IM5

IM5

“அத்தை கேட்குறேனேன்னு தப்பா நினைக்காதே வள்ளி கண்ணு!”

கனகவேல் என்றோ சொல்லியிருந்ததை கேட்க இன்றைக்கே அமுதாவால் முடிந்தது!

“உங்களுக்கு இல்லாத உரிமையா! எதுவாயிருந்தாலும் கேளுங்க அத்தை” தன் பக்கம் கட்டிலில் அமர்ந்திருந்தவரின் மடியில் உரிமையாய் படுத்துக் கொண்டாள் மயூரி!

அமுதாவின் கை வழமை போல் அவள் தலையை நீவிவிட ஆரம்பித்தது!

அன்பும் பாசமும் காண்பிக்க காசா பணமா, எதுவும் தேவையில்லையே! ஆனால் அதை இந்த பிள்ளைக்கு தர அவள் உறவுகளில் ஒருவருக்கு கூட மனமில்லாமல் போனதே! பழைய நியாபகங்கள் அவரை ஆளத் தொடங்கின! அதிலிருந்து ஒருவாராய் வெளி வந்தவர்,

“நீ உன் மனசில் வேற யாரையும் நினைச்சிருக்கியா வள்ளி! விவேக்கை மட்டும் தான் கல்யாணம் செய்யணும்னு நாங்க உன்னை கட்டாயப்படுத்தலை! யாரா இருந்தாலும் பரவாயில்லை! உன் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம்! எதுவாயிருந்தாலும் எங்க கிட்ட மறைக்காம சொல்லு!”

‘விஷ்ணு நம்ம வாத்தியாரை பற்றி அத்தைகிட்ட எதுவும் உளறியிருப்பானோ!’

‘பத்த வச்சிட்டியாடா!’

“ஏன் இப்படி கேட்குறீங்க அத்தை? வந்து … விஷ்ணு எதுவும் சொன்னானா?”

“இல்ல விவேக்கை கல்யாணம் செய்துக்க ரொம்ப யோசிக்கிறியே, அதான் ஒரு வேலை வேற யாரையோ இல்லை விஷ்ணுவையோ பிடிச்சிருக்கோ என்னவோன்னு…”

“சே சே”

பதறியடித்துக் கொண்டு எழுந்தாள்.

“அவனையா! அப்படியெல்லாம் எதுவுமில்லை!”

அவள் பதறியதை பார்த்த அமுதாவுக்கோ ஆனந்தம் மட்டுமில்லை பேரானந்தம்!

“ஏன் வள்ளி அவனுக்கு என்ன குறைச்சல்! இப்படி பதறுவானேன்!”

“மோசம் எல்லாம் இல்லை அத்தை! ரொம்ப நல்லவன். எனக்கு அவனை பத்தி எல்லாமே தெரியும்! ஆனா எங்களுக்குள்ள நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவும் இல்லை!”

“உன் கிட்ட நேரிடையா இதைக் கேட்றணும்னு மாமா சொல்லிகிட்டிருந்தாரு வள்ளி! அதான் கேட்டேன்! நீ யாரை கல்யாணம் செய்துகிட்டாலும் பரவாயில்லை. ஆனா உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும்! நீ பட்ட கஷ்டமெல்லாம் போதும்! விஷ்ணுவும் இதையே தான் சொல்றான்!”

எத்தனை எத்தனை அன்பு மொழிகள்! அவளின் இந்த பிறவியில் முன்னேற்ற பாதையில் இழுத்து செல்வதே இவர்களின் இந்த வார்த்தைகள் தான்! தான் அவர்களுக்கு திரும்ப செலுத்த வேண்டிய நன்றிக்கடனின் கணக்கு அவள் மனதில் கூடிக்கொண்டே போனது!

கல்லூரிக்கு சென்ற பின்புதான் தெரியும் அன்று மாலை இளமாறன் சாரின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு போகப் போவது! தோழிகள் எல்லாம் உற்சாகமாய் தாங்கள் என்ன அணிய வேண்டும் என்பதை பற்றி கதைத்துக் கொண்டிருக்க, இவளுக்கோ போய் தான் தீரணுமா என்ற எண்ணம்! அவள் சொல்லி கேட்க அங்கு எவரும் இல்லாத காரணத்தால் அவளும் அங்கே செல்லும்படியாயிற்று!

