அன்று அவளை போய் கல்லூரி விடுதியில் விடுவது விவேக்கின் வேலையாகி போனது! காரில் இருந்த அவளின் சாமான்களை எல்லாம் இறக்கித் தர உதவியவன், விடைப் பெறுமுன்,
“ஏன் மயூரி இந்த திடீர் முடிவு! நான் எதுவும் உனக்கு தொல்லை கொடுத்துட்டேனா!” என்றான்!
அவள் ஹாஸ்டல் விஷயத்தை வீட்டில் சொன்ன நாள் முதல் அவன் முகமே சரியில்லை! நடுவில் தோன்றத் தொடங்கியிருந்த அவனின் சிரித்த முகமெல்லாம் எங்கையோ காணாமல் போயிருந்தது! இப்போது அவன் கேட்கவும் என்ன சொல்ல என்பது இவளுக்கு தெரியவில்லை!
“சேச்சே அதெல்லாம் இல்லை விவேக்! உங்களுக்கே தெரியும் தானே இந்த ஃபீல்ட் எவ்ளோ கஷ்டமுன்னு! அதில் இது எனக்கு முக்கியமான வருஷம்! வீட்டில் ரொம்ப படிக்க மாட்றேன், பிளஸ் டிராவலில் டைம் போகுது…அதான்…!
அவன் கண்களை நேராக சந்திக்க முடியவில்லை! அவள் அவிழ்த்து விட்ட பொய்களை கண்டுபிடித்து விடுவானோ என்ற அச்சம்!
“ஓகே நீ சொல்றதை நம்ப எனக்கும் ஆசைதான்!”
தன்னை பார்த்தவளை கண்டு முறுவலித்தவன்,
“எனிவே, நல்லா படி! அட்லீஸ்ட் வீக்கெண்ட் வீட்டுக்கு வா! எனக்கு போன் செஞ்சா நான் வரேன் கூப்பிட! டேக் கேர் மயூரி!”
‘நிஜமாவே நீதானாடா பேசுவது!’ மயூரியின் சந்தேகம் அவளை விட்டு போகமாட்டேன் என்றது! அங்கே அவளை விட்டுப்போக மனமில்லாதவன் போல் அடிக்கடி அவளை திரும்பி பார்த்தபடி போனவன் விரைவில் அவள் பார்வையிலிருந்து மறைந்து சென்றான்.
முதல் இரண்டு நாள் அங்கே தங்கியிருப்பது கொஞ்சம் வித்தியாசமாக தோன்றினாலும் அடுத்தடுத்து வந்த நாட்களில் அந்த வாழ்க்கையை பழகிக் கொண்டாள். இடமாற்றம் என்பது என்றுமே அவளுக்கு புது விஷயமல்ல! பெற்றோரை இழந்திருந்த நேரத்தில் மாமன் வீட்டுக்கும் சித்தப்பனின் வீட்டுக்கும் அலைக்களிக்கப்பட்டவள் தான். அமுதா அத்தையும் கனகவேல் மாமாவும் முன்னே வந்து அவளுக்கு அடைக்கலம் கொடுக்காத வரை அவள் வாழ்க்கை நரகமே! இப்போது நினைத்து பார்க்கக் கூட உடல் பதறியது!
இப்போது அப்படிப்பட்ட அந்த பாதுகாப்பு பெட்டகத்தை விட்டு விலகியிருக்கிறாள்! என்ன நேருமோ என்ற தயக்கம் அவள் அடிமனதில் இருந்ததென்னவோ உண்மை!
விஷ்ணு அடிக்கடி போன் செய்தான்!
கோபம் எல்லாம் அவர்கள் இருவருக்கிடையில் நிற்காது!
எத்தனை சண்டை போட்டாலும் மீண்டும் பழைய நிலைக்கு வரும் ஆற்றல் அவர்களை போன்ற உண்மையான நண்பர்களுக்கு மாத்திரமே உண்டு!
“வேலை வெட்டிக்கு போற ஐடியா இல்லையா”
“அப்படி சொன்னேனா உன் கிட்ட?”
“மாமாக்கு ரிடையர்மெண்ட் டைம் வந்திருச்சு தெரியுமில்ல! கொஞ்சம் பொறுப்பா வேலையை தேடிக்க பாரு விஷ்ணு!”
