imk-20

imk-20

௨௧(21)

மறைவாய் ஒருவன்

உடலில் உயிரானது எப்படி பார்வைக்கும் உணர்வுகளுக்கும்  புலப்படாதோ  அப்படிதான் கருவறையில் சஞ்சரிக்கும் கடவுளின் சக்தியும்.

கருவறையில் ஸ்தாபிக்கப்பட்டிருப்பவைகள் வெறும் சிலையல்ல. மனித உணர்வுகளை ஆளுமை செய்யும் உயிரோட்டமான நம்பிக்கை. கோவில்கள் தாம் அந்த நம்பிக்கைகளின் இருப்பிடம். இன்று தமிழச்சியின் உதடுகள் நிந்தித்ததும் விழிகள் பார்த்ததும் வெறும் சிலையல்ல. அவள் தாயின் ஆழமான நம்பிக்கை.

அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் தமிழச்சி மனதளவில் ராஜராஜேஸ்வரியின் உருவச் சிலையோடு ஒரு போரையே நடத்திக்கொண்டிருந்தாள். ஆழமான நம்பிக்கைகள் என்றும் பொய்யித்து போவதில்லை என்பதற்கான சான்றாய்  கண்விழித்துவிட்டார் செந்தமிழ்!

ஆனால் அந்த விஷயம் தமிழச்சிக்கு தெரியாதே. ஆதலால் அவள் தன் நிந்தனைகளைத் தொடர, இவான் பேசாமல் பேசும் அவள் முகபாவனைகளைச் சுவாரசியமாய் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது ஆரத்தி தட்டோடு வெளியே வந்த அர்ச்சகர் தமிழச்சியின் முகத்தைப் பார்த்து, “எப்படி இருக்க தமிழச்சி? அம்மாவுக்கு குணமாயிடுத்தா… கண்ணை முழிச்சிட்டாரா?” என்று கேட்கவும் அவள் சோகமாய் இல்லையென்று தலையசைத்து வைத்தாள்.

அவர் உடனே அவளுக்குத் தேறுதல் சொல்லிக் கொண்டே தீபாராதனையைத் தட்டை நீட்ட அவள் வேண்டா வெறுப்பாய் தொட்டு நெற்றியில் ஒற்றிக் கொள்ள, இவானும் அவ்வாறே செய்தான்.

அர்ச்சகர் அவனை வித்தியாசமாய் பார்க்க தமிழச்சி ஆழ்ந்த பார்வையோடு, “எப்படி? ரொம்ப பழக்கம் போல செய்றீங்க” என்று கேட்க, அவன் புன்னகையோடு, “அம் யூஸ்ட் டு(நான் பழகிக்கிட்டேன்) ” என்றான்.

அதற்குள் அர்ச்சகர் குழப்பமாய், “யாரும்மா தம்பி? உனக்கு தெரிஞ்சவரா? வெளிநாடோ?” என்று வரிசையாய் சந்தேகம் கேட்க, “அண்ணாவுக்கு ஃப்ரெண்ட்” என்று வாயெடுக்க போனவள் உதட்டை கடித்துக் கொண்டு, “விக்ரமோட ஃப்ரெண்ட்… கோவில்கள்… தமிழர்களோட பழமையான கலாச்சாரம்… இதை பத்தி எல்லாம் ஆராய்ச்சி செய்றாரு” என்றாள்.

அவர் உடனே சந்தேகமாய் இவானின் உயரத்தையும் கம்பீரத்தையும் பார்த்து லேசாய் முகம் சுணங்கிவிட்டு, “நேத்துதானே விக்ரமுக்கும் உனக்கு சம்பந்தம் இல்லைன்னு டிவில சொன்ன” என்று கேட்க அவளுக்குச் சுருக்கென்று தைத்தது.

தான் விட்ட ஒரு வார்த்தை சுவற்றில் அடித்த பந்து போல தனக்கே இப்படித் திரும்ப வரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை . அர்ச்சகருக்கு என்ன பதில் சொல்வது என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே இவான் தன் வலது கரத்தை முன்னே நீட்டி பிரசாதம் கொடுக்கச் சொல்லி அவரை மிரட்டலாய் பார்த்தான். அந்த பார்வையில் உங்கள் வேலையை மட்டும் நீங்கள் பாருங்கள் என்ற மறைபொருள் ஒளிந்திருந்தது.

அவருக்கு அது புரிந்துவிட்டது போல? இருவருக்கும் அவர் விபூதி குங்குமம் வழங்க அதனைப் பெற்றுக் கொண்ட தமிழச்சி அதனை நெற்றியில் இட்டுக் கொண்டாள். அப்போது அங்கே தூணின் அருகில் நின்றிருந்த ஒரு ஆடவன் அவள் பார்வைக்கு தென்ப்பட்டான்.

