IMK – 1

IMK – 1

இருமுனை கத்தி

 

௧(1)

 

துவாரபாலகன்

 

பலர் சரித்திரம் படிப்பார்கள்.

சிலர் சரித்திரத்தின் பக்கங்களில் இடம்பெறுவார்கள்.

வெகுசிலர் மட்டுமே சரித்திரம் படைப்பார்கள்.

ராஜராஜசோழன் அந்த வெகுசிலரில் ஒருவன்! அந்த மாபெரும் மன்னன் உருவாக்கிய தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகளை அசாதாரணமாய் கடந்த அசைக்க முடியா ஓர் சரித்திர படைப்பு. இயற்கை சீற்றங்களையும் கூட எதிர்த்து நிற்கும் ஓர் அசாத்திய கட்டமைப்பு…

 

செம்மொழியான தமிழ் மொழியும்  கூட தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமானத்தின் அதிகம்பீரத்தை விவரிக்க வார்த்தைகள் தேடும்.

 

அறிவியல் ஆச்சரியங்கள், வரலாற்றின் அதிசயங்கள், விவரிக்க முடியா கட்டடக்கலையில் உயரிய தொழில்நுட்பங்கள், சிற்பகலையின் நுணுக்கங்கள், இவையெல்லாம் தாண்டி  தமிழனின் சிறந்த ஆளுமைத் திறமைக்கு சான்று எனச் சொல்லிக்கொண்டே போகலாம் தஞ்சை பெரிய கோவிலைப் பற்றி!

 

அத்தகைய சிறப்பம்சம் பொருந்திய கோவிலின் வெளிகோபுர வாயிலில் நின்று கொண்டிருந்த அந்த அயல்நாட்டவனின்  உலகம்… அப்போது சுழலாமல் நின்றுவிட்டது. பிரமித்துப் போய் அங்கிருந்த சிலைகளோடு சிலையாய் அவனும் சமைந்திருந்தான்.

 

பளீரென்ற வெண்மை கலந்த தோலோடு… அவனின் கூர்மையான விழிகள் கோதுமை நிறத்தில் பளபளக்க, அவன் முடியும் கிட்டத்தட்ட அந்த நிறத்தையே ஒத்திருந்தது. அவன் உயரத்தோடு சரிவிகிதமாகவும் சீராகவும் இருந்த அவன் உடல் கட்டமைப்பைப் பார்க்கும் போது… அவன் உடற்பயிற்சி செய்வதில் வல்லவன் என்பது புலப்பட்டது. ஆனால் அவன் அணிந்திருந்த ஷார்ட்ஸும் அவன் ஆர்ம்ஸை தத்ரூபமாகக் காட்டும் அந்தக் கையில்லா டிஷர்டும்தான் அந்த இடத்தின் ஆளுமைக்கு சற்றும் பொருத்தமில்லாமல் இருந்தது.

 

இவையெல்லாம் தாண்டி அந்த அயல்நாட்டினன்… எந்த நாட்டுப் பெண்ணையும் நொடிநேரத்தில் வசீகரிக்கும் ஆண்மகன்தான் என்பது மறுக்க முடியாத உண்மை! அவன்தான் இவான் ஸ்மித்!(Ivan Smith)

 

அவன் அணிந்திருந்த உடையும் அவன் கரத்திலிருந்த அந்த நுட்பமான புகைப்பட கருவியும் அவனை ஒரு சுற்றுலா பயணி என்றே தோன்றச் செய்தது.

 

அத்தகையவன் இப்போது வியப்பாய் நோக்கி ஆச்சர்யத்தில் மூழ்கி நின்றது அந்த நுழைவு கோபரத்தில் சுவற்றோடு சுவராய் செதுக்கப்பட்டிருந்த கம்பீரமாய் காட்சியளித்த துவாரபாலகர் சிலையைப் பார்த்துத்தான்.

