வைத்துள்ளது. அவன் காண்ட்ராக்ட் சைன் பண்ணிட்டு கம்பீரமாக வெளியே வருவதைக் கவனித்த பெண்ணொருத்தியின் பார்வை அவனின் மீது படிந்தது.
அலையலையாக கேசமும், ஆளை வீழ்த்தும் வசீகரமான பார்வையும், நேரான நாசியும், அளவான மீசையும், அழுத்தமான உதடுகளும் ஆறடிக்கு குறையாத தோற்றமும், திரண்ட தோள்களுடன் தனக்கு கிடைத்த காண்ட்ராக்ட் பற்றிய சிந்தனையுடன் உதட்டில் புன்முறுவலோடு சென்றவனைக் கண்ணெடுக்காமல் ரசித்தவள், “செம ஹென்சம் மேன்” என்று முணுமுணுத்தபடி அவனைக் கடந்து சென்றாள்.
ஏனோ அவளின் வார்த்தையை அவன் ரசிக்கவில்லை. அதற்கு மாறாக ஏதேதோ எண்ணங்கள் அவனின் மனதில் அலையென எழும்பிட தன்னைக் கட்டுபடுத்திக் கொள்ள போராடிய ஆதித்யா பார்க்கிங் வந்து காரை எடுக்கும் நேரத்தில் அவனின் செல்போன் சிணுங்கியது.
“ஷ்.. இப்போ யாரு” என்ற எரிச்சலோடு அவன் செல்போன் திரையை தெரிந்த இலக்கங்களைக் கண்டதும், “ஹலோ அம்மா சொல்லுங்க” என்றான் சந்தோஷமாக.
“உனக்கு அந்த ப்ராஜெக்ட் கிடைச்சிருச்சு என்று ஹேமா போன் பண்ணின கண்ணா. எல்லாம் என்னோட மருமகள் வீட்டிற்கு வரும் நேரம்” என்றவள் காரணமே இல்லாமல் அவனின் பி.ஏ.வை வைத்து பேசிட இவனோ தலையும் புரியாமல் வாலும் புரியாமல் நின்றான்.
அவனுக்கு அந்த காண்ட்ராக்ட் கிடைக்க அவனின் உழைப்புதான் காரணம். அப்படி இருக்கும்போது இவர் எதற்கு ஹேமாவை தன்னோடு இணைத்து பேசுகிறார் என்ற எண்ணத்துடன்,“அம்மா நீங்க சொல்ற விஷயம் புரியல” என்றான் மைந்தன் கடினமான குரலில்.
ஆதியின் மனம் அறியாத மஞ்சுளா, “இப்போதான் ஹேமா போன் பண்ணி விஷயத்தை சொன்னாள்” என்றவர் அவனை தெளிவாக குழப்பிட அவனுக்கு தலைவலி வின் வின் என்றது.
“அம்மா எனக்கு ஒண்ணும் புரியல. நீ என்ன பேசுவதாக இருந்தாலும் தயவுசெய்து குழப்பாமல் பேசு. என்னால முடியல..” என்றவன் இழுத்துபிடித்த பொறுமையுடன் கூறினான்.
“நீயும் ஹேமாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பிறீங்க என்ற விஷயத்தை இப்போதான் அந்த பொண்ணு சொல்லுச்சு. ஏன் ஆதி நீ என்னிடம் இந்த விஷயத்தை நேரடியாக சொல்லியிருந்தா நானே அவளை கல்யாணம் பண்ணி வெச்சிருப்பேன் இல்ல” என்றார் ஆதங்கத்துடன் பெருமூச்சு விட்டபடி.
அவர் சொன்னதைக் கேட்டு அவனுக்கு சுர்ரென்று கோபம் தலைக்கு ஏறிவிட, “அம்மா யார் போன் பண்ணி என்ன சொன்னாலும் லூசு மாதிரி நம்புவியா? உனக்கு கொஞ்சமாவது அறிவு வேலை செய்தா இல்லையா?” அவரிடம் எரிந்து விழுந்தவன் அவரின் பதிலை எதிர் பார்க்காமல் போனை வைத்தான்.
ஹேமாவின் மீதிருந்த கோபத்துடன் காரை எடுத்தவன் அடுத்து காரை நிறுத்தியது அவனின் நிறுவனத்தின் முன்னாடி தான். காரிலிருந்து இறங்கியவன் காரின் கதவை அடித்து சாற்றிய சத்தம்கேட்டு திடுக்கிட்டு போனார் வாட்ச்மேன்.
