IMIA2

IMIA2

2

இடம் :ஜமீன் ஊத்துக்குளி (1994)

மெல்லிய சாரலாக ஆரம்பித்த மழை வலுத்து கொண்டிருந்தது! இருபுறமும் உயர்ந்து வளர்ந்து இருந்த தென்னை மரங்கள் காற்றுக்கு ஏற்ப வேகமாக ஆட… மண் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட மழையை பறவைகள் உடலை சிலிர்த்து கொண்டு வேடிக்கை பார்க்க… வானம் கொட்டி தீர்த்து கொண்டிருந்தது!
அவசரம் அவசரமாக அந்த தோப்புக்குள் பிரவேசித்தன இளம் பிஞ்சு கால்கள்… பின்னால் ஒரு பெண்ணோடு!
“இன்னும் எவ்வளவு தூரம் பாப்பி?” நடுங்கியபடி அந்த பெண் கேட்க… மழைக்காக பிடித்திருந்த குடையில் நடுங்கியபடி நின்றிருந்த அந்த தளிரின் முகத்தில் சொல்ல முடியாத பரபரப்பும் சோகமும்! அவள் ஆசையாக பாதுகாத்து வைத்திருந்த உடமையை பாதுகாப்பாக இருக்க வேண்டுமே என்கிற உணர்வில்,
“இங்கதாங்மா விளையாடினோம்…” என்று கண்களை சுழட்டி திருப்பி, தான் தேடி வந்ததை தேடிக்கொண்டிருந்தாள் அந்த நான்கு வயது குட்டி குழந்தை!
“மழை ரொம்ப வருது… வீட்ல அப்பாயி திட்டுவாங்கடி… காலைல பார்த்துக்கலாம் பாப்பி!” அந்த பாப்பியின் தாய் அவரது மாமியாருக்கும் பயந்து கொண்டு கூற…
“ப்ளீஸ் மா… இந்த குளிர்ல பாவம் அது என்ன பண்ணும்… ப்ளீஸ் மா…”என்று கூறி கொண்டிருக்கும் போதே எதிரே வந்தான் அவளது நண்பன்!
 மழைக்கு தலை மேல் போட்டிருந்த சாக்கில் இருந்து சொட்டு சொட்டாக வழிந்த மழை நீர் அவனது முகத்தில் இறங்கியது!
“ஹை தம்பிமாமா வந்துட்டான்…” அவளது மகிழ்ச்சியும் நிம்மதியும் அந்த பிஞ்சு முகத்தில் வெளிப்பட…
“தம்பிமாமா அணில் பிள்ளை பத்திரமா இருக்கா?” அந்த பத்து வயது சிறுவனிடம் கேட்டாள் பாப்பி! அவனோ அவளுடன் நின்றிருந்த அந்த பெண்ணை பார்த்து தயங்கி கொண்டே…
“இருக்கு பாப்பி… நான் மொதல்லையே வந்து தென்னமட்டைக்கடில கூட்ட வெச்சுட்டேன்… சுத்தி செத்த புல்லு போட்டு மூடி வெச்சிருக்கேன்… ஒன்னும் ஆகாது…” என்று தயங்கியவாறே சொன்னவன் கிளம்ப போக…
“தம்பி எப்போ ஊர்ல இருந்து வந்தீங்க…” அந்த பெண் உள்ளார்ந்த பாசத்துடன் கேட்க அது வரை சூம்பியிருந்த போயிருந்த அவனது முகம் தெளிவானது! அந்த இளம் முகத்தில் புன்னகை மலர…
“பத்து நாளாச்சு அத்தை… லீவ் விட்டவுடனே வந்துட்டோம்…”
“ஆஹா… அதான் கழுதை வீட்ல நிற்க மாட்டேங்றாளா?” என்றவர்…
“சரி அணில் பிள்ளைய எங்க வெச்சு இருக்கீங்க… காட்டிடுங்க தம்பி… இல்லைன்னா என்னை நைட் முழுக்க உலுப்பி எடுத்துடுவா…”என்று கூறவும் அதற்காகவே காத்து கொண்டிருந்தவன் போல ஆர்வமாக அந்த தோப்புக்குள் அழைத்து சென்றான்!
