அத்தியாயம் 3

“இன்னும் கிளம்பாம இருக்கியே வள்ளி! எல்லாம் செய்திட்டேன் பாரு, காலேஜுக்கு லேட் ஆகிடாம மா!”

அமுதாவுக்கு ஆச்சரியம்! ஒரு நாளும் இப்படி மெத்தனமாய் இருக்கமாட்டாளே, இன்று என்னவாயிற்று இந்த பெண்ணுக்கு! நேற்றிலிருந்து எதையோ பறிகொடுத்ததை போலிருக்கிறாளே!

தான் அவளை பெற்ற தாய் இல்லையென்றாலும் அந்த பெண் பிள்ளைக்காக அமுதாவின் மனம் தவித்தது!

“இன்னிக்கு எனக்கு காலேஜ் போக வேணாம் அத்தை”

‘இன்னுமொரு முறை அங்கே சென்று அவரை பார்க்கத் தான் வேண்டுமா! நினைப்பே கசந்தது மயூரவள்ளிக்கு! முடியாது , தன்னால் அது நிச்சயம் முடியாது!’

அமுதா அவள் சொன்ன காரணத்துக்காக எல்லாம் அவளை விடவில்லை!

“இது என்ன புது பழக்கம் வள்ளி! உடம்பு எதுவும் சரியில்லையா என்ன?” மயூரியின் நெற்றியை தொட்டு பார்த்தார்,

“ஒண்ணுமில்லையே! காரணம் இல்லாம போகாம இருக்காதே, கிளம்பு மா சீக்கிரம்!”

“ஆமா! கிளம்பு டி ராஜாத்தி!”

அமுதாவும் அவளும் குரல் கேட்ட திசையில் உற்று பார்த்துக் கொண்டிருக்க, அவனோ திறந்திருந்த பின்வாசல் வழியே அவர்கள் இருவரையும் பயங்காட்டுவதை போல் ஓடி வந்தான்! வந்தவன் விஷ்ணு!

“எரும மாடே இப்படியா வந்து மேல விழுவே! இன்னிக்கு வரேன்னு ஒரு வார்த்தை முன்னமே சொல்லக் கூடாதா?”

அவனை பார்த்ததில் உள்ளுக்குள் மகிழ்ச்சியாய் இருந்தது மயூரிக்கு, ஆனாலும் முரணாய் அவனை வைது வைத்தாள்!

“பார்ரா! நேத்து யாரோ என் கிட்ட எப்ப வருவேன்னு கேட்டாங்களே, அந்த நல்ல மனுஷியை நீ பார்த்த?”

அமுதாவுக்கு இந்த சின்ன பிள்ளைகளின் சேஷ்டையைக் கண்டு முகத்தில் புன்முறுவல்!

“அது…அது…சும்மா! வான்னு சொன்னா உடனே படிப்பை போட்டிட்டு வந்திரதா! கொஞ்சம் கூட உனக்கு பொறுப்பில்லை! பாருங்க அமுதா அத்தை உங்க பிள்ளை செய்ற காரியத்தை!”

தன்னருகில் அமர்ந்திருந்தவள் அவ்வாறு சொல்லவும் அவள் தலையிலிருந்த கொண்டையை அவன் களைத்துவிட்டு அதற்காக அவள் தந்த பெரிய பெரிய அடிகளை மொத்தமாக வாங்கிக் கொண்டான்.

இந்த களேபரத்தில் அவர்கள் அருகில் வந்துவிட்ட விவேக்கை யாரும் கவனிக்கவில்லை! அவள் அடியில் இருந்த தப்பிக்க அவள் கைகளை பற்றியிருந்த விஷ்ணு அதே நிலையில் இருக்க,

“எப்போ வந்தே?” என்றான் விவேக் தன் உடன் பிறந்தவனை பார்த்து. கேள்வி கேட்டாலும் கண் அவன் கைகளை பார்த்துக் கொண்டிருந்தது!

“ஜஸ்ட் இப்ப தான்!” விஷ்ணு அண்ணனிடம் பதில் சொல்லிவிட்டு விட்ட காரியத்தை தொடர்ந்தான்.

விஷ்ணு மயூரி என்றும் நெருங்கிய நண்பர்கள் தான். வெறும் வாய் பேச்சில் மட்டுமில்லை, இந்த சேஷ்டைகளும் இருவருக்கும் ஒரே அளவுகோல்! விவேக் அதையெல்லாம் கண்டு கொண்டதில்லை, இத்தனை நாளும்! இன்று ஏனோ அது அவன் கண்களை உறுத்த ஆரம்பித்திருந்தது! அந்த இடத்தில் நிற்கப் பிடிக்காதவன் போல அமுதாவிடம் திரும்பியவன்,

“இன்னிக்கு நான் வெளியே பார்த்துக்குறேன் மா, நீ வந்தவனை கவனி”

“விவேக் எல்லாம் ரெடி செய்திட்டேன் பா…” அவர் சொன்னதை காதில் கூட வாங்காமல் உடனே கிளம்பிவிட்டிருந்தான்!

