imk-29
imk-29
௩௦
சவால்
இரவின் சத்தங்களோடு தமிழச்சி சிம்மாவின் குரலும் காற்றோடு கலந்து அங்கிருந்த நிசப்தமான சூழ்நிலையை கலைத்தது. தமிழச்சி தன் தமையன் மீது கோபமாய் இருந்தாலும் அந்த கோபம் சில நிமிடங்கள் மேல் தாக்கு பிடிக்கவில்லை. அவனிடம் நிறைய விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆர்வமே அவளிடம் மிகுதியாய் இருந்தது.
“எப்போத்துல இருந்து நீ இந்த சிலை கடத்தல் விஷயத்துல இன்வால்வ் ஆன சிம்மா?” என்றவள் கேட்க, அப்போது சிம்மா தன் தங்கையிடம் மதி மூலமாக அவனுக்கு தெரியவந்த ஆஸ்திரேலியா கேலரியில் உள்ள அர்த்தனாதீஸ்வரர் சிலை குறித்து உரைக்க தொடங்கினான். அங்கிருந்த அவன் தான் தொடங்கிய விசாரணை பற்றி விவரமாய் சொல்லி கொண்டிருக்க அவள் இடைநிறுத்தி,
“அந்த அர்த்தனாதீஸ்வரர் சிலை கடத்தப்பட்ட சிலைதானு இவ்வளவு ஆதாரம் போதுமே… ஆஸ்திரேலியன் கேலரில இருக்க அந்த சிலையை நம்ம உடனே மீட்டிரலாமே!” என்று ஆவல் ததும்ப கேட்டாள்.
“அந்த சிலையை மீட்கிறது பெரிய விஷயம் இல்ல… ஆனா நம்ம நாட்டை விட்டு கடத்தப்பட்ட ஒவ்வொரு சிலையையும் மீட்கணும்… அதுதான் என்னோட இலட்சியம்” என்றான்.
தன் தமையனை மெச்சிய பார்வை பார்த்தவள் சில நொடிகள் யோசித்துவிட்டு,
“அது சரி… இவானை உனக்கு எப்படி தெரியும்?… அன்னைக்கு நானும் இவானும் கோவிலுக்கு போகும் போது கூட நீங்க இரண்டு பிரான்ஸ்ல மீட் பண்ணதா சொன்னாரு… ஆனா அப்புறம் அவர் கிட்ட அதைபத்தி டீடைலா கேட்டு தெரிஞ்சுக்க முடியல… இன்ஸ்பெக்டர் வினோத்தை எப்படியாவது ட்ரேப் பண்ணி பிடிக்கணுங்குற வேலையில பிசியா பேரும் இருந்துட்டேன்” என்றாள்.
“ஆமா நான் பிரான்ஸ்லதான் இவானை முதலில பார்த்தேன்… ஆனா அவர் என்னை நியூயார்க்லையே பார்த்திட்டாரு… அந்த விஷயம் எனக்கு அப்புறமா அவர் சொல்லித்தான் தெரியும்… திரும்பவும் அவர் பிரன்ஸ்ல என்னை பார்க்கிற மாறி சூழ்நிலையை அமைஞ்சுது… அதுவும் அங்கிருந்த ஃபேமஸ் ஆர்ட் கேலரில… இரண்டு பேரும் அங்கிருந்த ஒரே பொருளை பார்த்துக்கிட்டே வந்து ஒருத்தர் மேல ஒருத்தர் இடிச்சுக்கிட்டோம்”
“அப்படி என்ன பார்த்தீங்க?”