“ஏ குமாரு!” என்றவள் அழைக்க அவள் குரலைக் கேட்டும் கேட்காதவன் போல் அவன் அவ்விடம் விட்டு அகன்றான்.

“என்ன அர்ச்சகரே? உங்க பையன் என்னைப் பார்த்தும் பார்க்காத மாறி போறான்” என்று அவள் கேட்க, “பின்ன… அவன் கூட படிச்ச நீ, இன்னைக்கு பெரிய போலீஸ் ஆயிட்ட… ஆனா அவ இன்னும் அப்படியேதானே பொறுப்பில்லாம சுத்திட்டு இருக்கான்” என்றார்.

“வேலைக்கு எல்லாம் போகலையா?” என்று அவள் கேட்க,

“எங்க? ஒழுங்கா படிச்சாதானே… உங்க அம்மா தான் அவனுக்கு காலேஜ்ல சீட்டு வாங்கி கொடுத்தாங்க… ஆனா அவன் ஊரை சுத்திட்டு எல்லா பரிட்சையிலும் கோட்டை விட்டுட்டான்… என்னவோ? இப்பதான் ஒரு ஏழு மாசமா முன்னாடி புத்தி வந்து… என் கூட ஒழுங்கா கோவில் வேலையெல்லாம் பாத்துக்கிறேன்னு சொன்னான்… ஒரு மாசம் நல்லாதான் செஞ்சான்… திரும்பியும் பழைய குருடி கதவை திறடிங்கற கதையா… எதையும் சரியா செய்ய மாட்டுறான்… எல்லாம் நான் எந்த ஜென்மத்தில செஞ்ச பாவமோ?” என்றவர் புலம்பிக் கொண்டே தன் வேலையில் அவர் ஈடுபடத் தொடங்கினார்.

அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டே திரும்பிய தமிழச்சி இவானை பார்க்க அவனோ அழகாய் தன் நெற்றியில் திருநீற்றை இட்டுக் கொண்டிருந்தான் .

மெலிதாய் ஒரு முறுவல் அவள் முகத்தில் தவழ, அப்படியென்ன அவனுக்கு நம் பண்பாட்டின் மீது ஈர்ப்பு என்று மலைப்பு உண்டானது.

அதன் பின் இருவரும் கோவிலைச் சுற்றி வர அப்போது அங்கே தரிசிக்க  வந்த பெண்களின் பார்வையெல்லாம் இவான் மீதுதான். ஒருவர் விடாமல் அவனையே பார்த்துக் கொண்டு சென்றனர். வேற்று நாட்டவன் என்பதைத் தாண்டி அவன் உயரத்திலும் உடல் அமைப்பிலும் கம்பீரத்தோடு கூடிய வசீகரம் அவர்களை அப்படிப் பார்க்கவைத்தது. ஆனால் அவன் பார்வை இரும்பினை தொட்ட காந்தமாய் அவளிடம் மட்டுமே ஒட்டி கொண்டுவந்தது.

அவனை அவள் கவனியாமல் கோவிலை சுற்றிவந்த பெண்களின் முகத்தைக் கவனித்துவிட்டு, “இங்கயே உங்களுக்கு ஒரு நல்ல தமிழ் பொண்ணு செட் ஆகிடும் போல… யாராயாச்சும் பிடிச்சி இருந்தா சொல்லுங்க… எங்க ஊருதான்… எப்பாடுப்பட்டாவது நான் பேசி முடிக்கிறேன்” என்று அவன் அருகில் நடந்து வந்தபடி அவனுக்கு மட்டும் கேட்பது போல் காற்றோடு ரகசியமாய் சொல்லிப் புன்னகைத்தாள்.

அவன் முகம் மலர, “ஷால் ஐ?(சொல்லுட்டுமா?)” என்றவன் அவளைப் போல் ரகசியமாய் இறங்கி அவள் காதோடு சொல்லவும், “அதுக்குள்ள செலெக்ட் பண்ணிடீங்களா… யாரு யாரு?” என்றபடி ஆவல் ததும்பக் கேட்டு அவன் முகம் பார்த்தாள்.

தன் விருப்பத்தைச் சொல்ல வேண்டும் என்று இவானுக்கு வார்த்தை தொண்டைவரை வந்துவிட அப்போது பார்த்து அவள் கவனம் வேறெங்கோ திரும்பியது. கூர்மையாய் அவள் பார்வை வேறெதன் மீதோ படிவதைப் பார்த்து அவனும் அந்த திசையில் திரும்ப, அங்கே அவனுக்கு ஒன்றும் புலப்படவில்லை.

