IM-4
IM-4
அத்தியாயம் 4
“ஹலோ மேம்.. நான் கல்பா பேசறேன். நீங்க சொன்ன பையன் இன்னும் வரல, கொஞ்சம் அந்த பையனோட காண்டாக்ட் நம்பர் தர்றீங்களா?”, கேட்கும் பொது மணி இரவு ஏழு. பேசிய கல்பா-வோ கோபமாய் இருந்தாள். கிட்டத்தட்ட ஒரு மணி நேர காத்திருப்பு. சாயா வின் மீது தவறிருக்காது, வருபவன் தான் சொதப்புகிறான் என நினைத்து, மனதுள் முகமறியாத ‘அந்த பையனை’, தாளித்தாள்.
“ஓ… இன்னுமா வரல?, அவன் 6 மணிக்கெல்லாம் அங்க இருந்திருக்கணுமே ?” ,அவளுக்குளேயே பேசிகொண்டவள், “இரும்மா.. நான் கேட்டுட்டு சொல்றேன்… இல்ல…. வேண்டாம்..அந்த பைல்ஸ் எல்லாம் அப்பறம் பார்க்கலாம். நீ உடனே கிளம்பி வீட்டுக்கு போ.”, என்ற சரண்யுசாயா ….. உடனே,
பாஸ்கருக்கு அழைக்க அது எடுக்கப்படவே இல்லை. சரண்யு-விற்கு மெல்ல பதட்டம் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது.
அடுத்து, நரேனை(SNP ) அலைபேசியில் அழைத்தாள்.
“சொல்லு, சரண்.”,
“என்னங்க , பாஸ்கர் உங்ககூடவா இருக்கான்?, “
” ம்.ஆமா, நாந்தான் வரச் சொன்னேன்..”
“ஒரு கால் பண்ணி சொல்ல முடியலையா அவனுக்கு?, அவனை, வர்ற வழி-ல என் ஆபீசுக்கு போய் ஒரு பைலை வாங்கி வர சொன்னேன்.. அங்க இவன் வருவான்னு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க…, ஒரு ரெஸ்பான்ஸிபிலிட்டி இல்ல..? “.. எண்ணையில் போட்ட கடுகாய் வெடித்தாள்.
“சரண்.. முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கோம் .. அப்பறம் பேசு..”
“ஓஹ்”, குரலை குறைத்தவள் , “நரேன் .. ஏதாவது பிரச்சனையா? கிளம்ப லேட்டாகுமா?”, வினவ…
“சே சே பிரச்னைல்லாம் இல்ல.. ஜஸ்ட் அடுத்த ஆர்டர் பத்தின டிஸ்கஷன் தான் போயிட்டு இருக்கு.., நீ சாப்டுடு , எங்களுக்கு வெயிட் பண்ணாத..”, பொய்தான் .. இது SNP-க்கு , சரண்யுசாயா -வின் மேலிருந்த அன்பால் விளைந்த அக்கறை பொய்.
“ம்ஹ்ம்…. சரி .. நீங்களும் சீக்கிரம் வர பாருங்க “, என்று தொடர்பை துண்டித்தாள்.
சரண்யுசாயாவுடன் பேசி முடித்த SNP, அவர்களது அந்த புது தொழிற்சாலையில் , இவனுக்கான பிரத்யேக அலுவலக அறையில் அமர்ந்திருந்தான். முகத்தில் குழப்ப ரேகைகள். இறந்த அந்த தொழிலாளி-யை பற்றியே மனம் சிந்தித்தது. இளங்கோவன், 43 வயது, 15 வருடங்களாய் வேலை பார்க்கும்.. எவ்விதமான கெட்ட பழக்கங்களும் இல்லாதவன் … பதிமூன்று, பத்து வயதில் இருக்கும் இரு பிள்ளைகளின் தகப்பன்.. ஒரு கரும்புள்ளியும் இல்லாத, திறமையான தொழிலாளி என்றனர், அவனை அறிந்த அனைவரும்..
காலை முதல் ஷிஃப்ட் வேலையை முடித்து, உடை மாற்றவென , தொழிலாளர்கள் அறைக்கு சென்றவன்.. சென்றே விட்டான்..