“பொறுப்பை பத்தி பெரிய பருப்பு மாதிரி நீ பேசாதே! நான் என்ன வெட்டியா படிக்க வந்தேன்னு நினைச்சியா! இன்னும் ஒரு வாரம் தான் காலேஜ், அப்புறம் அங்க வந்து வேலை தேடுறேன்”
கோபத்தில் கத்தி தீர்த்தான் அவளை!
“ம்ம்…கொஞ்ச நாள் முன்னாடி அத்தை என்கிட்ட என்ன கேட்டாங்க தெரியுமா, என் சின்ன பையனை கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இருக்கான்னு கேட்டாங்க! ஆத்தாடி…ஒரு புதைக்குழியில் தெரிஞ்சே நானே போய் விழுவேனா? யாருன்னு தெரியாத அந்த மோனிக்கே நான் பாவம் பார்த்திட்டிருக்கேன்… ஹ ஹ”
பெரிய ஜோக் சொன்னதை போல் போனில் அவள் மட்டும் தனியே சிரித்துக் கொண்டிருந்தாள்.
எதிர்பக்கம் அவன் தன் பல்லைக் கடித்தபடி,
“ஆங் அப்படியா! அந்த குழிக்கும் பக்கத்தில் எட்டிப் பாரேன், அதை விட ஒரு பெரிய குழியிருக்கு! அதில் உன்னை தள்ளிவிட பல பேர் முயற்சி செய்றாங்க! நீயும் அவங்க பேச்சுக்கெல்லாம் உடன்பட்டு அதுக்கு கிட்ட வந்து நிக்கிறது உன் மனக்கண்ணில் தெரியுதா!”
விவேக்கை வைத்து அவளை ஓட்டிக் கொண்டிருந்தான்.
இப்போது இவளுக்கு கோபம்!
“ஆரம்பிச்சிட்டியா! வேற ஏதாவது பேசு!”
விவேக் விஷயத்தில் விடுபட்டிருந்த தலைவலி மறுபடியும் அமுதாவுக்கு ஆரம்பித்து விட்டது! இந்த பெண் வள்ளி இன்னும் எத்தனை காலம் எடுப்பாள் என்பதில் அவளுக்கு தெளிவில்லை! இதற்கிடையில் அவர் முயற்சி செய்த வெளி இடங்களில் சிலவற்றில் பதில் வர ஆரம்பித்தது! விவேக் இதெற்கெல்லாம் சம்மதிப்பானா என்பது நூறு டாலர் கேள்வி தான் என்றாலும், முயன்று பார்த்துக் கொண்டிருந்தார் அவனை பெற்றவள்!
இதற்கிடையில் அவருக்கென்றே ஒரு வில்லங்கம் மன்னார்குடியிலிருந்து டிரெயின் பிடித்து அவர்கள் வீட்டுக்கு வந்தது! அதன் பின் நடந்த பேச்சுப்போரில் மணமொடிந்து போன அமுதா மயூரவள்ளியை நேரில் சந்திக்க ஹாஸ்டலுக்கு வந்துவிட்டார்!
பல வாரங்கள் கழித்து அத்தையை பார்த்ததில் சந்தோஷமாய் இருந்தது மயூரிக்கு! அவளை போலவே அவள் தோழிகளுக்கும்! வள்ளி அங்கே வீட்டுக்கு வரமுடியாத வாரங்களில் அவளுக்கு ருசியான உணவுகளை சமைத்து தந்தனுப்புவார் அமுதா! அவளுக்கு மட்டுமின்றி அந்த மற்ற பிள்ளைகளுக்கும் சேர்த்தே அனுப்புவார்! அதற்கு கிடைத்த மரியாதை இது!
தோழிகள் விலகிய பின் அவ்விருவருக்கு மட்டும் கொஞ்சம் தனிமை கிடைக்கவும்,
“உன் மாமா வந்திருந்தார் வள்ளி மா! பொண்ணை ஹாஸ்டலில் விட்டதை ஏன் அவர் கிட்ட சொல்லலைன்னு ஒரே பிரச்சனை! சமாளிச்சு அனுப்பிறதுக்குள்ள எங்களுக்கு நாக்கு தள்ளி போச்சு! இந்த ஊரில் தான் இன்னும் மூணு நாள் இருக்காராம், இன்னிக்கும் மறுபடியும் வருவாராம்! உன்னை பார்க்காம போறதில்லையாம்! நாங்க ஏதோ உன்னை கடத்திக் கொண்டு வச்ச மாதிரி அந்த பேச்சு பேசுறார்.”