அவரை மறந்தாயிற்று இனி அவர் திருமணத்தை பார்ப்பதில் என்ன பெரிய கஷ்டம் வந்துவிடப் போகிறது! கடைசிக்கு இப்படி நினைத்து தான் தோழிகளுடன் அங்கே சென்றாள் மயூரி! ஆனால் எல்லாம் தலைகீழ்! நினைத்த மாத்திரத்தில் அவளால் தன் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வரமுடியவில்லை! அந்த நாளே சோகமயமாய் ஆகிப் போனது! தோழிகள் எல்லாம் சிரிப்பும் ஆர்ப்பாட்டமாய் கொண்டாடிய தருணத்தை அவள் வருத்தத்தில் கழித்தது போலிருந்தது!

“ஏன் இந்த சோகம் இன்னிக்கு!”

கட்டிக் கொண்டு போயிருந்த அதே பட்டுப் புடவையில் தன் வழக்கமான இடமான மொட்டை மாடி பெஞ்சில் அமர்ந்திருந்தாள். அத்தை வளர்த்து பாரமரித்திருந்த மல்லி செடி எல்லாம் அவள் பக்கமாய் பூத்திருந்தது. அந்த மணமும் முழு நிலவின் வெளிச்சமும் கூட அவளின் அன்றைய மனநிலையை மாற்றவில்லை!

எங்கோ வெறித்துக் கொண்டிருந்தவளின் பக்கம் அரவம் கேட்ட நொடியில் இந்த கேள்வியும் காதில் விழுந்தது! விவேக் அங்கே வந்திருந்தான்!

“எதுவுமில்லையே”

அவன் அமர வழி செய்துக் கொடுத்தாள்!

ஆனால் இவளுக்கு எதிரில் தன் கைகளை குறுக்கே கட்டியபடி சுவற்றில் சாய்ந்து நின்றுக் கொண்டான்!

“இல்லைன்னு வாய் பொய் சொல்லுது, கண்ணை பார்த்தா அப்படி தெரியலையே!”

தலைகுனிந்துக் கொண்டாள்! என்னவென்று சொல்வது!

“என் கிட்ட சொல்லலாமே!”

அத்தையிடம் இதையெல்லாம் சொல்ல முடியாது! அன்று நடந்தவைகளை ஏனோ விஷ்ணுவிடம் சொல்லத் தோன்றவில்லை! அவளின் ரணம் புரியாமல் கேலிப்பேச்சு பேசுவான்! பாரத்தை குறைக்கலாம் என்று எண்ணி ஏதோ ஒரு உத்வேகத்தில் விவேக்கிடம் நடந்ததையெல்லாம் சின்ன குரலில் சொல்லிவிட்டாள்.

ஈவு இரக்கம் இல்லாத தம்பிக்கு அண்ணனாய் பிறந்தவன் எப்படியிருப்பான். இம்மி பிசகாமல் அந்த தடியனை போலவே சிரிக்க ஆரம்பித்தான்! இத்தனை நேரமும் முகமாறுதல் எதையும் காட்டாது கவனித்தவன் இந்நொடி கண்களில் நீர் தேங்கும் அளவுக்கு சிரித்து முடித்துவிட்டான், மகாபாவி!

அவன் சிரித்த குரலுக்கு கீழிருந்து அமுதா கூட என்னவென்று விசாரித்தார்!

“விவேக் ப்ளீஸ் சும்மா இருங்க! அத்தை கிட்ட எதையும் சொல்லிடாதீங்க!”

அடிக்குரலில் அவள் சொன்னதை காதில் வாங்கினானா தெரியவில்லை!

“ஒண்ணுமில்லை! ஆபிஸ் விஷயம் பேசிகிட்டிருந்தேன்!” மயூரியும் மாடியின் மதில் சுவர் பக்கம் வந்து அத்தையை எட்டி பார்க்க,

“அப்படியா வள்ளி மா!” என்றார் அவனை நம்பாமல்!

“ஆமா அத்தை!” என்றாள் மயூரியும்!

இருவரையும் சந்தேகமாய் பார்த்தபடி ஒரு பொய் முறைப்பு முறைத்துவிட்டு வீட்டினுள் சென்றுவிட்டார் அமுதா! விவேக் இப்படி செய்ததில் கடுப்பாகி அங்கிருந்து கிளம்ப முயன்ற மயூரியை கைப்பற்றி நிறுத்தினான்!

