IM 18

18

“மயூரி என்ன மா, இன்னிக்குன்னு இத்தனை தாமதம்! உனக்கு பிடிக்குமேன்னு கீரை சப்பாத்தி, முட்டை குருமா செஞ்சியிருக்கேன், வரியா இங்கே?”

அமுதா அத்தை அவளிடம் பேசிக் கொண்டிருந்த நேரம் இரவு மணி ஒன்பதரை.

“இல்ல இருக்கட்டும். பசிக்கலை, இப்ப எனக்கு எதுவும் வேண்டாம் அத்தை!”

“அது என்ன பழக்கம் சாப்பிடாம தூங்க போறது. நீ வரியா இல்லை நான் அங்க கொடுத்து விடவா! விஷ்ணு வேற வீட்டில் இல்லை. கொஞ்சம் இரு விவேக் கிட்ட தந்து விடுறேன்!”

‘வேறு வினையே வேண்டாம்’.

“இதோ கிளம்பிட்டேன்!”

அவள் பதிலில் நமுட்டு சிரிப்பு சிரித்து கொண்டார் அமுதா!

வீட்டிலிருந்து வெளியே வந்தவளுக்கு ஏதோ பார்வை தன்னை துளைத்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு! சுற்றி முற்றி பார்த்தால் எதுவும் அவள் கண்ணில் படவில்லை. அமுதா வீட்டு மொட்டை மாடிக்கும் அவள் பார்வை போனது. ஆனால் யாரும் ஆள் அங்கிருப்பதை அவளால் அறிய முடியவில்லை.

அவன் நின்ற திசையில் அவள் பார்த்த நொடி ஆடி போய்விட்டான், தன்னை கண்டுகொண்டாளோ என்று!

சற்று நேரம் அதே திக்கில் பார்த்தவள் எதுவுமில்லை என்பதாக கதவை அவசரமாய் பூட்டினாள். அவள் தன் சாவியை நைட் பாண்ட் பாக்கெட்டில் போட்டு கொண்டதை பார்த்துக் கொண்டிருந்த இவனும் கீழே ஓடோடி போனான்.

மயூரி அந்த வீட்டில் நுழைய சோபாவில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த விவேக்,

“வா மயூரி!” என்க,

இவளும்,

“ஹலோ விவேக் அத்தான்” என்றாள் நீட்டி முழுக்கி.

சிரித்த முகமாய் இருந்தவனின் முகம் சட்டென மாறி போனது,

‘வொய் மீ’ என்பதாக.

அவனை கடந்து போயிருந்தவள், திரும்பி வந்து அவன் கையிலிருந்த பேப்பரை வாங்கி,

“தலைகீழா படிச்சா கண்ணு கெட்டு போயிடும்!” என்றுவிட்டு அதை நேர்பண்ணி தந்துவிட்டு போனாள்.

அவன் அசடு வழிந்ததை காண அங்கு நிற்கவில்லை.

“ஏன் மயூரி இன்னிக்கு இவ்ளோ நேரம்! வழக்கமா எட்டு மணிக்கெல்லாம் வந்திடுவியே!” அமுதா அவளுக்கு உணவு பரிமாறியபடி கேட்க,

“டாக்டரின் வாழ்க்கை பயணம் இனிதே ஆரம்பம் அத்தை, இனி இப்படித்தான். இன்னிக்கு வேற உங்க செல்ல மகனும் அவன் பொண்டாட்டிய கூப்பிட்டு வெளியே போறேன்னு என்னை அம்போன்னு விட்டுட்டான். அதான் பஸ்ஸில் வந்து சேர நேரமாகிட்டு!”

“அதானா! பய நான் போன் போட்டாலும் எடுக்கலை! அந்த பிள்ளைய நிம்மதியா டாக்டருக்கு படிச்சி முடிக்க விடமாட்டான் போலையே!”

இருவரும் சற்று நேரம் விஷ்ணுவின் அலப்பறையை சொல்லி சிரித்து கொண்டிருந்தனர்.

விவேக் கவனமெல்லாம் அங்கே அவளிடம் தான் இருந்தது. உணவை முடித்து அவள் கிளம்ப,

“தனியா போகாதே வள்ளி, இரு நான்…”

“நான் போய் பத்திரமா விட்டிடுறேன் மா”

என்றான் விவேக் இடையில் புகுந்து.

