idhayam – 10

idhayam – 10

அத்தியாயம் – 10

அபூர்வாவிற்கு பிறந்தநாள் என்பதால் குட்டி சப்ரைஸ் கொடுக்க நினைத்த சக்தி இரவு ராகவ், ரக்சிதா, சஞ்சனா மூவரையும் தனியாக அழைத்தான்.

“என்ன சக்தி இந்த நேரத்தில் எங்களை எல்லாம் எதுக்கு வரசொன்ன” என்று ராகவ் அவனிடம் காரணத்தைக் கேட்க ரக்சிதாவும், சஞ்சனாவும் ஒருவரையொருவர் பார்த்துகொண்டு நின்றனர்.

“நாளைக்கு அக்காவுக்கு பிறந்தநாள் ராகவ். அது தான் நைட் கேக் கட் பண்ண எல்லா ஏற்பாடும் பண்ண உங்களையும் கூப்பிட்டேன்” என்றவன் சொல்ல, “வாவ்” என்றாள் ரக்சிதா.

“நான் கேக் ரெடி பண்ணவா” என்றவள் ஆர்வமாக கேட்க, “இல்ல ரக்சிதா நான் கடையில் கேக் வாங்கிட்டு வந்துட்டேன்” என்றவனை அவள் முறைக்க அவனோ வேறு திசையைப் பார்த்தான்.

சக்தி ராகவிடம் தன் பிளானை சொல்ல பெண்கள் இருவரும் அவர்களுக்கு உதவியாக காலத்தில் இறங்கினர். 

பேனில் பலூன் கட்ட ஏறிய ராகவ், “பூவும் காற்றும் சேரும்போது வாசம் வருகிறது” என்று ராகவ் பாட்டு பாடியபடியே அந்த அறையை அலங்கரிக்க அவனின் பாடலைக் கேட்க முடியாமல் பொங்கிவிட்டாள் சஞ்சனா.

“டேய் குரங்கே எதுக்கு இப்படி நடுராத்திரியில் பாடி ஊரில் தூங்கும் பிசாசுகளை எல்லாம் அலாரம் வெச்சு எழுப்பிற” என்று அவனோடு சண்டைக்குப் போனாள்.

தங்கை அவனுடன் சண்டைக்கு போவதைப் பார்த்தும், “சஞ்சு என்னடா அவன் தூக்கம் போறதுக்காக பாட்டு பாடியபடி வேலை செய்யறான்” என்று ரக்சிதா அவளின் கோபத்தை குறைக்க முயன்றாள்.

அதற்கும் அவனையே முறைத்தவளோ, “இவன் பாடுவது பாட்டா அக்கா? உனக்கு என்ன காது செவிடாக ஆகிருச்சா? நல்ல பாட்டை கொலை பண்றான் அவனுக்கு நீ சப்போர்ட் பண்ற” என்றவள் பக்கத்தில் இருந்த கத்திரிகோலை கையில் எடுப்பதைக் கண்டு அரண்டுவிட்டான் ராகவ்.

“ரக்சி உன் தங்கச்சி கையில் இருக்கும் அந்த கத்திரிக்கோலை முதலில் பிடுங்கு” என்றவன் பயத்துடன் சேரில் நின்றவனைக் கண்டு ரக்சிதாவிற்கு சிரிப்பு வந்தபோதும் தங்கையிடமிருந்து லாவகமாக கத்திரிக்கோலை வாங்கிவிட்டாள்.

“அம்மாடியோ இவ எடுத்த வேகத்தில் வீசி இருந்தா என் நிலைமை” என்று நினைத்து பார்த்த ராகவ் தலையை குலுக்கி தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்தான்.

அவர்கள் பேசியபடியே அபூர்வாவின் பிறந்தநாளிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட வீட்டில் இருந்த பெரியவர்களை அழைக்க சென்ற சக்தி இறுதியாக அப்பா, அம்மாவை அழைக்க அவர்களின் அறைக்கு வந்தவன் எதிர்பாராத விதமாக ரோஹித் – மது பேசியவதை கேட்க நேர்ந்தது.

தன் கணவனோடு தோளில் சாய்ந்து அமர்ந்தபடி, “நாளைக்கு பொழுது விடிஞ்சா அபூர்வாவிற்கு பிறந்த நாள் ரோஹித். அவளை நேற்றுதான் மகளாக கையில் வாங்கியது போல இருக்கு அதுக்குள் இருபது வருஷம் ஓடியே போயிருச்சு” என்றாள்.