அமுதாவின் முகத்தில் டன் கணக்கில் வருத்தம்! நல்லதுக்கு காலம் இல்லையே, கலிகாலத்தில் இதெல்லாம் நடக்கும் போல!
“இன்னிக்கு அங்க வந்திட்டு போ வள்ளி! கிளாஸ் முடிஞ்சதும் விவேக்கை வந்து கூப்பிட சொல்லட்டா?”
அவர் சொன்ன விஷயம் ஏகப்பட்ட சினத்தை அவளுக்குள் ஏற்றி வைத்து விட்டது! இவர்களை கேள்வி கேட்க அந்த குரு மாமா யார்! அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற ஆத்திரம் அவளுக்கு! அமுதாவின் கையை சமாதானமாய் பிடித்துக் கொண்டவள்,
“வேண்டாம் அத்தை நானே வரேன்!” என்றாள்.
அதன் பின் வகுப்பில் இதே சிந்தனை! இந்த ஆளுக்கு இன்னிக்கு இருக்கு! சண்டைக்கு தயாராய் செல்லும் படைத் தளபதி போல் மாலை அங்கே வீட்டுக்கு சென்றாள்!
கனகவேல் மாமாவை பற்றி மயூரி நன்கு அறிவாள்! அவருக்கு பிடிக்காத நபரே இந்த உலகத்தில் கிடையாது என்று நினைத்திருக்கிறாள்! ஆனால் அந்த நினைப்பில் முதலில் மண் விழுந்தது இந்த ‘குருமா’ வால் தான்!
குரு மாமா முதலில் எல்லாம் அவளை மாதம் ஒருமுறை வந்து பார்த்துவிட்டு செல்வார்! அமுதா கனகவேலின் வீட்டை ஒட்டியுள்ள பெரிய பங்களா மயூரவள்ளியின் பெற்றோர் அவளுக்கு விட்டு சென்ற சொத்துக்களில் ஒன்று! அதை பராமரிக்கும் சாக்கில் தான் அவரின் வருகை இருக்கும்! வாடகை பணம் வங்கியில் போட வழி செய்யாமல் இவர் கைகளில் போய் கொண்டிருந்த விஷயம் பல மாதங்களுக்கு பிறகே மயூரியின் வக்கில் மணிகண்டனுக்கு தெரிய வந்தது!
அதற்கு ஒரு மாற்றம் செய்து மயூரியின் பெயருக்கு வரவு வைப்பதில் பெரிய பெரிய சவால்களை சமாளித்திருக்கிறார்கள் அந்த வக்கிலும், கனகவேல் மாமாவும்! இதெல்லாம் பின்வந்த காலத்தில் தான் மயூரி தெரிந்து கொண்டாள்! இதோ இப்போது அந்த நல்ல உள்ளம் அவளை நேரில் பார்க்க வந்திருக்கிறது!
வீட்டுக்கு இவள் வரும் முன்பே ‘குருமா’மா அங்கே ஆஜர்! அவர் கூட இருந்தவரை எங்கையோ பார்த்த நியாபகம் அவளுக்கு!
வந்தவர்களை மதிக்கும் எண்ணமில்லாமல் அவள் தன் காரியங்களை முடித்துக் கொண்டு, அவளுக்கு மட்டுமாய் ஒரு காபியை கலந்துக் கொண்டு அவர்கள் எதிரில் அமர்ந்தாள்! அமுதாவோ கனகவேலோ இவள் அருகில் இல்லை!
“என்ன மயூரி கண்ணு, நல்லா இருக்கியா! என்ன தான் உன்னை பக்கமிருந்து பார்க்காட்டியும் உன் வாழ்க்கை நல்லா இருக்கணும் என்னை தவிர வேற யாரும் நினைக்க மாட்டாங்க!”
ஜாடையாய் அமுதாவையும் கனகவேலையும் சொன்னார் அந்த குருமா!
“ஏன் சொல்றேனே நான் உன் அம்மாவுக்கு கூட பிறந்த தம்பி! தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும்னு சும்மாவா பெரியவங்க சொல்லியிருக்காங்க!”
