imk prefinal

imk prefinal

௩௪(34)

அழிக்கும் சக்தி

அப்போது சிம்மாவும் விக்ரமும் இருசக்கர வாகனத்தில் டில்லி மாநகரத்தின் படுமோசமான வாகன நெரிசலையும் கிழித்துக் கொண்டு சென்றனர். விக்ரம்தான் அதை செலுத்திக் கொண்டிருந்தான்.

டில்லியில் இருந்த ஒரு நண்பரின் மூலமாக அந்த வாகனத்தை ஒரு அவசர வேலைக்காக கேட்டுப் பெற்றிருந்தான். சிம்மா அவன் பின்னோடு அமர்ந்து தன் கைப்பேசித் திரையைக் கூர்மையாக கவனித்து, அவனுக்கு வழி உரைத்துக் கொண்டிருந்தான். இருவருக்கும் பதட்டம் ஏறிக் கொண்டே இருந்தது. அவர்கள் துரத்தும் பொருளுக்கும் அவர்களுக்கும் இடைவெளி அதிகரித்துக் கொண்டே இருந்தது.

ஆனால் அவர்கள் தங்கள் முயற்சியைக் கைவிடுவதாக இல்லை. முழு மூச்சோடு அந்தப் பொருளைத் துரத்திக் கொண்டிருந்தனர். அதனை எப்படியாவது கைப்பற்றிவிடுவோம் என்ற ஆழமான, அழுத்தமான நம்பிக்கையோடு!

அவர்கள் துரத்தும் பொருள் சென்று கொண்டிருக்கும் வாகனத்தின் வேகத்தின்படி அது இன்னும் சில மணித்துளிகளில் டில்லி மாநகரை விட்டு வெளியே சென்றுவிடலாம். அதற்கு முன்னதாக அதனைப் பிடித்துவிட வேண்டும்.

இவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக தமிழச்சிக்கு, ‘நம்ம ப்ளான் பிளாப்’ என்று மெசேஜ் அனுப்பி விவரங்களையும் அனுப்பியிருந்தனர்

தமிழச்சி அப்போதுதான் சரியாய் டில்லி விமான நிலையத்தில் சைதன்யாவைக் கைது செய்தாள். அவளின் இந்த தீடீர் நடவடிக்கையில் சைதன்யா அதிர்ந்து நின்றிருக்க தமிழச்சி அவன் கரத்தில் விலங்கு பூட்டினாள்.

“ஏ ஏ வாட்? நான் யார் தெரியுமா?” என்று சைதன்யா சீற்றமாய் உறும,

“நீ யாரு என்னன்னு உன் வரலாறே எனக்குத் தெரியும்… ஆனா என்னைப் பத்திதான் உனக்குத் தெரியாது” என்றவள் கெத்தாக, “தமிழச்சி ஐ.பி.எஸ்… தமிழ்நாடு போலீஸ்… சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு” என்று கர்வமாய் அதேநேரம் கம்பீரமாய் சொல்ல அண்டசராசரமும் ஒரு நொடி அதிர நின்றார் சைதன்யா.

“என்ன மிஸ்டர். சைதன்யா பட்டேல்… எங்க கோவில் சிலையெல்லாம் நீ தூக்குன மாதிரி… இன்னைக்கு உன்னையே நான் ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிட்டேன்… பார்த்தியா?” என்றவள் எகத்தாளமாக சொல்லி சிரிக்க அவர் முறைப்போடு, “என் பவர் தெரியாம நீ என் மேல கையை வைச்சிட்ட… இதுக்கெல்லாம் நீ ரொம்ப வருத்தப்படுவ” என்றார்.

“ஐயோ! முடியல… டையலாக்கை  மாத்துங்கடா… சேம் ஓல்ட் டையலாக்” என்று எள்ளி நகையாடியவள், உடனிருந்த காவலாளிகளிடம் அவரை அழைத்து வரச் சொல்லிப் பணித்தாள். பின்னர் ஏடிஜிபி தயாளனுக்குத் தகவல் கொடுத்தாள்.

அதன் பின் அங்கிருந்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் பேசிவிட்டு அங்கேயே ஒரு அறைக்குள் அடைத்து வைத்தாள்.

அப்போது சைதன்யா இதெல்லாம் சம்யுக்தாவின் வேலையா என்று மனதில் எண்ணி ஆக்ரோஷமான போதும் வஞ்சகமாய் ஒரு புன்னகை அவர் முகத்தில் தவழ்ந்தது. எதையோ சாதித்தவிட்ட களிப்பு. அதோடு இந்த சட்டமும் அரசாங்கமும் தன்னை என்ன செய்துவிட முடியும் என்ற அலட்சியம். அந்த வன்மமான புன்னகையின் பின்னணியில் ஒரு கொடூரமான திட்டம் அரங்கேறக் காத்திருந்தது.