 

சில நொடிகள் அந்த சிலையைப் பார்த்து பிரமிப்பில் ஆழ்ந்திருந்த இவான்… மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பினான். அப்போதே அவன் கவனித்தான். அவனருகில் நின்று கொண்டிருந்த அவன் கைட் (சுற்றுலா வழிகாட்டி) தொடர்ச்சியாய் தஞ்சை கோவிலைப் பற்றிய வரலாற்று விவரங்களை ஒப்பித்துக் கொண்டிருந்ததை! அவன் மூச்சுவிடாமல் சொல்லிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்தால் அவையெல்லாம் அவன் பெரும்பாடுப்பட்டு மனப்பாடம் செய்தவை என்பது நன்றாகவே புரிந்தது.

 

அதுவும் அவன் தப்பும் தவறுமாய் பேசிய ஆங்கிலத்தைக் கேட்க கேட்க இவானுக்கு சிரிப்பு தாளவில்லை. இவான் அந்த கைடிடம் கை காண்பித்து அவன் பேச்சை நிறுத்த, அவன் மெல்ல மூச்சு வாங்கிக் கொண்டான்.

 

அப்போது இவான், “வாட் இஸ் தி மீனிங் ஆஃப் திஸ்  ஸ்டேச்யூ?” என்று வினவ, அவன் கேட்ட அமெரிக்க இங்க்லீஷ் அத்தனை சீக்கிரம் கைடுக்குப் பிடிபடவில்லை. இருந்தாலும் அவன் கை காண்பித்த திசையை வைத்து அந்த கைட், “திஸ் ஸ்டேச்யூ… துவாரபாலகர்…. தி கிரேட் லார்ட் சிவா செக்யூரிட்டி” என்றான்.

 

இவானின் விழிகள் அந்த வார்த்தைகளில் சற்றே அகல விரிந்தது. அதாவது அந்தக் கம்பீரமான துவாரபாலகர் சிலை தன் ஒற்றைக் காலைத் தூக்கி ஓர் பாம்பை மிதித்துக் கொண்டிருக்க, அந்த பாம்போ தன் வாயில் ஓர் யானையை பாதி விழுங்கிக் கொண்டிருந்தது.

 

 யானையை விழுங்கும் பாம்பு எத்தனை பெரியதாயிருக்கும். அந்த பாம்பைத் தன் காலில் மிதிக்கும் துவராபாலகன் எத்தனை சக்தி படைத்தவன். அத்தகைய சக்தி படைத்தவனைப் பாதுகாவலனாய் கொண்ட எம்பெருமானின் சக்தி எத்தனை அபாரமானதாக இருக்கும் என்பதே அதன் உள்ளார்ந்த தத்துவம்!

 

இவானின் வியப்பெல்லாம் கருவறையில் அரூப ரூபமாய் கட்சியளிக்கும் சிவபெருமானின் அபார சக்தியைக் கோபுர வாயிலின் துவாரபாலகர் வழியாக சொல்லிய அந்தச் சிற்பியின் அறிவின் உச்சத்தைப் பற்றித்தான்!

 

இந்த தத்துவம் அங்கேயே வசிக்கும் அந்த கைடுக்கு புரிந்ததோ இல்லையோ! அயல்நாட்டினன் இவானின் மூளைக்கு எட்டி அவனை எண்ணிலடங்கா வியப்பில் ஆழ்த்தியது.

 

**********

 

2 (௨)

 

தரிசனம்

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிம்மவாசல் அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது. எங்கு திரும்பினாலும் மக்கள் தலை. அலை கடலென கூட்டம் கூட்டமாய் மக்கள் அங்கே திரண்டிருந்தனர்.

 

அப்படியென்ன ஆச்சர்யமும் அதிசயமும் அங்கே நிகழ்கிறது என்ற கேள்விக்கு விடையாய் நிற்கிறது அதிகம்பீரமான ராஜராஜேஸ்வரி ஆலயம்!