மிகவும் ஜாக்கிரதையாக புற்களை அகற்றியவனின் கைகளில் கிடைத்தது ஒரு சிறிய கூடு… ஐந்தாறு அணில் குஞ்சுகள் மழையில் கிடைத்த வெப்பத்தில் சுகமாக புல்லுக்குள் விளையாடி கொண்டிருந்தது… தாய் அணில் அவன் கைக்கு பக்கத்தில் பயமில்லாமல் நின்றதை வைத்தே அதனுடன் இருக்கும் அவனுக்கு இருக்கும் நட்பு புலப்பட்டது அவருக்கு! மிக மிக அதிகமான ஜாக்கிரதை உணர்வுடன் கூட்டை கையில் எடுத்து பாப்பியிடம் கொடுக்க… உலகத்து மகிழ்ச்சி எல்லாம் சேர்ந்த இடம் அவள் முகம் தானோ என எண்ணும்படி அந்த கூட்டை கையில் பெற்று கொண்டாள்!
“ஹை தம்பி மாமா… சூப்பரா ஹவுஸ் செஞ்சுட்டியே… இதே மாதிரி நாளைக்கு இன்னும் பெரிய ஹவுசா கட்டலாம் மாமா…” ஆசையாக பாப்பி கேட்க
“கட்டலாமே… இப்போ நீ கூட்ட வெச்சுட்டு ஒழுங்கா போய் அத்தை கிட்ட சாப்பிட்டுட்டு படுத்து தூங்குவியாம்… நாளைக்கு நாம பெரிய ஹவுஸ் செய்யலாமாம்… சரியா பாப்பி…?” பெரிய மனித தோரணையில் பொறுப்பாக அவன் கூற வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள் அந்த பெண்!
“அப்படியே நங்கை மாதிரியே பொறுப்பு…” தனக்கு தானே கூறிக்கொண்டு பெருமூச்சு விட,
“தேங்க்ஸ் அத்தை…” என்று சிரித்தான்!
“ஆனா தம்பி… ஒரு விஷயம்…” பேச்சில் மரியாதையோடு ஒரு தயக்கமும் சேர்ந்து கொண்டது!
“சொல்லுங்கத்தை…”
“பெரியவங்க கண்ல பட்டுடாதீங்க தம்பி… இப்போ இருக்க பிரச்சனைல… ரெண்டு பேரும் சேர்ந்து விளையாடுறீங்ன்னு தெரிஞ்சா இன்னும் கஷ்டம்…” இறைஞ்சும் குரலில் அவர் கேட்டதை ஏமாற்றத்தோடு சகித்து கொண்டு,
“சரிங்கத்தை…” தலைகுனிந்து கூற அவன் கண்களிலிருந்து சிதறிய அந்த கண்ணீர் துளி மழை நீரோடு கரைந்தது!
பாப்பி எதுவும் அறியாமல் அணில் குஞ்சுகளை கொஞ்சி கொண்டிருந்தாள்!
***
பனி கரைந்த அந்த இளம் காலை பொழுதில் தோட்டத்தை சுற்றி நடை பயின்று கொண்டிருந்தார் கார்த்தியாயினி… ஐந்தரை மணிக்கு அலாரம் வைக்காமலேயே எழுந்து விடுபவருக்கு புலர்ந்தும் புலராமலும் இருக்கும் அந்த இளம் காலை பொழுது மிகவும் பிடித்த ஒன்று…
மணி ஏழாகி இருக்க… எப்போதும் அதிகாலையிலேயே எழுந்து மருத்துவமனைக்கு ஓடும் ஜீவா இன்னமும் கீழே இறங்கி வராமல் இருந்தது அவரது புருவத்தை உயர வைத்தது!
தொலைபேசியை எடுத்து சமையலறைக்கு அழைத்து,
“சரோஜா… ஜீவா தம்பி கீழே வந்துட்டாரா?”
