imk- 30(2)

தயாளன் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட தமிழச்சி வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு தன் வீட்டிற்கு செல்ல, அங்கே விஷ்வாவும் ஆதியும் வந்திருந்தனர். ஆதி தன் தோழியைப் பார்க்கவேஅங்கே வந்திருந்தார்

தோழிகள் இருவரும் மும்முரமாய் பேசிக் கொண்டிருக்கும் போதே தமிழச்சி உள்ளே நுழைந்து,

“எப்போ வந்தீங்க ஆதிம்மா? என்கிட்ட வீட்டுக்கும வரப் போறேன்னு காலையில கூட சொல்லவே இல்ல” என்று வினவ,

“இல்ல ஊருக்குப் புறப்பட்டுட்டு இருந்தோம்… அதான் அப்படியே உங்க அம்மாவும் எப்படி இருக்கான்னு பார்த்துட்டுப் போலாம்னு” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “ஆதிபுரத்துக்கா?” என்று கேட்க,

“ஹ்ம்ம்” என்று சொல்லி ஆதி எழுந்து கொண்டு, “வந்து ரொம்ப நேராமாச்சு டா… நாங்க கிளம்பணும” என்று சொல்லிவிட்டுத் தன் தோழியிடம் விடைபெற்றுக் கொண்டவர் தன் மருமகளின் காதோரம், “நாங்க திரும்பி வர்றதுக்குள்ள… நீயும் உன் புருஷனும் சமாதானம் ஆகியிருக்கணும்” என்றார்.

“அது வந்து ஆதிம்மா” என்றவள் தயங்க ஆதி உடனே, “என் புத்திசாலி மருமகளே! வேலையில காட்டுற உன் புத்திசாலித்தனத்தை இதுலயும் கொஞ்சம் காட்டு” என்று அவள் காதைத் திருகிக் கொண்டே செல்ல, “ஆ… சரி சரி” என்றவள் அதேநேரம் தலைகுனிந்து வெட்கமாய் புன்னகைத்தாள்.

அதன் பின் ஆதியும் விஷ்வாவும்  அங்கிருந்து புறப்பட்டு விட அப்போது செந்தமிழும் மகளைப் பார்த்து, “ஆதி சொன்னது புரிஞ்சுது இல்ல… விக்ரம் கிட்ட உன் ஈகோவெல்லாம் காட்டாம கொஞ்சம் பொறுமையா பேசு…” என்றார்.

“அதெல்லாம் நான் பொறுமையாதான் பேசுவேன்” என்றவள் சொல்ல செந்தமிழ் அலுத்துக் கொண்டு, “நீ பொறுமையா பேசுவ…” என்றார்.

“ம்மா” என்றவள் இழுக்க, “சரி சரி கிளம்பு” என்றவர்,

“அப்புறம் அன்னைக்கு நீ என்கிட்ட கார்ல… நீயும் விக்ரமும் சேர்ந்து இருக்கிறது  ஒரே புடியில இரண்டு கத்தி சேர்ந்து இருக்க மாதிரி… அது இரண்டு பேருக்கும் ஆபத்துன்னு சொன்ன… ஆனா எல்லாமே கையாள்ற விதத்துலதான் இருக்கு தமிழச்சி… நான் தொல்பொருள் ஆராய்ச்சில பார்த்திருக்கேன்… இருமுனைக் கத்தி கூட அந்தக் காலத்துல பயன்பாட்டுல இருந்த ஒரு ஆயுதம்தான்” என்று சொல்ல, அவர் வார்த்தைகள் உண்மைதான். எதுவும் கையாள்கின்ற விதத்தில்தான் இருக்கிறது.

தமிழச்சி தன் அம்மாவின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு, “ஷ்யூர் ம்மா… இனிமே எனக்கும் விக்ரமுக்கு இடையில எந்தப் பிரச்சனையும் வராம நான் பார்த்து நடந்துக்கிறேன்” என்றாள்.

மகளிடம் வெளிப்பட்ட இந்த முதிர்ச்சி அவளுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்க, அவளோ உடனடியாக உடை மாற்றிக் கொண்டு விக்ரமைக் காண ஆர்வம் மேலிட அவன் வீட்டிற்கு சென்றாள்.