 

கடலிலிருந்து மீட்கப்பட்ட நூற்றாண்டுகள் பழமையான ராஜராஜேஸ்வரி சிலை… மீண்டும் சிம்மவாசலில் எழுப்பப்பட்ட கோவிலில் வாசம் செய்யப்போகிறாள்.

 

ஆம்! இன்று ராஜராஜேஸ்வரி ஆலயத்தின் குடமுழுக்கு விழா!

 

பெரிய போராட்டத்திற்கு பிறகு ராஜசிம்மன் காலத்திய அந்தச் சிலைக்கு கோவில் கட்டும் பணி துவங்கியது.  அதாவது சரியாய் அந்தச் சிலை கடலிலிருந்து மீட்கப்பட்டு ஏழு வருடங்களுக்குப் பிறகு இன்று…

 

பலதரப்பட்ட இன்னல்கள் சங்கடங்களை கடந்து வெற்றிகரமாய் ராஜராஜேஸ்வரிக்கு கோவில் கட்டப்பட்டது. அதில் முக்கிய பங்குவகித்தது சிம்மவர்மனின் பேத்தி செந்தமிழ்தான்!

 

செந்தமிழ். நாற்பதைத் தொட்ட பின்னும் அவள் முகத்திலிருந்த தேஜஸும் கம்பீரமும் துளியளவும் குன்றவில்லை என்று சொல்லவதை விட அது பன்மடங்கு அதிகரித்திருந்தது என்று சொன்னால் சரியாகயிருக்கும்.

 

செந்தமிழ் அப்போது விண்ணை முட்டி நிற்கும் அந்தக் கோபுரத்தின் உச்சியை தலையுயர்த்திப் பார்க்க, அந்த காட்சி அவளை மெய்சிலிர்க்கச் செய்தது. மூழ்கிப்போன ராஜசிம்மன் அமைத்த கோவில் கோபுரத்தின் அதிகம்பீர கட்டமைப்பை அப்படியே பிரதிபலித்திருந்தது இன்றைய கோவில் கோபுரம்.

 

அந்தக் கணம் செந்தமிழ் தன் தாத்தாவை நினைவு கூர்ந்தாள். இந்த அற்புத காட்சியைப் பார்க்க அவரில்லாமல் போய்விட்டாரே என்ற வருத்தம். அதோடு நினைத்தை சாதித்துவிட்ட பெருமிதம் என இரண்டுமே அவள் முகத்தில் மாறி மாறிப் பிரதிபலித்தது.

 

அந்தச் சமயம் கோபுரத்தின் கலசங்களுக்கு அர்ச்சகர்கள் தமிழில் மந்திரங்கள் ஓதி புனித நீரால் அபிடேகம் செய்தனர். அப்போது வானின் உச்சியில் ஓர் கருடன் வட்டமிட, அந்த அரிதான காட்சியைப் பார்த்த அந்த மக்கள் கூட்டம் பக்தி பரவசத்தில் மூழ்கித் திளைத்தது.

 

இந்த ஆராதனை அபிடேகங்கள் நீடித்துக் கொண்டிருக்கும் போது அருகில் நின்றிருந்த தன் கணவனைக் காணாமல் செந்தமிழ் தேட, வீர் அப்போது சிறுதொலைவில் நின்று அவள் நண்பன் ரகுவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

 

வீரை பார்ததவுடேனே ரகு மரியாதை நிமித்தமாய் தன் வலது கரத்தை நெற்றியில் தொட்டு சல்யூட் அடிக்க வீர் சிரித்தபடி, “நான் வேலையை விட்டு அஞ்சு வருசமாச்சு… நீ இன்னும் இந்தப் பழக்கத்தை நிறுத்தலையா ரகு?” என்று கேட்கவும்,

 

“அது கஷ்டம் ண்ணா… உங்களைப் பார்த்ததும் தானா என் கை சல்யூட் அடிக்கப் போயிடுது” என்றான். இதைக் கேட்ட வீர் ரகுவின் தோளைத் தட்டி சிரித்தான். உறவுமுறை ஆன பிறகும் கூட ரகுவால் இந்தப் பழக்கத்தை விட முடியவில்லை எனும் போது அவன் வேலையை விட்டால் மட்டும்  முடியுமா என்ன? அது அவன் வகித்த பதவியினால் ரகுவிற்கு உண்டான மரியாதை அல்ல. அது அவன் மீதே உண்டான மரியாதை!