“ம்ம் ஆமா மது..” மனைவியின் மனமறிந்து அவளின் தலையை மெல்ல வருடிக்கொடுக்க, “அன்னைக்கே அந்த சொத்துகளை எல்லாம் அனாதை ஆசிரமத்திற்கு எழுது வைக்க சொல்லியிருந்தா இன்னைக்கு அபூர்வாவை நம்ம மகள்னு உரிமையாக சொல்லி இருக்கலாமே ரோஹித்..” என்ற மது தன்னையும் அறியாமல் அழுதுவிட்டாள்.

அவளின் மனநிலையை ரோஹித்தினால் உணர முடிந்தாலும், “ஷ்.. மது இப்பவும் அவ நம்ம மகள்தான். என்னைக்கும் பெத்த பாசத்தைவிட வளர்த்த பாசம் பெருசு கண்ணம்மா” என்று மகளை நினைத்து மனதிற்குள் வருந்தினாலும் அதை குரலில் கூட வெளிக்காட்டாமல் பேசிய கணவனை கண்ணீரோடு ஏறிட்டாள் மது.

“உங்களால் மட்டும் எப்படிங்க முடியுது? எவ்வளவு பெரிய வலி தெரியுமா? விடிஞ்சா கோர்டில் இருந்து எல்லோரும் வந்து நிற்பாங்க. அவகிட்ட எப்படி நான் உண்மையை சொல்ல போறேனோ எனக்கே தெரியலங்க. அவளோட உயிருக்கு ஆபத்து வந்ததை எல்லாம் முறியடித்து அத்தனை அவமானத்தையும் அவளுக்காக ஏத்துகிட்டு அமைதியாக இருந்தேங்க. இன்னைக்கு என்னால சுத்தமா முடியலங்க” என்று புலம்பிய மதுவின் முதுகை வருடியபடியே மெளனமாக இருந்தார் ரோஹித்.

மது சொல்வது போலவே அன்றே அந்த சொத்தை வேண்டாம் என்று சொல்லியிருக்கலாமோ என்ற சிந்தனை ஒருப்பக்கம் ஓடினாலும், அவளுக்கு நல்ல  குடும்ப சூழலை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம் என்பது மனதின் காயத்திற்கு மருந்தாக மாறியது.

மது நீயே இப்படி உடஞ்சுபோய் உட்கார்ந்திருந்தா மற்றவங்களைப் பற்றி யோசிச்சுப் பாரு? அபூர்வா நம்ம மகளாக வளர எவ்வளவு போராட்டத்தை சந்திச்சு அப்புறம்தானே கல்யாணம் பண்ணினோம்” என்று மனைவியை தேற்றினார் ரோஹித்.

இதெல்லாம் யாராவது கேட்டால் என்ன நடக்குமென்று இருவருமே யோசிக்கும் மனநிலையில் இல்லை. அதே நேரத்தில் தாய்  தந்தை பேசியதைக்கேட்டு மனம் உடைந்த நிலையில் நின்றிருந்தான் சக்தி.

விவரம் தெரிந்த நாளில் இருந்து தன்னை அம்மா  ஸ்தானத்தில் இருந்து தன்னை அரவணைத்துக் கொண்டவளின் அன்பை நினைத்து கலங்கியது சக்தியின் உள்ளம். சின்ன வயதில் அவளின் கரம்பிடித்து நடந்தது முதல் இன்று வரை தனக்கு தேவையான அனைத்தையும் யாருடைய உந்துதலும் இல்லாமல் உண்மையான பாசத்துடன் செய்யும் தமக்கையின்  முகம் அவனின் மனதில் வந்து போனது.

அவன் இடிந்துபோய் நின்ற நிலையில் அவனின் கரங்களைப் பிடித்தது மற்றுமொரு தளிர் கரம். அவன் தன்னை சமாளித்துக்கொண்டு நிமிர்ந்து பார்க்க அங்கே நின்றிருந்தாள் அபூர்வா.

என்ன சொல்வதென்று தெரியாமல் அவன் தடுமாற, “ஷ்..” என்று வாய்மீது விரல்வைத்து சைகை செய்த அபூர்வா அறையின் உள்ளே எட்டிப்பார்க்க ரோஹித் – மது இருவரும் பால்கனியை நோக்கி செல்வதைக் கண்டு பெருமூச்சுடன் அவனை இழுத்துக்கொண்டு தன்னறைக்கு சென்றாள்.