“இன்னும் இல்லம்மா…”என்று அந்த பெண் கூறவும் மாடிக்கு விரைந்தார்… கதவை திறந்த சப்தம் கேட்டு விழித்தான் ஜீவா!
“ஹாய் மா குட் மார்னிங் …”தூக்க கலக்கத்தோடு கண்களை விழிக்காமல் கூறியவனை பார்த்து சிரித்தார் கார்த்தியாயினி…
“என்னப்பா… நைட் படுக்க லேட்டா?”என்று பக்கத்தில் அமர்ந்து கொண்டு கேட்க… தலையை தலையணையை விட்டு தாயின் மடிக்கு மாற்றி கொண்டே…
“ஆமாம்மா… நேத்து ஒரு பிரைன் டெட் கேஸ் … ஆர்கன் டொனேஷனுக்கு ஒப்புக்கிட்டாங்க… கெடாவர் வெயிட்டிங் கேஸ்தான் நிறைய இருக்கே… ப்ரோசீஜர் முடிச்சுட்டு தியேட்டர் அனுப்பிட்டு வர லேட் ஆகிடுச்சு… சீக்கிரமே போகணும்… நைட் ஆப்ரேஷன் நடந்துட்டு இருந்துது…”
தூக்க கலக்கத்தோடு அவரது மடியில் தலை வைத்தவாறே சொல்ல… மகன் தூக்கமில்லாமல் இருக்கிறானே என்று கவலைபட்டாலும் மருத்துவ தொழிலுக்கு வந்த பிறகு இவற்றை பார்ப்பது சரியாகாது என்பதை உணர்ந்து கொண்டவர்… புன்னகையோடு…
“எத்தனை மணிக்கு கண்ணா போகணும்…”
“ஏழு மணிக்கு அங்க இருக்கனும்மா…”அவரது மடியில் செல்லம் கொஞ்சி கொண்டே சொல்ல…
“ஓஹோ… கண்ணா… மணி இப்போ என்ன?” இதழோர புன்னகையோடு அவர் கேட்க…
“மணி என்ன…”கண்ணை சுருக்கி கொண்டு சுவரில் இருந்த டிஜிட்டல் கடிகாரத்தை பார்க்க…
“ஓ மை குட்நெஸ்… மணி ஏழரை… என்னம்மா நீங்க எழுப்பி விடாம…”அவசரம் அவசரமாக எழுந்தான்… கார்த்தியாயினி சிரித்து கொண்டே
“சரி ஜீவா… பொறுமையா கிளம்பு… நான் விஷ்வாவை எழுப்பறேன்… அவனும் வந்து படுக்க ரொம்ப நேரமாகிடுச்சு…”என்று எழுந்து கொள்ள…
“சரிம்மா… இன்னைக்கு என்ன டிபன்?” சோம்பல் முறித்து கொண்டே கேட்டான்!
“ம்ம்ம்… உனக்கு பிடிச்ச சோள பணியாரமும் தக்காளி பஜ்ஜியும் தான்…”
“ஓகே ம்மா… ஜஸ்ட் டென் மினிட்ஸ்… டிபனை ரெடியா வைக்க சொல்லுங்க…” என்றபடி குளிக்க சென்றவன்… சொன்னது போலவே கிளம்பி வந்தான்…
அவசர கதியில் கார்த்தியாயினி காலை உணவை எடுத்து வைத்து கொண்டிருக்க… தோளில் கை போட்டு…
“ரெடியாத்தை?” ப்ரெஷாக கேட்டது விஷ்வா!
கார்த்தியாயினியின் கணவரின் தங்கை மகன்… அவனுடன் பிறந்த தங்கை மதிமலர்… படித்தது ஜீவாவை பின்பற்றி மருத்துவம்… நரம்பியல் மருத்துவத்தில் சிறப்பு பட்டங்கள் பெற்று ஜீவாவுடன் மருத்துவமனையை கவனித்து கொண்டிருக்கிறான்!