பெற்றவள் அவனை விநோதமாய் பார்க்க மயூரியோ அவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.

சொன்னவன் அவ்விருவரையும் நேராய் பார்க்காமல் வாசல் பக்கம் போய்விட்டான்.

“சாரி அத்தை நான் சொல்லகூடாது ஆனாலும் சொல்றேன். உங்க இரண்டு பசங்களுமே இன்னைய தேதிக்கு கொஞ்சம் மூளை கலங்கின கேசா தான் இருக்கானுங்க!”

“ஹ ஹ…உதவி தானே செய்றேன்னு சொல்றான், ஏத்துக்கலாம் தப்பில்லை வள்ளி!”

“நீங்க என்ன செய்ய முடியும்! பெத்தாச்சு, இனி பிள்ளையை விட்டு கொடுக்க முடியாதுல்ல! ஐ அண்டர்ஸ்டேண்ட் அத்தை. சரி நான் கிளம்புறேன்”

“வர வர விஷ்ணு மாதிரியே ஓவர் வாய் உனக்கு!”

செல்லமாய் அவள் முதுகில் தட்டி வழியனுப்பி வைத்தார் அமுதா.

ஜோடியாய் போன இருவரும் சீக்கிரம் ஜோடி சேர வேண்டுமே என்றிருந்தது அவருக்கு.

மயூரி அவனையும் தாண்டி முன்னே நடக்கலானாள், இருவருக்கிடையில் எந்த பேச்சுமில்லை. தன் வீட்டை திறந்தவள் உள்ளே செல்ல முனைய, இத்தனை நேரமும் தயங்கிக் கொண்டிருந்தவன் ஒரு வழியாய் பேச ஆரம்பித்தான்.

“உனக்கு இனி ஹாஸ்பிட்டலில் லேட் ஆச்சுன்ன எனக்கு கால் பண்ணு மயூரி, ஐ கேன் கம் ஆண்ட் பிக் யூ அப்!”

அவள் கண்களை நேராய் பார்த்து சொன்னான். அவனை விநோதமாக பார்த்தவள்,

“இல்லை பரவாயில்லை”

என்றுவிட்டு, பேச்சு முடிந்தது என்பது போல் உள்ளே செல்ல முயல, அவளை போக விடாமல் அவள் கையை பற்றிக் கொண்டான்.

“உனக்கு தான் கல்யாணம்னு நினைச்சு நான் எவ்ளோ கலங்கிபோயிட்டேன் தெரியுமா! நீங்க எல்லாரும் செஞ்ச வேலை! ஏன் மன்னிப்புன்னு கேட்ட பிறகும் என்னை இத்தனை நாள் நோகடிக்கிறே மயூரி! மன்னிக்க மனசில்லையா?”

தன் கரங்களை அவனிடமிருந்து பிரிக்க  முயன்றாள், முடியவில்லை! அவன் பிடி உடும்பு பிடியாய் இருந்தது.

“இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம் ஆட போறோம் மயூரி. நான் வெட்கத்தை விட்டு சொல்றேன், நாம கல்யாணம் செய்துக்கலாம், சேர்ந்து வாழ ஆரம்பிக்கலாம். எனக்கு இதெல்லாம் உடனடியா நடக்கணும். உன் சம்மதத்துக்கு தான் ரொம்ப நாள் காத்துகிட்டு இருக்க முடியாது!”

சொன்னதோடு நில்லாமல் பற்றியிருந்த அவள் கரங்களில் தன் இதழ்களை பதித்தான். அடுத்த நொடி வந்த வழியே போயிருந்தான்.

நடந்தது என்ன என்பது போல் அவள் கையை திருப்பி பார்த்து கொண்டு அங்கேயே நின்றுவிட்டாள் அவள்.

இனிமையாய் தொடங்கிய அந்த காலை வேளையில், அமுதா தோட்டத்தில் பூ பறித்து கொண்டிருக்க, அழுதபடி வந்தாள் அந்த வீட்டின் இளைய மருமகள்.

“விஷ்ணு இருக்கானா அத்த!”