“வாட்?” என்று அவன் தமிழச்சியை கேட்க,

“நத்திங்… நத்திங் நீங்க சொல்லுங்க” என்று கேட்டுக் கொண்டே  முன்னேறி நடந்தவள் அவன் சொல்ல வாய்திறக்கும் போது, “நீங்க செலெக்ட் பண்ண பொண்ணு என்னை மாறி வகுட்டில குங்குமம் வைச்சிருக்க பொண்ணு இல்ல இல்ல…” என்றவள் கேட்க,

“ஒய்?” என்று அவளை ஆழ்ந்து பார்த்தான்.

“அப்படி வைச்சிருந்தா… தே ஆர் மேரிட்னு அர்த்தம்… அப்புறம் உங்களை என்னையும் போலீஸ்னு கூட பார்க்க மாட்டாங்க… கும்மிருவாங்க… ஸோ கல்யாணம் ஆகாத பொண்ணா பார்த்து சொல்லுங்க” என்றாள்.

அதற்கு மேல் எங்கே அவன் விருப்பத்தை சொல்ல. அவள் நெற்றி வகிட்டிலிருந்த குங்குமம்  அவனை உறுத்தியது. நினைத்ததை சொல்ல முடியாமல் மனம் தடை செய்ய தொண்டைக்குழியில் நின்ற வார்த்தைகள் மீண்டும் உள்ளுக்கே  சென்றது. பெருமூச்சுவிட்டபடி அவன் அவளுடன் மௌனமாய் நடந்தான்.

அவள் மீண்டும் தன் புருவத்தை ஏற்றி, “என்ன இவான்? எதுவும் சொல்ல மாட்டிறீங்க? யாரு அந்த பிகரு?” என்று கேட்க,  அப்போது அவன் மனமோ தான் வந்த வேலையென்ன? இப்போது தான் செய்யும் வேலையென்ன? என்று இடித்துரைத்தது.

அவள் கேள்விக்கு பதிலுரைக்காமல், “அது… சரியா வராது… லெட்ஸ் கோ” என்று கடுப்போடு சொல்லி கொண்டே அவன் வெளியேறப் போக,

“ஓகே இவான்… ஆனா ஒரு சுத்துதானே முடிஞ்சிருக்கு… இன்னும் ரெண்டு சுத்து சுத்தனுமே… டு மினிட்ஸ்… நீங்க வெய்ட் பண்ணுங்களேன்… நான் சுத்திட்டு வந்திடுறேன்…” என்று அவனிடம் கேட்டு கொண்டாள். அவனும் சரியென்று தலையசைத்துவிட்டு வெளியேறினான். அவளுடன் செல்ல மனம் ஒத்துழைக்கவில்லை.

இவான் வாசலில் தன் ஷுவை காலில் போட்டுக் கொண்டே இரண்டாவது சுற்று சுற்றி வரும் தமிழச்சியை பார்க்க, அப்போது  அவனுக்கு நேராய் கோவிலின் கருவறை மண்டப்பதுக்கு அருகில் தூண் மறைவில் நின்று கொண்டிருந்த ஒருவன் தமிழச்சியை நோட்டம்விட்டுக் கொண்டிருந்தது கண்ணில்பட்டது. அவனுக்கு ஏதோ தவறாகத் தோன்ற, தன் ஷுவை கழற்றிவிட்டு மீண்டும் அவன் கோவிலுக்குள் உள்நுழைய வந்தான்.

அதற்குள் தமிழச்சி அந்த நபர் மறைந்திருந்த தூணுக்கு அருகாமையில் சென்று அவன் எதிர்பாராத சமயத்தில் சட்டை காலாரை பிடித்துக் கொண்டாள்.

“பெர்ஃக்ட்” என்று தமிழச்சியின் புத்திக்கூர்மையைப் பார்த்து இவான் சபாஷ் போட்டான்.

அவள் பார்வை முன்னமே அந்த நபரைக் குறித்துக் கொண்டது போல. அதனாலேயே அவள் கோவிலை சுற்றிவருவது போலப் பாவனை செய்து அவனைப் பிடித்துக் கொண்டாள்.

அவள் தன் பிடியை அவன் மீது இறுக்கி, “ஏன் குமார் என்னைப் பார்த்து ஒளிஞ்ச… எதுக்கு என்னையே நோட்டம்விட்டுட்டு இருக்கு… உன் பார்வையே சரியில்லையே… ஆமா… இப்போ யாருக்கோ நீ மெசஜ் பண்ண மாறி இருந்துச்சு… ஃபோனை குடு நான் பார்க்கணும்” என்று நொடி நேரத்தில் அவனை வரிசை கட்டி கேள்விகளைக் கேட்டு அவனைத்  திக்குமுக்காட வைத்ததில்லாமல் அவன் பேசியை அவள் பறிக்க முயல, அப்போது அவன் மீதான அவள் பிடி லேசாய் தளர, அவன் சுதாரித்துக் கொண்டான்.