விக்ரம் வீட்டில் இவான் புறப்படுவதற்குத் தன் பாஸ்போர்ட் விசா எல்லாவற்றையும் தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். சிம்மாவும் அவனுடன் உதவி புரிந்து கொண்டிருந்தான்.

அப்போது தமிழச்சியின் வருகையைப்  பார்த்த இவானுக்கு மனம் பாரமானது. “எத்தனை மணிக்கு ப்ளைட்?” என்று தமிழச்சி கேட்க சிம்மா தன் கைப்பேசியைப் பார்த்துவிட்டு, “இப்போ கிளம்புனாதான் கரெக்ட்டா இருக்கும்” என்றான்.

“ஆனா விக்ரம் வந்துட்டா” என்று இவான் சொல்ல, “அவன் ஃபோன் பண்ணா எடுக்கவே மாட்டேங்குறானே… பிஸியா இருக்கானோ என்னவோ… அவனுக்காகக் காத்திருந்தா லேட்டாயிடும்” என்றான் சிம்மா.

“சிம்மா சொல்றது கரெக்ட்தான்… அவன் எப்போ வருவான்னு தெரியாது… நான் வேணா அவன் வந்தா சொல்றேன்… நீங்க கிளம்புங்க”  என்று அவள் சொல்லவும் மனமின்றித் தலையை மட்டும் இவான் அசைக்க. சிம்மா அவனுடைய பேகை கையில் எடுத்துக் கொள்ள, “சிம்மா வெய்ட்… ஐ ல்… டேக் இட்” என்றான்.

“இட்ஸ் ஓகே” என்று சொல்லி சிம்மாஅவன் பேகை எடுத்துக் கொண்டு  முன்னேறிச் சென்றான்.

இவான் தயக்கமாய் தமிழச்சியைப் பார்த்துக் கொண்டே நகர,

தமிழச்சி அவன் பேசியை மேஜை மீது விட்டு செல்வதைப் பார்த்து, “இவான்… யுவர் ஃபோன்” என்று அதனை எடுத்துக் கொண்டு கொடுக்கும் போது அதிலிருந்து தஞ்சை கோபுரத்தை அவர்கள் முதல் சந்திப்பில் பார்த்து வியந்தது நினைவுக்கு வந்தது.

 “இந்த பிக் நீங்க எடுத்ததா? நம்ம ஃபர்ஸ்ட் மீட்டிங் அன்னைக்கே பார்த்தேன்… இட்ஸ் ரியலி ஆசம்” என்று உரைத்தாள்.

“நோ… தட் டெம்பிள் இஸ் ஆஸம்… வாட் அ ஸ்கல்ப்ச்சர்… வாட் அன் ஆர்கிடெக்ச்சர் யா?! சிம்மா சொல்லும் போது கூட எனக்குப் பெரிசா நம்பிக்கை இல்ல…  பட் பார்க்கணும்னு ஆர்வமா இருந்துச்சு… அதான் வந்ததும் தஞ்சை டெம்பிளை போய் பார்த்தேன்… வாவ்! ஸ்டன்னாயிட்டேன்… அந்த நிமிஷம் உண்மையிலேயே தமிழனோட பாரம்பரிய வரலாற்றைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு ரொம்ப ஆசை வந்திருச்சு… இட்ஸ் ரியலி அன் அமேசிங் எக்ஸ்பீரியன்ஸ்” என்று பாராட்டிப் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்க , அவன் சொல்வதை வியப்பாக கேட்டுக் கொண்டே அவன் பேசியைக் கொடுத்தாள்.

அதனைப் பெற்றுக் கொண்டவன், “ஃபார் தேங்க்ஸ் இன் தமிழ்… நன்றி… அம் ஐ ரைட்?” என்றான். அவள் சிரித்தபடி, “எஸ்… பட்  நோ நீட் ஆப் தேங்க்ஸ் இன் பிட்வீன் ப்ரெண்ட்ஸ்” என்று சொல்லித் தன் கரத்தை நீட்ட இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.

“நீங்க திரும்பவும் இந்தியா வரணும் இவான்… உங்களுக்கு ஒரு அழகான தமிழ் பொண்ணா நான் பார்த்து வைச்சிருப்பேன்… ஓகே தானே?” என்று அவள் புன்னகையோடு சொல்ல,

“ஓகே… பட் ஒன் கண்டிஷன்… பொண்ணு அப்படியே உங்களை மாதிரியே இருக்கணும்” என்றான்.

