Imk-7

Imk-7

8(௮)

சிம்மபூபதி

சிம்மபூபதி வீழ எத்தனித்த சிலைகளைத் தாங்கி நிலைபெற்று நிறுத்திய சமயம், அங்கே எழுந்த சத்தத்தைக் கேட்டுத் துணுக்குற்று முன்னே சென்ற அந்த நபர் திரும்பிப் பார்த்தான்.

விழ இருந்த சிலைகள் யாவும் நின்றபடி இருக்க அவன் முகத்தில் குழப்பம் படர்ந்தது. இதெப்படி சாத்தியம் என்று அந்த நபர் யோசித்தபடி மீண்டும் அந்தச் சிலைகள் நோக்கி நடந்து வர, அப்போது அவன் முகத்தில் பலமான அடி விழுந்து அவன் நிலைகுலைந்தான். அந்தச் சிலநொடி தாமதத்தில் அவன் கையிலிருந்த பெண் சிலை மாயமாகி இருந்தது.

“தொவ்ஷி!”(ஆபத்து) என்று கத்தியவன், “கெவ் கியா யல்லா”(யாரோ இங்கே இருக்காங்க?) என்று மேலும் சொல்ல உடனிருந்த இன்னொருவன்  அதிர்ந்து தன் கையிலிருந்த டார்ச் மூலமாக அந்த இடத்திற்கு ஒளியூட்ட, அவன் பார்த்த காட்சி நெஞ்சைப் பதற வைத்தது. சிம்மன் அடித்த அடியில் அந்தப் பெண் சிலையை கையிலெடுத்த நபர் முகத்தில் இரத்தம் வடிய மூர்ச்சையாகிக் கீழே வீழ்ந்திருந்தான்.

அதனைப் பார்த்தவன் மிரண்டு அவசர அவசரமாய் அந்தக் குடோனின் கதவை மூடிவிட்டு வெளியேறிவிட்டான்.

அதன் பின் சிம்மா தன் கையிலிருந்த பெண் சிலையை பத்திரமாக இறக்கி வைத்தான். அந்த இருளிலும் அவனின் உயரமும் கட்டுடலான தேகமும் கம்பீரமாய் பிரதிபலிக்க அவன் தன் கணீர் குரலால்,

‘இந்த சிம்மா இருக்கற வரைக்கும் உங்க யாரையும் விலைபேசி விற்க விடமாட்டேன்… எல்லோருமே சீக்கிரம் நம்ம சொந்த மண்ணுக்குத் திரும்புவோம்… தமிழன்னா எல்லோருக்கும் ரொம்ப இளக்காரமா போச்சு இல்ல…  காட்டுறேன் தமிழனோட திமிரு என்னன்னு’ என்று சூளுரைத்தான்.

ஏதோ ஒரு பெரிய திட்டமிடலோடே சிம்மன் இவ்விதம் உரைக்க, அவன் ஆழ் மனதில் உள்ள எண்ணம் என்னவென்று அவன் செயல்படுத்திய பிறகே தெரியவரும்.

************

சிம்மனைப் பற்றி தமிழச்சி சொன்னதைக் கேட்ட மதியழகியின் மனம் வேதனையில் ஆழ்ந்தது. அவள் அதிகமாய் அவனிடம் பழகியதில்லை. அந்த வீட்டில் தமிழச்சியோடு மட்டுமே பேசுவது, அரட்டை அடிப்பது, விளையாடுவது எல்லாம். அவர்கள் இருவரும் சேர்ந்தால் அந்த வீடே இரண்டாகிவிடும். தப்பித்தவறி முகிலும் அவர்களோடு இணைந்துவிட்டால் அந்த வீடே ரணகளமாகிவிடும்.

ஆனால் சிம்மா அவர்களோடு கலந்து கொள்ள மாட்டான். அவன் மட்டும் தனிரகம். எல்லோரோடும் அவன் இயல்பாகப் பேசி பழகினாலும் அவன் நெருங்கிப் பழகுவது விக்ரமோடு மட்டும்தான். அதுவும் விக்ரம் சிம்மாவின் குணத்திற்கு முற்றிலும் நேர்மார். இருந்தும் இருவரும் இந்தளவு நெருக்கமாய் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்குமே சற்றே வியப்பான விஷயம்.

அதேநேரம் இருவரும் எந்த சூழ்நிலையிலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்துக் கொள்ள மாட்டார்கள். தமிழச்சி விக்ரமிடம் சண்டை போட்டு பிரிந்து வந்தபோது கூட சிம்மா விக்ரமிடம் அது பற்றி எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. ஏன்? அவர்கள்  நட்பில் ஒரு சிறு விரிசல் கூட உண்டாகவில்லை என்பதுதான் வியப்பின் உச்சம். இதனால் தமிழச்சிக்கு தன் தமையன் மீது கொஞ்சம் மனவருத்தமும் கூட.