“இதெல்லாம் ஒரு விஷயமா மயூரி!”

அவனை இன்னமும் ஆச்சரியமாக பார்த்தாள்!

“என்னை இதுவரை பதினொரு பேர் ரிஜெக்ட் செய்திருக்காங்க! உன்னையும் சேர்த்து!”

‘என்ன பதில் சொல்வது’

“அதுக்கெல்லாம் நான் இப்படி சோகமா இருந்தா சரியா வந்திடுமா சொல்லு! ஒண்ணு நடக்கணும்னு நினைக்கிறோம், அது கைகூடலைன்ன விட்டிற வேண்டியது தான்! அதுக்காக இந்த வருத்தமெல்லாம் டூ மச்!”

பிடித்த கையை அவன் இன்னமும் விடவில்லை! அப்படியே பேசிக் கொண்டிருந்தான்!

அமுதாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை! உடனேயே தன் இளைய மகனை போனில் பிடித்தார்!

“சம்மதம் சொல்ல சொன்னா யோசிக்கிறவ இன்னிக்கு என்ன செஞ்சா தெரியுமா! பேச்சோ பேச்சு! அதுவும் யார் கூட, உங்கண்ணன் கூட டா விஷ்ணு! நான் சொன்னா நம்புவியா நீ?”

அவனுக்கும் ஆச்சரியம்!

“இந்த காலத்து பிள்ளைங்க…என்னத்த சொல்ல ஒன்னும் புரியலை எனக்கு!”

“அமுதா ரொம்ப ஜாஸ்தி பேசாதே! சேர்ந்து பேசினா, சிரிச்சா உடனே கட்டிக்கணுமா! அப்படி பார்த்தா நியாயமா அவ என்னை தான் கல்யாணம் கட்டிக்கணும்!”

“அடப்பாவி! அண்ணியா வரப்போறவளை பத்தி என்ன டா பேச்சிது! உன்னை இப்படியா வளர்த்தேன்!…ஆமா உனக்கு இப்படியெல்லாம் எதுவும் எண்ணமிருக்கா விஷ்ணு!”

“அட நீ வேறமா! சும்மா விளையாட்டுக்கு சொன்னதுக்கு எல்லாம் விளக்கம் கேட்காதே! வள்ளியை நான் அப்படி எல்லாம் நினைக்கலை, அது உனக்கே தெரியும்!”

அமைதி காத்தனர் இருவரும்!

“இந்த உறவுக்கு என்ன பெயர் வைக்கிறதுன்னு எனக்கு தெரியலை! ஆனா ஒன்னு அமுதா…”

ஒரு பீடிகையுடன் நிறுத்தினான்.

“என்ன விஷ்ணு”

“நீ விவேக்கை விட இன்னும் கொஞ்சம் நல்ல மாப்பிள்ளையா வள்ளிக்கு பார்த்திருக்கலாம்”

“நான் எங்கே டா பார்த்தேன்! அவனுக்காக நான் ஊர் பூரா பொண்ணு தேடிகிட்டிருந்தா அவன் எனக்கு முன்னாடி பார்த்திருக்கான் பாரேன். பெத்த தாய் என்னாலையே இவனை கணிக்க முடியலையே டா. ஆமா நீ ஏன் அப்படி சொன்னே?”

பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது அமுதாவுக்கு!

“மயூரிக்கு புருஷன்னு வரவர் அவளை கண்கலங்க வச்சிட்டார்ன அவன் சட்டையை பிடிச்சி கேள்வி கேட்க வேண்டியிருக்கும்! இவன் சட்டை ஏற்கனவே நான் பல தடவை பிடிச்சு கிழிச்ச சட்டை ஆச்சே!”

அவன் சொன்ன தொனியில் தாயும் மகனும் கேலிப் பேசி சிரித்துக் கொண்டனர்!

“என்னவோ நாம ரெண்டு பேரும் தான் பேசிகிட்டிருக்கோம், அந்த புள்ள ஒரு நல்ல பதிலை சொல்லமாட்றாளே!”

