Imk-27

Imk-27

28(கஅ)

துரோகம்

வானில் உயர பறந்து கொண்டிருந்த டில்லியிலிருந்து சென்னை செல்லும் விமானத்தில் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தான் விக்ரம்!

சம்யுக்தா ராய் பற்றிய ஓர் தீவிர அலசல் அவன் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது.

சம்யுக்தாவின் தாத்தா, அப்பா, அண்ணன் மற்றும் கணவன் என்று எல்லோரும் அரசியல்வாதிகள். ராஜ வம்சாவளியை சேர்ந்தவர்கள். அதுவும் சம்யுக்தா ராயின் தாத்தா சுதிந்திர போராட்ட காலத்தில் தன் சொத்தையெல்லாம் செலவு செய்து தொடங்கிய கட்சி இது.

சுதந்திர இந்தியாவில் பல இன்னல்களுக்கு பிறகு தனக்கான தனி அங்கீகாரத்தை பெற்றது சுதந்திர பாரத் கட்சி. அதன் பின் வழிவழியாக இவர்களின் வழி தோன்றல்கள் ஆட்சிபீடத்தில் அமர, எஸ்.பி கட்சி இந்தியாவில் பெரும் பேறுபெற்ற தேசிய கட்சியாக மாறியது.

ஆனால் எல்லாம் சம்யுக்தா ராயின் தந்தை சத்யா ராய் உயிர் துறக்கும் வரை. அவரின் இறப்புக்கு பின் அவரின் மகன் அரவிந்த் ராய் தலையெடுத்து ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். ஆனால் துரதிஷ்டவசமாய் ஒரு விமான விபத்தில் அரவிந்த் ராய் மற்றும் சம்யுக்தா ராயின் கணவன் மோகன் ராயும் ஒரு சேர இறந்து விட்டனர்.

சம்யுக்தா ராய்க்கு திருமணமாகி ஐந்து வருடங்களே ஆகியிருந்தது. அதுவும் பூனாவில் உள்ள பிரசித்தி பெற்ற கல்லூரியில் அவர் தொல்லியல் துறை பாடபிரிவில் படித்து கொண்டிருக்கும் போதே சம்யுக்தா ராயிற்கு சொந்தத்திலேயே மோகன் ராயுடன் பிரமாண்டமான முறையில் திருமணம் முடிக்கப்பட்டது.

அதன் பின் சம்யுக்தாவிற்கு ஒரு வருடத்தில் மகள் பிறந்தது. இவையெல்லாம் செய்திகளாக வெளிவந்தன. அவ்வளவே!

ஆனால் திடீரென்று சம்யுக்தாவின் அண்ணனும் கணவனும் ஒரே விமானத்தில் சென்று  விபத்திற்குள்ளாகி இறக்க, அரசியலில் எந்தவித தலையீடோ அனுபவமோ இல்லாத சம்யுக்தா தலைமை ஏற்க நிர்பந்திக்கப்பட்டார்.

அதுவரை யாரும் அறிந்திருக்கவில்லை. சம்யுக்தா ஒரு பெரும் அரசியல் சூத்திரதாரி என்று.

ஆட்சி பீடத்தில் தற்செயலாக அமர்ந்தவர் தன்னுடைய ஆளுமை திறமையால் அவரின் தந்தை தாத்தாவின் நேரடியான அரசியல் வாரிசு என்ற பெயரையும் பெற்றார்.

சுதந்திர பாரத் கட்சியை அவர் தனி பெண்மணியாய் நிர்வகித்து தொடர்ச்சியாய் இரண்டாவது முறையாக பிரதமர் பதவியும் ஏற்றார்.

அங்கேதான் விக்ரமுக்கு இடித்தது. இத்தகைய உயரிய பதவியில் இருக்கும் சம்யுக்தா எப்படி தன்னை அவர் மகளுக்கு கணவனாக தேர்வு செய்ய முடியும். அதுவும் ஏற்கனவே தான் மணமானவன் என்று தெரிந்த பின்னும்.

