Ilamanasai thoondi vittu poravare 9
Ilamanasai thoondi vittu poravare 9
அத்தியாயம் 9
“ஐ லவ் யூ! யெஸ் யெஸ், குட் பாய்!”
அந்தி சாயும் நேரத்தில் ஜோனியை தடவிக் கொஞ்சிக் கொண்டிருந்தான் எட்வர்ட். ஜோனி தாவியும், பல்டி அடித்தும் தன் எஜமானனை குஷிப்படுத்திக் கொண்டிருந்தது. அதன் காதோரம் சொறிந்து கொடுத்தவன்,
“சொல்லு ப்ளேக்கி!” என்றான்.
“ஐ துரை! நான் பின்னால வந்து நிக்கறேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?”
ஆச்சரியம் அவள் குரலில். அவளைத் திரும்பி பார்த்தவன்,
“உன்னோட மஞ்சள் வாசம் நீ வரதுக்கு முன்னுக்கே வந்துருதே!” சொன்னவன் கண்களில் சிரிப்பு இருந்தது.
“அது கஸ்தூரி மஞ்சள். சின்ன புள்ளையில இருந்து அத பூசி தான் ஆத்தா குளிப்பாட்டும். அப்போ தான் சொறி புடிக்காது துரை. உங்களுக்கும் எடுத்து வந்து தரவா?”
“அப்போ எனக்கு சொறி புடிச்சிருக்குன்னு சொல்லுறியா ப்ளேக்கி?” என அவளை வம்பிழுக்க கேட்டான் எட்வர்ட்.
“ஐயோ துரை! நான் எப்ப அப்படி சொன்னேன்? அப்படியே சொறி பிடிச்சாலும் நான் சொறிஞ்சி விடறேன்” அவசரமாக தலையாட்டி சொன்னாள் சுப்பு.
அவள் செய்கையில் வாய் விட்டு சிரித்தான் எட்வர்ட். அவன் சிரிப்பதையே வாய் பிளந்துப் பார்த்திருந்தாள் சுப்பு. இவ்வளவு நாட்களில் அவன் தன்னை மறந்து சிரிப்பதை இப்பொழுது தான் பார்க்கிறாள்.
“துரை எவ்வளவு அழகா சிரிக்கிறீங்க! கன்னத்துல குழி விழுகுதே” அவனது நெஞ்சளவில் தான் சுப்புவின் தலை இருக்கும். அவன் கன்னத்து குழியைத் தொட்டு பார்க்க எம்பினாள் அவள்.
“தொடக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல!” மிரட்டலாக சொன்னான்.
முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டாள்.
“இப்பலாம் உனக்கு அடிக்கடி கோபம் வருது ப்ளேக்கி! முன்னுக்கு திரும்பு!”
எப்பொழுதும் போல தலையாட்டல் மட்டும் வந்தது.
“ரொம்ப பிடிவாதம் வேற!” இன்னும் திட்டினான்.
அப்படியே தான் நின்றிருந்தாள்.
“இப்போ திரும்பறியா இல்ல ஜோனிய விட்டு கடிக்க சொல்லவா?”
‘நான் ரெடி பாஸ்’ என்பதைப் போல பல்லைக் காட்டியது ஜோனி.
“இல்ல, இல்ல வேணா துரை” முன்னால் திரும்பி அவன் கையைப் பிடித்துக் கொண்டாள் சுப்பு.
“இனிமே அடிக்கடி எனக்கு முதுக காட்டுவியா?”
“மாட்டேன்!”
“பேசாம இருப்பியா?”
“மாட்டேன்”
காயம் ஆறி கன்னத்தில் சின்னதாக தெரிந்த தழும்பை தடவிக் கொடுத்தவன்,
“மழை வர மாதிரி இருக்கு. உள்ள போ ப்ளேக்கி” மென்மையாக சொன்னான்.
தலையாட்டியவள் உள்ளே ஓடிப் போனாள். திருவிழா சம்பவம் நடந்து பல நாட்கள் ஓடியிருந்தன. சுப்பு மேல் கை வைத்தவனுக்கு கூட கருமாதி முடிந்திருந்தது.
