imk-31

imk-31

(32)௩௨

அரசியல் விளையாட்டு

அன்று இரவு தமிழச்சி வேலையை முடித்து விரைவாகவே வீடு திரும்பினாள். வந்ததும் வராததுமாய் தன் பெற்றோரின் அறையில் ஐக்கியமானவள், அவர்களிடம் முக்கியாமாக பேச வேண்டும் அவர்கள் அருகில் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டு பேச தொடங்கினாள்.

சிலை கடத்தல் வழக்கில் அவள் சேகரித்த மொத்த விஷயங்களையும் ஒன்று விடாமல் அவள் சொல்ல, அவர்கள் மிகுந்த வியப்போடு மகளை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தனர்.

“சைதன்யாவை அரெஸ்ட் பண்ண வாரன்ட் மட்டும் கிடைச்சுட்டா அந்த சிலைகடத்தல் நெட்வொர்க்கையே மொத்தமாய் பிடிச்சிடலாம்” என்றவள் சொல்லி முடிக்க,

விரேந்திரன் வியப்போடு மகளின் திறமையை எண்ணி அளவில்லாமல் பெருமிதம் கொண்டார். அந்த பெருமித உணர்வை தன் மனைவியிடமும் பார்வையாலையே பிரஸ்தாபிக்க,

தந்தைக்கு இருந்த பெருமை தாய்க்கும் இருக்காதா. செந்தமிழும் மகள் சொன்னதை கேட்டு பூரிப்போடு,

“எவ்வளவு பெரிய கிரிமனல் நெட்வொர்கை இவ்வளவு ஃபாஸ்டா ட்ரேப் பண்ணி பிடிச்சி இருக்கேன்னா… நீ செஞ்சது சாதாரணமான விஷயமில்ல தமிழச்சி” என்று புகழ விரேந்திரன் அப்போது,

“அப்புறம்… என் பொண்ணாச்சே… இவ்வளவு கூட செயலன்னா எப்படி?!”என்று மனைவியை பார்த்து கர்வமாய் புன்னகைத்தார்.

“அவ எனக்கும் பொண்ணுதான்” என்று தமிழ் தன் கணவரை பார்த்து முறைத்தாள்.

அவர்கள் பேசி கொள்வதை பார்த்து தமிழச்சி சிரித்துவிட்டு, “நீங்க நினைக்கிற மாறி நான் மட்டும் இதெல்லாம் செய்யல… இன்னும் கேட்டா என்னோட பங்கு ரொம்ப குறைவு…  இதோட மொத்த  கிரெடிட்டும் சிம்மா அண்ணாவைதான் சேரும்” என்று அவள் சொல்ல, செந்தமிழ் பார்வை கணவன் புறம் திரும்ப அவர் புருவங்கள் சுருங்க குழப்பமாய் பார்த்தார்.

தமிழச்சி மேலும், “அமெரிக்கால கிடைச்ச அந்த கண்டைனர்தான் இந்த கேஸ்ல கிடைச்ச முக்கிய ஆதாரம்… அப்படி பார்த்தா அந்த கண்டைனரை சிக்க வைச்ச அண்ணாக்குதான் மொத்த க்ரெடிட்டும்… அப்புறம் ரீசன்ட்டா பிரேன்ஸ்ல இருந்து மீட்ட கற்சிலைகள் கூட அண்ணாவோட கைங்கரியம்தான்… ஆனா இதுல அவன் பேர் வெளியவே வரல” என்றவள் சிம்மா இந்த வழக்கில் சேகரித்து கொடுத்த முக்கிய ஆதரங்களையும், சங்கத்தமிழன் குழு பற்றிய விவரங்களையும் சொல்ல, விரேந்திரனுக்கு ஆச்சரியம் மிகுந்தது.