அவள் புன்னகை மறைந்து அவனை அதிர்ச்சியாய் பார்க்க அவனே மேலும், “பட் இட்ஸ் நாட் பாசிபிள் தமிழச்சி… பிகாஸ் யு ஆர் அன் யுனிக் பெர்ஸநாலிட்டி (ஆனா அதுக்கு வாய்ப்பே இல்ல… ஏன்னா நீ ரொம்ப தனித்துவமானவ)” என்று சொல்லிவிட்டு அழுந்தப் பற்றியிருந்த அவள் கரத்தை விடுவித்துப் புன்னகை செய்தான்.

அவள் எதுவும் பேசாமல் அவன் பார்வையைத் தவிர்க்க, “ஓகே தமிழச்சி பை” என்று அவன் விடை பெற்றுக் கொண்டு வெளியே செல்ல, விக்ரம் வாசலில் சிம்மாவுடன் நின்றிருந்தான். இருவருமே அவனை அந்த நொடி எதிர்ப்பார்க்கவில்லை.

இவான் விக்ரமை நோக்கி வந்து அவனுக்குக் கை கொடுத்து, “உங்களுக்கு நான் ரொம்ப தொந்தரவு கொடுத்துட்டேன் விக்ரம்… சாரி” என்க,

“நான்தான் சாரி சொல்லணும்… நீங்க யாரு என்னன்னு தெரியாம… கொஞ்சம் மரியாதை இல்லாம” என்றவன் சொல்ல இவான் புன்னகைத்து, “தட்ஸ் ஓகே” என்று சொல்லி விக்ரமை சிநேகமாய் அணைத்துக் கொண்டான்.

“இவான் டைம் ஆச்சு” என்று சிம்மா உரைக்க, “யா… யா… பை விக்ரம்” என்று உரைத்துவிட்டு தமிழச்சியின் புறம் திரும்பி ஒரு பார்வைப் பார்த்து சிரிக்க, அவள் உணர்ச்சியற்றப் புன்னகை புரிந்தாள்.

விக்ரம் அப்போதே தமிழச்சி வாயிலில் நிற்பதைப் பார்த்தான். ஆனால் அவளைக் கண்டும் காணாமல் அவன் உள்ளே செல்ல, “விக்ரம் ஒரு நிமிஷம்” என்று அழைத்துக் கொண்டு அவளும் உள்ளே வர, வீட்டில் யாரும் இல்லாததை அவன் கவனித்து, “அம்மாவும் அப்பாவும் எங்கே?” என்றான்.

“ஊருக்குப் போயிருக்காங்க” என்றவள் பதிலளிக்க,

“ஊருக்கா… என்கிட்ட சொல்லவே இல்லை” என்று அதிர்ச்சியானான்.

“என்கிட்ட சொல்லிட்டுத்தான் போனாங்க” என்றாள் அவள் தன் கரங்களைக் கட்டிகொண்டு.

அவளை ஏறஇறங்கப் பார்த்தவன், “அவங்களே இல்ல… நீ எதுக்கு  இங்க இருக்க?… உன் வீட்டுக்குக் கிளம்பு” என்று கடுப்பாய் சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் செல்ல,

“கிளம்ப முடியாது… இதுவும் என் வீடுதான்… நான் இங்கதான் இருப்பேன்” என்றாள்.

அவளை அதிர்ச்சியாகத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவன், “எப்படியோ போ” என்று சொல்லிவிட்டு அவன் தன் அறைக்குள் நுழையவும் அவளும் உள்ளே நுழைந்தான்.

“ஏய் இப்ப எதுக்கு என் ரூமுக்குள்ள வர” என்றவன் கடுப்பாக, “இதுதானே என்னோட ரூமும்” என்றாள்.

அவன் கோபப் பார்வையோடு, “எந்த உரிமையும் வேண்டான்னு நீதான் தூக்கிப் போட்டுட்டு போயிட்ட இல்ல… இப்ப என்னடி திரும்பவும்… என் ரூம் என் வீடுன்னு” என்று அவளிடம் வெறுப்பாகப் பேசினான்.