அன்று சிராய்ப்புக் காயங்களோடு இருந்தவளுக்கு மருந்திட்டு படுக்க அனுப்பினான் எட்வர்ட். நடு இரவில் மனம் கேட்காமல் எழுந்து அவளைப் பார்க்க வந்தவனை அவளது அணத்தல் சத்தம் தான் வரவேற்றது. சுப்புவை நெருங்கி நெற்றியில் கை வைத்துப் பார்த்தான், அனலாய் கொதித்தது. ரூமுக்குள் ஓடி சென்று மருந்துப் பெட்டியை எடுத்து வந்தான். அதனுள்ளே இருந்த கிளாஸ் தர்மாமீட்டரை எடுத்தவன், சுப்புவை அசைத்து எழுப்பினான். கண்களைக் கூட திறக்க கஸ்டப்பட்டவளை தன் மீது சாய்த்துக் கொண்டு, வாயைத் திறந்து நாக்கடியில் தர்மாமீட்டரை வைத்தான் எட்வர்ட். சிறிது நேரம் கழித்து எடுத்துப் பார்க்க உடல் சூடு எக்கசக்கத்துக்கும் எகிறி இருந்தது. யோசனையாக நெற்றியைத் தேய்த்துக் கொண்டான் அவன்.
இந்த சூட்டுக்கு ஊசி போட்டால் சட்டென காய்ச்சல் இறங்கும். மருந்து என்றால் சில மணி நேரங்களுக்கு ஒரு தடவைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். சுப்பு உதடு நடுங்க ஊசி வேண்டாம் என சென்னதை நினைத்துப் பார்த்தவனுக்கு, இரண்டாவது வழியையே செயல் படுத்தலாம் என தோன்றிவிட்டது.
நாடு தாண்டி, வசதி இல்லாத நாடுகளை ஆள வரும் இவனைப் போல பிரிட்டிஷ்காரர்கள் தங்களையும் தங்கள் குடும்பங்களையும் பாதுகாக்க கொஞ்சமாவது மருத்துவ ஞானத்தை வளர்த்து வைத்திருப்பார்கள். நமக்கு அந்தக் காலத்தில் கிட்டாத மருந்து மாத்திரைகளும் இவர்கள் கைவசம் இருக்கும்.
அவள் கன்னம் தட்டி எழுப்பி மாத்திரை ஒன்றை வாயில் போட்டு தண்ணீரை புகட்டினான். அப்படியே படுக்க வைத்தவன், அவனது ரூமுக்கு ஓடி இரு போர்வைகளை எடுத்து வந்தான். கீழே ஒன்றை விரித்து, அவளைத் தூக்கி அதன் மேல் படுக்க வைத்தான். பின் சின்ன துண்டை நனைத்து அவள் நெற்றியில் வைத்தவன், இன்னொரு போர்வையை போர்த்தி விட்டான். இவ்வளவு நேரமும் கண்களை மூடியே இருந்தவள் அவன் மீண்டும் எழவும் கைகளைப் பற்றிக் கொண்டாள்.
“துரை, இங்கயே இருங்க! எனக்கு பயமா இருக்கு!” மெல்லிய குரலில் முனகினாள்.
“உன் கூட தான் இருப்பேன். கண்ணு கூசுதுல, லைட்டை சாத்திட்டு வரேன் ப்ளேக்கி” மென்மையாக சொன்னான்.
மீண்டும் வந்து அவள் அருகில் அமர்ந்தவன் கையைப் பிடித்துக் கொண்டாள் சுப்பு. ஒருக்களித்துப் படுத்திருந்தவள், தன் இரு கரங்களாலும் அவன் கையைப் பிடித்து அணைத்தப்படி நெஞ்சில் வைத்துக் கொண்டாள்.
‘என்னை தொடாதே ப்ளேக்கி!’ மனதில் மட்டுமே சொல்லிக் கொண்டான் எட்வர்ட்.
அன்று இரவு முழுக்க தூங்காமல் அவளுக்கு மருந்துக் கொடுத்து, நெற்றியில் துண்டை நனைத்து வைத்து என அவள் அருகிலேயே அமர்ந்திருந்தான் அவன். விடிகாலையில் பட்டு வருவதற்குள் தனது அறைக்குள் நுழைந்துக் கொண்டான். அதன் பிறகு பட்டு அவளைக் கவனித்துக் கொண்டார்.
இரண்டு நாட்களுக்கு காய்ச்சல் படுத்தியது அவளை. பகலில் பட்டுவும் பவுனுவும் கவனித்துக் கொள்ள இரவில் எட்வர்ட் பார்த்துக் கொள்வான்.
“ஏ புள்ள, அன்னைக்கு துரை உனக்கு காசு குடுத்தாருன்னு பவுனு சொன்னாளே, நெஜமா?”
காய்ச்சலில் படுத்திருந்த சுப்புவுக்கு கஞ்சி கொடுத்துக் கொண்டே கேட்டார் பட்டு.
தலையை ஆமென ஆட்டினாள் சுப்பு.
“நீ காசு வேணும்னு கேட்டியா?”