“அது ஒரு உடைஞ்ச பழங்கால தூண்… ஆனா விஷயம் அந்து தூண் இல்ல… அந்த தூணிற்கு கீழ இருந்த போர்ட்ல சைதன்யா அதை தானமா அந்த கேலரிக்கு குடுத்ததா எழுதி இருந்துச்சு…
இரண்டு பேருமே அதை பார்த்த ஆர்வத்தில்தான் மோதிக்கிட்டோம்… அப்புறம் நான் இவான் கிட்ட சாரி கேட்டேன்… அப்ப அவர் என்னை நியூயார்க்ல பார்த்த விஷயத்தை சொல்லி அறிமுகப்படுத்திக்கிட்டாரு…
ஆச்சரியமா இருந்துச்சு… கூடவே அவர் நம்ம தமிழ் நாட்டோடு தொல்லியல் விஷயங்களை தெரிஞ்சுக்கிறதுல ரொம்ப ஆர்வமா இருக்கிறதா சொன்னாரு… நிறைய அதை பற்றி தெரிஞ்சிக்கணும்னு சொன்னாரு… என்னையும் அறியாம இவான் மேல எனக்கு ஒரு நம்பிக்கை வந்துச்சு… அதனால அவரை என்னோட முகநூல் குழுவில சேர்த்துக்கிட்டேன்…
அப்புறம் சங்கத்தமிழன் க்ருப்ல இருந்த விஷயங்களை பார்த்த இவான்… ஒரு விதத்தில நானும் சிலை கடத்தல் விஷயத்துல டீல் பண்ணிட்டு இருக்கேன்னு புரிஞ்சிக்கிட்டாரு… அப்புறமா அவர் விடாம என்னோட பெர்சனல் ப்ரோபைலையும் சர்ச் பண்ணி பார்த்திருககாரு… அதுல போலீஸ் யுனிபார்மல இருந்த உன் போட்டோவும் இருந்துச்சு … அங்கதான் இவானுக்கு என் மேல டவுட் வந்துச்சு… ஒருவேளை நானும் அவரை மாறியே சிலை கடத்தல் பற்றி விசாரிக்க தமிழ்நாடு போலீஸ் அனுப்புன ஸ்பையா இருப்பேனோன்னு ”
“அந்த டவுட் கிளியர் பண்ணிக்க… அன்னைக்கே பிரென்ஸ்ல நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கே வந்து அவரு உன்னை பத்தியும் என்னை பத்தியும் விசாரிச்சு தெரிஞ்சிக்கிட்டாரு… அதுக்கப்புறம்தான் அவர் தான் எப்.பி ஐனு தன்னோட அடையாளத்தை வெளியிட்டு… அவரோட அடுத்த கட்ட விசாரணைக்காக தமிழ்நாடு போக என்னோட உதவியை கேட்டாரு” என்று அவன் சொல்லி முடிக்க, அப்போதே தமிழச்சிக்கு எப்படி இவான் தன்னை பற்றிய முழு தகவல்களையும் தெரிந்து கொண்டான் என்ற விஷயம் தெரிந்தது.
அதன் பின் தமிழச்சி தன் அண்ணனிடம், “அப்போ இவான் தமிழ்நாட்டுக்கு வந்தது கமல்கண்ணனை தேடித்தானா?” என்று கேட்க,
“ஆமா… சைதன்யா அதிகப்படியா தன் கைவரிசையை காட்டுனது தமிழ் நாட்டுலதான்… அவனுக்கு தமிழ்நாட்டில இருக்கிற பழைமையான கோவில்கள் சிலைகள் பற்றி தகவல் கொடுத்தது கோடிக்கணக்கான பல சிலைகளை அவனுக்கு கடத்தி கொடுத்தது எல்லாமே கமலகண்ணன்தான்… கிட்டத்தட்ட பத்து வருஷமா சைதன்யா கமலக்கண்ணனோட நேரடியான டீலிங்கல இருந்திருக்கான்… அவனை உயிரோட பிடிச்சிட்டா சைதன்யாவை பிடிச்ச மாறி” என்று சிம்மா சொல்ல,
அவள் இப்போது கோபநிலைக்கு மாறி, “அப்புறம் ஏன் ரெண்டு பேரும் நடுவுல புகுந்து குட்டைய குழப்பனீங்க… நான் அந்த கமலகண்ணனை அன்னைக்கே அர்ரெஸ்ட் பண்ணி இருப்பேன் இல்ல” என்றாள்.