சிறு வயதில் தாயை பிரிந்து கண்களில் நீருடனும் கலக்கத்துடனும் நின்ற இளம் கொழுந்துகளை பல பிரச்சனைகளை தாண்டி வாரி அணைத்து எடுத்து வந்தார் சக்திவேல்!
ஜீவாவின் தந்தை!… அப்போதிலிருந்து அவர்களுக்கு மூன்று மக்கள்… சிறிதளவும் எந்த வேறுபாடும் காட்டாமல் வளர்த்தார் கார்த்தியாயினி…
“உட்கார் கண்ணா…”
“சீக்கிரம் டிபனை வைங்கத்தை… அர்ஜன்ட் வேலை காத்துகிட்டு இருக்கு…” டேபிளின் முன் அமர்ந்து கொண்டு தாளமிட்டு கொண்டே அவசரப்பட…
“மதி எங்க?இன்னும் படுக்கை விடலையா அவளை…” உணவுகளை மேஜையில் அடுக்கியவாறே அவர் கேட்க…
“அவளாச்சு நீங்களாச்சு… காலங்கார்த்தால அவளை எழுப்பி அதுக்கு நாலு அர்ச்சனைய வாங்கி கட்டிக்கிட்டு… எனக்கு தேவையா இது? அந்த தூங்குமூஞ்சிய எழுப்பினா எழுப்புங்க… இல்லைன்னா விடுங்க…” மெல்லிய சிரிப்பு வழிய அவனுக்கு இடப்பட்ட வேலையை அவர் புறமே தள்ளிவிட்டு தான் சாமர்த்தியசாலி என்பதை நிரூபித்தான் விஷ்வா!
“காலைலயே ஆரம்பிச்சுட்டியா… நடத்து நடத்து…” சிரித்தார் கார்த்தியாயினி!
“நானா ஆரம்பிக்கலை… தானா வருதுத்தை…” குறும்பாகவே கூறிக்கொண்டிருக்க… அருகில் வந்து அமர்ந்த ஜீவா விஷ்வாவின் காதில் கிசுகிசுப்பாக, “எதுடா தானா வருது?” என்று சிரிக்க,
“வர்றதைஎல்லாம் உன்ட்ட சொல்ல முடியுமா மாம்ஸ்?” பதிலுக்கு அவனும் கிசுகிசுக்க,
“அப்படீன்னா அதை மொத்தமா காலி பண்ணிடலாம் மச்சான்…” கண்ணை சிமிட்டியபடி கூறிய ஜீவாவை பார்த்து பெரிதாக வணங்கினான் விஷ்வா!
“என் சோழிய முடிக்க வந்த பெருந்தகையே… நீவீர் வாழ்க… நின் கொற்றம் வாழ்க… தங்களது கொட்டாரத்தின் ஆடு மாடுகள் எல்லாம் வாழ்க!” நக்கலாக கூறியவனை சிரிப்போடு பார்த்தான் ஜீவா… விஷ்வாவோ அதோடு முடிக்காமல் கார்த்தியாயினி அறியாமல் ஜீவாவின் காதில் கிசுகிசுத்து வைக்க…
“டேய் படுபாவி… காலங்கார்த்தால இப்படி அசைவமா கடிக்கிறியே… அம்மா இருக்காங்கடா… நீயெல்லாம் ஒரு டாக்டரான்னு கேட்டுட போறாங்க…” ஒன்றும் அறியாதவன் போல ஒரு பார்வை பார்த்துவிட்டு ஜீவா அப்பாவியாக கூற… விஷ்வாவுக்கு சிரிப்பு பொங்கியது!
இருவரின் குண இயல்பே இதுதான்… வேலை நேரத்தில் அதிதீவிர மனோபாவத்தில் இருக்கும் இருவரும் ஒய்வு நேரத்தில் மிகச்சிறந்த நண்பர்கள்… இருவரும் இருக்கும் இடத்தில் சிரிப்பு சத்தம் கேட்ட வண்ணமே இருக்கும்…
“மாமா … நீ மட்டும் ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி சீன குடுப்பியாம்… அத்தை வந்து உன்னாலதாண்டா பையன் கெட்டு போறான்னு என்னை திட்டனுமாம்… அதானே உன் ஆசை… நடத்து நடத்து…” என்றான் சிரிப்பை அடக்க முடியாமல்!