அவனை சுற்றி ஏதோ சூட்சம வலை பின்னப்படுகிறதோ என்ற அவன் சிந்தனைக்கு அப்போதைக்கு தடைவிதிக்குமாறு விமானம் சென்னை விமானநிலையத்தில் பெரும் சத்தத்தை எழுப்பி கொண்டு தரையிறங்கியது.

*******

அதே நேரம் தமிழச்சி தன்னுடைய வேலைகளை முடித்து கொண்டு எப்போதும் போல் தன் போலீஸ் வாகனத்ததில் செல்லாமல், அதனை முன்னதாக வீட்டிற்கு அனுப்பிவிட்டு வேறு உடை அணிந்து கொண்டு தன் காவல் நிலையத்தில் பின்புறம் வெளியேறி ஹெல்மெட்டை மாட்டி கொண்டு சற்று தொலைவில் காத்திருந்த முகிலனுடன் பைக்கில் ஏறி சென்றாள்.

அவர்கள் பைக் வந்து நின்றது  சென்னை மாநகரத்திற்கு ஒதுக்குபுறமாய் இருந்த ஒரு வீடு. கதவை திறந்ததும் உள்ளே நின்றிருந்த காவலாளி அவளை பார்த்து சல்யுட் அடிக்க, இறுகிய முகத்தோடு உள்ளே நுழைந்தவள்முகிலனை பார்த்து,

“எந்த பிரச்சனையும் இல்லையே முகில்?” என்று கேட்கவும்,

“இப்போதைக்கு எந்த பிரச்சனையும்… இல்லை? ஆனா ரொம்ப நாளைக்கு இங்க வைச்சிருக்க முடியாது… அது ரிஸ்க்” என்றான்.

அவன் சொன்னதை கேட்டு கொண்டே முகிலிடம் இருந்து சாவியை வாங்கி பூட்டியிருந்த உள்ளறை கதவை திறந்து  நுழைந்தாள்.

அவள் அறைக்குள் நுழைந்து கையோடு தன்னிடம் இருந்த பிஸ்டலை கையில் எடுக்க, “ஏய்! என்னடி பண்ற… சுத்திலும் வீடுங்க இருக்கு” என்றான் முகில் அச்சத்தோடு!

“ஐ நோ” என்று சொல்லி கொண்டே துப்பாக்கியை அங்கே இருந்த இருக்கையில் கட்டி போட பட்டிருந்த இருவரில் ஒருவனின்
நெற்றி பொட்டில் வைத்தாள்.

“எதிரியை கூட மன்னிக்கலாம்… துரோகியை மன்னிக்க கூடாது” என்றாள்.

அவன்தான் இன்ஸ்பெக்டர் வினோத். முகமெல்லாம் வியர்க்க, “மேடம் வேண்டாம் மேடம்…” என்று கெஞ்சுதலாய் அவளை பார்த்தான்.

முகில் நடுநடுங்க, “என்னடி பண்ண போற?” என்று அவள் காதோடு கிசுகிசுத்தான்.

“பார்த்தா தெரியல… கொல்ல போறேன்… இவனுங்க மாறி ஆளுங்கலாலதான் டிபார்ட்மெண்டுக்கே கெட்ட பேரு… வெளிய இருக்க குற்றத்தை கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி உள்ளே இருக்க கழிசடைங்கள கண்டுபிடிச்சி தூக்கணும்…

இப்போ இவனை நான்  கொன்னாலும் யாரும் என்னை கேட்க முடியாது… ட்யுட்டி சம்பந்தமா இவனை காஞ்சிபுரம் அனுப்பி இருக்கிறதா இவன் பேமிலிக்கு இன்பாஃர்ம் பண்ணிட்டேன்…

அவங்ககிட்ட இவன் ஃபோன் போற இடத்தில வேலை செய்யாதுன்னும் சொல்லிட்டேன்… அதானால இவனை கொன்னுட்டு ட்யுட்டி பார்க்கும் போதே செத்து போயிட்டான்னு ஒரு கதையை நானா கட்டி முடிச்சிருவேன்” என்று அவள் வஞ்ச புன்னகையோடு சொல்ல வினோத்தின் முகம் இருளடர்ந்து போனது.