 

அதற்கேற்றார் போல் இன்றும் வீரின் கம்பீரத்தில் இம்மியளவு மாறுபாடுகள் கூட இல்லை.

 

வீர் தன் கணீர் குரலால், “கூட்டம் நாம எதிர்பார்த்ததை விட அதிகமா இருக்கே… பிரொடெக்ஷன்ல எந்த பிரச்சனையும் வந்திராதே” என்று கேட்க ரகு தவிப்போடு தலையசைத்து, “நானும் அதுதான் யோசிக்கிறேன் ண்ணா” என்றான்.

 

இந்த சம்பாஷணைகளை தள்ளிநின்று செந்தமிழ் கேட்டுவிட்டு மீண்டும் கோவிலை நோக்கி திரும்பி நடந்தாள். அப்போது அவள் கண்ட காட்சி அவள் மனதைச் சற்றே உலுக்கியது.

 

அது வேறொன்றும் இல்லை. அந்த மாபெரும் கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் விக்ரம் செய்து கொண்டிருந்த காதல் லீலைகளைப் பார்த்துத்தான்.

 

வீரின் செல்ல மகள்தான் தமிழச்சி. அவள் பட்டு பாவாடை தாவணியில் பட்டாம்பூச்சி போல் வண்ணமயமாய் மின்னிக் கொண்டிருக்க, அந்த உடையலங்காரத்தில்  அவள் அழகின் வசீகரத்தைக் கூற  வார்த்தைளே இல்லை.

 

அவளோ அந்தக் கூட்ட நெரிசலில் காற்று வராமல் தவித்துக் கொண்டிருக்க, அதை உணர்ந்தோ அல்லது அவளிடம் காதல் விளையாட்டு புரியும் நோக்கத்திலோ… ஆதி விஷ்வாவின் ஒரே புத்திரன் விக்ரம் அவள் காது மடலில் ஊத அந்த சில்லென்ற காற்று வீசியதில் அவள் துணுக்குற்றாள். அந்த நொடியே அவள் திரும்பி நோக்க… அவன் அவள் பார்வையில் படாமல் மறைந்து கொண்டான்.

 

இப்படி சில முறைகள் தொடர… அவள் சாதுரியமாய் அவன் அறியா வண்ணம் திரும்பி அவனைக் கண்டறிந்துவிட்டாள். ஆனால் அவள் விழிகளில் அதிர்ச்சியோ கோபமோ இல்லை. அதற்கு மாறாய் அவள் அவன் கரத்தைப் பற்றி கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவனை ஒதுக்குப்புறமாய் அழைத்துச் சென்றுவிட ஓர் தாயாக இதனை எப்படி எடுத்து கொள்வெதென்று செந்தமிழுக்குப் புரியவில்லை. அப்படியே திகைத்து நின்றுவிட்டாள்.

 

அந்த சமயம் பார்த்து அவள் தங்கை தேவி, “அர்ச்சகர் உள்ளே கூப்பிடுறாரு… வாங்க க்கா சுவாமி தரிசனம் பார்க்க போலாம்” என்று அழைக்க, அந்த எண்ணத்தை  அப்போதைக்கு ஒதுக்கிவிட்டு மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டவர்,

 

“சரி தேவி… நீ போய் பசங்களை எல்லாம் கூப்பிடு” என்று சொல்லிக் கொண்டே அவள் ஆலயத்தின் உள்கோபுரத்திற்குள் நுழைந்தாள்.

 

அங்கே செந்தமிழ் பார்த்த காட்சி அவள் உயிரில்  உறைந்திருக்கும் தேகம்… தேகத்தில் பின்னிப் பிணைந்திருக்கும் நாடி நரம்பு என எல்லாவற்றையும் சிலாகிப்படைய செய்தது.