இதெல்லாம் ஒரு புறமிருக்க தமிழச்சி சிம்மா அனுப்பிய தகவலைப் பார்த்துவிட்டு உடனடியாக அவன் கைபேசிக்குத் தொடர்பு கொண்டு விவரத்தைக் கேட்டறிந்தாள்.

நடராஜர் சிலை டில்லி மாநகரத்தைவிட்டு சாலை மார்க்கமாக வெளியே சென்று கொண்டிருந்தது. ஆனால் சிம்மா, தமிழச்சி, விக்ரம் மூவரும் வகுத்த திட்டமே வேறு. விக்ரம் அதற்காகத்தான் அன்று அமிர்தாவை ஏமாற்றி அந்த நடராஜர் சிலையின் கால் பாகத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தினான்.

அதாவது அந்த சிலையை சம்யுக்தா விமானம் வழியாக எடுத்து செல்லும் பொது அவரை கவிழ்க்க காத்திருக்கும் எதிர்கட்சிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் உதவியோடு அந்த சிலையை மீட்க வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம்.

அவ்விதமாக  சம்யுக்தாவின் போலித்தனத்தை அடையாளம் காட்டிவிடலாம் என்று எண்ணியிருந்தனர். இவர்களின் திட்டத்திற்கு தன்னால் இயன்ற முழு ஒத்தழைப்பையும் தமிழக முதலமைச்சரே செய்வதாகவும் ஒத்துக் கொண்டார். அப்படி மட்டும் அவர்கள் நினைத்தது நடந்திருந்தால் அது உலகையே உலுக்கும் ப்ரேக்கிங் நியூஸாக இருந்திருக்கும்.

ஆனால் நம் திட்டத்திற்கு நேர்மாறாய் ஒரு திட்டத்தை வகுத்தான் போலும் அந்த ஆடலரசன். அவர் விமானம் மார்க்கமாக போகாமல் சாலை மார்க்கமாகப் போகும் சூட்சுமத்தை அவர் மட்டுமே அறியக் கூடும்.

அதேநேரம் சம்யுக்தாவும் அன்று இரவு விமானத்தில் பிரான்ஸ் போக ஆயத்தாமாகிக் கொண்டிருந்தார். அவருடைய பிரயாணத்தில் எந்த மாறுதலும் இல்லை என்று தமிழச்சிக்கு நம்பகமான இடத்திலிருந்து தகவல் கிடைத்தது.

இப்போது தமிழச்சிக்கு சந்தேகம் உண்டானது. ஒரு வேளை தாங்கள் பொருத்திய ஜிபிஎஸ் கருவியை சம்யுக்தா கண்டுபிடித்து தங்களை அதன் மூலமாகவே  திசை திருப்ப முனைகிறாரா என்று. ஆனால் எது எப்படி நடந்தாலும் சரி. அந்த சிலையை இந்தியாவை விட்டுப் போக விடக் கூடாது என்று மூவரும் உறுதியாக இருந்தனர்.

ஆனால் அவர்களின் உறுதியை சோதிக்கும் விதமாய் சிம்மாவின் கைப்பேசி தம் சக்திகளை இழந்து அணைந்து போகும் நிலையில் இருந்தது. தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடுமோ என்று அவர்கள் அச்சப்பட்டுக் கொண்டிருக்கும் போது சட்டென்று நகர்ந்து கொண்டிருந்த அந்த சிறு புள்ளி ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றது.

சிம்மா விக்ரமைத் துரிதப்படுத்தி அந்த இடத்திற்கு விரைவாக செல்லச் சொல்லிப் பணித்தான். இந்த சந்தர்ப்பத்தை விட்டால் மறுபடி இப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்க்காதே!

அப்போது அந்தி சாய்ந்து இருள் தம் ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கியிருந்தது. அவர்கள் இருவரும் அந்த ஜி பி எஸ் கருவி சுட்டிக்காட்டிய இடத்தை அடைந்த போது இருள் முழுமையாக அந்த இடத்தைக் கவ்விக் கொண்டது.

சாலையோரங்களில் மரங்கள் புதர்களாக மண்டிக் கிடக்க அவ்வப்போது சில கனரக வாகனங்கள் மட்டுமே அந்த இடத்தைக் கடந்து சென்றன. எங்கே வந்திருக்கிறோம் என்ற குழப்ப நிலையோடு அந்த இடத்தை சுற்றிலும் அவர்கள் பார்க்க அங்கே வாகனங்கள் ஏதும் இல்லை. அதேநேரம் சிம்மாவின் கைப்பேசி அந்த இடத்தைத்தான் காட்டியது.

சிம்மா தன் பார்வையை சுழற்றிவிட்டு ஒரு நொடி அப்படியே அதிர்ச்சியாகி, “விக்ரம் அங்க பாரு” என்று சுட்டி காட்டிய இடத்தில் சாலையோர மரத்தில் ஒரு மினி ட்ரக் மோதி நின்றிருந்தது.