இருப்பினும் சிம்மா தன் நட்பை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. விக்ரமும் கூட அப்படித்தான். அதுவே அவர்களின் நட்பின் ஆழத்திற்கு உதாரணம். இதையெல்லாம் தாண்டி தந்தையிடம் அதீத மரியாதை. தாயின் வார்த்தைக்கு அடிபணிதல். தங்கையின் மீது அளவுகடந்த பாசம். நாடு, மொழி, கலாச்சாரத்தின் மீது அதீத பற்று என இத்தனை உணர்வுகளும் சரிவிகிதத்தில் தேக்கி வைத்திருக்கும் சிம்மாவிடம் மதியழகி காதல் என்ற உணர்வைக் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருந்தாள். ஆனால் அது அவளுக்கு அத்தனை சுலபமான காரியமாக இல்லை.

சலனமே இல்லாத அவன் பார்வையிலும், தெளிவான பேச்சிலும் அவள் எதைக் கண்டறிவாள்? ஒவ்வொருமுறையும் ஏமாற்றமே மிச்சமானது. இந்த எண்ணங்களோடு மதியழகி சிம்மாவின் அறை நோக்கி நடந்து வந்திருந்தாள்.

அந்த அறையை  எத்தனை முறை பார்த்தாலும் அது அவளைப் பிரமிப்பில் ஆழ்த்திவிடும். ஒரு சாதாரண இளைஞனின் அறையல்ல அது.

அந்த அறை முழுக்க பழமையையும் பாரம்பரியத்தையும் எடுத்துச் சொல்லும் கலைநயமான பொருட்கள் ஆக்கிரமித்திருக்க, அங்கிருந்த பெரிய புத்தக அலமாரிகள் தமிழ் இலக்கியம்  மற்றும் வரலாற்றுப் புத்தகங்களால் நிரப்பப்பட்டிருந்தன.  இவற்றோடு அந்த அறையின் சுவற்றைச் சுற்றிலும் அவன் வரைந்து வைத்திருந்த கருப்பு வெள்ளை ஓவியங்கள்.

அதுவும் எல்லாமே கோவில் கோபுரங்கள் மற்றும் சிற்பங்கள். சின்ன சின்ன நுணுக்கங்களைக் கூட மிக நேர்த்தியாய் அவன் பார்த்துப் பார்த்து வரைந்திருக்க, ஒவ்வொன்றும் அத்தனை உயிரோட்டமாய் காட்சியளித்தது.

அவன் அறைக்குள் நுழைந்த மாத்திரத்தில் என்னவோ அந்த அறையில் அவன் இப்போதும் இருப்பது போன்ற பிரேமை!

முந்தைய முறை வந்த போது அவனை சந்தித்த நிகழ்வு அவள் கண்முன்னே காட்சிகளாய் விரிந்தன.

அவன் அபூர்வமாய் அன்று வீட்டில் அதுவும் அவன் அறையில் இருக்கிறான் என்று தெரிந்ததிலிருந்து அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவனைப் பார்த்துவிட வேண்டும் என்ற பேராவலில் அறை வாசலில் வந்து நின்றுவிட்டாள். அவன் அப்போது அவளுக்கு நேரெதிராய் திரும்பி நின்று தன் புத்தக அலமாரியில் ஏதோ குடைந்து கொண்டிருக்க, அவளுக்கு அந்த நொடி உள்ளே செல்லும் ஆர்வம் குன்றிப் போனது.

அவன் தன்னைத் தொந்தரவு என்று எண்ணிவிடுவனோ என்ற அச்சத்தில் அவள் அப்படியே வாசலிலேயே தேங்கி நிற்க,

“ஏன் மதி அங்கேயே நிற்கிற? உள்ள வா” என்று அவன் அவளைத் திரும்பிப் பாராமலே அழைப்புவிடுக்க அவள் அதிர்ந்து போனாள்.

“எப்படி உங்களுக்கு?!” என்றவள் குழப்பமாய் கேட்டுக் கொண்டே உள்நுழையவும் அவன் முறுவலித்துப் புத்தக அலமாரியின் கண்ணாடியைக் காண்பித்தான். பிம்பம் அதில் பிரதிபலித்திருக்கக் கூடும் என்பதை எண்ணி அவள் தலையிலடித்துக் கொள்ள,

“என்ன விஷயம் மதி?” என்ற அவன் தன் புத்தகங்களை ஆராய்ந்தபடியே கேட்டான்.