அவளின் அறைக்குள் நுழைந்த மறுகணமே, “அக்கா அம்மாவும் அப்பாவும் சொல்வதெல்லாம் உண்மையா? அப்போ நீ என்னோட பிறக்கவே இல்லையா?” என்று கேட்டதும் அவளுக்கு மனம் வலித்தபோதும் அதை வெளிகாட்டாமல் கற்சிலைபோல நின்றாள்.

சக்தி மனம் தாளாமல் அழுக அவன் அழுது ஓய்ந்து அமரும் வரை அவள் அந்த இடத்தைவிட்டு ஒரு அடிகூட நகரவில்லை. தன் வந்த வேலையை மறைந்தவனாக கண்ணீரோடு படுக்கையின் விளிம்பில் சாய்ந்து அமர்ந்து அழுபவனை கண்டு அவளுக்கு பாவமாக இருந்தது.

குழந்தையின் கையில் விளையாட்டு பொம்மையைக் கொடுத்து அது நன்றாக பொம்மையுடன் பழகிடும் தருணத்தில் அதை சுக்குநூறாக உடைத்து வீசியது போது குழந்தையின் கதறல் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது சக்தியின் அழுகை.

அவன் அழுகை ஓய்ந்தவுடன் தண்ணீரை எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள் பெரியவள். அவனும் மறுப்பு சொல்லாமல் வாங்கிக் குடித்துவிட்டு அப்படியே அமர்ந்திருந்தான். அபூர்வாவை பற்றிய உண்மை அவனின் மனதை காயமடைய செய்திருக்க தன்னிலையைப் பற்றி கூறவே முடியாமல் மௌனித்து அமர்ந்திருந்தான்.

சக்தியின் அருகே அமர்ந்த அபூர்வா அவனின் முடியை மெல்ல கோதிவிட்டு, “சக்தி சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும். அதுக்காக இப்படி உட்கார்ந்திருந்தா யாருக்கு என்னடா இலாபம்..” என்று இலகுவாக கேட்டவளை அவன் முறைத்தான்.

“இத்தனை வருசமாக அக்கான்னு சொன்னவளை இப்போ இல்லன்னு சொன்னா எப்படி வலிக்கும்னு உனக்கு தெரியுமா” என்றவன் எரிச்சலோடு அவளிடம் சண்டைக்கு வந்தான்.

“அப்பாவும், அம்மாவும் அவங்களுக்குள்ளே தானே பேசிகிட்டாங்க. உன்னிடம் வந்து அபூர்வா உன்னோட அக்கா இல்ல. இனிமேல் நீ அவளை சொந்தம் கொண்டாட கூடாதுன்னா சொன்னாங்க” என்றவள் அவனுடன் சரிக்கு சரி சண்டைக்கு நிற்க அவனோ அவளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திருதிருவென்று விழித்தான்.

திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல விழிக்கும் தன் தம்பியைப்  பார்த்து அவளுக்கு சிரிப்பு வந்துவிட, “டேய் சக்தி என்னைக்கு யார் வந்து என்ன சொன்னாலும் நான் உன் அக்கா என்ற உறவில் மாற்றமே வராதுடா” என்றவள் அவனை சமாதானம் செய்ய அவனின் மனதிலும் நிம்மதி பரவியது.

அப்போது தான் தமக்கையின் பேச்சில் இருந்து ஒரு விஷயத்தை தெளிவாக உணர்ந்தான். அதை மனதிற்குள்  வைத்து புலம்பாமல் அதை நேரடியாக அவளிடம் கேட்டான்.

“அக்கா உனக்கு எப்படி இந்த உண்மையெல்லாம் தெரியும்?” என்றவன் பட்டென்று கேட்டுவிட இப்போது அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல் திருதிருவென்று விழிப்பது அவளின் முறையானது.

அபூர்வா அமைதியாக இருப்பதைக் கண்டு அவன் சிந்தனையுடன் அவளை ஏறிட, “தாத்தா பாட்டி வீட்டில் படிக்கும்போது இந்த உண்மையை தெரிஞ்சிகிட்டேன் சக்தி” என்றவளின் விழிகள் தானாக மூடிக்கொள்ள அதற்குள் வந்து சிரித்தது அவனின் உருவம்.

அவனின் வரவு எதற்காக என்று புரியாமல் குழப்பத்தில் இருந்த நாட்கள் எல்லாம் மனதிற்குள் படமாக ஓடிட அவளைப்பற்றிய உண்மைகள் தெரிந்துகொள்ளவே அவன் தன் வாழ்வில் குறிக்கிட்டானோ என்ற சிந்தனையுடன் இருந்தவளைக் கலைத்தது ராகவின் குரல்.