“இல்லக்கா! துரையே தான் குடுத்தாரு”
“ஓ! அன்னிக்கு காட்டுக்குள்ள ஒன்னை அவருதான் கண்டுபிடிச்சாராம்! ஆமாவா?” தூண்டில் போட்டார்.
“ஆமாக்கா! நான் ரொம்ப அழுதனா, இப்படி கட்டிப் பிடிச்சிக்கிட்டாரு” கைகளை தன்னையே அணைத்தவாறு செய்து காட்டினாள்.
பட்டுவின் முகம் வெளிறியது.
“வேற என்னலாம் செஞ்சிருக்காரு?” கலக்கத்துடன் கேட்டார்.
நேரம் எடுத்து யோசித்தவள்,
“நாய் கடிச்சப்ப ஊசி போட்டாரு, நேத்து என் பக்கத்துல படுத்துருந்தாரு” என இன்னும் யோசித்தாள்.
“பக்கத்துல படுத்திருந்தாரா?”
“ஆமாக்கா! நான் தான் பயத்துல துரை கையப் பிடிச்சு இப்படி வச்சிக்கிட்டேனே, அப்புறம் என் பக்கத்துல தான படுக்கனும்” கஞ்சி பாத்திரத்தை வாங்கி கீழே வைத்துவிட்டு, பட்டுவின் கைப்பிடித்து தன் நெஞ்சில் வைத்துக் காட்டினாள் சுப்பு.
“ஓஹோ!”
பாக்கியத்தின் முகம் கண் முன்னே வந்துப் போனது பட்டுவுக்கு. எட்டூரை நாறு நாறாக கிழிக்கும் அவர் வாயும்தான். சுப்பு பாக்கியத்தின் ஜாதிக்கார பெண். சுப்பு மானத்துக்கு ஏதாவது ஆகினால், எட்வர்டை ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும் கூட இருந்த தங்களை வகுந்து விடுவார்கள் அந்த ஜாதியினர் என பட்டுவுக்கு நன்றாக தெரிந்தது.
‘காட்டு பசங்களாச்சே அவனுங்க! வாய் பேசற முன்னுக்கு அருவால்ல பேசும்’ குலை நடுங்கியது அவருக்கு.
பரசு ஏற்கனவே சுப்பு மேல் கை வைத்தவனை எட்வர்ட் மேலோகத்துக்கு மூட்டை கட்டி அனுப்பி இருந்ததை மனைவிகளிடம் சொல்லி இருந்தான்.
தாங்களாகவே சுப்புவை திருப்பி அனுப்ப முடியாது என்பது இவர்களுக்குப் புரிந்து இருந்தது. அவளாகவே போக வேண்டும் என அடம் பிடித்தால் மட்டுமே, அது நடக்கும் என நம்பினார் பட்டு. படிக்காவிட்டாலும் பெண்களுக்கான சூட்சும புத்தி இருந்தது அவருக்கு.
“சுப்பு! உனக்கு உங்க ஆத்தாவ பார்க்கனும்னு ஆசை இல்லையா புள்ள?”
“ஆமா பார்க்கனும் அக்கா. தங்கச்சிங்க நினைப்பாவே இருக்கு. ஆனா நான் இன்னும் வயசுக்கு வரலியே! வந்தாதானே வீட்டுக்கு கூட்டி போறேன்னு ஆத்தா சொன்னுச்சு”
“அதெல்லாம் இன்னும் ரெண்டு வருஷம் ஆகும். அது வரைக்கும் ஆத்தாவ பார்க்காம இருப்பியா?”
“ரெண்டு வருஷம் ஆகுமா?” கண் கலங்கியது அவளுக்கு.
“இன்னிக்கு துரைகிட்ட, வீட்டுக்கு போக போறேன்னு கேளு. முடியாதுன்னு சொன்னாருன்னா, அடம் பிடிச்சு அழ ஆரம்பிச்சிரு. போக சொல்லிருவாரு.”
“சரிக்கா”
இரவில் அவளுக்கு மருந்து கொடுத்து விட்டு அருகில் அமர்ந்தவன் கையைப் பிடித்துக் கொண்டாள் சுப்பு.
“என்ன ப்ளேக்கி? என்ன வேணும்?”
“நான் எங்க வீட்டுக்குப் போறேன் துரை”
அமைதியாக அவள் முகத்தையே கூர்ந்து பார்த்தான் எட்வர்ட்.
“ஏன் திடீர்னு?”
“ஆத்தாவ பார்க்கனும், தங்கச்சிங்கள பார்க்கனும். அவங்க நினைப்பாவே இருக்கு துரை”
“ஓ!”
“போகவா துரை?”