அதெல்லாம் கவனிக்காமல் கடகடவென்று படிக்கட்டை உள்ளே சென்றவனின் வேகமே சொன்னது அவன் மிகுந்த கோபத்துடன் இருக்கிறான் என்று!
தன் கேபினுக்கு நுழைந்த ஆதி, “ஹேமா கொஞ்சம் என்னோட கேபினுக்கு வந்துட்டு போங்க” என்றான். அவன் கத்திய மறுநொடியே கைகால்கள் வெடவெடக்க தன் முன்னே வந்து நின்றாள்.
“உங்க மனசில் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ஹேமா” என்றான் நேரடியாக.
அவன் உறுமியத்தில் அவளின் கால்களின் நடுக்கம் அதிகமாக, “ஸார் நான் என்ன பண்ணேன்” என்றவள் திருதிருவென்று விழித்தபடி கேட்க அவனுக்கு சுள்ளேன்று கோபம் தலைவரைக்கும் ஏறியது.
“என் அம்மாகிட்ட என்ன சொன்னீங்க ஹேமா” என்றதும், “அத்தைகிட்ட..” என்றவள் தொடங்கும்போது, “ஏய் யாருக்கு யார் அத்தை? இன்னொரு முறை என்னோட அம்மாவை அத்தைன்னு சொன்ன?” என்றவன் டேபிளில் குத்தியதும் அவள் பயத்தில் இரண்டடி பின்னே நகர்ந்தாள்.
“இன்னொரு முறை இந்த எண்ணத்துடன் நீ ஆபீசிற்கு வரதே. இந்தா உன்னோட ரிசைனிங் லெட்டர்” என்று அவளின் முகத்தில் பேப்பரை கிழித்து வீசியவன் தன் ஆடிட்டருக்கு அழைத்து அவளின் கணக்குகளை முடித்து அனுப்ப சொன்னான்.
அவள் சென்ற சில நிமிடங்களில் தன்னை நிலைபடுத்திகொண்டு அமர்ந்து மற்ற வேலைகளை கவனித்தவன் இரவு வீட்டிற்கு கிளம்பினான்.
“டேய் வாடா இன்னைக்கு சரக்கடிக்க பாருக்கு போகலாம்” சிவா போன் பண்ண அவனோ வேண்டா வெறுப்புடன் அவன் சொன்ன இடத்திற்கு சென்றான். ஆண் பெண் பேதம் இல்லாமல் டிஸ்கொத் என்ற பெயரில் எல்லோரும் கலாச்சாரத்தை சீரழித்து கொண்டிருந்தனர்.
அவன் உள்ளே நுழையும்போது அங்கிருந்த ஒரு டேபிளில் அமர்ந்து மூச்சு முட்டும் அளவிற்கு சரக்கடித்துவிட்டு கண்களில் போதையுடன் அமர்ந்திருந்தவனின் எதிரே சென்று அமர்ந்தான் ஆதித்யா .
“என்ன சிவா செம போதை போல” என்றதும் போதையுடன் நிமிர்ந்தவன், “மச்சி எனக்கு லவ் செட் ஆகிருச்சு. சிந்து லவ்க்கு ஓகே சொல்லிட்டாடா” சந்தோசத்துடன் சொல்ல இவனுக்கு கோபம் வந்தது.
சிவா சிந்துவை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்க கொல்கத்தா வந்திருந்தான். அவள் சம்மதம் சொல்லவில்லை என்றதும் அவள் முன்னே பல பெண்களுக்கு லவ் ப்ரபோஸ் பண்ணிவிட்டு கவலையை மறக்க குடித்துவிட்டு ஊரை சுற்றுகிறான்.
“எத்தனை பொண்ணுங்க கிட்டத்தான் லவ் பிரபோஸ் பண்ணுவடா” அவன் எதிர் கேள்வி கேட்க இரண்டு கைகளையும் விரித்து அவனிடம் காட்டிய சிவா குழப்பத்துடன், “சிந்து ஓகே சொல்ற வரை எத்தனை பொண்ணுக்கு வேண்டுமானாலும் ப்ரபோஸ் பண்ணலாம். யாரு வேண்டான்னு சொல்ல போறா” என்றான் சிந்தனையுடன் டேபிளில் சரிந்தபடி.