“ராஜி என்னம்மா, ஏன் அழறே!” அமுதாவுக்கு பதட்டமானது!

அழுகையின் ஊடே வீட்டினுள் போனாள் ராஜி. சத்தம் கேட்டு தன் அறையிலிருந்து வெளிவந்த விஷ்ணுவும்,

“என்னடி ஆச்சு? ஏன் அழுறே!”

என்னவென்று கேட்டு அவளை நெருங்கும் முன்னரே அவள் பின்னோடு வந்த அவள் அண்ணன்காரன் இவன் சட்டையை கொத்தாக பிடித்திருந்தான்.

யாருக்கும் அவன் வந்தது கூட தெரியவில்லை. மின்னல் வேகத்தில் வந்தவனின் செயலிலும் அதே வேகம்!

“என் தங்கச்சிய திருட்டு கல்யாணமா பண்றே, ராஸ்கல்!”

‘பளார்’

குடும்பத்தினர் அனைவரும் முன்பு அவன் விட்ட அறையை வாங்கிக் கொண்டான் விஷ்ணு! கனகவேல் இடையில் வர வந்தவன் அவரை தள்ளிவிட்டு விஷ்ணுவை இன்னமும் போட்டு உலுக்கி எடுத்தான்.

“அண்ணா… அண்ணா விடு அவரை. விடுறா. நானும் அவரை விரும்பினதால தான் இந்த கல்யாணம் நடந்தது. உனக்கு ஆத்திரம் தீரணும்ன என்னை அடியேன்!”

ராஜி இடையில் புகுந்து தடுத்தாலும் அவனை கட்டுப்படுத்த முடியவில்லை.

தங்கை பேச்சை காதில் வாங்கிக் கொள்ளவில்லை வந்தவன். இன்னமும் விஷ்ணுவை அடிக்க பாய இருவருக்கும் நடுவில் இப்போது வந்தது விவேக்.

“மிஸ்டர், முதலில் அவன் மேலயிருந்து கையை எடுங்க! எங்க வீட்டுக்கு வந்து எங்க வீட்டு பையனையே அடிக்க உங்களுக்கு யார் சார் உரிமை கொடுத்தது! கையை எடுங்கன்னு சொல்றேன்னில்ல!

அந்த புதியவனின் கையை முரட்டுத்தனமாய் தட்டிவிட்டு, விவேக் கர்ஜிக்க தொடங்கிய பொழுது அந்த வீட்டினுள் வந்திருந்தாள் மயூரி.

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பியவன் அந்த அண்ணன்காரனிடம்,

“உங்க தங்கை சம்மதத்தோட நடந்தது இந்த கல்யாணம். அதுக்கு எங்க வீட்டாளுங்க மட்டுமில்லாம உங்க அம்மாவும் ஒரு சாட்சி. அப்படியிருக்க நீங்க இவனை அடிக்கிறதில் ஏதாவது நியாயமிருக்கா!”

அதிகாரமாய் அவன் சொன்ன தோரணையில் வந்தவன் முறைத்துக் கொண்டிருந்தானே ஒழிய அதன்பின் எதுவும் எல்லை மீறவில்லை.

“அதுக்காக என் சம்மதமில்லாம, எப்படி என் தங்கச்சியை இவன்…”

“அவங்க இரண்டு பேரும் மேஜர் மிஸ்டர். அவங்க படிப்பை பாழாக்கிட்டோ, வாழ்க்கையை சீரழிச்சிகிட்டோ, இல்லை பெத்தவங்களை ஏமாத்திட்டோ கல்யாணம் செய்யலை. அவங்க லைஃபில் எல்லாம் சாதிச்சு காட்டிட்டாங்க. இன்னைக்கும் அவன் பொண்டாட்டி படிப்பு முடியிற வரைக்கும் தொந்திரவு செய்யாம ஹாஸ்டலில் தான் விட்டு வச்சியிருக்கான்.”

அண்ணன்காரன் விஷ்ணுவை இன்னமும் முறைத்துக் கொண்டு தான் இருந்தான்.