‘இவ ஒரு முடிவோடுதான் வந்திருக்கா போல… அப்போ என் ரூம்ல நிச்சயம் ஒரு சாவு உறுதியா?’ என்று தவிப்போடு நின்றிருந்தான் முகில்!

வினோத் அஞ்சி கொண்டு, “மேடம்… ஏதோ பணத்தாசையில இப்படி பண்ணிட்டேன்… சத்தியமா உங்களுக்கு துரோகம் செய்யணும்னு பண்ணல… ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் மேடம்… என்னை விட்டிருங்க” என்று
கெஞ்ச தொடங்க அவன் படபடப்பு அருகில் இருந்த குமாரையும் தொற்றி கொண்டது.

“என்னை கொல்ல ஆள் அனுப்பி இருக்க… ஆனா நீ துரோகம் செய்யணும்னு பண்ணல… அப்படிதானே?!” அவள் கேலிபுன்னகையோடு கேட்க,

“தப்புதான் மேடம்… என் வாழ்கையில அவ்வளவு பணத்தை நான் பார்த்ததே இல்ல… கமலகண்ணன் போலீஸ் கிட்ட சிக்க விடாம கொன்னுட்டா டாலர்ஸ்ல  பணம் தர்றதா டீல் பேசுனாங்க” என்று பயபக்தியோடு சொல்ல வினோத்தை ஏறஇறங்க அசூயையாய் பார்த்தாள்.

அவள் பிஸ்டலை எடுத்து கைக்குள் வைத்து கொண்டு, “அப்போ நான் ஸ்பாட்டுக்கு வரதுக்கு முன்னாடி நீ புத்திசாலித்தனமா என்னை முந்திகிட்டு வந்து கமலகண்ணனை போட்டு தள்ளிட்ட… அப்படிதானே?” என்று கேட்கவும் வினோத் குற்றவுணர்வோடு அவளை பார்த்து தலையசைத்தான்.

“நினைச்சேன்டா… ஃபோரன்சிக்ல இருந்து ஆள் வரதுக்கு முன்னாடி நீ கமலகண்ணன் இறந்திருந்த ஸ்பார்ட்ல இருந்த ஃபோனை கையிலெடுத்த போதே…”

“இருந்தாலும் நீ அவ்வளவு தூரம் எல்லாம் போக மாட்டேன்னு நினைச்சேன்” என்று அவள் சொல்ல வினோத்தால் ஒன்றும் பேச முடியவில்லை.

அவர்கள் இருவரையும் மேலும் கீழுமாய் பார்த்தவள் முகிலிடம் ஏதோ ரகசியமாய் சொல்ல, அவன் அந்த அறையை விட்டு வெளியேறி சென்று ஒரு கேமராவோடு நுழைந்தான்.

“என்னன்ன செஞ்சீங்கன்னு எல்லாத்தையும்  நீங்களா சொல்லிட்டா உங்க தலை தப்பிச்சுது” என்று அவள் மிரட்டி தன் துப்பாக்கியை தயார் நிலையில் வைத்து கொள்ள, அவர்கள் இருவரும் வேறு வழியில்லாமல் உண்மையை சொல்லிவிட துணிந்தனர்.

அதிலும் குமார் பயந்த சுபாவம் என்பதால் அவன் முந்திக்கொண்டு அவனுக்கு தெரிந்த அனைத்து உண்மைகளையும் அவளிடம் உளறி கொட்டினான்.

