IM 12

IM 12

வீட்டுக்கு அத்தனை சீக்கிரம் மூத்தவன் திரும்புவது அவர்களின் சரித்திரத்தில் அன்றே முதல் முறை.

அமுதா வந்தவனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்க,

‘என்கிட்ட இப்ப எதைக் கேட்டாலும் பாய்ஞ்சிடுவேன் பார்த்துக்கோ’ என்ற வாக்கியம் அவன் நெற்றியில் ஒட்டப்பட்டிருப்பதை போல் உணர்ந்தார். ஆக மகனிடம் விளக்கம் எதையும் கேட்காமலும் விட்டார்!

‘ஆபிஸில் பிரச்சனையா இருக்கும், இல்லை தலைவலியோ’

உண்மையான காரணம் அந்த தாய்க்கு தலைவலி உண்டாக்க வல்லது என்பதை அவர் அறியவில்லை.

ஆனால் விவேக் எல்லாவற்றையும் அறிவான்! மயூரிக்கு அவனென்றால் உயிர் என்பதும் கூட.

ஆனாலும் இன்று நடந்தது அவனுக்கு அநியாயமாய் பட்டது.

‘தன்னை விட அவளுக்கு விஷ்ணு முக்கியமா!’

‘அவளை இன்று எப்படியாவது நேரில் கண்டுவிட வேண்டும் என்ற ஆவல் எல்லாம் தனக்கு மட்டும் தானோ. அவளுக்கு அதை போலெல்லாம் இல்லையோ! வருங்கால கணவன் என்று அவன் மீது அவளுக்கு பெரிய விருப்பமோ மரியாதையோ இல்லையோ?

அதை இத்தனை நாள் கவனிக்க தவறிவிட்டேனோ!’

அவன் கோப மனதில் வேண்டாத எண்ணங்கள் உருவெடுத்தன!

தன் தம்பிக்கு முக்கியத்துவம் தருகிறாள் என்பதை அவனால் இன்னமும் ஏனோ ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

விஷ்ணு அவளை ஹாஸ்டல் வாசலில் இறக்கிவிட்டு பழங்கள் அடங்கிய பையையும் அவளிடம் நீட்டினான்.

“கடை வைக்க போற மாதிரி எதுக்கு இத்தனையும்! நான் தான் வர வாரம் வீட்டுக்கு வரப் போறேனே விஷ்ணு!”

“சும்மா சொன்னதையே சொல்லி பிளேடு போடாதே. வாங்கினதை கடையில் திருப்பியா தர முடியும்! ஒழுங்கா சாப்பிடு இதையெல்லாம்!”

“இந்த பிடிவாதத்தில் மட்டும் அண்ணன் தம்பிக்கு இருக்கிற ஒற்றுமையை வேற யாராலையும் அடிச்சிக்க முடியாது! சரி பத்திரமா போ! பைக்கை வளைச்சி வளைச்சி ஓட்டினா பொண்ணுங்களுக்கு பிடிக்கும்னு உனக்கு எந்த முட்டாள் சொன்னானோ தெரியலை! அப்படியெல்லாம் எதுவுமில்லை. நீ ஒழுங்கா ரோட்டை பார்த்து நேரா ஒட்டுறா போதும்!”

“சரிங்க அண்ணிங்க. வரேன்!”

வீட்டிற்குள் நுழைந்த சின்னவன் அமுதாவுக்கு அடுத்த ஆச்சரியத்தை கொடுத்தான்.

“நீயுமா சீக்கிரம் வந்துட்டே! என்ன ஆச்சு இன்னிக்கு அண்ணனுக்கும் தம்பிக்கும்!”

“என்ன ஆச்சு, அவனும் வந்துட்டானா”

அண்ணனின் அறையில் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது.

அன்னை தந்த காபியை பருகியபடி வீட்டின் புற வாசபடியில் அமர்ந்தவன்,

“நம்ம வள்ளிக்கு உடம்பு முடியலை மா”

என்றது உள்ளறையில் இருந்த விவேக்கிற்கும் கேட்டது!

வெளி வந்தவன் அவர்கள் இருவரும் அறியாமல் நின்று அந்த பேச்சை கேட்க ஆரம்பித்தான்.