“நீ வயசுக்கு வந்தா தான், வந்து கூட்டிட்டுப் போவாங்கன்னு சொன்னியே ப்ளேக்கி!”
“அதுக்கு இன்னும் ரெண்டு வருஷம் ஆகும்! அது வரைக்கும் நான் எப்படி அவங்கள பார்க்காம இருப்பேன்?”
“ரெண்டு வருஷம் ஆகுமோ? அப்படினு யார் சொன்னா?” ஆணிவேரைப் பிடித்துக் கேட்டான்.
“அக்கா தான் சொன்னாங்க”
“நான் போக வேணாம்னு சொன்னா, என்ன செய்வ ப்ளேக்கி?”
“அடம் பிடிச்சி அழுவேன்”
“அதயும் அக்கா தான் செய்ய சொன்னாங்களா?”
“ஆமா! இல்ல, இல்ல நானே தான் சொல்லுறேன்” பேய் முழி முழித்தாள்.
அவள் தலையில் வலிக்காமல் கொட்டியவன்,
“உனக்கு பொய் சொல்ல வராது ப்ளேக்கி. அதுவும் என் கிட்ட அறவே வராது” என சொன்னான்.
“ஆமா, அக்காதான் அடம் பிடிக்க சொன்னாங்க” தலையைக் குனிந்துக் கொண்டே சொன்னாள்.
“இப்போ போக வேணாம் ப்ளேக்கி. உங்க ஆத்தா சொன்ன மாதிரி, வந்து கூப்பிடறப்ப போகலாம். சரியா?”
“சரி துரை”
சிறிது நேரம் அமைதியாக போனது.
“என்னை விட்டுட்டுப் போறதுல உனக்கு அவ்வளவு சந்தோஷமா ப்ளேக்கி?” அவளை ஆழ்ந்து பார்த்தவாறே கேட்டான் எட்வர்ட்.
“சந்தோஷம்னு யார் சொன்னா துரை? இல்லையே! நான் ஆத்தா வீட்டுக்குப் போனா கூட உங்கள நினைச்சிகிட்டே இருப்பேன். இப்போ கூட நீங்க வேலைக்குப் போயிட்டா, நீங்க எப்ப வருவீங்கன்னு வாசலையே பார்த்துட்டு இருப்பேன். துரை பக்கத்துல இருக்கறப்போ நான் இவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?” கைகளைப் பெரியதாக விரித்துக் காட்டினாள்.
அவள் சொல்வதும் நிஜம்தான். எந்த நேரத்துக்கு அவன் வீட்டுக்கு வந்தாலும், ஜீப் சத்தம் கேட்டு ஓடோடி வருவாள் சுப்பு. அவன் கையில் இருக்கும் பைல்களை வாங்கி கொண்டு போய் அவன் ரூமில் வைப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி அவளுக்கு.
“என் கூட இருக்கறப்போ ஏன் இவ்வளவு சந்தோஷம்?” அவனும் கைகளை விரித்துக் காட்டினான்.
“படம் பாக்கற பொட்டிய என்னை தொட விடறீங்களே அதனால. அப்புறம் சிவப்பு மிட்டாய் பாட்டில் எனக்கே எனக்கு குடுத்துருக்கீங்களே அதனால. அப்புறம் என்னை அழகி அழகின்னு உங்க பாஷைல கூப்புடுறீங்களே அதுக்காகவும் தான்.”
சிரிப்பு வந்தது அவனுக்கு.
“ப்ளேக்கி, ப்ளேக்கி, ப்ளேக்கி” சிரிப்புடனே கூப்பிட்டான்.
முகம் பூவாய் மலர்ந்தது அவளுக்கு.
“நான் அம்புட்டு அழகா துரை?”
“ஆமா ப்ளேக்கி! நான் பார்த்த மனுஷங்களிலேயே நீ தான் ரொம்ப அழகு. கள்ளம் கபடம் இல்லாத அழகு” மென்மையாக கன்னத்தைத் தடவினான்.
“நீங்கதான் அழகு துரை. அந்த வெள்ளை மேகம் மாதிரி அழகோ அழகு” அவளும் அவன் கன்னத்தைத் தடவினாள்.
“தொட கூடாதுனு சொல்லிருக்கேன்ல! என் கூட இருக்க சந்தோஷமா இருக்குன்னா, எப்பவும் இங்கயே இரு ப்ளேக்கி. சரியா?”
“இல்ல, இல்ல. ஆத்தா வந்து கூப்டா போயிருவேன் துரை.” கறாராக சொன்னாள்.