“சரி இதை விடு… அந்த விசாகாவுக்கு நீ போட்ட பால் என்னாச்சு மச்சான்?” ஆரஞ்சு சுளைகளை உள்ளே விட்டபடி ரொம்பவும் சீரியசாக கேட்பது போல அவனிடம் ஜீவா கேட்க,
“ம்ப்ச்… இந்த பாலும் நோ பால் மாமா… எவனோ சிக்சர் அடிக்கறதுக்கு நம்மளை பவுலரா யூஸ் பண்ணிடுறானுங்க…” வருத்தத்துடன் கூறுவது போல நடித்தான்.
“டேய் என்னடா சொல்ற… வேற யார் டா ஓவர் போடுறது?”
“நம்ம மார்கண்டேயன் மாத்ருபூதம் தான்… வேற யாரு…” என்று சீரியசாகவே சொல்ல… அதை கேட்டு ஒரு நிமிடம் தாமதித்த ஜீவா… வெடித்து சிரித்தான்!
“டேய்… அந்த ஆளா… போடா… அந்த ராமகிருஷ்ணன் பொண்ணு இப்போ மெடிக்கல் படிக்குதுடா… போயும் போயும்…” கண்களில் நீர் திரள சிரித்தான்.
“என்ன பண்றது மாமா… அது ராமகிருஷ்ணன் இல்லையாம்… ராம்கி மாம்ஸ் ராம்கி… ஒரு கிழ போல்ட்டு நம்ம விக்கெட்ட தட்டிட்டு பூடுச்சே…” கவலையோடு கூற,
“சரி விடுடா… ஏன் ஆளே இல்லாத கிரவுண்ட்ல உன் எனர்ஜிய வேஸ்ட் பண்ற? கிரவுண்ட மாத்து…” சிரித்தான் ஜீவா!
“ஆமா மச்சான்… த்ரிஷா இல்லைன்னா நயன்தாரான்னு மனசை தேத்திக்க வேண்டியதுதான்…” ரொம்பவும் பெரிய மனது வைத்துக் கூற,
“ஏன்டா… உன்னோட நமீதாவுக்கு என்னாச்சு?” சிரித்தபடி கேட்டான் ஜீவா. நமீதாவின் டை ஹார்ட் ஃபேன் இந்த விஷ்வா. நமீதா மட்டுமல்ல, சன்னி லியோன், மியா கலிஃபா என்று ரவுண்டு கட்டி அத்தனை பேருக்கும் ரசிகன் தான் என்று பெருமையாக அவ்வப்போது உதார் விடுவான். பேச்சுதான் இப்படியாக இருக்குமே தவிர, வேலையென்று வந்துவிட்டால் துரை வெள்ளைக்காரன் தான். அம்புட்டு சின்சியாரிட்டி. இந்த பக்கம் அந்த பக்கம் என்று எந்தபக்கமும் பார்க்க மாட்டான்.
“பாஸ்… என்ன பாஸ்… சொல்றதுல கூட உங்களுக்கு தோதா கிழடு கட்டையாத்தான் வருமா… என்னை மாதிரி யெங்கா… ஒரு சமந்தா டார்லிங்… இல்லைன்னா அனுஷ்கா டார்லிங்… இப்படி எல்லாம் சொல்ல தோன்றாதா?” சிரிக்காமல் கண்ணடித்தபடி கேட்க,  
“டேய் இதுங்க எல்லாம் உனக்கு யெங்கா? கொலைகார பாவி… எனக்கு நெஞ்சு வலிக்குதுடா…”
“மாம்ஸ்… நீ என்ன வேணும்னாலும் சொல்லு … அனுஷ்கா அனுஷ்காதான்… சமந்தா சமந்தாதான்…”
“சத்தியமா சொல்றேன்… ரெண்டுமே ரிட்டயர்ட் கேஸ் டா… வேண்டாம் விட்ரு…”
“உடல் மண்ணுக்கு, உயிர் அனுஷ்காவுக்கு…”
“இதை பிரபாஸ் கேக்கணும்… அரை கிழவிக்கு உயிரை கொடுக்கறேன்னு சொல்றானேம்பார்…” சிரித்தான் ஜீவா.