“என்ன டா ஆச்சு? உனக்கு யார் சொன்னா விஷ்ணு! நீ போய் பார்த்தியா?” அமுதா படபடத்தாள்!

“மயக்கம் போட்டுட்டான்னு போன் வந்தது. அதனால் அங்க போனேன்”

“அச்சோ போன தடவை நம்ம வீட்டில்  பார்த்தப்பவே மெலிஞ்சியிருந்தா தவிர சவுக்கியமா தானே தெரிஞ்சா. திடீர்னு என்ன ஆச்சு! இந்த பொண்ணு இப்படி தன் உடம்பை பார்த்துக்காம இருப்பாளா!”

அமுதா அவளிடம் போனில் நலம் விசாரிக்க வேண்டி எழுந்து வர விவேக் அங்கு நின்றிருந்ததை கண்டார்.

“கேட்டியா விவேக், வள்ளிக்கு உடம்பு முடியலையாம்! நாம போய் இப்ப அவளை ஒரு எட்டு பார்த்திட்டு வரலாமா பா!”

வருங்கால மனைவி ஆயிற்றே, பதறுவான், உடனே கிளம்புவான் என்று எண்ணிய அமுதாவின் நினைப்பெல்லாம் பொய்த்து போனது.

கல் போன்று அப்படியே நின்றிருந்தவன்,

“இப்ப என்னால் முடியாது மா. கொஞ்சம் ஆபிஸ் வேலை இருக்கு, நான் அவளை அப்புறம் பார்த்துக்குறேன்”

என்றபடி தன் அறைக்குள் சென்று அடைந்துக் கொண்டான்.

விஷ்ணுவும் முகம் முழு எரிச்சலை வெளிப்படுத்திக் கொண்டிருக்க, அமுதா அவனருகில் வந்து,

“என்ன விஷ்ணு மறுபடியும் முருங்கை மரமா! இதையெல்லாம் பார்த்தா தான் டா எனக்கு பட படன்னு இருக்கு! சீக்கிரம் இவங்க கல்யாணத்தை முடிச்சிட்டா நிம்மதியா இருப்பேன்”

“ஏன் மா அதுக்கு பிறகு சண்டை வரவே வராதா? அவன் என்னைக்கோ புளிய மரத்தில் செட்டில் ஆன கேஸு. எப்போ என்ன நடக்கும் தெரியாது. நீ ஃபீல் பண்ணாதே அமுதா,

நான் வேணா உன்னை நாளைக்கு அவளை பார்க்க கூப்பிட்டு போறேன்”

அன்னைக்காக அப்படி சொன்னாலும் விவேக் இப்போது நடந்துக் கொண்டது அவனையும் மிகவும் சஞ்சலப் படுத்தியது!

 ‘மரம் மாதிரி நிற்கிறானே. அவளுக்கு இவனை விட்டால் வேறு எந்த உறவு இருக்கிறது! இவனே இப்படி நடந்து கொள்கிறான் என்றால்! மயூரிக்கு இதெல்லாம் தெரிய வந்தால் மிகவும் வருத்தப்படுவாள்.’

“அப்போ கூட உனக்கு என்கிட்ட முதலில் சொல்லத் தோணலை இல்ல மயூரி!”

பேசிக் கொண்டிருந்த போனை வெறித்துப் பார்த்தாள் மயூரி! என்ன கேட்கிறான் இவன் என்று திரும்பவும் சலிப்பாயிருந்தது.

“நான் யார்கிட்டையும் சொல்ற நிலைமையில் இல்ல விவேக். ராஜி கிட்ட விஷ்ணு நம்பர் மட்டும் தான் இருந்தது, அவ தான் அவனை கூப்பிட்டு சொல்லியிருக்கா!”

‘நீ நல்லாயிருக்கியா மயூரி?’

‘என்ன ஆச்சு?’ போன்ற வார்த்தைகளை அவனிடம் எதிர்பார்த்து இருந்தவளுக்கு அவனின் இந்த விசாரணை பகுதி அறவே பிடிக்கவில்லை! இப்படி ஒருவனிடம் எந்நேரமும் விளக்கம் கொடுத்தே சரி கட்ட வேண்டுமா! இதெல்லாம் தன் குணத்துக்கு ஒத்து வருமா! இப்போதே இப்படியென்றால் திருமணத்திற்கு பிறகு இன்னமும் கூடத்தானே செய்யும், உரிமைகளும் அதன் கூடவே இது போன்ற சங்கடங்களும்! 