அவர்களிடம் வாக்குமூலம் வாங்கி கொண்டு அந்த அறையை விட்டு இருவரும் வெளியே வர, “இவனுங்க நாளைக்கே நீ மிரட்டித்தான் சொல்ல வைச்சன்னு மாத்தி பேசுனா” என்று முகில் சந்தேகமாய் கேட்க,

“அப்படி எல்லாம் மாத்தி சொல்ல முடியாது… குமாருக்கு எதிரா அவன் அப்பாவே சாட்சி சொல்லுவாரு… வினோத் யூஸ் பண்ண ரகசிய ஃபோன்… அது மூலமா அவன் யார் யார்கிட்ட பேசினான்… அப்புறம் அவன் தங்கச்சி புருஷன் பேர்ல வெளிநாட்டு அக்கௌன்ட்ல டாலர்ஸ்ல ட்ரான்ஸ்ஃபர் ஆகி இருக்க பணம்ன்னு… வினோத்துக்கு எதிரான ஆதாரம் நிறைய இருக்கு… இந்த வாக்கு மூலம் சில விஷயங்களை வாங்க மட்டும்தான்…”என்று சொன்னவள் அவனை நேர்கொண்டு பார்த்து, “ஒரே ஒரு வாரம் சாமாளிச்சிகோ முகில்… நெக்ஸ்ட் வீக் அந்த சைதன்யாவே டில்லி வரான்… அங்கே வைச்சி அவனை நான் பிடிச்சி காட்டிறேன்” என்றாள்.

அவள் திட்டம் என்ன என்பது
முகிலுக்கு தெளிவாக புரியாவிட்டாலும் என்ன பிரச்சனை வந்தாலும் ஒரு நண்பனாய் அவளுக்கு துணை நிற்பதென முடிவோடு இருந்தான் .

தமிழச்சி இந்த வழக்கில் ரொம்பவும் தீவிரமாய் இறங்கிய நிலையில் இன்னொரு புறம் சிம்மா தன் சூட்சம வலையை சைதன்யாவிற்காக விரித்து கொண்டுதான் இருந்தான்.

அவன் தன் அறையில் இவானிடம் கைபேசியில் உரையாடலில் இருந்த சமயம் ஜன்னல் வழியாக தன் தந்தையின் கார் நுழைவதை பார்த்தான்.

எப்போதும் போல் விறுவிறுவென வீட்டிற்குள் நுழைந்தவரின் கால்கள் தன் மனைவியின் அறைக்குள்தான் சென்று நின்றது.

அப்போது செந்தமிழ் தன் அறையின் உள்ளேயே நடைபயின்று கொண்டிருந்தார்.

“நர்ஸ் எங்கே ? நீ ஏன் தனியா நடந்திட்டு இருக்கே” என்று கோப தொனியில் கேட்டு கொண்டே அவள் தோளை பற்ற வந்த கணவனை விட்டு விலகிவந்து, “என்னால முடியும்… நான் பார்த்துக்கிறேன்” என்று விலகி வந்தார்.

“முடியாதுன்னு சொன்னேனா… நான் பக்கத்தில இருக்கேன்”

“ஆமா… இப்போ பக்கத்தில இருப்பீங்க… தேவையில்லன்னா விட்டுட்டு போயிடுவீங்க”
எங்கேயோ வெறித்து கொண்டு கணவனிடம் அவர் அலட்சியமாய் உரைக்க,

“நான் விட்டுட்டு போயிடுவேணா… ஒ! மேடம் காலையில நடந்த விஷயத்தை சொல்றீங்களா?!” என்று அவர் புருவத்தை உயர்த்தி,

“கோப பட வேண்டியது நான்… ஆனா நீ கோபப்படற… அப்பத்தானே நான் எதுவும் கேட்க மாட்டேன் பாரு… நல்ல டெக்னிக்டி உன்னோடது” என்று சொல்லி செந்தமிழை பார்த்து எகத்தாளமாய் சிரித்தார்.

“ஸ்டாப் இட் வீர்… நீங்க செஞ்ச தப்பை என் பக்கமா திருப்ப பார்க்காதீங்க… உங்களுக்கு சிம்மா மேல வருத்தம் கோபம் எது இருந்தாலும் சரி… நீங்க அதை அவன்கிட்ட நேரடியா கேட்டிருக்கலாம்… ஏன் திட்டி கூட இருக்கலாம்… ஆனா அதை விட்டுட்டு அவன் முகத்தை கூட பார்க்காம போனதெல்லாம் டூ மச்… ” என்று
தமிழ் முகம் சிவக்க கூற வீர் மௌனமாய் நின்றார்.