“சும்மா எடுத்தோம் கவுத்தோம்னு செய்றதுக்கு முன்னாடி, கொஞ்சம் யோசிங்க. என்ன இருந்தாலும் அவன் உங்க தங்கை புருஷன். உங்க சொந்தம் இன்னும் பல வருஷம் தொடர வேண்டி இருக்கு. உங்க செயலால் அதை பாழாக்கிடாதீங்க”

இப்படியெல்லாம் நீ பேசுவியா டா என்று மயூரி பார்த்து கொண்டிருக்க,

“ஒரு பொண்ணை விரும்பிட்டோம்னு ஒரே காரணத்துக்காக இந்த அவமானமெல்லாம் எங்களால், ம்ச்ச்…அவனால எப்போதும் தாங்கிட்டே இருக்க முடியாது மிஸ்டர்.

இன்னும் ஒரு அடி என் தம்பி மேல் பட்டுச்சு நீங்க முழுசா உங்க வீடு போய் சேர மாட்டீங்க, ஜாக்கிரதை!”

அந்த உள்குத்தில் தனக்கும் மெஸேஜ் இருக்கிறது என்று அறியாமல் இருப்பவளா நம் மயூரி!

‘ம்ம் ரொம்பத்தான்! இப்ப என்ன பெருசா செஞ்சிட்டேனாம்! இவன் செஞ்சதை எல்லாம் ஓரமா விட்டிட்டு நான் பண்ணதையே சொல்றான் பாரேன்!’

தனக்குள் விவாதித்து கொண்டிருந்தாள்.

வந்தவன் என்ன நினைத்தானோ, ஒன்றும் சொல்லாது வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்.

நீண்ட வசனமெல்லாம் பேசிய விவேக்கும் அவன் அறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டான். ராஜி அழுகையை நிறுத்தியிருக்க, மயூரி விஷ்ணுவிடம் நின்றிருந்தாள்.

உதட்டில் அடிபட்டு இரத்தம் கசிய நின்றிருந்த விஷ்ணுவை நெருங்கி தன் கைகுட்டையால் அதை துடைத்துவிட்டாள் ராஜி.

“சண்டை எல்லாம் முடிஞ்ச பிறகு மெதுவா வரே! நல்லா கவனிக்கிற டி புருஷனை!”

மனைவியின் தலையில் செல்லமாய் ஒரு குட்டு வைத்தவனை பார்த்து தன் தலையிலடித்துக் கொண்டாள் மயூரி.

மகனை நெருங்கிய அமுதா, தலையை திருப்பி பெரியவனின் அறைக் கதவு மூடியிருக்கிறதா என்று உறுதிபடுத்திக் கொண்டு,

“பார்த்தியா டா, தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும்னு சும்மாவா சொன்னாங்க! உன் மேல் ஒருத்தன் கையை வைக்க விட்டானா பாரேன். அங்க நிற்கிறான் விவேக்!”

“எங்க நிக்கிறான்! நான் அவன் தம்பியாம், அவனை தவிர யாரும் என்னை அடிச்சிட கூடாதாம்! துரை சொல்லிட்டு போறாரு! நீ வேற ஏன் மா!”

மனைவி பக்கம் திரும்பியவன்,

“ஏய் ராஜி நீ இனி இங்க என் கூடவே இருந்தா போதும். அதான் மச்சானோட ஆசிர்வாதமே கிடைச்சிடுச்சே, அப்புறம் எதுக்கு அந்த ஹாஸ்டலுக்கு வேற தண்ட செலவு”

வலித்த தன் வாயை தடவிக்கொண்டவன் தன் அறைக்குள் தஞ்சமடைய அவன் பின்னோடு போய்விட்டாள் ராஜியும்.

இருவரின் செயலையும் ‘ஆ’ வென பார்த்து கொண்டிருந்த அமுதா, மயூரி பக்கம் திரும்பி,

“இவனே எப்போடான்னு காத்துகிட்டிருந்தான். மச்சான்காரன் இன்னிக்கு வந்து கோடு போட்டு கொடுத்திட்டான். இனி பொங்கி வரும் நம்ம வீட்டு காவேரியை யாராலும் அணை போட்டு நிறுத்த முடியாது வள்ளி”

இத்தனை களேபரத்திலும் அமுதா அத்தைக்கு சிரிக்க முடிகிறதே என்ற சந்தேகம் இருந்தாலும் கூட சேர்ந்து சிரித்தாள் மயூரவள்ளி.