“சரி… கனத்த மனசோட அந்த இடத்தை மியா டார்லிங்குக்கு கொடுத்துடறேன்…” நெஞ்சை பிடித்தபடி கூறிய விஷ்வாவை பார்த்தவன்,
“நேத்து நைட், வேற ஏதோவொரு பேர் சொன்னியேடா…” ஓரக்கண்ணால் தாயை நோட்டம் விட்டபடி அவனை கலாய்க்க,
“மாமா… எனக்கே தெரியாம எந்த பேராவது உளறி இருப்பேன்…” உதட்டை மடக்கி உள்ளே மடித்து சிரித்தபடி விஷ்வா கிண்டலாக கூற,
“தெரியாம சொன்னியோ, தெரிஞ்சு சொன்னியோ… ஆனா… ம்ம்ம்ம்… நடத்து நடத்து…” என்று பதிலுக்கு அவனை வாரினான் ஜீவா.
இதுதான் இந்த இருவருக்குமான பாண்டிங். யார் வந்தாலும், என்னவானாலும் இருவரின் இந்த இயல்பும் மாறாது, உறவும் மாறாது. ஜீவாவுக்கு என்றால் முதலில் நிற்பது விஷ்வா தான். விஷ்வாவுக்கு ஒன்றென்றால் யாராக இருந்தாலும் எதிர்த்துக் கொள்வது ஜீவாதான். கசின்ஸ் என்பதை தாண்டி அப்படியொரு பிணைப்பு இருவருக்கும். சமயத்தில் மதி இருவருக்கும் நடுவில் குட்டி பூனையாகி விடுவாள். இருவரும் சேர்ந்து அவளை படுத்தும் பாட்டில் இருவரையுமே பிராண்டி விடுவாள். அந்த குட்டிப் பூனையை கலாய்ப்பது தான் இந்த இருவரின் தலையாய பணியாக இருக்கும், சிறு வயது தொட்டே!
மூவரும் ஒரே வீட்டில் வளர்வதாலோ என்னவோ, மூவருக்கும் கசின்ஸ் என்ற நினைவு வந்ததில்லை. உடன் பிறந்தவர்கள் போலத்தான் இருப்பார்கள். அதை காட்டிலும் நண்பர்களை போலத்தான் பழகுவதும்.
இருவருமாக கலாய்த்து கொண்டிருக்க… சோள பணியாரத்தை எடுத்து வந்து மேஜையில் வைத்தவாறே, “பசங்களா… நீங்க ரெண்டு பேருமே வெறும் பேச்சு மட்டும் தான்… உருப்படியா ரெண்டு பேர்ல ஒருத்தனாவது கல்யாணம் பண்ண ஒப்புக்கிட்டு இருக்கீங்களா?” அடக்கப்பட்ட சிரிப்போடு கார்த்தியாயினி கேட்க… ஜெர்க்கான ஜீவா,
“கல்யாணம் பண்ணு கல்யாணம் பண்ணுன்னு எப்ப பார் நச்சரிக்க வேண்டியது… ம்மா அது பப்ளிக் டாய்லெட் மாதிரி… வெளிய இருக்கவன் உள்ளே போயே தீரனும்ன்னு குதிப்பான்… உள்ள இருக்கவன் எப்படா வெளிய வருவோம்ன்னு நினைப்பான்… நாங்க ரெண்டு பேருமே உஷார் ம்மா…” என்ற ஜீவாவை வெட்டும் பார்வை பார்த்தவர்,
“டேய் நீதான்டா இவனையும் சேர்த்து கெடுக்கற…” என்று விஷ்வாவை காட்டி ஜீவாவை திட்ட, விஷ்வா பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டான்.