“பிள்ளை கிட்ட கூட ஈகோ? கல்யாணம் ஆன நாளில் இருந்து இப்ப வரைக்கும் கொஞ்சம் கூட மாறல நீங்க” என்று கேட்டு கணவரை குற்றம்சாட்டும் பார்வை பார்த்தார்.

“நீ மட்டும் ரொம்ப மாறிட்டியாடி?” என்று  சீற்றமாய் வீர் மனைவியை கேட்டபடி,

“ஆமா… யாரை கேட்டு நீ என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம சிம்மாவை நியூயார்க் அனுப்பினே…” என்று மேலும் வினவ, இப்போது மௌனமாய் இருப்பது செந்தமிழ் முறையானது.

“நீயும் தமிழச்சியும் அக்சிடென்ட் ஆகி ஹாஸ்பெட்டில இருக்கும் போது எத்தனை பேர் என்கிட்ட சிம்மா எங்கன்னு கேட்டாங்க… தெரியுமா?

அந்த இடத்தில ஒரு அப்பாவா என் நிலைமையில இருந்து யோசிச்சி பாரு… என் நிலைமை புரியும் உனக்கு” என்றவர் அழுத்தமாய் சொல்ல,

செந்தமிழ் தாழ்ந்த குரலில்,”புரியுது வீர்… ஆனா சிம்மா” என்று அவர் ஏதோ சொல்ல ஆரம்பிக்க,

“அவனுக்காக வாக்காலத்து வாங்காதே தமிழ்… அப்பாங்கிற உறவுக்கு அவனுக்கு எப்போ மதிப்பு இல்லன்னு ஆயிடிச்சோ… அதுக்கு மேல அவன்கிட்ட பேசுறதுக்கு எனக்கும் ஒன்னும் இல்ல” என்றார்.

“அப்படி எல்லாம் இல்ல வீர்” என்று தமிழ் சொல்லி கொண்டிருக்கும் போது மதி அவர்கள் அறை கதவை தட்டி, “அத்தை” என்று குரல்கொடுக்க, அவர்கள் சம்பாஷணை அதோடு நின்றது.

“உள்ளே வா மதி” என்று செந்தமிழ் அழைக்க, மதி நுழைந்ததும் அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு,

“நான் இன்னைக்கு நைட் ஃப்ளைட்ல மும்பை போறேன்” என்று தெரிவித்தாள்.

இருவருக்கும் ஒரு சேர அதிர்ச்சி
உண்டானது.

“என்ன சொல்ற மதி… அதுவும் இன்னைக்கேவா?” என்று செந்தமிழ் கேட்க,

“தப்பா எடுத்துக்காதீங்க அத்தை… ஒரு முக்கியமான ப்ரோக்ரேம் புக்காகி இருக்கு… இப்ப போனாதான் பிரேக்டீஸ் பண்ண முடியும்” என்று அவள் ஏதேதோ காரணங்களை சொல்ல வீரும் தமிழும் அவளின் பயணத்தை நிறுத்த முயன்ற எதுவும் பலிக்கவில்லை.

அவள் போக வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்த காரணத்தால்  தமிழும் வீரேந்திரனும் வேறுவழியில்லாமல் சம்மதம் தெரிவித்தனர்.

அதன் பின் மதி நேராய் தன் அறைக்குள் புறப்படுவதற்கான நேரத்தை சரி பார்த்து கொண்டிருக்கும் போது,

வெளியே நின்று அவசரமாய் அறைகதவை தட்டிய சிம்மாவை பார்த்து அவள் புரியாமல் குழுப்பமுற்றாள்.

“மதி… நான் ஒரு டென் மினிட்ஸ் இங்க ஒளிஞ்சுக்கிறேன்… தமிழச்சி வந்தா நான் இங்க இல்லன்னு சொல்லி சமாளிச்சு அனுப்பிடு” என்றான்.