பாஸ்கரும் , எக்ஸிகியூடிவ் டைரெக்டரான பரந்தாமனும் SNP யின் அறைக்கு வந்தனர். இருவரின் முகத்திலும் களைப்பையும் மீறி கவலை தெரிந்தது. SNP
கேள்வியாய் நோக்க.. பாஸ்கர் தொண்டையை செருமி,
” போலீஸ் பார்மாலிட்டீஸ் முடிச்சாச்சு டாட் .. இளங்கோவன் பாடிய போஸ்ட் மார்ட்டம் பண்றதுக்கு எடுத்துட்டு போய்ட்டாங்க..”, என்றவன், சற்று நிறுத்தி, பெருமூச்சுடன், ” அவங்க வீட்டுக்கு தகவல் சொல்லி அனுப்பிட்டோம், ஒரு லேடி ஸ்டாஃப்-ம் கூட போய் இருக்காங்க.”, கனத்த மனதுடன் சொல்லி முடித்தான்.
“ம்ம்.. “
“ஸார் .. நாம வந்த மொத நாளே இப்படி நாடாகும்-னு நினைக்கலை., சாரி சார்”, என்று வருத்தத்துடன் கூறினார் பரந்தாமன்.
“இட்ஸ் ஓகே. இதுக்கு நீங்க என்ன பண்ண முடியும் , விடுங்க”,, என்ற SNP, தொடர்ந்து…,
“இளங்கோவனோட, இன்ஷுரன்ஸ், பி.எஃப், அரியர்ஸ் எல்லாம், அடுத்த வாரத்துக்குள்ள செட்டில் பண்ணிடுங்க., அவங்க வீட்ல வேற யார் வேலை செய்ய தகுதியா இருக்காங்க-ன்னு பாத்து, ஜாப் ஏற்பாடு பண்ணுங்க. ஓகே?”… என்று முடித்தான் ….
“எஸ் டாட் “, சொன்னவன் இருக்கையில் அமர்ந்து, பரந்தாமனை பார்த்து, “அங்கிள், நீங்க கிளம்புங்க,.ரொம்ப டையர்டா இருக்கீங்க… “, திரும்பி தந்தையை பார்த்து , “டாட் நீங்களும் தான், இன்னிக்கு நான் இங்க இருந்து பாத்துக்கறேன். “, கூற..
பரந்தாமன் கேள்வியாய் SNP -யை நோக்க…”ஆமா, பரந்தாமன், நீங்க இப்போ போய் ரெஸ்ட் எடுத்து, காலைல வாங்க.. நானுமே வீட்டுக்கு போறேன்”, சொல்லி கதவருகில் சென்ற SNP, “பாஸ்கர்.. இது அம்மாக்கு தெரிய வேண்டாம், டென்ஷானாவா:,….. “அப்பறம் ……… உன் போன் சைலன்ட் – ல இருக்கா?, செக் பண்ணிக்கோ “, சொல்லி கிளம்ப……
அப்பொழுதான் அவனுக்கு அலைபேசி நினைவும், கூடவே பைல் பற்றிய நினைவும் வந்தது. அவனது பேசியை, இந்த தொழிற்சாலை பிரச்சனையில் மறந்து காரிலேயே விட்டிருந்தான்.
“அம்மா சாயா விடம் கண்டிப்பாய் அர்ச்சனை உண்டு”, இந்த நினைவு வந்ததும்.. சின்னதாய் குறுநகை வந்தது..
++++++++++++++++++++++++++++++++++++++
“ஒட்றகுச்சி”, அவளின் இந்த ஒரு வார்த்தையில், அவன் தலைசுற்று, மயக்கம் அனைத்தும் தெளிந்திருந்தது. இந்த உலகத்திலேயே அவனை இப்படி கூப்பிட்ட முதலும் கடைசியுமானவள்.
“நானிருக்கிறேன் கவலைப்படாதே”, என்று நம்பிக்கை விதைக்கும் அந்தக் கண்கள், அந்த கூர் விழி….. “டே…ய்……”, இளம்பரிதி யின் நினைவு காட்சியை அருகில் இருந்த சுதாகர், தட்டி கலைத்து, “இளா, ஒகே?” என்று கேட்க… “யெஸ்”, சொன்னவனுக்கு நெற்றியில் இருந்து ரத்தம் வடிந்து, தாடையை தொட்டது.. அப்போதுதான், தியாவின் கார் அவன் மண்டையை இடித்தது அவனுக்கே தெரிந்தது.