“ஆமா அத்தை… இவன் தான் என்னை கெடுத்துட்டான்… எனக்கு வாழ்க்கை கொடுக்க சொல்லுங்கத்தை…” ஒன்றும் அறியாதவன் போல முகத்தை வைத்துக் கொண்டு சீரியசாக கூறுவது போல நடித்த விஷ்வாவை புரியாத பார்வை பார்த்தவர், சட்டென சிரித்து விட, ஜீவா வெடித்து சிரித்தான்.
“ஆமாம்மா இவனுக்கே நான் வாழ்க்கை கொடுத்துடறேன்… எனக்கும் ஒரு வேலை மிச்சம்…” என்று சிரிக்க,
“இப்ப ரெண்டு பேர் மண்டையும் உடைய போகுது… அடங்கவே மாட்டீங்களாடா…” என்று தலையை பிடித்துக் கொண்டு டைனிங் டேபிளில் கார்த்தியாயினி உட்கார்ந்து கொள்ள, அதற்கும் மேல் அவரை கலாய்க்காமல்,
“லேட் ஆகுதும்மா… நான் கிளம்பனும்…” ஜீவா பரபரக்க ஆரம்பித்தான் வேண்டுமென்றே!
அவனை பார்த்து ஒரு பெருமூச்சு விட்டவர் விஷ்வாவிடம் புலம்ப ஆரம்பித்தார்!
“டேய் விஷ்வா… நீயாச்சும் எடுத்து சொல்ல கூடாதா… உனக்கும் இருபத்தி எட்டாகுது… ஜீவாவுக்கு இருபத்தி ஒன்பது முடிய போகுது… ரெண்டு பேரும் கல்யாணம்னாலே தலை தெறிக்க ஓடுனா நாங்களும் என்னதான் பண்றது… உனக்கு பின்னாடி மதி இருக்காடா…”
அவரது புலம்பலில் அர்த்தம் இல்லாமல் இல்லை… யாரையாவது பெண் என்று பார்த்து விட்டால் சுமார் ஒரு வாரமாவது வீட்டுப் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டான் ஜீவா… மருத்துவமனையே கதி என்று ஒதுங்கி விடுவான்… அதையும் மீறி ஏதாவது பெண்ணை காட்டி விட்டால்… பார்க்காமல் கூட… பிடிக்கவில்லை என்று ஓடிவிடும் ரகமாக இருந்தால் கார்த்தியாயினி என்னதான் செய்வார் பாவம்!
அடுத்து விஷ்வாவோ இதை விட மோசமான நிலையில் அவரை அலைகழித்தான்… வேறென்ன திருமணமே வேண்டாம் என்றுதான்! என்னதான் நக்கலும் நையாண்டியுமாக இருந்தாலும் இருவர் மனதிலும் இருந்த பெரிய காயங்களின் வடுக்களை தாயாக உணர்ந்த கார்த்தியாயினியும் விட்டு பிடிக்கத்தான் நினைத்தார்! ஆனால் மதியை இருவரும் நினைக்க வேண்டாமா என்பது தான் அவரது எண்ணமாக இருந்தது.
“மதிக்கு கல்யாண வயசாயிடுச்சு ஜீவா… அவளுக்கு செய்ய வேண்டாமா? அவளை விட எட்டு வயசு மூத்தவன் நீ… இந்த விஷ்வா ஏழு வயசுக்கு மூத்தவன்… ரெண்டு பேரையும் விட்டுட்டு எப்படி விஷ்வா மதிக்கு பார்க்கறது?” ஜீவாவில் ஆரம்பித்து விஷ்வாவிடம் முடித்தார் கார்த்தியாயினி.
“அம்மா ப்ளீஸ்… அவளுக்கு நல்ல மாப்பிள்ளைய கொண்டு வர வேண்டியது எங்க ரெண்டு பேரோட பொறுப்பு… இப்போ எங்களை விடு… கிளம்பனும்…” ஒரே வார்த்தையில் முடித்தான் ஜீவா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!