‘அதைக் கொஞ்சம் என் முகத்தைப் பார்த்து கேட்டா என்னவாம்’ என்று அவள் மனதிற்குள் கடுகடுத்துக் கொண்டிருக்க, அவள் சொன்னதைக் கேட்டவன் போல் சட்டென்று அவள் புறம் திரும்பியவன், “என்ன மதி?!” என்று அழுத்தமாய் கேட்டான்.

அவனின் திடீர் பார்வையிலும் அருகாமையிலும்… சற்றே மருண்டவள் அவனின் அசாத்திய உயரம், அடர்ந்த கேசம், ராஜகளையான முகம், தேஜஸான புன்னகை, ஆளுமையான பார்வை, இவற்றோடு ஆண்மையான அவனின் மீசை என சொல்லிலடங்கா அவனின் கம்பீரத்தில் கட்டுண்டு ஊமையாகிப் போனாள்.

அவன், “மதி!” என்று தன் கணீர் குரலால் மீண்டும் சத்தமாய் அழைக்க அவள் உணர்வுபெற்று பார்வையைத் தாழ்த்திக் கொள்ள,

“உன் ஃபிரெண்ட் கல்யாணம் ஆகிப் போயிட்டதால உனக்கு ரொம்ப போராடிக்குது போல?” என்று அவனாய் அவள் மனநிலையை கணித்துக் கொண்டு கேட்க,

“ஹ்ம்ம்… ஆமா” என்று வேறுவழியின்றி அவளும் தலையாட்டி வைத்தாள்.

“புக்ஸ் எதாச்சும் ரீட் பண்றியா?” என்று அவன் கேட்கவும்,

‘புக்ஸா… படிக்கிற காலத்திலேயே அதெல்லாம் நமக்கு அலர்ஜி’ என்று யோசித்தவள், ‘வேண்டாம்னு சொன்னா தப்பா எடுத்துப்பாரோ!” என்றவள் எண்ணமிட்டு அவனை நிமிர்ந்து பார்க்க,

“உனக்கு தமிழ் படிக்க கொஞ்சம் கஷ்டம் இல்ல” என்று முறுவலித்துக் கேட்கவும் அவளின் ஈகோ தொபுக்கடீரென்று அப்போது வெளியே குதித்தது.

“யார் அப்படிச் சொன்னா? அதெல்லாம் இல்ல… நான் நல்லா தமிழ் படிப்பேன்” என்றாள்.

“அப்படியா?!” என்று நம்பாத பார்வை பார்த்தவன், “இந்தா… இதைப் படி” என்று ஒரு புத்தகத்தை நீட்டினான்.

‘உதயணன் எழுதிய சோழ குலாந்தகன்’ என்ற ஒரு வரலாற்று நாவல் அது. அதனை பெற்றுக் கொண்டு உற்றுப் பார்த்தவள், அட்டைப் படத்தில் இருந்த தலைப்பைப் படிக்கவே சில நொடிகள் பிடித்தது.

அவள் அதனைப் பிரித்துப் பார்த்துவிட்டு அவனை பரிதாபமாய் ஏறிட்டு, “இவ்வளோ தமிழா இருந்தா கஷ்டம்” என்றாள்.

“அப்போ எந்தளவுக்குத் தமிழ் படிப்பீங்க… ஜானா முழமா” என்று அவன் முறுவலித்துத் தன் கையில் எள்ளலாய் அளந்து காண்பிக்க, அவள் முகம் வாடிவதங்கிப் போனது.

“மதி!” என்றவன் அழைக்க அவள் அவனை நிமிர்ந்து பார்க்க யோசிக்கும் போதே, “ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ… எல்லாருக்கும் எல்லாமே வரணும்னு அவசியமில்ல… இன்னும் கேட்டா உன்னை மாதிரி எல்லோருக்கும் டான்ஸ் ஆட வராது… அதுல நீ தான் பெஸ்ட்” என்றான்.

அவன் வார்த்தைகள் அவளைக் குதூகலப்படுத்த அவள் அவனை வியப்பாய் ஏறிட்டு, “என் டான்சை நீங்க பார்த்திருக்கீங்களா?!” என்று கேட்க,

“உன் அரங்கேற்றத்தின் போது வந்தேனே… அப்போ பார்த்ததுதான்” என்றவன் சொல்ல அவள் முகம் மீண்டும் ஏமாற்றமாய் மாற, மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு,

“சரி நீங்க படிங்க… நான் கிளம்பறேன்” என்று அவள் திரும்பி நடக்க, அவனும் முறுவலித்து சரியென்று தலையசைத்தான்.