அதிதி சந்த்யா திகைத்து நின்றது ஓரிரு வினாடிகளே, இளம்பரிதியின் தலையில் காயம் கண்டவுடன், “ஓ மை காட்.. ரத்தம்., பரிதி, வாங்க ஹாஸ்பிடல் போய்டலாம்.”, மனம் பதைத்தாலும், நிதானத்தை கைக்கொண்டாள். மருத்துவர் அல்லவா?
“இளாவை உங்களுக்கு தெரியுமா?”, சுதாகர் ஆச்சர்யத்துடன் வினவ, “யா.. ஸ்கூல்மேட்”, பதில் இளாவிடமிருந்து… தொடர்ந்து. “உங்களுக்கு வீண் சிரமம்., சாரி, குறுக்க வந்ததுக்கு. அண்ட் தேங்க்ஸ், உங்க ஹெல்ப்க்கு:”, அவளை வெட்டி விடுவதில் தீவிரமாய் இருந்தான், இளம்பரிதி.
இத்தனை பேச்சுக்கள் நடக்கும்போதும், ஒரு அலைபேசி ஓயாது அடித்துக்கொண்டே இருந்தது.., சுற்றி கூட்டமும் கூடிவிட,
“ஏம்மா, கார் வச்சிருந்தா, ஏரோப்ளேன் ஓட்றோம்-னு நினப்பா?”,
“எல்லாம் காசு கொடுக்குற இடம்-வே”,
“மச்சி, இப்போல்லாம் பொண்ணுங்கதான்டா தண்ணீயடிச்சு, ஆள தூக்கறாளுக”,
வேறு வேறு குரல்கள், வேறு வேறு த்வனியில்.. ஆனால் அனைவரும் கைகாட்டியது என்னவோ தியா-வைத்தான்..
“இல்லல்ல… நான்தான் பாக்காம வந்துட்டேன்… “, கூட்டத்திற்கு பதிலாய் சொன்னாலும்., யார் கேட்பது அங்கே?,
அவளுக்கோ நெருப்பில் நிற்பதுபோல் இருந்தது.. “ப்ளீஸ், எதுவா இருந்தாலும் கார்-ல போயிட்டே பேசலாம். ஏறுங்க.,.” என்றாள். வேறு யாருடனும் பேசும் மனநிலையில் அவள் இல்லை, இளம்பரிதியின் தலைக்காயம் மட்டுமே அவள் கருத்தில் நின்றது.
“சிஸ்டர், என் பைக் அங்க நிக்கிது.. நீங்க போங்க, நான் ஃபாலோ பண்ணிட்டே வர்றேன்.”, நொடியில் அண்ணனான சுதாகர், அலைபேசி எண்ணை தியாவிடம் பகிர்ந்தான். தியாவின் கார் இளம்பரிதியை உள்வாங்கி நகரத்தொடங்கியது..
காரை சிறிது தொலைவு சென்று நிறுத்திய தியா, டேஷ் போர்ட்-டில் இருந்த முதலுதவி பெட்டியை எடுத்து, இளம்பரிதிக்கு சிகிச்சை அளிக்க துவங்கினாள். அங்கே கூட்டத்தில் காரை நிறுத்தி எதையும் செய்ய யோசிக்க தோன்றாமல், கிளம்பியிருந்தாள் . இருவருக்கிடையே பேச்சில்லா மௌனம்.
தியாவின் கைகளோ அதன் போக்கில் வேலையை செய்ய, இளம்பரிதியோ, அவளது வாசத்தில், கல்லாய் சமைந்திருந்தான். மனமோ, தியாவின் அருகாமையில் வசமிழந்திருந்தது.
“நல்ல வேளை , பிளட் ஹெவி லாஸ் ஆகலை.”, வாய் தன்னிச்சையாய் வெளியே சொல்ல ….மனசுக்குள் “அப்பாட்ட காலை-ல தான் இவனைப்பத்தி பேசினோம், இன்னும் அதே ஈகோயிஸ்ட் இளா -தானா?, இல்ல மாறிட்டானா?” ஓடியது. பேசிக்கொண்டே பிளாஸ்டர் ஒட்டினாள்.