இனியும் பேச்சை தொடர வேண்டுமா, போனை வைத்துவிடலாமா என்ற எண்ணம் தோன்ற,

“எனக்கு டியூட்டி டைம் விவேக், வச்சிடுறேன்”

பொய்யுரைத்து அந்த போனை வைத்தாள்.

அவளுக்கும் இன்று விவேக்கால் மனதில் தோன்றிய சஞ்சலம் அத்தனை சீக்கிரம் சரியாகிவிடும் என்பதாக படவில்லை!

இதெல்லாம் எங்கே போய் முடியும் என்ற கவலையுடனே படுக்கைக்கு சென்றாள்.

சில விஷயங்களை சொன்னாலும் வில்லங்கம், சொல்லாமல் விட்டாலும் பிரச்சனை. அவளின் தவறு என்ற எண்ணத்தில் விவேக் நினைத்திருந்ததை நேரிடையாக அவளிடம் சொல்லிவிட்டதில் அவர்களுக்குள் இருந்த சிக்கல் இன்னும் சிக்கலானதே ஒழிய எதுவும் சரிவரவில்லை. விவேக்கின் வார்த்தைகள் எல்லாம் அவனுக்கு எதிராகவே திரும்பியிருந்தன.

மயூரவள்ளிக்கு அமுதா அத்தையின் வீடு எப்போதும் ஒரு கோவில் மாதிரி. நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும் இடம். ஹாஸ்டலில் இருந்துவிட்டு விடுமுறைக்கு அங்கே போவதே பேரானந்தமாய் இருந்திருக்கிறது.

ஆம் இருந்திருக்கிறது!

அன்று போனில் விவேக்குடன் நடந்த வாதத்திற்கு பின் விவேக் இவள் அழைப்பை கூட எடுப்பதில்லை. எந்தவித தொடர்பும் இல்லை அவனுடன். அவனுக்காக இவள் மனம் கிடந்து தவித்தாலும் யாரிடமும் இந்த பிரச்சனையை கொண்டு போகும் யோசனையில்லாமல் தான் அவளிருந்தாள், விஷ்ணுவிடம் பேசும் வரைக்கும்!

“உன் அண்ணன் ஏன் டா என்னை பாடா படுத்துறான். எனக்கு உடம்பு சரியில்லாமல் போனதை அவன்கிட்ட சொல்லியிருக்கணுமாம்! இதில் என் தப்பு என்ன விஷ்ணு! நானா உனக்கு சொன்னேன்!”

விஷ்ணுவிற்கு புரிந்தது எல்லா விஷயமும்! உரிமை போராட்டம் செய்கிறான் அண்ணன்! 

“சரி விடு இது என்ன புதுசா! அம்மாவாசை பெளர்ணமி வர மாதிரி அடிக்கடி உங்களுக்குள்ள சண்டை வரது சகஜம் தானே! நேரில் பேசி பாரு அவன்ட்ட”

“போனை எடுத்தா தானே பேச முடியும்!

எனக்கு இந்த வருஷம் ஹாஸ்பிட்டல் வேலை வேற மண்டை காயுது, இவர் வேற அதுக்கு மேல படுத்துறார்!”

“சரி சரி டாக்டர் மேடம் டென்ஷன் ஆகாம என்ன செய்ய முடியும்னு பாருங்க! வீட்டுக்கு வந்தா நேரில் பிடிக்கலாம் அவனை!”

விஷ்ணுவின் பேச்சு எல்லாவற்றையும் எளிதாக காட்டியது! அவன் சொன்னபடி அன்று வீட்டிற்கு போனாள் மயூரியும்!

“எனக்கு நமக்குள்ள நடக்குறதெல்லாம் ஒரு நல்ல ஃபீலிங்கை தரமாட்டேங்கிது மயூரி!”

அவன் அறைக்குள் நுழைந்தவளிடம் பேசாமலேயே நேரம் கடத்திய விவேக், ஒரு வழியாய் இதை சொன்னான்.

“ஆமா எனக்கும் தான்” என்றாள் அவளும்!