இவனை எல்லாம் என்னதான் செய்வதோ என்ற கோபத்தில் விழிமூடி திறந்தவன் நண்பனை அழைத்துக்கொண்டு அவனின் ப்ளாட்டில் இறக்கிவிட்டுவிட்டு நிமிரும் போது, சிவா போதையில் அவனின் மீது சரக்கை முழுவது நண்பனின் சட்டையில் ஊற்றிவிட்டான். அதெல்லாம் பெருசு பண்ணாமல் வீடு வந்து சேர்ந்தான்.
கம்பீரமாக இருந்த வெள்ளை மாளிகையின் போர்டிகோவில் அவனின் பிளாக் கலர் ஆடி கார் வழுக்கிக்கொண்டு சென்றது. அதுவரை மகனுக்காக காத்திருந்த மஞ்சுளா காரின் சத்தம்கேட்டு வாசலுக்கு விரைந்தார். அவன் காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழையவும், மஞ்சுளா வாசலுக்கு வரவும் சரியாக இருந்தது.
மகனின் மீது வீசிய மது வாடையில் முகம் சுளித்தவர், “ஏன்டா இப்படி பண்ற?” என்றவர் தலையில் அடித்துக்கொண்டு சென்றார். தாயின் தோற்றம் கண்ணைவிட்டு மறையும் வரை கற்சிலைபோல நின்றவன் விழிமூடி திறந்தவன் தன் அறைக்குள் சென்று மறைந்தான்.
தன் மீதிருந்து வந்த போதை வாசனை அவனுக்கு குடலைப் பிரட்டிவிட குளியலறைக்குள் சென்றவன் ஷவரைத் திறந்துவிட்டு அதன் அடியே நின்றான். அவன் குளித்துவிட்டு வெளியே வரும்போது மணி பதினோரு மணியை தொட்டது.
தன் அலைமாரியை திறந்து அவளின் போட்டோவை எடுத்தவன் அவளின் தோற்றத்தை ரசித்தபடி, “அம்மா நினைக்கிற மாதிரி நான் குடிக்கவே இல்லடா. சும்மா அம்மாவிற்காக நடிச்சேன்” என்று அந்த போட்டோவிடம் மனம் திறந்து பேசினான்.
அவள் சிரித்த முகமாக இருப்பதைப் பார்த்து, “சீக்கிரம் வாடி பொம்மு. இன்னும் என்மேல் உனக்கு நம்பிக்கை வரவில்லையா? இன்னும் எத்தனை வருஷம் என்னை தவிக்கவிட போற” என்று சிரித்தபடியே கேட்டவன் அவளின் புகைப்படத்தை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்தபடி படுக்கையில் சரிந்தான்.
“இன்னைக்கு அந்த ஹேமா என்னை லவ் பண்றதாக அம்மாவிடம் சொல்லியிருக்கிற பொம்மு. அதை அம்மா என்னிடம் சொன்னபோது என்னால கோபத்தை கன்ரோல் பண்ண முடியலடி. அதன் அவளை வேலையைவிட்டு அனுப்பிட்டேன்” என்றவன் தன்னறையில் அவளின் போட்டோவுடன் பேசிக் கொண்டிருந்தான். அவன் எப்படி உறங்கினான் என்று அவனுக்கே தெரியாது.
கொல்கத்தாவில் பிரபலமான நிறுவனத்தில் ஒன்று ஆதி கன்ஸ்ட்ரக்ஷன். ஆதித்யா கொல்கத்தாவில் நம்பர் ஒன் பிஸ்னஸ்மேன் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்திருந்தான் இருபத்தி ஐந்து வயதில் அனைவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு அவன் முன்னணிக்கு வர ஒரே காரணம் அவள் மட்டுமே.
இன்றும் அவன் தொழிலில் தோல்வியை சந்தித்து இல்லை. அவளிடம் மட்டுமே பலமுறை தோற்று போயிருக்கிறான். அவனின் சந்தோஷம் அனைத்தும் அவளிடம் மட்டும் சிறைபட்டு இருக்கிறது. தாயிடம் கூட உண்மையை சொல்லாத பல உண்மைகள் அவனின் உள்ளத்தில் புதையுண்டு கிடக்கிறது.