“ஓகே டன்., இப்போ ஹாஸ்பிட்டல் போகலாம்..”, இவள் சொன்னவுடன், இளம்பரிதி நடப்பிற்கு வந்தான்.
“நோ. நோ. அதான் ஃப்ர்ஸ்ட் எயிட் பண்ணியாச்சில்ல?, இனிமே நான் பாத்துக்கறேன்.என்னை இறக்கி விடுங்க. நான் ஆட்டோ பிடிச்சு போய்க்கிறேன்” , அவனது நிலையோ தியாவை தவிர்க்க வேண்டும், தவிர்த்தே ஆகவேண்டும் என்பதாய்..
“நானும் அப்போலேர்ந்து பாத்திட்டு இருக்கேன்.. தெரியாத மாதிரியே பேசறீங்க.. என்னை கட் பண்றதிலேயே குறியா இருக்கீங்க.. லேடீஸ் கூட பேசினா, உங்க மிஸ்ஸர்ஸ் கோச்சுப்பாங்களோ?”, சின்னதாய் கோபத்துடன் சீண்டினாள் .
“என்ன பாத்தா கல்யாணம் ஆனவன் மாதிரி தெரியுதா?”, பழைய இளா எட்டிப்பார்த்தான்.
“ம் ம்..”… விழிவிரித்து, பல வருடம் கழித்து , முதன் முறை அவனை, அவன் முகத்தை முழுமையாய் பார்த்தாள். பள்ளியில் பார்த்த அரும்பு மீசை தொலைந்து, நேர்த்தியான, ட்ரிம் செய்த மீசை.. மிடுக்காய் ஒட்டி வெட்டப்பட்ட முடி, அடர்த்தியான புருவம், ஆளைத் துளைக்கும் பார்வை…., இவள் விழிகள்… அவன் பார்வையில் நின்றது. பரிதியின் கண்கள் சிவந்திருந்தாலும் , அதையும் தாண்டி ஒரு விரக்தி, இவள் விழியை சந்தித்த அந்த நொடி மின்னலாய் ஆர்வம், பின் கவனமாய் மொழி தொலைத்தது அவன் விழி.
“ஹலோ, லேடீஸ் மாதிரி ஜென்ட்ஸ்-ல்லாம் கழுத்துல கால்-ல, கல்யாணம் ஆனதுக்கு அடையாளம் போட்டுட்டா இருக்கீங்க.. பாத்த உடனே சொல்றதுக்கு?”,
“ஸாரி , ஐ யாம் சிங்கள்”, சன்னமாய் சொன்னவன், நிமிர்ந்து “ப்ளீஸ் நான் கிளம்பறேன்”, கூறும்போது, “டொக். டொக். டொக்.”, காரின் ஜன்னல் தட்டப்பட, இளா கதவை திறந்தான். தட்டியவன் சுதாகர். “ஏன்டா, நின்னுட்டே?, சிஸ்டர் இவன் எதாவது பிரச்சனை பண்றானா?”
“டேய் . அதெல்லாம் இல்லடா. ஃபர்ஸ்ட் எயிட்-க்கு நிறுத்தினாங்க. வா போலாம்.”, இது இளம்பரிதி.
“இளா, அந்த இம்சைட்ட இருந்து கால் மேல கால்.. நீ அந்தாள திட்டினதுல சரி கடுப்புல இருப்பான்.. நான் போயி என்னன்னு கேட்டுட்டு வர்றேன்.. இல்லன்னா மெமோ அது இதுன்னு, காலம் பூரா ப்ரமோஷன் பத்தி யோசிக்க கூட முடியாத மாதிரி பண்ணிடுவான், நீ இப்போ சிஸ் கூட போ , நான் நைட் பிக்கப் பண்றேன்…”, என கூற….
தியா-விற்கு ஏதோ புரிவது போல் இருந்தது. இளம்பரிதியும், சுதாகரும் ஒரே இடத்தில் வேலை செய்பவர்கள், காக்கி பேண்ட், ஒட்டி வெட்டிய முடி, வெயிலில் கருத்திருந்த கடுகடு முகம், உடற்பயிற்சி தேகம்.. அனைத்தும் இவர்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்று சொல்லாமல் சொல்லியது.