“ப்ச்… ரொம்ப டென்ஸ்டா இருக்க… போய் குளிச்சிட்டு வா… ஆர தீர பொறுமையா சண்டை போடலாம்…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்த டவலை எடுத்து அவன் கரத்தில் திணிக்க அதனைத் தூக்கி எறிந்தவன், “உன் கூட சண்டை போடுற மூட்ல நான் இல்ல” என்று சொல்லிவிட்டுத் தன் கப்போர்டில் இருந்து தன் உடைகளையும் வேறொரு  டவலையும் எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

‘ரொம்ப கோபமா இருக்கான் போலவே… இவனை எப்படி சமாதானப்படுத்துறது’ என்றவள் படுக்கையில் அமர்ந்து கொண்டு தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்த  சமயத்தில் அவள் பேசி ரீங்காரமிட அதில் ஒளிர்ந்த எண்ணைப் பார்த்தவள் அந்த அழைப்பை ஏற்று,  “அந்த ஆளைப் புடிச்சுட்டீங்களா?” என்று எடுத்து எடுப்பில் கேட்கவும், “தப்பிக்க பார்த்தான் மேடம்… ஆனா அவனைப் பிடிச்சிட்டோம்” என்று பதில் வந்தது.

“குட்” என்றவள் சந்தோஷப் பூரிப்பில் பேசிக் கொண்டிருக்க, அப்போது விக்ரம் குளியலறை விட்டு வெளியே வந்தான்.

அவள் அவர்களிடம் தன் உரையாடல்களைத் தொடர்ந்தாள். “நான் ஒரு  நடராஜர் சிலையோட போட்டோ அனுப்பறேன்… அதைப் பத்தி அவன் கிட்ட  விசாரிச்சு வைங்க… பதில் சொல்லாம் அவனை விடாதீங்க” என்று அவள் உத்தரவு போட்டுக் கொண்டிருக்க, நடராஜர் சிலை என்ற வார்த்தையைக் கேட்டு விக்ரமின் முகம் மாறியது.  அவன் எண்ணம் அதை சுற்றியே வந்தது.

அவளிடம் அந்த சிலைப் பற்றிக் கேட்கலாம் என்று அவன் உள்ளுணர்வு சொல்லிக் கொண்டிருக்க, அவள் அழைப்பைத் துண்டித்துவிட்டு தன் பேசியை எடுத்து உள்ளே வைத்தாள்.

அவன் அப்போது யோசனையாய் நின்றிருப்பதைப் பார்த்தவள், “ஏ விக்ரம்… ஐம் சாரி டா… நான் அந்தளவுக்கு உன்கிட்ட கோபமா நடந்திருக்கக் கூடாதுதான்… ஆனா அப்ப நான் இருந்த மனநிலைக்கு…” என்று இடைவெளி விட்டவள்,

“இப்பவும் சொல்றேன்… என்னால ஒரு போலிஸா அன்னைக்கு நீ செஞ்சதை  சரின்னு ஏத்துக்க முடியாது…  ஆனா அந்த ஒரு விஷயத்துக்காக நம்ம காதலையும் உறவையும் ஏன் விட்டுக் கொடுக்கணும்? இதை நான் லேட்டாதான் ரியலைஸ் பண்ணேன்… ப்ளீஸ் விக்ரம்… இந்தப் பிரச்சனையை இதோட விட்டுடலாமே“ என்றாள்.

அவள் பேசுவதை முறைப்பாய் பார்த்துக் கொண்டு நின்றவன், “இதையே நான் எத்தனை தடவை உன்கிட்ட சொன்னேன்… நீ கேட்டியாடி? பெரிய இவளாட்டம் பிரிஞ்சிடலாம் அப்படி இப்படின்னு சொன்ன… இப்ப என்னடான்னா…  நீ சமாதானம் ஆயிட்டன்னு என்னையும்  சாமதானம் ஆக சொல்றியா? நெவர்” என்றவன் கோபமாய் சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

அவள் பொறுமை தன் எல்லையைக் கடந்துவிட அவன் சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டவள், “இப்ப எதுக்கு நீ ஓவரா சீன் போடுற… என்ன? நான் உன் கால்ல விழுந்து கெஞ்சணும்னு எதிர்பார்க்குறியா?” என்று கேட்கவும் அவனிடம் இருந்து இறுக்கம் தளர்ந்து முகம் மலர்ந்தவன், “இனிமே நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பில்ல” என்றான்.