“புரியாம பேசாதே தமிழ்… நீ கமல்கண்ணனை அரெஸ்ட் பண்ணா சைதன்யா காதுக்கு விஷயம் போகும்… அவன் அலெர்ட் ஆயிடுவான்… நம்ம டார்கெட் கமலகண்ணன் இல்ல… தான் தப்பிக்கணுங்கறதுக்காக சைதன்யா அவனை கொல்லவும் தயங்க மாட்டான்…
அதனாலதான் நாங்க இரண்டு பேரும் கமலகண்ணனை சேஃப் கார்ட் பண்ண நினைச்சோம்… சில தகவல்களை அவன் மூலமாவே வாங்கணும்னு நினைச்சு இவான் அவனுக்கு ஹெல்ப் பண்ற மாறி அவனை நம்ப வைச்சு ஏமாத்தினாரு… அதோடு அவன் கிட்ட ஒரு ஃபோன் கொடுத்தாரு… அதுல அவன் யார்க்கிட்ட பேசினாலும் இவானுக்கும் கனெக்ட் ஆகி கேட்கிற மாறி ஒரு டிவைஸ் செட் பண்ணி இருந்தாரு…
அப்படிதான் கமலகண்ணன் ஒரு முறை குமாருக்கு கால் பண்ணி கிரீடத்தை யார் கைக்கும் கிடைக்கவிடாம பத்திரப்படுத்த சொல்லி இருக்கான்… இவானுக்கு அவங்க பேசுனது முழுசா புரியலனாலும் அவங்க சொன்ன இடத்தை கெஸ் பண்ணி கிரீடத்தை மீட்டு இருக்காரு… அதை பத்தி முன்னாடியே இவான் என்கிட்ட சொல்லவும் முயற்சி செஞ்சாரு… ஆனா அதுக்கான சந்தர்ப்பம் அப்போ அமையல”
தமிழச்சி அவனை ஆழமாய் பார்த்து, “கிரீடத்தை கண்டுபிடிச்சதெல்லாம் சரி… ஆனா கமலகண்ணனை நீங்க அடைச்சி வைச்சிருக்கிற விஷயத்தை பத்தி ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லி இருக்கலாம்… டிபார்ட்மெண்ட் மேல நம்பிக்கை இல்லன்னாலும் என் மேல நம்பிக்கை வைச்சிருக்கலாமே” என்றாள்.
“ஐயோ தமிழச்சி! இவான் உன்னை நம்ம வீட்டுக்கு தேடி வந்ததே உன்கிட்ட கமலகண்ணன் பத்தி சொல்லத்தான்… அவர் அந்த விஷயத்தை உன்கிட்ட ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி பிரச்சனை வேற மாறி போயிடுச்சு… நாங்க எது நடக்க கூடாதுன்னு நினைச்சோமோ அது நடந்திருச்சு” என்று சொல்லும் போதுதான் அவள் இவான் வீடு தேடி வந்து தன் அம்மாவின் அறையை பார்க்க வேண்டுமென்று சொன்னதை நினைவுப்படுத்தி கொண்டாள். அப்போது சுவற்றில் மாட்டியிருந்த கிரீடத்தின் ஓவியத்தை பார்த்து இவான் ஆச்சரயப்பட்டு விசாரித்ததும் ஞாபகம் வந்தது.
அதேசமயம் கமலகண்ணன் இருக்கும் இடத்தை பற்றி அவளுக்கு தகவல் வர சில நொடிகள் முன்னதாக இவான் அலைபேசி ஒலித்ததன் சூட்சமமும் அவன் முகம் பதட்டமாய் மாறியதன் காரணமும் விளங்கியது.