இப்போதும் சுதாகரின் பேசி அடித்துக்கொண்டே இருந்தது… எடுத்து,
“சார், இன்னும் அரை மணி நேரத்துல வர்றேன் சார், இங்க ரோட்-ல ட்ராபிக் … அதான் லேட்..”, மறுமுனை ஏதோ கேட்க…..
“தெரியல சார். நான் இன்னும் அவரை பாக்கல, கால் பண்ணினா கண்டிப்பா காண்டாக்ட் பண்ண சொல்றேன்.. “, சொல்லி முடித்தான்.
இளம்பரிதிக்கு தலை விண் விண் என்று வலித்தது. “சே.. “, என்று தலையில் கை வைத்தவன் ” ஓகே டா பை”, என்று சுதாகருக்கு சொல்லி, தியாவை பார்த்து தலையசைத்து, “போலாம்”, உதிர்த்தான்.
காரை ஸ்டார்ட் செய்து, “ஹாஸ்பிட்டல் தானே?”,
“ப்ளீஸ் நோ. நான் ரெஸ்ட் எடுக்கணும். நீ டாக்டர் தானே?ஆன்டிபயாடிக்கும், பாராசிட்டமால்-லும் கொடு. அப்படியே என்னை போலீஸ் குவாட்டர்ஸ் – ல இறக்கி விட்டுடு..”
பக்கவாட்டில் அவனை பார்த்து, “அப்போ என்னைப்பத்தி தெரிஞ்சு வச்சிருக்கீங்க “
“ப்ரெண்ட்ஸ் சொல்லுவாங்க.. அப்படி தெரியறதுதான்.. ஒரே ஊர் தானே..”,
கார் லாவகமாய் சென்னையின் போக்குவரத்தில் சென்றது. பரிதி-க்கு ஸ்டிச்சிங் தேவைப்படாததால், வீட்டில் விட முடிவெடுத்து மெடிக்கல்லில் நிறுத்தி, அவனுக்குன்டான மாத்திரைகள் வாங்கினாள். அவனிடம் அட்ரஸ் கேட்டு, இருப்பிடம் வந்து, அவன் இறங்க உதவி செய்ய, பரிதியோ அவனாகவே காரை விட்டு இறங்கி , “நோ. நோ ஐ கேன் மேனேஜ். “என்றவன் குரலில் இருந்த உறுதி, அவன் கால்களில் இல்லை…
இவன் நடக்க .. அவை நடுங்க.. விருட்டென, அவனின் கையை எடுத்து தோளில் போட்டு கொண்டு, “வாய மூடு.. வீணா ஸீன் போட்ட.. , அந்தர் பண்ணிடுவேன்.., போலீஸா இருந்துட்டு நடு ரோட்ல சிக்னல் மீறி போறதே தப்பு.. அப்படியே விட்டு ஏத்தி இருக்கணும் .. பாவமாச்சேன்னு பாத்தா…இதுல இந்த முகரைக்கு ஈகோ வேற, இன்னும் மாறவேயில்லையா நீ ?”..
இப்போது “நீயும்தான் மாறவேயில்லை. கோபம் வந்தா லோக்கல் பாஷை-ல, சீனியர் -ங்கிற மரியாதை இல்லாம பேசறது அப்டியே வச்சிருக்க..”, அட, பரிதிக்கும் சிரிப்பு வருதே? , அதிதி சந்த்யாவை பார்த்தவாறே, பரிதி அழகாய் முறுவலிக்க , அவனுடன் அவனை தோளோடு அணைத்தவாறு நடந்த தியாவும் அவனை பார்த்து புன்னகைக்க..,இருள் ஆரம்பித்த முன்னிரவில் , பௌர்ணமி நிலவொளியில், பாஷைகள் நின்று பார்வைகள் பேச ஆரம்பிக்க , நேரம் நின்றது இருவருக்கும்.
மூங்கில் தோட்டம் ; மூலிகை வாசம்
நிறைஞ்ச மௌனம் ; நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு ; பனி விழும் காடு
ஒத்தயடிப்பாத ; உங்கூட பொடிநட..
இது போதும் எனக்கு; இது போதுமே..
வேறென்ன வேணும் ; நீ போதுமே..
காரிலிருந்து கசிந்த பாடல், இருவரின் மனம் உரைத்தது.
மொழிவோம்..