“என்னடா நடக்கும்?” என்றவள் சீற்றமாய் அவனைப் பார்க்க, அவளைப் பார்த்து வஞ்சமாய் புன்னகை செய்தவன் அடுத்த சில விநாடிகளில்  தன் கரங்களை அவள் உடைகளுக்குள் அத்துமீறி நுழைத்து அவள் இடையை அழுந்தப் பற்றி இழுத்தான்.

“விக்” என்று அவள் வார்த்தைகள் முடியும் முன்னரே அவள் இதழ்களைத் தம் இதழ்களால் மூடிவிட்டு,  அவள் சுதாரிப்பதற்கு முன்னதாக விக்ரம் அந்த முத்தத்திற்குள் அவளை மூழ்கடித்துக் கொண்டே அவளைப் படுக்கையில் தள்ளிவிட்டான்.

நெடுநாளைய பிரிவினால் அவன் கொண்ட காதலும் காமமும் காட்டாற்று வெள்ளமாய் பெருக, அவளுடனான கூடலில் அந்த உணர்வை தீவிரமாய் காட்டி அவளைத் திணறடித்துக் கொண்டிருந்தான். அவளுமே அதைத்தான் விரும்பினாள். அவன் காதலின் தீவிரம் அவளுக்குத் தெரியாதா என்ன?

அவன் தேவையும் தாபமும் தீரும் வரை அவளுமே அவனுக்குத் தளராமல் ஈடுகொடுக்க, ஒரு  நீண்ட ஊடலுக்குப் பின்னான அந்தக் கூடலில் தங்களின் காதலை மீண்டும் அழகாய் புதிப்பித்துக் கொண்டனர்.

அவன் அப்படியே தலையணையில் சரிந்து அவளைத் தன் தோளில் கிடத்திக் கொள்ள, “ஃப்ராடு… என் மேல கோபமா இருக்க மாதிரி நடிச்சதானே” என்று கேட்டாள்.

“சத்தியமா இல்ல… கோபமாதான் இருந்தேன்… நீ கிட்ட வந்து என் சட்டையைப் பிடிச்சதும்… எனக்கு என்னாச்சுன்னே தெரியல” என்றவன் இழுக்க, “அவ்வளவு வீக்காடா நீ” என்று அவனைப் பார்த்து சிரித்தாள்.

“உன்கிட்ட மட்டும்தானடி” என்றவன் சொல்ல, “இதை நான் நம்பணும்” என்று எகத்தாளமாய் கேட்டாள்.

அவளை ஆழமாய் பார்த்தவன், “அப்படின்னா நம்புற மாதிரி ஒரு மேட்டர் சொல்லட்டுமா?” என்று ஆரம்பிக்க அவள் அப்படியென்ன சொல்லப் போகிறான் என்று சுவாரசியம் இல்லாமல் அவன் முகத்தைப் பார்த்தாள்.

விக்ரம் அப்போது அவன் பிரதமர் வீட்டிற்குப் போனதிலிருந்து அமிர்தா அவனிடம் பேசிய விதம் காதலை சொன்னது மற்றும் அதற்கு சம்யுக்தாவின் சம்மதம் என்று முழுவதுமாய் சொல்லி முடித்தான்.

அவன் சொல்வதைக் கேட்க கேட்க அதிர்ச்சியும் கோபமும் மாறி மாறி வெளிப்பட, அவள் வாயடைத்துப் போனாள். அவன் சொன்னது உண்மைதான் என்று நம்பவே அவளுக்கு சிரமமாயிருந்தது. அவள் மௌனமாய் இருந்த போதும் அவள் விழிகள் கோபத்தை அனலென கக்கிக் கொண்டிருந்தன.