“சக்தி” என்றவனின் அழைப்பில் அவள் பட்டென்று விழிதிறந்து தம்பியைக் கேள்வியாக நோக்கினாள்.

“அக்கா கொஞ்ச நேரத்தில் நான் வந்த வேலையை மறந்துட்டேன்” அவன் வேகமாக அங்கிருந்து வெளியே செல்ல, “டேய் நடுராத்திரியில் என்னடா உனக்கு முக்கியமான வேலை” குழப்பத்துடன் செல்லும் அவனை கேள்வியாக நோக்கியபடி நின்றிருந்தாள்.

“ஷ்.. சத்தம் போடாமல் போய் தூங்குக்கா” என்று அவளை மிரட்டிவிட்டு புன்னகையுடன் நகர்ந்தவனை புரிந்து கொள்ளாமல் முடியாமல், “கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி குழந்தை மாதிரி இருந்தான். இப்போ என்னையே மிரட்டிட்டு போறான்” என்று தனக்கு தானே பேசியபடி பால்கனிக்கு சென்ற அபூர்வாவின் மனதில் அவனின் உருவமே வந்து சென்றது.

‘பன்னிரண்டு வருஷத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ கொடுத்து காதலை சொல்லும் பொழுதே புரியலையா என்னோட காதல் அபூர்வமானதுஅவன் கண்சிமிட்டி சொன்னது இன்றும் அவளது நினைவில் நின்றது. அவனின் நினைவு ஒருபுறம் அவளை கலங்க வைக்க படுக்கையில் விழுந்து விழி மூடினாள் அபூர்வா.

சக்தி அபூர்வாவின் அறையிலிருந்து வருவதைக் கண்ட ராகவ், “சக்தி சர்பிரைஸ் என்பது சொல்லாமல் செய்வதுடா. நீ என்னன்னா அக்காவை எழுப்பி ஒரு முறை சொல்லிட்டு வந்துட்டியா” என்றவன் கிண்டலோடு கூற அதுவரை மனதை அழுத்திய குழப்பங்கள் நீங்க வாய்விட்டு சிரித்தான்.

“நீ சொல்றது கூட நல்ல இருக்கே. இரு நான் அக்காவை எழுப்பி ஒரு முறை பர்த்டே விஷ் பண்ணிட்டு வரேன்” என்று உள்ளே செல்ல  திரும்பியவனை இழுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் ராகவ்.

“கொஞ்சமாவது உனக்கு அறிவு இருக்காடா” அவன் போட்ட சத்தத்தில்  ரோஹித் – மது இருவரும் தன்னறையில் இருந்து வெளியே வந்து எட்டிப் பார்த்தனர்.

இருவரும் தூங்காமல் நிற்பதைக் கண்டு, “ராகவ் இந்நேரத்தில் இங்கே நின்று யாரைக் கவிழ்க்க திட்ட போட்டுட்டு இருக்கீங்க” என்று ரோஹித் குரல்கேட்டு ஆட்டை திருடி மாட்டிகொண்டவன் போல விழியை உருட்டினான் ராகவ்.

அவனின் முழியைக் கண்டு, “என்னடா இப்படி முழிக்கிற. வா போய் அப்பா, அம்மாவிடம் உண்மையைச் சொல்லலாம்” என்று சொல்ல, “நான் வர மாட்டேன் பெரியப்பா திட்டுவாரு” என்று அவனிடமிருந்து கையை உருவிக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தவனைக் கண்டு சக்தி வாய்விட்டு சிரித்தான்.

அதற்குள் மகனின் அருகே வந்த ரோஹித் – மது இருவரும், “என்ன நடக்குது” என்று புரியாமல் கேட்க, “அப்பா அக்கா பிறந்தநாளுக்கு ஏற்பாடு பண்ணிட்டு இருந்தோம். அது உங்களுக்கு தெரிஞ்சா திட்டுவீங்க என்று பயபுள்ள இந்த ஓட்டம் ஓடுறான்” இவன் வாயைக்கொண்டே அவன் வசமாக மாட்டிக் கொண்டான்.

ரோஹித் மகனை முறைக்க, ‘உன் வாய் தான் உனக்கு முதல் எதிரி. பக்கி தெரிஞ்சுதான் ஒரே ஓட்டமாக ஓடிபோயிட்டானோ? இந்த அளவுக்கு அறிவு உனக்கு இல்லடா சக்தி’ என்று மனதிற்குள் புலம்பியவன் அப்பாவைப் பார்த்து அசடுவழிய சிரித்து வைத்தான்.