அவர் சொன்னவைக்கு அவரும் அந்த புதியவரும் பெருமையாய் சிரித்துக் கொண்டனர்! மயூரி எதுவும் தனக்கு கேட்காதது போல் காபியை பருகிக் கொண்டிருந்தாள்!
“என்ன விஷயமா என்ன பார்க்க வந்தீங்க?”
“நீ எப்படி இருக்கேன்னு பார்க்க வந்தேன், உன்னை ஹாஸ்டலில் தள்ளிடாங்களாமே! யாரை கேட்டு இப்படி செய்றாங்க?
உன் மாமன் நான் இருக்கேன்னு காட்ட தான் உன்னை இன்னிக்கு இங்க வர சொன்னேன்!”
அவர் பேசுவதில் எதுவும் ‘லாஜிக்’ இருப்பதாக அவளுக்கு தோன்றவில்லை!
“இவங்க யாரும் என்னை அப்படியெல்லாம் எங்கையும் அனுப்ப மாட்டாங்க, நீங்க செஞ்ச மாதிரி! படிப்பு ஜாஸ்தியானதால் நானே தான் போனேன்! எனக்கு எப்ப எதை செய்யணும்னு தெரியும்! உங்க வேலையை மட்டும் பாருங்க மாமா!”
எடுத்தெறிந்து அவள் பேசியதில் கொஞ்சம் கடுப்பு அவர் முகத்தில்!
பேச்சை மாற்ற வேண்டி,
“அப்படியா கண்ணு! நீயே செஞ்சியிருந்தேன்ன சரிதான் மா.அப்புறம், இவர் இங்கே இந்த தெருவில் தான் இருக்கார்! நம்ம வீட்டை ரொம்ப நாளா விலைக்கு கேட்குறார்! நான் சொன்ன நீ கேட்பேன்னு உன்கிட்ட கூப்பிட்டு வந்தேன்! கேட்குற விலைக்கு அதை கொடுத்திடு மயூரி! உன் கல்யாண செலவுக்கு நமக்கும் பணம் வேணுமில்ல! இந்த வீட்டுக்காக அந்த லாயருக்கு வேற தண்டம் அழ வேண்டியிருக்கு!”
கோபத்தின் உச்சிக்கு போய்விட்டாள். அவள் பிறந்து வளர்ந்த வீடது! இன்னமும் பல நல்ல நினைவுகள் அங்கே கொட்டிக் கிடக்கிறது!
இவர் யார் அதைப்பற்றி கருத்து சொல்ல!
“லாயர் மாமாக்கு நீங்களா சம்பளம் தரீங்க? என் அக்கவுண்டில் இருந்து தானே போகுது!”
ஆத்திர மிகுதியில் மூச்சு வாங்கியது அவளுக்கு!
“என்னை பெத்தவங்க அவங்க சுயசம்பாத்தியத்தில் வாங்கிய சொத்து இதெல்லாம்! அதன் உரிமை எனக்கு மட்டும் தான்! அதை பத்தி கவலைபடவேண்டிய ஆளும் நான் மட்டும் தானே!”
பதில் பேசவே இல்லை மிஸ்டர்.குருமா!
“நான் அதை என்ன செய்யணும்னு எனக்கு நல்லா தெரியும் மாமா! நல்ல விதமா எனக்கு அறிவுரை சொல்லித் தர இவங்க இரண்டு பேரும் இங்க இருக்காங்க!”
அவளின் உரத்த குரல் கேட்டு அங்கே வந்துவிட்டிருந்த அமுதாவையும் கனகவேலையும் காட்டி சொன்னாள்!
குரு வாயடைத்து போயிருந்தார்!
“உங்களுக்கு வேற எதாவது பேசணும்ன லாயர் மாமா நம்பர் இருக்குல்ல அங்க கேட்டுக்கோங்க.. இப்ப நீங்க போகலாம் மாமா!”
இந்த அவமரியாதையை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை!
“கோடிக்கணக்கில் சொத்துடன் ஒரு அனாதை பொண்ணு கிடைச்சா யாராவது சும்மா விடுவாங்களா! எனக்கு அப்பவே தெரியும் ஏதோ திட்டம் போடுறாங்கன்னு!”
விஷத்தை கக்கினார் குரு மாமா என்ற குருமா!