அவள் பிடியிலிருந்து தப்பி அவன் ஓட்டமெடுக்க அவன் மீதான சந்தேகம் அதிகரித்தது. “டே குமாரு நில்லு” என்று கத்திக் கொண்டே அவள் பின்னோடு ஓட இவானும் அந்த நேரம் ஓட்டமெடுத்து அவள் பின்னோடு வந்தான் .

அதற்குள் அவன் வெகு லாவகமாய் கோவில் பின் வாசலிலிருந்த மரத்தின் மீது ஏறி மதில் சுவரைத் தாண்டி குதித்து விட, அவளும் அந்த செயலை செய்ய எண்ணி பின்  தான் போட்டிருந்த உடை அதற்குச் சரிப்பட்டுவராது என் பின்வாங்கினாள்.

“ச்சே!” என்றவள் அந்த உடையை எண்ணிக் கடுப்பாகும் போதே இவான் ஒரே தாவில் மதில் சுவற்றை ஏறித் தாண்டி குதித்து விட்டான். வியப்பாய் புருவங்கள் நெறிந்த சில நொடிகளில் இயல்பாய் உதட்டைச் சுளித்துக் கொண்டு, “இதை விட இரண்டு மடங்கு இருந்தாலும் அவன் ஹைட்டுக்கு அசால்ட்டா ஏறலாம்” என்று சொல்லிக் கொண்டே கோவில் பின் கதவு வழியே அவள் சென்றாள்.

பின்புறம் பெருங்கடல் தம் அலையோசையால் அவளை வரவேற்றது. அவள் பார்வை இவானை தேட அவனோ அப்போது தன் இருவிழிகளை தேய்த்துக்கொண்டிருந்தான். குமார் உதட்டில் இரத்தம் வழிய விழுந்து கிடந்தான்.

இவான் அடித்து கீழே விழுந்த மறுகணம் குமார் அவன் கண்களில் மண்ணை வீசி இருக்க வேண்டும் என்பதாக யுகித்தவள், இப்போது இவானுக்கு முதலுதவி செய்வதைவிட குமாரை பிடிப்பது முக்கியமென்று எண்ணி அவனை நெருங்கினாள்.

குமார் மீண்டும் எழுந்து ஓட்டம் பிடிக்க, “மவனே என் கையில மாட்டின… கைமாதான்டி நீ” என்று காரசாரமாய் திட்டிக் கொண்டே அவள் அவனைத் துரத்த அவன் முன்னேறி இன்னும் வேகமெடுத்தான்.

அந்த கடல் மணலில் ஓடுவது சற்றே சிரமம் எனினும், அவள் ஒரு ட்ரெயின்ட் ஐபிஎஸ் ஆபீசர் என்பதால் அவளுக்கு அது அத்தனை சிரமமாயில்லை. ஆனால் புடவை கட்டிக் கொண்டு ஓடுவதற்கெல்லாம் அவளுக்கு பயிற்சி கொடுக்கப்படவில்லையே!

அதுவும் அந்த கடல் காற்றில் அவள் உடுத்தியிருந்த புடவை தாறுமாறாய் பறந்து அவளை ஓடவிடாமல் இழுத்து தள்ளி கொண்டிருக்க, கிட்டத்தட்ட முடியாமல் தடுக்கி விழ போனவளை இவான் பின்னிருந்து ஒரு அணைப்பில் பிடித்து காப்பாற்றினான்.

அவன் இறுகிய அணைப்பில் அவள் உடல் ஒருநொடி அதிர அவனோ, “நீ இந்த காஸ்ட்யும்ல ஓடுறது சரிப்பட்டு வராது… நீ இங்கயே இரு… நான் போய் அவனை பிடிச்சிட்டு வர்றேன்” என்று சொல்லி அவளை விட்டு முன்னேறி ஓடினான்.

“ஏன் சரிப்பட்டு வராது? நான் பிடிப்பேன்… கையில கிடச்சவனை விட்டுட்டு பேச்சை பாரு” என்று தன் ஈகோவிற்கு தீனி போட்டவள் புடவையை இழுத்து சொருகி கொண்டு ஓட எத்தனிக்க, அதற்குள் இவானையும் குமாரையும் காணோம்.

இவானுக்கு அழைக்கலாம் என்ற போது அவள் கைப்பேசி காரில் இருப்பதை உணர்ந்து தலையிலடித்து கொண்டு, சுற்றும் முற்றும் தன் பார்வையை அலைபாயவிட்டாள். அப்போது  மணலில் ஆழமாய் புதையுண்ட இவானின் பெரிய கால்தடத்தை வைத்து அவன் சென்ற திசையைக் கணித்துக் கொண்டு அவளும் அவ்வழியில் சென்றாள்.

 

error: Content is protected !!