ஆனால் செந்தமிழுக்கு இது புது விஷயமல்ல.  எனினும் இதை தானே வீரிடம் சொல்வதை விட அவர் செல்ல மகள் சொல்ல வேண்டும் என்றுதான் செந்தமிழ் அமைதியாக இருந்தார்.

தமிழச்சி பேசி கொண்டிருக்கும் போதே அவள் கைப்பேசி ரீங்காரமிட, அவர்களிடம் சொல்லி விட்டு தன் பேசியில் அளவளாவி கொண்டே அவள் வெளியே சென்று விட்டாள்.

விரேந்திரன் மனைவியின் முகத்தை ஆழ்ந்து பார்த்து, “சிம்மா இவ்வளவு எல்லாம் செஞ்சிருக்கான்னு…  நீ ஏன் தமிழ் என்கிட்ட சொல்லல?” என்று கேட்க,

“நான் சொல்ல வந்தேன்… நீங்கதான் சொல்ல விடல” என்றார்.

மனைவியை ஏற இறங்க பார்த்தவர், “சரி… இந்த எஃப் பி க்ரூப் ஐடியா எல்லாம் உன்னோடதா?” என்று கேட்க,

“உஹும்… இதுல நான் எதுவுமே செய்யல வீர்… அவனாவே இன்ட்ரெஸ்ட் எடுத்து இந்த விஷயத்துல இறங்கி இவ்வளவு தூர கண்டுபிடிச்சிருக்கான்… இது சம்பந்தமா அவன் வெளிநாடுகளுக்கு போனோம்னு சொன்ன போதுதான் இதை பத்தின முழு டீடைலையும் சொன்னான்… அப்புறம்தான் அவன் போகிறதுக்கு நான் அரேஞ் பண்ணேன்… அவ்வளவுதான்… மத்தப்படி இதுல என் பங்குன்னு ஒண்ணுமே இல்ல… எல்லாமே சிம்மாவோட தனிப்பட்ட யோசனைகள்தான்” என்றார் செந்தமிழ்.

வீர் மௌனமாய் மனைவியை பார்க்க, “எனக்கு அக்சிடென்ட் ஆனதும் அவன் வரலன்னு நீங்க கோபப்பட்டீங்க…  ஆனா இந்த விஷயம் தெரிஞ்சு அவன் மட்டும் உடனே வந்திருந்தா பிரான்சில அந்த சிலைகளை மீட்டு இருக்கவே முடியாது” என்றவர் மேலும் கணவனை ஆழ்ந்து பார்த்து,

“ஏன் வீரா? நம்ம இரண்டு பேரும் என்னைக்குமே குடும்பத்துக்காக கடமையையும் கடமைக்காக குடும்பத்தையும் விட்டு கொடுத்ததில்ல… இன்னும் கேட்டா உங்களுக்கு கடமை ஒரு படி மேலதான்… நீங்க இங்க என்னை பார்த்துபீங்கங்கிற தைரியத்துல அவன் அங்க அவன் கடமையை செஞ்சான்… அது எந்தவிதத்தில தப்புன்னு நீங்க சொல்றீங்க” என்ற கேள்வி விரேந்திரேன் மனதில் சுருக்கென்று குத்தியது. அவர் மௌனமாய் மனைவியை பார்க்க செந்தமிழ் மேலும் தொடர்ந்தார்.

“இன்னும் கேட்டா சிம்மா செஞ்சதை எல்லாம் தமிழச்சி செஞ்சிருந்தா அவளுக்கு பதவி உயர்வு பாராட்டு மெடல் இப்படியெல்லாம் கிடைச்சிருக்கும்… ஆனா சிம்மவிற்கு… அப்படி எதுவும் கிடைக்காது… அவன் எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காம தன் நாட்டுக்காக தன் கடமையை செஞ்சிருக்கான்… தன் பார்வைக்கு வந்த ஒரு அநியாயத்தை வேரோட அழிக்க தனியா நின்னு போராடி இருக்கான்… இப்பவும் நீங்க அவன் செஞ்சதை தப்புன்னு சொல்வீங்களா வீர் ?” என்று செந்தமிழ் கேட்க விரேந்திரன் தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்று கொண்டார்.