மதி புருவங்கள் சுருங்க அவனை நோக்கிவிட்டு,

“ஏன்? அவ என்ன பண்ண போறா உங்களை” என்று கேட்க,

“உனக்கு தெரியாதா? அவ என் மேல எவ்வளவு கோபத்தில இருக்கான்னு… இப்ப மட்டும் நான் அவ முன்னாடி போய் நின்னேன்னு வைச்சுக்கோ… கேள்வி மேல கேள்வி கேட்டு என்னை கொன்றுவா…. ஒரு வார்த்தை கூட பேச விட மாட்டா… அவ நார்மல் ஸ்டேடுக்கு வந்த பிறகு நானே அவகிட்ட பேசிக்கிறேன்… நீ மட்டும் நான் இங்க இருக்கேன்னு சொல்லாதே… அவ நிச்சயம் என்னை இங்க தேடி வர மாட்டா” என்று சொல்ல
மதியும் சம்மதமாய் தலையசைக்க அவன் அந்த அறையின் கதவின் பின்புறம் ஒளிந்து கொண்டான்.

மதி அவள் அறையிலிருந்து எட்டி பார்க்க, தமிழச்சியும் கிட்டதட்ட அவன் சொன்ன அதே  கோப நிலையில் வந்து கொண்டிருந்தாள்.

ஜெஸ்ஸியை பார்த்து ஏதோ விசாரணையை மேற்கொண்டவள் மாடி படிக்கெட்டுகளை நான்கெட்டுகளில் கடந்து மேலே வந்து மதியின் அறை பக்கம் வராமல்  அப்படியே தேடி கொண்டு சென்று விட,

“போயிட்டாளா மதி” என்று சிம்மா மறைந்து நின்று கொண்டு கேட்டான்.

“ஹ்ம்ம்…” என்று மதி சொல்லும் போதே தமிழச்சி, “ஏ அழகி!” என்று அழைப்பு விடுத்து கொண்டே அவள் அறை வாசலில் வந்து நின்றாள்.

மதி தவிப்போடு, “இன்னைக்கு சீக்கிரம் ட்யுட்டில இருந்து வந்துட்ட” என்று சிரமப்பட்டு தமிழச்சியை பார்த்து புன்னகையை உதிர்க்க,

“அதெல்லாம் இருக்கட்டும்… எங்கடி உன் அவரு?!” என்று அழுத்தமாய் கேட்டாள் சிம்மா உள்ளே இருப்பது தெரியாமல்…

‘அய்யோ! இவ என்ன நிலைமை புரியாம… இப்படி கேட்குறா?’ என்று மதி பதறி கொண்டு கண் ஜாடையில் தன் தோழியிடம் ஏதோ சொல்ல, தமிழச்சிக்கு ஒன்றும் விளங்கவில்லை.

“தாத்தா சிம்மா மேலதான் இருக்கான்னு சொன்னாரு… ஆனா ஆளை காணோம்… நீ பார்த்தியா பார்க்கலையா?” என்று மீண்டும் கேட்டாள்.

மதி அப்போதும் பதில் பேசாமல் கண் ஜாடையில் ஏதோ சொல்ல முயற்சிக்க தமிழச்சி அவளை ஆழ்ந்து பார்த்து, “லூசாயிட்டியா… ஹ்ம்ம்… புரியுது புரியுது… ரொம்ப நாள் கழிச்சு உன் ஆளை பார்த்த சந்தோஷத்தில பேச்சு வரலையாக்கும்” என்றாள்.

மதி தலையிலடித்து கொண்டு கடுப்பாக தமிழச்சி அவளை ஏற இறங்க பார்த்து, “உன்கிட்ட கேட்டதே வேஸ்ட்… தெரிஞ்சாலும் நீ… உன் அவரை போட்டுக் கொடுக்கவா போற… ஆனா நான் அவனை விட போறதில்ல… என் கிட்ட மாட்டட்டும்… கைமா பண்ணிடுறேன்” என்று தன் முஷ்டிகளை மடக்கி கொண்டு வீரதீரமாய் சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து அகன்றுவிட மதியின் நிலைமைதான் இப்போது சிக்கலானது.

தமிழச்சியின் வார்த்தைகளை எல்லாம் மறைந்து நின்றபடி சிம்மா
கேட்டிருந்தான்.

error: Content is protected !!