“தமிழச்சி” என்று விக்ரம் அழைக்கவும் உணர்வு பெற்றவள் ஆக்ரோஷமாக , “அந்த அமிர்தா என்னதான் நினைச்சிட்டிருக்கா… பிஎம் பொண்ணா இருந்தா அவ பெரிய இவளாமா… என் கையில மட்டும் அவ மாட்டினா அவளுக்கு சங்கு ஊதிடுவேன்னு சொல்லி வை”

“அன்னைக்கே அவ முகரையை நான் பேத்திருந்தேன்னா இன்னைக்கு இப்படி எல்லாம் அவ உன்கிட்ட வந்து பேசி இருப்பாளா… என்ன பொம்பள அவ… கல்யாணம் ஆன உன்கிட்ட அவளுக்கு அப்படி என்ன காதல்” என்று பட்டாசு போல படபடவெனப் பொறிந்த தன் மனைவியிடம் , “தமிழச்சி கொஞ்சம் அமைதியா இரு” என்றான்.

இப்போது அவள் கோபம் மொத்தமாய் அவன் புறம் திரும்பி, “உண்மையை சொல்லு… அவளைக் கல்யாணம் கட்டிக்கிட்டு பிஎம் ஆகலாம்ன்னு உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா?” என்று சந்தேகமாய் கேட்க,

“நீதானடி  நான் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க சொல்லி லெட்டர் எல்லாம் எழுதிக் கொடுத்த… அதுவும் இல்லாம ப்ரெஸ் எல்லாம் கூப்பிட்டு எனக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லன்னு வேற சொல்லிட்ட” என்றவன் கிண்டலாய் நகைத்துக் கொண்டே சொல்ல, “கொன்னுடுவேன் ராஸ்கல்” என்று அவள் ஆவேசத்தில் அவன் கழுத்தைப் பிடித்து நெரித்தாள்.

“கொன்னுடு… அப்படியாவது இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு வரட்டும்” என்றான் அவன் சாதரணமாக சொல்ல,

அந்த நொடியே அவள் தன் கரங்களை விலக்கிக் கொண்டவள் தளர்ந்த பார்வையோடு, “ஸோ… உன் அரசியல் வாழ்க்கைக்காக நம்ம காதலை விட்டுக் கொடுக்க போற… அப்படித்தானே?” என்றதும் அவன் அவளைக் கோபமாய் முறைத்தான்.

“அவ்வளவுதான் நீ என்னை புரிஞ்சி வைச்சிட்டிருக்க இல்ல” என்றவன் வேதனையோடு உரைத்து,

 “எனக்கு என் இலட்சியம் முக்கியம்தான்… ஆனா அதுக்காக எல்லாம் உன்னை விட்டுக் கொடுக்க முடியாது… அன்னைக்கு அந்த அமிர்தா ஆக்சிடென்ட் பண்ண போது கூட… நான் என் அரசியல் வாழ்கையைக் காப்பாத்தணும்னோ இல்ல அந்த அமிர்தாவைக் காப்பாத்தணும்னோ அப்படி எல்லாம் செய்யல… நீ அமிர்தாவை அரெஸ்ட் பண்ண விஷயம்  மாதாஜி காதுக்குப் போய் உனக்கு எதாவது பிரச்சனை வருமோன்னு பயந்துதான் நான் அந்த விஷயத்துல தலையிட்டேன்”

“இப்பவும் நான் என் சுயலாபத்துக்காக யோசிக்கல… அந்த அமிர்தா ஒரு சரியான கிறுக்கு… நான் முடியாதுன்னு சொல்லி அவ பாட்டுக்கு ஏடாகூடமா எதாச்சும் செஞ்சு வைச்சிட்டா… மாதாஜியோட கோபம்… என்னை மட்டும் இல்ல… என்னை சுத்தி இருக்கிறவங்களுக்கும் சேர்த்து பாதிப்பை உண்டாக்கிடுமோன்னுதான் பயப்படுறேன்…” என்றவன் தவிப்போடு சொல்ல அவன் எண்ணத்தில் நியாயம் இருந்தது.

பலம் படைத்தவர்களிடம் பலவீனமானவர்கள் அவர்கள் விருப்பு வெறுப்பைக் கடந்து அடிபணிந்தே ஆக வேண்டும். அதுதான் இன்றைய நியதி.

 அவளுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை. தலையை அழுந்தப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

சில பிரச்சனைகள் இருமுனைக் கத்தி போல, எந்தப்பக்கம் திரும்பினாலும் ஆபத்துதான். 

error: Content is protected !!