“நான் இதெல்லாம் தெரிஞ்சிக்காம அவ மனசை ரொம்ப கஷ்டபடுதிட்டேனே தமிழ்” என்றவர் மனைவியிடம் வருத்தம் கொள்ள, “அவன் நீங்க சொன்னதை பெருசா எடுத்துக்கல… இருந்தாலும் அப்பா பேசலையேன்னு கொஞ்சம் வருத்தம்” என்று சொல்லி எழுந்து நின்று தன் கணவரின் தோளின் மீது ஆதரவாய் கை வைத்தார்.

“ஆனா எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு தமிழ்”

“இதுக்கு எதுக்கு கில்டி… நீங்க அவன் கிட்ட சாதாரணமா எப்பவும் போல பேசுங்க… அது போதும்” என்று சொல்ல, “ஹ்ம்ம்” என்று வீர் தலையசைத்தார்.

“நைட் எல்லோரும் ஒண்ணா டின்னர் சாப்பிடலாம்” என்று செந்தமிழ் சொல்ல விரேந்திரனும் ஆர்வாமாக சம்மதம் தெரிவித்தார்.

இரவு உணவு உண்ண எல்லோரும் ஒன்றாய் டைனிங் ஹாலில் கூடினர். எல்லோரும் இருக்கையில் அமர சிம்மாவும் வந்தான். அங்கே தன் தந்தை அமர்ந்திருப்பதை பார்த்தவன், எங்கே தான் சென்று அமர்ந்தால் அவர் எழுந்து சென்று விடுவாரோ என்ற எண்ணத்தோடு திரும்பி செல்ல பார்க்க, “சிம்மா” என்று வீர் அழைத்தார்.

தன் தந்தையின் அழைப்பை கேட்டு ஒரு நொடி ஸ்தம்பித்தவன் அவர் புறம் மௌனமாய் திரும்ப, “எங்க போற… வா சாப்பிடலாம்” என்று அழைத்தார்.

அவர் அழைப்பில் ஆச்சரியம் கொண்ட சிம்மா தன் அம்மாவை பார்க்க செந்தமிழ் முறுவலோடு அவனை அமர சொன்னார். தமிழச்சியும் மதியழகியும் இந்த காட்சியை பார்த்து முகம் மலரந்தனர்.

சிம்மா தன் தந்தையின் அருகில் இருந்த இருக்கையில் தயங்கி கொண்டே அமர, அவர் முகத்தில் துளி கூட கோபம் இல்லையென்பது அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.

அதோடு அவர்களின் இரவு உணவு, பேச்சும் சிரிப்புமாய் ஆனந்தமாய் தொடங்கி நிறைவாய் முடிந்தது. ஆனால் இன்னும் சிம்மவால் தன் தந்தை சமாதானம் ஆகிவிட்டார் என்பதை நம்பவே முடியவில்லை.

அவன் கை அலம்பி கொண்டு வரவும், “சிம்மா” என்று வீர் அழைக்க அவர் அருகில் வந்து நின்றவன் மரியாதையோடு, “சொல்லுங்க ப்பா” என்று கேட்க,

“நான் உன்னை புரிஞ்சிக்காம கோபப்பட்டுட்டேன்… சாரிடா” என்றார். அவன் பதறி கொண்டு, “என்னப்பா நீங்க சாரி எல்லாம் கேட்டுட்டு… உங்க கோவத்திலயும் நியாயம் இருக்கு” என்றான். மகன் வார்த்தைகளை கேட்டு அவர் பூரித்தபடி, “ஆனா உன் செயலில் அதை விட அதிகமான நியாயம் இருக்கு சிம்மா… ரியலி ஐம் ப்ரௌட் ஆஃப் யு” என்று சொல்லி அவன் தோளில் தட்ட, “தேங்க்ஸ் ப்பா” என்று அவன் நெகிழ்ந்து நின்றான்.