“உனக்கு ஏன்? அப்படி நான் உன்னை என்ன செஞ்சேன்”

“உங்க ‘ப்ரோடோக்கால்’ படி தான் நான் நடந்துக்கணும்னு நினைக்கிறீங்க. எனக்கு அது பிடிக்கலை விவேக்”

“ஓஹோ, அப்போ உன் இஷ்டத்துக்கு நடந்துக்கலாம்னு நினைச்சிட்டு இருந்தியா!”

நக்கல் நகைப்புடன் கேட்டான்.

“அது என்ன அப்படி ஒரு பிடிவாதம்! வர வர நான் சொல்றதை எதுவும் கேட்க மாட்டேன்னு!”

“அதே தான் நானும் கேட்குறேன், என்ன பிடிவாதம் என்னை நம்பமாட்டேன்னு!

எல்லாமே நான் என்னவோ வேணுமின்னே செஞ்ச மாதிரி ஒரு கற்பனை, அதுக்கு பின்னாடி ஒரு பெரிய டிராமா!” என்றாள் அவளும்.

இருக்கையை விட்டு எழுந்தவன் அறையின் குறுக்கே நடக்க ஆரம்பித்தான்.

நடையை நிறுத்தி அவளை நேரே பார்த்தவன்,

“மயூரி நான் பெரிய தப்பு செஞ்சிட்டேன். வீ ஆர் நாட் மேட் பார் ஈச் அதர். அதை புரிஞ்சிக்க எனக்கு இத்தனை நாள் தேவைப் பட்டிருக்கு! ஐயம் சாரி பட் திஸ் இஸ் நாட் கோயிங் டு வர்க்”

அவனை அதிர்ச்சியாக பார்த்தாலும் தான் சொல்ல வேண்டியதை தெளிவாய் சொல்ல ஆரம்பித்தாள் மயூரி.

“எனக்கும் தெரிஞ்சது இது சரிபட்டு வராது!

என்னால நீங்க செய்றதை எல்லாம் ஒத்துக்க முடியலை! எனக்கு இருக்கிற வேலையில்

இன்னமும் கல்யாணமும் செஞ்சிட்டு…”

“நமக்கு இது வேண்டாம் மயூரி! என்னால் உனக்கு கஷ்டம், உன்னால் எனக்குன்னு ஏன்! இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம். அதையும் சேர்த்து இனி நீ என் கண்ணெதிரில் இந்த வீட்டிலும் இருக்காதே ப்ளீஸ்!” விவேக் தன் முழு குணத்தையும் தன் மனம் கவர்ந்தவளிடம் காட்டிவிட்டான்.

அவர்கள் அறைக்கு வெளியில் நின்ற விஷ்ணுவால் இன்னமும் மெளனமாய் நிற்க முடியவில்லை.

“அவளை இருக்க கூடாதுன்னு சொல்ல உனக்கு உரிமை இல்லை. அது அப்பா அம்மாவோட முடிவு! விட்டா பேசிகிட்டே போற!” என்றான் தன் அண்ணனிடம்.

இவர்கள் போட்ட சத்தத்தில் அமுதாவும் அங்கே வந்துவிட்டார்.

“விவேக் என்னப்பா இது, வீட்டுக்கு வந்த பெண்ணை இப்படி பேசுறே! இதெல்லாம் நல்லாயில்லை. அப்பாவுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவார்”

“அவர் என்னை என்ன வேணா சொல்லட்டும் விடுங்க அத்தை! நான் யாருமில்லாத அனாதையா இருக்கலாம், ஆனா எனக்கும் என் பெத்தவங்க எல்லாத்தையும் வச்சிட்டு தான் போயிருக்காங்க!

இனி யார் தயவும் இல்லாம நானே என்னை பார்த்துக்குறேன்! கிளம்புறேன்!”

தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தவளை கைப்பற்றி தடுத்து பார்த்தான் விஷ்ணு.

“வள்ளி அவன் கோபத்தில் சொன்னதையெல்லாம் விடு! எதையும் மனசில் வச்சிக்காதே! சமாதானமா பேச வந்திட்டு என்னடி இது?”

“இனி இதில் மேற்கொண்டு பேச எதுவுமில்லை. என்ன கொஞ்சம் ஹாஸ்டலில் விடுறியா ப்ளீஸ்!”

அடக்கமாட்டாமல் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது அவளுக்கு!


error: Content is protected !!