யாரோட பிறந்தநாள் என்றாலும் இரவு தூக்கத்தைக் கெடுத்து எந்த ஏற்பாடும் செய்யக்கூடாது என்பது அந்த வீட்டில் எழுதபடாத விதி. ஆனால் அதை சக்தி மட்டும் இன்றளவும் கேட்டதில்லை.

அபூர்வாவின் பிறந்த நாளுக்கு மட்டும் அவன் இப்படியெல்லாம் செய்வான். ரோஹித் – மதுவின் சொல்பேச்சை இதில் மட்டும் அவன் கேட்டதில்லை. மற்றபடி ரொம்ப நல்ல பிள்ளை.

“இரவு தூக்கம் முழுச்சு பர்த்டே விஷ் பண்ணனும்னு யாராவது சொல்லிருக்காங்களா” என்று மதுமிதா மகனிடம் கேட்க அவனோ மெளனமாக நின்றிருந்தான்.

அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லமாட்டான் என்ற உண்மையை உணர்ந்து, “நீயெல்லாம் திருந்தாத கேஸு. போ போய் உங்க அக்காவைக் கூட்டிட்டு வா” என்றார் ரோஹித்.

ரோஹித்திடம் தப்பித்து ஓடிவந்தவன் தெரியாமல் ரக்சிதாவின் மீது மோதிக்கொள்ள, “ஏய் பிசாசே எதுக்கு இப்படி ஓடிவர” என்றவள் அவனின் முதுகில் செல்லமாக ஒரு அடியைப் போட்டாள்.

“பெரியப்பா திட்டுவதற்கு வந்தாரா அவரிடம் சிக்காமல் ஓடி வந்துட்டேன்” என்று காலரைத் தூக்கிவிட்டவனை முறைத்த சஞ்சனா, “பயந்தகோழி மாதிரி ஓடிவந்துட்டு பந்தாவைப் பாரு” என்று கோபத்துடன் முகத்தை திருப்பினாள்.

ரஞ்சித் – கீர்த்தி, ஜீவா – கயல்விழி மற்றும் ரோஹித் – மதுமிதா எல்லோரும் வருவதைக் கண்டு சின்னவர்கள் கப் சிப் என்று அமைதியாகிவிட அபூர்வாவின் அறைக்கு சென்று, “அக்கா கேக் கட் பண்ண போலாமா” அவளின் கண்களை மூடியபடி அழைத்து வந்தான் சக்தி.

அவளின் முன்னாடி கேக்கை கொண்டுவந்து ரக்சிதா வைக்க விழியைத் திறந்தவன் நகர்ந்து நின்று, “ஹாப்பி பர்த்டே அபூர்வா” என்றதும் அவள் சுற்றிலும் பார்வையை சுழற்றினாள். அந்த அறை முழுவதும் எரிந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வெள்ளிநிலவு போல நின்ற மகளைப் பார்த்து பூரித்தது தாயின் உள்ளம்.

ஒரு நிமிடத்தில் தன்னை பிரமிக்க வைத்த தம்பியைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டியவளிடம், “அபூகுட்டி சீக்கிரம் கேக் கட் பண்ணுங்க” என்று சொல்ல, “சரி இஞ்சி” என்றாள் குறும்புடன்.

அவளின் அந்த அழைப்பைக் கேட்டு, “மாமாவுக்கு மரியாதை கொடுக்கணும் என்று சொல்லிருக்கேன் இல்ல” என்று மது மகளை கண்டிக்க, “விடு மது இன்னைக்கு ஒருநாள் தானே” என்றாள் கீர்த்தி முகம் நிறைய புன்னகையுடன்.

எல்லோரும் அவளுக்கு வாழ்த்து சொல்ல கேக் கட் பண்ணி தன் தம்பிக்கு முதலில் ஊட்டிவிட்டாள் அபூர்வா. சக்தி ரக்சிதா இருவரும் கீரிமை அவளின் முகத்தில் பூசிவிட இருவரை துரத்த தொடங்கினாள் பெரியவள். பிறகு சின்னவர்கள் அமர்ந்து கதை பேச அவர்களை இனிமேல் கையில் பிடிக்க முடியாது என்று பெரியவர்கள் தான் விலகி செல்ல வேண்டி இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!