“இந்த விஷயத்தில உனக்கு என்ன செய்யணும்னு தோணுதோ… அதை தைரியமா செய்… அதனால வர என்ன பிரச்சனையா இருந்தாலும் நம்ம சமாளிக்கலாம்” என்ற தந்தையின் வார்த்தையில் அவன் உள்ளம் சிலாகிக்க அவனுக்கு அந்த நொடி வார்த்தைகளே வரவில்லை. விழிகள் நனைய தலையை மட்டும் அசைத்தான்.

தூரமாய் நின்று இந்த காட்சியை பார்த்த செந்தமிழுக்கு மனம் நிறைந்தது. அதன் பின் செந்தமிழ் முகபறையில் அமர்ந்து தொலைக்காட்சியில் செய்திகளை பார்த்து கொண்டிருந்தனர்.

“சும்மா சொல்ல கூடாது தமிழ்… புத்திசாலித்தனத்துலையும் தைரியத்துலயும்…  நம்ம பசங்க நமக்கு கொஞ்சம் கூட சளைச்சவங்க இல்ல”என்று வீர் சொல்ல செந்தமிழும் தன் கணவனின் வார்த்தையை அப்படியே ஆமோதித்தார்.

அப்போது அவர்கள் இருவரின் கவனத்தையும் அந்த தொலைக்காட்சி செய்தி ஈர்த்தது.

அந்த செய்தி வாசிப்பாளர் சென்னைக்கு வந்திருந்த பிரதமர் சம்யுக்தா பிரச்சார கூட்டத்தில் பேசியவற்றை எல்லாம் சுருக்கமாக சொல்லி கொண்டிருந்தார்.

ஒளிபரப்பாகி கொண்டிருந்த அந்த செய்தியில் சம்யுக்தா மேடையில் திறம்பட தம் உரையை நிகழ்த்த, அவரின் ஆங்கில உரையாடலை தமிழில் துல்லியமாய் மொழிபெயர்த்து கொண்டிருந்தான்  விக்ரம்.

குறுகிய காலத்தில் அதுவும் அரசியலில் அவன் அடைந்திருக்கும் இந்த உயரம் ஆச்சரியமானது. ஆனால் அதை விட வியப்பான இன்னொரு விஷயத்தை அந்த செய்தி வாசிப்பாளர் உரைத்தார். தமிழநாட்டின் எஸ்.பி கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக விக்ரம் அறிவிக்கப்பட்டான்.

இவற்றை பார்த்து கொண்டிருந்த செந்தமிழ் வீர் முகத்தில் ஏனோ சந்தோஷ களிப்பு ஏற்ப்படவில்லை. மாறாய் குழப்பம். இன்றைய காலகட்டத்தில் ஒருவன் அரசியலில் திடுதிடுவென மேல பறக்கிறான் என்றால் அதில் ஆயிரம் சூட்சமங்கள் ஒளிந்திருக்கும். அதுவும் நியாயம் தர்மத்தோடு முன்னேறுவது சாத்தியமே இல்லை. அப்படியிருக்க விக்ரமின் இந்த வளர்ச்சி அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயத்தையே உருவாக்கியது.

அப்போது செந்தமிழ் தமிழச்சியின் அறையில் உள்ள இன்டர்காமில் அழைத்து அவளை உடனே கீழே இறங்கி வர சொன்னார்.

“சொல்லுங்க ம்மா” என்று அவளும் அவர்கள் முன்னே வந்து நிற்க,

“ஆமா… உன்கிட்ட வந்ததுமே கேட்கனும்னு நினைச்சேன்… நேத்து நைட் விக்கிரமை பார்த்து சமாதானப்படுதிறேனு ஜம்பமா கிளம்புனே… என்னாச்சு?” என்று செந்தமிழ் கேட்க அவள் முகம் இருளடர்ந்து போனது.