“கூப்பிடறப்ப பார்த்துக்கலாம். இப்ப தூங்கு” அவன் கையைப் பிடிக்க வந்தவளின் கரங்களை தட்டி விட்டான் எட்வர்ட்.
“ஏன் துரை? நேத்து மாதிரி பிடிச்சிக்கறேனே, நல்லா நிம்மதியா தூக்கம் வந்துச்சு. கை குடுங்க துரை” கெஞ்சினாள்.
முடியாது என தலையாட்டியவன்,
“நீதான் ஆத்தா வந்தா என்னை விட்டுட்டுப் போயிருவியே! அப்போ யார் கைய பிடிச்சிக்குவ?” முறுக்கிக் கொண்டான்.
கையைக் கொடுக்காததால் அந்த புறம் அவனுக்கு முதுகைக் காட்டி படுத்துக் கொண்டாள்.
“ப்ளேக்கி! சரி, சரி கோபிச்சிக்காத. இந்தா கையப் பிடிச்சிக்க”
சிரித்தபடி திரும்பியவள், அவன் கையைப் பற்றி கொண்டு தூங்கிப் போனாள். அவள் கோபித்துக் கொண்டாள், எட்வர்ட் இறங்கி வருவதை அறிந்த அந்த நாளில் இருந்து அடிக்கடி அதைப் பயன்படுத்த ஆரம்பித்தாள் சுப்பு. பல சமயங்களில் விட்டுக் கொடுப்பவன், சில சமயங்களில் மிரட்டி வைப்பான். நாளுக்கு நாள் அவர்களின் பாசம் என்பதா, நட்பு என்பதா அதிகரித்துக் கொண்டே வந்தது.
சுப்புவிடம் மூட்டிக் கொடுத்தது பட்டு என்பதை அறிந்து கொண்டவன், பரசுவை வார்த்தைகளால் பஸ்பமாக்கி இருந்தான்.
“பர்சு”
“சொல்லுங்க துரை”
“ஆத்து தண்ணி ஆழமா இருக்கா இல்லையான்னு எனக்கு சந்தேகமா இருக்கு”
‘திடீர்னு துரைக்கு எதுக்கு இந்த சந்தேகம்?’
“இப்போ உம்முன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க துரை, ஆளை இறக்கறேன் ஆத்துல. அப்போ தெரியும் ஆழமா இல்லையான்னு”
“வேற ஆள் எதுக்கு பர்சு? அதான் நீ இருக்கியே! உன்னை இறக்கிறலாமா?”
“துரை!!!” உடம்பு லேசாக நடுங்கியது பரசுவுக்கு.
“சுபூ விஷயத்துல நீயும் உன் ரெண்டு வைப்பும் ஒதுங்கி இருக்கறது தான் உங்களுக்கு நல்லது. நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா?”
முழித்தவனிடம்,
“உன் வைப் கிட்ட நான் சொன்னத சொல்லு, அவங்களுக்குப் புரியும்” என்றவன்,
“ஜீப்ப எடு பர்சு. ஆத்து பக்கம் போய் பாத்துட்டு வரலாம்” என்றான்.
“ஐயோ துரை! என்ன விட்டுருங்க. நான் புள்ளக்குட்டிக்காரன்.” காலில் விழுந்து விட்டான்.
“எழுந்திரு பர்சு! இனிமே உனக்கு குடுத்த வேலைய மட்டும் பாரு” கடுமையாக எச்சரித்தான் எட்வர்ட்.
அன்றிலிருந்து பட்டுவும், பவுனும் சுப்புவிடம் எப்பொழுதும் போல் பழகினாலும் எட்வர்டை பற்றி எதுவும் தூண்டி துருவுவது இல்லை. தங்கள் மாங்கல்யம் சுப்புவின் வாழ்க்கையைவிட முக்கியம் என தோன்றிவிட்டது அவர்களுக்கு.
இப்படியே எந்த சிக்கலும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.
நடு இரவில் அறை கதவை தட்டும் மெல்லிய சத்தத்தில் பட்டென எழுந்து அமர்ந்தான் எட்வர்ட். மேசையில் இருந்த கடிகாரம் காலை மணி இரண்டு என காட்டியது. கதவைத் திறந்த சுப்பு ஓடி வந்து எட்வர்டைக் கட்டிக் கொண்டாள். ஏற்கனவே, கண்கள் கலங்கி இருந்தது. தேம்பியபடி தன்னைக் கட்டிக் கொண்டிருக்கும் சுப்புவைத் தட்டிக் கொடுத்தான் எட்வர்ட்.
“என்னாச்சு ப்ளேக்கி?”
“துரை நான் சாக போறேன்!”
(தூண்டுவான்)