 

 ராஜவர்மன் அளித்த அந்த பொக்கிஷமான ராஜகிரீடம்  தலையில் சூட்டப்பட்டிருக்க, கருவறையினுள் கம்பீரமாய் சர்வ அலங்காரங்களோடு வீற்றிருந்தாள் ராஜராஜேஸ்வரி!

 

 இமைக்காமல் அந்த காட்சியைப் பார்த்த வண்ணம் இருந்தவளுக்கு அந்த நொடி உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை என்று தோன்ற அவள் பேரானந்தத்தில் திக்குமுக்காடிப் போயிருந்தாள். உள்ளம் நெகிழ்ந்து அவள் விழியோரம் நீர் கசிய,

 

“தமிழ்… தமிழச்சி… தமிழச்சி” என்ற ஓர் கம்பீரமான குரல் அவள் கரத்தை அழுத்தமாய் பற்றிக் கொண்டிருந்தது. தம் விழிகளை திறக்க  முயன்றாள். ஆனால் அது முடியவில்லை. அத்தனை நேரம் உள்ளத்தில் குடியிருந்த இன்பம் விலகி மனம் சஞ்சலப்பட்டது. அப்படியெனில் தான் இத்தனை நேரம் கனவுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தோமா? நடந்தேறிய நிகழ்வுகளை கனவாய் காணும் வழக்கம் இன்னும் செந்தமிழை விட்டுப் போகவில்லை.

 

உடலின் ஒவ்வொரு பாகமும் வலியால் அவதியுற, மெல்ல நடந்த அந்த கோர விபத்து அவர் நினைவுக்கு எட்டியது.

 

ராஜராஜேஸ்வரி ஆலயத்தின் குடமுழுக்கு விழா நடந்து சரியாய் எட்டு வருடங்களுக்குப் பிறகு….

 

மகள் தமிழச்சி காரை இயக்க, செந்தமிழ் அருகில் அமர்ந்து அவளை வசைபாடிக் கொண்டு வந்தார்.

 

“ம்மா ப்ளீஸ்… என்னை புரிஞ்சுக்கோங்க… இனிமே எனக்கும் விக்ரமுக்கும் ஒத்து வராது” என்றாள்.

 

“ஏன்டி ஒத்து வராது?” என்று செந்தமிழ் முறைப்பாய் கேட்க,

 

“ஒத்து வராதுன்னா ஒத்து வராது… நாங்க இரண்டு பேரும் ஒரே புடியில இருக்க இரண்டு கத்தி மாறி… அது இரண்டு பேருக்குமே ஆபத்து” என்று முடிவாய் சொன்னவளை செந்தமிழ் ஆழ்ந்து பார்த்தார்.

 

“இது உங்க கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியலையா?”

 

“ப்ச்… ஏன்ம்மா…?” என்றவள் பதில் சொல்ல முடியாமல் தட்டுத்தடுமாற,

 

“இரண்டு பேரும் கல்யாணம் பண்ணி இந்த ஒரு வருஷமா ஒத்துமையாதானேடி இருந்தீங்க… நானும் ஆதியும் கூட ஆச்சரியப்பட்டோம்… ஆனா இப்போ இப்படி”

 

“ம்மா ப்ப்ப்ப்ப்ளீஸ்… இந்த மேட்டரை இதோட விடுங்க… நானும் விக்ரமும் முயூட்சுவலா டிவோர்ஸ் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்” என்று தமிழச்சி கடுப்பாய் அதேநேரம் தீர்க்கமாய் உரைத்தாள்.

 

மகளின் வார்த்தைகளைக் கேட்டு செந்தமிழ் அதிர்ச்சியில் உறைந்து போக, அதற்கு பின் அவர்களுக்கு இடையில் ஓர் அழுத்தமான மௌனம் ஆட்சி செய்யத் தொடங்கியது.