“மா அவ வயசு, நிலைமை எல்லாம் கொஞ்சம் யோசிங்க! படிக்கணும்னு ஆசை படுறா, இப்ப போய் இப்படியெல்லாம் சொல்லி அவளை குழப்பாதீங்க! கொஞ்சம் அவகாசம் கொடுத்து பாருங்க! வள்ளிக்கு பிடிக்கலைன அண்ணனுக்கு வெளியே பார்க்கலாம்!”

இங்கே இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்க அங்கே மயூரிக்கோ மனநிலை மாறியிருந்தது! இளமாறன் நினைவுகளை பின்னே தள்ளி விட்டது விவேக்கை பற்றிய சிந்தனைகள்! இவனுக்கு ஏன் இந்த மாற்றம்! தன்னிடம் வலிய வந்து பேசுகிறான்!

“எதுக்கு என் முன்னாடி வந்து நிக்கிற? உன்னை பார்த்தாலே எரிச்சலாகுது!”

சிறுவயதில் அவன் அதிகபட்சமாய் அவளிடம் பேசிய வார்த்தைகள் இதுவே! முகத்தில் அவனிடமிருந்த மொத்த சினத்தையும் காட்டி அவன் சொல்ல அழுகையாய் வரும் மயூரவள்ளிக்கு! அதற்கு பயந்தே அவன் பக்கம் அதிகம் சென்றதில்லை! அவன் வீட்டிலிருந்தால் இவள் ஏதேனும் ஒரு அறைக்குள் சென்று அடைந்துக் கொள்வாள்! அவனும் விஷ்ணு இருந்தால் இவளை விட்டு விடுவான்! தம்பியின் முன் இவளை முறைப்பதோடு சரி, எதேனும் திட்டிவிட்டான் என்றால் அண்ணன் தம்பி சண்டையை பிரிக்க நாலு பேர் வர வேண்டும் என்ற நிலை! கனகவேலின் பல மிரட்டல்களுக்கு பின்னரே ஒருவர் விஷயத்தில் மற்றொருவர் தலையிடும் வேலையை சகோதரர்கள் இருவருமே கை விட்டனர்!

இன்றானால் எல்லாம் தலைகீழ்!

‘எனக்கு இருக்குற பிரச்சனை பத்தாம இப்ப இவன் சிந்தனை வேற! நான் என்னிக்கு படிச்சு என்னைக்கு உருப்பட!’

மடியில் வைத்திருந்த அந்த கனத்த புத்தகத்தை தூக்கி போட்டுவிட்டு தூங்க முயன்றாள்.

அந்த வருட படிப்பை ஒழுங்கே படித்தது போல் தெரியவில்லை மயூரிக்கு! ஏகப்பட்ட இடையூறுகள்! மனமும் படிப்பைத் தவிர எல்லாவற்றையும் சிந்தித்தது! அதற்கான தீர்வை யோசித்துவிட்டாள்!

“அத்தை நான் காலேஜ் ஹாஸ்டலில் சேர்ந்துக்கவா! என்னால் வீட்டில் ஒழுங்கே படிக்க முடியலை! அங்க ஃபிரண்ட்ஸ் இருப்பாங்க! சேர்ந்து நல்லா படிச்சிடலாம்! எப்படியும் இப்பவும் பாதி நாள் அங்கே தான் இருக்கேன்!”

“எதுக்கு மா ஹாஸ்டல் எல்லாம்! சாப்பாடு, மற்ற வசதி எல்லாம் எப்படி இருக்குமோ! மாமாவும் ஒத்துக்க மாட்டார் பாரு!”

“அதெல்லாம் நான் பேசிக்கிறேன், நீங்க என்ன சொல்றீங்க?”

“எனக்கு நீ போகணுமான்னு இருக்கு! ஆனா உனக்கு எது சந்தோஷமோ அதை செய் வள்ளி மா! என்னை பத்தி யோசிக்காதே!”

அவர் மனதுக்குள், படிக்கிற பிள்ளையை கல்யாணம் அது இதுவென குழப்பி விட்டது தன் தவறு தானோ என்ற குற்றயுணர்வு! ஆதனால் அவளை தடுக்கவில்லை! மயூரவள்ளி கனகவேலிடமும் பேசி சரிகட்டி ஏற்பாடுகளை செய்யலானாள்.

விவேக்கின் செவிக்கு இந்த விஷயம் போனது…

error: Content is protected !!