போகிறவனின் மனநிலை புரிந்ததா இவர்களுக்கு? ஹும் இல்லவே இல்லை!

“தடியா! வலிக்கிது டா! என் கையை விடுறியா இல்லையா?”

அவன் பற்றியிருந்ததை விடுதலை செய்யவும்,

“தலைமுடியில் கையை வைக்காதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்! இப்ப தொட்டதுக்கு உன்னை என்ன செய்றேன்னு மட்டும் பாரு” முன்பு விட்ட இடத்திலிருந்து விஷ்ணுவை துரத்தி துரத்தி சாத்திக் கொண்டிருந்தாள் மயூரி, அமுதா தடுக்க முயன்று முடியாமல் விட்டுவிட்டார்!

விவேக் ஏக டென்ஷனில் இருந்தான்! பைக்கில் சில கிலேமீட்டர் வருவதற்கு முன்பே மூன்று இடங்களில் இடிக்கப் பார்த்தான். தான் செய்வது சரியில்லை என்ற எண்ணம் தோன்ற, வண்டியை ரோட்டோரத்தில் நிறுத்தியவனின் கண்ணுக்குள் மறுபடியும் தான் கண்ட அதே காட்சி! அவனால் அதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை!

இது ஒன்றும் புதிதில்லை! அவர்கள் இருவரும் என்றுமே அப்படித்தான்! சிறுவயதில் இவன் முழுநேரமும் தன் விஷயங்களில் மட்டும் மூழ்கியிருக்க, அவ்விருவரும் நேரம் காலம் இல்லால் அரட்டையிலும், விளையாட்டிலும் இருப்பர்! அப்போதெல்லாம் வெட்டிப் பிறவிகள் என்று ஒதுக்கியிருந்தவனுக்கு இன்று அப்படி முடியவில்லை! சுவிட்ச் போட்டது போல் மாறக் கூடிய விஷயமில்லை இது! மூளைக்கு எல்லாம் புரிந்தது ஆனாலும் அவன் மனம் அதை ஏற்க மறுத்தது!

சற்று நேரம் இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்தவன், தான் இதையெல்லாம் கடந்து வந்தாலே ஒழிய மயூரியுடன் நிம்மதியாக வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்தான். காலம் எல்லாவற்றையும் மாற்றும்! அப்படி நினைத்த பின்பே அவனால் சற்று நிதானத்திற்கு வர முடிந்தது!

மொட்டை மாடிக்கு தங்கள் இருவரின் இரண்டாவது ரவுண்ட் காபியுடன் வந்தாள் மயூரி! தண்ணீர் தொட்டியின் நிழல் படும் இடத்தில் அமைத்திருந்த இருக்கையில் இருந்தான் விஷ்ணு! அவனுக்கு ஒரு குவளையை தந்தவள் அவன் அருகில் அமர,

“கல்யாண பொண்ணு ரெடியாகிட்டீங்க போல!”

அவள் எதுவும் சொல்லவில்லை! பிரச்சனைகள் எல்லாம் எள்ளளவு கூட குறையாமல் அப்படியே இருந்தாலும் அவனை பார்த்ததும் என்னவோ மனக்கலக்கம் எல்லாம் விலகியது போலிருந்தது அவளுக்கு!

“விவேக் அவ்வளவு கெட்டவனில்லை மயூரி! தெரியாத இடத்தில் போய் உன்னை கல்யாணம் செஞ்சு தர அம்மா அப்பாவுக்கு எப்போதுமே இஷ்டம் இருந்ததில்லை! இப்ப அண்ணன் வேற இப்படி சொல்லவும் வீட்டில் எல்லாருக்கும் நிம்மதியா இருக்கு!”

அவளை திரும்பி பார்த்தான்! எவ்வித முகமாறுதலும் இல்லாது திக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்தாள்!

“நீ என்ன சொல்றே வள்ளி? அவனை கல்யாணம் செய்துக்கிறியா?”

“என்னடா நேத்து வேற மாதிரி சொன்னே! இளமாறன் ஸார் விஷயத்திலிருந்து என்னால் வெளியே வரமுடியலை விஷ்ணு! உனக்கு என் நிலைமை புரியுதா இல்லையா!”

“முடிஞ்சு போன விஷயத்தை பத்தி பேசாதே வள்ளி! அவருக்கு கல்யாணம் ஆக போகுதுன்னு தெரிஞ்ச பிறகு அதை பத்தி இன்னமும் பேசிகிட்டிருக்கிறது தப்பு! அந்த பேச்சை விடு. அண்ணன் விஷயத்தை பத்தி மட்டும் யோசி!”