 

ஏற்கனவே தாங்க முடியாத வேறொரு அதிர்ச்சியில் இருந்தவருக்கு மகளின் இந்த முடிவு அடுத்த அதிர்ச்சி!

 

கார் வேகமாய் சென்று கொண்டிருந்தது. இருவரும் ஊமையென வந்துக்கொண்டிருக்க, சில நிமடங்கள் இருவருக்குள்ளும் மௌனமாகவே கழிந்தது.

 

செந்தமிழின் மனம் ஏதேதோ சிந்தனைகளில் ஆழ்ந்துவிட, அப்போது தமிழச்சி பதட்டத்தோடு, “கண்ட்ரோல் ரூம்” என்று ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

என்ன நிகழ்கிறது என்பதை கிரகிப்பதற்கு முன்னதாக தமிழச்சி, “ம்மா… டைம் இல்ல… நான் காரை ஸ்லோ பண்றேன்… நீங்க டோரை திறந்து வெளிய குதிங்க” என்றாள்.

 

“தமிழச்சி” என்று அவர் அதிர்ச்சியாய் பார்க்க,

 

“சாரி ம்மா… வேற வழியில்லை” என்று சொல்லி இமைக்கும் நொடிகளில் கார் வேகத்தைக் குறைத்து அவரை அவள் வெளியே தள்ளிவிட்டாள். மணற்சரிவில் உருண்டவர் அங்கிருந்த பாரங்கல்லில் தலை இடித்து நினைவு தப்பினார்.

 

ஏதோ பெரிய ஆபத்தைக்  கருத்தில் கொண்டே அவள் அப்படி செய்திருக்கக் கூடும் என்பதை உணர்ந்த செந்தமிழுக்கு… இப்போது மகளுக்கு என்னவாயிற்றோ ஏதாயிற்றோ என்று பதட்டமானது.

 

அப்போது, “தமிழ்… தமிழ்” என்ற அவர் கணவனின் அழைப்பு ஓயாமல்  கேட்க அவர் பிரயத்தனப்பட்டு தம் விழிகளைத் திறந்தார். மங்கலாய் ஓர் வெளிச்சம். எதிரே நின்ற கணவனின் முகம் கூட சரியாய் புலப்படவில்லை. அப்போது அவர் ரொம்பவும் சிரமத்தோடு தம் உதடுகளைப் பிரித்து,

 

“த..மி..ழ..ச்…ச்ச் சி” என்று தட்டுத்தடுமாறி கவலையோடு வினவ,

 

“அவளுக்கு ஒண்ணும் இல்ல தமிழ்… நல்லா இருக்கா” என்ற மனைவியின் எண்ணம் புரிந்து வீர் பதிலளிக்க அவர் உள்ளம் நிம்மதியடைந்தது.

 

அப்போது ஓர் காரிருள் செந்தமிழை உள்ளிழுக்க காத்திருக்க, அவர்  மீண்டும் தம் விழிகளை மூடிக் கொண்டார். இருள் கவ்விக் கொள்ள இத்தோடு தன்னாயுள் முடிந்து விட்டதா என்று எண்ணும் போது,

 

“என்னை விட்டு போயிடாதே தமிழ்…. நீ இல்லாம என்னால வாழ முடியாதுடி” என்று வீரின் கம்பீரக் குரல் வேதனையில் உடைந்தது.

 

அவர் உடல் ஒத்தழைக்க மறுக்க உள்ளம் மட்டும் சிந்தனையின் அடிவாரத்தில் இருந்தது.

 

‘நம்ம கையில என்ன இருக்கு’ என்று அவர் மனம் நம்பிகையை இழந்த சமயம், நாம் அவரிடம் அந்த விஷயத்தை சொல்லாமலே இறந்துவிடப் போகிறோமா என்று கேள்வி அவர் ஆழ்மனதைத் துளையிட,

 

‘ம்ஹும் ம்ஹும்… கூடாது கூடாது’ என்று படபடப்பானார்.

error: Content is protected !!