ஆனாலும்  இந்த கேள்வியை அவள் முன்னமே எதிர்ப்பார்த்தாள்.

“நான் விக்ரம் கிட்ட பேசிட்டேன்… அவன் சமாதனம் ஆயிட்டான்” என்றவள் சொல்ல, “அப்படின்னா நீ” என்றவர் பேச ஆரம்பிக்கும் போதே,

“இல்லம்மா … அவன் எலெக்ஷன் முடியற வரைக்கும் ரொம்ப பிசியாம்… அதுவரைக்கும் என்னை இங்கயே இருக்க சொன்னான்… அதுவும் இல்லாம இந்த கேஸ்னால எனக்கும் கொஞ்சம் டைட் வொர்க்… இங்கிருந்தா ஸ்டேஷன் போயிட்டு வர ஈசியா இருக்கும்… அதான்”என்று பொருந்தாமல் ஒரு பொய்யை ஜோடித்து உரைத்தாள்.

அவள் சொல்வது உண்மைதானா என்று ஆராயும் நோக்கில் தமிழச்சி மகளை பார்க்க அவளோ, “ம்மா… கேஸ் ஒரு முக்கியமான் கால் பேசணும்… நம்ம அப்புறம் பேசலாமா” என்று சொல்லி அவர்களிடம் இருந்து நழுவி சென்றுவிட்டாள். அவளின் இந்த செயலால் செந்தமிழின் சந்தேகம் இன்னும் வலுத்தது.

“உங்க பொண்ணு எதையோ சொல்லாம மறைக்கிறா வீர்” என்று தமிழ் தன் கணவனிடம் சொல்ல, “என்ன பிரச்சனையா இருக்கும்” என்று விரேந்திரனும் புரியாமல் குழம்பினார்.

செந்தமிழ் இந்த விஷயத்தை இப்படியே விட மனமில்லாமல் இரவு தன் மகனின் அறைக்கு செல்ல சிம்மா அவரை பார்த்து, “நீங்க ஏனம்மா மேல வந்தீங்க… கூப்பிட்டிருந்தா நானே கீழ வந்திருப்பேன் இல்ல” என்றான்.

“நான் நல்லாதான் இருக்கேன் சிம்மா… என்னை ஒரு நோயாளி மாறி ட்ரீட் பண்ணாதே… சொல்லிட்டேன்” என்று தமிழ் மகனிடம் கண்டிப்பாய் சொல்ல,

“மன்னிச்சிருங்கம்மா… இனிமே அப்படி பண்ணல” என்றான்.

அவர் அதன் பின், “நான் கொஞ்சம் முக்கியமா உன்கிட்ட பேசணும்” என்க,

“சொல்லுங்க ம்மா” என்றான்.

செந்தமிழ் அவனிடம் தமிழச்சி விக்ரம் விஷயத்தை பற்றி சொல்லி,

“என்னகென்னவோ உன் தங்கச்சி வார்த்தையில் நம்பிக்கை இல்ல… நீ பேசாம விக்ரமுக்கு கால் போட்டு இது பத்தி கொஞ்சம் பேசுடா… பிரச்சனையை இப்படியே விட்டா பெருசாயிடும்” என்றார் கவலையோடு.

“அப்படி எல்லாம் ஆகுதும்மா… இரண்டு பேருக்குள்ள கொஞ்சம் ஈகோ… ஆனா ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரையே வைச்சிருக்காங்க” என்று சிம்மா சொல்ல,

“அது எனக்கும் தெரியும் சிம்மா” என்றவர் தாய்மையின் தவிப்போடு உரைத்தார்.