போகவே மனமில்லாமல் அவள் செல்ல அவள் மனம் அப்போது நாமாவது நம் மனதில் உள்ள எண்ணத்தைச் சொன்னால் என்ன என்று யோசிக்க, அவளுக்கு அது சரியென்றே பட்டது.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனிடம் பேசிவிடலாம் என்று திரும்பும் அவசரத்தில் எதிர்பாராமல் அவன் அரைகுறையாய் வரைந்து வைத்திருந்த ஒரு ஓவியத்தைத் தட்டிவிட அது பலகையோடு சாய்ந்து தரையில் வீழ்ந்தது.

“அச்சச்சோ!” என்றவள் பதறிக் கொண்டு அதனை சரி செய்ய முனைய சிம்மன் திரும்பி நோக்கினான்.

“சாரி சாரி சாரி!” என்றவள் அச்சம் மேலிட சொல்லிக் கொண்டே அந்த ஓவியத்தைக் கையிலெடுத்துவிட்டு நிமிர, “எதுக்கு இத்தனை சாரி… தெரியாமதானே விழுந்திருச்சு” என்று இயல்பாகவே உரைத்தான் அவன்.

தன் கையிலிருந்த ஓவியத்தை அவனிடம் கொடுக்கும் போதே அதனைக் கவனித்தவள், “இது  அர்த்தநாரீஸ்வரர் தானே?!” என்று கேட்க,

அவனும் ஆம் என்று ஆமோதித்துவிட்டு, “இன்னும் முடிக்கல… ஏதோ நெருடலா இருக்கு… சரியா வரமாட்டேங்குது” என்றான்.

அவள் அந்த ஓவியத்தைப் பார்த்து, “நல்லா தானே வந்திருக்கு” என்று சொல்ல, “இல்ல மதி…ஏதோ மிஸ்ஸிங்” என்றான்.

அவள் குழப்பமாய் அதனைப் பார்த்தவள் பின் ஏதோ நினைவு வந்தவள் போல, “நான் இதே போல ஒரு சிலையைப் பார்த்தேனே?” என்றாள்.

“இதே மாதிரியா… எங்க?!” என்றவன் ஆர்வமாய் கேட்க,

“ஆஸ்திரேலியால ஒரு டேன்ஸ் ஷோ பண்ணப் போயிருந்தேன்… அப்போ அங்கே இருந்த பெரிய ஆர்ட் கேலரில” என்றாள். அவன் முகம் அவளைக் கூர்ந்து பார்த்து, “இதே மாதரியா… இல்ல இதே சிலையா?” என்று கேட்டான்.

“இந்த மாதரிதான்” என்றவள் சாதாரணமாய் கூற,

“என் கேள்வியை சரியா புரிஞ்சுக்கோ… அர்த்தநாரீஸ்வரர் சிலை நிறைய இருக்கு… ஆனா இது கொஞ்சம் யுனிக் மாடல்… நல்லா கவனிச்சேன்னா தெரியும்” என்று அவன் விளக்கவுரை கொடுக்க  ஆரம்பித்தான்.

தேவையில்லாமல் வாயைக் கொடுத்துவிட்டோமோ என்றிருந்தது அவளுக்கு!

அவன் அப்போது ஒரு புகைப்படத்தை எடுத்து நீட்டி, “இதான் நான் வரைஞ்சுகிட்டிருக்கிற சிலையோட போட்டோ… இதை நல்லா கவனிச்சுப் பாரு… சிவன் தன் ஒரு கையை நந்தி மேல வைச்சு சாஞ்சு நிற்பாரு… பார்வதியோட உயரமும் சிவனோட உயரமும் சரிசமமா வர அந்த சிற்பி செஞ்ச யுக்தி” என்றவன் அந்த சிலைக் குறித்து விவரிக்க,அவள் பார்வை ஆச்சரியத்தில் அகல விரிந்தது.

அவன் மேலும், “இப்போ சொல்லு… நீ பார்த்த சிலை இப்படி இருந்துச்சா?” என்று மீண்டும் அவளிடம் அதே கேள்வியை  எழுப்பினான்.

அவள் குழப்பமாய் தலையசைத்து, “சாரி… நான் அவ்வளவு ஷார்ப்பா கவனிக்கல” என்றாள்.

அவன் முகம் அதிருப்தியாய் மாறியது. “இட்ஸ் ஓகே மதி… நீ போ” என்று அவன் சொல்ல அவள் ஏமாற்றமாய் திரும்பி நடந்து சென்றாள். கடைசியில் அவள் சொல்ல வந்தது சொல்ல முடியாமலே போனது.