“நீயும் அவங்க பக்கமே பேசுறே! இப்பவே எதுக்கு எனக்கு இதெல்லாம்! நான் இன்னும் நிறைய படிக்கணும்! புரிஞ்சிக்கோ விஷ்ணு! அவங்க யாருக்கும் என்ன பத்தி தெரியாது! நீ என்ன அப்படியா?”

பதில் சொல்லவில்லை அவன்!

“எனக்கு நிஜமா என்ன செய்றதுன்னு தெரியலை விஷ்ணு! தெரிஞ்ச ஒரு வழியும் இல்லைன்னு அயிடிச்சு! அத்தை முகத்தை பார்க்கவே கஷ்டமா இருக்கு!”

“ம்ம்”

“என்ன டா அப்போதிலிருந்து ம் கொட்டிகிட்டே இருக்கே! ஏதாவது சொல்லேன்”

“அம்மா முகத்தை பார்க்க கஷ்டமாயிருந்தா அவங்க பையனை கல்யாணம் பண்ணிக்க! அது ஒண்ணு தான் வழி! கமான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ வள்ளி!”

அதிர்ந்து பார்த்தாள் அவனை!

“என்ன லுக் விடுறே! அப்படி தப்பா நான் எதுவும் சொல்லலையே!”

அவன் தனக்கு சாதகமாக பேசுவான் என்ற நினைப்பு காற்றில் பறந்தது… என்ன தான் கட்டுப்படுத்த முயன்றாலும் தனக்குள் அதிகரித்து விட்டிருந்த சினத்தினால் அவ்விடத்திலிருந்து எழுந்தாள் மயூரி!

“நான் கீழே போறேன்” காலி குவளைகளை எடுத்துக் கொண்டு நகர போனவளின் கைப்பற்றி அதே இடத்தில் அமர வைத்தவன், அவள் மீண்டும் எழாதவாறு அவள் தோளில் லாவகமாய் கை போட்டுக் கொண்டான்!

“வள்ளி டேக் யுவர் டைம். நான் மட்டுமில்லை யாரும் உன்னை இந்த விஷயத்தில் கட்டாயப்படுத்த போறதில்லை. நல்லா யோசிச்சு நீ தான் ஒரு முடிவுக்கு வரணும்! உன் வாழ்க்கையில் இது வரைக்கும் நீ அப்படி தான் எல்லாம் செஞ்சியிருக்கே! இதுவும் அதில் ஒரு அத்தியாயம் தான். ஆனா ஒண்ணு மட்டும் மனசில் வச்சிக்கோ”

இடைவெளி விட்டவன் அவர்கள் இருவரின் பார்வையும் சந்தித்த பிறகு,

“நீ எந்த முடிவு எடுத்தாலும் என் முழு ஆதரவும் உனக்கு இருக்கும்! அதை எப்பவும் மறந்துடாதே!”

இத்தனை நேரமும் வெறுப்பேற்றியவன் தற்போது காட்டிய அன்பில் கரைந்துபோனாள். எத்தனையாவது முறை என்பது கணக்கில் இல்லை!

அவள் அமைதியானதை உணர்ந்தவன்,

“குழப்பம் தீர்ந்ததா இந்த மரமண்டைக்கு!”அவள் தலையை பிடித்து ஆட்டிவிட அவன் கையை தட்டி விட்டவள்,

“இதை சொல்லத்தான் அத்தனை தூரம் பஸ் பிடிச்சு வந்தியாக்கும்! நகரு!”

அவள் செய்கையில் மென் புன்னகை அவனிடத்தில்!

“ச்சே ச்சே அதுக்கில்லை…நம்ம மோனிகா இல்ல, அவளை பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு வந்தேன்! நீ உனக்காக மட்டும் வந்தேன்னு தப்பா நினைச்சிட்டியா வள்ளி!”

அவர்கள் வீட்டு மாடியிலிருந்து யாருமில்லாத மோனிகா வீட்டை கஷ்டப்பட்டு எட்டியும் பார்த்து வைத்தான்.

“நீ இன்னுமா அவளை விடல! அத்தைக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சதோ நீ தொலைஞ்சே மகனே!”

“அதெல்லாம் என் டங்க் ஸ்லிப் ஆகி போன வாரமே அம்மாட்ட உளறிட்டேன். ஒரே அசிங்கமா போச்சு குமாரு!”

அவன் சொன்ன தினுசில் விழுந்து விழுந்து சிரித்த மயூரியின் குரல் கீழேயிருந்த அமுதா வரையிலும் கேட்டது!

“அவன் வந்தா தான் மயூரி முகத்தில் சிரிப்பையே பார்க்க முடியுது, இல்லைங்க!”

அவர் அருகில் இருந்தவர் பதிலேதும் சொல்லத் தோன்றாமல் யோசனையில் மூழ்கியிருந்தார்!

தாங்கள் யோசிக்கும் திசை சரிதானா என்பதில் முதல் முறையாய் அவருக்கு குழப்பம் உண்டாகிற்று!

Anitha
error: Content is protected !!