அவர் வேதனை புரிந்து, “கவலைபடாதீங்க ம்மா… இந்த பிரச்சனையை என்கிட்ட விட்டுடுங்க… நான் விக்ரம் கிட்ட பேசி இதை முடிச்சி வைக்கிறேன்” என்று உறுதியளித்தான் .

செந்தமிழ் மனதில் நிம்மதி படர்ந்தது. இனி இந்த பிரச்சனையை சிம்மா பார்த்து கொள்வான் என்ற நம்பிக்கையோடு செந்தமிழ் அங்கிருந்த அகன்றார். அப்போது அந்த அறையின் வாசல் புறம் ஓரமாய் நின்றிருந்த தமிழச்சி தன் அம்மா சென்றதும் உள்ளே நுழைந்து, தன் தமையனிடம் சில முக்கியமான விவரங்களையும் பகிர்ந்து கொண்டாள்.

********

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கியது. தெருவுக்கு தெரு வீட்டுக்கு வீடு வாக்காளர் பெருமக்களே என்ற குரல் ஒலித்து கொண்டிருந்தது. முந்தைய தேர்தலில் ஒட்டு கேட்கும் போது வந்தவர்கள் மீண்டும் இந்த தேர்தலுக்குத்தான் கண்ணில் தென்ப்பட்டார்கள்.

மேடைகளில் நின்று கொண்டு ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி சேற்றை வாரி இறைத்து கொண்டிருக்க, அந்த பெரிய கட்சிகளோடு பல சார்பு கட்சிகள் பேரம் படியும் இடத்தில் தங்கள் கூட்டணியை அமைத்து கொண்டு தேர்தலில் கூட்டத்தோடு கூட்டமாய் கோவிந்தா போட தயாராகி கொண்டிருந்தனர்.

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை. முந்தைய தேர்தலில் கூட்டணி வைத்திருந்த கட்சியோடு அடுத்த தேர்தலில் கூட்டணி வைத்து கொள்ள மாட்டார்கள். குரங்கு போல் மாறி மாறி தாவி கொண்டே இருந்தார்கள்.

ஒருவேளை மனிதன் குரங்கில் இருந்து வந்தவன் என்பதால் இருக்குமோ? இருக்கும் இருக்கும்…  கொஞ்சமாவது அந்த புத்தி நமக்கு ஒட்டி கொண்டுதானே இருக்கும்.

இவர்களை செய்யும் இந்த கூட்டணி குளறுபடிகளில் பாதிக்கப்படுவது என்னவோ மக்கள்தான். அவர்கள் எந்த கட்சி வேலைக்காகாது என்று ஒதுக்க நினைகிறார்களோ, அந்த  கட்சி  அவர்களின் அபிமான கட்சியோடு கூட்டணி அமைத்துவிடும். இந்த புத்திசாலியான ஜனநாயக முறையில் ஒவ்வொரு முறையும் தோற்று போவது கட்சிகள் அல்ல. ஜனநாயகமும் வாக்காளர்களும்தான்.

ஆனால் இம்முறை கெட்டதிலும் ஒரு நல்லது போல தமிழ் நாட்டின் ஆளும்கட்சி  எஸ். பி கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் கூட்டணியை முறித்து கொண்டது. இந்த பாராளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் எதிர் எதிர் அணியாக நின்றன. எதிரிக்கு எதிரிக்கு நண்பன் என்ற வகையில் வேறொரு தேசிய கட்சியோடு கூட்டணி வைத்தது தமிழ்நாடு ஆளுங்கட்சி.

இதற்கிடையில் சிலைகடத்தல் வழக்கில் தயாளன் தன் மேலதிகாரியிடம் தமிழச்சி கொடுத்த ஆதரங்களை தந்து சைதன்யாவை கைது செய்வது குறித்து ஆனுமதி கேட்க , இந்த வாய்ப்பை சம்யுக்தாவின் ஆட்சியை வீழ்த்தும் ஆயுதாமாக பயன்படுத்த எண்ணியது மாநில அரசாங்கம்.