முன் பக்க வீல் பஞ்சர் ஆனதில் அதிவேகமாய் வந்த அந்த வாகனம் தன் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியிருந்தது. அந்த வாகன ஓட்டுநரும் ஸ்டியரிங்கில் தலை மோதி மயக்க நிலையில் கிடந்தான்.

உடனடியாய் விக்ரம் பின்னிருந்து அந்த வாகனத்தின் மூடிய கதவைத் திறக்க, அண்டமே பிண்டமாய் பிண்டமே அண்டமாய்…

தன் வடிவத்தில் பிரபஞ்சத்தையே அடக்கி ஆடல் ரூபத்தில் அடங்கா வியப்பாய் காட்சிக் கொடுத்தான் அந்த ஆடலரசன்.

நீயே  நான்…  நானே நீ…

உன்னுள் நானிருக்க…

நீ எதைத் தேடுகிறாய்?…

நான் எனக்காக எதுவும் செய்வதில்லை…

ஆனாலும் அனைத்துமாய் நான் இருக்கிறேன்

அவனிருக்கும் இடத்தை அவனேயன்றி வேறு யார் காட்டிக் கொடுக்க  முடியும்? அம்பலத்தரசன் முடிவெடுத்துவிட்டால் யார் அவனை மறைக்க இயலும்?  தரிசனம் தரவேண்டும் என்று யாதுமானவன்  உருத்தறித்தால்  யார் அதைத் தடுக்க இயலும்?

சிம்மாவிற்கும் விக்ரமிற்கும் நடந்த விபத்து எதேச்சையானது என்று  தோன்றவில்லை. எல்லாம் அவன் செயல்.

ஜாதி மதங்களைக் கடந்து உலகை ஆள்வது ஒரே சக்தி. மனித எண்ணங்களின் வடிவில் அது பல்வேறு வடிவங்களைப் பெற்றிருக்கிறது. அது அவரவர்கள் நம்பிக்கையின் ரூபத்தில் நிச்சயம் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பிரசன்னமாகும். தூய மனம் கொண்டவர்களுக்கு மட்டுமே அந்த ஆரூப சக்தி ரூபமாய் கண்முன்னே தோன்றும்.

விக்ரம் தமிழச்சிக்குத் தகவல் கூற அவள் மிகுந்த பதட்டத்தோடுப் பேசினாள். அவள் குரல் தடுமாறியது.

“அந்த இடத்தைப் பத்தின டீடைல்ஸ் சொல்லுங்க… நான் பக்கத்துல இருக்க போலீஸ் பூத் ஆர் ஸ்டேஷனுக்கு இன்பார்ம் பண்றேன்… நீங்க இரண்டு பேரும் பத்திரமா இருங்க” என்றவள் படபடக்க, “நாங்க சேப்ஃபாதான் இருக்கோம்… நீ ஏன் இவ்வளவு டென்ஷனா பேசுற?” என்றான்.

“இங்க நிலைமை ரொம்ப மோசமா இருக்கு… இன்னும் கொஞ்ச நேரத்துல நாடே களேபரமா மாறப் போகுது…”

“ஏய் இரு இரு… என்ன விஷயம்னு சொல்லிட்டுப் பேசு?”

“என்னாச்சு விக்ரம்… என்ன சொல்றா?” என்று சிம்மாவும் கேட்க,  விக்ரம் தமிழச்சி சொன்ன விஷயத்தைக் கேட்டு அதிர்ந்துவிட்டான்.

“விக்ரம் என்ன?” என்று சிம்மா அவனை உலுக்க, “மாதாஜி போன ப்ளைட் ஜஸ்ட் நவ் ப்ளாஸ்ட் ஆயிடுச்சாம்” என்றான்.

அதற்குள் தமிழச்சி எதிர்புறத்தில், “விக்ரம்… ப்ளீஸ் நீங்க இரண்டு பேரும் பத்திரமா இருங்க… எந்தப் பிரச்சனையிலும் மாட்டிக்காதீங்க” என்றாள்.

சிம்மாவும் இந்த வார்த்தைகளைக் கேட்டு வார்த்தைகள் வராமல் நின்றுவிட்டான். அவன் பார்வை மொத்தமாய் ஆடலரசனிடம் சரணடைந்தது.

“நீ அழிக்கும் சக்திதான்… ஆனா தீமையை அழிச்சு நன்மையை வாழ வைக்கிற சக்தின்னுதான் நான் நம்பிட்டு இருக்கேன்… எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த நம்பிக்கையை உடைச்சிடாதே… எதுவும் தெரியாத அப்பாவி மக்களை இதுல தண்டிச்சிராதே… மனசார உன்கிட்ட வேண்டிக்கிறேன்” என்று எல்லாம் அவன் மயம் என்று நம்பி சரணாகதி அடைந்துவிட்டான்.

நம் கையை மீறி சென்றுவிட்ட ஒரு சூழ்நிலையில் நமக்கும் மேலான ஒரு சக்தியை நம்பித்தான் ஆக வேண்டும்.

 

 

error: Content is protected !!