அந்த நாளின் ஏமாற்றம் இப்போதும் அவள் மனதை ஆழமாய் காயப்படுத்த, அதோடு அவன் இப்போது எங்கே இருப்பான் என்று கவலை வேறு அவள் மனதை அலைக்கழித்தது.

இவள் இப்படி வேதனையில் ஆழ்ந்திருக்க முகிலும் தமிழச்சியும் மும்முரமான விவாதத்தில் இருந்தனர்.

“இதெல்லாம் ஒரு தர்ட்டி இயர்ஸ் பேக் பாரதி மேகஸின்… இதுல ஆதிம்மா சிலைக் கடத்தல் பற்றியும் கடத்தப்பட்ட சிலைகள் பற்றியும் எழுதியிருப்பாங்க… அப்புறம் பெரியப்பா இந்த கேஸை கொண்டு போன விதத்தைப் பற்றியும் கூட எழுதி இருக்காங்க” என்றான் முகில்.

“ஓ! அப்போ ஆதி ஆண்ட்டியும் அம்மாவும் தனித்தனியா பத்திரிக்கை வைச்சு நடத்திட்டு இருந்தாங்க இல்ல” என்று தமிழச்சி அந்த பத்திரிக்கைகளைப் புரட்டிக் கொண்டே கேட்க,

“ஆமா… அண்ட் இதுல ஷாக்கிங்கான விஷயம் என்னன்னா பெரியப்பாவும் அப்பாவும் இந்த கேஸ்ல கண்டுபிடிச்ச குற்றவாளிகள் யாருக்கும் பெருசா தண்டனை கிடைக்கல… அது பெரிய நியூஸாவும் பேசப்படல” என்றான்.

“அப்பா சொன்னாரு முகில்… ஆனா இந்த தடவை அப்படி விடக் கூடாது… அந்த கூட்டத்தையே கூண்டோட பிடிக்கணும்”

“பிடிச்சா மட்டும்” என்று முகில் கிண்டலாய் கேட்க அவள் அவனை அழுத்தமாய் முறைத்தாள்.

“சரிம்மா முறைக்காதே… நீ செய்றதை செய்… நான் எதுவும் சொல்லல” என்றான்.

“செய்யத்தான் போறேன்… நாளைக்கு ஒரு முக்கியமான ஆளைப் பிடிக்கப் போறேன்… அவனை மட்டும் பிடிச்சா இந்த நெட்வொர்கோட தலையை நான் கண்டுபிடிச்சிடுவேன்”

“நாளைக்கா… அதுவும் இந்த கையை வைச்சுக்கிட்டா” என்று முகில் அதிர்ச்சியாய் கேட்க,

“வேணா… இரவலுக்கு உன் கையைக் குடேன்?” என்று எகத்தாளமாய் கேட்டாள்.

“இந்த கலாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல” என்றவன் எதையோ நினைவுபடுத்திக் கொண்டு,

“ஏய்! கேட்கணும்னு நினைச்சேன்… உன் ஆளுக்கு எம்பி சீட் கிடைசிருக்காமே… எப்படி?!” என்று வியப்பாய் கேட்டான்.

“எப்படின்னு என்னைக் கேட்டா?” என்றவள் அலட்சியமாய் பதில் சொல்ல, “அவரு உன் ஹஸ்பெண்ட் மா” என்றான் முகில்!

“ஹஸ்பெண்ட் இல்ல… எக்ஸ்- ஹஸ்பெண்ட்” என்றவள் அழுத்திச் சொல்ல அவன் அதிர்ந்து, “திஸ் இஸ் டூ மச்… ஒரு சின்ன பிரச்சனைக்குப் போய்” என்றவன் சொல்லும் போதே ஆக்ரோஷமானவள்,

“நான் சஸ்பென்ஷன் ஆகறது உனக்கு சின்னப் பிரச்சனையா டா?!” என்று கேட்டு அவனை முறைத்துப் பார்த்தாள்.

“இல்லடி… விக்ரம் அண்ணா… அப்படியெல்லாம்” என்றவன் பேச ஆரம்பிக்கும் போதே, “முகில் கிளம்பு” என்றாள்.

“தமிழச்சி!” என்றவன் அழைக்க, “கிளம்புன்னா கிளம்பு” என்று அவள் கத்திவிட்டாள். அவனும் அதற்கு மேல் அந்தப் பேச்சைத் தொடராமல் அங்கிருந்து அகன்றுவிட்டான்.

error: Content is protected !!