சைதன்யாவும் சம்யுக்க்தாவும் நண்பர்கள் என்பது ஊரறிந்த விஷயம். ஆனால் இதற்கு பின்னணியில் அரசல்புரசலான தவறான தகவல்களும் பரவினாலும் அதெல்லாம் அரசியல் ரகசியங்கள்.

தேர்தலுக்கு முன்னதாக சைதன்யாவை இந்த வழக்கில் குற்றவாளியாக பிடித்துவிட்டால் சம்யுகத்தாவையும் இதோடு சம்பந்தப்படுத்தி அவர் பெயரை நார்நாராய் கிழிக்கலாம் என்று எஸ்.பி கட்சியின் எதிராளி கட்சி கொடுத்த யோசனையை தமிழ் நாட்டின் ஆளுங்கட்சியின் ஏற்றது.

அதுவரை அரசாங்கத்தால் கண்டுக்கொள்ளாப்படாத ஒரு துறை முக்கியத்துவம் வாய்ந்த துறையாக மாறியது. உடனடியாக சிலை கடத்தல் துறைக்கு அதிகாரங்கள் கூடின.

அதாவது நம் நாட்டின் பொக்கிஷங்கள் திருடுவது திடீரென்று ஒரு பயங்கர குற்றமாக விஸ்வரூபம் எடுக்கிறது. அரசியல் சூட்சமத்தில் இதுவும் ஒன்று. சுயலாபதிற்காக ஒரு விஷயத்தை செய்து விட்டு நாட்டின் நன்மைக்காக செய்ததாக சொல்லி அவர்களின் அரசியல் சாதனை பட்டியலில் இதையும் சேர்த்து கொள்ளலாம் இல்லையா?

சிலை கடத்தல் துறையில் தமிழச்சியின் கீழ் ஏழு காவலாளிகள் மட்டுமே இருந்தனர். இப்போது அதில் இருபத்தியொரு காவலாளிகள் பொறுப்பில் அமரத்தப்பட்டனர். அடுத்ததாக முதலமைச்சரே தலையிட்டு சைதன்யாவை மற்றும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எல்லோரையும் உடனடியாக கைது செய்யும்படி சிறப்பு ஆணையை வழங்குகிறார். தமிழச்சி எதிர்ப்பார்த்ததை விட எல்லாம் பன்மடங்காய் அவளுக்கு கிடைத்தது. இதெல்லாம் இரண்டே நாட்களில் நடந்ததுதான் வியப்பு!

இனி யார் தலையிட்டாலும் இந்த வழக்கிலிருந்து சைதன்யாவை காப்பாற்ற முடியாது.

அதுவும் மாநில அரசாங்கம் தனிப்பட்டு செயல்பட முடிவெடுத்துவிட்டால் மத்திய அரசாவது மண்ணாவது. அதுவும் பதிவி காலம் முடிந்த எஸ்.பி கட்சியால் என்ன செய்ய முடியும்.

தமிழச்சிக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போலத்தான். இவர்கள் விளையாடும் அரசியல் விளையாட்டில் இப்போது பந்து தமிழச்சியின் கையில். இனி அதை அவள் குறி பார்த்து கூடையில் போட வேண்டும். அவ்வளவுதான்.

இந்த விளையாட்டை ஆடுபவர்களுக்கு ஒரு விஷயம் தெரியாது. அவர்கள் யாரும் சொந்தமாக விளையாடவில்லை. அவர்களை மேலிருந்து ஒருவன் ஆட்டுவிக்கிறான்.

எத்தனை பெரிய புத்திசாலியாக இருந்தாலும் அவன் எத்தனை பெரிய உயரத்தில் இருந்தாலும் அவன் விழ வேண்டும் என்று முடிவாகிவிட்டால் அது நடந்தே தீரும்.

சைதன்யா வந்த விமானம் டில்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிரங்கியது.

error: Content is protected !!