இது பற்றியான யோசனையில் இருந்தவள் சட்டென்று, “அதெல்லாம் சரி… ஏன் நீங்க ரெண்டு பேரும் பிரான்ஸ் போனீங்க… சைதன்யாவோட கேலரி நியூயார்க்லதானே இருக்கு” என்று அவள் கேட்க மறந்துவிட்ட விஷயத்தை நினைவுப்படுத்தி கொண்டு கேட்க,
“ப்ளேன் பண்ணி இரண்டு பேரும் ஒன்னா போகல… ஆனா ஒரே விஷயத்திற்காக போனோம்… அதாவது சைதன்யாவோட நெட்வொர்க் பலமா செயல்படுற இன்னொரு முக்கியமான இடம் பிரான்ஸ்… நியூயார்க் அப்புறமா அவனுடைய டீலிங் நடக்கிற இடம் பிரன்ஸ்தான்…
எப்போ அமெரிக்கா கஸ்டம்ஸ்ல அவன் கண்டைனர் மாட்டுச்சோ… அவனுடைய மொத்த நெட்வொர்கையும் பிரேன்ஸ் பக்கம் திருப்பிட்டான்… அதாவது ஹாங்காங்கல இருந்து லண்டன் வந்து அங்கிருந்து பிரன்ஸ் ரீச் ஆகிற வழி… யாராலும் அவ்வளவு சீக்கிரம் இந்த ரூட்டை கெஸ் பண்ண முடியாது… ஆனா இவான் ஹாங்காங்கல இருக்க தன்னோட உளவாளி மூலமா அதையும் கண்டுப்பிடிசிட்டாரு… ஆனா எனக்கு கிடைச்சது வேறொரு தகவல்” என்றதும் அவள் அவன் என்ன சொல்ல போகிறான் என்று ஆர்வமாய் பார்த்திருக்க,
“நம்முடைய பழைமையான சிலைகள் பல ஃப்ளைட் மூலமாவே இந்தயாவில இருந்து நேரடியா பிரான்ஸ் வருது… அதுவும் ஒரு விவிஐபி மூலமா…” என்றான். இந்த விஷயத்தை கேட்டு அவள் முகம் வியப்பாக மாறிய அதேநேரம் குழப்பமாகவும் மாறியது. எங்கேயோ அவள் கேள்விப்பட்ட விஷயங்களோடு அவன் சொல்லும் தகவல் ஒன்றி போனது.
அவள் யோசித்து கொண்டிருக்கும் போதே சிம்மா மேலும், “உனக்கு தெரியும்தானே. நம்மூர்ல எஸ் பி ஜி ப்ரொடெக்ஷன் கேடகிரில இருக்கிறவங்களுக்கு செக்யுரிட்டி செக் கிடையாதுன்னு” என்க,
அவள் அவனை தீவிரமாய் பார்த்தாள். அவன் எங்கே சுற்றி எங்கே வருகிறான் என்பது அவளுக்கு ஒருவாறு புரிந்தது. ஆனால் இப்படி ஒரு பார்வையில் இருந்து அவள் இந்த வழக்கில் இதுவரை யோசிக்கவில்லை.
அவனை ஆராய்ந்து பார்த்தவள், “எங்க டிபார்ட்மெண்டுக்கே தெரியாத இந்த மாறி தகவலெல்லாம் உனக்கு யாரு சொல்றது சிம்மா?” என்று கேட்க,
அவன் மெலிதாய் நகைத்து, “நான் ஒரு உண்மையை சொல்லுவேன்… நீ கோபப்பட கூடாது” என்றான்.
அவள் புருவத்தை ஏற்றி, “சொல்லு” என்றாள்.
“போலீஸ் டிபார்ட்மெண்ட் விட இன்னைக்கு சோசியல் மீடியா ரொம்ப பவர் ஃபுல்… காலங்காலமா நடந்துக்கிட்டு இருக்க சிலை கடத்தல் பற்றிய விழிப்புணர்வை நான் அங்க கொண்டு வந்தேன்… அதற்கு உதாரணம்தான் என்னோட சங்கத்தமிழன் முகநூல் குழு…
இதுல எனக்கு ஆதரவா உலகம் முழுக்க வசிக்கிற தமிழர்கள் நிறைய தகவல்களை எனக்கு ரகசியமா சேகரிச்சு தராங்க…”
தமிழச்சி அவனை ஏறஇறங்க பார்த்து, “தகவல்களை சேகரிச்சா மட்டும் போதுமா… அது சம்பந்தமா அக்ஷன் எடுக்க வேண்டாமா?” என்று வினவ,
“எடுக்கணும்…ஆனா இங்க வேலியே பயிரை மேஞ்சிட்டு இருக்கு… இதுல உங்க டிபார்ட்மெண்டால என்ன செய்ய முடியும்… ”
“ஏன் முடியாது? முடியும்… நான் அந்த சைதன்யாவை அரெஸ்ட் பண்ணி காட்டுறேன்” என்றவள் தன் அண்ணனிடம் சவாலாக உரைக்க, “இங்க வீரியம் முக்கியம் இல்ல… காரியம்தான் முக்கியம்…” என்றான் நிதானமாக!